JUNE 10th - JULY 10th
அட ச்ச!! என்ன எழவு டா இது!! வாழ்க்கையில அடுத்து என்ன பண்றதுனே தெரியல.. கருமம் யோசிச்சாலே கடுப்பாவுது... என்று கோபம் கலந்த சலிப்போடு பால்கனியில் வந்து நின்று வானத்தைப் பார்த்து கொண்டு இருந்தேன். படிப்பு முடிந்த போதிலும் பயிற்சிக்கும் போக முடியாமல் கோச்சிங் சென்டர் சேர்ந்து மேற்படிப்பு நுழைவு தேர்வுக்கு தயாராகவும் முடியாமல் கொரோனா காரணமாக வீட்டிலே முடங்கி கிடக்கும் எனக்கு இது போன்ற அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று எதிர்காலத்தை நினைத்து கவலைகள் வருவதுண்டு. என்ன செய்வது பல் டாக்டர்க்கு படித்து விட்டு படாதபாடு படுகிறேன். மண்டையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம், எப்படி செய்யப் போகிறோம், எவ்வாறு நம் கஷ்டங்கள் தீரப்போகிறது என்ற சிந்தனைகள் ஒரே சமயத்தில் பல செயலிகளை கையாளும் போது திணறும் மொபைல் போல என் மூளையயை திணறச்செய்து கொண்டு இருந்தது. அப்போது எங்கிருந்தோ "உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி" என்று ராஜாவின் பாடல் தூரத்தில் கேட்டது. இசை வந்த திசையை நோக்கினேன். அது எங்கள் காவலர்குடியிருப்பு-இல் நான் அடிக்கடி பார்க்கும் தாத்தாவிடம் இருந்துதான் வந்தது. அவரது ஜியோ ஃபோன் தான் எப்எம்-இல் அந்த பாடலை ஒலிக்கச் செய்து கொண்டு இருந்தது தெரிந்தது.
எங்கள் வீடு முதல் தளத்தில் இருப்பதால் பால்கனியில் இருந்து பார்த்தால் குவாட்டர்ஸ் முழுவதும் தெரியும். குவாட்டர்ஸ் நடுவில் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் இருக்கும் அந்த கோவிலை சுற்றி பெரிய பெரிய ராட்சஸ விழுதுகளுடன் 100 வயதை கடந்த ஆலமரங்கள் இருக்கும். அதனால் அந்த இடம் எப்போதும் காற்றோட்டமாக இருக்கும் அங்கே மூன்று பேர் அமரும் அளவிலான ஒரு திண்ணையும் உண்டு. அங்கு தான் அடிக்கடி அந்த தாத்தாவை பார்ப்பேன். அவருக்கு 65 வயதிற்கு மேல் இருக்கும், இளையராஜா ரசிகர் போலும். வெள்ளை நிற முழுக்கைச் சட்டை வெள்ளை வேட்டி தோளில் ஒரு துண்டு, இடது கையில் ஒரு பழைய மாடல் சில்வர் ஸ்ட்ராப் வாட்ச் கட்டி இருப்பார். பார்ப்பதற்கு ஒரு சிறு பட்ஜெட் இளையராஜா போன்றே இருப்பார். தினமும் காலையில் 9 மணிக்கு அந்த திண்ணைக்கு கையில் அன்றைய செய்தித்தாளுடன் வந்துவிடுவார். ஒரு சிறிய வாட்டர் பாட்டிலும் இருக்கும். சிறிது நேரம் செய்திகளை வாசித்துவிட்டு சுற்றி யார் யார் என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பார். அது அனைவரும் வேலைக்கு செல்லும் நேரம், எல்லோருமே கோவிலை தாண்டி தான் செல்வார்கள். செல்லும் அனைவருக்கும் தாத்தா சிரித்த முகத்துடன் குட் மார்னிங் சொல்லுவார். அந்த சிரிப்பு அவரை கடந்து செல்லும் அனைவரின் முகத்திலும் தெரியும் சிலர் வணக்கம் கூறிவிட்டு செல்வார்கள், சிலர் அவரிடம் நின்று நலம் விசாரித்து விட்டு செல்வார்கள். அனைவரும் சென்றபின் மீண்டும் சிறிது நேரம் செய்தித்தாளை வாசித்து விட்டு கடிகாரத்தை பார்ப்பார். சட்டைப் பையில் இருந்து ஜியோ ஃபோனை எடுப்பார். ஆம் அது தான் அந்த பாடலை ஒலிக்கச் செய்த ஃபோன். 10 மணி ஆன உடன் அதில் ஃபுல் வால்யுமுடன் உடன் எப்எம் ரேடியோ ஆன் செய்து விடுவார். எங்கள் ஊர் ரேடியோவில் காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை இளையராஜா பாடல்கள் போடுவார்கள் "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா..." என்று முதல் பாடலே இனிமையமான பாடலாக ஒலித்ததில் அவர் முகத்தில் ஒரு புன்னகை. அப்படியே ரசித்துக் கொண்டே திண்ணையில் படுத்துக்கொள்வார். சில நேரம் உட்கார்ந்துக் கொண்டும் பாடல்களை கூடவே பாடிக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருப்பார். பிறகு வீட்டிற்கு சென்று மதிய உணவு அருந்தி விட்டு அப்படியே எங்கள் வீடு இருக்கும் பகுதிக்கு வருவார் கீழ் வீட்டில் ஒரு பாட்டி இருப்பாள். பாட்டி தான் அவருக்கு இங்கே பல நேரங்களில் கம்பெனி கொடுக்கும் தோழி. பெரும்பாலும் மதிய நேரங்களில் எப்எம் பாடல்கள் உடன் அவர்கள் இருவரும் தாயம் விளையாடி கொண்டு பழைய கதைகள் பேசியும் அவர்கள் காலத்து பாடல்களையும் படங்களையும் குறித்து பேசிக் கொண்டு இருப்பார்கள். மாலை நேரங்களில் கோவில் முன்பாக விளையாடி கொண்டு இருக்கும் சிறுவர் சிறுமிகளிடம் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பார். குழந்தைகள் சென்றவுடன் மீண்டும் தன் ஜியோ ஃபோனை எடுத்து ஜியோ டிவி ஆன் செய்து அதில் ஏதேனும் படங்கள் அல்லது நாடகங்கள் பார்த்துவிட்டு அந்தி சாய்ந்ததும் வீட்டிற்கு சென்று விடுவார். இரவு உணவு அருந்தி விட்டு 9 மணிக்கு மேல் தன் திண்ணைக்கு வருவார். தூசி தட்டி நன்றாக சுத்தம் செய்து விட்டு எப்எம் இல் "நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே" என்பது போன்ற இனிமையான பாடல்கள் ஒலிக்க அப்படியே உறங்கிவிடுவார். என்ன ஒரு அழகான வாழ்க்கை அவருடையது. அவரை பார்க்கும்போது ஒருவித ஏக்கமும் பொறாமையும் சமயங்களில் திடீரென தோன்றும். அவருக்கு தூங்க அரண்மனை போன்ற வீடு தேவைப்படவில்லை ஆலமர நிழலும் திண்ணையுமே போதுமானதாக உள்ளது பாடல்கள் கேட்கவோ படங்கள் பார்க்கவோ டிவியோ விலையுயர்ந்த ஃபோனோ தேவைப்படவில்லை 2000 ரூபாய் ஜியோ ஃபோனே அவருடைய பொழுதுபோக்குக்கு போதுமானதாக இருக்கிறது..60 வயதிற்கு மேல் நிம்மதியான வாழ்க்கை என்பது இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களிலும் சிம்பிளான விஷயங்களிலும் தான் இருக்கிறது.. எவ்வளவு ஓடினாலும் திருப்த்தியான வாழ்க்கை என்பது நாம் வடிவமைத்து கொள்வதில் தான் உள்ளது என்பது எதிர்காலத்தை நினைத்து வெறுப்பாய் பால்கனியில் நின்றுகொண்டிருந்த எனக்கு தாத்தாவை பார்க்கும்போது தோன்றியது. நான் பார்த்து கொண்டு இருப்பதை கவனித்த தாத்தா என்னைப் பார்த்து புன்னகைத்தார் அடடா அந்த புன்னகையில் தான் எத்தனை பாஸிட்டிவ் எனர்ஜி . அவருடன் எதாவது பேச வேண்டும், என்ன பேச என்று தெரியவில்லை என்றாலும் ஏதோ ஒரு தெளிவும் மன திருப்தி கிடைக்கும் என உள்ளுணர்வு சொல்லியது. உடனே கீழே இறங்கி திண்ணையை நோக்கிச் சென்றேன். என்னை பார்த்ததும் "குட் மார்னிங் டாக்டர் " என்று புன்னகை ததும்ப வரவேற்றார். நானும் "குட் மார்னிங் தாத்தா எப்படி இருக்கிங்க??" என்று கேட்டேன். "நல்லார்க்கன் தம்பி, உங்களுக்கு என்ன ஆச்சு காலையிலே வானத்த பாத்துட்டு எதையோ யோசிச்சிட்டு இருந்த மாறி தெரிஞ்சது.. எதும் பிரச்சினையா பா..?" என்று கேட்டவாறே எப்எம்-ஐ அணைத்து விட்டு என்னை பார்த்தார்.
"ஒன்னும் இல்லை தாத்தா, நான் படிப்பு முடிச்சி 1 வருஷம் மேல ஆகுது இன்னும் அடுத்து என்ன செய்யப் போரன்னு தெரியாம எதிர்காலம் பத்தி கவலைப்பட ஆரமிச்சிட்டன்.. அதான் தாத்தா வேற ஒன்னும் இல்ல சில சமயம் அந்த யோசனைல இருந்து வெளிய வர முடியாம ஸ்ட்ரெஸ் ஆகிடுறன் உங்க எப்எம் ல இருந்து வந்த உன்னால் முடியும் தம்பி பாட்டு டக்குனு என் மூடு மாத்திருச்சு அதான் கொஞ்ச நேரம் உங்க கிட்ட பேசலாம்னு வந்தேன்.."
"ஓ சரி சரி... டாக்டர் தம்பி!! உடலுக்கு வர பிரச்சினை பத்தி எல்லாம் நல்ல தெரிஞ்சு வெச்சிருக்க உங்களுக்கு மனசு பிரச்சினைக்கு தீர்வு தெரியல போலயே" என்று பொறுமையாக சிரித்துக்கொண்டே சொன்னார். "ஒரு பாட்டோ இசையோ உங்க மனச லேசாக்குதுனா கஷ்டத்தை நினைச்சு ஏன் ஃபீல் பன்றீங்க..! கவலைபடற அப்போலா புடிச்ச பாட்ட நாலு கேளுங்க நிம்மதி ஆகிரலாம்..."
சட்டென்று என் மூளை எனக்கு பிடித்த பாடல்கள் என்று லிஸ்ட் போட ஆரம்பித்தது. "வீட்டுக்கு வரவங்க எல்லாம் என்ன பாத்து ஒரு வருஷம் வேஸ்ட் பண்ணது போதும் சீக்கரமா வேலைக்கு போய் சம்பாதிச்சு செட்டிலாகுற வழிய பாருங்க வயசு போன வராதுனு இஷ்டதுக்கும் எதயாச்சு பேசிட்டு போய்ட்றாங்க தாத்தா..." என்று மீண்டும் நான் படும் கஷ்டத்தை கூறினேன் உடனே அவர் "அட அவனுங்க கெடக்குறாங்க விடுங்க தம்பி.. சொந்தக்காரன்னாலே சொல்லி வச்ச மாறி ஒரே மாதிரி வசனம் தான் பேசுவானுங்க அதெல்லாம் கண்டுகாதீங்க.. இப்போவே ஓடி ஓடி சம்பாதிச்சு செட்டிலாகி என்ன செய்யப் போறீங்க...சம்பாதிக்க ஓட ஆரமிச்சிட்டா கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்க.
அப்புறம் கொழந்த பெத்துக்கனும் அதுங்களுக்காக ஓடி ஓடி இந்த வயசுல நீங்க பின்னாடி இதெல்லாம் செய்யனும்னு யோசிச்ச விஷயங்கள்ள முக்காவாசி அந்த வயசுக்கு வர அப்போ உங்களுக்கு மறந்தே போயிறும்.. நான் அப்படி தான் மறந்துட்டு கஷ்டப்பட்டேன். 55 வயசுல பொண்ணோட கல்யானத்த நடத்திட்டு திரும்பி பாக்குறேன் நான் ஓடிட்டே இருந்தது மட்டும் தான் நியாபகத்துல இருக்குது வாழ்க்கைய எப்படி வாழலாம்னு யோசிக்கிறதுக்குள்ளயே வாழ்க்கையோட கடைசிக்கு வந்துட்டேன்.. மீதி இருக்குறதயாச்சு எனக்கு புடிச்ச மாதிரி இருக்கட்டுமே ஓட்டிட்டு இருக்கேன். இப்போ எனக்கு முப்பது வயசான ஃபீலிங். உடல் அளவுல இல்லனாலும் மனசளவுல நான் 30 வயசு மனுசன்தான்", லேசாக புன்னகைத்துக்கொண்டே தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்தார்.
"அதனால சொந்தகாரனுவ சொல்லுறத எல்லாம் போட்டு குழப்பி அவசரப்பட்டுக்காதீங்க. பொறுமையா ஓடி பொறுமையாவே செட்டில் ஆவோமே என்ன சொல்றீங்க... உங்க நேரம் வரும் அதுவரைக்கும் தினமும் நாலு நல்ல பாட்டு கேளுங்க..!" என்று முடித்தார் தாத்தா. 1000 வயலின் இசையை ஒன்றாக கேட்டு முடித்ததும் தோன்றும் நிறைவான நிசப்தம் போன்ற அமைதி என்னுள். அறிவு கண்ணை திறந்தது போல சிலிர்த்துப் போயிருந்த என்னை தோளைத் தட்டி, "தம்பி ரொம்ப ரம்பம் போட்டுட்டேனோ" என்று சத்தமாக சிரித்துக்கொண்டே கேட்டார்.
"அய்யோ அதெல்லாம் ஒன்னும் இல்லை.. உங்கள மாரி ஒருத்தர் நம்ம கிட்ட பேசிட மாட்டாங்களானு ஏங்கிருக்கேன், ரொம்ப தேங்க்ஸ் தாத்தா", மீண்டும் ஒரு சத்தமான சிரிப்பு. சற்றுநேர மௌனத்திற்கு பிறகு, "சரிங்க தாத்தா நான் கிளம்புறேன் இப்போ நீங்க பாட்டு கேளுங்க நான் சாயங்காலம் வரேன் பேசுவோம் உங்ககிட்ட கத்துக்க நிறைய இருக்கு" என்று கூறிய படி நானே அவரது ஃபோனில் ரேடியோவை ஆன் செய்தேன்....
"வரும் காலம் வசந்த காலம் நாலும் மங்கலம் ஹே மடை திறந்து தாவும் நதி அலை நான்" என்று பாதிப் பாடலில் இருந்து ஒலித்த ராஜாவின் பாடல் எனக்காகவே பாடியது போல என்னை குஷியில் நடக்கச் செய்தது. "ஆஹா செம பாட்டு பா" என்று உற்சாகமாக கூறியபடியே என்னைப் பார்த்து சிரித்து விட்டு அப்படியே அந்த திண்ணையில் படுத்து கொண்டார் தாத்தா.
#315
Current Rank
67,847
Points
Reader Points 1,180
Editor Points : 66,667
25 readers have supported this story
Ratings & Reviews 4.7 (25 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
moorthi
Good!
amaresh
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points