யாரோ யாரோடு யாரோ

காதல்
4.8 out of 5 (20 Ratings)
Share this story

யாரோ யாரோடு யாரோ

தூரத்தில் வரும் ஜீப்பின் ஓசையைக் கேட்டவுடன் அலுவலகம் பரபரப்பானது. சில காவலர்கள் சுறுசுறுப்பாகி வழியில் நின்றவர்களை அகற்றினர். சென்ட்ரீகள் இருவரும் தோளில் துப்பாக்கியை விரைப்பாக பிடித்தனர். ஜீப்பில் இருந்து எஸ்பி உமா இறங்கிவர துப்பாக்கியை அசைத்து உயர்த்திப் பிடித்து சல்யூட் அடித்தனர். அதை தலையசைத்து ஏற்று படிகளில் ஏறி வராண்டாவில் நடந்தார்.

திடீரென்று கும்பலில் நின்றிருந்த ஒரு இளம்ஜோடி ஓடிவந்து உமாவின் காலில் விழுந்து “அம்மா எங்களை நீங்கதான் காப்பாத்தணும்” என்று கதறி அழுதனர். சற்று திகைத்துப்போன உமா ஆத்திரத்துடன் அருகிலிருந்த காவலர்களை பார்க்க பதறிப்போன சில காவலர்கள் ஓடி வந்து அவர்களை இழுத்து அப்புறப்படுத்தினர்.

சில நிமிடங்கள் கழித்து எஸ் பி அழைக்க அந்த இளஞ்ஜோடிகள் அறைக்குள் வந்தனர். “யார் நீங்க? என்ன பிரச்சனை?” உமாவின் குரலில் கோபம் குறையாமலிருந்தது. “அம்மா நாங்கள் இருவரும் கல்லூரி காலத்திலிருந்து காதலிக்கிறோம். ரெண்டு பேரும் வேறவேற ஜாதி. விஷயம் தெரிஞ்சதிலிருந்து வீட்டில பயங்கர எதிர்ப்பு. எங்களை பிரிக்க முயற்சிக்கிறாங்க. இவர் இல்லாம என்னால உயிரோடு இருக்க முடியாது”.

அந்தப் பெண் சொல்லி முடிப்பதற்குள் உமா ஆத்திரமாக “செத்துப்போடி இவன் இல்லாம உயிர் வாழ முடியாதுன்னா தாராளமா செத்துப்போ. கண்ணுக்கு முன்னால நிக்காம எங்காவது போய் செத்து தொலை. உன்னைப்போன்ற பொண்ணுங்கல்லாம் என்னத்துக்கு பூமிக்கு பாரமா வாழணும்” கத்தினார்.

ஒரு பெண் அதிகாரி தன் மேல் இரக்கம் காட்டுவார் என நினைத்து முதலில் பேசத் துவங்கிய பெண் விக்கித்துப் போனாள். “ஏதோ படிக்கப் போன இடத்தில பார்த்தீங்க, பழகினீங்க, ஊர் சுத்துனீங்க எல்லாம் சரி வயசுக்கோளாறுன்னு விட்ரலாம். கல்யாணம்னு வரும்போது பெத்தவங்க சொல்றத கேக்குறதுதானே பிள்ளைகளுக்கு அழகு. அதை விட்டுட்டு வீட்டை விட்டு ஓடுறது கல்யாணம் பண்ணி வையுங்கன்னு போலீஸ் ஸ்டேஷனிலயும் ரிஜிஸ்டர் ஆபீஸ்லயும் போய் நிக்கிறதெல்லாம் அசிங்கம் பிடித்த வேலை. பெற்று கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினவங்களுக்கு தன் பிள்ளைக்கு பொருத்தமானவனை தேடி கல்யாணம் பண்ணி வைக்க தெரியாதா?. போங்க போயி அவங்கவங்க வீட்டில சொல்றபடி கேளுங்க”.

ஆதரவு தேடி வந்தவர்கள் தர்ம அடிவாங்கியவர்களாக நிலைகுலைந்து நிற்க “மகேஷ் இரண்டு பேர்கிட்டயும் அட்ரஸ், போன் நம்பர் வாங்கி பெத்தவங்கள வரச்சொல்லி சமாதானம் பேசி எழுதி வாங்கிட்டு அனுப்புயா” என உதவியாளரிடம் உத்தரவிட்டார்.

அவர் இளம்ஜோடியை வெளியே அழைத்துக்கொண்டு போக ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய தம்பதி உள்ளே வந்து வணங்கியது. “என்ன” என்பது போல் உமா பார்வையாலே வினவ “அம்மா கடைவீதியில இருக்கிற ஒரு துணிக்கடையில வேல பார்த்துகிட்டு இருந்த எங்க பொண்ண நாலு நாளா காணலை. எல்லா இடத்திலேயும் தேடிட்டோம். எங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷனிலயும் புகார் கொடுத்திருக்கோம். ஒரு தகவலும் இல்லை கேட்கும்போதெல்லாம் தேடிட்டு இருக்கோம் ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்றோமுன்னு சொல்லி எங்களை விரட்டியடிக்கிறாங்க” என்று அந்த தகப்பன் சொல்லி முடிப்பதற்குள் உமா ஆவேசமாக தன் இருக்கையை பின்னுக்குத்தள்ளி வேகமாக எழுந்தாள்.

“என்னையா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க போலீஸ்னா என்ன உங்க வீட்டு வேலைக்காரன்னா? உன் மக பெரிய மகாராணி அவளைக் காணும்ன்னு நீ வந்து சொன்னவுடனே உள்ள வேலையெல்லாம் விட்டுட்டு நாங்க படை பட்டாளத்தை திரட்டிக் கொண்டு போய் அவளை தேடணும். எங்களுக்கு வேற வேலை சோலி இல்ல பாரு. பொட்ட பிள்ளைய அடக்க ஒடுக்கமா ஒழுங்கா வளக்க துப்பில்ல போலீஸ் மேலயே புகார் சொல்றதுக்கு இங்க வந்துட்டாரு. போய்யா போய் அவ கடைசியா யார்யாரு கூட சுத்திக்கிட்டு இருந்தான்னு விசாரிச்சுப் பாரு. அதுல யாராவது ஒருத்தன் கூடத்தான் ஓடிப்போய் இருப்பா”.

தகப்பனின் முகம் அவமானத்தில் சிவந்தது தாய் சேலை தலைப்பால் வாயை மூடிக்கொண்டு அழுதாள். “என் மக அப்படிப்பட்டவ இல்ல. இது அவ வாழ்க்கை மட்டுமல்ல அவளுக்கு கீழே இரண்டு தங்கச்சிகளுக்குமானதுன்னு சொல்லிக் கொடுத்துதான் வளர்த்திருக்கோம் அதனால எந்த தப்பும் என் மக கண்டிப்பா செய்யமாட்டா”.

“இது எல்லா பெத்தவங்களும் சொல்ற டயலாக் தான். பிள்ளைங்க மேலயிருக்கிற குருட்டு நம்பிக்கையில இப்படி பேசிட்டு வர்ற எல்லோரும் அப்புறமா மக வயித்த தள்ளிக்கிட்டு வந்து நிக்கையிலே கேச வாபஸ் வாங்கிக்கிறேன்னு வந்து நிப்பீங்க. என் சர்வீஸ்ல இதுபோல பலநூறு கேசுகளை பாத்துட்டேன். யோவ் மகேஷ் இது எந்த ஸ்டேஷன்னு பார்த்து எஸ்ஐ கிட்ட சீக்கிரமா விசாரிக்கச் சொல்லு” தம்பதியர் உமாவுக்கு மௌனமாக கைகூப்பி வணக்கம் சொல்லி வெளியேறினார்.

“ச்சே என்னது காலங்காத்தால இப்படிப்பட்ட கேசுகளா வந்து கழுத்தறுக்குதே” என்று முணுமுணுத்தபடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார்.

சற்று நேரத்துக்குப் பின் கதவைத் தட்டி அனுமதி கேட்டு உள்ளே வந்து மகேஷிடம் “ஆயுதப்படைலிருந்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு புதுசா மாற்ற இருக்கிற அந்த ஐந்து பேரை இங்க வரச் சொல்லுங்க”.

“எஸ் மேடம்” என்று வெளியேறிய மகேஷ் சற்று நேரத்தில் ஐந்து காவலர்களுடன் உள்ளே வந்தார். அவர்கள் உள்ளே வந்தவுடன் “நீங்கள் போகலாம்” என்று உதவியாளரை வெளியே அனுப்பினார்.

எஸ்பி முன் காவலர்கள் விரைப்பாக நின்றார்கள். “நீங்க அஞ்சு பேர் தான் நாளைக்கு லோக்கல் ஸ்டேஷனுக்கு போறவங்களா?” என்ற கேள்விக்கு “எஸ் மேடம்” என்று ஒருமித்த குரலில் பதில் வந்தது..

“ஆயுதப்படைப் பிரிவு என்பது வேறு சட்டம் ஒழுங்கு லோக்கல் போலீஸ் வேலை என்பது வேறு. இரண்டுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு. இதுநாள் வரையும் ஆயுதப்படை பிரிவில் நல்லபடியா பயிற்சி முடிந்து இப்ப லோக்கல் ஸ்டேஷனுக்கு போறீங்க. குற்றப்பிரிவு விசாரணையில் எப்படி ட்ரெய்னிங் எடுத்து இருக்கீங்க என்று உங்களுடைய தகுதியை சோதிக்க இன்னைக்கு ஒரு டெஸ்ட் வைக்கப் போறேன். அதை முடிச்சுட்டு நாளைக்கு நல்லபடியா லோக்கல் ஸ்டேஷனுக்கு போங்க” என்றார்.

தன் மேசையிலிருந்த ஒரு பைலிலிருந்து சில பேப்பர்களை வெளியே எடுத்தார். ஒவ்வொருவரிடமும் ஒரு பேப்பரை கொடுத்தார். அதில் ஒரு பெயரும் முகவரியும் இருந்தது.

“இதுல இருக்கற நபரையும் அவருடைய வேலை, குடும்ப பின்னணி பற்றிய முழுவிவரமும் இன்று மாலையே வேணும். முடிந்தால் அவரையும் குடும்பத்தையும் அவங்களுக்கு தெரியாமலேயே போட்டோ எடுத்துட்டு வாங்க. இது ஒரு பொம்பளபுள்ள விஷயத்துக்கான ரகசிய விசாரணை. நம்ம ஆறு பேரை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது. மாலை 6 மணிக்கெல்லாம் விசாரித்து முடித்து நேராக என்னிடம் வந்து ரிப்போர்ட் செய்யுங்க ஓகே” என்றார்.

“போகும்போது யூனிபார்மில் போகவேண்டாம். போலீஸ் என்பதை வெளியே காட்டிக் கொள்ள வேண்டாம். இது ரொம்ப சீக்ரெட்” இதை அழுத்தம் திருத்தமாய் கூறினார் எஸ்பி.

“எஸ் மேடம்” என்று ஒரே குரலில் கூறி சல்யூட் அடித்து வெளியேறினர். நான்கு நாள் ஆகிவிட்டது எப்படியும் இன்று அவளை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று யோசனையில் ஆழ்ந்தார்.

மாலை ஆறு மணிக்கு சரியாக ஐந்துபேரும் வந்திருந்து எஸ்பி யின் அறை முன் காத்திருந்தனர். அவர்கள் வந்திருப்பதை உதவியாளர் உள்ளே வந்து கூறியவுடன் அவர்களை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பும்படி கூறினார்.

முதலாவது காவலர் உள்ளே வந்து சல்யூட் அடித்தவுடன் “சொல்லுங்க நீங்க யார் வீட்டுக்கு போனீங்க”.

“மேடம் நான் சக்திவேல் என்பவருடைய வீட்டுக்கு போயிருந்தேன் வயது 25 .அவருடைய தகப்பனார் பெயர் கிருஷ்ணராஜ் அம்மா பெயர் பார்வதி ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள். இருவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சக்திவேல் சொந்தமாக காய்கறி கடை வீட்டின் முன் பகுதியிலேயே வைத்திருக்கிறார். வீடு சொந்த வீடு அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் நல்லபையன் என்று சொல்கிறார்கள். எந்த ஒரு தப்பு தவறும் செய்யாதவர் என்று பெயரெடுத்தவர். நான்கு தினங்களுக்கு முன்பு தான் அவர் தாய் மாமா மகளை நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். இன்னும் 15 நாட்களில் திருமணம். நான் போயிருந்தபோது அவனுடைய அப்பா அம்மா பத்திரிக்கை கொடுக்க வெளியூர் போயிருந்தனர். அதனால் சக்திவேல் அவருடைய தம்பி தங்கை அவர்களை மட்டும் படம் எடுத்திருக்கிறேன்” என்று சில போட்டோக்களை தன்னுடைய போனில் காண்பித்தார் காவலர். அதில் சக்திவேல் காய்கறி கடையில் அமர்ந்திருந்தது போலிருந்த படத்தை பார்க்கும் போது உண்மையிலேயே சக்திவேல் தப்பானவனாக தோன்றவில்லை. “இந்த போட்டோக்களை என்னுடைய வாட்ஸப் நம்பருக்கு ஃபார்வேர்டு செய்யுங்கள்” என்ற எஸ்பி “ஃபார்வேர்டு செய்தபின் இந்த விவரங்களை அழித்துடுங்க நீங்கள் போகலாம்” என்று அனுப்பி வைத்தார்.

இரண்டாவது காவலர் வந்து சல்யூட் அடித்தது “மேடம் நான் ராம்குமார் வீட்டிற்கு போயிருந்தேன். அவனுக்கு வயது 25. அப்பா இல்லை அம்மா சிவகாமி மட்டும் உள்ளார். திருமணமான 2 அக்கா இருக்கிறார்கள். ராம்குமார் இப்போது லோடு ஆட்டோ ஓட்டும் டிரைவராக இருக்கிறார். ஆட்டோ வேறு ஒருவருடையது. இவன் சம்பளத்துக்கு இருக்கிறேன். குடி பழக்கம் உள்ளவன் என்றாலும் ஏரியாவில் பெரிய அளவில் கெட்ட பெயர் இல்லை. நிரந்தர வருமானம் இல்லாதவன் என்பதால் ஒரு கட்சியின் பொறுப்புக்கு வர துடித்துக் கொண்டிருக்கிறேன். இன்று மதியம் சாப்பாட்டுக்கு வந்த போது எடுத்த புகைப்படம் இருக்கிறது. என்று அவர் எடுத்த சில போட்டோக்களை எஸ்பியிடம் கொடுத்தார். வாங்கிப் பார்த்தவர் “இந்த விவரங்களை என்னுடைய வாட்ஸ் அப்புக்கு அனுப்புங்கள்” என்று சொல்ல அவர் அதை செய்தார். “இதையெல்லாம் அழித்துவிடுங்கள். நாளைக்கு உங்களுடைய ஸ்டேஷன்ல போய் டூட்டியில் ஜாயின் பண்ணி நல்ல பேரு வாங்குங்க” என்றார். அந்த காவலர் அங்கிருந்து நகர அடுத்தவர் அழைக்கப்பட்டார்.

மூன்றாவது காவலர் வந்து மரியாதை நிமித்தமான சல்யூட் அடித்தார் “மேடம் நான் பாலமுருகன் என்பவரை விசாரித்து வந்திருக்கிறேன். அவர் வயது 24. திருமணமானவர் மனைவி பெயர் வேணி.அப்பா பெயர் முனுசாமி அம்மா பெயர் ருக்மணி தற்போது ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். கல்லூரியில் படித்த காலத்தில் பெண்கள் விஷயத்தில் இவருக்கு நிறைய கெட்ட பெயர் இருந்திருக்கிறது. திருமணத்துக்குப்பின் அமைதியாக குடும்பம் நடத்தி வருகிறார் என்று அக்கம்பக்கத்தினர் சொல்கிறார்கள் அவர்களுடைய குடும்ப புகைப்படத்தை என்னுடைய மொபைலில் படம் எடுத்துள்ளேன்” என்றார். அவரிடம் இருந்தும் படங்களை பெற்றுக்கொண்ட எஸ்பி அடுத்தவரை அழைத்தார்.

நான்காவதாக வந்து காவலர் “குட்ஈவினிங் மேடம் நான் விக்னேஷ் என்பவரை பற்றிய தகவல்களுடன் வந்திருக்கிறேன். வயது 24 அப்பா பெயர் கணபதி அம்மா இல்லை. இன்னும் திருமணமாகவில்லை. இவன் மேல் பல வழக்குகள் நமது p1 காவல் நிலையத்தில் உள்ளது. தற்போது ஒரு வழிப்பறி கேஸில் செங்கல்பட்டு சிறையில் இருக்கிறார். வீட்டில் யாரும் இல்லை என்பதால் வேறு புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை” என்றார். அவரை போகச் சொல்லிவிட்டு அடுத்த காவலரை அழைத்தார்.

கடைசியாக வந்த காவலர் சல்யூட் அடித்து “மேடம் நான் பாலாஜி என்பவரை விசாரிக்க போயிருந்தேன். அந்த முகவரியில் வீடு பூட்டி இருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரிக்கும்போது அது வாடகை வீடு என்றும் அவர் போன வாரம் வேறொரு இடத்தில் புதிதாக பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருக்கிறார் ஆனால் இன்னும் குடியேறவில்லை. அந்த வீட்டிலும் ஆட்கள் யாரும் இல்லை வீடு பூட்டி இருக்கிறது. அவருக்கு அப்பா இல்லை அம்மா பெயர் மாரியம்மாள். கடந்த சில மாதங்களாக பாலாஜி ஒரு வசதியான வீட்டுப் பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருப்பதாக கூறினார்கள். பாலாஜி டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு சற்று நாள் கட்டிட வேலை செய்பவர் தற்போது சொந்தமாக இரண்டு இடங்களில் காண்ட்ராக்ட் முறையில் கட்டிட பணி செய்து கொண்டிருக்கிறார். ஓரளவு வசதிபடைத்தவர். உறவினர் வீட்டிலிருந்து அவருடைய புகைப்படத்தையும் அவருடைய அம்மாவின் படத்தையும் வாங்கி வந்திருக்கிறேன்” என்று கூறினார். அதை கையில் வாங்கி கொண்ட எஸ்பி அந்த காவலரை அனுப்பி வைத்தார்.

அனைவரையும் அனுப்பிய பின் தனித்திருந்த எஸ்பி உதவியாளரை அழைத்து வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு ஐந்து காவலர்களும் தந்திருந்த தகவல்களை மனதிற்குள் அசை போட்டார். இதை யார் செய்திருப்பார்கள் என்று அவருடைய போலீஸ் புத்தி சிந்திக்க தொடங்கியது.

முதலாவதாக உள்ள காய்கறி கடைக்காரன் திருமணம் நிச்சயம் ஆனவுடன் இதை செய்திருக்க வாய்ப்பில்லை தற்போது உள்ளூரில் இருக்கிறான். இரண்டாவது உள்ளவன் திருமணம் ஆகவில்லை என்றாலும் அரசியல்வாதி பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இந்த சமயத்தில் பேரைக் கெடுத்துக் கொள்ளமாட்டான். அதுவும் இது எவ்வளவு ஆபத்தானதுன்னு தெரிஞ்சுக்கிட்டு கண்டிப்பா செய்ய மாட்டான்.

மூன்றாவது நபருக்கு திருமணமாகிவிட்டது லைஃபில் செட்டிலானவன். இப்போதும் வீட்டில் இருக்கிறான் அவன் செய்ய சான்சே இல்ல. நாலாவது நபர் சிறையில் இருக்கிறான். அதனால அவனும் அந்த வேலையை செய்திருக்க மாட்டான்.

அப்ப இந்த இதை செய்தது அஞ்சாவது நபர் தான் அவன கொஞ்சம் டீடைல் ஆக பார்க்க வேண்டும் மனது குமுறியது. நாலு நாளா கவிதா விஷயம் சுழற்றியடித்த புயல் போலயிருக்குது.

இன்று காலையில்தான் கவிதாவின் பழைய டைரிகள் சிக்கியது. அதில் தேடியபோது கிடைத்த பெயர், முகவரிகளை தான் காலையில் விசாரணைக்கு காவலர்களிடம் கொடுத்தனுப்பியது.

நாலு நாளா வெளியே யாருக்கும் தெரியாமல் விசாரித்ததில் கிட்டத்தட்ட யாருன்னு கண்டுபிடிச்சாச்சி. இனி இதே மாதிரி கமுக்கமா அவளை வீட்டுக்குக் கொண்டுவர்ற வேலையை பார்க்கணும் என்று யோசித்தவாறு கழிவறைக்குச் சென்று கண்ணாடியில் முகம் பார்க்க “உன் மகளை ஒழுங்காக வளர்க்க துப்பில்ல ஊருக்கு உபதேசம் பண்ணிக்கிட்டு இருக்கியே வெட்கமா இல்ல” என்று அவள் உருவமே அவளை கேலி செய்தது.

“கவி எனக்கு ரொம்ப பயமா இருக்கு நாம மட்டும் உங்க அம்மா கையில கிடைச்சா அவ்வளவுதான். உன்னை என்ன செய்வாங்களோ தெரியவில்லை ஆனா கண்டிப்பா என்னை அடித்தே கொன்னுருவாங்க” கார்த்திக் கிட்டத்தட்ட அழுகின்ற குரலில் சொன்னான்.

“டேய் கார்த்திக் நாலு நாளா இதையே எத்தனை முறைதான் சொல்லுவ. இது ஒன்னும் நம்ம ஊரு இல்லை சென்னை சிட்டி. இங்கே அடுத்த வீட்டில இருக்கிறவங்க யாருன்னு கூட யாருக்கும் தெரியாது. கடந்த ஒரு மாசமா நாம பேசிக்கிட்டது கூட வேறவேற பேர்ல வாங்குன நம்பர் மூலமாத்தான். அதனால அம்மாவுக்கு தெரிஞ்ச என்னோட நம்பரின் கால் லிஸ்ட் செக் பண்ணினால் கூட எதுவும் கிடைக்காது. அம்மா எக்காரணம் கொண்டும் வெளிப்படையாக விசாரிக்க மாட்டாள். அப்படியே அவளுக்கு வேண்டியவங்களை கொண்டு விசாரித்தாலும் நாம சிக்காதபடி சில தப்பான லீடுகளை என்னோட டைரியில் எழுதி வச்சிருக்கேன். அதை வச்சு அவங்க விசாரணை தப்பான வழியில் தான் போயிட்டு இருக்குமே தவிர நம்மள கண்டுபிடிக்கவே முடியாது நீ வீணா பயந்து நடுங்காத”.

“சரி இனி என்ன செய்றது எங்கேயாவது வேலைக்கு போகலாமுன்னு பார்த்தா சர்டிபிகேட்டை கூட எடுக்காமல் வந்துட்டேன்”.

“ஏன்டா நம்ம ஊர்ல உக்காந்துகிட்டு சென்னையில் வீடெல்லாம் பார்த்து ரெடி பண்ண நான் அதை யோசிக்காமல் இருப்பேனா? இதோ பார்” என்று தன்னுடைய பெரிய பேக்கின் உள்ளே துணிகளுக்கு மத்தியில் மறைவாக இருந்த ஒரு சிறிய பேக்கை வெளியே எடுத்து காண்பித்தாள். அதில் கட்டுக்கட்டாக பணமும் நகைகளும் இருந்தன.

“எல்லாம் எங்க அம்மா லஞ்சமா வாங்கி குவித்தது தான். அதிலிருந்து கொஞ்சத்தை அடிச்சிட்டு வந்துட்டேன். இதை வச்சு நம்முடைய புது வாழ்க்கையை தொடங்குவோம் எப்படி நம்ம ஐடியா. கொஞ்சம் பொறு குளிச்சிட்டு வந்துடறேன். நீயும் ரெடியாகு நாம வெளியே ஷாப்பிங் போறோம்”.

அவள் குளியல் அறைக்குள் போக கார்த்திக் பண பையுடன் வெளியேறினான். “ஏதாவது ஒரு பணக்கார பொண்ணா பார்த்து கரெக்ட் பண்ணி வாழ்க்கையில செட்டிலாக நினைச்சேன். இவளா வந்து சிக்கிக்கிட்டா. இதுக்குமேல இவ கூட இருக்கிறது ஆபத்து. கிடைக்கிறதா வச்சு நம்ம சொந்த ஊருக்கு போய் செட்டிலாக வேண்டியதுதான். இவ்வளவு பிளான் பண்ண கவிதாவுக்கு அடுத்து என்ன செய்யணும்னு தெரியாதா என்ன. யாரைப் பத்தியும் கவலைப்படாதடா கார்த்திக் விடு ஜூட்”.

Stories you will love

X
Please Wait ...