JUNE 10th - JULY 10th
மாடத்து விளக்கு
டிங் டிங் டிங்…கணீர் என்று சிவன் கோவில் மணி ஓசை கேட்கின்றது.உஸ் உஸ் உஸ்ஸ்… சில்லென்று இளந்தென்றல் காற்று வீசுகின்றது. அந்த வீட்டின் முற்றத்தில் பேச்சுக் குரல் கேட்கின்றது.“அங்கை, இன்னிக்கு அந்த மாடத்து விளக்கு வீட்டு மீனாவை போய் அழைச்சிட்டு வந்துடு.நேரா போய் மேக்கால திரும்பி, நாலாவது சந்துல நுழைஞ்சு அப்புறம் கிழக்கால திரும்பி மூணாவது சந்துல போய் பாரு,அங்க ஒரு வீட்ல மாடத்துல விளக்கு பளிச்சுன்னு எரியும்,அந்த வீடு தான்.அந்த அம்மாகிட்ட ரொம்ப பேச்சு கொடுக்காத,அப்புறம் விடாது” என்று கூறினார் அங்கயற்கண்ணியின் மாமியார் நாகவேணி ஆச்சி.
அடுத்த வாரம் நாகவேணி நடராஜன் தம்பதியரின் ஷஷ்டியப்த பூர்த்தி விழா(சாந்தி கல்யாணம்).அதற்காக அந்த வீட்டின் மகன்களும் மருமகள்களும் வந்திருக்கிறார்கள்.கிராமத்து வழக்கத்தின் படி,அவர்கள் சமூகத்தை சேர்ந்த அனைத்து பெண்களையும் விசேஷ வீட்டு பெண்மணி நேரில் சென்று அழைக்க வேண்டும்.பட்டு புடவைக்கட்டி கையில் ஒரு ஓலை கொட்டானில் வெற்றிலை பாக்கு எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.
அங்கை சென்னையில் வசிப்பவள்.அதிகமாக கிராமத்திற்கு வந்ததில்லை.”அத்தை யாரையாச்சும் துணைக்கு அனுப்புங்க.வழி தெரியனுமில்ல”என்றாள் அங்கை. “யாராச்சும் வந்தால் வழியில கூட்டிட்டு போ.மீனா வீட்டுக்கு என்றால் யாரும் வரமாட்டாங்க” என்று சென்று விட்டார் நாகவேணி.வேலை செய்யும் பெண் செல்வியிடம் துணைக்கு வருமாறு கூறினாள் அங்கை.“இந்த பாருங்க அக்கா, நான் வேணுமென்றால் உங்களுக்கு ரெண்டு மணி நேரம் கூட நின்னு வேலை பாக்குறேன்.அந்த மாடத்து விளக்கு வீட்டுக்கு கூப்பிடாதீங்க”என்று ஓடியேவிட்டாள் செல்வி.
ஏன் அந்த மீனா ஆச்சி வீட்டுக்கு யாருமே வர மாட்டேங்கிறாங்க?என்ன விசயமா இருக்கும்?சரி நேர்லயே போய் பார்ப்போம் என்று கிளம்பினாள் அங்கை.அங்கை மெதுவாக நடந்து சென்றாள்.நாகவேணி கூறியது போல,அந்த தெருவில் நுழைந்ததுமே அழகான மாடமும்,அதை விட அழகான விளக்கும் அந்த வீட்டை அடையாளம் காட்டியது.
“ஆச்சி…ஆச்சி…”என்று வெளியில் இருந்து அழைத்தாள் அங்கை.வேலை செய்யும் பெண் வந்து கதவை திறந்தாள்.”ஆச்சி இல்லையா?கல்யாணத்துக்கு அழைக்க வந்திருக்கேன்”என்று கூறினாள்.”உள்ளாரா இருக்காங்க.. வாங்க…நான் சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்புறேன்…உட்காருங்க”என்று கூறினாள் அந்த பெண்.”ஆச்சி விருந்தாளி வந்திருக்காங்க,வந்து பாருங்க… எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்…நாளைக்கு வெள்ளன வந்திருறேன்… “என்று ஆச்சியிடம் கூறிவிட்டு அவரின் பதிலை கூட கேட்காமல் விரைவாக சென்று விட்டாள் அந்த பெண்.
“யாரது வந்திருக்கறது?”, என்று குரல் கொடுத்துக்கொண்டு உள்ளிருந்து ஒரு வயதான பெண்மணி வந்தார்.தும்பை பூப்போல வெள்ளையான நூல் சேலை அணிந்திருந்தார்.தலையில் அங்கங்கே கருப்பு கலந்த ஒரு வசீகரமான வெள்ளை நிற அடர்த்தியான கூந்தல்.கண்ணில் ஒரு சாந்தம்.நடையில் ஒரு நிதானம்.அவரை பார்க்கும் பொழுதே அங்கையின் மனதில் ஒரு அமைதி பரவியது.”வா ஆத்தா,நல்லா இருக்கியா? “என்றார் மீனா ஆச்சி.”நல்லா இருக்கேன் ஆச்சி.நீங்க நல்லா இருக்கீங்களா?”என்று நலம் விசாரித்தாள் அங்கை.”உட்காரு ஆத்தா.காபி குடிக்கிறியா?”என்றார் மீனா ஆச்சி. “இல்லை ஆச்சி பரவாயில்லை.நான் அத்தை மாமா சாந்தி கல்யாணத்துக்கு அழைக்க வந்திருக்கேன்” என்றாள் அங்கை.”கொட்டான் எடுத்து வந்திருக்க போல.தப்பா நினைக்காத ஆத்தா,எனக்கு ஆளு யாருனு புரியல,வயசாயிடுச்சு இல்ல”, என்று சிரித்தார் மீனா ஆச்சி.”அதனால என்ன ஆச்சி,நீங்க என்னை பார்த்து இருக்க மாட்டீங்க.நான் நாகவேணி ஆச்சி மருமகள் “ என்று அறிமுகப் படுத்திக்கொண்டாள் அங்கை.”ஓ, சரி..காபி கொண்டாரவா?”என்றார் மறுபடியும்.”இல்ல ஆச்சி இன்னொரு நாள் வரேன்,கல்யாணத்துக்கு வந்திடுங்க” என்றாள் அங்கை மறுபடியும்.
”கல்யாணமா? அழைக்க வந்தியா? யாருக்கு கல்யாணம்?“ என்றார் மீனா ஆச்சி.அங்கைக்கு இப்பொழுது சற்று குழப்பமாக இருந்தது.”அதுதான் ஆச்சி எங்க மாமனார் மாமியார் சாந்தி”என்றாள் மீண்டும் சற்று சத்தமாக.
“இந்த வேலை செய்ற பொண்ணு போய்டுச்சு.இரு நான் காபி கலக்குறேன்.நீ அலமேலு பொண்ணு தானே.நம்ம வீட்டுக்கு வந்து காபி சாப்பிடாம போனா உங்க அம்மா என்ன நினைக்கும்?சத்த பொறு.காபி கொண்டாறேன்”என்றார் மீனா ஆச்சி.அங்கைக்கு அய்யோ என்று ஆனது.“இல்லை ஆச்சி, நான் நாகவேணி மருமகள்.கோவில் எதிர்த்தாப்ல இருக்கு இல்ல, கோட்டை வீடு, அந்த வீட்டு நாகவேணி ஆச்சி மருமகள் “ என்றாள் விளக்கமாக.”அப்படி புரியறாப்ல சொல்லு.கோயம்பத்தூர் நாகரத்தினம் மருமகளா?அவங்க வீட்ல யாருக்கு கல்யாணம்” என்றார் மீனா ஆச்சி.அங்கைக்கு எப்படி அவருக்கு புரிய வைக்க என்று ஆயாசமாக இருந்தது,அவள் யோசிக்கும் பொழுதே மீனா ஆச்சி சென்று அங்கைக்கு காபியும் பலகாரமும் கொண்டு வந்தார். காபியின் மணம் அவளுக்கு புத்துணர்ச்சியைத் தந்தது.கெட்டியான பாலில், அளவான நாட்டு சக்கரை சேர்த்து, சூடாக டிகாஷன் கலந்து மணக்க மணக்க இருந்த காபியை, மெதுவாக ரசித்து சுவைத்து குடித்தாள்.இந்த காபிக்காகவே எத்தனை தரம் வேண்டும் என்றாலும் இந்த வீட்டுக்கு வரலாம் என்றே தோன்றியது அங்கைக்கு.
காபியை ரசித்துக்கொண்டே வீட்டை சுற்றிப் பார்த்தாள்.மேலே ஏசி மாட்டப் பட்டிருந்தது.பெரிய எல்.ஈ.டி டிவி வரவேற்பு அறையில் காட்சியளித்தது.ஆச்சியின் இடுப்பில் விலை உயர்ந்த செல் போன் இருந்தது.இவளின் பார்வையை பார்த்த மீனா ஆச்சி அவரே விளக்கம் அளித்தார். “என் மகன் அமெரிக்காவில் குடும்பத்துடன் முப்பது வருஷமா இருக்கான்.அதுதான் அம்மா வசதியா இருக்கணும்னு எல்லா ஏற்பாடும் செஞ்சு கொடுத்திருக்கான்.நான் ஏசி ரொம்ப போட மாட்டேன்,ஆத்தா.திறந்த வாசல் இருக்கு.தின்னையில் உட்கார்ந்தா குளு குளுன்னு காத்து வீசுது.அந்த காத்து பக்கத்துல வருமா இந்த ஏசி காத்து.டிவில நாடகம் மட்டும் எப்பயாச்சும் பார்ப்பேன்.இப்ப வர நாடகம் எல்லாம் மனசுல பதியாறப்ப இல்ல.எனக்கு சிவாஜி படம்னா ரொம்ப பிடிக்கும்.எப்பயாச்சும் போட்டா பார்ப்பேன்,அம்புட்டுத்தான்.செல் போன் இருக்கு.லேசா காது கேட்காது எனக்கு.அதனால பேச சிரமமா இருக்குனு, என் மகன் வேலைக்கார பொண்ணு வரும் போது பேசி அதுகிட்ட ஏதாச்சும் தாக்கல் இருந்தா சொல்லுவான்.ஆனா இந்த டச் போன் வந்துட்டு பேரப்பிள்ளைகளை எப்பயாச்சும் போன்ல காட்டுவான்.நேர்ல பாக்காட்டியும் போன்லயாவது பாக்க முடியுதே.பிள்ளைகளுக்கு நான் பேசறது விளங்கறது இல்ல.அங்கேயே பொறந்து வளந்துடுச்சுங்க இல்ல? ” என்றார் மீனா ஆச்சி .
அங்கைக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.பொதுவாக சிரித்து வைத்தாள்.காபி ரொம்ப நல்லா இருக்கு என்று செய்கை மூலம் கூறினாள் அங்கை.”நல்லா இருந்துச்சா ஆத்தா, இன்னும் ஒரு லோட்டா தரவா?”என்றார் ஆசையாக.போதும் என்று கூறினாள் செய்கை மூலமாவே அங்கை.”வீடு கண்டு பிடிக்க கஷ்டமா இருந்துச்சா ஆத்தா?”என்றார்.வீடு அடையாளம் தெரியனும்னு தான் தினைக்கும் மாடத்துல விளக்கு வைப்பேன்.என் மகன் கூட சிரிப்பான்.'விலங்கில்லா காடுன்னு தெரிஞ்சே வேட்டைக்குப் போனானாம் கூறில்லா வேந்தன்,அது மாதிரி வராத விருந்தாளிக்கு வீட்டுக்கு வழி சொல்ல விளக்கு வைக்கிற நீ' அப்படின்னு.இந்த கிழவியை பார்க்க யாராச்சும் வந்தா வழி தெரியாம வீட்டுக்கு வராம போய்ட கூடாதுல.அதுக்கு தான் தினைக்கும் ஆறு மணிக்கு விளக்கு வச்சிடுவேன்” என்றார்.
“விசாலமான அந்த வீட்டில் சொகுசாக வாழ்வதற்கான எல்லா வசதிகளும் இருந்தன.ஆனால் அங்கே வீற்றிருந்தது என்னவோ ஒரு வயதான பெண்மணியின் தனிமையும் ஏக்கமும் தான்.குழந்தைகள் பேசுவதற்கு முன்பே அவர்களின் மொழி அம்மாகளுக்கு புரியும்.அவர்களின் சிரிப்பிற்கும்,அழுகைக்கும் அர்த்தம் தெரியும்.சொல்லாமலே அவர்களின் பசியும் தூக்கமும் புரியும்.பிள்ளைகள் மெளனமாக இருப்பினும் அவர்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் சக்தி அம்மாக்களிடம் உண்டு.முதுமையில் காது கேட்காவிட்டால் என்ன?இந்த தாயின் முகத்தைப்பார்த்து சிரித்தால் போதுமே?அவருடைய தனிமை தூரம் சென்றுவிடாதா?நம் முகம் பார்த்து வளர்த்த அன்னையின் முகம் பார்த்து அவர் மனதை அறிய முயற்சி செய்யலாமே?மகன்களும் தாயாக மாறுவது வரமல்லவா?”என்றே தோன்றியது அங்கைக்கு.
”சரி,நேரமாச்சு ,நான் கிளம்புறேன் ஆச்சி “என்று கிளம்பினாள் அங்கை.”கல்யாணத்திற்கு அழைக்க வந்துட்டு முறைக்கு காசுகொடுக்காம பேசிக்கிட்டே இருக்கேன் பாரு,இரு வரேன் என்று கூறி உள்ளே சென்றார். பிறகு கொட்டானில் கூப்பிடுவதற்கு என்று பதினோரு ரூபாய் வைத்தார்.வாசல் வரை வந்தவர், “பார்த்து பத்திரமா போய்ட்டு வா ஆத்தா.கொஞ்சம் வெள்ளன வந்திருக்கலாம் இல்ல?பாரு நல்லா இருட்டிடுச்சு,ஆத்தா நீ அந்த கோடி வீட்டு நாகம்மை மகத்தானே?” என்றார் மீண்டும். அங்கை மெல்லிய புன்னகையையுடன் அவரிடம் கை அசைத்து விடைபெற்று கிளம்பி விட்டாள்.
மாடத்து விளக்கு பிரகாசமாக மின்னியது மீண்டும் வரும் விருந்தாளியை எதிர்பார்த்து.
#291
Current Rank
61,300
Points
Reader Points 1,300
Editor Points : 60,000
26 readers have supported this story
Ratings & Reviews 5 (26 Ratings)
ANNAMALAI
உண்மை தான்!! நல்ல பதிவு. செட்டிநாட்டு தமிழ் வழக்காடு நன்றாக இருந்தது. 970 கதைகளை பதிவிடபட்டுள்ளன. பிற கதைகளையும் படித்து மதிப்பீடு கொடுங்கள்!! வாழ்த்துக்கள்.
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
arutchelvi
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points