நம்பிக்கை

உண்மைக் கதைகள்
5 out of 5 (35 Ratings)
Share this story

வர்கள் கதிரவன், காயத்ரி. நேற்று தான் அவர்களின் திருமணம் முடிந்திருந்தது. பிரிவே கூடாதென்பது போல இருவரின் பார்வைகளும் கூட பிணைந்து கிடந்தன. அவளின் வெட்கச் சிரிப்பு, இவனின் மோகப் பார்வை, சுற்றியிருக்கும் இளசுகளின் பரிகசிப்புகள் என அந்த மறுவீட்டு விருந்து களைகட்டியிருந்தது.

"ரெண்டு பேரும் ஆயுசுக்கும் இப்டியே சந்தோசமா இருக்கணும்." என இருவரையும் நெட்டி முறித்த பெருங்கிழவியொருவர் அவளிடம், "சீக்கிரம் ஒரு பிள்ளையைப் பெத்து போடுடீ… அதுக்கும் பீத்துணி அலசி, கழுவி மொழுவி, குளிப்பாட்டி அழகுப் பார்த்துட்டுதேன் நான் போவேன் கேட்டியா?" என்று விட்டு பற்களில்லா வாயை மலர்த்தி பெருங்குரலில் நகைத்தார்.

"ச்சு போ கிழவி…" என்று எழுந்து ஓடிவிட்டவளைக் கண்டு பெருமூச்செறிந்தவர் அருகிலிருந்த இளசுகளை துரத்திவிட்டு கதிரிடம் திரும்பினார்.

அவனை சற்று நெருங்கி அமர்ந்து கொண்டு அவன் வலக்கையைப் பிடித்துக் கேட்டார். "எய்யா ராசா, எம்பேத்திய நல்லா பார்த்துக்குவியல்ல?" இத்தனை நாட்கள் தன் கைக்குள்ளேயே வைத்து வளர்த்த கொள்ளுப் பேத்தியைப் பிரியப் போகிறோமென்ற ஏக்கம் பரிதவிப்பான வார்த்தைகளாக வெளிவந்தது.

அவர் கையைத் தன் உள்ளங்கைக்குள் மாற்றிக் கொண்டு சொன்னான். "கண்டிப்பா நல்லா பார்த்துக்குவேன் பாட்டிமா. நீங்க கவலையேப்படாதீங்க."

மீண்டும் பொக்கை வாய் சிரிப்பு! "அதொன்னுமில்ல தம்பி… புள்ள கொஞ்சம் பயந்தாரிக் கழுத (பயந்தவள்)." என்றவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "நம்ம புள்ள கொஞ்சம் லட்சணமா இருக்குதால்ல? அதேன் பிரச்சனைப்பா… ரோட்டுல போக வர இருக்கைல காவாலிப்பயலுக பயமுறுத்திட்டானுக பார்த்துக்கோ… பச்சமண்ணு அது. சத்தமா கூட பேச மாட்டாய்யா… வீட்டுக்கு வந்து ஒரே அழுகை! ராத்திரில்லாம் தூக்கத்துல பயந்து நடுங்குவா… நாந்தேன் திநீறு (திருநீறு) போட்டுவிடுவேன். இனி நீ மட்டுந்தான்யா அவளுக்கு தொணை!" என்று கண்கலங்கினார்.

இதனை அவள் திருமணம் நிச்சயித்து, இருவரும் அலைபேசியில் பேச ஆரம்பித்த போதே சொல்லியிருக்கிறாள். தன்னிடம் பாதுகாப்பாய் உணர்வதாலேயே தன்னிடம் பகிர்கிறாள் என பெருமிதமாய் நினைத்திருந்தான் கதிர். எத்தனை வருடங்களானாலும் அவளுக்கு தன்னிடமிருக்கும் அந்த பாதுகாப்புணர்வை உடைத்துவிடக் கூடாது என்றும் உறுதியோடிருக்கிறான்.

"இப்பவும் கடை, கண்ணிக்கு ஒத்தீல போக மாட்டுக்காய்யா… பாம்பைப் பக்கத்துல பார்த்தா கூட பயப்படாத கழுத, ஆம்பளை ஒருத்தன் பக்கத்துல வந்தா நடுங்கி சாவுறாய்யா… உன்கிட்ட சொல்லி வைக்கணும்னு தான் வந்தேன்."

அவர் கையில் நம்பிக்கையின் அழுத்தத்தைத் தந்துவிட்டு சொன்னான். "இனி எப்பவும் நான் அவக் கூடவே தான் இருப்பேன் பாட்டிமா. தனியா எங்கேயும் அனுப்பமாட்டேன். எங்க வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது." என்றவனால் தன் வார்த்தைகளை மூன்று மாதங்கள் கூட காப்பாற்ற இயலவில்லை.

ந்த மூன்று மாதங்களில் மாமியார் வீட்டில் பொருந்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டாள் காயத்ரி. திருமணத்திற்கு முன்பு நினைத்ததைப் பேசிவிடும் கோபக்காரி தான். ஆனால் இவள் வீட்டினரின் அறிவுரைகள், மாமியாரின் சுடுசொற்களுக்கு மௌனமாக இருக்கக் கற்றுக் கொடுத்திருந்தது.

திருமணம் முடித்து வந்த போது இவளுக்கு நன்கு பரிச்சயமான ஒரு அத்தை, இவர்கள் வீட்டிற்கு வந்தார். அவருக்கு இவள் ஒரு புன்னகையை மட்டும் தர, அப்போது பிடித்தது சனியன்.

கதிரோடு பிறந்தவர்கள் இரு பெண்கள். மூத்தவள் தான் தான் இந்த வீட்டிற்கு நாட்டாமை என்ற எண்ணம் கெண்டவள். "வந்தவங்களை வாங்கன்னு கூப்பிட மாட்டியா? நம்ம அத்தை தானன்னுலாம் இருக்கக்கூடாது." என்று வந்தவரின் முன்னிலையிலேயே ஆரம்பித்தவள், கிடைத்த வாய்ப்பை அத்தனை சீக்கிரம் விட்டுவிட மாட்டேன் என்பது போல் அரைமணிநேரம் லெக்சர் கொடுத்தாள்.

அன்றிலிருந்து இந்த நாத்தனார்காரியிடம் காயத்ரியைக் குறித்து யாரேனும் விசாரித்தால், "அவ வந்தவங்களை வாங்கன்னு கூட கூப்பிட மாட்டா." என்பது தான் அவளின் முதல் அறிக்கையாக இருக்கும்.

நான்கு மாதங்கள் கடந்த பின்னும் காயத்ரி கருத்தரிக்கவில்லை.

கடந்து செல்லும் நாட்கள் மறந்தாலும் இவளின் மாமியார் மறந்து விட மாட்டார். "இந்த மாசம் குளிச்சியா?"

"இல்ல அத்தை. ஒரு வாரம் கூடிருக்குது."

"ஓஹோ… சரி இந்த சிலிண்டரைத் தூக்கி அந்தப் பக்கமா வை!"

"வைக்கறேன் அத்தை." என்றுவிட்டு அறைக்குள் வருபவள், மாமியார் கிச்சனை விட்டு நகர்ந்த பின்னர் தான் வெளியே வருவாள்.

'திமிர் பிடிச்ச பொம்பளை! வேணும்னே வெய்ட் தூக்க சொல்லுது. கண்டிப்பா நான் செய்ய மாட்டேன்.' என மனதிற்குள் அவசர சபதம் செய்வாள் காயத்ரி.

திடுமென வெளியில் வரும் அத்தையம்மா, "பப்பாளியெல்லாம் நல்லா சாப்பிடணும். அப்போ தான் கரு தங்கும். உனக்கெங்கே இதெல்லாம் தெரியப் போகுது?" எனவும்,

இவளுக்கு ஆத்திரம் 'எல்லைக் கடக்கட்டுமா?' எனக் கேள்வியெழுப்பும்‌. பின்னே! பப்பாளி கருவைக் கலைக்குமென எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறாள். 'ச்ச! என்ன மனுஷங்களோ!' என்ற சலிப்பேற்படும்.

நாத்தனாரின்‌ புகார்கள் மற்றும் மாமியாரின் ஜாடைப் பேச்சுக்களை சகித்துக்கொள்ள முடிந்தவளால், மாமனாரின் பார்வை தன்னைத் தொடர்வதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல், ஆண்களென்றால் பதறும் தனக்கு தான் அப்படி தோன்றுகிறதோ என மனதினை அமைதிப்படுத்த நினைத்தாள்.

ஒருநாள் இவள் கால்வலி என அறைக்குள் தரையில் அமர்ந்திருக்கையில், அறை வாசலுக்கு நேரெதிரே ஹாலில் தலையணையைப் போட்டுப் படுத்துக் கொண்ட மாமனார், திரை மறைக்காத அடிப்பகுதியின் வழி இவளை நோட்டமிடுவதைக் கண்டதும் இவளுக்கு சகலமும் ஆட்டம் கண்டுவிட்டது.

என்ன செய்வது? என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. புதுக் கணவனிடம் உன் தந்தை இப்படி என்று சொன்னால் நம்புவானா? முதலில் தன்னால் இவ்விடயத்தை யாரிடமும் எப்படிச் சொல்ல முடியும்?

தன் வீட்டினரிடம் சொன்னால் அவர்களின் எதிர்வினை எப்படியிருக்கும்? வீட்டில் இவளுக்கு கீழ் இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கின்றனர். தான்‌ ஏதேனும் விபரீத முடிவெடுத்து, அது அவர்களையும் பாதித்துவிட்டால் என்ன செய்வது?

தன் கணவன் அன்பானவன், பொறுமையானவன், மற்றவர்கள் எப்படியிருப்பினும் கதிர் எப்போதும் தன்னை அவன் நெஞ்சுக்குள் வைத்துப் பாதுகாக்கிறான். இப்போது, தான் மாமனார் குறித்து சொல்லி, கதிரின் அன்பு தனக்கு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது?

அரைநொடிக்குள் எண்ணங்கள் எங்கெல்லாமோ சுற்றி வந்துவிட்டது. ஆனால் இவளால் ஒரு முடிவெடுக்க முடியவில்லை.

நிதானித்தாள். கதிர் எப்போதும் தனக்கு ஆதரவாக இருப்பானென ஆணித்தரமாக நம்பினாள். இப்போது, தான் ஏதாவது சொல்லப் போய் குடும்பம் உடைந்துவிடக் கூடாது என அமைதி காத்தாள்.

குடும்பம் உடைந்துவிடக் கூடாது என இவள் மட்டும் முடிவெடுத்தால் போதுமா? மற்ற குடும்ப உறுப்பினர்களும் நினைக்க வேண்டுமல்லவா?

இதோ அதோவென அந்த நரகத்தில் ஆறு மாதங்களைக் கடத்திவிட்டாள். அதற்கும் மேல் முடியவில்லை.

அன்று குளியலறை போய்விட்டு வந்த மனைவி பதட்டத்துடன் அரக்கப்பறக்க ஓடி வருவதைக் கண்ட கதிர் அறைக்குள் வந்ததும், "என்னடா?" எனக் கேட்க, இவளுக்கு கலங்கிய கண்களை மறைக்கவும் இயலவில்லை.

இத்தனை நாட்கள் அவன் அலுவலகம் சென்ற பின், வேலையைக் காட்டும் மாமனார் அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் மகன் வீட்டிலிருக்கும் போதே குளியலறை கதவின் இடுக்கின் வழி பார்த்துள்ளார். இவர்கள் வீட்டில் அட்டாச்ட் பாத்ரூம் இல்லை. அது அவருக்கு வசதியாக போயிற்று.

இத்தனை நாட்களும் சும்மா பார்வையிட்டுக் கொண்டிருந்தவர் இன்று அந்த இடுக்கின் வழி பார்த்ததும், அந்தக் கயமைக் கண்களும் அவரின் உருவமுமே அவளை ராட்சசனைப் போல் பயமுறுத்தின.

கதிரிடம் சொல்லிவிட்டாள். அழுதபடியே சகலத்தையும் சொல்லிவிட்டாள். எழுந்தவன் அம்மாவிடம் போய் கேட்கிறேன் என்றான். கதிர் எதற்கும் ரகளை செய்யும் ரகமில்லை தான். ஆனால் 'இதற்கும் கூடவா பொறுமையாக பேச வேண்டும்?' என இவளுக்கு தோன்ற தான் செய்தது. அத்தோடு அவரைப் பற்றியும் தெரிந்து தான் இருக்கிறது போலும். அதனால் தானே இந்த நிதானம்?

"இல்ல, அவங்ககிட்ட சொல்ல வேணாம். அவர் இப்டின்னு தெரிஞ்சா அவங்களுக்கு கஷ்டமா இருக்காதா?"

"சரி, என்ன பண்ணலாம்?"

"உங்க அக்காகிட்ட சொல்லலாம். அவங்க கொஞ்சம் புரிஞ்சுக்குவாங்கன்னு நினைக்கறேன்." எதற்கெடுத்தாலும் வீட்டில் நாட்டாமை செய்யும் சொம்பு தூக்கி அவள் தானே? தன் அப்பாவின் வண்டவாளத்தையும் தெரிந்து கொள்ளட்டுமே?

சொன்னான். அவள் குதிப்பது போல் குதித்தாள். "அவருக்கெல்லாம் சோத்துல விஷத்தை வச்சுக் கொடுக்கணும்." என்றாள்.

காயத்ரியால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. பயந்தாள். அழுதாள். பாத்ரூம் கூட போக மாட்டேனென அடம்பிடித்தாள்.

யோசித்தவன் அன்னையிடம் வெளியே போய்விட்டு வருவதாகச் சொல்லி காயத்ரியை அழைத்துப் போனான். ஞாயிற்றுக்கிழமை இருவரும் ஊர் சுற்றுவது வழமை தானென்பதால் அவரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

சாயங்காலம் வரை ஊர்சுற்றிவிட்டு வீட்டிற்கு கிளம்பும் போது காயத்ரிக்கு உதறலெடுத்தது. வர‌மாட்டேனென்றாள். எப்படியெல்லாமோ சமாதானம் செய்தான். இனி அந்த வீட்டிற்கு வருவதில்லை என ஒரே பிடியாக நின்றுவிட்டாள்.

வேறுவழியின்றி அருகிலிருக்கும் சித்தியின் வீட்டிற்கு அழைத்துப் போனான். "நாள் கூடியிருக்குது போல சித்தி. அங்க இருந்தா ஏதாவது வேலை செஞ்சிட்டே இருப்பா‌. ஒரு ஒரு வாரம் இங்கே இருக்கட்டும்."

அவருக்கும் காயத்ரியின் முகம் ஏதோ சரியில்லை எனக் காட்ட, "இருக்கட்டுமே… இவ்ளோ லேட்டாகிடுச்சு. நீயும் இருந்துட்டு காலைல போ!" என்றுவிட்டார்.

"அத்தைக்கு கால் பண்ணி சொல்லிடுங்க. தேடப் போறாங்க." - காயத்ரி.

அவனும் சொன்னான். அது அவரின் தங்கை வீடென்பதால் சம்மதித்துவிட்டார் போலும்.

தனிமையில் கதிர், "வேற வீடு பார்ப்போம்." என்றான்.

இந்த மட்டுக்கும் புரிந்து கொண்டானே என நிம்மதியானாள் காயத்ரி.

வேறு வீடு பார்க்கிறோம் என்றதும் நாட்டாமை நாத்தனார் அந்தர் பல்டி அடித்துவிட்டாள். "ஏன் அட்டாச்ட் பாத்ரூம் இருக்க மாதிரி வீடு பாரேன். இவ இவளோட ரூம்க்குள்ளேயே இருந்துக்கட்டும். இதுக்காக எதுக்கு தனியா போகணும்?"

"சரி வராது. காயத்ரிக்கு நாள் வேற கூடிருக்குது. இங்க இருந்தா பயத்துலயே ஏதாவது ஆகிடப் போகுது."

மகன் தங்கள் சொல் பேச்சு கேட்கவில்லையென்றதும், "எப்டியோ நாசமாப் போங்க!" என சபித்தார் மாமியார்.

வீடு பார்க்கும் அந்த நான்கு நாட்களில் வீட்டிலிருந்தவளை மாமியாரும் நாத்தனாருமாக சேர்ந்து குதறியெடுத்தனர். யாரிடமும் சொல்லாதே என்றார்கள். இதில் உன் பெயரும் அடங்கியிருக்கிறது என பயமுறுத்தினார்கள். வெளியே தெரிந்தால் அசிங்கம். என்றார்கள். அத்தோடு மெல்லும் வாய்க்கு கிடைத்த அவல் என்று ஏகப்பட்ட அறிவுரைகள் கிடைத்தன.

மாமியார் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப் போனார். விரக்தியாம்! அதற்கு நாத்தனார் காயத்ரியை பொறுப்பாளியாக்கினாள். காயத்ரி தன் அம்மாவைத் தவிர வேறு யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.

ஒருவழியாக வேறு‌ வீடு கிடைத்து தனிக்குடித்தனம் போனார்கள். குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு, சரியாக தூங்காமல் பயந்து கொண்டும், எனக்கு மட்டும் ஏன் இப்படியே நடக்கிறது என மருகிக் கொண்டும் அமர்ந்திருப்பாள்.

குழந்தையும் பிறந்தது. காயத்ரி தாய்வீட்டில் இருக்கும் போது அந்தப் பெரிய மனிதர் குழந்தையைப் பார்க்க வர, அரண்டு போனாள் இவள். குழந்தையைக் காட்ட மாட்டேனென ரகளை செய்தாள்.

"ஒரே ஒரு தடவை காட்டிடு காயத்ரி. இல்லைன்னா திரும்ப திரும்ப வந்துட்டே இருப்பார்." அவளின் அம்மா எவ்வளவோ எடுத்துச் சொன்னார்.

"மாட்டேன் மாட்டேன்." என ஹிஸ்டீரியா வந்தவளைப் போல் கத்தினாள் இவள்.

"மாப்பிள்ளைக்காக பாரு காயத்ரி. அவர் இங்கே வர வேண்டாம். அம்மா குழந்தையை எடுத்துட்டுப் போய் காட்டிட்டு வர்றேன் செல்லம்…"

"முடியாதும்மா. தர மாட்டேன்." என குழந்தையைக் கைக்குள்ளேயே வைத்துக் கொண்டாள். அறைக்கதவைப் பூட்டிக் கொண்டாள். உடல் நடுங்கியது. அவர் விரல்கள் தன் குழந்தையைத் தொடுவதா என அருவருப்பில் குறுகினாள்.

அப்போதே காயத்ரிக்கு கவுன்சிலிங் கொடுத்திருக்கலாம். குடும்ப மானம் போய்விடுமென பிரச்சினையை மூடி மறைக்கவே பார்த்தார்கள்.

ஆனால் விஷயம் சொந்தங்களிடையே தீயாகப் பரவியது. பரவச் செய்தாள் நாட்டாமை நாத்தனார். "பிள்ளையை எங்கப்பாவுக்கு காட்ட மாட்டேன்னு சொல்லிட்டாளாம். அவரு இல்லாமலா என் தம்பி வந்தான்?" என ஆரம்பித்து இன்னும் தன் இஷ்டத்திற்கு அளந்துவிட்டாள்.

அவளிடம் வம்பு பேசிய சொந்தங்களில் ஒன்றுக்கு கூட காயத்ரியின் செயலுக்கு என்ன காரணம் எனக் கேட்பதற்கு தலைக்குள் ஒன்றுமில்லை. ஆனால் முந்தைய தலைமுறையில் மூத்த மருமகளாக இருந்த ஒருவர், காயத்ரிக்கு பெரியம்மா முறையில் வருபவர் காயத்ரியின் அம்மாவிடம் உரிமையாகக் கடிந்துக் கொண்டார்.

"உம்மவளுக்கு என்ன அவ்ளோ திமிரு? பிள்ளையைக் காட்ட மாட்டேன்னு சொன்னாளாமே? சின்னக் கழுதைங்கறது சரியா தான் இருக்கு."

தன் மகளின் செயல் சொந்தங்களிடையே பேசுபொருளாவதை எந்த தாய் விரும்புவார்? ஆற்றாமையில் பொங்கிவிட்டார். "எக்கா விஷயம் தெரியாம பேசாதீங்க. அந்த மனுசன் எம்மவ பாத்ரூம்ல இருக்கும் போது போய் எட்டிப் பார்த்திருக்கான். அந்தாளைப் பார்த்தாலே இந்த பிள்ளை நடுங்குது அக்கா."

"ஏ என்ன புள்ள சொல்ற?" என்றவரின் குரலில் திடுக்கிட்ட பாவனை.

"ஆமாங்க க்கா. அதனால தான் அன்னிக்கே மாப்பிள்ளை தனியா போயிட்டார்."

"அடக்கொடுமையே! அவனை உம்மவ சும்மாவா விட்டா? விளக்குமாத்தால அடிச்சிருக்க வேண்டியது தான? இனி வந்தா செருப்பெடுத்துக் காட்ட சொல்லு. ******ப்பய…"

"இவ பிள்ளையைக் காட்டாததுக்கே இத்தனைப் பேச்சு வாங்குறா! இதுல செருப்பெடுத்துக் காட்டினா என் பிள்ளையை பாடாபடுத்திருவா அந்த ராஜபாளைத்துக்காரி!"

"எனக்கும் அவ தாம் பிள்ள சொன்னா. அங்க உட்கார்ந்து உம்மவளை நாறடிச்சிக்கிட்டு இருக்கா. நீ போனைப் போட்டு கிழிச்சுவிடு!"

இவரைப் போல் ஒவ்வொருவராகக் கேட்க ஆரம்பித்தார்கள். நாட்டாமை நாத்தனாரிடம், "அப்படியா? இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு ரொம்பத் திமிர் தான்." என்றவர்கள் காயத்ரியின் அம்மாவிடம், "நீ ஒண்ணும் கவலைப்படாத புள்ள! யாரா இருந்தாலும் இப்டி தான் செய்வாங்க. உன் மவ செஞ்சது தான் சரி. அவனுக்கு இப்டி தான் தண்டனை குடுக்கணும்." என்றார்கள்.

விஷயம் அத்தோடு நிற்கவில்லை. சொந்தங்கள் ஒவ்வொருவரின் வாயிலாக கிணற்றிலிருந்து பூதம் கிளம்புவதைப் போல் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொன்னார்கள்.

"ஆங்! அதானப் பார்த்தேன். அந்தக் காலத்துல அவன் அவனோட பொண்டாட்டி கூட பொறந்தவளுங்களையே அப்பிடித்தேன் பார்ப்பான்."

"உனக்கு இன்னொரு விசயம் தெரியுமா? அவன் பெத்த பொண்ணுங்க மேலயே கைய வச்சவன். இப்ப உம்மவளா?"

"அன்னிக்கு கிணத்து மேட்டுல உட்கார்ந்து எங்கப்பா ராத்திரி என் மேல தொட்டுட்டாரு. நான் சாகப் போறேன்னு அழுதவ தான், இன்னிக்கு உம்மவளைக் கிழிச்சிக்கிட்டு இருக்கா. அப்பங்காரனை விட்டுக் கொடுக்காம இருந்து பகுமானம் காட்டுறாளாம்!"

"பத்தாங்கிளாஸ் படிச்ச பிள்ளையை புருசனுக்கு பயந்து அம்மா வீட்டுக்கு அனுப்பி படிக்க வச்சா அவ ஆத்தாக்காரி…"

இத்தனையும் கேட்ட பின்னர் காயத்ரியின் நிலைமை என்னவாகியிருக்கும்? என்னக் குடும்பமோ என அருவருத்துப் போனாள். தன் வாழ்நாளில் அந்த மனிதரை நேருக்கு நேர் பார்த்துவிடவேக் கூடாது என நினைத்துக் கொண்டாள்.

இத்தனையிலும் அவளுக்கு இருந்த வருத்தம் என்றால், அது அவளின் கதிர் எங்கும் வாயைத் திறக்காதது தான். அவனை இவள் மலையளவு நம்பிக் கொண்டிருந்தாளே? ஆனால் அவனின் அப்பா செய்த செயலுக்கும் சரி, இன்று அவனின் அக்கா பேசும் பேச்சுக்களுக்கும் சரி, ஏன் என்ற ஒரு கேள்வியைக் கூட கேட்டுவிடவில்லை அவன்.

ஆரம்பத்தில் கதிரின் மேல் இருந்த சிறு வருத்தம், அவன் அவர்கள் இவளைக் குறித்து மட்டரகமாக பேசும் எல்லாவற்றுக்கும் வாய்மூடியே இருந்ததில் கோபமாக, ஒரு கட்டத்தில் அதுவே வெறுப்பாக மாறிப் போயிற்று.

இதைத் தவிர்த்து கதிரின் குணத்தில் குறைசொல்லவே முடியாது. காயத்ரியை ஒரு குழந்தையைப் போல் கவனித்துக் கொள்வான். ஆனால் அதையெல்லாம் விட, கணவன் அவன் வீட்டாரிடம் தன்னை விட்டுக் கொடுப்பதாக நினைத்தாள் காயத்ரி. சின்ன சின்ன விடயங்களிலும் சொல்லிக் காட்டி சண்டையிட ஆரம்பித்தாள். உறவுக்காரர்களிடமும் ஒரு ஒதுக்கத்தைக் கடைபிடித்தாள்.

கதிர் மனைவியின் உள்ளக்கிடக்கையைப் புரிந்தும் புரியாதது போல நடந்து கொண்டான். இவளுக்காக தன் குடும்பத்தினரை எதிர்த்துப் பேச தயங்கினான். காலப்போக்கில் சரியாகிவிடுமென நம்பினான்.

ஆனால் அவன் அறியாத ஒன்று, முதல் நாள் புகுந்த வீட்டில் காலெடுத்து வைக்கும் ஒரு பெண், அப்போது யார் யார் என்னென்ன வார்த்தை பேசினார்கள் என்று கேட்டால் ஐம்பது வருடங்கள் கழித்தும் கூட பட்டென்று பதிலெழுதுவாள் என்பது! அப்படியிருக்கையில் காயத்ரி தனக்கு நடந்த அசிங்கத்தையும் தவறே செய்யாமல் கேட்ட சுற்றங்களின் பேச்சுக்களையும், காலகதியில் மறந்து போவாள் என நினைப்பது எத்தனை முட்டாள்தனம்?

கதிர்‌ பொறுமைக் காக்க எண்ணினான். குடும்பமென்றால் நான்கு சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். தன்னைப் போல் காயத்ரிக்கு பொறுமையும் பக்குவமும் இல்லை; சிறுபெண் என நினைத்தான். குடும்ப உறவுக்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் முக்கியம் தானென்றாலும், பேச வேண்டிய நேரத்தில் தன் குரல் ஓங்கி ஒலிப்பதும் முக்கியம் தானென்பதை இவனுக்கு யார் சொல்வது?

அதையும் சொல்லித் தந்தது அவனின் சுற்றத்தார் தான்! இம்முறை அவனின் மற்றொரு சித்தி. காயத்ரியின் சின்ன மாமியார்.

காயத்ரியைக் குறை சொல்ல புதிதாக கன்டென்ட் எதுவும் கிடைக்காததால், அவள் திருமணம் முடித்து வந்த போது, 'வாங்க அத்தை.' என வரவேற்கவில்லை என்று சொல்லி மீண்டும் பிரச்சினையைக் கிளப்பினார்.

அதற்கும் கதிரிடம் தான் வெடித்தாள் காயத்ரி. பொறுத்துப் பார்த்தவன் தன் அக்காளுக்கு அழைத்து, "இவளைப் பத்தி ஏன் பேசறீங்க? வாங்கன்னு கூப்பிடலன்னு சொன்னியாமே? தேவையில்லாம பேச வேணாம்." என்றான்.

அதற்கு அந்தப்பக்கம் அவள் என்ன சொன்னாளோ தெரியாது. ஆனால் காயத்ரி கதிரின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள், கர்வமாக! அவன் விரல்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள், காதலாக!

இத்தனை நாட்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தவளா இவள்! எனக் கதிருக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனைக்கும் இவன் தன் அக்காளிடம் சாதாரணமாக தான் பேசினான். சண்டை போடும் எண்ணமில்லை. பொதுவாக எச்சரிக்கும் விதமாய் இரண்டே வார்த்தைகள்! அதற்கே குளிர்ந்துவிட்டாளா இவன் மனைவி?

கதிர் இவளை காதலால் ஆராதிக்கும் போதெல்லாம் வராத கர்வம், அவன் இவளுக்காக அவர்களுக்கெதிராக பேசிய இரண்டு வார்த்தைகளில் ஆயிரம் மடங்காக வெளிப்பட்டது. அது நிச்சயம் அவனின் உடன்பிறந்தவளுக்கெதிராக அவனைத் திருப்பிவிடும் முயற்சியல்ல! அவனிடம் தனக்கான இடத்தை, தனக்கான பாதுகாப்பை உறுதி செய்ததில் விழைந்த கர்வம்!

அவர்கள் இனி என்ன வேண்டுமானாலும் பேசட்டுமே! 'என் கணவனைப் பார்! எனக்காக அவன் இருக்கிறான். நீ என்னமும் பேசிவிட்டுப் போ! உன்‌ முகத்தில் கரியைப் பூச எனக்காக என் கணவனிருக்கிறான்.' எனும் கர்வம்.

அதுவே அவன் இவளுக்கு தரும் ஆதரவு! நம்பிக்கை!

'கொண்டவன் சரியாக இருந்தால் கூரையேறியும் குடும்பம் நடத்துவாள் இவள்' என்பதைப் புரிந்து கொண்ட கதிரவன், காயத்ரியின் பாட்டியிடம் திருமணமான போது சொன்ன வார்த்தைகளை இரண்டரை வருடங்கள் கழித்து நிறைவேற்றியதில் நிம்மதியாக உணர்ந்தான்

*****

Stories you will love

X
Please Wait ...