JUNE 10th - JULY 10th
தடம் எண் ஆறில் இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 16701 புறப்பட இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கும் பட்சத்தில், அவசரமாக ஓடிவந்து இரயிலினுள்ளே தன் பாதங்களை பதித்தான் மகேந்திரன்.ஓடி வந்ததன் விளைவு பெரும் மூச்சிரைப்பு ஏற்பட, அதிலிருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள பையில் இருந்த தண்ணியை எடுத்து அருந்தினான்.அவன் எதிரே ஒரு நடுத்தர வயது பெண்மணி எழுத்தாளர் ம.தவசி எழுதிய "அப்பாவின் தண்டனைகள்" புத்தகத்தை படித்தபடி அமர்ந்திருந்தார். இரயில் தனக்கே உரிய இரைச்சலுடன், சென்னை எழும்பூரில் இருந்து சாரை பாம்பு போல ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. மகேந்திரன் ஒரு வார இதழில் புகைப்பட கலைஞனாக பணிபுரிகிறான். தன் பணி நிமித்தமாக அடிக்கடி ஊர் ஊராக சென்று புகைப்படங்களை எடுப்பது வழக்கம்.ஆனால் இந்த பயணம் அவன் மனதிற்கு நெருக்கமான பயணம் என்று தான் சொல்ல வேண்டும்.இந்த பயணத்தை பற்றி, மகேந்திரன் வாயிலாக சொல்வது தான் நாகரீகம், ஆதலால் இனி மகேந்திரனே அவர் கதையை எடுத்துரைப்பார். நான் மகேந்திரன் ஆனந்தம் வார இதழ்ல,போட்டோகிராபரா வேலை செய்றன்.நானும், என் கேமாரவும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவே பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் பயணித்து விட்டோம். ஆனால் தென்கோடியில் இருக்கும், இராமேஸ்வரத்திற்கு மட்டும் நான் இதுவரை பயணித்ததே இல்லை. இரண்டு முறை அதற்கான வாய்ப்புகள் அமைந்தும் போக முடியாத சூழல் ஒன்று என் அம்மாவின் மரணம், இரண்டு என் காதலியின் பிரிவு.இந்த பயணம் பற்றி கலைராகவ் குறிப்பிட்டது போல என் மனதிற்கு நெருக்கமான பயணம் தான் காரணம்,நான் இப்போது இராமேஸ்வரம் செல்வது என் அப்பாவின் இறுதி ஊர்வலத்திற்கு.அப்பா என்று சொல்வதை விட,பையாலஜிக்கல் பாதர் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.நான் பிறப்பதற்கு மட்டுமே, காரணமாய் இருந்தவரை அப்படி தானே அழைக்க முடியும்.நான் பிறந்ததில் இருந்து இன்று வரை, என் அப்பா முகத்தை பார்த்ததே இல்லை.என் பாட்டி சொன்ன கதை வழியாகத்தான், என் அப்பா பற்றிய நிஜ கதைளை தெரிந்து கொண்டேன்.என் அம்மா எந்த ரகசியங்களை, நான் தெரிந்துக் கொள்ள கூடாதென்று பல வருடங்களாக பேணிகாத்து வந்தாரோ, அந்த ரகசியங்களை எல்லாம் என் பாட்டி பத்தே நிமிட கதையில் உடைத்தெறிந்து விட்டார். நான் அந்த ரகசியங்களை பற்றி தெரிந்த பிறகும் கூட, அம்மாவிடம் அதுபற்றி கேட்டுக் கொண்டதே இல்லை. எனக்கான கதைகளை சொல்லி கொண்டிருந்த, என் பாட்டி, என் இருபதாவது வயதில் மேலோகத்தில் இருப்பவர்களுக்கு கதை சொல்ல சென்று விட்டார். ஆனால் பாட்டி இறப்பதற்கு முன்னால், என் அப்பாவை பற்றிய தகவல் தொடர்பு செய்திகளை நான் தெரிந்து கொள்வதற்காகவே, இராமேஷ்வரத்தில் உள்ள அவருடைய தோழி நாகூரா பாட்டியை நியமித்து விட்டு சென்றார். இப்போது கூட என் அப்பா இறந்த செய்தி, நாகூரா பாட்டி வழியாக தான் வந்து சேர்ந்தது.அம்மா ஏன்? அப்பாவை எனக்கு அறிமுகப்படுத்தவே இல்லை என்பதை, என் பாட்டி சொன்ன கதை வழியே புரிந்துக் கொள்ள முடிந்தது.என் அப்பா ஒரு சிறந்த கதை சொல்லியாம், அவர் சொல்லும் கதைகளை கேட்க, ஊரே கூடி விடுமாம்.அப்படி ஒரு கனீரென்ற காந்தர்வ குரலும்,கம்பீரமான முறுக்கு மீசையுமாக பார்க்க தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரியான தோற்றத்தில் இருப்பாராம். என் அம்மாவும், அப்பாவின் காந்தர்வ குரலில் தான் மயங்கி போய் இருக்கிறார். என் அம்மா ஒரு சிறந்த ஓவியர்.ஒரு முறை பார்த்தால் போதும், அப்படியே தத்ரூபமாக வரைந்து விடுவார்.என் அப்பாவையும் அப்படி தான் புகைப்படமாக வரைந்து அவருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்.அந்த புகைப்படம் தான், இருவரையும் காதல் என்ற ஒரே நேர்க்கோட்டில் இணைத்துள்ளது.இருவரும் காதலில் கசிந்துருகி கடற்கரை, மீன்பிடி படகு, தனுஷ்கோடி இடிந்த துறைமுகம் என டூயட் பாடி தங்களை முழுவதுமாக தொலைத்திருக்கிறார்கள்.அப்படி தொலைத்ததில் தான் நான் முளைத்திருக்கிறேன்.நான் முளைத்ததில் அம்மாவிற்கு பயமேதும் இல்லை.ஆனால் அப்பாவிற்கு தான் குளிர் ஜீரமே வந்து விட்டதாம்.ஊரையே கதை சொல்லி, ஆட்டிபடைத்த என் அப்பாவிற்கு, அவரின் காதல் கதையை அவர் அப்பாவிடம் சொல்ல அவரின் கனீர் குரலும், கம்பீரமான முறுக்கு மீசையும் உதவவில்லை.காரணம் என் தாத்தா, என் அப்பாவை விட பெரிய மீசையையும், இந்தியா முழுக்க பரவிக் கிடந்த சாதி, மத நம்பிக்கைகளிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தாராம்.கௌரவ பிரச்சினையை காரணம் காட்டி,தாத்தா வயிற்றில் இருந்த என்னை முளையிலையே கிள்ளி எறிய சொல்லியிருக்கிறார்.அப்பாவும் அவர் அப்பா சொன்ன வார்த்தைகளை, அப்படியே எழுத்து பிழை இல்லாமல், அம்மாவிடம் ஒப்புவித்து இருக்கிறார்.
அதுவரை அம்மாவை சாதுவாக பார்த்த அப்பாவிற்கு, அன்று அம்மா ஆடிய ருத்ரதாண்டவம், காலத்திற்கும் மறந்திருக்காது என்றாள் பாட்டி.அம்மா அப்படி தான் அவரின் எல்லைக்குள் எல்லை மீறுபவர்களை, வார்த்தையாலே எரித்து விடுவார்.அப்பாவின் கோழைத்தனத்தால், அம்மா வயிற்றில் என்னையும், பாட்டியையும் கூட்டிக் கொண்டு இராமேஸ்வரத்தில் இரயில் ஏறியவர் தான், அவர் இறக்கும் வரை இந்த ஊரை பற்றியோ, ஊரில் இருக்கும் இதயமற்ற அப்பாவை பற்றியோ, ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை.எந்த உறவுமே அன்பென்னும் ஒன்றில் தான் இயங்கி கொண்டிருக்கிறது.அந்த அன்பு பொய்யாகும் பட்சத்தில், அந்த உறவே மாயநதியாய் மறைந்து விடுகிறது. என் அம்மா வாழ்வில் இருந்து, அப்பா மறைந்தது போல, என் வாழ்வில் இருந்து மாயா மறைந்தது போல.என் அப்பா, என் வாழ்க்கையில் ஒரு கதையின் கதாபாத்திரமாக தான் இருந்திருக்கிறாரே தவிர, அவருடன் கைப்பிடித்து நடந்த கதைகளோ, கட்டியணைத்து உறங்கிய கதைகளோ, ஓடிப்பிடித்து விளையாடிய கதைகளோ, என்று எதுவும் இல்லை. இனியும் அது சாத்தியமில்லை.ஊர் முழுக்க சுற்றி, யார் யாரையோ புகைப்படம் எடுத்திருக்கிறேன்.ஆனால் என் அப்பா புகைப்படமாக கூட என்னிடம் இல்லை. இரயில் இப்போது பாம்பன் பாலத்தின் மீது ஊர்ந்து போய் கொண்டிருக்கிறது. கடலின் மீது இரயில் செல்வது, இயந்திர மீன் ஒன்று கடலில் நீந்தி போகிற மாதிரியான காட்சி போல, எனக்குள் தோன்றி மறைந்தது. மனிதன் எத்தகைய அதிசயத்தையும் எளிதில் நிகழ்த்தி விடுகிறான் அல்லவா ? கடலுக்கடியில் இரும்பு தண்டவாளத்தை எளிதில் புதைத்து விடுகிற மனிதனால், இதய அறையில் நிகழ்கிற வலியை எங்கு சென்று புதைப்பதென்று தெரியாமல் தடுமாறுகிறான்.என் அப்பாவும் நிச்சயம் தடுமாறியிருப்பார். நான் கருவுற்ற ஊரில் முதன் முறையாக என் கால் தடங்களை பதிக்கிறேன்.என் உடம்பில் ஒரு விதமான வெப்ப சூட்டை உணர முடிகிறது.அது என் அம்மா எதிர் கொண்ட மீளா துயரத்தின் வெளிப்பாடே, என்றே தோன்றியது. காரணம் இதே இரயில் நிலையத்தில் இருந்து தான் என் அம்மா அழுகை, கோபம்,துரோகம் என எல்லா உணர்ச்சிகளையும் அடக்கி கொண்டு இரயில் ஏறினார். இரயில்வே நிலையம் வெளியில், ஒரு ஆட்டோவை பிடித்து அப்பாவின் வீட்டை நோக்கி பயணித்தேன்.இராமேஸ்வரம் வட்டாரத்தில் என் அப்பா ரொம்ப பிரபலம் என்று பாட்டி சொல்லியிருக்கிறாரே? இந்த ஆட்டோ டிரைவரிடம் அப்பாவை பற்றிக் கேட்கலாமா? என்னவென்று கேட்பது. நீங்கள் அவருக்கு என்ன உறவுமுறை என்று திருப்பி கேட்டால், நான் என்ன பதில் சொல்வேன். வேண்டாம் அவருக்கென்று ஒரு நல்ல பிம்பம் இருக்கிறது அந்த பிம்பம் அப்படியே இருக்கட்டும்.ஆட்டோ அப்பா வீட்டு முன்பு நின்றது. சாமியானா பந்தல் போடப்பட்ட அந்த வீட்டு வாசலில் நிறைய வயதான, நடுத்தர பெண்கள் கண்ணீரும் கம்பளையுமாக இருந்தனர்.அந்த வீட்டு வாசலில் கால் வைத்ததும், என் இதயத்துடிப்பு சற்று வேகமாக துடிக்க ஆரம்பித்தது. நான் மாயாவிடம் காதலை சொல்ல போகும் போது கூட இப்படி துடித்ததில்லை.நான் அந்த பந்தல் உள்ளே நுழைந்ததும், ஒரு பாட்டி மட்டும் என்னை நோக்கி வேகமாக வந்தார்.என் கைகளை பிடித்து "கொஞ்சம் நேரத்தோட வந்துருக்க கூடாதாயா" என்று உடைந்த குரலில் மெதுவாக சொன்னார்.நாகூரா பாட்டி? என்று நான் சொன்னதும் அவர் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.சீக்கிரம் போயா உங்கப்பார இந்நேரம் எரிச்சிருப்பாங்கயா? என்று அந்த அழுத குரலிலும் என்னை வேகப்படுத்தினார். மீண்டும் ஒரு வேகமான ஓட்டத்தை, நான் ஓட வேண்டியிருந்தது.வானெங்கும் பரவிக் கிடக்கும் கருமேகங்களே என் மீது கருணைக் கொள்ள மாட்டீர்களா? உங்கள் நீர்த்திவலைகளால் என் அப்பா மீது மூட்டியிருக்கும் நெருப்பை அமிழ்த்திட மாட்டீர்களா? நான் என் அப்பாவின் முகத்தை பார்க்க வேண்டும்.என்னை ஏன் அழிக்க சொன்னீர்கள் என்று கேட்க வேண்டும்.கருணைக் கொள் கருமேகங்களே? என்று மனதில் வேண்டிக் கொண்டே ஓடினேன்.ஒரு வழியாக கடற்கரை பக்கத்தில் இருக்கும் அந்த சுடுகாட்டை அடைந்தேன்.எது நடக்க கூடாதென்று என் மனம் துடித்ததோ, அது நடந்து முடிந்திருந்தது.ஆம்,என் அப்பா உடல் முழுதும் தீயில் கருகி சாம்பலாகி போயிருந்தது.
என் அப்பாவை உயிரற்ற உடலாக பார்க்க கூட, கொடுப்பினை இல்லாதவனாக படைத்த அற்பக் கடவுளே என்று தகாத வார்த்தைகளால் திட்டினேன். சாம்பலான என் அப்பாவின் பக்கத்தில் வெட்டியான் உக்காந்து, சாம்பலாகாத அப்பாவின் எலும்புத்துண்டுகளை பொறுக்கி கொண்டிருந்தார்.நான் அவர் பக்கத்தில் போனதும், என்னை ஒரு மாதிரி ஏற, இறங்க பார்த்தவர் அய்யாவுக்கு தூரத்து சொந்தமோ? அவர மாதிரியே இருக்கீங்க என்றார்.ஒரு நிமிஷம் தலைசுற்றி போனது.பாட்டி சொன்னது எவ்வளவு உண்மை, நான் அப்பாவின் சாயல் என்று.சில நொடி மௌனத்திற்கு பிறகு, கொஞ்சம் அஸ்தி கெடைக்குமா? என்று கேட்டேன்.சிறிது நேரம் என்னையே பார்த்தவர் பிறகு, ஒரு காகிதத்தில் கொஞ்சம் அஸ்தியை போட்டு என்னிடம் கொடுத்து, "வெளில யார்கிட்டயும் சொல்லிடாதீங்க சாமி அப்பறம் என் பொழப்பு கெட்டு போயிடும்" என்றார். விரக்தியான சிரிப்பை ஒன்றை உதிர்த்து கடற்கரையை நோக்கி நடந்தேன்.கடற்கரையில் அமர்ந்து சிறிது நேரம் கடலையே பார்த்து கொண்டிருந்தேன்.இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் அவரவர் செய்த பாவங்களில் இருந்து, தங்களை விடுவித்துக் கொள்ள, இராமேஸ்வரம் வந்து கடலில் மூழ்கி புனித நீராடுவது ஐதீகம்.என் அப்பாவின் வீடும் கடற்கரை பக்கத்தில் இருப்பதாக, பாட்டி சொன்னதாக ஞாபகம். நிச்சயம் அப்பாவும் அவர் செய்த பாவங்களை, அந்த மகா சமுத்திரத்தில் புனித நீராடி கரைத்திருப்பார்.ஆனால் அம்மாவால் தான், அப்பாவின் பாவங்களை சிறுத்துளியளவு கூட மன்னிக்க முடியவில்லை.என் அம்மாவும், அப்பாவும் காதலில் கசிந்துருகிய,அதே கடற்கரையில் இப்போது நான்.என் பாதம் தொட்ட கடல் அலையில் என் அம்மாவின் முகம், தோன்றி மறைந்தது. உடேன என் பேக்கை திறந்து, ஒரு சின்ன வெள்ளி சொம்பை வெளியில் எடுத்தேன். அந்த வெள்ளி சொம்பில், என் அம்மாவின் கரைக்கப்படாத அஸ்தி இருந்தது.என் அப்பாவின் கைகளால், இராமேஸ்வரம் கடலில் கரைக்க வேண்டும் என்பதற்காக, ஆறு மாதமாக பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால் இன்று என் அப்பாவும் கைப்பிடியளவு அஸ்தியாகி விட்டார்.காகிதத்தில் இருந்த என் அப்பாவின் அஸ்தியை, அம்மாவின் அஸ்தியோடு கலந்து விட்டேன்.என் மனம் ஒரு பரிபூரண நிலையை, அடைந்ததாக உணர்ந்தேன். இப்போது கடல் அலையில் என் அம்மாவோடு, உருவமற்ற ஒருவர் முறுக்கு மீசையோடு தோன்றி மறைந்தார்.என் கண்களில் கண்ணீர் கசிந்திருந்தது.
கலை ராகவ் ---
#306
Current Rank
51,240
Points
Reader Points 1,240
Editor Points : 50,000
25 readers have supported this story
Ratings & Reviews 5 (25 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Paventhan
kajamohideen.jyoti786
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points