தேடல்

கற்பனை
5 out of 5 (3 Ratings)
Share this story

தந்தை மகள் தேடல்

ரமேஷ் லண்டனில் மருத்துவத்தில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான். அவன் மனைவி ராதிகா தன் 4 வயது பெண் குழந்தை அமிர்தாவுடன் சென்னையில் இருக்கிறாள். தன் மாமனார் மாமியாரையும் கூடவே வைத்து பார்த்துக் கொள்கிறாள். அமிர்தா தன் தந்தையை மிகவும் தேடுவாள். விடுமுறையில் அம்மா அப்பா கூட வெளியே செல்ல வேண்டும் என்று அவளுக்கு ரொம்ப ஆசை. சில சமயங்களில் அழுவாள். வாழ்க்கை அப்படியே போய்க்கொண்டு இருக்கிறது.

ஒரு நாள் தொலைபேசி அடித்ததும் ராதிகா ஓடி வந்து எடுத்தாள் எடுத்து என்னங்க எப்படி இருக்கீங்க ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடுறீங்களா என்ற கேள்விகள் கேட்க ரமேஷ் நான் நல்லா இருக்கேன் மா நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க அம்மு எப்படி இருக்கா அப்பா அம்மா தங்கச்சி வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களான்னு கேட்டான்.

ராதிகா ,நாங்க நல்லா இருக்கோம். அம்மு தான் உங்களை ரொம்ப தேடுறா எப்ப வருவீங்கன்னு ஒரே அழுகை அடுத்த மாசம் வந்துருவீங்களா அப்படின்னு கேட்டாள். எல்லாம் முடிஞ்சுது நான் கண்டிப்பா வந்துருவேன் அந்த சமயம் அம்மு ஓடி வந்து அம்மா கிட்ட இருந்து போனை பிடுங்கி அப்பா எப்ப வருவீங்க எனக்கு உங்களை ரொம்ப தேடுதுப்பான்னு சொல்லிட்டு அழ ஆரம்பித்து விட்டாள். உடனே ரமேஷ் குட்டிமா அழாதடா அப்பா அடுத்த மாசம் உன் பிறந்தநாளுக்கு முன்னாடி வந்துருவேன் உனக்கு என்ன கிப்ட் வேணும் சொல்லுடான்னு கேட்கவும் அப்பா சூப்பர் பா நான் யோசிச்சு அப்புறமா சொல்றேன் நீங்க வாங்க சரியா என்று சொல்லிட்டு சிரித்தாள்.

நாட்கள் மாதங்கள் ஆகி ஆண்டுகள் கடந்தன அம்மு வளர்ந்து பெரியவளாகி படிப்பை முடித்து வேலையிலும் சேர்ந்தாள் ரமேஷ் அவளுக்கேற்ற மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தான்.அம்முவும் தன் கணவன் பணி நிமித்தம் வெளிநாட்டில் வசிக்க வேண்டியதாகி விட்டது.சரித்திரம் திரும்புகிறது . மீண்டும் ஒரு தேடல் ஆரம்பமாகியது .

அம்மு தன் பெற்றோருடன் வாராவாரம் தொலைபேசியில் வீடியோ வசதியின் மூலம் பேசுவாள் அம்மா எல்லாரும் எப்படி இருக்கீங்க அப்பா தாத்தா பாட்டி அத்தை எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று அதே கேள்வி கேட்க அவள் அன்னை ராதிகாவும் தன் கணவரிடம் பல வருடங்களுக்கு முன்பு சொன்ன அதே பதிலை சொல்லுவாள். கூடுதலாக அப்பா உன்னை ரொம்ப தேடுறாங்க என்று சொல்லவும் உடனே அம்மு ஏம்மா நீ என்னை தேடலியான்னு கேட்க ,அதுஎப்படி நான் உன்னை தேடாமல் இருப்பேன் அப்பா வெளியே சொல்லி புலம்புவார் நான் மனதுக்குள்ளே புலம்புவேன். கல்யாணம் ஆனால் கணவன் கூட மனைவி இருப்பது தானே முறை இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் செயல் அதனால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று அமைதியாகி விடுவேன் என்று பதில் சொன்னாள்.

அந்த நேரம் தூங்கிக் கொண்டிருந்த ரமேஷ் எழுந்து வந்து தன் மனைவியிடம் இருந்து போனை வாங்கி மகளுடன் பேசினார் எப்படி இருக்க குட்டிமா மாப்பிள்ளை நல்லா இருக்காரா என்று சொல்லி விட்டு, அப்பாக்கு உன்னை ரொம்ப தேடுதுடா எப்படா நம்ம ஊருக்கு வரீங்கன்னு கேட்டதும் அம்மு சிரித்துவிட்டாள். அப்பா ரொம்ப வருசத்துக்கு முன்னாடி நான் சொன்ன இதே வார்த்தைகளை நீங்க இப்ப சொல்றீங்கப்பா ரமேஷும பழசை நினைச்சு சிரித்து விட்டார். அப்பா நான் இன்னும் மூன்று மாதத்தில் உங்க பிறந்தநாளுக்கு முன்பே வந்துவிடுவேன் சரியா பா கவலைப்படாதீர்கள் என்று அம்மு பதில் சொன்னாள். ராதிகா தன் மகள் அப்பாவை தேடி அழுத போதும் மகளை சமாதானப்படு த்தினாள் இப்ப தன் கணவர் மகளைத் தேடுதுன்னு சொன்ன போதும் அவரை சமாதானப்படுத்துகிறாள்.அன்றும் இன்றும் தன் உணர்வுகளை வெளியே காட்டவில்லை .தான் அழுதால் கணவரும் மகளும் தாங்க மாட்டார்கள்என்ற எண்ணமே இதற்கு அடிப்படை. எதையும் தாங்கும் வலிமை நிறைந்தவள் தாய் மட்டுமே .

தேடல்2- தொலைத்தஉறவுகளை தேடல்

நாதன் கமலம் தம்பதியினருக்கு ரஞ்சனி ரவீந்திரன் என்று இரண்டு குழந்தைகள். நாதன் அரசாங்கத்தில் நல்ல பதவியில் இருக்கிறார். ஒழுக்கத்தில் சிறந்தவர் எளிமையான வாழ்க்கை முறையை கொண்டவர்.கமலமும் வரவுக்கு ஏற்ற செலவு செய்பவர். இவர்கள் இருவருக்கும் நேர்மாறான குணங்கள் கொண்டவன் மகன் ரவீந்திரன். அவனது ஆடை காலணி அவன் பயன்படுத்தும் வாகனம் எல்லாம் முதல் தரமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு உள்ளவன்.

மகள் ரஞ்சனி வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்று வங்கியில் பணியில் அமர்ந்தாள். ரவீந்தர் கணினி துறையில் பொறியியல் பட்டம் பெற்று வேலை தேடி கொண்டு இருக்கிறான். புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலையில் சேர வேண்டும் என்பதே அவனது முக்கிய குறிக்கோள். அதனால் சிறிய நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல மாட்டேன் என்று காலம் தாழ்த்துகிறான். நாதன் தன் மகனிடம் முதலில் நீ சிறிய நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து அனுபவம் பெற்றுக்கொள் அதன் பின் அதை முன்னிறுத்தி பெரிய நிறுவனங்களில் வேலை தேடு என்று அறிவுரை சொல்லியும் ரவி அதை கேட்பதாக இல்லை. இறுதியில் தன் நண்பர்கள் எல்லாம் வேலையில் சேர்ந்து விட்டார்களே என்று மனதில் கொண்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்தான்.அங்கு வேலை பார்த்துக் கொண்டே பெரிய நிறுவனங்களுக்கு முயன்று, ஒரு பெரிய நிறுவனத்திலும் வேலை வாங்கி விட்டான்.

நாதன் ரஞ்சனிக்கு திருமணம் செய்து வைத்தார் அவளும் தன் கணவரோடு பக்கத்தில் நகரத்தில் சென்று குடியேறினாள். ரவி வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். வழக்கம் போல் தன் நண்பர்களுடன் ஆடம்பரமாக பொழுதை போக்கி ,பண விரயம் செய்து கொண்டு இருந்தான். அவன் பெற்றோர்கள் அவனைப் பார்க்க வேண்டும் என்று தம்பி ஊருக்கு வா என்று எவ்வளவோ சொல்லியும் அவன் ஊர் பக்கம் எட்டிப் பார்ப்பதே இல்லை .அவர்களும் மனதை தேற்றி கொண்டு.வாழ்ந்தனர். ரஞ்சனி மாதத்துக்கு ஒரு தடவை வந்து தன் தாய் தந்தையரை பார்த்து விட்டு செல்வாள் அது நாதன் கமலம் இருவருக்கும் மனதில் ஒரு அமைதியை தந்தது.

இதற்கு இடையில் ரவி அவன் கூட வேலை பார்க்கும் சுப்ரியாவை காதலித்தான்.இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர்.இருவரும் முதலில் சுப்ரியா பெற்றோரிடம் சம்மதம் வாங்கினர்.பின் ரவி தன் பெற்றோரிடம் வந்து அப்பா நான் சுப்பிரியா என்ற பெண்ணை காதலிக்கிறேன்.அவளை கல்யாணம் செய்ய போகிறேன் என்று சொன்னதும் கமலம் நாதன் தம்பதி அதிர்ச்சி அடைந்தனர் பின் மிகவும் வேதனைப்பட்டனர். ஏனென்றால் மகன் தங்களிடம் சம்மதம் கேட்கவில்லை ஆனால் அவனே தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டான் என்ற வேதனையில் உழன்றனர்.பின் மகனின் சந்தோஷம் முக்கியம் என்று நினைத்து உன் விருப்பம் போல் செய்து கொள் என்று சொல்லி விட்டனர். கல்யாணத்தை முன்னிருந்து நடத்தி வைத்தனர்.ரஞ்சனி வந்து தமக்கை ஸ்தானத்தில் தம்பிக்கு என்ன செய்யனுமோ அதை செய்தாள்.

திருமணம் முடிந்ததும் சில மாதங்களில் ரவியும் அவனது மனைவி சுப்ரியாவும் வெளிநாட்டில் சென்று வசிக்க ஆரம்பித்தனர். அவன் அதற்குப் பின் தன் தாய் தந்தையுடனும் , தன் தமக்கையுடனும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.

நாதனும் கமலமும் தங்கள் மனதை தேற்றிக்கொண்டனர் பின் நாதன் ஒரு முடிவு எடுத்தார் நாம் இங்கு தனியாக இருப்பதை விட முதியோர்கள் பலர் சேர்ந்து வாழும் இடத்தில் சென்று வசித்தால் என்ன என்று நினைக்க ஆரம்பித்தார். தன் மகள் ரஞ்சனியிடம் தன் ஆலோசனையை.சொன்னார். ரஞ்சனி அப்பா நீங்கள் இங்கே இருநது போக வேண்டாம். நான் உங்களை பார்த்துக்கொள்கிறேன் என்று அன்போடு சொன்னாள். ஆனால் நாதன் வேண்டாம்மா நாங்களும் கொஞ்ச நாள் அங்கு இருக்கிறோமே.அங்குள்ளவர்களுடன் சேர்ந்து பழகி வாழ்கிறோமே. தூரத்தில் இருப்பது நல்லது தானேமா உனக்கு முடிந்தால் எங்களை வந்து மாதம் ஒரு முறைவந்து பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டார்.ரஞ்சனி அழுது கொண்டே சம்மதம்.சொன்னாள்.

நாதன் தான் குடியிருந்த வீட்டை உடனடியாக விற்பதற்கு ஏற்பாடு செய்தார்.பின் அந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து விட்டு அதிலிருந்து மாதம் மாதமாக வரும் வட்டியை கொண்டு தங்கள் வாழ்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார் .தன் காலத்திற்கு பின்னும் தன் மனைவி காலத்திற்கும் பின்னும் அந்த பணம் மகள் ரஞ்சனி மகன் ரவிக்கும் சமமாக பங்கீடு செய்து கொள்ளலாம் என்று உயில் எழுதி வைத்தார்.

இருவரும் முதியவர்கள் வாழும் ஒரு குடியிருப்புக்கு சென்று வசித்தனர்.வாழ்க்கை இனிதாக சென்றது.பிள்ளைகள் நினைவு மனதை வாட்டினாலும் நிதர்சனத்தை ஏற்று கொண்டனர்.

பத்து வருடங்கள் கழித்து ரவி தாயகம் திரும்பினான்.மனைவி இரு பெண் குழந்தைகளுடன் சென்னையில்குடியேறினான். அவ ன் மனைவி குடும்பத்தினர் அவ்வப்போது அவர்களை வந்து பார்த்துவிட்டு செல்வர். கொஞ்ச நாள் கழித்து ரவிக்கு தன் தாய் தந்தையரின் நினைப்பு வந்துு விட்டது .அவர்களை இத்தனை வருடம் புறக்கணித்து விட்டேன் என்று மிகவும் வருத்தம் கொண்டான்.

மறுநாள் அவன் தன் சொந்த ஊருக்கு சென்று தன் வீட்டுக்கு சென்றான் அங்கே கதவை தட்டியதும் வேறு ஒருவர் வந்து கதவை திறந்தார் இவனுக்கு மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது உடனே தன் தந்தை பெயரை சொல்லி அவரது வீடு இதுதானே என்று கேட்க ஆரம்பித்தான். அந்த வீட்டில் உள்ளவர் ஆமாம் அவர் எங்களுக்கு வீட்டை விற்று விட்டு சென்று விட்டார் என்று கூறியதும் ரவிக்கு அழுகையே வந்துவிட்டது.தான் செய்த தவறை உணர்ந்தான்.

அடுத்து அங்கிருந்து தன் அக்கா ரஞ்சனியின் வீட்டுக்கு சென்றான். அக்காவை பார்த்ததும் கதறி கதறி அழுதான் எனக்கு இப்போ அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டான். ரஞ்சனி தன் தம்பியை சமாதானப் படுத்தி விட்டு அவர்கள் இருக்கும் இடத்தை கூறினாள்.பின் ரவியிடம் அவன் குடும்பத்தை பற்றி விசாரித்தாள் அவனுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன அவன் எப்போது இந்தியாவுக்கு வந்தான் என்ற விவரம் எல்லாம் கேட்டாள் . ரவி தனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன என்றும் இந்தியா வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன என்றும் சொன்னான். அதன்பின் ரவியும் தன் அக்காவிடம் அவள் குடும்பத்தை பற்றியும் அவள் குழந்தைகள் பற்றியும் விசாரித்து தெரிந்து கொண்டான் அதற்கு அப்புறம் அக்கா நான் அப்பா அம்மாவை பார்க்க வேண்டும் நாளைக்கு அங்கு செல்கிறேன் நீ வருகிறாயா என்று கேட்டான். இல்லப்பா நீ முதலில் போ நான் அடுத்த மாதம் பார்த்துக்கொள்கிறேன் என்று ரஞ்சனி சொன்னாள். ரவி தன் அக்கா குழந்தைகளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு சென்னைக்கு திரும்பினான்

வந்ததிலிருந்து ஒரே அழுகை அழுது கொண்டே இருந்தான் அவன் மனைவி சுப்ரியா என்ன என்று விவரம் கேட்கவும் என்னை பெற்றவர்கள் எனக்கு எவ்வளவோ செய்தார்கள் . ஆனால் நான் அவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை இப்பொழுது என் தாய் தந்தையர் எங்கோ ஓரிடத்தில் ஒரு முதியோர் குடியிருப்பில் இருந்து வருகிறார்கள் என் தாய் கையினால் செய்த உணவை சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது . அவர்கள் என்னை ஊருக்கு வா வா என்று சொன்னபோது நான் கேட்கவில்லை.என் நலம் பெரிதென்று அவர்களை மறந்து விட்டு இருந்தேன் .உயிர் கொடுத்த உறவுகளை உதாசீனப் படுத்தி விட்டேன்.இப்பொழுது எனக்கு அவர்களது அருகாமை தேவைப்படுகிறது .என் அம்மாவின் மடியில் தலை வைத்து கதறி அழவேண்டும் போல் இருக்கிறது.நான் தொலைத்த என் உறவுகள் எனக்கு திரும்ப கிடைக்குமா என்று அழ ஆரம்பித்தான். நான் என் உறவுகளை தேடிச் செல்ல போகிறேன் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடையாது.ஆனாலும் என்னை பெற்றவர்கள் என்னை மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களைப் பார்க்கச் செல்கிறேன் என்று தன் மனைவியிடம் கூறினான்

உறவுகள் தொலையவில்லை. தொலைத்ததை உளப்பூர்வமாக தேடும் போது தொலைத்தது கிடைக்கும்.இரத்த பாசம் வெல்லும்

Stories you will love

X
Please Wait ...