நஷ்ட ஈடு

kumsha66
பெண்மையக் கதைகள்
5 out of 5 (65 Ratings)
Share this story

“” நஷ்ட ஈடு” செண்பகா

1

இடுப்பில் நிற்காமல் அவிழும் டவுசரை ஒரு கையால் பிடித்தபடி,குடிசை கதவை தள்ளியபடி உள்ளே வந்தான் முத்து. “அட,நம்ப வூடா இது?”

ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தபடி பார்த்தான். லாலி லாலியாய் தொங்கும்

அழுக்கு கைலிகள் இல்லை.சாராய வாடையும் வியர்வையும் கலந்து குமட்ட வைக்கும் நாற்றம் இல்லை.தரை சுத்தமாக சாணியால் மெழுகப் பட்டிருந்தது. பத்தி வாசனையும்,சாம்பிராணி புகையுமாய், மாரியம்மன் கோவில் வாசனை வந்தது.

“ ஆத்தாடி!என்ன இது? நடுவீட்டில் இம்மாம் பெரிய இலை போட்டு,எத்தனை வகை?இட்லி,வடை.பூரி,பொங்கல்,கேசரி,லட்டு,ஜிலேபி,...! கண் விரிய, கை நீட்டியபடி,ஆசையுடன் வந்தவனின் கண்களில்,வேலப்பன் பட்டு விட,அட பெரிய பூ மாலை போடப் பட்டிருந்த ஃபோட்டோவில் இருந்த வேலப்பன் தான்…

.. முகம் வெளிறி, கை நடுங்கியபடி ஆத்தாவின் முதுகின் பின் ஒளிந்தான் முத்து.

பார்த்து கொண்டேயிருந்த பூவாயிக்கு அடி வயிறு கொதித்தது.ஆங்காரமாய் வந்தது. ”பாவி,பாவி, என்ன பாடு படுத்தியிருப்ப? எவ்வளவு கொடுமை பண்ணியிருப்ப?உன் போட்டோவ பாத்தே புள்ள நடுங்குதே? மனுச சென்மமாடா நீ?

ஏண்டா, நடு வூட்டிலே உன் போட்டோக்கு மால போட்டு, தல வாழை இல போட்டதால,உனக்கு படையல் போட்டதா நெனச்சிட்டியா?இல்லடா இல்ல! நீ உசுரோட இருந்தப்ப ஒரு நேரம் எங்கள நிம்மதியா துன்ன வுட்டுரிப்பியா?ஒரு பொழுது நிம்மதியா தூங்கி இருப்போமா? எரியர கொள்ளிக் கட்டைய தூக்கிகிட்டு என்னையும் எம் புள்ளையையும் துரத்தி துரத்தி அடிக்க வந்தப்ப தான கல்லு தடுக்கி கீழ விழுந்து படாத இடத்துல பட்டு பொட்டுன்னு போன?

பயந்து எம் புள்ள அம்மா,அம்மான்னு கதறின சத்தம் என் ஈரகொலய அறுத்த மாரி அந்த மாரியாத்தா கண்ணையும் தொறந்து இருக்கும்.அதான் இந்த விடுதல எனக்கு;;;;

2

நாயே,நாயே, நீ எங்கயும் போயிருக்க மாட்டடா!இங்கன தான் சுத்தி,சுத்தி வருவ !வரணும். உன் கண்ணு முன்னாலே நானும் எம் புள்ளையும் நாலு வகை வச்சு நல்லா துண்ணப் போறோம் பாரு!

யாருமில்லாத வெளியை வெறித்தவளாய்,காற்றில் கையை வீசியபடி,வெறி பிடித்தவள் போல் இலையில் இருந்து எடுத்து தன் வாயிலும் முத்து வாயிலும் திணித்து கொண்டாள்.

வெறி பிடித்தவளைப் போல் பேசும் ஆத்தாவைப் பார்த்து மிரண்டவனாய்,வாயில் போட்டதை விழுங்கவும் தோன்றாமல் தெறித்து பார்த்த முத்துவைக் கண்டு தன்னை அடக்கிக் கொண்டாள் பூவாயி.

ஆனால் ,அடக்க மாட்டாமல், கண்ணீர் பெருக்கெடுத்தது,கழிவிரக்கத்தில், சுவரில் தலையை சாய்த்துக் கொண்டாள்.

இத்தனை நாள், முதுகில் அழுகிய பிணத்தை சுமந்த கணக்காய், இறக்கி வைக்கவும் முடியாமல்,சுமக்கவும் முடியாமல், அய்யோ,அய்யோ...இவள் வாழ்ந்த வாழ்க்கை...சாக்கடை தண்ணீரில் குளித்தது போல் ,உடம்பெல்லாம் புழுவாக நெளிவது போல,தன் உடம்பு முழுவதும்,ஏன் ரத்தத்தில் கூட சாராய நாற்றம் எடுப்பதாய் குமட்டிக் கொண்டு வந்தது பூவாயிக்கு.

வாய் விட்டு புலம்பினாள். ‘”என்ன பொம்பள சென்மம்டா சாமி! குடிகார அப்பனுக்கு மவளா பொறந்ததுக்காக அழுவரதா?ஒரு கட்டத்தில புருஷங்காரனோட மல்லுக்கட்ட முடியாம ஆத்தாக்காரி நாண்டுகிட்டு உசிர விட்டாளே,அதுக்காக அழுவரதா ? ஆத்தக்காரி போன ஒரே மாசத்தில அப்பன் புது பொண்டாட்டியோட வந்தானே அதுக்காக அழுவரதா?வந்த சின்னாத்தா கிட்ட தினம் சூடு வாங்கி ரணப்பட்டாளே, அதுக்காக அழுவரதா?இதுலேருந்து தப்பிக்க கண்ணாலம் தான் ஒரே வழின்னு நம்பிட்டு இருந்தவளுக்கு அப்பங்காரன் பார்த்த மாப்பிள,....மாமனோட சோடி சேர்ந்து குடிச்சிட்டு, முழு போதையோட மணமேடைக்கு வந்த மவராசன்!! பதினஞ்சு வயசு பூ பந்தான இவளுக்கு முப்பது வயசு முரட்டு ஆண்.!!

3

வாக்கப்பட்டு புருசன் வீட்டுக்கு வந்த பிறகு தான் தெரிஞ்சது நிஜமாகவே நரகம்னா என்னன்னு. கருவாட்டு குழம்புல காரம் குறைஞ்சாலும் அடி தான். நடு நிசில குடிச்சிட்டு நிதானம் இல்லாம வீட்டுக்கு வரும் போது இவ தூங்கிட்டு இருந்தாலும் உதை தான். இதுக்கு நடுவில நாலஞ்சு உசுரு இவ விருப்பம் இல்லாமலே இவ கருவறை வரைக்கும் வந்து எவனால வந்திச்சோ அவனாலயே கலைஞ்சும் போயிருக்கு.அதுக்கும் புள்ள பெத்துக்க துப்பு இல்லன்னு இவளுக்கு தான் அடி.

நல்ல காலம்,முத்து இவ வயத்தில வந்தப்ப,...பூவாயி,தன் மடியில் கையில் பாதி ஜிலேபியுடன் நல்ல தூக்கத்தில் இருக்கும் முத்துவை ஆதரவாய் தடவிய படி தனக்குள் சிரித்துக் கொண்டாள்.போதையில் வாய் தகராறு கைகலப்பில் முடிந்து விட போலீஸ் பிடித்து ஆறு மாசம் உள்ளே போட்டது வேலப்பனை. அந்த இடை வெளியில் நல்ல விதமாய் பெற்று எடுத்தாள் பூவாயி.

ஆனால் அதுவும் வினையாய்ப் போனது. பிள்ளை ஜனிச்ச நேரம் தான் தன்னை ஜெயிலுக்கு அனுப்பிச்சுன்னு காரணம் இல்லாத வெறுப்பு,பிள்ளை மேல.எந்த மரத்தடி ஜோசியக் காரன் சொன்னானானோ? அடி ஆத்தி! ஒரு மனுசனுக்கு இப்படி கூட பச்ச புள்ளய கரிச்சு கொட்ட முடியுமா என்ன?புள்ள சிரிச்சா அடி,அழுதா அடி..கண்ல பட்டாலே அடி..அரக்க புருசன் கிட்டே இருந்து புள்ளய காப்பாத்தறதே பெரிய வேலையாப் போச்சு பூவாயிக்கு.

உறக்கமும் இல்லாத விழிப்பும் இல்லாத ஒரு நிலை.எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ தெரியவில்லை கால் மரத்துப் போனது பூவாயிக்கு.மடியில் இருந்த முத்துவை மெதுவாக பாயில் விடப் போனவளின் கையில் அவன் தலையில் இருந்த தழும்பு பட்டது. ஒரு நொடி உடம்பெல்லாம் ஆடி போனது அந்த சம்பவத்தை நினைத்து..

முத்துவை இவள் தன் உயிராக நினைக்கறது ரொம்ப சாதகமா போச்சு வேலப்பனுக்கு. சரியா வேலைக்கும் போகாம மொடாகுடியனா ஆனப் பிறகு பணத் தேவை அதிகமாய் விட்டது. .வீட்டுத் தேவைக்கும் பணம் தருவது இல்லை. இவள் நாலு வீடு வீட்டு வேலை பார்த்துக் கொண்டு வரும் பணத்தையும் புடிங்கிக்கறதுன்னு அராஜகம் தான். பணம் இல்லன்னு இவ சொல்றப்ப

4

எல்லாம் கொழந்தையை கொன்னுடுவேன்,மிதிச்சிடுவேன்னு இவளை பயமுறுத்தியே பணம் பிடுங்கிக் கொண்டு போய் விடுவான். ஒரு நாள் நிஜமாகவே பணம் இல்லை.எந்த பாச்சாவும் பலிக்காததால் போற போக்கிலே தூளில தூங்கிக்கிட்டிருந்த முத்துவ ஒரு எத்து எத்த ,புள்ள தெறிச்சு விழுந்து மண்டை உடைஞ்சு தரை பூரா ஒரே ரத்தம். அப்படியும் விடலையே அந்த மிருகம்.....குடிக்க பணம் தந்துட்டு புள்ளைய காப்பாத்தப் போடின்னு கதவை மறிச்சு நின்று விட்டான். வேறு வழி இல்லாமல் தாலியைக் கழற்றி அவன் முகத்தில் விட்டு எறிந்தாள் . கொஞ்சமும் கூசாமல் ,ரத்தம் வழிய கிடக்கிற பிள்ளையை தாண்டி தாலிய பொறுக்கி எடுத்திக்கிட்டு சாராய கடைக்கு ஓடின புருசன பாத்தப்ப தான் குடி அரக்கனோட முழு விஸ்வரூபத்தை பார்த்தாள் இவள்.

பிள்ளையை தூக்கிக்கிட்டு தர்ம ஆஸ்பத்ரிக்கு ஓடினாள் பூவாயி,கைல ஒத்தபைசா இல்லாம.அப்ப தான் கனகா அம்மாவோட அறிமுகமும்,உதவியும் கிடைத்தது. பிள்ளையையும் காப்பாத்த முடிஞ்சது.அவங்க வீட்டில வீட்டு வேலை செய்கின்ற வாய்ப்பும் கிடைத்தது.

ஏன்தான் இந்த பாழாப் போன சென்மமோ? ன்னு பூவாயி புலம்பும் போது எல்லாம்,பேச்சு கொடுத்து,.அவளைப் பற்றி யோசிக்க வச்சது கனகா அம்மாதான். தன்னைப் பற்றி யோசிக்க யோசிக்க, கழிவிரக்கத்தில் கதற தான் தோன்றியது பூவாயிக்கு.

“”.இந்த கதி ஏன்? யார் மேல தப்பு?எனக்கு மட்டுமா இந்த நிலம? இல்லையே.?என் ஆயா,சின்னாயா,ஆத்தா,பெரியாத்தா,அக்கா,அண்ணி,தம்பி பொண்டாட்டி, மாமியா கிழவி,பக்கத்து வூட்டு தேவி,அடுத்த தெரு மாலா,அல்லாருக்குமே இதான நிலமை.ஏன் இப்படி? ஒரு பொம்பளைய அழ வச்சா அந்த குடும்பமே விளங்காதுன்னு டி‌வி ல சொல்றாங்களே,அப்டின்னா இத்தன பொம்பளைங்க தினம் தினம் காலம் காலமா கதறி கதறி சாவரோமே, இந்த தேசம் விளங்குமா?.. அரசாங்கம் குடியால வர்ற பணத்தில தான் பாலம் எல்லாம் கட்டுதாமே,ரோடு எல்லாம் போடுதாமே,அதெல்லாம் அப்படியே தண்ணில போட்ட வெல்லமா கரைஞ்சி போயிடாதா என்ன?

5

இப்படியே புலம்பி புலம்பி என்ன செய்யப் போற நீ?கேட்ட கனகாவை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தாள் பூவாயி. அன்று தான் வேலப்பன் இறந்த பின் வேலைக்கு வந்திருக்கிறாள்.வேலையை முடித்து விட்டு வந்தவளின் கையில் ஒரு பேப்பர் கொடுத்து கை நாட்டு வைக்க சொன்னாள் கனகா.

என்னம்மா இது?

விதவை பெண்களுக்கு அரசாங்கம் கொடுக்கிற உதவி பணம். அதுக்கான மனு தான் இது.

அவன் உசுரோட இருக்கிறப்ப என்ன சம்பாதிச்சு எனக்கு குடுத்தான்னு ? விரக்தியா சிரித்தாள் பூவாயி.

அவனோட விதவையா இந்த பணம் எனக்கு வேணாம்மா.

புதிராய்ப் பார்த்தாள் கனகா।

அதிக அழுத்தம் கொடுக்கப் பட்ட பிரஷர் குக்கராய் ,தன்னை மீறி வெடித்தாள் பூவாயி.

“விதவைகள் உதவிப் பணமா? என்னிய விதவ ஆக்கினதே இந்த அரசாங்கம் தானம்மா?

பாக்கப் போனா இந்த அரசாங்கம் என்னை போல ஆளுங்களுக்கு நஷ்ட ஈடு தாம்மா குடுக்கணும்.ஒருவிபத்து நடந்தா தராங்க இல்ல?அந்த மாதிரி? அரசாங்கமே மூலைக்கு மூலை டாஸ்மார்க் கடைய தொறந்து வச்சிட்டு,என் புருஷனப் போல உள்ள ஆளுங்களுக்கு தாராளமா ஊத்திக் குடுத்துட்டு? இத்தன படிச்சவங்க இருக்கற அரசாங்கத்துக்கு ஒரு குடிகாரனால அவன் குடும்பம் எப்படி சீரழியும்னு தெரியாதா?அப்படியும் ஏம்மா,தெருவுக்குத் தெரு கள்ளுக் கடையை திறக்கணும்?என் புருஷன்,அப்பன் மாதிரி உள்ள ஆளுங்க சாவாங்க,குடும்பம் நடுத் தெருவுக்கு வரும்னு தெரிஞ்சே இந்த அரசாங்கம் கள்ளுக் கடையை நடத்தரது திட்டம் போட்டு நடத்துற விபத்து தானம்மா?அப்ப எங்களுக்கு நஷ்ட ஈடு தானம்மா தரணும்?

உள்ளே வர்ரவனுக்கு ஊத்தி,ஊத்தி குடுத்திட்டு திரும்பி போறப்ப,குடிச்சிட்டு வண்டி ஓட்ட கூடாது ஊதி காட்டு குடிச்சிருக்கியான்னு பாக்கறது நியாமாமா? ஏம்மா குடிக்க உள்ள வர்ரவன் போறப்ப,வண்டிய விட்டுட்டு பறந்தாம்மா போவான்? அபத்தமா இல்ல?

அன்னிக்கு என் ஆயா.அப்புறம் என் ஆத்தா.இன்னிக்கு நானு..இப்டி காலம் காலமா எங்க பொம்பளைங்க இந்த குடிகார ஆம்பளைங்களால சீரயிஞ்சு போறோமே..விடிவு காலமே இல்லையா?

இத்தனை டாக்டருங்க இருக்கற ஊருல,இந்த குடிக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்க முடியாதாம்மா? போலியோ சொட்டு மருந்து கொடுத்தா ஆயுசு முச்சூடும் போலியோ வராதாமே?அந்த மாறி எல்லா மனுஷனுக்கும் குழந்தையா இருக்கும் போதே ஒரு மருந்து குடுத்து ஆயுசுக்கும் குடிக்கவே தோணாம வச்சிட்டா எம்முட்டு நல்லா இருக்கும்?

அம்மா, நம்ப அரசாங்கத்துக்கு வருமானமே கள்ளு கடையால தான் வருதாமே?அது இல்லாம சமாளிக்க முடியாதாமே?ஏம்மா ,ஒரு வூட்டில வருமானம் பத்தாட்டி ஒரு தாயி பெத்த பொண்ண,புள்ளய தப்பான

6

தொழிலுக்கு விட்டிருவாளாம்மா?இந்த அரசாங்கம் நமக்கு தாய் மாதிரி தானம்மா?

ஏம்மா,எம் புருஷனப் போல பலர போதைக்கு அடிமை ஆக்கிட்டு எங்க உழைப்பையும் திருடி டாஸ்மார்க்ல போட்டுட்டு எங்க வாழ்க்கையை நாசமாக்கின இந்த அரசாங்கம் எங்களுக்கு நஷ்ட ஈடு தாம்மா தரணும்.

அத விட்டுட்டு என்னமோ பிச்சை போடற மாதிரி விதவை உதவி தொகையாமே? குடிகார புருஷன் செத்தா,கள்ளுக் கடைய திறந்த அரசாங்கம் தாம்மா பொறுப்பு?

சாமி வந்தவளைப் போல் ஆவேசமாகப் பேசிவிட்டு குமுறி அழுதவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் கனகா.தினமும் கணவனிடம் அடியும் உதையும் வாங்கிக் கொண்டு,கண்ணீருடன் வந்து இருக்கும் இடம் தெரியாமல் வேலை செய்து போனவளா இவள்?வருடக் கணக்காய் உள்ளே பொங்கியது இப்போது வெடித்து இருக்கிறது.

மறுநாளே எல்லா செய்திகளிலும் தலைப்பு செய்தியானாள் பூவாயி,.அவள் ஆவேசமாகப் பேசியதை கனகாவின் பெண் வீடியோ எடுத்து YouTube இல் அப்லோட் செய்ததன் விளைவு.

சிலர் அவளின் வாதம் அபத்தம் என்றும்,பலர் அவள் கேட்பதில் என்ன தவறு என்றும் கூற விவாதம் சூடு பிடித்தது .மாவட்ட கலெக்டரே பூவாயியை நேரில் சந்தித்து உதவி செய்ய தயாராய் இருப்பதாக அறிவித்தார்..

இதை எல்லாம் சற்றும் எதிர்பார்க்காத பூவாயி,கூச்சத்தில் குறுகிப் போனாள்.எல்லோரும் தன்னையே பார்ப்பதாய் தோன்ற கனகா வீட்டிற்கு வந்து புலம்பினாள்’”.ஏம்மா என் வேதன உங்களுக்கு வேடிக்கையாப் போச்சுல்லம்மா? உங்கள நம்பி பாரம் இறக்கினா ஊரறிய செஞ்சிட்டீங்களே? இது நியாயமா?

கனகாவின் கண்கள் கலங்கின.

பூவாயி,உன் வேதனை புரியாமலா? குடியால உன் வாழ்க்கை போச்சு. ஒரு குடிகாரனால என் வாழ்க்கை போச்சு.என் புருஷன் எப்படி செத்தார் தெரியுமா? வேலைக்குப் போயிட்டு திரும்பி வரப்ப ஒரு குடிகாரன் என் வீட்டு காரர் மேல வண்டிய ஏத்தி ....பச்..எங்கள அனாதை ஆக்கிட்டான்.அன்னிலேர்ந்து நானும் என் பொண்ணும் குடிக்கு எதிரா போராடறோம்.என்ன தான் நாங்க போராடினாலும் பாதிக்கப் பட்ட உன்ன மாதிரி பொண்ணுங்க களத்தில இறங்கினா தான் விடிவு பொறக்கும்.

7

நீ இதை யோசிச்சு பார்த்து இருக்கியா பூவாயி? குடியால அப்பன்காரன் கிட்ட நாசமாற தன் தாய் வாழ்க்கையை பாத்தும் எந்த பையனுக்கு குடிக்க மனசு வரும்?அப்படியும் குடிக்கு அடிமையாகறங்கன்னா என்ன காரணம் ?

..இங்க உள்ள உங்க பிள்ளைங்களுக்கு பிரச்சனை என்ன தெரியுமா?அப்பங்காரன் பொறுப்பில்லாத குடிகாரன்.அம்மாவோ வாழ்வாதாரத்தை நாள் பூரா தேடி அலையரா?இதுல பசங்கள பொறுப்பா பாத்துக்க,அன்பா கவனிக்க ஆள் இல்ல.கவனிக்கப்படாத செடி கருகும்.அதை மாதிரி,இந்த பசங்களும் வடிகால் தேடி வெகு எளிதா கிடைக்கிற குடியில விழுறாங்க. இதே சூழல்ல இருந்தா முத்துவும் நாளைக்கு...

முடிக்க விடவில்லை பூவாயி. பதறி விட்டாள் அவள்.

தப்பி தவறி கூட உங்க வாயாலஅந்த வார்த்தையை சொல்லாதீங்கம்மா?பதறி விட்டாள். இல்லம்மா இல்ல...என் பிள்ளை ஒரு நாளும் குடிக்க கூடாது.நான் பட்ட கஷ்டம் என் மருமவளோ,பேத்தியோ படக் கூடாது..என்ன செய்யணும்? சொல்லுங்க.....

கனகா எதிரில் மாட்டப் பட்டிருந்த போட்டோவில் இருந்த தன் கணவனைப் பார்த்துக் கொண்டே ,

“வாழ்வில் சாதிக்க வேண்டும் .சமுதாயத்திற்கு நிறைய செய்ய வேண்டும் என்று கனவு கண்டவர் என் புருஷன்.ஆனால்,,ஒரு குடிகாரனால் துடிதுடித்து அவர் செத்தார். அவர் செத்து கிடைச்ச பணம் முழுக்க நான் குடிக்கு எதிரா தான் செலவு பண்ணப் போறேன்அப்ப தான் அவர் ஆத்மாசாந்தி அடையும்..என் ஒரே பொண்ணும் டாக்டருக்கு படிச்சிட்டு ,குடிக்கு எதிரான மருத்துவத்தில சிறப்பு படிப்பு படிச்சிருக்கா.என்னை மாதிரி குடியால பாதிக்கப் பட்ட நிறைய பேரு சேர்ந்து ஒரு இயக்கம் ஆரம்பிச்சு இருக்கோம்..

அது மூலமா குடி நோயாளிகள் குடியிலிருந்து மீண்டு வரவும்,குடிகார கணவன்,அப்பன்,பிள்ளை இவர்களிடம் இருந்து பெண்கள்,குழந்தைகளை காப்பாற்றவும் நிறைய திட்டம் வச்சிருக்கோம் .

குடிகார அப்பானால புறக்கணிக்கப் படற பசங்க வழி மாறி போகாம இருக்க,அந்த மாதிரி பசங்களை ஒவ்வொரு ஏரியாவிலும் கண்டுபிடிச்சு,அவங்க திறனை மேம்படுத்தி,அவங்க வாழ்க்கையை சரி பண்ற பொறுப்பை எங்க இளைய குழு பார்த்துக் கொள்ளும்.

ஆனா,இங்க உள்ள பெண்கள் கிட்ட தான் நிறைய மாற்றம் வேணும்.தனக்கு அநியாயம் செய்யற புருஷன தட்டிக் கேக்கணும். அவங்களுக்கு உதவ சட்டம்,போலீஸ் இருக்குனு அவங்க புரிஞ்சிக்கணும். மொதல்ல பெண்களுக்குள்ள ஒற்றுமை வேணும். அவங்கள ஒன்றுப் படுத்த,அவங்களுக்கு புரிய வைக்க உன்னை மாதிரி களப் பணியாளர்கள் நிறைய பேரு தேவை.. நம்ப முத்து படிப்புக்கு கலக்டர் அம்மா உதவி பண்ணுவாங்க,உன் பொழப்புக்கு நான் வழி பண்றேன்.குடிக்கு எதிரா எங்களோட சேர்ந்து நீயும் போராடணும் .நீ களத்துல இறங்கினா தான் உன்ன பாத்து மத்த பொண்ணுங்க

8

போராடுவாங்க,என்ன செய்வீயா?

பாழாப் போன பொம்பள ஜென்மம்...என்னால என்ன செய்ய முடியும்மா?

என்னது?

பாழாப்போன பொம்பள ஜென்மமா?

நாம சக்தி பூவாயி சக்தி..நாம நினைச்சா எல்லாம் மாறும்..

கனகாவின் குரல் அந்த ஆத்தாளின் ,மாரியாத்தாளின் குரலாய் தோன்ற,,குடியால் தூக்கிட்டு செத்த தன் தாயின் முகம் கண் முன் தோன்ற

வெறி பிறந்தது பூவாயிக்குள்..

.நான் ஒரு குடிகாரனுக்கு மகளாய் தோற்று இருக்கலாம்...பெண்டாட்டியாய் தோற்று இருக்கலாம்...ஆனால் நிச்சயம் ஒரு தாயாய் தோற்க மாட்டேன்..என் வம்ஸத்தில குடியால கஷ்டப் பட்ட கடைசிப் பொம்பளை நானா தான் இருக்கணும்.என் மருமவளோ, பேத்தியோ நிச்சயம் கஷ்டப் பட விட மாட்டேன்.

இனி நஷ்டப் பட என்ன இருக்கு?கனகா அம்மா சொல்ற மாரி செஞ்சு தான் பாக்கலாமே?ஏன் கனகா அம்மாவிற்கு வேதனை இல்லை?தன் கஷ்டம் மறந்து மத்தவங்களுக்காக அவங்க யோசிக்கறப்போ,நான் என்னைப் போன்ற பூவாயி, ராமாயிகளுக்காக ஏன் போராட கூடாது?

என்ன பூவாயி, பதிலே இல்லை?

அம்மா,என்னை மாறி இருக்கற ராமாயி,பூவாயிக்களின் கதை நிச்சயம் மாற வேண்டும்,மாறியே தீர வேண்டும்.அதுக்கு நீங்க என்ன செய்ய சொன்னாலும் செய்யறேன்மா என்று தீர்மானமாய் சொன்னாள்.

என்னமோ மனம் திடீர் என்று லேசானது போல் தோன்றியது. பயம் விலகி நம்பிக்கை தோன்ற, முத்துவை இறுக அணைத்துக் கொண்டு,தன் வாழ் நாளில், முதன் முறையாய் மனம் விட்டு, பூவாய் சிரித்தாள் பூவாயி!

சாந்தி குமார்

என்னது பாழா போன சென்மமா? நீ சக்தி பூவாயி சக்தி.நீ கொஞ்சம் யோசி.எல்லாரையும் உன்னாலே மாத்த முடியாது.ஆனா உன் பிள்ளைக்காக நீ கொஞ்சம் மாறு.இதே சூழல்ல இருந்தா உன் பிள்ளைக்கும் நல்ல எதிர் காலம் இருக்காது.நானும் இந்த குடியை எதிர்த்து தான் ரொம்ப நாளா போராடிக்கிட்டு இருக்கேன்.இதுக்கின்னே ஒரு ஆஸ்பத்திரி கட்டியிருக்கேன்.குடிய மறக்க வைக்க,குடி பழக்கதிலேர்ந்து வெளில வர்ற உதவி செய்யன்னு.புனர் வாழ்வு மையம்னு பேரு.நீ அங்க வந்திடு.எனக்கு உதவிய இரு.உன் பையன நான் படிக்க வைக்கிறேன்.போராடி பார்திடலாம் வா.

பூவாயி தனக்குள் சொல்லி கொண்டாள். நான் மகளாய் தோற்று இருக்கலாம்.மனைவியாய் தோற்று இருக்கலாம், ஆனால் தாயாய் தோற்று போக மாட்டேன்.என் மருமகள்,பேத்தி, என் வம்ஸத்து பெண்கள் குடியால் கழ்ட்டபட விட மாட்டேன்.உறுதியாய் சொல்லி கொண்டு டாக்டருடன் செல்ல தீர்மானித்து ,மகனை கட்டி அணைத்துக் கொண்டு பூவாய் சிரித்தாள் பூவாயி.

செண்பகா

Stories you will love

X
Please Wait ...