சாரிடி பொண்டாட்டி...

காதல்
4.7 out of 5 (62 Ratings)
Share this story

சாரிடி பொண்டாட்டி…

அழகிய மாலைப் பொழுதில், கண்ணாடி முன் நின்று தலைவாரி கொண்டிருந்த கார்த்திக் கண்ணாடியில் தெரிந்த கடிகாரத்தில் மணி நாலு என்று காட்ட, தன் கை கடிகாரத்தை பாரத்து நேரம் சரிதான் என்பதை உறுதி செய்தவன்,

"விழி டைம் ஆச்சு சீக்கிரம் வா" என்று குரல் கொடுக்க, அழகிய சிகப்பு நிற அனார்கலி சுடிதார் அணிந்து அவன் முன் வந்து நின்றாள் அவன் மனைவி மலர்விழி.

கார்த்திக் அவள் முகத்தை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தான். அதிகம் பேக்கப் இல்லாத முகத்தில் லேசாக பவுடர் மட்டும் போட்டிருந்தாள். புருவத்தின் மத்தியில் சிகப்பு நிறத்தில் வட்ட பொட்டு, வலதுபக்க முக்கில் பளீர் என்று ஜொலித்த ஒற்றைக்கல் வைர மூக்குத்தி, காதில் குட்டி ஜிமிக்கி என்று வட்டவடிவில் அழகாக இருந்த மலரின் முகம் நேற்று பூத்த மலர் போல் வாடி இருந்தது.

கார்த்திக், "போலாமா விழி?" என்ற கேள்விக்கு அவளிடம் இருந்து ஒரு சிறிய தலையசைப்பு மட்டுமே பதிலாக வந்தது. இது இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாக அவள் நடத்தும் அமைதி போராட்டம்.

கார்த்திக் இழுத்து மூச்சுவிட்டவன், "வா போலாம்" என்று முன்னே நடக்க, மலர் அமைதியாக அவன் பின்னே சென்றாள்.

கார்த்திக் தன் அருகில் அமர்ந்திருந்த மனைவியின் முகத்தை அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்தபடியே கார் ஓட்டிக்கொண்டு இருக்க, மலரின் முகம் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் ஆழ்கடல் போல் அமைதியாக இருந்தாலும், அவள் மனமோ பௌர்ணமி அலைகள் போல் அடக்காமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

கார்த்திகின் கல்லூரி நன்பன் ராமுக்கு குழந்தை பிறந்திருக்க, தன் மகிழ்சியை தன் நட்புகளோடு பகிர்ந்து கொள்ள நன்பர்கள் அனைவரையும் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தான். அங்கு தான் கார்த்திக் தன் மனைவியோடு சென்றுகொண்டு இருக்கிறான்.

பிறந்து பால் மணம் மாறாத அந்த பிஞ்சு குழந்தையின் ஸ்பரிசத்தில் மலர் லயித்திருக்க, அவள் இதழ்கள் அவளையும் அறியாமல் புன்னகைத்தது.

கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் கழித்து சிரித்த முகமாக தன் மனைவியை பார்த்த கார்த்திக்கின் உள்ளம் மகிழந்து போக, அந்த நேரம் தன் கணவனை பார்த்த மலரின் முகத்தில் இருந்த சிரிப்பு வந்த தடம் தெரியாமல் தொலைத்து போக, கார்த்திக்கு உள்ளே சுருக்கென வலித்தது.

கார்த்திக் முகம் வாடி இருப்பதை பார்த்த அவன் நன்பன் ராமின் மனைவி திவ்யா அவனிடம் என்ன என்று கேட்க,

"ஒன்னு இல்ல தங்கச்சிமா, கொஞ்ச நாள் முன்ன வீட்ல ஒரு பிரச்சனை. அதுக்கு மலர் தான் காரணம்னு அம்மா ஒரே சண்டை நானும் என்ன எதுன்னு தெரியாம மலரை நல்லா திட்டிட்டேன். அப்றம் தான் தொரிஞ்சுது தப்பு மலர் மேல இல்லனு, அதுல அவ எம்மேல கொஞ்சம் கோவமா இருக்கா திவிமா" என்றான் சோகமாக.

"சரி அண்ணி கோவமா இருந்த என்ன? நீங்க சமாதானம் பண்ண வேண்டியது தானா… அண்ணி ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங் புரிஞ்சிக்குவாங்க" என்ற திவ்யாவை பாவமாக பார்த்து கார்த்திக்,

"ம்க்கும் உங்க அண்ணிய நீதான் மெச்சிக்கணும்… நானும் சண்ட நடந்த நாள்ல இருந்து அவள சமாதானம் பண்ண பல வழில ட்ரை பண்ணி பாத்துட்டேன். இன்னும் குட்டிக்கரணம் போடல அது ஒன்னு தான் பாக்கி, அவ எதுக்கும் மசியல தங்கச்சிமா" என்றான் ஆற்றாமையாக,

அவன் சொன்ன விதத்தில் திவ்யாவோடு சேர்த்து அங்கிருந்த அவன் மற்ற நண்பர்களும் சிரித்த விட,

"சிரிங்கடா சரிங்க… நல்லா சிரிங்க, எம் பொழப்பு அப்டி ஆகிப்போச்சு" என்றவன் அருகில் வந்து அமர்ந்த திவ்யா,

"சாரிண்ணா… நீங்க சொன்னதை கேட்டதும் சட்டுன்னு சிரிப்பு வந்திருச்சு சோ சாரி" என்க,

"பரவாயில்ல திவி, இட்ஸ் ஓகே"

"சரி அண்ணா இப்ப சொல்லுங்க அண்ணியா கரெக்ட் பண்ண, ச்சீ சாரி அண்ணிய சமாதானம் பண்ண நீங்க என்னென்ன செஞ்சீங்க?"

"என்ன செய்யலனு கேளு திவி, உண்மை தெரிஞ்ச நாள்ல இருந்து எனக்கு மனசு கஷ்டமா போச்சு. அவளை எப்டியாது கன்வின்ஸ் பண்ணனும்னு அவ ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்டுட்டு இருந்த ஊட்டி ட்ரிப்க்கு மூணு நாள் லீவ் போட்டுட்டு கூட்டிட்டு போனேன். அவளுக்கு புடிச்ச கலர்ல புடவை, சல்வார்னு வாங்கி தந்தேன். இந்த பதினைந்து நாளில் ரெண்டு முறை அவ அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்துட்டேன். அவளுக்கு புடிச்ச எல்லாத்தையும் செஞ்சு பாத்துட்டேன்." என்று பெருமூச்சு விட்டபடி, "என்ன பண்ணி என்ன யூஸ். அவ கொஞ்சமும் அசையல" என்றவன் முகம் வாடிவிட, திவ்யா ஒரு நிமிடம் கார்த்திக்கை ஆழ்ந்து பார்த்தாள்.

"அண்ணி உங்க மேல கோவமா இருக்காங்கன்னு சொல்றீங்களே அப்டி அவங்க என்ன செஞ்சங்க, உங்க கூட தினமும் சண்ட போடுறாங்களா?" என்று கேட்க‍,

"அவ என்கிட்ட சண்டை போட்ட கூட பரவாயில்லன்னு தோணுது திவிம்மா. அப்டியாது அவ என்னோட பேசுறாளேன்னு சந்தோஷப்படுவேன். அவதான் நிமிர்த்து என் முகத்தை கூட பாக்கமாட்றாளே" என்றதும் திவி புருவம் சுருங்கி யோசித்தவள்,

"சரி அண்ணி பேசல ஓகே, மாத்தபடி வீட்ல எப்டி நடந்துக்குறாங்க…?"

"அதெல்லாம் எப்பவும் போல தான் இருக்க, எனக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் கரெக்ட் டைம்கு சரியா செஞ்சி வச்சிடுவா, எனக்கு என்ன தேவைனு நான் யோசிக்கும் முன்ன அவ செஞ்சி முடிச்சிடுவா… நைட் நான் எவ்ளோ லேட்ட வந்தாலும் முழிச்சிருந்து சாப்பாடு போடுவ" என்று அவன் மனைவின் பெருமைகளை பட்டியலிட, திவ்யா சன்னமான சிரித்தவள்,

"அப்றம் என்ன அண்ணா? அண்ணி தான் உங்களுக்கு செய்யவேண்டி எல்லாத்தையும் சரியா செய்யறாங்களே, அப்ப அவங்களுக்கு உங்கு மேல கோவம் இல்லைனு தானா அர்த்தம்"

"அப்டி இல்ல திவி… அவ எல்லாமே செய்ற தான். ஆனா, அதுல ஜஸ்ட் அவ எனக்கு பொண்டாட்டின்ற கடமை தான் தெரியுதே தவிற அவ மனசார செய்ற மாதிரி தெரியல. அவ முகத்தில் சிரிப்பை பார்த்து எத்தனை நாள் ஆச்சு தெரியுமா, அவ எனக்கு செய்றது எதுலயும் ஜீவனே இல்ல திவி" என்றவன் குரலில் அவன் மனைவி ஒதுகத்தின் பாதிப்பு அப்பட்டமாக தெரிந்தது.

"அப்ப நீங்க பண்ணது மட்டும் என்ன?" என்ற திவ்யாவின் கேள்வி புரியாமல் கார்த்திக் அவளை பார்க்க,

"நீங்க அண்ணி சமாதானம் செய்யணும்னு கடமைக்காக ஊட்டி, புடவை, சல்வார், அவங்க அம்மா வீடுன்னு கூட்டிட்டு போறதுன்னு செஞ்சீங்க, அவங்களுக்கு புருஷன்ற கடமைக்காக உங்களுக்கு செய்ய வேண்டிய எல்லாத்தையும் சரியா செஞ்சிருக்காக அவ்ளோதான். அவங்க செயல்ல ஜீவன் இல்லைனு சொல்ற நீங்க மட்டும் என்னத்த செஞ்சிருக்கீங்க" என்ற திவ்யாவின் கேள்வி கார்த்திக்கை தெளிவாக குழப்பியது.

"நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல திவி" என்றவனை பார்த்து மெலிதாக சிரித்த திவ்யா,

"கொஞ்சம் இருங்க வரேன்" என்று எங்கோ சென்றவள் பத்து நிமிடம் கழித்து வந்து கார்த்திக்கின் கையில் ஒரு பிங்க் நிற கவரை கொடுத்தாள்.

"என்ன திவிம்மா இது?"

"வீட்டுக்கு போனதும் அண்ணிகிட்ட இத நீங்க குடுக்குற மாதிரி குடுங்க, அண்ணி இத பிரிச்சு பாத்தா, கண்டிப்பா உங்ககிட்ட பழம் விட்டுடுவாங்க..‌‌. அதுக்கு அப்றம் தான் நீங்க இந்த கவர்ல என்ன இருக்குன்னு பாக்கணும் ஓகேவா" என்றவள் சற்று பொறுத்து,

"டோன்ட் டேக் எனி ஒன் ஃபார் டேக் இட் ஃபார் கிராண்டெட் அண்ணா… இத எப்பவும் ஞாபகம் வச்சிக்கோங்க" என்றவள் அங்கிருந்து சென்றுவிட, விருந்து முடிந்து கார்த்திக், மலர் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

கார்த்திக் தங்க அறைக்குள் சென்றவன் மெதுவாக. "விழிம்மா" என்று அழைக்க, அவள் திரும்பி, "என்ன' என்பதுபோல் பார்க்க, திவ்யா கொடுத்த கவரை அவள் முன் நீட்டினான்‌.

மலர் கார்த்திக்கை பார்த்தபடியே அதை கவரை வாங்கி பிரித்து, அதில் இருந்த பேப்பரை எடுத்து படித்து பார்த்தவள் கண்கள் லேசாக கலங்க, அவள் முகத்தில் லேசாக புன்னகை மலர்ந்தது. மெதுவாக இமைகளை உயர்த்தி கணவனை முகத்தை பார்த்தவள், சிறு விசும்பலோடு சட்டென அவனை தன்புறம் இழுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

கார்த்திக்கிற்கு ஒரு நிமிடம் என்ன நடந்ததென்று புரியவில்லை, தான் சட்டையின் இடது பக்கத்தில் ஈரத்தை உணர்ந்த பின்பு நிகழ்வுக்கு வந்தவன், தன்னவள் அழுகிறாள் என்று உணர்ந்து, "விழி… விழிம்மா ஏன்டா அழற, அழதடா, எனக்கு கஷ்டமா இருக்கு" என்றவன் அவள் முதுகை மெதுவாக வருடிக் கொடுக்க, மலர் அவன் நெஞ்சோடு பசை போட்டு ஒட்டியது போல் மேலும் அவனை தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.

கார்த்திக் மெல்ல அவள் கையில் இந்த பேப்பரை உருவி எடுத்தவன் அதில் எழுதி இருந்ததை பார்த்து அதிர்ந்தே விட்டான்.

'திவ்யா சொன்னது எவ்ளோ உண்மை, நான் விழியை எப்டியாது கன்வின்ஸ் பண்ணனும்னு ட்ரை பண்ணனேனே தவிர, அவ உள்ளுக்குள் என்ன நினைக்கிறான்னு யோசிக்காமயே விட்டுட்னே… அவ செயல்ல ஜீவன் இல்லைனு சொன்னேனே… அப்ப நான் செஞ்சது மட்டும் என்ன? போற போக்குல லேசா யார் காலையாது மிதிச்ச, இல்ல முன்னபின்ன தெரியாத யார் மேலயாது மோதிட்ட சாரி சாரின்னு எத்தனை தடவை சொல்றேன். ஆனா, விழி என் பொண்டாட்டி, என்னோட எல்லாமே அவதான். அப்டிபட்டவகிட்ட ஏன் நான் செஞ்ச தப்புக்காக இதுவரை ஒரு சாரி கூட கேக்கணும்னு எனக்கு தோணல… முன்னபின்ன தெரியத மூணாவது மனுஷனுக்கு தர்ர ஒரு சாதாரண மரியாதையை ஏன் எம் பொண்டாட்டி தரணும்னு நான் யோசிக்கவே இல்ல…' என்று யோசித்தவனுக்கு திவ்யா சொன்ன 'டோன்ட் டேக் எனி ஒன் ஃபார் டேக் இட் ஃபார் கிராண்டெட்' என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

தன் தோளில் சாய்ந்திருந்த மனைவியை இறுக்கி அணைத்தவன் அவள் காதோடு, "சாரிடி பொண்டாட்டி" என்று உள்ளிருந்து உணர்ந்து சொல்ல, கார்த்திக்கின் மலரின் முகம் அன்றலர்ந்த மலராக மலர்ந்து போனது.


மகிழ்ச்சி எங்கும் மலரட்டும்…

அன்புடன்

..ரூபாவதி

Stories you will love

X
Please Wait ...