மண்ணுக்குள்ளே சில மூடர்

காதல்
4.9 out of 5 (41 Ratings)
Share this story

வாட்சப்பில் மூழ்கியிருந்த இனியா தற்செயலாக நிமிர்ந்து பார்த்ததும் கொஞ்சம் திடுக்கிட்டாள். திடீரென்று அவ்வளவு அருகில் வந்து நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

“அக்கா, நான்... கொஞ்சம் இங்க உக்காந்துக்கவா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள். தலையாட்டியபடி இடம் விட்டாள் இனியா.

ஒடிசலான உருவம். திருத்தமான முகம். அதில் மிரட்சியான விழிகள். எண்ணெய் தடவி அழுத்தி வாரிய தலை. கிராமத்துப் பெண் என முதல் பார்வையிலேயே தெரிந்து கொள்ளும்படி இருந்தாள் அவள். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் தொடரி சன்னல் வழியே வெளியில் ஓடிய காட்சிகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

இனியா, இருவருக்கும் இடையில் இருந்த தன் கைப்பையை மெல்ல எடுத்து இந்தப் பக்கமாக வைத்துக் கொண்டாள். அந்த உரசலால் திரும்பிப் பார்த்த அந்தப் பெண் மென்மையாகப் புன்னகைத்தாள். பதிலுக்கு இனியாவும் ஓர் அசட்டுப் புன்னகையை உதிர்த்தாள்.

“நீங்க எங்க போறீங்க?” என்று கேட்டாள் அந்தப் பெண். இனியாவுக்கு ஏற்கெனவே முளைத்திருந்த பயச் செடியில் மேலும் இரு இலைகள் துளிர்த்தன. ‘முன்ன பின்ன தெரியாத இவகிட்ட நம்மளை பத்தி சொல்றது நல்லதில்ல’ என்று எண்ணியவள், “அது... ஒண்ணும் இல்ல... ஜஸ்ட் இங்க பக்கத்துலதான். ஆமா... நீ எங்க போறே?” என்றாள்.

“மெட்ராஸ்ல இருக்குற எங்க பெரியப்பா வீட்டுக்கு” என்றவள் கொஞ்சம் இடைவெளி விட்டு, “வீட்டிலேருந்து ஓடிப் போறேன்” என்றாள் கேட்காமலே.

இப்பொழுது இனியாவுக்குச் சற்று பயம் நீங்கியது. ’சே! இதுவும் நம்ம கேஸ்தான். இவளுக்குப் போய் பயந்தோமே!’ என்று நினைத்தாள். பக்கத்தில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து நட்புடன் அவளிடம் நீட்டினாள்.

“தேங்க்ஸ்!” என்றபடி வாங்கிய அந்தப் பெண், அவசர அவசரமாகச் சாப்பிட்டாள். ‘பாவம், எவ்வளவு நேரமாகப் பட்டினி கிடக்கிறாளோ!’ என்றெண்ணியவள் தண்ணீர்ப் புட்டியை அவள் பக்கம் நகர்த்தியபடி,

“உம் பேர் என்ன?” என்று கேட்டாள்.

“ஜி.அறிவழகி” என்று வாய் முழுக்க பிஸ்கட்டோடு குழந்தை போல பதில் சொன்னாள் அவள்.

“ஏன், வீட்ட விட்டு வந்துட்டே? என்ன பிராப்ளம்?”

“எனக்கு திடீர்னு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்கக்கா. அதான்.”

“ஓ!” என்றவள், “ஏன் நீ வேற யாரையாவது லவ் பண்றியா?” என்று கேட்டாள்.

“க்கும்! அது வேறயா?” என்று அவள் சலித்துக் கொண்டதைப் பார்த்து, இனியாவுக்கு என்னவோ போல் ஆயிற்று.

“ஏன், லவ் பண்ணா தப்பா?” என்று விறைப்பாகக் கேட்டாள்.

“தப்புன்னு இல்லக்கா! அது அதுக்குன்னு ஒரு வயசு இருக்குல்ல? அந்தக் காலத்துல பாரதியாரு, பெரியாரு எல்லாம் பொண்ணுங்கள படிக்க வைக்கணும்னு எவ்வளவோ போராடினாங்க. நாம கெடைச்ச படிப்ப விட்டுட்டு காதல் கல்யாணம்னு திரும்பவும் சமையல்கட்டிலேயே போய் உக்காந்துக்கிட்டா, முட்டாள்தனமா இருக்காது?” என்று அவள் கேட்க யாரோ பின்னந்தலையில் அடித்தது போல் இருந்தது இனியாவுக்கு.

“என்னக்கா அப்படிப் பார்க்கறீங்க?”

“ஒண்ணும் இல்ல.”

“நீங்க எந்த ஊரு?”

“திருப்பூர்.”

“நானும் பக்கத்துலதாங்க்கா! கோயம்புத்தூர்ல ஓடப்பாளையம்.”

“ம்.”

“உங்களுக்கு என்னக்கா, சிட்டியில இருக்கறவங்க. உங்க அம்மா அப்பா எல்லாம் படிச்சவங்களா இருப்பாங்க. படிப்போட அருமை அவங்களுக்குத் தெரியும். எங்க வீட்டிலேயும் இருக்குதுங்களே! நான் இப்பதான் டென்த்தே பாஸ் பண்ணேன். அதுக்குள்ள கல்யாணம் பண்ணி வெச்சுடணும்னு பார்க்கறாங்க. ஆனா, எனக்கு மேல படிக்கணும்னு ரொம்ப ஆசைக்கா! அதான் யாருக்கும் தெரியாம மெட்ராஸ்ல இருக்கிற பெரியப்பா வீட்டுக்குப் போறேன். அவருக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சுது, எங்க அம்மாவையும் அப்பாவையும் கிழி கிழின்னு கிழிச்சுடுவாரு” என்று சிரித்தபடி சொன்னாள்.

ஒப்புக்காக இனியாவும் சிரித்து வைத்தாள்.

“ஆமா, நீங்களும் மெட்ராசுக்கா?” என்று அறிவழகி கேட்க, “ஆமா...” என்றவள் தொடர்ந்து பேசும் முன் கைப்பேசி அழைத்தது.

“எக்ஸ்கியூஸ் மீ” என்று சொல்லிவிட்டுக் கொஞ்சம் தள்ளிப் போனாள்.

இனியா திரும்பி வந்தபொழுது அந்தப் பெண் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். எதிர்ப்பக்க இருக்கையில் போய் உட்கார்ந்தாள் இனியா. சற்று முன் குமார் பேசிய வார்த்தைகள் இன்னும் காதுக்குள் கனன்று கொண்டிருந்தன.

“இப்ப என்னதாண்டி சொல்ற?”

“இப்ப கல்யாணம் வேணாங்கறேன்.”

“கொஞ்சமாவது யோசிச்சுதான் பேசறியா?”

“ஆமா குமார்! அந்தப் பொண்ணுகிட்ட பேசுனதுலேயிருந்து என் மனசே மாறிடுச்சு. நம்மள விட ஒரு வயசு சின்னப்பொண்ணு. அவளுக்கு இருக்குற அறிவுல பாதியாவது நமக்கு வேணாம்? கிராமத்துப் பொண்ணு, அம்மா அப்பாவே கல்யாணம் பண்ணி வைக்க வந்தும் படிப்புதான் முக்கியம்னு வீட்ட விட்டுப் போயிக்கிட்டிருக்கா. நாம, இருக்குற படிப்ப விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்க பாக்கறோம். சில்லியா இல்ல?”

“அதுக்கு?”

“முதல்ல படிப்ப முடிப்போம். அட்லீஸ்ட் ஒரு டிகிரி. அதுக்கு அப்புறம் ஒரு வேலை. அப்போ நமக்கே ஒரு கான்பிடென்ஸ் வரும்ல வீட்ல சொல்றதுக்கு? அப்படியே வீட்ல ஒத்துக்கலன்னா அப்ப வேணும்னா நாம இதே மாதிரி கெளம்பிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம். இப்ப வேணா! என்ன சொல்ற?”

“... ... ...”

“என்னடா! பேசவே மாட்டேங்கிற?”

“இல்ல... என் பிரெண்டு எவ்ளோ ஜீனியஸ்னு யோசிக்கிறேன். அவன் அப்பவே சொன்னாண்டி, உன்ன மாதிரி மேனாமினுக்கிய எல்லாம் நம்பக்கூடாதுன்னு” என்று அவன் சொன்னதும்,

“குமார்!” என்று கோபமாக சத்தம் போட்டாள் இனியா.

“என்னடி, கதையா சொல்ற? இவ கெளம்பி வந்தாளாம்... வழியில எவளையோ பார்த்தாளாம்... அவ கதையை கேட்டு இவளுக்கு ஓடற டிரெயின்லியே ஞானம் பொறந்திருச்சாம். ஏன்டி, அவ்ளோ கேனப்பயலாவா தெரியுது என்னைப் பார்த்தா? போடி! வீட்டுக்குத்தானே போறே? போ! ஸ்கூலுக்கு வருவே இல்ல? உன் கதி என்ன ஆகுதுன்னு பாரு!” என்று கறுவியபடி இணைப்பைத் துண்டித்தான் அவன்.

கடைசியாக அவன் பேசிய வார்த்தைகள் அவளுக்குள் திகிலை மூட்டின. ‘என்ன செய்வான்? என் முகத்தில் ஆசிட் அடிப்பானா? கத்தியால் குத்துவானா? இவனை நம்பியா வீட்டை விட்டு வந்தேன்?’ வாய்க்கு வாய், என்னைப் பெத்த அம்மா என்று சொல்லும் அப்பா, பள்ளிக்குக் கிளம்ப நேரமாகி விட்டால் இந்த வயதிலும் ஊட்டி விட்டு அனுப்பும் அம்மா இருவர் முகங்களும் மனக்கண்ணாடியில் நிழலாடின. தன்னை அறியாமல் கண்ணில் நீர் வழிந்தது. தொடர்வண்டி வேகம் குறைத்து அடுத்து மொரப்பூர் நிலையத்தில் நின்றது.

ஒரு முடிவுக்கு வந்தவளாய் இனியா எழுந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். கைப்பேசியைப் பார்த்தாள். மணி 6. அதை அணைத்துப் பையில் போட்டுத் தோளில் மாட்டிக் கொண்டாள். வாசலை நோக்கி இரண்டடி வைத்தவள், பின் நினைவு வந்தவளாகச் சட்டென்று திரும்பி, அறிவழகியை எழுப்பப் போனாள். மனம் வரவில்லை. பேனாவை எடுத்தாள். பக்கவாட்டில் நீண்டிருந்த அவளுடைய வலது முன்கையின் உள்பக்கத்தில் தன் பெயரையும் கைப்பேசி எண்ணையும் எழுதி வைத்துவிட்டுப் புறப்பட்டாள்.

மொரப்பூரில் இறங்கி, சென்னையிலிருந்து கோவை செல்லும் தொடரியைப் பிடித்து அவள் திருப்பூரை அடைந்தபொழுது மணி ஒன்பது. வேக வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள்.

அதற்குள் செய்தி கேள்விப்பட்டு வீட்டின் முன் கூட்டம் கூடியிருந்ததைப் பார்த்துத் துணுக்குற்றாள் இனியா. மனதில் துணிவை வரவழைத்துக் கொண்டு உறுதியாக வீட்டை நோக்கி நடை போட்டாள். கோபம், வெறுப்பு, ஏளனம் என்று சுற்றியிருந்த எல்லாருடைய கீழ்த்தரப் பார்வைகளையும் தாங்கியபடி வீட்டுக்குள் நுழைந்தாள். வாசலையே பார்த்துக் கொண்டிருந்த அம்மா, இவள் முகத்தைப் பார்த்ததும், “அடிப் பாவி! குடும்ப மானத்தையே வாங்கிட்டியேடி!” என்று அலறியபடி ஓடி வந்து கன்னத்தில் அறைந்தார்.

கீழே விழுந்தவளை மேலும் அவர் அடிக்கப் போக, சுற்றி இருந்தவர்கள் பிடித்துக் கொண்டார்கள். “ஏம்மா! இப்படிப் பண்ணலாமா நீ?” என்று ஊர்ப் பெரியவர் இனியாவிடம் ஏதோ பேசப் போக, “என்னங்க நீங்க இவகிட்ட போய்க் கொஞ்சிக்கிட்டு?” என்று எகிறினார் அவள் மாமா. ஆளாளுக்குப் பேசத் தொடங்கியதில் அந்த இடமே கூச்சலும் குழப்பமுமாய் மாறியது. அதுவரை அமைதியாய் நாற்காலியில் அமர்ந்திருந்த இனியாவின் அப்பா, திடீரென்று எழுந்து வந்தார். அழுதபடி அமர்ந்திருந்த மகளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் ஓர் அறையில் விட்டார்.

“அப்பா! இருங்கப்பா! நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க பிளீஸ்!” என்று அவள் கத்தக் கத்த அறைக் கதவை இழுத்துத் தாளிட்டார். கதவை இரு கைகளாலும் அதிர அதிரத் தட்டி, “அப்பா!... அப்பா!...” என்று எவ்வளவோ கூப்பிட்டுப் பார்த்தாள் இனியா. பயனில்லை. சோர்ந்து போய்ப் படுக்கை மீது சென்று அமர்ந்தாள்.

வெளியில் குரல்கள் குழப்பமாய் ஒலித்தன. எதுவும் புரியவில்லை. இடையிடையே “அவ என் பொண்ணு... எனக்குத் தெரியும்...” என்ற அப்பாவின் வார்த்தைகள் விட்டு விட்டுக் கேட்டன.

சிறிது நேரத்தில் எல்லாம் ஓய்ந்தன. அக்கம் பக்கத்து வீடுகளின் விளக்குகளும் ஒவ்வொன்றாய் அணைந்தன. கதவு மெல்லத் திறக்கும் ஓசை கேட்டது. முழங்கால்களுக்கிடையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அமர்ந்திருந்த இனியா நிமிர்ந்து பார்த்தாள். அப்பாவும் அம்மாவும் தளர்வாக உள்ளே வந்தார்கள். அம்மா கையில் பால் எடுத்து வந்திருந்தார். இருவரும் அவளுக்கு இரு பக்கங்களிலும் அமர்ந்தார்கள்.

“இந்தா!” என்று அம்மா அவளிடம் பாலை நீட்டினாள். அதை வாங்காமல் அடிபட்ட குழந்தையின் முகத்தோடு அவரை ஏறிட்டுப் பார்த்த இனியா,

“அம்மா... நான்” என்று ஏதோ சொல்ல வந்தாள்.

“எல்லாம் காலைல பேசிக்கலாம். இப்ப இதைக் குடிச்சிட்டு படு!” என்றார் அம்மா. அவள் அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். “குடிம்மா” என்றார் அவர். நெகிழ்ச்சியோடு பாலை வாங்கி ஒரு மிடறு பருகினாள். தொண்டையில் இறங்கியதுமே என்னவோ போலிருந்தது.

முகத்தைச் சுளித்தபடி, “என்னம்மா இது! இப்படி இருக்கு?” என்று அவள் கேட்க,

“பரவாயில்ல குடி!” என்றார் அம்மா வைரம் பாய்ந்த குரலில்.

திகைத்துப் போய், “அம்மா!...” என்று குரல் இடற, விழிகள் வெறிக்கப் பார்த்தாள் அவள்.

“ம்... குடி!” என்றபடி அவள் கை மீது தன் கையைச் சேர்த்துப் பிடித்துப் பால் குவளையை அவள் உதட்டில் வைத்து அழுத்தினார் அம்மா. இனியா மறுத்துப் பின்வாங்க முயல, அவள் பிடரியைப் பிடித்துத் தடுத்தது அப்பாவின் கரம். திமிறத் திமிற அந்தப் பால் வலுக்கட்டாயமாக அவள் வாயில் புகட்டப்பட்டது.

இரவு உறக்கம் கலைந்து எழுந்த அறிவழகி இனியாவைக் காணாமல் தேடினாள். கையில் எழுதியிருந்ததை அவள் கவனிக்கவில்லை. ’ஒருவேளை பாத்ரூம் போயிருப்பாங்க’ என்று நினைத்தபடி, கையைத் தலைக்கு வைத்து மீண்டும் படுத்துக் கொண்டாள். அவள் தலையில் இருந்த எண்ணெயும் வியர்வையும் பட்டு இனியாவின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாய் அழியத் தொடங்கியது.

Stories you will love

X
Please Wait ...