முகக்கண்ணாடி

poornimakarthic
உண்மைக் கதைகள்
4.9 out of 5 (103 Ratings)
Share this story

முகக்கண்ணாடி

"இந்த அம்மாவுக்கு வேற வேலை இல்ல திடீர்னு நாலு பாவடை ரெண்டு சைஸ்ல கேப்பாங்க எல்லாமே அடர் நிறமா கேப்பாங்க, இதோட நாலு முறை போன் பண்ணிட்டாங்க. ஆமாம் ஒரு ஆளுக்கு எதுக்கு ரெண்டு சைஸ்ல பாவடை!" என தனியார் பள்ளியில் வேலை செய்யும் கணித ஆசிரியர் பார்த்திபன், சிடுசிடுப்போடு தன் வண்டியை கடைத்தெருவை நோக்கி செலுத்தினான்.

பள்ளியில் தன் வகுப்பு மாணவன் ஒருவன் கணிதப் பாடத்தில் அதள பாதாளத்தில் இருப்பதைக் கண்ட தலைமை ஆசிரியை, இவனிடம் காட்டிய சிடுசிடுப்பு, காந்தத்தில் ஒட்டிய இரும்புத் துண்டாய் இவன் மனதிலும் ஒட்டி உறுத்திக் கொண்டிருந்தது.

சிடுசிடுப்பிற்கு நடுவே, 'பாவம் அம்மா, மூணு மாசம் முன்னோடு இறந்து போன அப்பாவையே இன்னும் நினைச்சுக்கிட்டு, சரியா சாப்பிடாம தூங்காம இருக்காங்க‌. அவங்களுக்கு என்ன தேவையோ நம்மளை அவசரமா வாங்கிட்டு வரச் சொல்லிருக்காங்க' என்ற சிந்தனையும் எழ, அவர் கூறிய கடையின் உள்ளே சென்றான்.

"டேய்! நம்ம கண்ணன் ஐயா பையன் தான் இவுக, தம்பிக்கு வழக்கமா மாசா மாசம் குடுக்குறதைக் குடுத்து விடு!" என்று கடையின் உரிமையாளர் கடைப்பையனிடம் சொன்னதும், ஐந்தே நிமிடங்களில் நல்ல தரமான, கனமான உள்பாவடைகளை நான்கு அவன் கைகளில் வந்து சேர்ந்தன.

போன மாதமும் இது போல் வந்து வாங்கிச் சென்றது பார்த்திபனின் நினைவில் வர, 'கடை முதலாளி அப்பா பெயர் சொல்லி வழக்கமா குடுக்கறதைக் குடுன்னு சொன்னாரே!வழக்கமான்னு வேற சொல்றாரே இதென்ன மளிகை சாமானா மாசா மாசம் வாங்குறதுக்கு!' என்ற குழப்பம் அவனுக்குள் எழாமல் இல்லை.

வாங்கிய பொருட்களுக்குப் பணத்தை செலுத்திவிட்டு வண்டியை ஓட்டியவனின் தலைக்குள், மறுபடி தலைமை ஆசிரியரின் குத்தல் பேச்சு கேட்கத் தொடங்கியது.

'இங்க பாருங்க பார்த்திபன் உங்க க்ளாஸ்ல ஒரு பையன் ஃபெயில் ஆனாலும் உங்களுக்கு இன்க்ரீமெண்ட் கட்டாகும், பதிவு உயர்வும் தள்ளிப் போகும். பார்க்கலாம் நீங்க என்ன செய்யறீங்கன்னு!' என்று கூறியிருந்தார்.

'அடேய்! உனக்கு என்ன தாண்டா ப்ரச்சனை, ஏண்டா என் க்ளாஸ்க்கு வந்து என் சோத்துல மண் அள்ளிப் போடுற! உன் ஐ.க்யூ நார்மல், உனக்கு சொத்து சுகம் ஏராளம், உன் பெத்தவங்க ரொம்ப நல்லா படிச்சவங்க, நீ மத்த பாடம் எல்லாம் நல்லாத்தான் படிக்கிற, அப்புறம் உனக்கு என்ன தான்டா ப்ரச்சனை!' என தன் வகுப்பில் கணக்கில் ஒற்றை இலக்க மதிப்பெண் வாங்கும் மாணவனை நிந்தித்துக் கொண்டே வீடு போய் சேர்ந்தான்.

"மா இந்தாங்க நீங்க கேட்டது, ஆமாம் அந்த கடைக்காரர் அப்பாவோட ப்ரெண்டா! வழக்கமா மாசா மாசம் வாங்குவீங்கன்னு சொல்றாரு என்னம்மா இது?" என்றான் மஞ்சள் பையை அவரின் கைகளில் தந்தபடி,

"ஏண்டா இப்படி வந்ததும் வராததுமா கேள்வி கேக்குற! கை கால் கழுவிட்டு, டேபிள்ல இருக்குற காபியையும் டிபனையும் சாப்பிடு, இப்ப வரேன்" என அவன் வாங்கி வந்த புதிய உள்பாவடையை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றார், கையில் வைத்திருந்த ஒரு பிடி கல் உப்பை, பக்கெட்டில் இட்டு தண்ணீரைத் திறந்து அதில் புதிய பாவடைகளை நனைத்தார் அவன் தாய் ராணி.

அவர் பின்னே முகம் கழுவச் சென்றவன், "அம்மா புது பாவடையை எல்லாம் எதுக்கு நனைக்கிறீங்க? அதுவும் கல் உப்பு போட்டு" என்றான் குழப்பத்தோடு,

"அப்பத்தானே பழசு மாதிரி தெரியும், அதோட கல் உப்பு போட்டா கலர் போகாதுடா பார்த்தி!" என சிரித்தபடி சொல்லிவிட்டு பாவடைகளை நனைத்து பிழிந்து கொல்லைப்புறத்தில் உலர வைத்தார்.

'அம்மா செய்யுறது ஒண்ணும் புரியல!' என தோளைக் குலுக்கிய படி, கை, கால் முகம் கழுவி புத்துணர்வு பெற்றான்.

'அப்பா இறந்து போய் மூணு மாசம் ஆச்சு! அம்மா இப்ப இப்ப தான் சிரிக்கவே ஆரம்பிச்சிருக்காங்க, இதுல என் வேலையில வேற இப்படி ஒரு பிரச்சனை' என மனதில் உழற்றிக் கொண்டிருந்தவன், உணவு தட்டில் கை வைத்துக் கொண்டு எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

"பார்த்தி என்னாச்சுப்பா" என அவன் தோளில் மென்மையாக கை பதித்துக் கேட்ட அன்னையிடம் தன் கவலையைக் கூறாது, "அம்மா போன மாசம் நான் வாங்கிட்டு வந்த புது பாவடை எல்லாம் கிழிஞ்சு போச்சா என்ன?" என்று கேட்டு பேச்சை மாற்றினான்.

"அதெல்லாம் அப்பவே கொடுத்தாச்சுப்பா, இதெல்லாம் இந்த மாசம் கொடுக்குறதுக்கு".

உப்புமாவில் கோலமிட்டுக் கொண்டிருந்த விரல்களை சட்டென எடுத்தவன், "யாருக்குக் கொடுத்தாச்சு? யாருக்குக் கொடுக்கணும்?" என்றான்

"ச்சுப்! உனக்கு இதெல்லாம் சொன்னாப் புரியாது, நீ பேசாம சாப்பிடு" என நகர்ந்து சென்றவரின் பின்னால் தட்டைத் தூக்கிக் கொண்டு ஓடியவன், "இல்லம்மா, எனக்குப் புரியும், நாலு பாவடை ரெண்டு சைஸ்ல வாங்குறீங்க, நிச்சயம் அதுல ஒண்ணு தான் உங்க சைஸ், அப்புறம் மாசா மாசம் யாராவது வாங்குவாங்களா! எனக்கு என்னன்னு சொல்லுங்க!"

"ம்ம் உன்னையப் பாக்கும் போது, உங்க அப்பா ரொம்ப நல்லவருடா, அவரு ஆறு மாசம் கழிச்சுத் தான் இந்த சந்தேகத்தைக் கேட்டாரு, நீ ரெண்டாம் மாசமே கேக்குற, சரி நான் மாடியில இருக்கேன், நீ சாப்பிட்டுட்டு வீட்டைப் பூட்டிக்கிட்டு வா சொல்றேன்" என்றபடி ராணி மொட்டை மாடிக்கு சென்றார்.

மாடியில் வீசிய மாலை மாருதம் மனதிற்கு இதம் தர, தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை இரண்டாம் முறையாகச் சொல்லத் தயாரானார் அவர்‌.

இரண்டே நிமிடங்களில் மாடிக்கு வந்தவன், "ம்ம் இப்ப சொல்லுங்கம்மா என்னன்னு!" என ஒரு ரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கண்கள் மின்னக் கேட்டான்.

"பார்த்தி! மனுஷனோட முகத்தைப் பற்றிய உன்னோட கணிப்பு என்ன!" என கேள்வியைத் தொடுத்தவரிடம் "அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அம்மா, அகத்தைக் காட்டும் கண்ணாடி தான் முகம்" என்றான் சரியான விடையைக் கூறிய மாணவனின் தோரணையோடு,

"ஹா! ஹா! நீ மாறவேயில்ல வாத்தியார் ஆனாலும் நான் சொன்னது கரெக்டாம்மான்னு என் முகத்தயேப் பாக்குற பாரு. சரி, நான் உனக்கு ஒரு கதையைச் சொல்றேன் அதுக்கு அப்புறமும் உனக்கு இதே பதில் தான் சரின்னு தோணுதான்னு சொல்லணும்" என தன் மனதில் பூட்டிவைத்திருந்த ரகசியக் கதவிற்கான சாவியை அவன் கைகளில் தரலானார்.

"பார்த்தி அப்ப நான் ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தேன். அப்பல்லாம் அம்மாக்கு இப்ப இருக்குற மாதிரி இல்லாம, நிறைய தோழிகள் இருந்தாங்க!"

"ம்ம்"

"நிறைய தோழிகள் இருந்தாலே கேலியும், குறும்பும் இருக்கும் தானே!"

"ஆமாம்மா, ஆனா நீங்க தான் ரொம்ப அமைதின்னு தாத்தா சொல்லிருக்காறரே".

"குறுக்கக் குறுக்கக் கேள்வி கேட்காத பார்த்தி!" என்று முறைத்தவர், விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார்.

"எங்க தமிழ் அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட், தமிழ்ல ஒரு மார்க் குறைஞ்சாலும் அப்படி திட்டுவாங்க! பெண்கள் படிக்கணும், சுயமா சம்பாதிக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க! அவங்க முகம் எப்போதும் கடுமையாத்தான் இருக்கும்".

"ம்ம்"

"இப்படி அவங்க கடுமையா இருந்தது நிறைய பேருக்கு பிடிக்கலப்பா! அதனால அவங்கள எப்படி கிண்டல் செய்யலாம்னு யோசிச்சாங்க. அப்ப அவங்களுக்கு சிக்குன விஷயம் தான் பாவாடை".

"என்னம்மா சொல்றீங்க பாவாடையா?" என்று அதிர்ந்தபடி தன் சந்தேகத்தைக் கேட்டான்.

"ஆமாம்பா, அவங்க போதுமான அளவு சம்பளம் வாங்குனாலும் தினமும் ஓரம் மடங்கி மக்கிப் போன சேலையும், சேலைக்கு கீழ அங்கங்க கிழிஞ்சு தொங்குற பாவாடையும் தான் போட்டுக்கிட்டு வருவாங்க!"

"ஏன்மா வாங்குற சம்பளத்துல நல்லதா வாங்கியிருக்கலாமே!"

"இதே சந்தேகம் தான்பா எனக்கும், அதுனால தான் என் தோழிகள்ல சிலர் அவங்க பாவாடையைப் பார்த்து கிண்டல் செய்யும் போது பேசாம இருந்துட்டேன். ஒரு நாள் தமிழ் அம்மா எங்க க்ளாஸ்ல வந்து காலாண்டு தேர்வுல மார்க் கம்மியா வாங்குனவங்களைத் திட்டீட்டு வெளிய போகும் போது, அந்த கிழிஞ்ச பாவடைத் தடுக்கிக் கீழ விழுந்துட்டாங்கப்பா!" என சொல்கையில் ராணியில் குரலும் உடைந்து விழுந்தது‌.

"அய்யோ! அப்புறம் என்னாச்சும்மா!"

"அவங்க திட்டுன கடுப்புல இருந்த என் க்ளாஸ் பொண்ணுங்கள்ல சில பேர், அதைப் பார்த்து கொல்லுனு சிரிச்சுட்டாங்கப்பா!" என கண்கள் கலங்க சொன்னவர் அவசரமாய் தன் புடவை முந்தானையால் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டார்.

"டீச்சர் கீழ விழுந்தா யாராச்சும் சிரிப்பாங்களா! நீங்களுமா அம்மா சிரிச்சீங்க!" என தாய் கண் கலங்குவதைக் கூட கண்டு கொள்ளாது, குருவை எப்படி அவமதிக்கலாம் என்ற கோபத்தில் பேசினான் அவன்.

"சே! சே! நான் சிரிக்கலப்பா ஆனா சிரிச்சவங்களையும் நான் தடுக்கலப்பா!" என்று கூறிய ராணியின் தொண்டைக்குழி இரண்டு மூன்று முறை கீழிறங்கி மேலெழுந்ததில், அவர் இத்தனை நாள் அழுத்தி வைத்திருந்த விஷயம் வெளிவரப் போகிறது என்று உணர்ந்தவன் மெல்ல அவர் கைகளைப் பற்றினான்.

"என்னம்மா ஆச்சு! அந்த டீச்சருக்கு அடி பட்டுடுச்சா!" என கரிசனத்தோடு கேட்டவனிடம், "இல்லப்பா அந்த டீச்சர் அடுத்த நாளே தற்கொலை செய்து செத்துட்டாங்க" என்றார்.

"என்னது!" என்றவனின் கைகள் அதிர்ச்சியில் அவன் தாயின் கைகளை விடுவித்தது.

"ஆமாம்பா! இரண்டு முழக் கயித்துல அவங்க வாழ்க்கையை முடிச்சுக்கிட்டாங்க" என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து விலகி, நிர்மலமாய் காட்சி தந்த அந்தி வானை வெறித்துப் பார்த்தார்.

"நீங்க எல்லாரும் சிரிச்சதுக்கா அம்மா அவங்க இறந்துட்டாங்க" என்று கேட்டான் பார்த்திபன் அதிர்ச்சி மாறாமல்‌.

"தெரியலப்பா! அவங்க வீட்டுக்காரர் சம்பளப்பணத்தை மொத்தமும் பிடிங்கிட்டு போய் குடிப்பாராம், அடிப்பாராம். மூணு வேளை சாப்பாட்டுக் கூட காசு இருக்காதாம் பா. இதுல எங்க போய் அவங்க புடவை, பாவாடைன்னு வாங்குவாங்க! இது தெரியாம நாங்க எல்லாம் அவங்களை கிண்டல் செஞ்சு சிரிச்சிருக்கோம்.

கடுமையான அவங்க முகத்தைப் பார்த்து, அவங்க மனசும் கடுமைன்னு நினைச்சுட்டோம். பெண்ணை முழுமையாக்குறது கல்யாணம் இல்லை, கல்வி தான்னு பல முறை அவங்க சொன்னது ஏன்னு அவங்க போனதுக்கு அப்புறம் தான் எனக்குப் புரிஞ்சது. டீச்சர் தன் புருஷன் மேல இருந்த வருத்தத்துல தான் இறந்துட்டாங்கன்னு ஊரே சொல்லுச்சு! ஆனா எனக்கென்னமோ நானும் என் க்ளாஸ்ல உள்ளவங்களும் தான் காரணமோன்னு தோணிடுச்சுப்பா! ஏற்கனவே கஷ்டத்துல இருந்தவங்க மனசுல கல்லெறிஞ்சு கலைச்சுட்டோம் பார்த்தி!" என்று சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுபவரை, என்ன சொல்லி தேற்றுவது எனப் புரியாமல் கையை பிசைந்தபடி நின்றிருந்தான் பார்த்திபன்.

சில நொடிகளில் தன்னை சமன் செய்தவர், "இப்ப சொல்லு பார்த்தி முகத்தைப் பத்தின உன்னோட கணிப்பு சரியா!" என்றார் மூக்கை உறிஞ்சியபடி,

"தெரியலியேம்மா!" என்றான் பார்த்திபன் அழும் தன் தாயைக் கலக்கத்தோடு கண்டபடி

"முகம் ஒரு கண்ணாடி தான் பார்த்தி, ஆனா அது சொந்தக்காரங்களோட அகத்தைக் காட்டுறதை, விட பாக்குறவங்களோட உணர்ச்சிகளைத் தானே பிரதிபலிக்குது. எங்க தமிழ் அம்மாவோட மனசு ரொம்ப மென்மையா இருந்திருக்கு பார்த்தி, புருஷனுக்குத் தெரியாம ரெண்டு மூணு பேருக்கு இலவசமா ட்யூஷன் எடுத்துருக்காங்க, அந்த புள்ளைங்கள்ள ரெண்டு பேர் டீச்சரா இருந்து ரிடையர் ஆகியிருக்காங்க. ஆனா எங்க கண்ணுக்குத் தெரிஞ்சது அவங்க கடுமை மட்டும் தானே. நம்ம எதை நினைச்சு பாக்குறோமோ அப்படித்தான் எதிராளியோட முகம் தெரியுது பார்த்தி".

தாய் ஒரு புறமும், மகன் மறுபுறமும் வானில் கரைந்தோடும் மேகங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"அம்மா! அப்ப மாசா மாசம் இந்த பாவாடை தானம் உங்க டீச்சருக்காகத் தானா!"

"அப்படியும் வெச்சுக்கலாம் பார்த்தி! காய்கறிக்காரம்மா, பால்காரம்மா, பூக்காரம்மான்னு, மீன்காரம்மான்னு ஊர்ல நிறைய பேருக்கு பாவாடை தேவையா இருக்கே. நம்ம கண்ணுக்குத் தெரியாம எத்தனை பேர் தடுக்கி விழுந்தாங்களோ, வாங்குன உடையை புதுசா அப்படியே கொடுத்தோம்னு வையு, அதையும் வித்திட்டு அந்த காசுல வீட்டுக்கு செலவு செய்வாங்க, அதுனால தான் துவைத்து நல்லா பிழிஞ்சு கசக்கிக் குடுக்குறேன்.

ஆனா ஒரு ஆளுக்கு வருஷத்துக்கு மூணு தடவை தான் குடுப்பேன். யாருமே கிடைக்கலைன்னா ஆட்டோ எடுத்துக்கிட்டு போய் தேடிப் பிடிச்சுத் தேவைப்படுறவங்களுக்கு குடுத்துடுவேன்பா. மாசத்துக்கு நாலு பாவாடை, மூணு மாசத்துக்கு ஒரு புடவைப்பா இதை மட்டும் தயவு செஞ்சு கேள்வி கேட்காம வாங்கிக் குடுத்துடுப்பா. அம்மா செலவு வைக்கிறாளேன்னு நினைக்காதப்பா ". என்று நா தழுதழுக்கக் கேட்டார்.

"ம்ம்" என்றவன் ஒரு சாதாரண உள்ளாடையில் இத்தனை விஷயங்களா என்று நினைத்தபடி அமைதியாக இருந்தான்.

"அதை நான் வாங்காம அப்பாவையும், உன்னையும் ஏன் வாங்க சொன்னேன் தெரியுமா? உங்களுக்கும் சுத்தியுள்ளவங்களோட நிலைமை, குறிப்பா உழைச்சு சாம்பாதிச்சாலும் சுரண்டப்படுற பெண்களோட நிலை தெரியணும்னு தான்பா அப்படி செய்யுறேன்".

"நீங்க தானம் செய்யுறது சரிதான்மா, ஆனா உங்க டீச்சர் இறந்ததுக்கு காரணம் நிச்சயம் நீங்க இல்லம்மா! நீங்க தான் கேலி பண்ணி சிரிக்கலையேம்மா!" என மனதில் பல ஆண்டுகளாங்களாக சிலுவையை சுமந்து நிற்கும் தாயின் பாரத்தை இறக்கிவிட வேண்டும் என்ற முனைப்போடு பேசினான் பார்த்திபன்.

"நம்மளை சுத்தி ஒரு தப்பு நடக்கும் போது, அதைத் தட்டிக் கேக்காம அமைதியா இருந்ததும் தப்பு தானே! ஒருவேளை டீச்சர் விழுந்ததைப் பார்த்து, என் உள் மனசும் அவங்களுக்கு நல்லா வேணும்னு நினைச்சுடுச்சோ என்னவோ!" என்று முடிக்கையில் ராணியின் குரல் பிசுறு தட்டியது.

"அம்மா!" என்றவனின் குரல் ஆழ்கடலில் இருந்து ஒலிப்பது போலிருந்தது.

"நம்ம எல்லாரும் ப்ரைஸ் டேக் மாதிரி, ப்ராப்ளம் டேக்கை எதிர்பாக்குறோம்டா. எனக்கு தீராத வியாதி, கல்யாணம் ஆகலை, மணமுறிவு, குழந்தையில்லை, அப்பா அம்மா இல்ல, பணமில்லை, குடும்ப வன்முறைன்னு இப்படி பொருட்களோட ப்ரைஸ் டேக் போல, மனுஷங்களும் ப்ராப்ளம் டேக்கை மாட்டிக்கிட்டு அலைஞ்சா, அவங்களைப் பார்த்து அய்யோ பாவம்னு சொல்லி கருணை காட்டுவோம் போல, இல்லைன்னா நம்ம மனசுக்கு ஏத்த மாதிரியான உணர்வை, அவங்க முகத்துல தேடுறோம்".

"அம்மா, இன்னொரு சந்தேகம்".

"இங்க பாரு பார்த்தி, இன்னிக்கு நான் ரொம்பவே பேசிட்டேன். அதனால ராத்திரி டிபனை ஸ்விகியில் போட்டீன்னா, உன்னோட சந்தேகத்தை எல்லாம் தீர்ப்பேன் ஆமாம்" என்று கூறி சிரித்த ராணியை கவலையுடன் பார்த்தான் பார்த்திபன்.

சிரிப்பெனும் முகமூடியை ராணி மாட்டிக் கொண்டாலும், அவரின் அகத்தில் உள்ள வலியை உணர்ந்தவன் சிலையென நின்றிருந்தான்.

"சரி விடு சாயந்திரம் ரவா உப்புமா செஞ்சேன், நைட்டுக்கு சேமியா உப்புமாவே செஞ்சுடறேன்" என தன் புடவை முந்தானையை உதறியவரைக் கண்டு சிரித்து கைப் பிடித்து நிறுத்தினான், "பிரியாணியே சாப்பிடலாம், "நீங்க முதல்ல கீழ போங்க நான் வரேன்" என்று அனுப்பி வைத்தான்.

'ம்ம் அந்த பையன் முகத்துல நீ உன் மனசுல உள்ள பிம்பத்தைப் பாத்திருக்க, ஒருத்தன் படிக்காம இருக்க எவ்வளவோ காரணம் இருக்கலாம் பார்த்திபா! அவனுக்கு டிஸ்லெக்சியா, டிஸ்கேல்குலியா, மன உளைச்சல், இல்லை ஏன்னே தெரியாம கணக்குப் பிடிக்காம இருக்கலாம். அவனோட தேவை என்னன்னு கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டு, பேசி தீர்க்காம உன்னோட வேலையை எப்படி குறை சொல்ல முடியும். உன் க்ளாஸ்ல உள்ள முப்பத்தி நாலு பேர் பாஸ் பண்றாங்கள்ள, இவன் ஒருத்தன் சரியா படிக்கலைன்னு உன்னோட இன்க்ரீமெண்ட், பதிவு உயர்வைத் தடை செய்யறாங்கன்னா அப்படிப்பட்ட வேலையே உனக்குத் தேவையில்லை பார்த்திபா!' என்று தாய் கீழிறங்கிப் போன பின்னும் அவரின் குரல் அசரீரியாய் அவன் மனதில் ஒலித்தது.

தாய் சொன்ன அத்தனை விஷயங்களையும் அவன் மனம் ஆமாம்ல என ஆமோதித்தது. தான் அனுபவித்து உணர்ந்த வலியை, இவனுக்கு எளிதில் புரியும் வண்ணம் எத்தனை பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிறார். அந்த மாணவனுக்கு என்ன ப்ரச்சனையோ அது தெரியாமல் இத்தனை நாள் அவனை மனதுக்குள் நொந்து கொண்டிருக்கிறோமோ என நினைத்துத் தவித்தான்.

நாம் காணும் அனைவரின் முகத்திலும் நம் எண்ணங்களின் பிரதிபலிப்பையேத் தேடுகிறோம். எதிராளியின் அகத்தின் வேதனையை, பல நேரங்களில் முகம் பிரதிபலிக்காமல், முகமூடி இட்டுக் கொள்கிறது என்பதை உணர்ந்தவன் நாளை தலையை ஆசிரியரிடமும் அந்த மாணவனிடமும் பேசுவது அது சரி வரவில்லை எனில், வேறு வேலையைத் தேடுவது என்ற முடிவிற்கு வந்தான்.

வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடந்த மேகங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு அவன் தலையில் சிறு தூறலாய் ஆசிர்வாதம் செய்தது.

Stories you will love

X
Please Wait ...