JUNE 10th - JULY 10th
செவலை
**************
"யேன் ஆத்தா, செவலைக்குத் தண்ணி வச்சியா??" என்று தன் மகள் இளவெயினியிடம் கேட்டபடியே கருப்பன் தன்னுடைய குடிசை வீட்டுத் தாழ்வாரத்தில் வந்தமர்ந்தார்.
தலையில் தலைப்பாகையாய் கட்டியிருந்த பெரிய துண்டை அவிழ்த்து அந்தக் கரிசல் பூமியின் வெப்பத்தையும் முகத்தில் ஒழுகிய வியர்வைத் துளிகளையும் துடைத்தார்.
"ஆத்தா நீரார் தண்ணி கொண்டு வா" என்று வாங்கிக் குடித்தவர் கலைந்திருந்த தன்னுடைய முறுக்கு மீசையையும், தாடியையும் நீவி சரிசெய்துக் கொண்டார்.
"எங்க அவன்?" என்று தன்னுடைய ஒரே மகனைக் கேட்டார்.
அதற்கு மகள் "இன்னும் அவன் பள்ளிக்கூடத்திலிருந்து வரலப்பா" என்று பதில் சொன்னாள்.
"செவலை" என்பது கருப்பன் வளர்க்கும் ஒரு சண்டைச் சேவல்.
ஒரு மலையடிவாரத்தில் கோவிலுக்குச் சென்றபொழுது அந்தத் தோப்புக்குள் இருந்த ஒரு அரியவகை சேவலைக் குஞ்சிலே வாங்கி வந்தார். அதை சண்டைக்கென்றே வளர்த்து இப்போது தயார் நிலையில் வைத்திருந்தார். சண்டைக்கான வயது வந்தாலும் சேவல் இன்னும் சேவல் கட்டுக்குப் போகாமலிருந்தது.
அரிசி, கம்பு, கேழ்வரகு என அதற்கென்று சிறுதானிய உணவு வகைகள் உண்டு. அவருடைய அந்தக் குடிசையென்பது பனை ஓலையால் வேயப்பட்ட குடிசை. அன்றைய காலங்களில் குடிசையிலும் கூட வெளியில் தாழ்வாரம் திண்ணை வைத்துத்தான் வீடு கட்டுவார்கள். அதில் வழிபோக்கர்கள் கூட அவசரத்திற்கு வந்து தங்கிச் செல்வார்கள்.
கருப்பன் வீட்டிலேயும் அவ்வாறான ஒரு பெரிய தாழ்வாரம் உண்டு. அந்தத் தாழ்வாரத்தில் தான் சேவலைக் கட்டிப் போடுவார். அதிகப்படியான சூரிய வெளிச்சம் விழாதவாறு தடுப்புகள் அமைத்து வெப்பநிலையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். மண்சட்டியில் சேவலுக்கு உணவும் தண்ணீரும் வைத்துவிடுவார். பனை ஓலையால் வேயப்பட்ட வீடு என்பதால் வெயில் காலத்திலும் பனிக்காலத்திலும் மழைக்காலத்திலும் ஒரே மாதிரியான காலநிலையைக் கொடுக்கக்கூடியது.
வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் பனிக்காலத்தில் கதகதப்பையும் கொடுத்துச் சீரான வெப்பநிலையை ஓரளவுக்குப் பராமரிக்கும்.
இதுபோக ஆடுமாடுகள், கோழிகள்,
சல்லிக்கட்டுக் காளைகள் என அவருடைய வாழ்க்கை, விலங்குகளையும் வேளாண்மையையும் சார்ந்தே இருந்தது. மூன்றாவது பிரசவத்தின்போது கருப்பனின் மனைவி இறந்துவிட்டாள். தாயில்லாத பிள்ளைகள் என்பதால் கருப்பன் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். பிறந்து கீழே விழுந்ததில் இருந்து இரண்டு பிள்ளைகளையும் கருப்பன் தன் சுண்டு விரல் கொண்டு கூட தொட்டு அடித்ததில்லை.
ஆனால் கருப்பனின் இந்தக் கம்பீரத் தோற்றமும், முறுக்கு மீசையும், கனத்தக் குரலும் அங்கு இருக்கும் ஆடு மாடுகள், சேவல், சல்லிக்கட்டு காளைகள், இவர்கள்(பிள்ளைகள்) இரண்டு பேரும் என ஒட்டுமொத்த வீடும் சேட்டைகளிலிருந்து ஒரு அதட்டிலியே அடங்கி விடுவார்கள். கருப்பன் கோபப்படுமளவிற்கு இரண்டு பேரும் பெரியதாக எதுவும் செய்யமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கருப்பனுக்கு இவர்கள் இரண்டு பேரும் அறிவுரை சொல்வார்கள். அன்புக்கும்,
பாசத்திற்கும் கட்டுப்பட்டவன் கருப்பன். அதனால் அவர்கள் சொல்வதைப் பொறுமையாக ஏற்பார்.
செவலைச் சேவலைக் கருப்பன் வளர்த்ததை விட அவர் மகன் "ராசு" வளர்த்தது தான் அதிகம்.
பள்ளி விட்டு வந்ததும் அந்தச் சேவலுடன் விளையாடுவதுதான் அவனுடைய விருப்பமான விளையாட்டு. வார இறுதி நாட்களிலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் சேவலைக் தூக்கிக்கொண்டு குளத்திற்குச் சென்று நீச்சலுக்குப் போடுவான். பிறகு சேவலை வெயிலில் கட்டி ஈரத்தை உலர்த்திவிட்டு இரை, தண்ணீர் வைத்துப் பார்த்துக்கொள்வான். அவ்வப்போது பக்கத்துவீட்டுச் சேவல்களுடன் சண்டைக்கு விட்டுத் தயார் செய்வான். இது பெரும்பாலும் கருப்பனுக்கே தெரியாது.
இந்தச் செவலைச் சேவல் மற்ற சேவல்களிடமிருந்து சற்று தனித்துவமானது. இது மற்ற சேவல்களை விட உயரமாக வளரும்,
நிறமும் சற்று வித்தியாசமாக
அரிதானதாக இருக்கும்.
முக்கியமாக சேவலின் வயதைக் கணக்கிட உதவும் காலின் முள் இதற்கு முளைக்கவே முளைக்காது.
எத்தனை வயதானாலும் இதற்கு முளைக்காது. இதன் வயதைக் கணிப்பது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். சேவல்
வளர்ந்த பிறகும் கூட இறக்கைகளிலும் மற்ற உடல் பகுதிகளிலும் குறுத்து விட்டுக் கொண்டே இருக்கும்.
இதற்கு முள் தெரிக்காததால் இதைக் கல் முள் சேவல் என்றும் சேவல்சண்டை களத்தில் அழைப்பார்கள்.
அறுவடைக் காலம் வந்தது ஊரெங்கும், பட்டி தொட்டி எங்கும் குலசாமிகளுக்கும் ஊர் காவல் தெய்வங்களுக்கும் திருவிழா கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஊர்க் கோயில் திருவிழாக்களில் சேவல்சண்டை, கிடா முட்டு, மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் தவறாமல் நடைபெறும்.
இந்த முறை ஊர்த் திருவிழாவில் நடக்கும் போட்டியில் சேவலைக் கட்டி விடுவது (சண்டைப் போட்டியில் பங்குகொள்ள செய்வது) என்று கருப்பன் முடிவெடுத்தார். கருப்பனின் மகன் ராசுவும் தன்னையும், சேவலையும் ஆயத்தப் படுத்திக் கொண்டான். செவலையின் முதல் ஆட்டம் என்பதால் இராசு பெருத்த ஆவலைக் கொண்டிருந்தான். அடுத்தவாரம் திருவிழா தொடக்கம்.
திருவிழாவிற்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் சூழ்நிலையில் இராசுவிற்கும் இது பள்ளித் தேர்வு காலம். அதனால் அவன் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இராசு பெரும்பாலும் சேவலைக் கட்டிப் போட்டிருக்கும் வீட்டுத் தாழ்வாரத்தில் தான் அமர்ந்து படிப்பான். இவன் படிப்பதையெல்லாம் குழந்தையைப் போல அமைதியாக இருந்து கேட்டுக்கொண்டே இருக்கும் செவலை. ஒரு கட்டத்துக்கு மேல் செவலைக்கு அலுப்பு தட்டிவிட்டால் மெதுவாக நகர்ந்து வந்து தன் கிளிமூக்கால் ஒரே கொத்தாக கொத்திவிடும்.
செவலைக்குக் காதல் வந்தாலும் சரி, பாசம் வந்தாலும் சரி, கோபம் வந்தாலும் சரி எல்லாவற்றிற்கும் கொத்து தான். அவனுடைய ஒரு கொத்து என்பது கழுகின் ஆற்றலுக்கு ஒப்பானது. அதனுடைய வீரியமிகு ஒருகொத்தில் சதை பிய்த்துக்கொண்டு வந்து விடும். ஆனால் அது இராசுவிடம் அந்த மாதிரியான வன்மத்தோடு தீண்டுவதில்லை என்றாலும் இராசுவின் கைகளில் தடிப்புகள் உருவாகிவிடும். கோபத்தில் இராசுவும் திருப்பி அடிப்பான். இப்படி இரண்டு பேருமே அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டு பிறகு சமாதானமாகிவிடுவார்கள்.
இராசு சோத்துத் தட்டை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தால் செவலையன் அப்பாவி போல மூஞ்சியை வைத்துக்கொண்டு அவனருகில் வந்துவிடும். வந்து அடிக்கடி மூஞ்சியைத் திரும்பித் திருப்பிப் பார்க்கும்.
சில நேரம் முதுகில் ஊர்ந்து செல்லும் எறும்புகளை நுனி மூக்கால் கொத்தி எடுக்கும். தலையில் கொத்திக் கோதி விடும். இந்தக் கொத்து என்பது ஒரு பெண்ணின் முத்தத்தை விட மிருதுவானதாக இருக்கும். பிறகு இருவரும் சாப்பிட்டு எழுந்துவிடுவார்கள். முக்கியக் குறிப்பு என்னவென்றால் இருவருமே அசைவப் பிரியர்கள். அசைவ உணவின் போது இவர்களின் காதலை இன்னும் கொஞ்சம் மிகுதியாகவே பார்க்கலாம்.
சில நாள் மழைக்காலங்களில் சேவலை உள்வீட்டிற்குள் தான் கட்டுவார்கள். அவர்கள் வாழும் இடமென்பது ஒரு காய்ந்த பூமி. அது செழுமைமிக்க வண்டல் மண்ணல்ல.
கரிசல் மண்ணும் செம்மண்ணும் கலந்த பூமி. சிறு சிறு குன்றுகளும், கரடுகளும் அதன் அடிவாரத்தில் கரிசல் மண்ணும் சற்று சமதளங்களில் செம்மண்ணும் இருக்கும். மழைக்காலங்களில் குன்றுகளிலிருந்து மழைநீர் அருவி போல அடித்து ஓடும். குன்றுகளில் இருந்து கூழாங்கற்களையும் மணல் துகள்களையும் அரித்து எடுத்து வந்து அடிவார சமதளங்களில் படிய வைக்கும். அம்மணல் ஆற்றுச் சமவெளி மணல்களிலிருந்து வேறுபட்டவையே.
இளவெயினி அம்மணலை இரண்டு சட்டி எடுத்து வந்து உள்வீட்டிற்குள் ஒரு மூலையில் கொட்டி அதன் மீதுதான் சேவலைக் கட்டுவாள். மழைக்காலங்களில் இப்படியாகத் தான் இவர்கள் வாழ்க்கை நகரும்.
சில நேரம் உறங்கிக் கொண்டிருக்கும் இராசுவின் மீது இந்தச் சேவல் ஏறிப் படுத்துக் கொள்ளும். அதற்கு ஏதோ மரக்கிளையில் உறங்குவதாக நினைப்பு. அவன் உறக்கம் விழித்து எழுகையில் சேவலைத் தள்ளிவிட்டுத் திட்டுவான்.
"உனக்கு மலையில் இருந்து மணல் கொண்டு வந்து கொட்டி வைத்துப் படுக்கச்சொன்னால் நீ என் மேலதான் தூங்குவியா?" என்று கத்துவான்.
செவலைக் கண்டுகொள்ளாமல் தண்ணீர் குடிப்பதாக பாவனை செய்தபடியே தன் இடத்திற்குச் சென்று விடும். இப்படியாக இரண்டு மூன்று வருடம் நகர்ந்து தன்னுடைய முதல் சண்டைக் களத்தைப் பார்க்கப் போகிறது செவலை.
வழக்கமாகக் கொடுக்கும் உணவை விட இன்று அரைவயிற்று உணவுதான் சேவலுக்கு. அப்போது தான் சண்டை செய்வதற்கான முழு ஆற்றலையும் பெரும். தமிழனின் எல்லா கலைகளுக்குள்ளும் மூதாதையர் வழிபாடு இருக்கும். அது போலவே சேவல் சண்டைக்குக் கிளம்பும் முன்பு வழிபாடுகள் செய்வார்கள்.
கருப்பன் சாம்பிராணி கரண்டி கொடுத்து அடுப்புக் கங்கை எடுத்து வரச் சொன்னார். அதில் வீடு மணக்க சாம்பிராணி போட்டார். தன் குல தெய்வத்தை வணங்கி ஒன்னேகால் ரூபாய் காணிக்கை முடிந்துவிட்டு வேண்டிக்கொண்டார். இதுவும் ஒருவகையில் வேட்டை, போர்க்களம் என்றே சொல்லுவார். சேவலையும் பூசையறைக்கு எடுத்துச்சென்று மூதாதையர்களை வணங்கி விட்டு ஒரு கைச் சாம்பல் அள்ளி நெற்றியில் பூசிக் கொண்டு சேவலுக்கும் உடல் முழுவதும் பூசி விடுவார். சேவல் காலில் கட்டியிருந்த திருகாணிக் கயிற்றை வைத்தே இரண்டு கால்களையும் சுற்றிச் சிறு தெய்வங்களை வேண்டிக் கொண்டு சேவல் எடுத்து செல்லும் அதற்கான பையில் தலைகீழாகப் படுக்க வைப்பார். அதன்மேல் ஈரத் துண்டைப் போட்டுவிடுவார். அது வெயில்காலத்திற்கு சேவலுக்கு இதமாக இருக்கும்.
இப்போது சேவல் பையை தன் மகள் இளவெயினியிடம் கொடுத்துவிட்டு பிறகு வீட்டின் வெளியே வந்து வாங்கிக் கொள்வார். அவள் கை இராசியாம். எல்லாத் தகப்பனைப் போலத் தானே அவரும் இருப்பார். பட்டிக்காடோ பட்டணமோ பெண் பிள்ளைகள் என்றாலே தகப்பன்களுக்குத் தேவதைகள் தான். அவளின் ஆசீர்வாதத்தோடு கருப்பனும் இராசுவும் சண்டைக் களத்திற்குக் கிளம்பினார்கள்.
இருவரும் சிறு பயணத்திற்குப் பிறகு சண்டைக் களத்தை அடைந்தார்கள்.
செவலை தன் முதல் சண்டைக் களத்தில் கால் வைத்தது.
ஆடுகளம் 1
***************
ஐயாயிரம் சேவல்களும், பல்லாயிரக்கணக்கான மனிதர்களும் கூடியிருந்தார்கள். இலந்தை மரம், மாமரம் எங்கும் சூழ்ந்திருந்தது. அதன் நிழலில், தான் கொண்டு வந்திருந்த சேவலை எல்லாம் கட்டிப் போட்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் பல கடைகள் அமைத்து உணவுவகைகள் மற்றும் புகை வகைப் பொருள்களை விற்றுத் தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லாச் சேவல்களும் வந்து சேர்ந்து சண்டை ஆரம்பிப்பதற்கு மதியம் ஒரு மணி ஆகிவிடும். கருப்பனும் இராசுவும் மரத்தடியில் சேவலைக் கட்டிப் போட்டுவிட்டுக் குழுமைமிகு அடர்த்தியான நிழலில் இளைப்பாறிக் கொண்டனர். செவலைக்கு இந்தச் சூழ்நிலை புதுமையானது. அது யாவற்றையும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. பிறகு இராசு கொஞ்சம் தண்ணீர் கொடுக்க அதைக் குடித்துச் செவலையும் தன்னைக் கொஞ்சம் இளைப்பாற்றிக் கொண்டது.
சேவல் சண்டைக்குப் பெரும்பாலும் குழு குழுவாகத் தான் வருவார்கள். கருப்பனும் தன்னுடைய ஊர் குழுவிற்காகக் காத்திருந்தார். கரிசல் நிலக் கூட்டத்தாரை "மச்சக்காளைக் குழு" என்று அழைப்பார்கள். மச்சக்காளை, வயது முதிர்ந்த அனுபவம் மிக்க சண்டை சேவல் கட்டாளி. அவர் சேவல் சண்டைக் களத்தில் தனக்கென்று பெயர்பெற்றவர். கருப்பனின் நெருங்கிய நண்பரும் ஆவார். அவரின் ஆலோசனைப் படி தான் எதிரி சேவலைத் தேர்வு செய்வார்கள். பச்சி பார்ப்பதில் வல்லவர். சூத்திரம் அறிந்தவர். ஒருவழியாகக் அந்தக் குழுவும் வந்து விட்டது. சேவல் அதிகம் என்பதால் பல இடங்களில் சண்டை நடைபெற்றது.
செவலையனும் வட்டத்திற்குள் வந்து நின்றான். சண்டை ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆனது, செவலையனுக்குச் சரியான ஜோடி வரவில்லை. மச்சக்காளை "நேரம் ஆகட்டும் பிறகு கட்டலாம்" என்று சொல்லிவிட்டார்.
ஒரு மணி நேரம் கழித்துப் பல போட்டிகளில் வென்ற ஒரு மயில் சேவல், செவளையனை சண்டைக்கு அழைக்கிறார்கள். மச்சக்காளை இரண்டிற்கும் எடை சரி பார்த்தார். இரண்டின் எடையும் சமமாகத் தான் இருந்தது. எனினும் இன்னும் அரைமணி நேரம் ஆகட்டும் என்றார்.
பொழுது சாய்கையில் போட்டிக்குச் சம்மதித்தார். இரண்டு சேவலையும் ஆயத்தப் படுத்தி வட்டத்திற்குள் இறக்கினார்கள். அந்த மயில் சேவல் ஏற்கனவே பல போட்டிகளில் வென்றதால் அதன் மீது பெரிய தொகையைப் பந்தயமாக வெளியில் கட்டிக்கொண்டனர். இது அரசியல் வாதியின் சேவலும் கூட. எனவே பெரிய தொகை விளையாடியது.
மச்சக்காளைக்கு இது புதிய சேவல் என்பதால் நடை பார்க்கக் கொஞ்சம் எதிரி சேவலுக்குத் தள்ளியே வைத்தார்.
அவர் கையை எடுத்தவுடன் சேவல் நடக்கவே இல்லை, இங்கிருந்து ஒரே ஓட்டம் சில அடி கடந்தவுடன் காற்றில் ஒரே பறவையோடு எதிரியின் கண்களில் ஒரே அடி; ரெக்காமட்டை தெறிக்க எதிரி தவறி விழுந்தது. ஒரு நிமிடம் சண்டைக்களம் அமைதியாக நின்றது. இது சேவலா, பறவையா என எல்லோரும் செவலையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
எதிர் கட்டாளி அந்த மயில் சேவலைத் தூக்கி நீவி விட்டார். ஒரு பக்கக் கண்களில் இருந்து இரத்தம் கசிந்து கண்ணாமுழி பிதுங்கியிருந்தது. இனி ஒரு கண்ணில் தான் சண்டை செய்யமுடியும். கட்டாளி மச்சக்காளையே செவலையின் ஆட்டத்தை வியந்து பார்த்தார்.
அடுத்த இரண்டு மூன்று பறவையிலேயே ஆட்டத்தை முடித்து வென்றது. செவலை ஒரே நாளில் களத்தின் நாயகன் ஆகிவிட்டது. ஊரெங்கும் ஒரே பேச்சு. கருப்பனும், மச்சக்காளையும் ஒன்றாக மது அருந்தி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். சில வாரங்கள் கடந்தது.
ஆடுகளம்2
*************
இன்று வானம் கருத்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் சேவல்கட்டுப் பிரியர்கள் எப்படியும் சண்டையை வைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் கருப்பனும், இராசுவும் வழக்கமான பூசைகளை முடித்துக் கொண்டு சேவல் சண்டைக்குப் புறப்பட்டார்கள். வாரத்தின் இறுதியில் விடுமுறை ஓய்வில் நடத்தப்படும் சேவல்சண்டை இது. நிறைய அரசியல்வாதிகளும், பந்தயப் பிரியர்களுமே இன்று சேவல் சண்டையில் அதிகம் கலந்து கொள்வார்கள். இந்தச் சண்டைக் களம் என்பது கிராமங்களில் திருவிழாக்களில் நடக்கும் சேவல் சண்டையை விடச் சற்று வித்தியாசமானது. இங்குப் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். இராசுவும் கருப்பனும் சண்டைக் களத்தை அடைந்து மச்சக்காளைக் குழுவிற்காக காத்திருந்தனர்.
அவர்கள் வருவதற்கு முன்னதாகவே மழையும் வந்துவிட்டது. மழை பெய்வதால் சண்டை இருக்குமா? இருக்காதா? என்ற குழப்பத்தில் பாதி சேவல்கள் போட்டியில் கலந்து கொள்ள வரவில்லை. ஐந்நூறு சேவல்கள் மட்டுமே சண்டைக் களத்தில் வந்திருந்தன.
மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது. சிலர் இன்று சேவலைக் கட்ட வேண்டாம், வீட்டிற்குக் கொண்டு போகலாம் என்றும் கிளம்பி விட்டனர். அங்கிருந்ததில் பெரும்பாலானோர் மது அருந்தி இருந்தனர். அவர்களுக்கு இன்று எப்படியாவது சண்டையைப் பார்த்துவிட வேண்டுமென்கிற ஆவல், வெறி, போதை மயக்கம். மழை கொஞ்சம் விட்டதும் சேவல்களைச் சண்டைக்குக் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். மறுபுறம் ஒவ்வொரு சேவலின் மீதும் பெரிய தொகையாக பந்தயம் கட்டிக் கொண்டார்கள்.
கருப்பனின் செவலை குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. கருப்பனின் துண்டை எடுத்துச் சேவலைச் சுற்றிப் போர்த்தி இறுக்கப் பிடித்துகொண்டான் இராசு. இராசு அடிக்கடி சொன்னான்
"வேண்டாம் ப்பா, இன்னைக்கு சேவலைக் கட்ட வேண்டாம். இன்னொரு களத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று." ஆனால் அங்கு யாரும் கேட்பதாக இல்லை. விடுமுறை தினம் என்பதால் அன்று மச்சக்காளைக் குழுவும் போதையில் தான் இருந்தது.
சேவல் சண்டைக் களத்தில் இருந்த முக்கியமான புள்ளிகள் எல்லோரும் செவலைக்கு வலை விரித்தனர். இந்தச் சேவல் கட்டுப்பட்டால் பந்தயம் நிறைய கட்டலாம். ஆட்டம் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்று பேராசையில் சூழ்ச்சி வலையை விரித்தனர்.
மச்சக்காளை போதையில் இருந்தாலும் கொஞ்சம் தெளிவாகவே இருந்தார். அன்று சேவல் குறைவாக வந்திருப்பதால் செவலைக்குச் சரியான ஜோடி அமையவில்லை. எனினும் அக்கூட்டம் இந்தச் செவலையின் ஆட்டத்தை, அதன் பறவையைப் பார்க்க வேண்டும் என்பதிலே குறியாக இருந்தது.
கடைசியாக ஒரு சேவலை எடுத்து வந்து செவலையைச் சண்டைக்கு அழைத்தார்கள். அந்தச் சேவல் செவலையை விட ஒருமடங்கு அதிக எடைக் கொண்டது. மச்சக்காளை மறுத்துவிட்டார். நேரம் ஆக ஆக பல இலட்சம் பந்தயம் கட்டத் தயாரானார்கள். வேறு வழி இல்லாமல் இந்தச் சேவலை எப்படியாவது கட்டுப்பட வைக்க வேண்டுமென்பது விழாக் குழுவின் முடிவு. ஆனால் இவர்கள் இன்னும் சம்மதிக்க வில்லை. எல்லோரும் வசை பாடத் தொடங்கி விட்டார்கள்.
"தோல்விக்குப் பயபுடுற நீங்கலாம் எதுக்கு கட்டுக்கு வரீங்க?" என்ற எதிர் தரப்பினரின் வாதம் கருப்பனுக்குச் சினத்தைத் தூண்டியது.
"சேவலைக் கட்டுங்க என்ன ஆகும்னு பாத்துடுவோம்" என்று அவர்கள் வலையில் கருப்பனும் வீழ்ந்து போனார்.
பந்தயம் பல இலட்சம் கட்டினார்கள். எவ்வளவு பணம் கட்டுகிறார்கள் என்று சேவல் காரர்களுக்கே தெரியாது. பந்தயம் வெளியில் அங்கீகரிக்கப்படாமலே நடக்கும்.
இராசுவிற்கு இதில் துளியும் விருப்பம் இல்லை. குடிகாரர்களிடம் பேசுவது வீண் என்று அமைதியாக இருந்து விட்டான். எல்லோருக்கும் சண்டை பார்த்து விட வேண்டும் என்கிற ஆவல். இராசுவிற்கு மட்டும் தான் 'தன் சேவல் காயப்பட்டுவிடுமோ என்கிற பயம்.'
சேவல் சண்டைக்குத் தயாரானது. தன்னை விட ஒருமடங்கு பெரிய கீறிச் சேவலுடன் மோதியது. மச்சக்காளையின் கணிப்புப் படி அரைமணிநேரத்திற்குள் சண்டை முடிந்து விட்டால் செவலை வென்று விடுவான். ஆனால் அதற்கு மேல் சண்டை நீடித்தால் கீறி சேவல் பலம் பெறும் செவலை ஆந்தையாக மாறி பலவீனமாகிவிடுவான் என்பதே அனுபவமிக்க மச்சக்காளையின் கணிப்பு. மிகுந்த ஆரவாரத்துடன் சண்டை தொடங்கியது. இரண்டும் வலுவாக மோதிக் கொண்டது. முதல் ஐந்து நிமிடம் சண்டை அனல் பறந்தது. பத்து நிமிடங்களுக்கு பிறகு, செவலையின் பறவை குறைந்து விட்டது. இப்போது நின்ற படியே சண்டை செய்தது. கீறி சேவலின் கொண்டையிலும், நகத்திலும் அம்மோனியா போன்ற நெடி வரக்கூடிய அமிலத்தைத் தடவி வைத்திருந்தனர். அது செவலையைப் போதையேற்றி மயக்கியது. நேரம் ஆக ஆக சண்டை தலைகீழாக மாறியது. இரண்டு சேவலுக்கும் காயம் அதிகம் தான். ஆனால் சண்டை ஒரு முடிவுக்கு வருவதாக இல்லை. பந்தயத்தில் அதிக பணம் கட்டியிருப்பதால் கடைசி வரை சண்டையை நடத்தித் தான் ஆக வேண்டும். இங்கு மச்சக்காளையின் கணிப்பு தவறியது. அரை மணி நேரத்திற்குள் சண்டை முடியவில்லை, அதையும் தாண்டி விட்டது. செவலைக்கு பலத்த காயம். இரண்டு கண்களிலும் காயம். சிறிது நேரத்திலே இரண்டு கண்களின் பார்வையும் இழந்து விட்டது. எனினும் நின்ற இடத்தில் இருந்து எதிரி வரும் போது பறந்து அடிக்கும். அந்தக் கூட்டம் வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தது. செவலை எப்போது ஆட்டத்தை விட்டுக் கொடுக்கப் போகிறது என்பது தான் எல்லோருடைய கேள்வியும். ஆனால் செவலை கடைசி வரை ஓடவும் இல்லை, சண்டை செய்வதை நிறுத்தவும் இல்லை. களத்தின் நடுவில் எதிரி அடித்தபோதே உயிரையும் விட்டது. சிலர் கண்கலங்கி நின்றனர். "எவ்ளோ பணம் வேணும்னாலும் கட்டித் தோக்கலாம், இவன் வீரன் டா" னு பெருமையா சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
செத்தப் பின்னாடியும் அந்தக் களத்துல செவலையைப் பற்றித்தான் ஒரே பேச்சு. சேவலைக் கட்டுவதற்கு முன் அதன் உடம்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடிங்கி அதன் திருகாணிக் கயிற்றில் கட்டுவது வழக்கம். இப்போது இராசுவின் கைகளில் செவலையின் இரண்டு மயிரும், திருகாணிக் கயிறு மட்டும் தான் இருந்தது. அவனால் எதுவும் பேச முடியவில்லை. துக்கம் தொண்டையைக் கவ்வியது. "எல்லோரோட போதைக்கும் செவளையைக் கொன்னு போட்டானுகளே" என்று தனக்குள் புலம்பித் தவித்தான்.
"இந்தக் குடிகாரர்கள் போதும் ஒட்டுமொத்த தமிழனின் கலைகளும் அழிந்து போவதற்கு என்று மனதினுள் சபித்துக்கொண்டான்"
பொழுது சாய்ந்தது. எல்லோரும் வீட்டிற்குக் கிளம்பினார்கள். கருப்பன் சேவல் வென்றாலும், தோற்றாலும் மது அருந்துவார். இன்று செவலை இறந்து போன துக்கம் வேறு. இராசுவை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு மது அருந்தச் சென்றார். அங்கே தன் மகனின் வயதையொத்த சிறார்கள் பாருக்குள் மதுகுடித்துக் கொண்டிருந்தனர். கருப்பன் அங்கிருந்து குடிக்க மனம் கேளாமல் வெளியே வந்து குடித்து விட்டு பின் இருவரும் வீடு திருப்பினார்கள்.
வரும் வழியில், "இது தான் சமூகத்தில் நடக்கும் அவலம். மது, மாது, சூது சூழ்ச்சியான உலகம். நீ வளர்ந்து இவனுகளோட ஒரு ஆளா இருந்திடாத. என் கூட வந்து எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு, தவறில் இருந்து விலகி, இந்தச் சமூகத்தை சீர் திருத்தும் ஒருத்தனா வரணும்" கருப்பன் போதையில் பாடம் எடுத்தார்.
அமைதியாக வந்தான். அவர் சொல்வதுவும் சரி என்று தான்
அவனுக்குப் பட்டது. பேருந்தின் ஜன்னலோர காற்று கொஞ்சம் ஆறுதலைத் தந்தது. வீட்டிற்கு வந்தான் தூக்கமே வரவில்லை. கட்டுத்தரையை வெறிக்கப் பார்த்தான். கருப்பனுக்கு அவனின் வலி புரிந்தது. கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு நடந்தே பக்கத்து ஊருக்குச் சென்று குறைந்த விலையில் இரண்டு சேவல்களை வாங்கி வந்தார்.
சேவல்களைப் பார்த்த இராசுவிற்கு மகிழ்ச்சி. திருகாணிக் கயிற்றைக் கொண்டு இரு சேவல்களையும் கட்டிப் போட்டான். ஆனால் அது சாதி சேவல் அல்ல கலப்பின வகை. பக்கத்தில் போனாலே மிரண்டு ஓடும். இரண்டும் ஊருக்குக் கேட்குமளவிற்கு அலறிக் குவிக்கும். இராசுவிற்கு சேவல் வளர்க்கும் ஆசையே போய் விட்டது. "நண்பனைப் போல காதல் செய்த செவலை எங்கே:
இது எங்கே" என்று வருந்தினான்.
முன்பெல்லாம் வீடு வீட்டிற்கு இந்தச் சாதிசேவல் இனங்கள் இருந்தது. இப்போது எங்கும் இல்லை அழிந்து விட்டது. வெள்ளைக் கோழியும், கலப்பினக் கோழியும்தான் இருக்கிறது. நல்ல சேவல்களையும், மாடுகளையும் அரிதாக கண்காட்சியில் தான் பார்க்கமுடிகிறது. நம்மளையும் கண்காட்சியில் வைத்துவிட்டு ரோபோக்கள் ஆட்சி செய்யும் காலம் வெகு தொலைவிலில்லை என்று தனக்குள் சொல்லிகொண்டான்.
தமிழனின் தவறுகளாலும் தமிழனின் அறியாமையாலும் அழிவது வெறும் கலைகள் மட்டும் அல்ல. அதற்குள் ஒரு உயிரினம் அழிந்துக்கொண்டிருக்கிறது.
ஆடு, கிடா, மாடு, காளை, சேவல், நாய் போன்ற ஆதி உயிரினங்கள் எல்லாவற்றிக்கும் நம்மைப் போலவே இங்கு வாழ உரிமை உண்டு.
ஆடு, சேவல்கள், மாடுகள், சல்லிக்கட்டுக் காளைகள், நாய்கள், குதிரைகள், புறாக்கள் இவைகளை வைத்து நடத்தப்படும் பாரம்பரியக் கலைகள் யாவும் அகத்தூய்மையோடு நேர்மையாக நடத்தப்பட்டால் பாதுகாக்கப்படுவது தொல் கலைகள் மட்டுமல்ல பல அரிதான விலங்கு, பறவை போன்ற உயிரினங்களும் தான்.
-விசித்திரன்
9514435235
Yuvanmani1433@gmail.com
#638
Current Rank
48,583
Points
Reader Points 250
Editor Points : 48,333
5 readers have supported this story
Ratings & Reviews 5 (5 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
ckathir785
இந்த சிறுகதையில் பட்சி பார்பது குறித்து எழுத்தாளர் குறிப்பிட்டது இன்னும் விளக்கமாக இருந்திருக்கலாம். பட்சி முறை பழந்தமிழர் அறிவியல் முறைகளில் ஒன்று. கதை அருமை.
vinurose2028
அருமை
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points