JUNE 10th - JULY 10th
பொட்டநாயி
"பைனி... பைனி..."
"பைனி வேணும்மா...பைனி...?"
"ஏ...பழனி.பைனி வேணும்மா...?"
"உர்... ர்...உ...ர்..."
"யம்மாடி!நாயென்ன ஒருப்படியா உறுமுது?"
"ஏ... நாடரம்ம.அங்கயே நில்லுங்க.நாயி
குட்டிப்போட்ருக்கு"என்று முற்றம் கூட்டிக்கொண்டுருந்த பழனி தகரக்கதவை திறந்துவிட்டு வெளியே வந்தாள்.
"நல்லவேள சொன்ன,இல்லனா...!படக்குன்னு தொறந்துருப்பேன்;
வெடுக்குன்னுலா புடுங்கிருக்கும்.
மொதல நாய தூர தொரத்துன்னா"
நாடாரம்மாள்.
"அது குட்டியக்கிட்டப்போயிட்டு நீங்க பயப்படாதீய."
"ஒனக்கு என்ன தெரியும்?போன மாசம் மாயநேரியில பைனி விக்கப்போன எங்க மைனிய இந்தமாரி குட்டிப்போட்ட நாயொன்னு எத்துப்போட்டு தொடையிலயே ஒருப்புடுங்கு புடுங்கிடுச்சி தெரியுமா?"
"ஆத்தாடி...!தொடையிலயா...?"
"ஆமா!"
"தொடையில கடிச்சதுன்னால தப்பிச்சாவ.கொஞ்சம் மேல பணியாரத்துல கடிச்சிருந்தா!யாருட்டக்காட்ட முடியும்; எவன்கிட்டப்போய் பார்வ(வைத்தியம்) பாக்க முடியு"மென பழனி சொன்னதும்
கள்ளுநுரையைப்போல பல்லுத்தெரிய குலுங்கிசிரித்தாள் நாடாரம்மாள்.
"ஓங்கிட்ட பேச்சுக்கொடுத்தா வயிறு சிரிச்சே வலிச்சுப்போவும்;பைனி மோரா புளிச்சுப்போவும்;போயி சீக்கிரமா ஏனத்தக்கொண்டா தாயி."
வீட்டிலிருந்து சின்ன குத்துப்போனிய எடுத்துட்டு வந்து,"மூனு சொம்பு பைனி ஊத்துங்கன்னா" பழனி.
"ஒத்த சொம்பு வாங்கவே மூக்கால அழுவ,இன்னைக்கு என்ன அலுவசமா
மூனுசொம்பு கேக்குற...?"
"எம் பேரன் வந்துருக்கான்!"
"ஏ,கலா மவனா...?"
"ஆமாம்ம..."
"எத்தனாவது படிக்குறான்?"
"ஆறாம்ப்பு...அப்றம் எம்மவ கருப்பட்டி கேட்டா.ஒரு ரெண்டுக்கிலோ வேணும்?பேரன் ஊருக்கு போவும்போது குடுத்துடனும்ம."
"கருப்பட்டி வேணும்னா... ஒம்பேரன நாளைக்கி வெள்ளன மேக்க பைனி காய்க்கிற வெளக்கிட்ட வரச்சொல்லு."
"சரிம்ம..."
"நேரம் கடந்துப்போச்சி... நாங்கெளம்புறன் தாயி.இனுமத்தான் கோங்கமார்,தேவமார் தெருவுக்கெலாம் போனும்."
"யம்மா!என்ன பைனிக்கு காசுவாங்காம போறீய?சொம்பு அஞ்சுரூவாத்தான...?"என முந்தியில் முடித்து வைத்திருந்த சில்லரைகளை அவிழ்த்து கொடுத்துவிட்டு, "அந்தத்தெருலயும் நாய் குட்டிப்போட்ருக்காம்.யம்மோவ்...!பணியாரம் பத்ரம்"என்றாள் பழனி.
நாடாரம்மாள் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே அடுத்த தெருப்பார்த்து "பைனி...பைனி..." என்று நடந்தாள்.
"ஏல... யய்யா...மணி.எந்திரில ஆச்சி ஒனக்கு பைனி வாங்கி வச்சிருக்கேன். பல்லுத்தீத்திட்டு குடியா..."
"போ!ஆச்சி...எனக்கு ஒறக்கமா வருது."
"நா ஒரு விசியம் சொன்னா ஒனக்கு ஒறக்கமும் வராது;ஒன்னும் வராது."
மீன்குழம்பு சோற்றைத்தின்றுவிட்டு மெய்மறந்து உறங்கும் பூனையைப்போல, கம்பிக்கட்டிலில் அங்குமிங்கும் புரண்டுக்கிட்டே "என்னன்னு சொல்லாச்சி...?"என்றான் மணி.
"மொதல நீ எந்திரிச்சு பைனியக்குடி, அப்பும்தான் சொல்லுவேன்."
போர்வையாக போர்த்திக்கொண்ட பழனியின் கண்டாங்கி சேலையிலிருந்து வெளியே வந்தான் மணி.
"இந்தா கையக்காட்"டென்று மணியின் கையில் கோபால் பல்பொடியை தட்டினாள் பழனி.
"பாதிய கீழயும் மீதிய வாயிலயும் கொட்டிட்டு,கடமைக்கு கடகடனு பல்லவெளக்கிட்டு,குத்துப்போனியிலவச்ச வாயெடுக்காம பூராப்பைனியையும் குடிச்சான் மணி."
"ஏல...அறிச்சி தரதுக்குள்ள அவ்ளத்தையும் குடிச்சிட்டயல.பைனியில தேனீச்சி, எறும்பெலாம் கெடந்துச்ச...?"
"நமக்கு அதெலாம் ஒன்னும் செய்யாது.நீ மொதல விசியத்த சொல்லு?"
"நம்ம ச்சூலி குட்டிப்போட்டுருக்குல..."
"எப்பும்...?எத்தனக்குட்டி யாச்சி...?"
"அஞ்சுக்குட்டில.போட்டு ஒருவாரமாச்சு.ஓலப்பரயில இருக்குற இடிஞ்ச கோழிக்கூட்டுலத்தான் குட்டியளுக்கெடக்கு."
ஓலைப்பரையை நோக்கி தலைவெட்டிய சேவலாய் துள்ளித்துடித்து ஓடினான் மணி.
மணியைப்பார்த்து ஜூலி மணியாட்டுவதுபோல வாலாட்டியது!
ஒவ்வொருக்குட்டியையும் பூப்போல தூக்கிக்கொஞ்சுனான் மணி.
ஒவ்வொருமுறை தூக்கும்போதெல்லாம் குட்டியையும்,மணியின் கையையும் நக்கிக்கொடுத்தது ஜூலி.
"யாச்சோ...!யாச்சோ...!"
"ஏல...என்ன...?"
"கைய மோந்துப்பாரேன்...!"
"ம்...ஆ..."
"பால்வாசன அடிக்காச்சி?"
"நல்லா அடிக்குதுய்யா..."
"ஆமா!அஞ்சுன்னு சொன்ன?நாலுதான் கெடக்கு?"
"ஒத்தக்குட்டித்தான் ஆங்குட்டி. அத முந்தாநேத்த பிச்சமணிநாடாரு மவன் செலுவம் தூக்கிட்டு போயிடுச்சு."
"சரியா...!கண்ணுக்கூட தொறக்கலய யாச்சி?"
"ஆமாய்யா!என்னத்த சொல்ல...?
ஆங்குட்டி...அதுவும் கன்னிக்குட்டி.விடுவாங்களா...?"
"பழனி...பழனி..."
"யாரது...?"
"நாந்தா...கந்தநாடாரு..."
"நாடாரா...வாரும் வாரும்."
"மாசானத்த எங்க?"
"வீட்டுக்குப்பின்னால உப்புக்கண்டம் நறுக்கிட்டு கெடக்குறாரு."
"என்னடே விசேசம்?காலங்காத்தால
கறி நறுக்குற?"
"பேரன் வந்துருக்கான்யா."
உப்புக்கண்டம் வாசனைக்கி ஓடிவந்து மாசானம் பக்கத்தில் படுத்துக்கொண்ட ஜுலியைப்பார்த்தவர்."ஏ...!நாயி குட்டிபோட்டுருக்குப்போல..."என்றார் கந்தநாடார்.
"ஆமாம்!ஒமக்கு குட்டி வேணும்மா?"
"வேணும்டே.நல்லக்குட்டியா ஒன்னு தா...?"
"அந்நா...அந்த கோழிக்கூட்டுலத்தான் போட்டுருக்கு போய் பாரும்."
கந்தநாடார் எல்லாக்குட்டியையும் தூக்கிப்பார்த்துவிட்டு,"மயிரப்புடுங்கி...ஒரே பொட்டக்குட்டியா கெடக்குது!ஆங்குட்டியே இல்ல?"என்றார்.
"இந்த அருதலிநாயி ஆங்குட்டி ஒன்னுதான் போட்டுச்சு.அதையும் ஒம்ம சொக்காரு எடுத்துட்டுப்போயிட்டாரு.நீரு பொட்டையில ஒன்ன தூக்கிட்டுப்போரு"மென்றார் மாசானம்.
"பொட்டநாய வளத்தா வருசாவருசம் அது சோலிப்பாக்குறததான் பாத்துட்டு ருக்கனும்;நம்ம சோலிப்பாக்க முடியாம சொறிஞ்சிட்டுத்தான் அலையனும்."
"ஆமா...இவரு இப்பும்தான் கொமரன். சோலிப்பாத்து கிழிச்சுருவாறு...?"
"ஏ!யாரப்பாத்து என்ன சொல்லிப்புட்ட.வெள்ளனையும் சாந்தரமும் சேத்து ஒரு நாளைக்கு பத்துப்பன ஏறியறங்குற என்னால,ஒரு பொட்டச்சிய பத்துநிமுசம் ஏறியறங்க முடியாதோ மயிரு...?"என்று தன் நரைத்தமீசையை முறுக்கிவிட்டாரு கந்தநாடார்.
மாசானம் பொக்கவாயால் புசுன்னு சிரித்துவிட்டு"சரிய்யா...நீரு கொமரந்தான் ஒத்துக்கிறன்.வாரும் கடையிலப்போயி டீ...கீ...குடிச்சிட்டு வருவோம்."
"ஏட்டி...நானும் நாடாரும் கடைக்குப்போயிட்டு வாறோம்.பண்டாரண்ண வந்தா இருக்கச்சொல்லு சரியா!"
"ஆட்டும் சொல்றேன்" அடுப்படியிலிருந்து குரல்கொடுத்தாள் பழனி.
"தாயோ...!தாயோ...!"
"அண்ணனுக்கு ஆயுசு நூறு. இப்பத்தான் ஒங்கள வந்தா இருக்க சொல்லிட்டு கடைக்குப்போனாரு."
"அப்டியா...?சரி வரட்டும்."
"யண்ணவோவ்!இருங்க கடுங்காப்பி போட்டுத்தாரேன்..."
"யாத்தாடி!இந்த வேக்காட்டுக்கு காப்பிக்குடிச்சா செத்துப்போவான் மனுசன் செத்து.நீத்தண்ணிக்கெடந்தா ரெண்டு உப்புப்போட்டு கொண்டா."
"இந்தாங்கண்ண கொஞ்சமா மோரும் சேத்துருக்கேன்.ச்சூட்டுக்கு நல்லது குடிங்க."
பொந்திற்குள் தண்ணீர் ஊற்றியதுபோல் "கொடக் கொடக்"கென்று சத்தம் எழுப்பியவாறு, தொண்டை மேலும் கீழும் அசைய அண்ணாந்து குடித்தார் பண்டாரம்.
"யாச்சோ!ஜூலிக்கு சோறு தா"வென ஈயத்தட்டினை தூக்கிவந்தான் மணி.
"தாயோ!பேரன் எப்பும் வந்தான்...?"
"நேத்துண்ண..."
"நாயின்னா ரொம்ப பிரியம்போல?"
"ஆமாண்ண...ரொம்பப்பிரியம்.இப்பும் குட்டிவேறப்போட்டுருக்கா,அதான் அதுக்கூடயே கெடக்கான்."
"ஓகோ!"
"பொட்டக்குட்டியத்தான் நாலுக்கெடக்கு.வந்துப்பாத்துட்டு பொட்ட எதுக்குனு?ஒருத்தரும் தூக்கிட்டுப்போகமாட்டுக்காவ.ஒங்களுக்கு தெரிஞ்ச ஆட்டுக்காரங்க யாருக்காவது கெடக்காவலுக்கு தேவப்பட்டுச்சின்னா வந்து தூக்கிட்டுப்போவ சொல்லுங்கண்ண.நீங்கக்கூட ஒன்னத்தூக்கிட்டுப்போய்
ஒங்கத்தோடத்துலப்போட்டா காவலுக்கு ஆவும்ல"என்றாள் பழனி.
"எனக்கு வேணாந்தாயி.நானும் ஒன்னமாதிரி பொட்டநாய வளத்துட்டு லோல்(கஷ்டம்)படவா!நான் கெளம்புறேன்.நீ தம்பி வந்ததும் நாளைக்கி வேல வயக்காட்டுல இல்ல,கெணத்துலன்னு சொல்லிரு."
"சரிங்கண்ணே."
காலையில் டீக்கடைக்குப்போன மாசானம் சாராயக்கடைக்குப்போய்விட்டு ராத்திரியில்தான் வீடுவந்து சேர்ந்தார்.
"ஏட்டீ...!சோத்த கொண்டாட்டீ. பிச்சக்காரப்பயமவள."
"இருமய்யா...கத்தாதயும்!போன நேரமன்ன?வந்த நேரமன்ன?இதுல அதிகார மயிருவேற?குடிகாரமட்ட"என்று இலையில் சோறுப்போட்டு,உப்புக்கண்டம் குழம்பினை ஊற்றிவிட்டு உறங்கப்போனாள் பழனி.
பிடிக்கும்போது நழுவும் உளுவைமீனைப்போல் மாசானத்தின் பொக்கைவாயிலிருந்து நழுவிக்கொண்டு விழுந்தன இலையில் எலும்புத்துண்டுகள்.சில துண்டுகள் ஜூலியின் வாய்ப்பக்கமே வாய்ப்பாக விழுந்தன.தின்ன முடியாமல் பிசைந்த சோற்றை இலையோடு ஜூலிக்கு வைத்துவிட்டு,கையினை கழுவாமல் கட்டிய சாரத்தில்(கைலி) துடைத்துக்கொண்டு தட்டுத்தடுமாறி நடந்து நார்க்கட்டிலில் நச்சென்று மல்லாந்து விழுந்தார்.
காலையில் விடிஞ்சதும் மகளுக்கு கொடுத்தனுப்ப வேண்டியதை பொட்டணம் கட்டுவது, பேரன் துணிமணிகளை எடுத்து வைப்பதென பரப்பரப்பானாள் பழனி.
"ஏ!மணி...எந்திரில நேரமாச்சி. ஒம்போதுமணி பஸுக்கு ஊருக்குப்போவனும்.அதவிட்டா ஒங்க ஊரு பஸ்ச புடிக்கமுடியாது.எந்திரிய்யா...நல்லபுள்ளல."
"ஒம்போதுமணி பஸுக்காச்சி...?"
"ஆமாய்ய்யா...இந்தா காப்பி குடிச்சிட்டு குளிச்சி ரெடியாவு தங்கம்."
"யாச்சி கருப்பட்டி காப்பியா?"
"யென்ன நல்லாயில்லயோ?"
"நல்லாத்தான் இருக்கு."
"ஆத்தாடி!நீ கருப்பட்டினு சொன்னததும்தான் நியாவமே வருது.ஒங்கம்ம கருப்பட்டி வாங்கிட்டு வரச்சொன்னால மறந்தேப்போச்சி. மேக்க நம்ம நாடரம்ம வெளக்கிப்போயி கருப்பட்டி வாங்கிட்டு வந்துருய்யா."
"சரியாச்சி..."
"இந்தா! இந்த துணிப்பய கொண்டு போ. சொனங்காம சீக்கிரம்மா போய்ட்டு ஓடியா."
"ட்ர்...ட்ர்ரு...ப்பாம்...பாம்"என்று வாயால வண்டி ஓட்டிக்கிட்டே கெளம்பினான் மணி.
"நாடாரம்மவோவ்...நாட..ரம்மவோவ்..."
"யாரு...என்ன வேணும்...?"-பைனி காய்க்கிற ஓலைப்பரையிலிருந்து வெளியே வந்தாள் நாடாரம்மாள்.
"எங்காச்சி கருப்பட்டி வாங்கிட்டு வரச்சொல்லிச்சி."
"வாரும்...அரசக்குளத்து மைனரு.ஒங்க ஆச்சிய எங்க?"
"வீட்ல..."
"சரி!பையி கொண்டாந்தியா?"
"இந்தாங்க..."
நாடாரம்மாள் கருப்பட்டிகளை ஒவ்வொன்னா எண்ணிப்போட்டுவிட்டு,"எப்பு...கொஞ்சம் கனத்துக்கெடக்கும் பாத்து பத்ரமா கொண்டுப்போனும் சரியா?"
"ஆட்டும்..."என தலையாட்டிவிட்டு பாரம் ஏற்றிய வண்டியைப்போல் பைய நடந்து வீடுவந்து சேர்ந்தான் மணி.
"யாச்சோ!இந்தா கருப்பட்டி."
"நான் துணி மாத்திக்கிட்டு இருக்கேன்.நீ அந்த பொட்டணத்துக்கு பக்கத்துல வச்சிட்டு வெரசா கெளம்பு."
"சரியாச்சி"யென்று சொல்லிவிட்டு கோழிக்கூட்டுக்குள் தலையைவிட்டு ஒவ்வொரு நாயிக்குட்டியையும் தூக்கி முத்தம் கொடுத்தான். உறக்கத்திலிருந்த குட்டிகள் "ம்உ...ந்ந..."என்று முனங்கின.
குழந்தைகளின் விழிப்பு சத்தம்கேட்டு ஓடி வந்த ஜூலி.மணியைப்பார்த்து பாலே நடனமாடும் பெண்ணைப்போல உடம்பையும் வாலையும் வளைத்துக்கொண்டு,குற்றவைத்து இருந்தவனின் மீது எகிறி தோள்களில் முன்னங்காலிரண்டையும் போட்டு முகத்தினை தன் சொரசொரப்பான நாக்கினால் விறுவிறுவென நக்கியது.
"சரிச்சரி போதும் முத்தம் கொடுத்தது.அடுத்த வாரம் நான் வர்றவரைக்கும் குட்டியள பத்ரமா பாத்துக்கோ!அப்பும்தான் ஒனக்கு பிஸ்கட்டு,பொறியுருண்டை எல்லாம் வாங்கிட்டு வருவேன்.சரியா!"
ஜூலியும் சரியென்பதுபோல் வாலாட்டிவிட்டு கோழிக்கூட்டுக்குள் போய் குட்டிகளை அணைத்தப்படி படுத்துக்கொண்டது.குட்டிகள் காம்புகளை கவ்வியிழுத்து முன்கால்களால் தாயின் அடிவயிற்றில் உதைத்துக்கொண்டே பால் குடித்தன.
"ஏட்டீ,கட்டிலுக்கு கீழ வச்சிருந்த சணலு சாக்க எடுத்தீயா?"என்றார் மாசானம்.
"அதான் எல்லாத்தையும் பொட்டணம் கெட்டியாச்சே,அப்புறம் எதுக்குய்யா சாக்கு."
"சரி,நான் தேடிப்பாத்துக்குறேன்.நீங்க வாங்க.பஸு வந்துடுச்சி."
"ஏல ஐய்யா!பஸு வந்துடுச்சாம்,வா.அடுத்த வாரம் வந்து நல்லா கொஞ்சு"என்றாள் பழனி.
மாசானம் இரண்டுபேரையும் பேருந்தில் ஏற்றிவிட்டு பீடியை பற்றவைத்தார்.
பேருந்து கிளம்புவதற்கு ஆயுத்தமானது. ஜன்னலோரமிருந்த மணி சிரத்தை வெளி நீட்டி,தாத்தா 'டாட்டா'என்று கரத்தைக்காட்டி மறக்காமல் "ஜூலிக்கு சோறு வச்சிரு"என்றான்.
யோவ்! எவன் கூடயாட்டும்போயி குடிச்சிட்டு மறந்துக்கிறந்து தொலச்சிராதீரும்.குட்டியளு பாவ"மென்று அழும் தொனியில் சொன்னாள் பழனி.
"ஆங்.ஆனு.."தலையாட்டிவிட்டு பேருந்து புறப்பட்டதும்,மாசானமும் வீட்டுக்கு புறப்பட்டார்.
"யாச்சி!அடுத்த வாரம் நான் வரும்போது நாயிக்குட்டியளு நல்ல கண்ணு முழிச்சி நடக்க ஆரம்பிச்சிரும்லா?"
"ஆமா,ஒன்னமாதிரியே வீட்டுக்குள்ள கெடக்காம தெருவுலப்போயி வெளாண்டுக்கெடக்கும்."
"அடுத்த வாரத்துக்குள்ள எல்லாம் நல்ல குண்டுக்குண்டுன்னு, புசுபுசுன்னு ஆயிரும்லாச்சி."
"பின்ன,ஒன்னமாதிரியா ஒல்லிக்குச்சாவா இருக்கும்."
"எல்லாக்குட்டியளுக்கும் சூப்பர் சூப்பரா ஒரு பேரு வைக்கணுமாச்சி."
"பேரு வைக்கிற அன்னைக்கி ஊருக்கே சோறு பொங்கிப்போட்டு ஒரு அசத்து அசத்திருவோம்."
"கிண்டல் பண்ணாத ஆச்சி"-முறைத்தான் மணி.
"சரிச்சரி, கோவிச்சிக்காதடே"என மணியை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் பழனி!
மிதமான வேகத்தில் சென்ற பேருந்தின் ஜன்னல் வழியாய் வீசிய இதமான காற்றினில் கதைப்பேசிப்படியே இருவரும் கண்கள் சொக்கி தலைகள் முட்டி உறங்கிப்போனார்கள்.
ஆனால், மணி உறங்கினாலும் நாயிக்குட்டிகள் அவனை விரட்டி விரட்டி விளையாட்டாய் கடிப்பது போலவும்; கதவுக்குப்பின்னால் ஒளிந்தவனை கண்டுப்பிடித்து மகிழ்ச்சியில் வாலாட்டுவது போலவும்; தன் விரல்களை தாயின் காம்புகளாக நினைத்து பால் குடிப்பது போலவும்; காற்றில் மிதக்கும் இறகாய் கனவில் மிதந்தான்...!
மாசானம் சணல் சாக்கில் கட்டிக்கொண்டு சென்று குப்பைப்போல் கொட்டிய பொட்டநாயிக்குட்டிகள், ஊருக்கு மேற்கே உள்ள கல்லுக்கிடங்கில் குட்டித்தலகாணியைப்போல் செத்து மிதந்தன...!
******
வசந்தி முனீஸ்
8825665590
8940331912.
munees4185@gmail.com
#444
Current Rank
54,807
Points
Reader Points 640
Editor Points : 54,167
13 readers have supported this story
Ratings & Reviews 4.9 (13 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
jagan006
அருமை
sashmitamurugan
அருமையான படைப்பு, கதையின் முடிவு இன்னமும் சமூக நீதி இல்லை என்பதை உணர்த்துகிறது
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points