JUNE 10th - JULY 10th
தலைப்பு: கடமை
“அப்பா, உடம்பு நல்லாருக்கா, உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று அம்மா சொன்னாங்களே, இப்போ எப்படி இருக்கு?”
“நேற்று வரைக்கும் தான் காய்ச்சலா இருந்தது. இன்றைக்கு கொஞ்சம் உடம்பு வலி மட்டும் தான், மற்றபடி வேற எந்த பிரச்சனையும் இல்லை” என தன்னுடைய மகன் மோகன் விசாரித்ததற்கு பதில் கூறினான் இராஜன்.
“சரி அப்பா, நான் அலுவலகத்துக்குப் போயிட்டு வந்துடுறேன். நன்றாக சாப்பிட்டு ஓய்வெடுங்க” எனக் கூறி வேலைக்குப் புறப்பட்டான் மோகன்.
நாட்களும் கடந்தது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இராஜனைக் கவனிக்கும் போதெல்லாம் அவர் சோர்வாக இருப்பது போன்றே உணர்ந்தனர். ஆனால், இராஜன் மட்டும் அனைவரிடமும் நலமாக இருப்பதாகவே கூறிக் கொண்டிருந்தார்.
அச்சமயம் டிரிங், ட்ரிங் என்று தொலைப்பேசி மணி அடிக்க அழைப்பை எடுத்துப் பார்த்த மோகன், அழைப்பில் தன்னுடைய மாமா முருகன் என்பதை அறிந்து “வணக்கம்” சொல்வதற்குள் மறுமுனையில் “மாமா எப்படி டா இருக்காரு?” என்று நலம் விசாரித்த முருகனிடம் “இப்பொழுது காய்ச்சல் இல்லை மாமா, உடல்தான் சோர்வாக உள்ளதாம், எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார்” என்று பதிலளித்தான்.
“ஒரு வாரம் ஆகியும் உடல் பழைய நிலைக்கு வரவில்லையே; சரி, உடனடியா மருந்தகத்துல உயிர்வளி (ஆக்சிஜன்) அளவிடும் கருவியை வாங்கிட்டு போய் உயிர்வளி அளவு எவ்வளவு இருக்குனு பாரு” என ஆலோசனைக் கூறி தொலைப்பேசியைத் துண்டித்தான் முருகன்.
அப்பொழுது இரவு நேரம் பத்து மணியைக் கடந்து இருந்தது. எனினும், மோகன் சற்றும் யோசிக்காமல் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மருந்தகத்தைத் தேடி அலைந்தான். ஒரு வழியாக மருந்ததகத்தைக் கண்டுபிடித்து உயிர்வளி அளக்கும் கருவியைக் கடைக்காரரிடம் கேட்க கடைக்காரரும் எடுத்துக் கொடுத்தார். முதன்முறையாக அக்கருவியைக் கண்ட மோகன் அதனை பயன்படுத்தும் முறையை அறிந்துக் கொண்டு விரைவாக மருந்தகத்திலிருந்து வீட்டிற்குப் புறப்பட்டான். அக்கருவியைக் கொண்டு தன் தந்தைக்கு உயிர்வளியின் அளவைக் கணக்கிட்டான்.
உயிர்வளி 87, 88 என மாறி மாறிக் காட்டுவதை அறிந்து தன் மாமா முருகனுக்கு தொலைப்பேசியின் மூலம் விவரத்தைக் கூறினான். அவரும் “பார்த்துக் கொள்ளலாம். நான் மருத்துவரை ஆலோசனை செய்கிறேன். இரவு முழுவதும் அவரை கண்காணித்துக் கொண்டே இரு” எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
பிறகு, வெளியூரில் உள்ள தன்னுடைய மச்சான் வேலு, நெஞ்சாங்குலை சிகிச்சை (இருதய) மருத்துவர் என்பதால் தொலைப்பேசியில் அழைத்து நடந்தவற்றைக் கூற அவரோ “உடனே மருத்துவமனையில் அனுமதிப்பதே சிறந்தது. காலத்தை கடத்த வேண்டாம்” என அறிவுரை வழங்கினார்.
கொரோனா என்னும் ஆளைக் கொல்லும் தீநுண்மி பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கும் காலச் சூழல் என்பதால் கொரோனா தொற்றாக இருக்குமோ என்று சந்தேகித்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரிடமும் அவற்றிலிருந்து விடுபட்டவர்களிடமிருந்தும் விவரத்தைக் கேட்டு பல்வேறு ஆலோசனைகளைப் பெற்ற மோகன் இரவு முழுவதும் தூக்கமில்லாமல் தன்னுடைய தந்தை இராஜனின் நிலைமையை கவனித்தவாறே இருந்தான்.
இரவு விலகி வெளிச்சம் வரத் தொடங்கியதும் தன் தாயிடம் சென்று “அப்பாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டும். விரைவாகக் காலை சிற்றுண்டியைத் தயார் செய்யுங்கள்” எனக் கூறினான்.
“கொரோனா சூழல் என்பதால் மருத்துவமனைக்குச் சென்றால் எதை எதையோ சொல்வார்கள் அங்கே, அழைத்து செல்ல வேண்டாம் வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம்” என்று பதற்றத்துடன் கூறினாள் மோகனின் அம்மா ராதா.
தன்னுடைய தாய், தந்தை இருவரிடமும் பொறுமையாக எடுத்துக்கூறி எதற்கும் பயப்பட வேண்டாம் என தைரியம் அளித்த மோகன் மருத்துவமனையில் தங்குவதற்கு தேவையான பொருள்களை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
அந்நேரம் மோகனின் சகோதரி தொலைபேசியில் அழைக்க, அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போவதைக் கூறினான். “இராகுகாலம் 7.30 முதல் 9.00 மணி வரை உள்ளதால் 9 மணிக்கு மேல் புறப்படு எனவும் அடிக்கடி கைப்பேசியில் அழைத்துக்கிட்டே இரு” எனக் கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
மணியும் ஒன்பது ஆனது. மகிழுந்து வண்டியைத் தயார்படுத்தச் சென்றான் மோகன். அதற்குள் ராதா கிழக்குப் புறமாக இராஜனை அமர வைத்து இறைவனிடம் வேண்டிக் கொண்டு மஞ்சள் துணியில் காசை முடிஞ்சு இராஜனின் கையில் கட்டினாள். நல்லபடியாக உடல்நிலை சரியாகி வீட்டிற்கு வந்தவுடன் திருப்பதி வந்து தரிசனம் செய்வதாக வேண்டிக் கொண்டாள்.
மூவரும் மருத்துவமனைக்குச் சென்றனர். இராஜனுக்கு உயிர்வளி (ஆக்சிஜன்) அளவு குறைந்துக் கொண்டிருப்பதை மருத்துவரிடம் கூறியதும் உடனே விரைவுகாலச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்த மருத்துவர்கள் சற்றும் காலம் தாழ்த்தாமல் உயிர்வளி அளவைக் கணக்கிட, மறுபுறம் இராஜாவுக்கு செயற்கை உயிர்வளி கொடுக்கும் கருவியை முகத்தில் பொருத்தினர்; இன்னொருபுறம் செவிலியர் நெஞ்சாங்குலை மின் வரைவு (இசிஜி) கருவியை எடுத்து வந்து சோதித்தார். இவ்வாறாக, எவ்வளவு விரைவாக செயல்பட முடியுமோ அவ்வளவு வேகமாக மருத்துவர்களும், செவிலியர்களும் செயல்பட்டனர்.
இராஜாவிடமிருந்து குருதி, சிறுநீர் ஆகியவற்றைச் சோதனை செய்வதற்காக சேகரித்தனர். பிறகு, ’ஒலிக்கதிர் தடவியறிதல்’ (ஸ்கேன்) எடுப்பதற்காக செவிலியர் இராஜாவை தள்ளுவண்டியில் அமரவைத்து தள்ளிக் கொண்டு செல்ல உயிர்வளி உருளையை (சிலிண்டர்) அவருடன் இழுத்துச் சென்றான் மோகன்.
பிறகு கொரோனா தொற்றும் அதிகரித்துக் கொண்டிருப்பதால் இராஜாவுக்கு கொரோனா சோதனையும் எடுக்கப்பட்டது.
“உயிர்வளி அளவு குறைந்துள்ளது, அதனால் செயற்கை உயிர்வளி துணையோடு சுவாசிக்க கருவி பொறுத்தியிருக்கோம். எல்லா சோதனையும் எடுத்து இருக்கோம்; முடிவு நாளைக்குத் தான் தெரியும்; அதுவரைக்கும் பொறுத்து இருப்போம்” எனக் கூறினார் மருத்துவர்.
மருத்துவர் கூறியதை தன்னுடைய மாமா முருகன் மற்றும் மச்சான் வேலு ஆகிய இருவரிடம் எடுத்துரைத்தான். அதற்கு, அவர்கள் இருவரும் உயிர்வளி அளவு குறைந்தால் உடனே மருத்துவரிடம் கூறுமாறு அறிவுறுத்தினார்கள்.
பிறகு, தன்னுடைய தாய் ராதாவிடம் சென்று “அப்பா நலமாக இருக்கிறார். இரண்டு நாட்களில் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க” என ஆறுதல் கூறி ஒரு தானி வண்டி (ஆட்டோ) பிடித்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தான்.
தன் தந்தையின் அருகில் அமர்ந்துக் கொண்டு முகத்தில் உள்ள செயற்கை சுவாசக் கருவி நகராமலும் உயிர்வளியைக் கொண்டு வரும் குழாயில் தண்ணீர் குறையாமலும் உயிர்வளி அளவு ஓடும் கருவியில் அவற்றின் அளவையும் கண் சிமிட்டாமல் கவனித்துக் கொண்டே இருந்தான்.
இரவு இரண்டு மணி ஆயிற்று உயிர்வளியின் அளவு சீராக இருந்தாலும் நெஞ்சாங்குலைத்துடிப்பின் அளவு குறைவதைக் கண்ட மோகன் பதற்றத்துடன் ஓடிச் சென்று மருத்துவரிடம் கூறினான். சற்றும் காலம் தாழ்த்தாமல் ஓடி வந்து பார்த்த மருத்துவரும் ஒரு ஊசியைச் செலுத்தினார். அதன்பிறகே இராஜனின் உடல் சீரான நிலைக்குச் செல்ல தொடங்கியது. இச்சீர் நிலையைக் கண்ட பின்னரே மோகனின் மனம் அமைதியடைந்தது.
இரவு முழுவதும் தூக்கமில்லாமல் கண் விழித்துப் பார்த்துக் கொண்ட மோகன் பெரிய மருத்துவர் வருவதைக் கண்டு இரவில் நடந்த செய்தியைக் கூறினான். “இயல்பாகவே தூங்கும் போது அதிகாலையில் அனைவருக்கும் நெஞ்சாங்குலைத்துடிப்பு குறைவாகத்தான் இருக்கும், கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் கூறிச் சென்றார்.
படுக்கையை விட்டு இராஜன் எழுந்திருக்கக் கூடாது என்பதால் காலைக்கடன்களை படுக்கையிலே செல்வதற்குண்டான வசதிகளைச் செய்து அவற்றை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தினான். ஒவ்வொரு சோதனையின் முடிவுகளும் வெளிவந்த வண்ணம் இருந்தன. தேர்வில் தேர்ச்சி பெறும் ஒரு மாணவனைப் போன்று ஒவ்வொன்றின் முடிவு வரும்போதும் மோகனின் நெஞ்சாங்குலைத்துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.
சிறுநீரில் யூரியா சரியாக உள்ளது. குருதியில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் போன்றவை சரியாக உள்ளது என்று அடுக்கடுக்காக மருத்துவர் கூறிக் கொண்டே இருக்க, குறுக்கிட்ட மோகன் “பத்து வருடத்திற்கு முன்பு நெஞ்சாங்குலையில் அதரி (வால்வு) பொறுத்தப்பட்டுள்ளது என்பதைக் கூறி இப்போ எடுக்கப்பட்ட நெஞ்சாங்குலை மின்வரைவு படம் எவ்வாறு உள்ளது?” என்பதைக் கேட்டறிந்தான்.
’இசிஜி’ யும் சரியாகத்தான் உள்ளது என்று மருத்துவர் கூறியதைக் கேட்டு மனநிறைவு அடைவதற்குள் கொரோனா சோதனையில் இராஜாவுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்கள்.
“குக்கிராமத்தில் இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் இருப்பதோ பக்கா நகரத்தில் இவ்வளவு தாமதமா கொண்டு வந்து இருக்கீங்க” என மருத்துவர் மோகனைக் கடிந்து கொண்டு இராஜாவை கொரோனா வார்டுக்கு மாற்றம் செய்தார்.
கொரோனா சிகிச்சை பிரிவில் இராஜாவுக்கு செயற்கை உயிர்வளி தொடர்ச்சியாக செலுத்தப்பட்டது. நேரமும் கடந்தது மின் தடவியறிதல் (ஸ்கேன்) சோதனையின் முடிவும் வந்தது. ’16/25’ என்று செவிலியர் கூற ஒன்றும் புரியாமல் மீண்டும் மீண்டும் விளக்கத்தைக் கேட்டறிந்தான் மோகன்.
“நுரையீரல் 64% சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது. அதாவது 25 பகுதியில் 16 பகுதி சேதம் அடைந்துள்ளது. 9 பகுதியே மீதம் உள்ளது மிகவும் தீவிரக் கட்டத்தில் உள்ளார்” என்னும் பெரும் இடியைத் தூக்கி மோகனின் தலையில் வைத்தார் செவிலியரும் மருத்துவரும்.
தன்னுடைய மனக்குமறல்களையும் அழுகையையும் கட்டுப்படுத்திக் கொண்டு தன்னுடைய தாய், சகோதரி மற்றும் அனைவரிடமும் அப்பா நலமாக இருப்பதாகவும் கூடிய விரைவில் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்து விடுவார் எனக் கூறி அவர்களைத் தேற்றினான்.
அவனின் விருப்பத் தெய்வத்தை வேண்டிக்கொண்டு கொரோனாவுடன் போராடி தன் தந்தையைக் காப்பாற்ற முற்பட்ட மோகன் இரண்டாம் நாள் இரவும் தூங்கக்கூடாது என்ற மன உறுதியுடன் தன் தந்தையின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டு கவனித்தான்.
முதல் நாள் இரவு போன்றே இரண்டாம் நாளும் இரவு இரண்டு மணிக்கு மேலே தன் தந்தைக்கு உயிர்வளியின் அளவு குறைவதைக் கண்ட மோகன் உடனே, ஓடிச் சென்று மருத்துவரிடம் கூற அங்கேயிருந்த மருத்துவரும் செவிலியரும் பார்த்து பெரிய மருத்துவருக்கு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு நடந்ததைக் கூறினார்கள்.
பெரிய மருத்துவர் உடனே ராஜாவை விரைவுக்காலச் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றச் சொல்லி உத்தரவிட்டார். இராஜாவை கொண்டுச் செல்வதற்கு ஒரு பக்கம் நாற்காலி வண்டியும் உயிர்வளி உருளையும் தயாராயின. மறுபக்கம் விரைவுக்காலச் சிகிச்சைப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் கண்களில் கண்ணீருடன் எது நடந்தாலும் மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பல்ல என்ற உறுதிமொழி கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தான் மோகன்.
மிகவும் தீவிர கட்டத்திற்கு செல்வதால் தன் மாமா முருகனிடம் தகவல் தெரிவித்து உடனே ஊரிலிருந்து கிளம்பி வரும்படி கதறினான். அனைவரும் உடனடியாக கிளம்ப, “நீ பார்த்து பத்திரமா இருடா, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நீ மருத்துவமனையில் இருப்பதே எங்களுக்கு ஒவ்வொரு நாளும் பதற்றமாக இருக்கிறது. விரைவுகாலச் சிகிச்சைப் பிரிவில் நீ போக வேண்டாம் மோகன் உனக்கு எதாவது ஆகிவிட போகுது, பயமாக இருக்குடா” என்று கூறினான் முருகன். ஆனாலும் தன் தந்தையைக் காப்பாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தான் மோகன்.
தன் மனைவியை தொலைப்பேசியில் அழைத்து “இரண்டு மகள்களையும் பத்திரமா பாத்துக்கோ, வெளியே எங்கேயும் செல்ல வேண்டாம். கொரானோ ரொம்ப அதிகமாயிட்டு இருக்கு, உயிர்பலியும் அதிகரிக்கிறது. நான் விரைவில் வந்துவிடுவேன் பயப்படாம இரு” என ஆறுதல் கூறிய மோகனுக்கு விரைவுக்காலச் சிகிச்சைப் பிரிவுவில் தங்கிய ஒவ்வொரு நாள் இரவும் மரண வேதனை நாட்களாகவே சென்றது. எப்படியாவது ஒரு நாளைக்கு ஒரு பிணமாவது அப்பிரிவிலிருந்து வெளியே செல்லும். இதை எல்லாம் சகித்துக் கொண்டு மன தைரியத்துடன் தன் தந்தைக்கு எதுவும் தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டான்.
ஒவ்வொரு செவிலியரிடமும் மருத்துவரிடமும் தன் தந்தையின் நிலையைக் கேட்டுக் கொண்டே இருந்த மோகன் தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய மருத்துவ நடவடிக்கைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு செவிலியருக்கு அவ்வப்போது நினைவூட்டி தன் தந்தையின் உயிரைத் தக்க வைக்க முயற்சித்துக் கொண்டே இருந்தான்.
ஒரே வரியில் சொல்லப் போனால் பச்சிளக் குழந்தைக்கு ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தைக்கு பணிவிடை செய்வாளோ அத்தனையையும் முகம் சுளிக்காமல் அவனுடைய அப்பாவை மீண்டு வரவைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தான் .
மோகனின் போராத காலம் அவனுடைய அம்மாவிற்கும் கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒருபுறம் தன் தந்தையின் நிலை, மறுபுறம் தன் தாயின் நிலை இரண்டையும் ஒருவனாக இருந்து போராட வேண்டிய சூழலில் தள்ளப்பட்டான். ராதாவுக்கு கொரோனா தொற்று என்பதையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் ராஜனுக்கு தெரியாமலும் ராஜனுக்கு அளிக்கும் சிகிச்சை என்னவென்று ராதாவுக்கு தெரியாமலும் முகத்தில் சிரிப்பை வரவைத்துக் கொண்டே காலத்தை ஓட்டினான்.
உறவுகள் பல இருந்தும் அவர்களுக்கு உதவி புரிய மனமிருந்தும் உறவுகளை ஒன்றாகச் சேர விடாமல் கொரோனாவின் பெருந்தொற்று கோரத் தாண்டவம் ஆடியது. யாரும் இல்லாத நிர்கதியாக தன்னந்தனியாக நின்றாலும் அனைவரின் எண்ண ஓட்ட அலைகள் மோகனுக்கு சக்தியையே கொடுத்தது.
படிப்படியாக தந்தையின் நிலையும் தாயின் நிலையும் சீராகிக் கொண்டு வந்தது. ஆளாளுக்கு கொரோனா தொற்றைக் கண்டு பயப்படுவதும் வெறுப்பதும் தள்ளியிருப்பதுவுமாக இருந்தனர். கொரோனா நோயாளிகளின் மத்தியில் தன் தாய் தந்தையின் உயிருக்காக தன்னை பணயம் வைத்து பெற்றோரைக் காப்பாற்றிய மோகனின் கடமை உணர்ச்சியை எண்ணி கொரோனா தானாகவே தோல்வியைத் தழுவிக் கொண்டு மோகனுக்கு வெற்றியையே தந்தது.
கொரோனா பெருந்தொற்றைக் கண்டு பயந்த மக்களிடையே மோகன் மட்டும் அத்தொற்றிற்கு நன்றி செலுத்தினான். தன் தாய், தந்தைக்கு பணிவிடை செய்ய வாய்ப்பு கொடுத்தமையை எண்ணி.
#213
Current Rank
32,120
Points
Reader Points 2,120
Editor Points : 30,000
44 readers have supported this story
Ratings & Reviews 4.8 (44 Ratings)
mithrameruthune20112015
saisuresh6172
மிக அருமையான கதை. இக்கதையை படிக்கும் போது போன மாதம் என் அம்மா கொரானோ சிகிச்சை பெற்ற நினைவுகள் வந்து சென்றன.
agila.dkr
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points