JUNE 10th - JULY 10th
கூரை வீடு:
ஐப்பசி மாத அடை மழையால் வீடு பூரா ஒழுகியது. எங்கள் வீடு பெரிய கூரை வீடு. எல்லா இடங்களிலும் பாத்திரத்தை வைத்து மழை நீரை வாங்குவோம். சுவர்களிலும் ஒழுகி மண்சுவர் கரைந்து கோடு கோடாக இருக்கும். மழை விட்டவுடன் மாமா கூரையில் ஏறி அதிகமாக ஒழுகிய இடங்களில் வைக்கோல் போடுவார், கருப்பு தார்ப்பாய் கட்டுவார். அடுத்த மழைக்கு ரொம்ப ஒழுகாது என்று நினைத்தால் அது தப்பான கணக்காகிவிடும். பிற இடங்களில் இன்னும் அதிகமாக ஒழுகும். எப்படியோ மழையோடு நனைந்தும், கரைந்தும் அந்த மழைக்காலம் முடிந்துவிடும். அடுத்த வருஷம் மழைக்குள் கீற்று போட்டுவிட வேண்டுமென்று மாமா மனதுக்குள் எண்ணிக்கொள்வார் போலும் ; திடீரென்று ஓர்நாள் மாலை மினி லாரியில் கீற்று கட்டுகளை ஏற்றி கொண்டு மாமா வேலை பார்க்கும் ஊரிலிருந்து ஆட்கள் வருவார்கள். மாமா அரசு வேலை பார்க்கிறார். எங்கள் குடும்பத்தின் மொத்த பொறுப்பும் மாமாவை சார்ந்தது. மாமா வேலைக்கு போகும் ஊரில் மாமாவிற்க்கு நல்ல பழக்கம். எங்கள் வீட்டிற்கு இரண்டாயிரம் கீற்று தேவைப்படும். சில நேரம் எங்கள் ஊரிலேயே கணேஷ் அண்ணன், வடுவம்மா அக்கா, பூமயிலு அக்கா எல்லாம் கீற்று பின்னி தருவார்கள். அதற்காக தென்னம்மட்டை தேடி வாங்குவதும் மிக சிரமம். எங்கள் ஊரிலும், வெளியூரிலும் சென்று வாங்கி, வண்டியில் ஏற்றி வருவோம். கீற்று பின்னியோ, வாங்கியோ தயாரானவுடன் மாமா ஒரு சனிக்கிழமை கீற்று போட பாப்பாநாட்டு ஆட்களிடம் சொல்லிவிடுவார்.
கீற்று கட்ட தென்னம்பாளை வேண்டும். இரண்டாயிரம் கீற்று கட்ட எப்படியும் நூறு நூற்றைம்பது பாளை தேவைப்படும். வடுவம்மா வீட்டு கணேஷ் அண்ணன் தென்னை மரம் நன்றாக ஏறுவார், அவரே பாளை அறுத்து தருவார். முதல் நாளே பாளையை ஐம்பது ஐம்பதாக கட்டி வெட்டுகுளத்து தண்ணியில கற ஓரத்துல ஊரவைக்கணும். பாள தண்ணியில நல்லா மூழ்குறதுக்கு கருங்கல்ல பாள நசுங்கிராம மேல வைக்கணும். மறுநாள் காலையில சீக்கிரமே போயி பாளைய எடுத்துகிட்டு வரணும். தண்ணில ஊறுன பாளை கணமா இருக்கும். தூக்குனா வழுக்கி வழுக்கிட்டு போகும். மெதுவா தூக்கி வண்டியில போட்டு வீட்டுக்கு கொண்டுவாரதுக்கும்.. பாப்பாநாட்டு ஆளுங்க வாரதுக்கும் சரியா இருக்கும். கீத்து போடுற ஆளுங்க பொதுவா ஒல்லியாதான் இருக்காங்க, கூரையில ஏறனுமுன்னு ஒல்லியா இருக்காங்களா? வறுமையால ஒல்லியா இருக்காங்களான்னு தோனும். அன்னைக்கும் ஒல்லியான அஞ்சு பேறு வந்தாங்க.
கீத்து போடுறதுன்னா கொஞ்சம் கஷ்டமான வேலைதான். வீட்டுக்குள்ள இருக்கிற எல்லா சாமான்களையும் வெளிய எடுக்கணும்.. பாய், துணிமணி, அரிசிகுவள, தண்ணிகுடம் இப்படி எல்லாத்தையும் எடுத்து வெளிய வைக்கணும். வீட்டுல எல்லாருக்கும் பெண்டு கலடும். வழக்கமா செய்யுற வேலைய விட அன்னைக்கு கூட வேலையிருக்கும்.
கீத்து போடுறவங்களோட முக்கியமான ஆயுதமே பாள கிழிக்கிற கத்திதான். சின்னதா இருக்கும்.. பிளேடு மாறி சர் சர்ன்னு பாளைய கிழிக்கும். பாளைய அதன் முன் பகுதிய சமமா நறுக்கிட்டு பாள கத்தியால பாளையின் நுனியில் நரம்பாட்டம் சின்ன சின்னதா கிழிப்பாங்க, அப்புறம் பாளைய அடியில மிதிச்சுகிட்டு நீள, நீள நரம்பாட்டம் கிழிச்சு , அடிய நறுக்கிட்டு, மடக்கி ஒரு கட்டு போட்டு கீத்த கட்ட தயாரா வைப்பாங்க. இந்த வேல முடிஞ்சவுடனே சிலர் வெத்துல போட்டுகிட்டே கீத்து போடும் வசத்த பாப்பாங்க. அன்னைக்கு தென்னங்காத்து அடச்சது . தென்னங்காத்து அடிக்குது வடக்காக ஆரம்பிப்போம் என்றார் ஒருவர். சரியென்று ஆமோதிச்சார் இன்னொருவர்.
இப்படி பேசிகிட்டே பழைய கூரையை பிரிப்பதற்கு வீட்டின் உள்பக்கமாக சென்று கருக்கருவா மூக்கால வெடுக்கு, வெடுக்குன்னு மூங்கி கம்புல சுத்தி கட்டியிருக்குற பழைய பாளைய அறுத்துவிட்டாங்க எல்லாரும். எட்டாத உயரத்துக்கு ஏணி மரத்த வச்சு எல்லா பளையையும் அறுத்துவிட்டாங்க. ஆனாலும் கீத்து சரியல. பழைய கீத்த கீழ தள்ளினாங்க. பழைய கீத்தெல்லாம் விழுந்தவுடனே வீடே ஒரே வெளிச்சமா இருக்கும். இவ்வளவு நாளா தேடுன சில சாமான்கள் இப்ப ஈசியா கண்ணுல படும். பரணி முழுக்க ஒரே வௌவால் புளுக்கையா இருக்கும். வௌவால வெரட்ட மாமா சொருகின ஈச்ச முள்ளும் கெடக்கும். அத பாத்தவுடன் ஆத்தங்கரையில நான் ஈச்ச முள்ளுவெட்டியதும், அப்பொழுது கையில் ஈச்ச முள்ளு குத்தியதும், இப்படித்தானே அந்த வௌவாலுக்கும் குத்தும் என்று நினைத்து வருந்தியதும், ஏன் அது வெளியே அடைய வேண்டியதுதானே? வீட்டிற்க்குள் வந்து அடைந்து வீட்டை அசிங்கம் செய்தால் வேறு என்ன செய்வது? எங்களுக்கு ஒரு வீடு அதுக்கு பல வீடு, என்று சமாதானம் ஆனதும் ஒரு கனம் மனதில் வந்து போனது. பழைய கீத்தெல்லாம் கீழே தள்ளியவுடன்... பூஞ்சி, தூசி, வௌவால் புளுக்கையெல்லாம் கூட்டி கீழே தள்ளினர். மூங்கி கம்பெல்லாம் நல்லா இருக்கா? உளு திண்ணிருக்கா? கட்டெல்லாம் ஒழுங்கா இருக்கா? ன்னு பாக்குறதுக்குள்ள மணி ஒன்பது ஆயிரும். அப்புறமென்ன, காலகஞ்சிதான்… சுடுகஞ்சியும், தொவையலும் சாப்புட்டு முடிச்சாப்புல கீத்துகட்ட மேல ஏத்துவாங்க. இனிமேல் தான் எனக்கும் என் தங்கைகளுக்கும் வேலை அதிகம். அவர்கள் பிரித்து தள்ளிய பழைய கீத்து எல்லாத்தையும் பொறுக்கி அடுக்கி ; கட்டு கட்டா கட்டி ; சாஞ்ச மாமரத்துல அடையனும். அது அந்த வயசுல கஷ்டமான வேலதான்; ஆனாலும் செய்வோம். நெல்லு அவிக்க இந்த பழைய கீத்து பயன்படும். முடிஞ்ச வரைக்கும் அனைத்தையும் பயன்படுத்தவதையோ அல்லது மறுசுழற்சி செய்வதையோ கிராம மக்கள் கடைபிடித்தனர். கீத்த கட்டி முடிக்கிறப்ப கை, மேலு எல்லாம் ஒரே கருப்பா கரியா இருக்கும். அடுப்பு புகை படிஞ்ச கரி. மூனு வருசமா எரிச்ச வெறகுலேர்ந்து கரி காத்துல நேரா கலக்காம இருக்க எங்க வீட்டு கூரை ஒரு தடுப்பான(Filter) இருந்து காத்த மாசுபடுத்தாம பாதுகாத்திருக்குன்னு எனக்கு அப்ப புரியல, இப்ப புரியுது. கீத்த கட்டி முடிச்சுட்டு சாஞ்ச மாமரத்து மேல தூக்கி வைப்பேன். பிறகு தூசியெல்லாம் கூட்டி அள்ளி குப்பையில போட்டு முடிக்கவும்; அவங்க நாலு பக்கமும் கீத்து போட்டு முடிக்கவும் சரியா இருக்கும்.
கீத்து போடுறதுல முக்கியமான விஷயம் மோடு மூடுவது. கொஞ்சம் கஷ்டமானதும் கூட. இரண்டுலேர்ந்து மூனு அடி நீள நல்ல உறுதியான கம்பை அஞ்சு ஆறு அடிக்கு ஒன்னா மோட்டுல குறுக்கு வாட்டத்துல கட்டுவாங்க. கீத்த கிட்டபுடிச்சு தைப்பாங்க. மோடு மூட நெறைய கீத்து தேவைப்படும். நல்லா நெருக்கமா போட்டு மேல கட்டு கம்பிய போட்டு கட்டுவாங்க. இப்ப வீடு முன்ன விட இருட்டா இருக்கும். வீட்டுக்குள்ள இருந்து பாத்தா ஒரு ஓட்டையும் தெரியாது. கீத்து போட்டு முடிச்சவடனே வீட்டு வாசல் படியில தொங்குற ஓலையெல்லாம் கத்தியால அறுத்து விடுவாங்க. பிறகு வேப்ப இலையை சொருகுவார்கள். வேப்ப இலையை சொருகியவுடன் குமரிபெண் தலைவாரி பூ வைத்தது போல் ரொம்ப அழகாக இருக்கும். பெண் பூ சூடுதல் அழகுக்கு தான் என்றாலும் வெறும் அழகு சார்ந்த விஷயமட்டுமில்லை; பூச்சூடும்போது உடல் உஷ்ணம் குறைகிறுது, பூவின் நறுமணம் சுவாசத்தின் மூலம் உள் சென்று மன அமைதியை தந்து சிந்தனையை சீராக்குவது போல ஆரோக்யம் சார்ந்ததுதான் வீட்டின் வாசல்படியில் வேப்ப இலை சொருகுவது காற்றின் மூலம் வாசல் படி வழியாய் வீட்டுக்குள் நுழையும் நோய் கிருமிகளை கொல்லத்தான் என்பதை உணர்ந்தேன்..வீடு முன்ன விட அழகா இருக்கும். பத்து நாளைக்கு புது வீடு மாதிரியே தெரியும். மழைய எதிர்பாத்துகிட்டே இருப்போம். இப்பெல்லாம் மழை வந்தா முன்னமாறி எரிச்சல் இல்லை. மழையின் உண்மையான குளிர்சியில் ஒரே ஜாலிதான். இன்று நாகரிகத்தின் வளர்ச்சியில் என்ன தான் மாடிவீடுகளிலும் , அடுக்கு மாடிவீடுகளிலும் வாழ்ந்தாலும் அந்த கூரைவிட்டின் வாசமும், மகிழ்ச்சியும், எளிமையும் மறைந்து கான்கிரீட் சுவர்களை போல மனித மனங்களும் இருகிவிட்டனவோ என்றே தோன்றுகிறது.
#419
Current Rank
30,720
Points
Reader Points 720
Editor Points : 30,000
15 readers have supported this story
Ratings & Reviews 4.8 (15 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
d.kesavan
Nice
Rekha
தென்னம்பாளைய கயிறு மாதிரி பயன்படுத்துவாங்களா..? கூரை வீடு - பழைய நினைவுகள்
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points