நம் சமூகம் நம் பொருப்பு

Malarvizhi
த்ரில்லர்
5 out of 5 (10 Ratings)
Share this story

"அம்மா… அம்மா…” என்று கதவைத் தட்டும் சத்தம் கேட்டு திடுக்கென உறக்கத்திலிருந்து முழித்தாள் சாருமதி.

சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள்.

மணி 7:30 என்று காட்டியது.

தன்னை அனைத்தவாரு படுத்திருந்த தன் கணவனின் பிடியிலிருந்து விலகிச் சென்று தன் அறையின் கதவைத் திறந்தாள். குளித்துத் தயாராகி பள்ளிக்குச் செல்லக் காத்திருந்த தன் மகள் அபிநயாவை நோக்கி ஓடினாள்.

"அபி.. ஐ. அம் சோ சாரி. அம்மா நொம்ப நேரம் தூங்கிட்டேன். இரு அஞ்சே நிமிஷத்துல டிபன் ரெடி பண்றேன்” என்றாள்.

“இட்ஸ் ஓகே மா. நான் தோசை ஊத்தி பொடி வச்சு சாப்பிட்டேன். நீங்க எனக்கு லன்ச் மட்டும் கொண்டு வந்து தாங்க. எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. பப்ளிக் எக்ஸ்ஸாமுக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. டென்த்ல நெறையா மார்க் எடுத்தாதான் ப்ளஸ் ஒன்ல நல்ல க்ரூப் கிடைக்கும்னு டீச்சர்ஸ் ஸ்பெஷல் கிளாஸ் வைக்குறாங்க.” என்று சலித்துக் கொண்டாள்.

“அவங்க சொல்றது சரிதான அபி. நீ நெனச்ச மாதிரி டாக்டர் ஆகனும்னா, நல்லா படிக்கனும்ல.” என்றாள் சாருமதி.

“சரிம்மா, டைம் ஆயுடுச்சு, நான் கிளம்புறேன்.” என்று தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினாள்.

தன் மகளை வழியனுப்பி விட்டுத் திரும்புகயில்,

“பீட் ரூட், கேரட், தக்காளி, வெண்டைக்காய் .. “ என்று கூவிக் கொண்டே வந்தான் காய்கறி விற்கும் வேலு, தன் தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு.

“அக்கா.. ப்ரெஷ்ஷா இருக்கு காயெல்லாம் வாங்கிக்கோங்க" என்றான்.

“சரிப்பா ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணு, நான் உள்ள போய், பேக் எடுத்துட்டு வரேன்” என்று சென்றாள் சாருமதி.

பையை எடுத்துக் கொண்டு வெளியே வரும் பொழுது, எதிர் வீட்டில் வசிக்கும் கருணாம்பாளும், சாருமதியின் வலதுபக்கம் வசிக்கும் துர்காம்மாளும், இடதுபக்கம் வசிக்கும் லக்ஷ்மியம்மாளும், காய்கறி வண்டியைச் சுற்றி நின்று கொண்டு, காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தனர்.

“எல்லா அம்மாங்களுக்கும் குட்மார்னிங்” என்றபடி சாருமதியும் அவர்கள் கூட்டத்தில் இணைந்தாள்.

“வாமா சாரு " என்று வரவேற்ற கருணாம்பாள், “என்ன முகம் வீங்கியிருக்கு, சரியா தூங்களயா?” என்று கேட்டார்.

“ஆமாம்மா, ரொம்ப நேரம் தூக்கம் வரல. அப்புறம் டாக்டர் கொடுத்தத் தூக்க மாத்திரயப் போட்டதும் தான் தூங்கினேன்.” என்றாள் சாருமதி .

“அபி டென்த் ஸ்டாண்டர்டு இல்ல. எப்புடி படிக்குறா?" என்று துர்காம்மாள் கேட்டார்.

“நல்லா படிக்குறாம்மா. ஆர்மி டாக்டர் ஆகுறதுதான் அவ லட்சியம். அது நடந்தா எனக்கும் ரொம்ப சந்தோஷம்” என்றாள் சாருமதி, வெண்டைக்காயை எடுத்தபடி.

“ம்.. அவ அப்பாவப் போலவே நாட்டுக்கு சேவை செய்யனும்னு நெனைக்குறா.” என்று பாராட்டினார் கருணாம்பாள்.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது கருணாம்பாளின் வீட்டில் வளரும் நாய், ரியோ ஓடி வந்தது.

"பௌ பௌ..” என்று வாலை ஆட்டியது வேலுவைப் பார்த்து.

“வா ரியோ..” என்று அதை வரவேற்று ஒரு சிறிய கேரட் துண்டைக் கொடுத்தான் வேலு. ரியோ விளையாட்டுத் தனமாக கேரட்டை வாங்காமல் வேலுவின் தோல் மேல் இருந்து துண்டை தன் வாயால் கவ்விக் கொண்டு வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான்.

“ஏய் ரியோ!!” என்று கருணாம்பாள் கத்தினார்.

“இவனுக்கு இதே வேலையாப் போயிடுச்சு. நேத்து என்னோட செருப்பத் தூக்கிட்டு ஓடிட்டான் கருணா அக்கா” என்று செல்லமாக புகார் அளித்தார் லக்ஷ்மியம்மாள்.

அதைக் கேட்ட சாருமதி ‘கொள்’ என சிரித்தாள்.

“சாரி லக்ஷ்மி.. நான் தேடி எடுத்துக் தரேன் அப்புறமா.” என்று லக்ஷ்மியம்மாளிடம் கூறிவிட்டு, வேலுவிடம் திரும்பி, “ தம்பி.. உன் துண்டையும் நான் நாளைக்குத் தரேன் பா. இப்போ அவன் ஒரு எடத்துலயே நிக்க மாட்டான். கொஞ்சம் போராடித் தான் வாங்கனும்,” என்றார் கருணாம்பாள்.

“ஹூம்ம்.. இந்நேரம் அந்தத் துண்டு, துண்டு துண்டா போயிருக்கும். நீங்க அநேகமா வேலுவுக்குப் புது துண்டு தான் வாங்கிக் கொடுக்கனும்னு நெனைக்கறேன்” என்றார் துர்காம்பாள் சிரித்துக்கொண்டே.

“பரவாயில்லமா… நீங்க புதுசெல்லாம் வாங்க வேண்டாம்” என்றான் வேலு.

லக்ஷ்மியம்மாவின் கை தவறி ஒரு உருணைக்கிழங்கு கீழே விழ, அதை எடுத்து எடைத் தட்டில் வைத்தார். அப்பொழுது வேலுவின் கையில் புதிய செல்போனைக் கண்ட துர்காம்மாள்,

“என்ன வேலு புது போனா?. குடு பார்த்துட்டு தரேன்.” என்று கேட்டார்.

“ஆமாம்மா… புதுசு தான். இந்தாங்க.” என்று கொடுத்தான்.

அதை வாங்கி நாலாபுரமும் திருப்பிப் பார்த்துவிட்டுக் கொடுத்தார்.

காய்கறிகளை வாங்கிக் கொண்டு அவரவர் வீட்டிற்குத் திரும்பினர். சாருமதி உள்ளே செல்லும் முன்,

“அக்கா..குடிக்கக் கொஞ்சம் தண்ணி தரீங்களா?” என்று வேலு கேட்டான் .

“இதோ கொண்டு வரேன் வேலு, வெயிட் பண்ணு பா”என்று கூறித் திரும்பும்

பொழுது, கருணாம்பாள் வீட்டு ஜன்னலில் இருந்து தன்னை ஒரு உருவம் கண்காணிப்பது போல் தோன்றியது சாருமதிக்கு.

உள்ளே தண்ணீர் எடுத்துவிட்டு வரும்முன் தன் ஜன்னலில் இருந்து பார்த்தாள், அங்கே நிற்பது கருணாம்பாளின் மகன் அக்ஷ்ஷத் என்று உணர்ந்தாள்.

சிறிது நாட்களாக இவன் பார்வையிலும் நடத்தையிலும் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள் சாருமதி. குழப்பத்தோடு வெளியே சென்று வேலுவிற்குத் தண்ணீரைக் கொடுத்தாள்.

“ரொம்ப தாங்க்ஸ் கா” என்று தண்ணீரை வாங்கிக் குடித்தான்.

அவனிடம் தண்ணீர் குவளையை வாங்கிக் கொண்டு வீட்டினுள் சென்றாள். அக்ஷ்ஷத் அவன் அறையின் ஜன்னலில் இருந்து நகராமல் நின்று சாருமதியின் வீட்டையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு பயந்தாள். அதே குழப்பத்தோடு காலை டிபனை செய்து விட்டு தன் கணவரை அழைத்தாள்,

"என்னங்க டிபன் ரெடி.. வாங்க சாப்பிட” என்று.

டைனில் டேபிலில் தனக்காகக் காத்திருந்த சாருமதியின் அருகில் வந்து அமர்ந்தான் விஸ்வா.

“என்ன சாரு.. எதயோ யோசிச்சிட்டு இருக்க?” என்று கேட்டான்.

“கருணாம்பா அம்மா வோட பையன் பார்வையே சரியில்லங்க.. தப்பானக் கண்ணோட்டத்துல பாக்குற மாதிரி இருக்கு.” என்றாள்.

“சே…சே.. அவன் ரொம்ப நல்ல பையன் மா. நீ ஏதோ, தப்பா புரிஞ்சிருக்கணு நெனைக்குறேன்.” என்றான் விஸ்வா.

“ஆமாம்மா.. நீங்க என்னைக்கு நான் சொல்றத நம்பி இருக்கீங்க” என்று கடிந்து கொண்டு, “நான் போயி மத்தியான சாப்பாடு செய்யுறேன். அபிக்கு கொண்டு போகணும். “என்று சமையறைக்குச் சென்றாள்.

மதியம் 12:30.

அபிக்குப் பிடித்த லெமன் ரைஸீம் உருளைக்கிழங்கு வருவலும் சமைத்தாள். டிபன் பாக்ஸ்ஸை பேக் செய்துவிட்டு, நல்ல உடைமாற்றி வந்தவள், தன் கணவரிடம் திரும்பி,

“என்னங்க, நான் அபிக்கு சாப்பாடு குடுத்துட்டு வரேன். நான் வந்த உடனே ரெண்டு பேரும் சாப்பிடலாம்.” என்றாள்.

“சரி மா” என்று பதிலளித்தான் விஸ்வா.

தனது இரண்டு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து அபி படிக்கும் பள்ளியை நோக்கிப் புறப்பட்டாள்.

தான் செல்லுகின்ற வழி எல்லாம் கம்பளம் விரித்து வரவேற்பது போல இருபுறமும் மரங்கள் நிழல் பரப்புவதை ரசித்துக் கொண்டே சென்றாள். அப்பொழுது ஒரு கார் அவளை பின் தொடர்வதை கவனித்தாள். பள்ளியின்

உள்ளே சென்றதும் அந்தக் கார் பள்ளியின் வாசலிலேயே நிற்பதைக் கண்டு அதிர்ச்சியானாள்.

அபிக்கு உணவை அளித்துவிட்டுப் பள்ளியின் கேட்டின் மறைவில் நின்று பார்த்தாள். அந்தக் கார் அங்கேயே இருந்தது. சிறிது நேரம் நின்று பார்த்தாள். கார் நகருவதாக இல்லை. மன தைரியத்தை வரவளைத்துக் கொண்டு,

தன் இரு சக்கர வாகனத்தில் புரப்பட்டாள். சிக்னலில் வேண்டுமென்றே திசைமாறி வேறு வழியாக வீட்டைச் சென்று அடைந்தாள்.

வீட்டின் உள்ளே சென்றதும் விஸ்வாவிடம் நடந்ததைக் கூறினாள்.

“ஒன்னும் பயப்படாத. நாளைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளயன்ட் குடுக்கலாம். “என்றான் விஸ்வா.

மாலை 5 மணி..

வெளியே பூச்செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள், சாருமதி.

“என்ன சாரு.. அபியோட சைக்கிள காணோம் வராண்டாவுல ? இன்னும் வரலயா ஸ்கூல் விட்டு?”என்று குரல் கொடுத்தார் துர்காம்மாள்.

‘எப்போதும் அடுத்த வீட்டு விஷயமே பெருசு இவங்களுக்கு’ என்று மனதினுள் கடிந்து கொண்டு,

“5:30 கு வந்திடுவாம்மா. ஸ்பெஷல் கிலாஸ் இருக்கு அவளுக்கு” என்று கூறினாள்.

அப்பொழுது காலையில் சாருமதியைத் தொடர்ந்து வந்த கார் துர்காம்மாளின் வீட்டிற்குள் வருவது கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.

“ இ... இந்தக் காரு….”என்று இழுத்தாள் .

"அஜய்யோட காரு தான் சாரு. டிரெயினிங் முடிஞ்சு முதல் போஸ்டிங் இங்கையே கெடச்சுடுச்சு. வேலைக்குக் கார்ல தான் போவேன்னு வாங்கிட்டான்.” என்றார் துர்காம்மாள்.

காரிலிருந்து இறங்கிய துர்காம்மாளின் மகன் அஜய், சாருமதியை நோக்கி மெல்லிய புன்னகை வீசி தலையை அசைத்து விட்டு உள்ளே சென்றான்.

என்ன கூறுவது என மொழி இல்லாமல் நின்றாள் சாருமதி.

“சரி சாரு.. நான் அவனுக்கு டீ போட்டுத் தரேன். அப்புறம் பார்க்கலாம்.” என்று கூறி விடைபெற்றார் துர்காம்மாள்.

5:30 மணிக்கு அபி தன் சைக்கிளின் மணியை அடித்துக் கொண்டே வந்து சேர்ந்தாள். தனக்காக கேட்டின் வெளியே காத்திருந்த சாருமதியை ” ஹாய் மா” என்று அணைத்துக் கொண்டாள்.

“ஹாய் அபி. எப்படி போச்சு இன்னைக்கு ஸ்கூல்” என்று கேட்டாள்.

“குட் மா. எனக்குப் பசிக்குது, ஏதாவது சாப்பிட தரிங்களா?.” என்று

கேட்டுக் கொண்டே உள்ளே சென்றாள்.

கேட்டை சாத்தி விட்டு நிமிர்ந்தவள் கண்ணில் எதிர் வீட்டு ஜன்னலில் நிற்கும் அக்ஷ்ஷத் தென்பட்டான். கண்டும் காணாதது போல திரும்புகையில், அஜய் அவன் வீட்டு ஜன்னலில் இருந்து பார்பதைக் கண்டாள் சாருமதி. பயத்தில் வேர்த்தது அவளுக்கு.

“அம்மா…” என்று அபி அழைக்க, உள்ளே சென்றாள் சாருமதி.

அபிக்கு சுடச்சுட தேநீரும் வடையும் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்ட அபி,” அம்மா கொஞ்சம் படிக்குற வேலை இருக்கு. நான் மேல என் ரூமுக்குப் போறேன்” என்று கூறி அவள் அறைக்குச் சென்றாள்.

ஏனோ சாருமதிக்கு மனதில் குழப்ப அலை மோதிக் கொண்டே இருந்தது. தேநீரை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.

“இந்தாங்க டீ” என்று விஸ்வாவுக்கும் கொடுத்தாள்.

“அபி என்ன செய்யுறா?” என்று விஸ்வா கேட்க,

“படிக்குறா அவ ரூம்ல“ என்றாள்.

“நீங்க என்ன பண்றீங்க” என்று கேட்டாள்.

“ நான் மிலிட்டரில் இருந்தப்ப, நீயும் அபியும் எனக்கு எழுதின லெட்டர்ஸ்ஸ

படிச்சிட்டு இருக்கேன்.” என்றான்.

“ ஹூம்....” என்று புன்கையோடு விஸ்வாவின் தலையை வருடிக் கொடுத்தாள்.

சிறிது நேரம் உரையாடி விட்டு, இரவு உணவை சமைக்கச் சென்றாள்.

மணி 8 என்று சுவர் கடிகாரம் கத்த, உணவை எடுத்துக் கொண்டு, அபியின் அறைக்குச் சென்றாள். சாருமதி உள்ளே நுழையும் பொழுது, அபி சட்டென தன் கையில் இருந்த போட்டோவை தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் வைத்து மறைத்தாள். அதைக் கண்டும் காணாதது போல சாருமதி உணவை ஊட்டி விட ஆரம்பித்தார். அபி உணவருந்திய பின்,

“அம்மா கிட்ட இருந்து என்ன மறைக்குற அபி.?” என்று கேட்டாள் சாருமதி.

அபி தயக்கத்தோடு அவள் மறைத்த புகைப்படத்தை எடுத்துக் காட்டினாள். அதிலிருந்த உருவத்தைக் கண்டதும் கண்ணீர் பெருக்கெடுத்தது சாருமதிக்கு.

“அம்மா…” என்று தயக்கத்தோடு சாருமதியின் தோள் மீது கை வைத்தாள்..

"அபி… படிப்புல முதல்ல கவனம் செலுத்து” என்று அந்த போட்டோவை அபியிடமே திருப்பிக் கொடுத்தாள் சாருமதி.

“சரி மா” என்று மறுமொழி ஏதும் பேசாமல் அமைதியானாள்.

உணவு உண்ட தட்டை எடுத்துக் கொண்டு மகளுக்கு “குட் நைட்” சொல்லி விட்டு கீழே தன் அறைக்குச் சென்றாள்.

தனக்கு முன் உறங்கி விட்ட விஸ்வாவை அனைத்தவாரு அருகில் படுத்தாள். கண் மூடினாள். உறங்கினாள்..

கனவில்…

ஹெலிகாப்டர் மேலே தட தடவென சத்தமிட்டுப் பறக்க,

பீரங்கிகள் அங்கும் இங்கும் அலைபாய,

கண் எதிரே எதிரி நாட்டின் துப்பாக்கிகள் குறி பார்க்க,

வெடி குண்டுகள் எதிர் எதிர் திசையில் பறக்க,

தன் அருகே தன் நண்பன் குண்டடிபட்டுத் துடிக்க,

நம் நாட்டின் வீர மங்கையீர் ஈன்ற முத்துக்கள் எல்லாம் இரத்த வெள்ளத்தில் மிதக்க,

இக் காட்சிகளை விஸ்வா சாருமதிக்கு விளக்கிக் கொண்டிருக்கையில்,

‘அம்மாாாாா…’ என அலறும் சத்தம்..

சுற்றும் முற்றும் பார்த்தனர் இருவரும்…

போர்க்களத்தில் யாரும் இல்லை..

மீண்டும் ‘அம்மாாாாா…’ என அலறும் சத்தம்..

சுற்றும் முற்றும் பார்த்தனர்

சாருமதி மட்டும் நின்று கொண்டிருந்தாள்…

“டுமில் டுமீல்..டுமில் டுமீல்..” என நான்கு துப்பாக்கி குண்டுச் சத்தம் கேட்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள்.

சுவர் கடிகாரம் நள்ளிரவு 12:30 எனக் காட்டியது.

“ பௌ.. பௌ.. பௌ.. பௌ.. “ ரியோவின் சத்தம்.

மின்னலாய் பாய்ந்தாள் சாருமதி அபியின் அறையை நோக்கி. அபி அங்கே இல்லை. தட தட வென ஓடும் கால்கள் வீட்டைச் சுற்றிக் கேட்டது. வெளியே இரு துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம்.

“அய்யோ... அபி…” என்று அலறிக் கொண்டே வெளியே ஓடினாள். நடு ரோட்டில் துப்பாக்கி குண்டுகளைக் காலில் வாங்கிய படி வேலு வலி தாங்க முடியாமல் உருண்டு கொண்டிருந்தான். வேலுவின் அருகே அடையாளம் தெரியாத மற்றொருவன் துப்பாக்கி குண்டடியோடு மயங்கிக் கிடந்தான்.

கையில் துப்பாக்கியுடன் அக்ஷ்ஷத்தும், அஜய்யும் காவல்துறை அதிகாரி உடையில் அபியை அரவணைத்தவாரு நின்றிருந்தனர்...

சாருமதியைக் கண்டதும், “ அம்மா.....” என்று ஓடினாள் அபி.

“அபி…. உனக்கு ஒன்னும் ஆகலயே?” என்று தன் மகளைத் தொட்டுப் பார்த்தாள்.

“எனக்கொன்னும் இல்லம்மா. அக்ஷ்ஷத் அண்ணாவும், அஜய் அண்ணாவும் என்னய காப்பாத்திட்டாங்க” என்றாள்.

"எனக்கு ஒன்னுமே புரியல. வேலுவ ஏன் சுட்டீங்க? இவன் ஏன் இந்த நேரத்துல இங்க…?” என்று கேட்டாள் சாருமதி.

கருணாம்பாளும், லக்ஷ்மியம்மாவும், துர்காம்மாவும் வெளியே வந்தனர்.

“ஒன்னும் பயப்படாத சாரு” என்று தோளை அனைத்துக் கொண்டு நின்றனர்.

“சின்னப் பொண்ணுங்கள ரொம்ப நாளா கடத்துர கும்பல தேடிட்டு இருந்தோம். வேலு மேல ரொம்ப நாள் சந்தேகம் இருந்தது. அதான் அவன கண்காணிச்சிட்டு இருந்தோம். நம்ம அம்மாங்க உதவியோட போன்லயும், தள்ளு வண்டியலயும் பக் வச்சோம். லைக் அ டிரேக்கர்.”என்றான் அஜய்.

“ஓ. அதான் அன்னைக்கு வேலுவோட ஃபோன வாங்கிப் பாத்தீங்களா?” என்று கேட்டாள் சாருமதி.

“ஆமாம்மா….” என்றார் துர்காம்மாள்.

“அது மட்டும் இல்ல. உருளைக்கிழங்க கீழே போடுற மாதிரி போட்டு அக்ஷ்ஷத் குடுத்த மெஷினை வச்சேன்” என்றார் லக்ஷ்மியம்மாள்.

“நம்ம ரியோ கூட வேலுவோட துண்டை எடுக்க உதவி பண்ணினான். மோப்பம் பிடிக்க” என்றார் கருணாம்பாள்.

"அந்த டிரேக்கர் மூலமா தான் தெருஞ்சுகிட்டோம் இவன் நம்ம அபியக் கடத்துற ப்ளான்ன. உங்களுக்கும் பாதுகாப்பா இருக்கத்தான் நானும் உங்கள பாளோ பண்ணினேன்.” என்றான் அஜய்.

“அபி கரெக்டா ஸ்கூல் விட்டு பத்திரமா வீட்டுக்கு வராலான்னு பாத்துக்க தான் நான் உன்னை தினமும் அபி வந்தாச்சான்னு கேட்டுட்டே இருந்தேன் மா” என்றார் துர்காம்மாள்.

அக்ஷ்ஷத்தயும் அஜய்யையும் தவறாக நினைத்ததற்காக மனம் வருந்தினாள் சாருமதி.

“ரொம்ப நன்றி தம்பி ரெண்டு பேருக்கும்.” என்று இருவரையும் வணக்கினாள்.

“நன்றி எல்லாம் வேண்டாம். இது எங்க கடமை.” என்றான் அக்ஷ்ஷத்.

“இந்த நாட்டுக்காக தன் உயிரயே தியாகம் பண்ணின உன் கணவருக்கு நாங்களும் நன்றியா இருக்கனும் மா என்றார் " துர்காம்மாள்.

“இந்த மாதிரி கெட்டவனுங்களுக்கம் சேர்ந்து தான விஸ்வா மாதிரி புள்ளைங்க தன் உயிரை மதிக்காம எல்லையில போராடுதுங்க" என்றார் கருணாம்பாள்.

“அவங்க எல்லாரும் தன் உயிரையே நமக்காகக் கொடுக்குற அளவுக்கு நாம இங்க தகுதியான ஒரு வாழ்க்கைய வாழ வேண்டாமா?” என்றார் லக்ஷ்மியம்மாள்.

“அந்த அறத்தையும் ஒழுக்கத்தையும் காப்பாத்த தானே நாங்க இருக்கோம்.” என்றான் அஜய்.

“உங்க எல்லாருக்கும் நான் என்ன கைமாறு செய்யப் போறேன்.” என்று அழுதாள் சாருமதி.

“நீ சந்தோஷமா நிம்மதியா வாழ்றதுதான் எங்களுக்கு வேணும்.” என்றனர் மூன்று அம்மாக்களும்.

“பௌ..பௌ..” என்று வாலாட்டினான் ரியோ.

சிறிது நேரத்தில் காவல் துறை வாகனம் வந்து வேலுவையும் அவன் கூட்டாளியையும் அழைத்துச் சென்றது.

பிறகு அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.

“அபி.. நீ உன் ரூமுக்குப் போ, நான் ஒரு பத்து நிமிஷத்துல வரேன்” என்று மகளை அனுப்பிவிட்டு தன் அறைக்குச் சென்றாள். கதவை மூடிகிட்டு, கட்டில் மேல் இருந்த விஸ்வாவின் இராணுவ உடையை அனைத்துக் கொண்டு “ஓ…” வெனக் கதறி அழுதாள்.

“சாரு…..” விஸ்வாவின் குரல்...

பதில் எதுவும் பேசாமல் அழுது கொண்டே இருந்தாள்.

“நான் உயிரோட இல்லைங்கிறத ஏத்துக்கோ சாரு. இன்னும் நீ என் நினைவலைகளப் பிடிச்சுட்டு தொங்கிட்டே இருக்க. செட் மீ ஃப்ரீ.. நீயும் அபியும் உன் உலகத்துல சுதந்திரமா வாழத் துவங்குங்க. பிளீஸ். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்றதுதான் நீ எனக்குத் தர காணிக்கை”

விஸ்வாவின் குரல்…

அழுது ஓய்ந்து திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களுக்கு விஸ்வா தெரியவில்லை. உண்மையை உணர்ந்து பெருமூச்சு விட்டு, அபியின் அறைக்குச் சென்றாள். அபி, புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த தன் தந்தையின் புகைப்படத்தை நெஞ்சோடு அனைத்தவாரு உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை அனைத்தவாரு அவளருகில் படுத்தாள் சாருமதி. கண் மூடினாள். தூக்க மாத்திரை இல்லாமலே உறங்கினாள்.

விடிந்தது..

சமையல் எல்லாம் முடித்து விட்டு, அபியோடு தயரானாள் சாருமதியும். வெளியே வரும் முன் தன் அலைப்பேசியை எடுத்துப் பேசினாள். பிறகு அபியை வழியனுப்பி விட்டு தன் வீட்டு வராண்டாவில் காத்திருந்தாள். மூன்று அம்மாக்களும் சாருமதியின் கேட்டில் ஆட்ஜர் ஆனார்கள்.

“ எதுக்கு மா வர சொன்ன?” என்று கேட்டனர்.

“என் டேன்ஸ் அகேடமிய திறக்கப் போறேன் மா” என்றாள்.

மூன்று அம்மாக்களும் மகிழ்ச்சி பொங்க, “ சூப்பர் மா. எங்க பழைய சாரு கிடைச்சாச்சு” என்றனர்.

“ கோவிலுக்குப் போயிட்டுப் போமா” என்றார் துர்காம்மாள்.

“மூனு அம்மன்களும் என் கூடயே இருக்கும் போது நான் எந்தக் கோவிலுக்கும் போக அவசியமே இல்லை. உங்கள மாதிரியே ஒவ்வொருத்தரும் நம்ம அக்கம் பக்கத்துல இருக்குறவங்களப் பாத்துகிட்டா, ஒருத்தருக்கொருத்தர் பாதுகாப்பா இருந்தா நம்ம சமூகமே பொறுப்பான ஒன்னா மாறிடும். என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.” என்று மூவரின் காலிலும் விழுந்தாள்.

“ வாழ்க வளமுடன்!!!” என்று மூவரும் வாழ்த்தினர்.

மூன்று அம்மாக்களும் தன் நெற்றியில் இருந்த குங்குமத்தில் சிறிது எடுத்து சாருமதியின் நெற்றியில் வைத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

புது விடியல் விடிந்தது.

Stories you will love

X
Please Wait ...