அமெரிக்க நிலா! அதிர்ஷ்டக்கார நிலா!

jeyamaran
உண்மைக் கதைகள்
0 out of 5 (0 Ratings)
Share this story

கொரோனாவின் தம்பி டெல்டா தன் ஆட்டத்தைக் குறைத்துச் சற்றே அடங்கியிருந்த நேரம் அது. ஓராண்டு காலமாக நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணங்கள் அவசர அவசரமாக நடந்தேறின. அப்படி ஒரு தமிழ் அமெரிக்கத் திருமண விழா தான் அது.

சி டி சி (Center for Disease Control, USA)யை நம்புவதா? கபசுரக் குடிநீரை நம்புவதா? என்ற குழப்பத்தில் பெரியவரெல்லாம் முகக் கவசத்தைப் போடுவதும் கழற்றுவதுமாய்க் குழம்பிக் கொண்டிருக்க, இளையவரோ, குலசாமி சொன்னது போல சி டி சி சொன்னதை வேதவாக்காக எடுத்து, முகக் கவசமின்றி இன்பமாய்த் திரிந்தனர். புதிதாகப் பிறந்திருந்த கொரோனா காலக் குழந்தைகள், கவசமணிந்த முகமொன்று, கவசமணியாத முகமொன்று என இரட்டைப் புது முகங்களைப் பார்த்துப் பார்த்து மிரண்டார்கள். ஒன்றரை வருட வீட்டிருப்பு, சிறு சிறு மனஸ்தாபங்களை மறக்கடித்து எல்லோரையும் மலர வைத்திருந்தது. தாயகத்திற்குச் செல்ல முடியாத தவிப்பையும், சென்ற போது வாங்கி வந்த புடவைகளையும், நகைகளையும் போட்டுக் காட்ட கொலுவோ, கொண்டாட்டமோ, சிறு விருந்துகளோ கூட இல்லாத தவிப்பையும் மொத்தமாகத் தீர்த்தது இந்தத் திருமணம். கவசங்களுக்குள் ஒளிந்திருந்த அடுக்குப் பற்களின் சிரிப்பு அழகுக் கண்களின் வழியாக எட்டிப் பார்த்தது.

மணமக்களின் தாத்தாவும் பாட்டியும் தாயகத்திலிருந்து திருமணத்திற்கு வர முடியாத போதும், தூரத்து உறவினர்கள், நண்பர்கள் கூட வந்ததில் எல்லையற்ற சொந்தங்களால் யாவரும் கேளிராய் நிறைந்திருந்தது புலம் பெயர்ந்த தமிழர் திருமண மணடபம்.

சரியாகக் காலை ஏழு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பிற்கே சென்றுவிட்டாள் முல்லை. கோயிலுக்குள் மாப்பிள்ளையின் பெற்றோர் உடனிருக்க மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார் குருக்கள். எல்லோரும் சுற்றி நின்று கொண்டிருந்ததால் திருவிழாவில் சாமியை எட்டிப் பார்ப்பது போல எட்டி எட்டிப் பார்க்க வேண்டியிருந்தது. சடங்குகளை அல்ல. மகனுடைய திருமணத்தின் போது அந்தத் தாய் தந்தையரின் முகத்தில் தெரியும் பூரிப்பை. தங்கள் பிள்ளைகளின் திருமணத்தின் போது பெற்றோரின் முகத்தில் தெரியும் அந்த நிறைவான அழகை வருணிக்க வார்த்தைகள் உண்டா? அக அழகோடு புற அழகும் சேர்ந்து மாப்பிள்ளையின் அம்மா (முல்லையின் தோழி) கண்மணி ஜொலித்தார். சடங்குகள் முடிந்து மாப்பிள்ளை அழைப்பிற்காகக் கோயிலிலிருந்து வெளியே வரும் போது கண்மணியின் அருகில் செல்ல வாய்ப்புக் கிடைத்தது முல்லைக்கு. 'மாப்பிள்ளை அழைப்பு முடிஞ்சவுடன தான் பொண்ணக் காட்டுவாங்கன்னு சொன்னாங்க. பொண்ணு இங்க தானப்பா இருக்கு!' என்று கிண்டலடித்து அவளை வெட்கப்பட வைத்து, மனதார வாழ்த்திவிட்டுக் கூட்டத்தோடு வெளியே வரும்போது தோழிகள் ஓவியாவும் இன்பாவும் எதிர்ப்பட, அவர்களோடு பேசிக் கொண்டே நடந்தாள் முல்லை.

வெளியே அலங்காரம் செய்யப்பட்ட குதிரை தயாராக நின்று கொண்டிருந்தது. குதிரை ஏற்றம் பழகியவர் போல வேட்டியோடு ஒரே தாவில் குதிரையில் ஏறி அனைவரின் ஆரவாரத்தையும் பெற்றார் தமிழ் அமெரிக்க மாப்பிள்ளை. மேளதாளத்தோடு மாப்பிள்ளை அழைப்பு ஜோராகத் தொடங்கியது. எல்லோரும் கலகலப்பாகப் பேசிக் கொண்டு, மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு, கோயிலை ஒரு சுற்றுச் சுற்றி, கோயில் வளாகத்திலேயே இருந்த திருமண மண்டபத்தை அடைந்தார்கள்.

வாசலில் மாப்பிள்ளையையும், கூட்டத்தையும் அப்படியே நிற்கச் சொல்லிவிட்டு, திருமண மண்டபத்திற்குள் இருந்து பெண்ணை அழைத்து வந்தார் பெண்ணின் மாமா. கூடவே சில பெண் வீட்டுப் பெண்களும் வந்தார்கள். பெண்ணின் முகம் ஒரு பட்டுத் துணியால் மறைக்கப்பட்டு இருந்தது. வெளியே வந்ததும், துணியை விலக்கி பெண்ணைக் காட்டினார்கள். பெண்ணை முதன் முதலில் திருமணத்தின் போதே பார்க்கும் அந்தக் காலங்களில் இருந்த இந்தச் சம்பிரதாயம், நன்கு பழகிப் பார்த்துத் திருமணம் செய்யும் இந்த நவீன அமெரிக்க யுகத்தில் பெரிய நகைச்சுவையாக இருந்தது. அதற்காகவே பலர் அதை ரசித்ததும், இந்தத் தருணத்திற்காகவே தங்களுடைய வெட்கத்தைச் சேமித்து வைத்திருந்தது போல மாப்பிள்ளையும் பெண்ணும் வெட்கப்பட்டதும் இன்னமும் கூட அந்தத் தருணத்தை அழகாக்கியது. பெண், தேவதை போலவே இருந்தாள்.

பெண்ணின் மாமா பெண்ணைக் காட்டிவிட்டு உள்ளே கூட்டிச் சென்றுவிட, மாப்பிள்ளை அழைப்புக் கூட்டம் மொத்தமும் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தது. மாப்பிள்ளையையும் பெண்ணையும் மேடையில் இடப்பட்டிருந்த மணவறையில் அமரச் சொல்லித் தன் வேலையைத் தொடங்கினார் குருக்கள்.

திருமணம் என்றாலே சாப்பாடு தானே! மாப்பிள்ளையின் பெற்றோர் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை எல்லாம் ஒருவர் விடாமல் வாங்க! வாங்க! என்று வாஞ்சையாய் வரவேற்றதில் நட்புக் கல்யாணம் கூட நம்ம வீட்டுக் கல்யாணமானது. சாப்பீட்டீர்களா? என்று கேட்டுக் கேட்டு மண்டபத்திற்குப் பின்னால் இருந்த சாப்பாட்டுக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். முல்லையும் தோழிமாருடன் சாப்பிடச் சென்றாள். சாப்பாட்டுக் கூடத்தில் நீள நீளமாக நாலைந்து வரிசைகளில் மேசை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பல உறவினர்களும், நண்பர்களும் இருந்து எல்லோரையும் வரவேற்று காலியான இடங்களைக் காட்டி உட்கார வைத்து, இலை போட்டு, தண்ணீர் வைத்துப் பரிமாறினர். இட்லி, வடை, பனியாரம், பொங்கல், கேசரி, இடியாப்பம், சாம்பார், தேங்காய், புதினா, மிளகாய் என வித விதமான சட்னிகள் எனக் காலை உணவே களை கட்டியது. காலையில் வேலைக்குப் போகும் அவசரத்தில் ஓட்ஸும், ரொட்டியும் தின்று தின்று சலித்த நாக்கும், வயிறும் உச்! கொட்டி உண்டன இந்த ராஜ விருந்தை.

சில பெரியவர்கள் வழி நடத்த, நிறைய உறவுக்கார/நட்பு இளைஞர்கள் (18 முதல் 25 வயது) பட்டு வேட்டி, சட்டையுடன் கொஞ்சும் அமெரிக்கத் தமிழில் கேட்டுக் கேட்டுப் பரிமாறியதில் ருசி கூடியது. 'ஏ! அந்தப் பையன் அழகா இடியாப்பம்னு சொல்றான். அவனக் கூப்பிட்டு இன்னொரு முறை இடியாப்பம் வைக்கச் சொல்லப் போறேன்' என்று அவனை வரச் சொல்லி இடியாப்பம் வாங்கிக் கொண்டு இனிமையாய்ப் பாராட்டியும் அனுப்பினாள் முல்லை. ஆஜானுபாகுவான இளைஞனையும் ஐந்து வயதுக் குழந்தையாக்கும் பக்குவம் அன்னைத் தமிழுக்கே உண்டு என்று ஓவியா வியக்க, “சாம்பார் ஊத்தின பையன் எவ்வளவு பணிவா கேட்டுக் கேட்டு சிந்தாம ஊத்தினான்ல” என்று இன்பா நெகிழ, “நீ என்ன தான் சொல்லு! இடியாப்பம் வச்ச பையனை மட்டும் மறக்கவே முடியாது” தன் தோழியரிடம் கூறி மகிழ்ந்தாள் முல்லை. என்னை இவ்வளவு அழகாக் கூப்பிட முடியுமான்னு இடியாப்பமே கிறங்கிருச்சு போல. அதான் அவ்வளவு சிக்கல்! “என்று உண்ட மயக்கத்தோடு கண்ட காட்சிகளைப் பற்றிப் பேசிச் சிரித்துக் கொண்டே மண்டபத்திற்கு வந்தார்கள். பெண்கள் யாருமே பரிமாறும் இடத்தில் இல்லை என்பது அப்போது தான் புரிந்தது. முழுக்க முழுக்கத் தமிழ் அமெரிக்க ஆண்களால் அத்தனை திருத்தமாக உணவு பரிமாறப்பட்ட புரட்சியை எண்ணி வியந்தார்கள். அது மட்டுமல்ல. பெரியவர்கள் வழி நடத்த இளைஞர்களே பெரும்பாலும் பரிமாறியது அமெரிக்காவின் சாரணர் இயக்கத்தை நினைவூட்டியது. பிள்ளைகள் எல்லோரும் சாரணர் இயக்கத்தில் கற்றுக் கொண்ட பழக்கத்தை வீட்டு நிகழ்வுகளிலும் நடைமுறைப்படுத்தியது, அட! போட வைத்தது.

மண்டபத்திற்குள் வந்த போது மேடையில் இன்னமும் குருக்கள் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார். மாப்பிள்ளையும் பெண்ணும் மணமேடையில் அமர்ந்து சிறு பிள்ளைகள் போல எதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களின் கவனத்தைத் திருப்பக் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொண்டிருந்தார் குருக்கள். பெருமளவில் சடங்குகளை முடித்த பின், மணமகன் தாலியை மேலே தூக்கிக் காட்டிவிட்டு மணமகளுக்குக் கட்டத் தயாராக, அனைவரும் மனமேடையின் அருகில் சென்று அட்சதை போட, மணமகனும் மணமகளும் கணவன் மனைவியாயினர். மணமக்கள் மேடையை விட்டு இறங்கிக், கை கூப்பியபடி மக்களை நோக்கி நடந்து வந்து, மக்களோடு அமர, இப்பொழுது மேடையில் வாழ்த்துமடல் வாசிக்கத் தொடங்கினார்கள். மணமக்களை வாழ்த்தி மணமகனின் தங்கையோ, தம்பியோ எழுதுவது போல, வீட்டுப் பெரியவர்களில் நன்றாகக் கவிதை எழுதத் தெரிந்தவர்கள், ஒரு நீண்ட வாழ்த்துக் கவிதையாக எழுதித் தர, அதை மணமகனின் உடன் பிறந்தவர்கள் யாராவது வாசிப்பது வழக்கம். இதே போல மணமகளின் உடன் பிறந்தவர்களும் யாரிடமாவது வாழ்த்துக் கவிதை எழுதி வாங்கி வந்து வாசிப்பது உண்டு. முற்காலங்களில் அவரவரே வாழ்த்துக் கவிதைகளை எழுதி வாசித்திருப்பார்கள். பின்னர், நன்கு தமிழ் தெரிந்தவர்களிடம் எழுதி வாங்கும் வழக்கம் வந்திருக்க வேண்டும். இப்போது எழுதி வாங்கினாலும் வாசிக்கத் தெரிய வேண்டுமே என்ற நிலை தான் என்றாலும் நம் வீட்டுத் திருமணத்தில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

கல்யாணம் முடிந்துவிட்டது. மணமக்கள் மேடைக்குச் சென்றுவிட்டார்கள். உடனே ஒவ்வொருவராக மேடைக்குச் சென்று மனமக்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். திருமணத்திற்கு வரும் முன்னரே, புது மணத் தம்பதிக்கு அன்பளிப்பாக, அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை இணையத்தின் வழியாக அவர்கள் விரும்பும் கடையிலேயே வாங்கி, அவர்களின் எதிர்கால இல்லத்திற்கே அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தாயிற்று. இந்த அமெரிக்கப் பழக்கம் திருமணத்தன்று பரிசு களைக் கையாளும் கொண்டு தேவையற்ற வேலைகளைக் குறைத்ததாகவே கருதினாள் முல்லை. இந்த அமெரிக்கப் பழக்கம் அவளுக்குப் பிடித்திருந்தது.

பிறகென்ன? பட்டுப் புடவை கட்டி, நகை போட்டு, இதற்காகவே மெனக்கெட்டு பூக்கடைக்குப் போய் மதுரை மல்லி வாங்கி வந்து, எப்போதும் காற்றலையாய் கிடக்கும் கூந்தலை மல்லிகை மனத்தோடு கட்டி, பூவை முன்னே போட்டு மங்களகரமாக வந்துவிட்டு நம் கைப்பேசியில் படமெடுக்காமல் இருக்க முடியுமா? மண்டபத்தில் செய்யப்பட்டிருந்த அலங்காரங்களுக்கு முன், பின், இடையில் என்று எல்லா இடங்களிலும் கூட்டமாக, தனியாக, ஜோடியாக என்று புகைப்படமெடுத்தவரைக் கொண்டு பல படங்கள் எடுத்தார்கள் முல்லையும் தோழிமாரும். அப்படியும் நிறையாமல் கை பேசியில் தற்படங்கள் வேறு குவிந்தன. அப்பாடா! ஒரு படத்தில் நன்றாக இருக்கிறோம் என்ற நிறைவில் மதிய உணவிற்காக மீண்டும் சாப்பாட்டுக் கூடத்திற்குச் சென்றார்கள்.

பேசிக்கொண்டே சென்று அவர்கள் உட்காரச் சொன்ன இடத்தில் உட்கார்ந்தார்கள். காலையில் இடியாப்பம் வைத்த பையன் இப்போது “கெட்டிக் குழம்பு (புளிக்குழம்பு) வேணுமா?” என்று அமெரிக்கத் தமிழில் அழகாய்க் கேட்டுக் கொண்டு வந்தான். ஏய்! இன்னிக்குச் சோறும் கெட்டிக்குழம்பும் மட்டும் தான்டி சாப்பிடப் போறேன்! என்று அவனைப் போலவே சொல்லிக்காட்டிக் குதூகலித்தாள் முல்லை!

தலை வாழை இலை போட்டு, ஊறுகாய், இனிப்பு, இரண்டு வகைப் பொரியல், பச்சடி, கூட்டு, பிரியாணி, சோறு, பருப்பு, நெய், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், தயிர், பாயாசம், ஐஸ் கிரீம் வரை அப்படியே உமிழ் நீரை ஊற வைக்கும் தாயகத்துக் கல்யாணச் சாப்பாடு பரிமாறப்பட்டது. எப்படித் திடீரென்று அமெரிக்க இந்திய உணவகங்கள் இவ்வளவு சுவையாகச் சமைக்கத் தொடங்கினார்கள் என்ற ஆர்வம் கலந்த வியப்போடு விசாரித்த முல்லைக்குப் பல தித்திக்கும் தகவல்கள் தெரிய வந்தன. உறவினர்களில் மூன்று நான்கு பேர் பல உணவகங்களுக்குச் சென்று பல்வேறு உணவுகளைச் சுவைத்துப் பார்த்து, சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்தார்களாம். பிறகு மொத்தமாக ஐந்தாறு உணவகங்களில் இருந்து மதிய உணவை வரவழைத்திருந்தார்கள். திருமணங்களில் இருக்க வேண்டிய பாரம்பரிய பச்சடி, கூட்டு வகைகள் ஒன்றிரண்டுக்கான செய்முறையைக் கூட உணவகச் சமையல்காரருக்குச் சொல்லித் தந்து சமைக்கச் சொல்லி இருந்தது முத்தாய்ப்பான முன்னெடுப்பு. விருந்து தான் விழாவின் சிறப்பு! என்ற தமிழர் பண்பாடு ஏட்டில் மட்டுமல்லாமல் வீட்டிலும் இருந்தது கண்டு மகிழ்ந்தாள் முல்லை.

விடைபெறும் நேரம் வந்தது. மணமக்களை வாழ்த்திவிட்டு, அவர்களின் பெற்றோர், சில தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் விடை பெற்றாள் முல்லை. வெகு நாள்கள் கழித்து நடைபெறும் விழா அல்லவா? வெளியே வந்த பிறகும் கூட தோழியர் பலர் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண், 'நிலா (மணப்பெண்) அதிர்ஷடக்காரப் பொண்ணுடி. இந்த அமெரிக்காவுல அவளுக்கு அவங்க ஜாதியிலேயே பையன் கிடைச்சுட்டான் பாத்தியா?' என்றாள். மற்றவர்களும் ஒரு மனதாக ஆமோதித்தனர். இதைக் கேட்டவுடன் சுருக்கென்றது முல்லைக்கு. மருத்துவர், வழக்கறிஞர், விஞ்ஞானி, ஆய்வாளர், பொறியாளர் என்று மேலை நாடுகளில் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திச் சாதிக்கும் இளைஞர்கள் கடைசியில் சாதியை வைத்து எடை போடப் படுகிறார்களே! பல இன மக்கள் பிழைக்க வந்து, கலந்து வாழும் அமெரிக்காவில் நாம் மட்டும் இன்னமும் சாதியால் பிரிந்திருக்கிறோமே! மேலை நாட்டிற்கு வந்த பின்னும் நம் சிந்தனை மேம்படவில்லையே!

தமிழர் உணவு, உபசரிப்பு, விருந்தோம்பல் என பண்பாடு போற்றிய அந்தத் திருமணம், சத்தமில்லாமல் சாதியையும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறதே என்ற கனத்த மனத்தோடு வீட்டிற்கு வந்தாள் முல்லை.

ஜெயா மாறன்

Stories you will love

X
Please Wait ...