தாய்மை

santhoshguna87
பெண்மையக் கதைகள்
4.9 out of 5 (68 Ratings)
Share this story

பலத்தமழையின் விளைவாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், மெழுகுவத்தி வெளிச்சத்தில் நாளை நடக்கவிருக்கும் கணக்கு பரீட்சைக்காக எனது மகள் ஆராதனாவை என்னால் முடிந்த அளவிற்கு தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன்.

“ஆரா இப்போ நீ ஆறாவது. நியாபகம் இருக்கா..? இல்லையா? சாதாரண பெருக்கல் கணக்குளே இவ்வளோ தப்பு பண்ணா எப்படி ஆரா.?” என்று எரிச்சலோடு நான் கேட்க, அவளோ இயற்கை உபாதைக்காக சிண்டுவிரலை உயர்த்த, எனக்கு கோவம்தான் வந்தது. இருந்தும் அதை எனக்குள் விழுங்கியப்படி குடையை எடுத்துக்கொண்டு வாசலில் இருக்கும் கழிவறைக்கு அவளை அழைத்துசென்றேன். மழை லேசாக விட்டிருக்க, வானில் விண்மீன்கள் ஆங்காங்கே கண்சிமிட்ட ஆரம்பித்திருந்தது. கண்ணுக்கு எதுவுமே புலப்படாத அந்த கும்இருட்டில் வாசலுக்கு மிக அருகாமையில் “மியாவ் மியாவ்” என்ற சத்தம் கேட்க, இந்த மழையில் தாயிடமிருந்து பிரிந்த சின்னக்குடிப்போல என்று நினைத்துக்கொண்ட நான் அதன்பின் அதைப்பற்றி அதிகம்யோசிக்கவில்லை. ஆனால் பாத்ரூமிலிருந்து வந்த ஆராவோ சத்தம் வந்தப் பகுதியில் கண்களில் கூர்மையைத்தீட்டி அந்தப் பூனைக்குட்டியைத் தேடிக்கொண்டிருந்தாள்.

“ஆரா வா” என்று பலமுறை நான் அழைத்தும் அவள் பூனைக்குட்டியையே தேடிக்கொண்டிருந்தாள். அதே சமயத்தில் கரெண்ட் வரவே, தெருவிளக்கின் வெளிச்சத்தில் சேறும் சகதியுமாக, நடுங்கிக்கொண்டு காம்பவுண்ட் சுவரோரம் ஒடுங்கிக்கொண்டிருந்த அந்த பிஸ்கட் கலர் பூனைக்குட்டியை கையில் தூக்கிக்கொண்டு, “அம்மா” என்று ஏக்கத்தோடு என்னைப்பார்த்தாள்.

“நோ ஆரா.. அத கீழவிட்டுட்டு வா. நிறைய சம் பார்க்கவேண்டியிருக்கு” என்று கண்டிப்பானக்குரலில் நான் சொன்னப்போதும்,

“பாவமா இருக்குமா. நாம வளர்க்கலாம்மா” என்றாள் கெஞ்சல் குரலில், நான் முடியவே முடியாது என்று மறுத்தப்போதும் ஆரா முகம் வாட்டத்துடன் குட்டியை கீழேவிடாமல் என்னையே பார்த்துக்கொண்டிருக்க என் பிடிவாததம்தான் மெல்லக் கரைந்தது அவள்பார்வையில். இருந்தும் ஏதேதோ காரணங்களை சொல்லிப்பார்த்தேன்.

“அதுப் பாரு எவ்வளோ அழுக்கா இருக்கு..?” என்றேன்.

“நான் குளிப்பாட்டி விடுறேன் ம்மா. பிளீஸ்மா” என்றாள் கண்களில் கெஞ்சலுடன்.

“அதுக்கண்ட இடத்துல பாத்ரூம் போகும் ஆரா.” என்றேன் பொறுமையை இழுத்துப்பிடித்துக்கொண்டு.

“அது எங்கபோனாலும் நான் கிளீன் பண்றேன் ம்மா” என்றாள்.

“அப்பா ஒத்துக்கமாட்டாரு ஆரா” என்று கடைசி அஸ்திரத்தையும் பயன்படுத்திப்பார்த்தேன். அதற்கும் அவள் அசராததால் “அப்போ நீ மேக்ஸ் எக்சாம்-ல அறுவது மார்க்கு மேல வாங்கணும். ஓகேவா..?” என்றேன். எனக்குத்தெரியும் அந்த இராமனுஜமே வந்து இவளுக்கு கணக்கு சொல்லிக்கொடுத்தாலும் இது நடவாதக் காரியம் என்று. காரணம் அவளுக்கு கணக்கு எப்பவுமே பாகற்காய்தான். பார்டர் மார்க் எடுத்து பாஸ் செய்வதே மிகப்பெரிய சாதனையாக இருக்கும்போது இதுஎப்படி அவளால் முடியும்? இப்போது மட்டுமல்ல எப்போது அவள் அடம்பிடித்தாளும் நான் கையாளும் யுத்திதான் இது. கணக்கைப்பற்றிய பேச்சையெடுத்த உடனே அவள் முகம் மாற, எப்படியும் அதை கீழே விட்டுவிடுவாள் என்று தான் நான் நினைத்தேன் ஆனால் அவளோ, நிமிர்ந்து என்னைப்பார்த்து "சரி" என்றாள் இரண்டு கைகளாலும் அந்த பூனைக்குட்டியை இறுக்கமாக பிடித்தப்படி. நான் அமைதியாகவே இருக்க, என் அமைதியை சம்மதமாக எடுத்துக்கொண்டவள்,

ஓடிச்சென்று டவல் எடுத்துவந்து நனைந்திருந்த அந்த பூனைக்குட்டியை துவட்டிவிட்டாள். அந்த அரவணைப்பிற்குத்தான் அதுவும் ஏங்கிதவித்ததுப் போலும். அவள் கரங்களில் நெலிந்தவாறு சிறிய திராட்சைப்போன்ற விழிகளை உருட்டி உருட்டி ஆராவைப்பார்த்தது. அவளிடம் கொஞ்சுவதுப்போல கத்தியது, உரசியது, அவளின் ஆடையைப்பிடித்து விளையாடியது. பால்ஊற்றினாள் தனக்கு இருந்தப் பசிக்கு நன்றி சொல்லவதுப்போல ஏதோ முனகிக்கொண்டே குடித்து முடித்தது. வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டேன் என்று கண்டிப்புடன் நான் கூறிவிட, சிறிய அட்டைப்பெட்டிக்குள், அவளுடைய பழைய ஆடைக்களைப்போட்டு அதற்குள் அந்தப்பூனைக்குட்டியை படுக்கவைத்தவள் அதற்கு “செண்பகம்” என்று பெயரும் சூட்டினாள்.

அடுத்தநாள் காலையில் நான் எழுப்பாமலேயே ஆரா எழுந்து படிக்க, எனக்கு ஆச்சரியம்தான். பள்ளிக்கு செல்வதற்கு முன் செண்பகத்திற்கு தேவையான உணவுகளை அட்டைப்பெட்டிக்குப் பக்கத்திலேயே வைத்து விட்டு சென்றாள். எல்லாம் சாயங்காலம் வரைத்தானே அதுவரை அவள் செய்வதை செய்யட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.

சாயங்காலம் கணக்கில் அறுவது மார்க்குமேல் எடுத்து வந்து ஆச்சரியத்தில் என்னை ஆழ்த்தியவள், செண்பகத்தை தூக்கி அணைத்து முத்தமிட்டாள் இனி அதை தன்னிடமிருந்து யாராலும் பிரிக்கமுடியாது என்ற சந்தோஷ மிகுதியில். நான் எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்ல? அவளுக்கு வராத கணக்குப்பாடத்தில் அபரிவிதமான முன்னேற்றத்தைப்பார்த்தப்பின் என்னால் என்ன சொல்ல முடியும்? பிடிக்காதப்போதும் என் ஆராவிற்காக செண்பகத்தை சகித்துக்கொண்டேன்.

அதன்பின் ஆரா அதிக நேரம் செண்பகத்துடன் தான் இருந்தாள். வெளியில் சென்று விளையாடாமல் வீட்டுக்குள்ளேயே அவள் இருப்பது எனக்கும் ஒருவித மனநிம்மதியைக் கொடுத்தது. அதேபோல செண்பகமும் அவளைத்தான் சுற்றி சுற்றி வந்தது. ஆராவின் பென்சில், பேனாக்கள் செண்பகத்திற்கு விளையாட்டுப்பொருளாகிப்போனது. விளையாண்டு முடித்த களைப்புத்தீர அவள் மடியிலேயே படுத்துக்கொள்ளும். அதட்டி உண்ணவைத்தாலும் மாமிசம் உண்ணாதவள் மாமிசம் வேண்டுமென்று வாய்விட்டேக்கேட்க, நானும் வாங்கி சமைத்துக்கொடுத்தேன். பின் தான் தெரிந்தது அவள் கேட்டது செண்பகத்திற்காகயென்று. ஏதோ திட்டாமல், அதட்டாமல் தானாகவே இரண்டு வாயாவது உண்டாலே அதுவே எனக்கு திருப்தியை தந்தது. ஆரம்பத்தில் மகளுக்காக ஒத்துக்கொண்ட என் கணவர்கூட நாளடைவில் செண்பகத்திடம் பிரியம் காட்ட ஆரம்பித்தார். செண்பகத்தால் அலுவல் வேலைகள் வீடுவரை வருவது நின்றுப்போனது. செல்போனில் தன்னை சிறைவைத்துக்கொண்டவர் ஆராவுடன் சேர்ந்துக்கொண்டு செண்பகத்துடன் விளையாட ஆரம்பித்தார். சத்தமாக பேசுவதற்கே சங்கடப்படுபவர் செண்பகம் செய்யும் சேட்டைகளைப் பார்த்து சத்தம்போட்டு சிரித்தார். விடுமுறைநாட்களில் இருவரும் சேர்ந்துக்கொண்டு செண்பகத்தை குளிப்பாட்டுவதும், அதனுடம் விளையாடுவதும் என்று தங்கள் பொழுதைக் கழித்தனர்.

நாட்கள் மெல்ல உருண்டோட, செண்பகமும் வளர்ந்தது. ஆரா பள்ளிக்கு செல்லும்போது மதில் மேல் அமர்ந்து செண்பகம் அவளை வழியணுப்புவதும், அதேப்போல் சாயங்காலம் மதில் மேல் அமர்ந்து ஆராவை எதிர்நோக்கி காத்திருப்பதும் வழமையாகிப்போனது செண்பகத்திற்கு. ஆரா வீட்டில் இல்லாத சமயங்களில் செண்பகமும் வெளியில்சென்று விடும். அவள் கொலுசுசத்தம் கேட்டால்போதும் எங்கிருந்தாலும் ஒடிவந்து அவள் காலை உரசி, பின் அவள் மடியிலேயே அமர்ந்துக்கொள்ளும். அவர்கள் இருவருக்கும் இடையேயான பந்தத்தில் நான் என்றுமே தலையிட்டதுமில்லை. தலையிடும் அளவிற்கு ஆராவோ, செண்பகமோ எந்த வேலையையும் எனக்கு வைத்ததுமில்லை.

மாதங்கள் சென்றன. செண்பகத்தின் உடலில் சில மாற்றங்கள், காரணம் அதுக் கருவுற்றிருந்தது. முன் போல சரியாக உண்வதில்லை, பால் வைத்தாலும் குடிப்பதில்லை. எப்போதும் அட்டைப்பெட்டிக்குள் உறங்கிக்கொண்டே இருந்தது. உறங்கும்போதுக்கூட மெல்ல முனகல் சத்தமிட்டது. தரையில் உருண்டு புரண்டது, மதில் மேல் ஏறும் போதும் இறங்கும்போதும் அதிகம் யோசித்து யோசித்து ஏறியது, இறங்கியது. உண்ட சிறிதளவு உணவையும் சாலையோரத்தில் கக்கிவைத்தது. அதிகம் பில் உண்டது. நம்ம வீட்டுக்கு நிறைய பூனைக்குட்டிகள் வரப்போகிறது என்று ஆரா அதீத சந்தோஷத்தில் இருந்தாள்.

அன்று ஆரா பள்ளிக்குசென்றப்பின் முதன்முறையாக செண்பகம் கத்திக்கொண்டே என் காலை சுற்றி சுற்றிவந்தது. அதற்கு பிரசவவலி ஏற்பட்டிருந்ததுப் போலும். எனக்கு சிறுவயதுமுதலே நாய், பூனை, ஆடு, மாடு, கோழி என்று எதன்மீதும் பிடித்தம் ஏற்பட்டது கிடையாது. என்னைப்பொறுத்தவரை அவைகள் ஒரு விலங்கு அவ்வளவே. இப்போதுக்கூட ஆராவிற்காகத்தான் நான் செண்பகத்தை சகித்துக்கொண்டிருப்பதுக்கூட. அது என்னை உரசுவது எனக்குள் அறுவெருப்பை ஏற்படுத்த நான் அதை விரட்ட, செண்பகம் ஓடிச்சென்று அட்டைப் பெட்டிக்குள் படுத்துக்கொண்டது. அதன்பின் அது உண்பதற்காக கூட வெளியில் வரவில்லை. பள்ளிமுடித்து வந்த ஆரா மதில்மேல் செண்பகம் இல்லாததால் “செண்பகம்” என்று அழைத்தவாறு உள்ளே நுழைய, நான் இங்கிருக்கிறேன் என்பதுப்போல அட்டைப்பெட்டிக்குள் இருந்தப்படி மெலிதாக செண்பகம் சத்தமிட, ஓடிச்சென்று அட்டைப்பெட்டியைப்பார்த்தவள், “அம்மா.. அம்மா.. இங்க வாங்களேன் நம்ம செண்பகம் குட்டிப்போட்டு இருக்கு” என்று சத்தம்போட்டு ஆரா என்னை அழைக்க, நானும் சென்றுப்பார்த்தேன்.

செண்பகத்தின் நிறத்தில் ஒருக்குட்டியும், வெள்ளையும் சாம்பலும் கலந்த நிறத்தில் ஒருக்குட்டியும், முழுவதுமாக வெள்ளை நிறத்தில் ஒரு குட்டியும் என்று மூன்றுக்குட்டிகள் இருந்தன. குட்டிகளுக்கு இன்னும் கண்கள் திறக்கப்படாததால், புழுப்போல செண்பகத்தின் மீது ஊர்ந்துக்கொண்டிருக்க, செண்பகம் குட்டிகளை நக்கிக்கொடுத்துக்கொண்டிருந்தது. பிறந்து சிலமணிநேரங்களே ஆன பூனைக்குட்டிகளை முதன்முறையாக பார்த்த எனக்கு அடிவயிற்றில் இனம் புரியாத ஒரு உணர்வு. அன்று முழுவதும் உண்பதற்காக கூட வெளியில் வராமல் குட்டிகளை தன் அணைப்பில் வைத்துக்கொண்டு நக்கிக்கொடுத்தப்படியே இருந்தது செண்பகம்.

அடுத்த நாள் மெல்ல வெளியில் வந்து ஆரா வைத்து சென்ற உணவை உண்டுவிட்டு மீண்டும் அட்டைப்பெட்டிக்குள் அடைந்துக்கொண்டது. அதன்பின் வந்த நாட்களில் குட்டிகள் உறங்கும்நேரம் மட்டும் செண்பகம் வெளியில் சென்று வந்தது. பதினைந்து நாட்கள் கழித்தப்பின்னே குட்டிகளுக்கு கண்கள் திறந்தது. ஒன்றுகொன்று கடித்துக்கொண்டு விளையாடும்போது மட்டும் குட்டிகள் சத்தம் வெளியில்கேட்டது. அவ்வப்போது குட்டிகள் அட்டைப்பெட்டிக்குள் இருந்தப்படி தலையை மட்டும் உயர்த்தி வெளியில் பார்க்கும். எதாவது அரம் கேட்டுவிட்டால் மீண்டும் அட்டைப்பெட்டிக்குள் புதையும் அளவிற்க்கு தன்னை மறைத்துக்கொண்டது. ஆராவிற்கும் , என் கணவருக்கும்தான் இதெல்லாம் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருந்தது. குட்டிகள் விளையாடுவதைப்பார்த்து வந்து மூச்சி வாங்க என்னிடம் சொல்வாள், நான்தான் எதையும் காதுக் கொடுத்துக்கேட்டதில்லை.

இரண்டாவது முறையாக நான் தாய்மை அடைந்திருந்த செய்திக்கேள்விப்பட்டு, அன்று என் அண்ணன், தங்கைகள் என்னை பார்க்க வந்திருந்தனர். பூனைக்குட்டியைப்பார்த்த அவர்களுடைய பிள்ளைகள் ஆசைப்பட்டுக் கேட்டப்போது நானும் அவர்களிடம் தூக்கிக்கொடுத்தேன். அவர்கள் கிளம்பி செல்லும்வரை நான் விரட்டியப்போதும் செண்பகம் விடாமல் என்னையே சுற்றிசுற்றி வந்தது. மூன்றுக்குடிகளையுமே எடுத்துக்கொண்டு அவரகள் காரில் கிளம்பி செல்ல, அந்த கார்மறையும் வரை மதில்மேல் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த செண்பகமோ இறங்கி வந்து அட்டைப்பெட்டிக்குள் படுத்துக்கொண்டு அடித்தொண்டையில் கத்தியது தன் குட்டிகளை நினைத்து. இரண்டு நாட்கள் சென்றால் சரியாகிவிடும் என்று நினைத்து என் வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.

பள்ளி முடித்துவந்த ஆரா-வோ விஷயம் கேள்விப்பட்டு “ஏம்மா கொடுத்தீங்க..?” என்று விழிகள் கலங்க கேட்டப்போது,

“செண்பகம் மறுபடியும் குட்டிப்போடும் ஆரா. நாம எப்பவாவதுதான் மாமிசம் போடுறோம். மாமா வீட்ல டெயிலியும் போடுவாங்க ஆரா” என்று நான் சொன்னப்போதும் அவள் சமாதானம் ஆகவில்லை. கோவத்தில் என்னிடம் பேசாமல் இருந்தாள். கொஞ்சநேரம் போனால் சரியாகிடுவாள் என்று அவள் கோவத்தை நானும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என் கணவர் கூட என்னிடம் வருத்தப்பட்டார். எனக்குத்தான் அவர்கள் இருவரின் வருத்தமும், கோவமும் வேடிக்கையாக இருந்தது. இது ஊர் உலகத்தில் நடக்காத ஒன்றா..? என்ன..? எப்படியும் அதுவே சிலநாட்களில் தன் குட்டிகளை பிரிந்துவிடும். ஒரு பூனைக்குப்போய் எதற்கு இப்படி வருத்தப்படுவானேன் என்றுதான் எனக்குத்தோன்றியது.

அன்று இரவு செண்பகம் உண்ணாததால், ஆராவும் உண்ணாமலேயே படுத்துக்கொண்டாள். இரவெல்லாம் விடாமல் குட்டியை நினைத்து செண்பகம் கத்திக்கொண்டே இருந்ததால், அன்று இரவு யாருமே சரியாக உறங்கவில்லை. இரவெல்லாம் கத்தியதால் தொண்டை கட்டிக்கொண்டப்போதும், செண்பகத்தின் கத்தல் மட்டும் நின்றபாடில்லை. செண்பகம் தன்னையும் மறந்து உறங்கும்போது மட்டுமே அதன் சத்தம் நின்றிருந்தது. அதுவும் சில நிமிஷங்கள்தான். எதாவது வண்டி, வாகனம் செல்லும் சத்தம் கேட்டால் வாசல்வரை ஓடிசென்று பார்த்துவிட்டு மீண்டும் அட்டைப்பெட்டிக்குள் தன்னை அடக்கிக்கொண்டது. வெளியில் எங்கும் செல்லவில்லை. அதன் அருகே வைக்கப்பட்டிருந்த உணவும், பாலும் அப்படியே இருந்தது.

மாமிசம் வாங்கி வைத்தப்போதுக்கூட செண்பகம் உண்ண வெளியில் வராமல் அட்டைப்பெட்டிக்குள்ளே தன்னை சிறைவைத்துக்கொண்டது. அதேப்போல ஆராவும் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு என்னிடம் பேசாமலேயே இருந்தாள். அடித்தால் கூட அடுத்த நொடியே “அம்மா” என்று என் கழுத்தைக்கட்டிகொள்பவள், முதன் முறையாக என்னிடம் பேசாமல் இருப்பது என் மனதை பாரமாக்க, என்னையும் மீறி என் கண்கள் மெல்லக் கலங்கின. அவளை பத்துமாதம் சுமந்து பெற்றமனம் உள்ளுக்குள் அடித்துக்கொண்டது. இதற்குமேலும் அவளிடம் வீம்புபிடிக்க என் தாய்மை இடம்கொடுக்காததால் நானாக சென்று சாப்பிட அழைத்தப்போதும் அவள் பசிக்கவில்லை என்றாள் என் முகம் பாராமலே. முதன்முறையாக இதயத்தின் ஆழத்தில் வலித்தது அவள் பாராமுகமாக என்னிடம் பேசியது. அவள் கரத்தைப்பற்றி என் மடியில் அமர்த்தி, “மாமா, சித்தி வீட்லலாம் பூனை இல்ல ஆரா. கிஷோர் ஆசையா கேட்டான் அதான் கொடுத்தேன். உன் செண்பகம் இதுக்கப்புறம் நிறையக்குட்டிப்போடும்” என்று அவளுக்கு புரியுமாறு தன்மையாக எடுத்துரைத்தேன்.

“உங்களுக்கும் தம்பி,பாப்பா பொறந்தததுக்கப்புறம் என்ன யாராவது கேட்டா பூனைக்குட்டிய கொடுத்த மாதிரி என்னையும் நீங்க கொடுத்திடுவீங்களாம்மா?” என்று அவள் கேட்டுமுடிக்கும் முன்பே என் மார்போடு அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டேன். பத்துபிள்ளைகளைப்பெற்றிருந்தாலும் அதில் ஒற்றைப்பிள்ளையை அடுத்தவருக்கு கொடுக்க எந்த தாய்தான் சம்மதிப்பாள். எண்ணிகையில் தானே அது பத்து, தாய்மையின் முன்பு பத்திற்கும் குழந்தை என்று ஒரு பெயர்தானே.

“நான் எப்படிடா உன்னக்கொடுப்பேன். நீதான் அம்மாவோட செல்லமாச்சே. அம்மாவால உன்ன யாருக்கும் கொடுக்கமுடியாது ஆரா. நீ என் தங்கம்” என்றேன் அவள் தலையை மிருதுவாக வருடிவிட்டப்படி,

“நான் உங்களுக்கு செல்லம்னா செண்பகத்துக்கும் அது குட்டிங்க செல்லம்தனம்மா.. அத ஏன்மா அதுக்கிட்டேந்து பிரிச்சீங்க.? செண்பகத்துக்கும் வலிக்கும்தன..?” என்றாள் என் முகத்தை ஆழ்ந்துப்பார்த்து. இந்த கேள்விக்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும்? யாரோ பின் மண்டையில் ஓங்கி அடித்ததுப்போல இருந்தது அவள் கேட்ட கேள்வி. என் மனதில் ஏதோ ஒரு மூலையில் நான் தவறு இழைத்ததுப்போன்ற குற்ற உணர்வு என்னைத்தாக்கியது. வெறும் பூனைத்தானே என்று நினைத்து அதன் தாய்மையுடன் விளையாடிவிட்டேனோ என்றுத்தோன்றியது. அதுவாக தன் பிள்ளைகளை பிரிவதற்க்கும், நானாக பிரித்ததற்கும் இடையேயான வித்தியாசம் எனக்கு விளங்கியது.

எப்படி செண்பகம் விஷயத்தில் இவ்வளவு சுயநலமாக இருந்தேன் என்று என் மனசாட்சி என்னைக்கேள்விக்கேட்டது. எனக்குள் இருக்கும் அதே தாய்மைத்தானே செண்பகத்திற்குள்ளும் இருந்திருக்கும். அதுவும் மூன்று மாதங்கள் சுமந்து உயிரைபணயம்வைத்து, வலியோடு போராடித்தானே தன் குட்டிகளை ஈன்றது. அது பூனையானாலும் தன் குட்டிகளுக்கு அது தாய்தானே.. அதன் குட்டிகளை தூக்கிகொடுக்கும்போது செண்பகம் என்னைப்பார்த்தப் பார்வை இப்போது என் கண்முன் விரிந்தது.

“என் குட்டியை தூக்கிகொடுப்பதற்கு முன்பு என்னிடம் அனுமதி வாங்கினாயா..?” என்று என்னைக் கேட்பதுப்போல இருந்தது அந்தப் பார்வை. என் விழிகள் மெல்லக்கலங்கியது. திரும்பி செண்பகத்தைப்பார்த்தேன். உண்ணாமல் உறங்காமல் அட்டைப்பெட்டிக்குள் அது நடத்தும்பாசப்போராட்டமும், அதற்குள் இருக்கும் தாய்மையும்தான் அந்நேரம் என் கண்ணுக்குத் தெரிந்தது. அதன் அருகில் சென்று முதன்முறையாக தடவிக்கொடுத்தேன். அதன் குட்டிகளை தூக்கிக்கொடுத்த கோவத்தில் என்னைக் கடிக்கும் என்று நினைத்தேன், ஆனால் மாறாக செண்பகம் என் விரல்களை நக்கிக்கொடுக்க, குற்ற உணர்ச்சியில் என் கரங்கள் நடுங்கின. குட்டிகள் பால்குடிக்காதால் அதற்கு பால் கட்டிப்போயிருக்க என் நெஞ்சம் கனத்தது. எவ்வளவு வலித்திருக்கும் அதற்கு? எனக்கேப்பெரிய சந்தேகம்தான் அது மிருகமா..? இல்லை நான் மிருகமாயென்று? என் மகள் மீது செண்பகம் காட்டிய பாசத்தில் ஒருதுளிக்கூட அதன் குட்டிகள்மீதோ, செண்பகத்தின் மீதோ நான் காட்டவில்லையே. அந்தநேரம் செண்பகத்தின் தாய்மை முன் என் தாய்மை தோற்றுத்தான் போனது. தாய்மை என்பது பெற்றெடுப்பதில் மட்டும் இல்லை, பிறர்மீது பாசம் காட்டுவதிலும் இருக்கிறது என்று என் ஆரா எனக்கு புரியவைத்தாள்.

கண்களில் கண்ணீர் கரைப்புரண்டு ஓட, “சாரி செண்பகம்” என்று மனதார அதனிடம் மன்னிப்புக் கேட்டேன் அதை தடவிக்கொடுத்தப்படி. கோவம், அழுகை, அன்பு, பாசம், தாய்மை, காதல், பிடிவாதம் எல்லாம் மனிதர்களுக்கு மட்டும்தான் என்றுநினைத்திருந்தேன். ஆனால் ஓரறிவு புல் முதல் ஆரறிவு மனிதன் வரை அனைவருக்கும் அனைத்து உணர்வுகளும் சமமானது என்று செண்பகத்தால் இன்று உணர்ந்தேன். அடுத்தநாள் நானே நேரில் சென்று குட்டிகளை எடுத்துவந்தேன். தன் குட்டிகளைப்பார்த்த சந்தோஷத்தில் பெட்டிக்குள்ளிருந்து ஓடிவந்த செண்பகம் பாசம் பொங்க தன் நாவால் மூன்றையும் நக்கிகொடுக்க என் மனதிலிருந்த அழுத்தம் அப்போதுதான் மெல்ல மெல்ல குறைந்தது. இரண்டுநாட்களாக உண்ணாமல் இருந்த செண்பகம் முதலில் குட்டிகளின் பசியை ஆற்றியப்பின்னே எப்போதும் உணவு வைக்கும் கின்னத்தின் முன் வந்து நின்று கத்தியது. அது காலியாக இருக்கவே, முதன்முறையாக என் கையால் அதற்கு உணவு வைத்தேன். அன்றுப்போலவே அதன் பாஷையில் ஏதோ முனகிக் கொண்டே உண்டது. பசியையும் வீழ்த்தும் பலம் தாய்மைக்குமட்டும்தான் இருக்கிறது என்று புரிந்துக்கொண்டேன். மனிதனோ, மற்றஉயிரோ தாய்மை அனைத்திற்கும் பொதுவான ஒன்று. தாய்மையை போற்றுவோம். பிற உயிர்களின் உணர்வுகளை மதிப்போம்.

நன்றி!

Stories you will love

X
Please Wait ...