நிமலம்

KO
கற்பனை
5 out of 5 (24 Ratings)
Share this story

நிமலம்


"ஓடுரா திருட்டு பய மவனே, வேல வேணுமா வேல, ஒங்கப்பன் பண்ண வேலைக்கு ஒண்ணயும் ஒங்காத்தாலயும் உருச்சி உப்புக்கண்டம் போட்டதாண்ட என் மனுசு ஆறும். உன்ன இனிமே இந்த ஓட்டல் பக்கம் பாத்தேன்..", கோனார் கல்லா விற்கு அருகிலிருந்த விறகுக்கட்டிலிருந்து ஒரு தடித்த விறகை உருவி சுடலையை நோக்கி வீசினார். சுடலை லாவகமாக மான்குட்டி போல் துள்ளி குதித்து தப்பித்து ஓட்டமெடுத்தான். இதேல்லாம் சுடலைக்கு பழக்கபட்டதே. பெரும்பாலான அவன் காலை பொழுதுகள் வசவுகளாகவே விடிந்தது.
சுடலை, கங்கம்மா பெற்றேடுத்த காளை கன்று. தன் அப்பா முத்துகருப்பு ஊரைவிட்டோடி நான்காண்டுகள் ஆகியிருந்தும் அம்மா எப்படி இப்போது கர்பம் தரித்துள்ளாள் என்றெல்லாம் கேள்வி கேட்க தெரியாத வயது அவனுக்கு.
பஜார் வீதியை கடந்து சங்குக்கடைகளை தாண்டி கடற்கரையை வந்தடைந்த பிறகுதான் ஓட்டத்தை நிறுத்தினான் சுடலை. கடற்கரையில் ஆங்காங்கே தர்ப்பணம் செய்துகொண்டிருப்பவர்கள், பலூன் வியாபாரிகள், ஐஸ்கிரீம் வண்டிக்காரர்கள் என மனித கூட்டங்கள் நிறைத்திருந்தது. எதிர்புறத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கூடத்து குழந்தைகள் புதுசீருடையில் புத்தக நோட்டுகளை சுமந்து கொண்டு கும்பலாக சென்று கொண்டிருந்தார்கள். மற்ற குழந்தைகளை போல் படிக்கமுடியவில்லையே என்று அவனுக்கோ கங்கம்மாவிற்கோ கவலையில்லை. இன்றைய நாளில் ஒரு வேளையாவது கஞ்சி குடித்துவிடவேண்டும் என்பதே அவர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பாக இருந்தது.
வழக்கம்போல் டவுசரின் இரு பாக்கெட்டிலும் கடல் மண்ணை நிரப்பி தன் குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் நடக்க நடக்க ஓட்டை பாக்கெட்டிலிருந்து மணல்கடிகாரம்போல் மண் சரிந்துகொன்டே வந்தது. மொத்த மணல்களும் சரிந்து பாக்கெட்டுகள் காலியாவதற்கும் அவன் குடிசை வந்து சேர்வதற்கும் சரியாகயிருந்தது.
பத்தடிக்கு முன்னமே கருவாட்டு குழம்பு வாடையை மோப்பம்பிடித்ததால் ராஜாகண்ணு வந்திருப்பதை யூகித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடி கதவிற்கு பதிலாக தொங்கவிடப்பட்ட கோணிச்சாக்கை விலக்கி குடிசைக்குள் சென்றான்.
அவன் எதிர்பார்த்தது போல் ராஜாகண்ணு மேல்ச்சட்டையில்லாமல் அழுக்கு லுங்கியுடன் மூங்கில்பாயில் படுத்தபடி 'ஆனது ஆச்சு கங்கம்மா, ஒனக்குதான சிங்கக்குட்டி மாறி சொடலயிருக்கான்ல' என்று பீடியை இழுத்துக்கொண்டிருந்தான்.
கங்கம்மா கண்கள் கலங்க முந்தானையால் மூக்கை சீந்தி 'இதெல்லாம் நா வாங்கி வந்த எழவு வரம்' என்று புலம்பிக்கொன்டே சுடு சோற்றை அவித்துக்கொண்டிருந்தால். அருகில் அலுமினிய குண்டாவில் கருவாட்டு குழம்பு தயாராகயிருந்தது. பெரும்பாலும் கேப்பைக்கஞ்சியும் கம்மங்கூழும் குடிக்கும் சுடலைக்கு தேங்காய் சில்லுகள் மிதக்கும் கருவாட்டு குழம்பு சொர்கமே.
சுடலையை பார்த்ததும் அவசர அவசரமாக கண்களை துடைத்துவிட்டு 'காலையிலேயே எங்கட ஊர் சுத்த போன, கை கால் கழுவிட்டு வா சாப்பாடு போடறேன்' கங்கம்மா சுடலைக்கும் ராஜாக்கண்ணுக்கும் தட்டில் சோறு பரிமாறினாள்.
ராஜாக்கண்ணு, சுடலையின் ஓடிப்போன அப்பா முத்துகருப்பனின் பழைய கூட்டாளி. நாடாறுமாதம் ஜெயிலாருமாதமென தன் வாழக்கையை ஓட்டுபவன். முத்துகருப்பு போன பிறகு கங்கம்மாளைக் காண ஐந்தாறு மாதத்திற்கு ஒருமுறை வருவான். ஓரிரு இரவுகள் தங்குவான், பின் செலவிற்கு கொஞ்சம் பணம் குடுத்துவிட்டு காணாமல் போவான். இம்முறை என்னவோ ஏழு மாதங்கள் கழித்தே வந்திருக்கிறான்.
'இங்க பாரு சொடல, எனக்கோ வயசாகிடுச்சு உங்கம்மாவும் முழுகாமயிருக்க, இனி நீதான் இந்த வீட்ட பாத்துக்கணும். அதவிட்டுட்டு இப்புடி ஊரசுத்திக்கிட்டு இருந்தா ஆகுமா?' ராஜாகண்ணு மெதுவாக ஆரம்பித்தான்.
'நா என்ன பண்ண, எங்கப்பம்பண்ண திருட்டுக்கு இந்த ஊர்ல ஒருத்தனும் எனக்கு வேல குடுக்கமாற்றானுக. காலைல கூட அந்த கோனார் ஓட்டல் காரர்கிட்ட வேலை கேட்டுபோனேன், அந்தாளு என்ன வெரகால அடுச்சு வெரட்றாரு', சுடலை விரலிடுக்கில் ஒட்டியிருந்த குழம்பை நக்கிக்கொன்டே கூறினான்.
அந்தாளுகிட்ட ஏன்டா போன, அவன் உங்கப்பன் பேர கேட்டாலே அடிச்சு வெரட்டுவான்
சுடலை மெளனமாக ராஜாக்கண்ணை கண்டு முழித்தான்.
ராஜாக்கண்ணு தொடர்தான், ' உங்கப்பன் ஓடிப்போன அன்னக்கி கடைசியா அந்தாளு ஒட்டலதான் கைவச்சான். ராத்திரியோட ராத்திரிய ஓட்டல் சமயக்கட்டு ஓட்ட பிரிச்சு உள்ள எறங்கி கல்லாவுல சப்ளயர்களுக்கு குடுக்க வச்சிருந்த மொத்த பணத்தையும் அடுச்சிட்டான். அதோட விட்டானா, கோனாரு பாட்டன் காலத்துலருந்து பாரம்பரையா வச்சிருந்த வெள்ளி காமாச்சி விளக்கையும் சேத்து அடுச்சுட்டு போய்ட்டான். அதுக்கப்பறம் ஓட்டல் பெருசா ஓடல, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அவன் பொஞ்சாதியும் சீக்கு வந்து செத்துப்போச்சு. இதுக்கெல்லாம் உங்கப்பன் அந்த காமாச்சி விளக்க திருடிட்டு போனதுதான் காரணம்னு நெனச்சுக்கிட்டு இருக்கான் அந்தாளு.
'எங்கப்பன் ஊர் பூரா திருடி வச்சிருக்கான், நான் என்னதான் பண்ணட்டும்' சுடலை சலித்துக்கொண்டான்.
ராஜாக்கண்ணு இதற்காகவே காத்திருந்தது போல் 'அப்டி கேளு, உங்கப்பன் பண்ண தப்புக்கு இந்த ஊர் உன்ன அடிக்கிது, பதிலுக்கு இந்த ஊற நீ ஆடி'
சுடலை புருவங்களை சுருக்கிக்கொண்டு 'புரியல' என்றான்.
'சொடல, நா உங்கப்பன் கூட பத்து வருஷத்துக்கு மேல கூட்டாளியா இருந்துருக்கேன், அவன மாதிரி ஒரு வித்தைகாரண நா பாத்ததே இல்லயா.என் கல்யாணத்துக்கு பத்து பவுனு தங்க சங்கிலி அடிச்சுட்டு வந்தான்யா. அவன் சங்கிலி அடிச்சா, அடிச்ச அந்த கழுத்துக்கே தெரியாது அவ்ளோ நேக்கா அடிப்பான். அவன் புள்ள நீ, அவனுக்கு இருக்குறதுல பாதி கூட இருக்காதா ஒனக்கு', ராஜாக்கண்ணு தனக்கு ஒரு குட்டி கூட்டாளியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தான்.
கங்கம்மா இடைமறித்து 'இந்தா பாரு ராசு இந்த திருட்டு மயிரெல்லாம் உன்னோட வச்சுக்க என்பிள்ள மேல திணிக்காத. அந்த திருட்டு தொழிலு அவனப்பனோடயே போகட்டும். உன்னால எனக்கு கஞ்சி ஊத்த முடியாட்டி என் புள்ள எனக்கு ஊத்தும். இல்ல பட்டினியா கெடந்து சாவுறேன். இந்த திருட்டு மட்டும் எம்பிள்ளைக்கு வேணாம்' என்று சொல்லி சோற்றுக்கரண்டியை ஆங்காரமாய் தூக்கி தரையில் எறிந்தாள்.
ராஜாக்கண்ணு உட்கார்த்தவாரே தட்டில் கைகளை கழுவினான். எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு பீடியை பத்தவைத்தவாறு சுடலையை பார்த்து 'நா சொன்னத நல்ல யோசிச்சுக்க சொடல' என்று கூறிவிட்டு கங்கம்மாவின் பதிலுக்கு காத்திராமல் புறப்பட்டான்.
சுடலைக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் கங்கம்மாவிற்கு நன்றாக புரிந்திருந்தது, ராஜாக்கண்ணு இனிமேல் வரப்போவதில்லை என்று.
ராஜாக்கண்ணு இம்முறை பணமேதும் தரவில்லை. நாட்கள் மெல்ல நகர்ந்தன, கங்கம்மாளிடம் கையிருப்பாக இருந்த கொஞ்ச பணமும் காலியாகிவிட்டிருந்தது. சுடலை பசியில் புழுவாக நெளிந்து சந்தை வீதிகளில் சுற்றித்திரிந்தான். கடைக்காரர்கள் கண்களுக்கெல்லாம் வாய்முளைத்து தன்னை 'திருட்டு பய திருட்டு பய' என்று சொல்வது போல் இருந்தது சுடலைக்கு. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் கடற்கரை நோக்கி ஓடினான்.
வெயில் ஏறிக்கொண்டிருந்த நேரமது. ஒரு பழுப்பு நிற கார் தன்னை கடந்து கடற்கரை சாலையில் நின்றது. வயதான தம்பதிகள் இருவர்

காரிலிருந்து இறங்கி கடலை நோக்கி நடந்தார்கள். இருவர் முகத்திலும் ஆழ்ந்த சோகம் அப்பிக்கொண்டிருந்தது. ஏனோ சுடலையின் பார்வை அந்த அம்மாளின் கழுத்திலிருந்த கனத்த சங்கிலியின் மேல் பட்டது. ராஜாகண்ணு சொன்ன வார்த்தைகள் சுடலையின் காதுகளில் ஒலிக்கத்துடங்கியது.
வெற்று வயிறு, வேறன்னசெய்யும். சுடலை அவர்களை பின்தொடர்ந்தான்.
அவர்கள் வருவதற்கு முன்னதாகவே ஐயர் தர்பணத்திற்கு தேவையான பொருட்களை தயார் செய்துவைத்திருந்தார். பூஜை ஆரம்பமானது.
பத்தடிதூரத்தில் கைவிடப்பட்ட ஒரு படகின் மேல் அமர்ந்து அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் சுடலை. ராஜாக்கண்ணுவின் குரல் சுடலையின் அடிவயிற்றிலிருந்து பசியாக கேட்டுக்கொன்டே இருந்தது.
கிட்டத்தட்ட காரியம் முடித்து பெரியவர் பிண்டங்களுடன் எழும் அந்த தருணத்தில் அந்த அம்மாளின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது. அதிர்ந்த அந்த பெரியவர் திரும்பி பார்க்கையில், கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு ஒருவன் ஓடிக்கொண்டிருந்தான்.
சுதாரித்து கொண்ட சுடலை திருடனை துரத்த ஆரம்பித்தான். அந்த திருடன் ராஜகன்னாக இருக்கலாம் அல்லது அவன் கூட்டாளிகளில் ஒருவனாக இருக்கலாம், அவ்வளவு ஏன் அது ஓடிப்போன சுடலையின் அப்பா முத்துகருப்பாக கூட இருக்கலாம். ஆனால் அதை பற்றியெல்லாம் சுடலை கவலைப்பட்டவனாக தெரியவில்லை. அவன் வெறிகொண்டவன் போல் ஓடி திருடனை பின்பக்கமிருந்து தள்ளினான். கீழே விழுந்த திருடனின் பிடியிலிருந்து சங்கிலி தவறியது, தப்பிக்கும் முனைப்பில் அதை விட்டுவிட்டு சனக்கூட்டத்திற்குள் ஓடி மறைந்தான். சுடலை, கடல் மணலில் புதைந்த சங்கிலியை எடுத்து வந்து பெரியவரிடம் நீட்டினான்.
அதிர்ச்சியில் இருந்த பெரியவர், கையில் பிண்டங்களுடன் சிலையாக நின்றுருக்க அந்த அம்மாள் சங்கிலியை சுடலையிடமிருந்து பெற்றுக்கொண்டார். சற்று தெளிந்த பெரியவர், மனைவியிடமிருந்த கைப்பையை வாங்கி உள்ளே தொலாவியபடி 'ரொம்ப நன்றி தம்பி, இது எங்க தாத்தா காலத்துலருந்து பரம்பரையா வச்சுருக்க சங்கிலி, நல்ல வேலையா நீ அத மீட்டுக்குடுத்துட்ட, ஒனக்கு என்ன வேணும் பா' என்று கேட்டார்.
சுடலை, வறண்ட தொண்டையின் இல்லாத எச்சிலை விழுங்கிவிட்டு சொன்னான் ‘ ஐயா கேக்குரேனு தப்பா நெனச்சிக்காதீங்க, நானும் எங்கம்மாவும் சாப்டு ரெண்டு நாளவுது, நீங்க கையில வச்சுருக்க சோத்துருண்டையிலிருந்து ரெண்டு உருண்ட குடுக்குறீங்களா, ரொம்ப பசிக்குது'.

Stories you will love

X
Please Wait ...