மீண்டும் ஒரு முறை

காதல்
5 out of 5 (25 Ratings)
Share this story

மதிய உணவுக்கு மணலை மீனும் கத்தரிக்காயும் சமைத்திருந்தால் ரிப்கா அஸ்லானுக்கு மணலை மீன் மிகவும் இஷ்டம்.சைக்கிள் பொன்னி சம்பாவின் கடைசி பருக்கையை வழித்து உண்டு விட்டு மனைவியை எதிர்பாராமல் தானே கோப்பையை கழுவி வைத்தான்.கணவன் தானுண்ட கோப்பையை கழுவுவதென்பது கட்பிட்டியை பொருத்தவரை குறிப்பிடத்தக்க முற்போக்குத்தனம்.சமையல் செழிப்பாக இருந்தாலும் ரிப்காவின் முகம் செழிப்பாக இல்லை. ஆறுமாதம் முன்பு நடந்த சண்டைக்கு இன்னும் தீர்வு கிட்டவில்லை.அவளும் தன்னை வேலைக்குச்செல்ல அனுமதிக்குமாறு கேட்டு பல விண்ணப்பங்களை சமர்ப்பித்துக்கொண்டேயிருந்தாள். அஸ்லான் அதை நிராகரித்துக்கொண்டே இருந்தான். இருப்பினும் அவள் அந்த ஊடலை ஒருகாலமும் சமையலில் காட்டியதில்லை. முகத்தை கழுவிவிட்டு தோல் பையை எடுத்துக் கொண்டான்.

"ரிக்கா ரிக்கா"

"என்ன"

" எல்லாம் சரிதான காசி ஈக்கி தான இப்ப போனாதான் நாளைக்கு நெத்துறை மஸ்த்து இல்லாம மீட்டிங்ல ஈக்க ஏலும். நான் வர எப்படியும் நாளைக்கு நைட் ஆவும் ஓனக்கு தனிய ஈக்க பயமா ஈந்தா இமாரா ஸ்கூல் உட்டு வந்த பொறவு கூட்டிக்கிட்டு உம்மா ஊட்டுக்கு போ"

"பரவால்ல நான் ஊட்லேயே ஈகக்கிறன்"

"சரி நா பெய்த்து வாறன்"

அஸ்லான் கதவைக் கடந்து சென்றான். தன் அருமை கணவனும் முன்னாள் காதலனும் அடுத்தநாள் தன் மனைவியின் பிறந்த தினம் என்பதை எவ்வாறு மறந்தான். என்பதை சிந்தித்தபடியே நின்றுகொண்டிருந்தாள் ரிப்கா.ஆரம்பகாலங்களில் போன்று அவள் பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த வருட பிறந்தநாள் எந்தவித சலனமுமின்றி ஒரு பன்னிரண்டு மணி குறுந்தகவல் வழிவாழ்த்தோடு முடிந்து விட்டிருந்தது.

அஸ்லான் பைக்கை ஏத்தாலை பெட்ரோல் செட்டில் நிறுத்தினான்.

"எவ்வளோக்கு"

"புல் டேங்"

மீண்டும் மெயின் ரோட்டில் பைக்கை இறக்கினான். அவளிடம் கொழும்புக்குச் செல்வதாக சொல்லிவிட்டுத் தான் வந்திருந்தான்.கொழும்பு செல்வதற்கு பாலாவியிலிருந்து வலது பக்கம் திரும்பவேண்டும். ஆனால் அவன் இடது பக்கம் திரும்பி மன்னார் பாதையில் சென்றான். பைக் புத்தளத்தில் நின்றது.புத்தளம்தான் புத்தளம் மாவட்டத்தின் தலைநகரம். ஐஸ் டோக் கடைக்கு சென்றான் அவன் வருவதை ஜெயந்தியின் கண்கள் உற்றுநோக்கின. நேரக ஜெயந்தியிடம் சென்றான்.

"ஒரு கணக்கான கேக் அடிக்கணும்"

"என்ன கேக்"

"பெர்த்டே கேக்"

பெயர் விவரங்களை ஒரு கடுதாசியில் எழுதி ஜெயந்தியிடம் கொடுத்தான். புத்தளம் கடற்கரையில் பூங்காவுக்குச் சென்று அமர்ந்துகொண்டான்.சிந்தனைக் கடலில் நீந்த ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் மூழ்கியே விட்டான் அவளை வேலைக்கு அனுப்பாதது குறித்த எண்ண அலைகள் அவனது கால்களை தீண்ட ஆரம்பித்தன. அவன் ஒன்றும் அந்த காலத்து ஆளில்லை.பெண்களை வேலைக்கு அனுப்பக் கூடாது என்பது அவன் சித்தாந்தமுமல்ல, தவிர அவன் சந்தேகப் பிராணியுமல்ல. அவளை வேலைக்கு அனுமதியாதற்கு அவனது சிறு பிராய வாழ்க்கையே காரணமாயிருந்தது.அவனைப் பொறுத்தவரையில் அவனுக்குப் பத்து வயதிருக்கும் போது தான் அவன் பெற்றோர்களுக்கு முதல் சண்டை ஏற்பட்டது. அந்த சண்டைக்கு என்ன காரணம் என்று புரிந்து கொள்ளும் அறிவு அவனுக்கு இல்லாவிட்டாலும் அது சண்டை என்று புரிந்து கொள்ளும் அறிவு அவனுக்கு இருந்தது.அந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்கள் முயலவேயில்லை. சந்தேகம், விட்டுக்கொடாமை, அகம்பாவம் போன்ற நோய்கள் அவர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.நோய்கள் அவர்களுக்குப் பிடித்திருந்தாலும் பக்கவிளைவுகளை அவனே அனுபவித்தான். வருடங்கள் ஓடியதே தவிர சண்டை குறையவில்லை. சத்தமும் குறையவில்லை. ஒருநாள் அந்த பலவருட முரண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது. ஆனால் முடிவு ஒன்றும் மகிழ்ச்சியான முடிவல்ல.அஸ்லான் விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தான். வழமைக்கு மாறாக வீடு அமைதியாக இருந்தது. உலகப்போர் முடிந்ததுபோன்று கடும் சேதகளுடன் கூடிய ஒரு மயான அமைதி உம்மா ஒரு மூலையில் தலைவிரி கோலத்தில் அமர்ந்திருந்தாள். கன்னங்கள் வீங்கியிருந்ததன.நிச்சயமாக அந்த செயலின் கர்த்தா வாப்பாவை தவிர வேறு யாருமல்ல என்பது அவனுக்குத் தெரியும். அது ஒரே ஒரு அறையல்ல, கடும் சினத்துடன் திரும்பத்திரும்ப அறைந்திருக்க வேண்டும்.அதனால்தான் கன்னங்கள் இப்படி வீங்கியிருக்கின்றன. இருந்தாலும் உம்மா அழவில்லை. அந்தக் கணம் தான் அவன் மண்டைக்குள் வீட்டு வன்முறைக்கு எதிரான மனநிலை தூவப்பட்டது.வாப்பாவின் மீது ஒரு கடும் வெறுப்பு ஏற்பட்டது. வன்முறையின் மீதும் தான். அன்று இரவே துணிப்பையுடன் வெளியே சென்ற உம்மா மீண்டும் வருவார் என்று வாசலில் காத்திருந்தான். விடிந்தும் உம்மாவை காணவில்லை. வாப்பாவிடம் போய் வினவினான்.

"மகன் ஒண்ட உம்மா நம்மள உட்டுட்டு பெய்த்தா இனி வாப்பா மட்டுந்தான் நீ பயப்புடாத ஒண்ட உம்மாவ விட நான் ஒன்ன நல்லா பாத்துக் கொள்றன்."என்று பதிலளித்தார்.

வாய்ப்பேயில்லை. உம்மா அவனை விட்டுச் செல்ல வாய்ப்பேயில்லை என்றெண்ணிக்கொண்டான். ஒவ்வொரு முறை கதவு திறக்கும்போதும் அது உம்மாவாக இருக்க வேண்டுமென்று துவா செய்து விட்டு வாசலுக்கு ஓடுவது அவன் வாழ்க்கையின் வழக்கமாகவே ஆகிப்போனது.பல விடியல்கள் தாண்டியும் உம்மாவின் பாதங்கள் அந்த வாசலை மிதிக்கவேயில்லை. உம்மா சென்றது வெளியே மட்டுமல்ல வெளிநாட்டுக்கும் தான் என்று சில வாரங்கள் கழித்து வாப்பும்மாவின் வாய்வழி தெரிந்து கொண்டான்.உம்மாவின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு ரிமோட் காரும் ஒரு கால்பந்தும் வந்திருந்தன. இதயத்தில் இருக்கும் ஏக்கத்தை இறப்பர் பந்தால் எப்படி தீர்க்கமுடியும் இரண்டே நாட்களில் சலித்துவிட்டது.சில வாரங்கள் கழித்து அவனுக்கு ஒரு தொடுதிரை தொலைபேசியை பரிசளித்தார் வாப்பா உம்மாவின் புலனத்தை மட்டும் தடை செய்து வைத்தார். ஆனால் அவன் உம்மாவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தவே செய்தான். சில மாதங்கள் கழித்து வாப்பா அஸ்லானுக்கு புதிய ஒரு சாச்சியை பரிசளித்தார்.மகனை பரிபாலிக்கவே இந்த மறுமணம் என்று வியாக்கியானமும் சொன்னார். மகனுகாக்க மணம் முடித்தவர் மகனுக்குத் தெரியாமல் ஏன் மனம் முடித்தார் என்பது தான் அவனுக்குப் புரியவேல்லை அடுத்த வருடமே அவர்கள் சவுதிக்கு பயணப்பட்டார்கள் அவன் மாணவர் விடுதிக்கு பயணப்பட்டான்.அன்று அவனுக்கு ஏற்பட்ட தனிமையும் வெறுமையும் ரிப்காவின் பிரவேசத்திற்கு பின்பு தான் தனிய ஆரம்பித்தது. அந்த வெறுமையின், தனிமையின், ஏயக்கத்தின் ஒரு துளியைக் கூட இமாரா சுவைத்து விடக்கூடாது என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.அதன் விளைவே ரிப்காவின் வேலைவாய்ப்புக்கான மறுப்பு. ஐஸ் டோக்கிட்கு சென்று கேக்கை எடுத்துக்கொண்டு மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு நகைக் கடைக்குச் சென்றான்.

"வாங்க மகன் இரிங்க"

"ஒரு மோதுரம் எடுக்கணும்"

"எடுப்பமே"

பதினேழாயிரம் ரூபாவிற்கு ஒரு பிறை வடிவம் பதித்த தங்க மோதிரத்தை வாங்கிக்கொண்டு பைக்கை செலுத்த ஆரம்பித்தவன் திடீர் என்று யோசனை வர பைக்கை தில்லையடி மருந்தகத்தின் முன் நிறுத்தினான். உள்ளே சென்று வெண்ணிலா சுவை கொண்ட மூன்று ஆணுறைகள் அடங்கிய ஒரு பொதியை வாங்கிக் கொண்டான். இமாராவுக்கு சில இனிப்புகளையும் வாங்கிக்கொண்டு பைக்கை கற்பிட்டி நோக்கி செலுத்த ஆரம்பித்தான். கைவசம் நேரம் சற்று அதிகமாக இருந்ததால் எந்த அவசரமும் இன்றி மெதுவாகவே பைக்கை செலுத்தினான். பாலாவி சந்தியை அடைந்து பைக்கை கற்பிட்டி வீதியில் திருப்பியபோது வாகனம் மீண்டும் சிந்தனை கடலுக்குள் பிரவேசித்தது. சில மாதங்களாக இராப்போசனம் சரியாக கிடைக்கவில்லை. சமீப காலமாக சண்டை வலுத்து விட்டதால் அறவே இல்லாமல் போனது. இறுதி இராப்போசனம் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு அடை மழையின் தயவில் நடந்தேறியிருந்தது.உண்மையில் அவள் ஒரு பெண்ணல்ல. அவள் கண்ணும் கண்ணல்ல. நுதலும் நுதலல்ல. அவள் ஒரு இசைப்பிரவாகம் அவள் அங்கம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கருவி. அவளை ஒரு கிட்டார் போன்று மடியில் இருத்தி நரம்புகளை டியூன் செய்து அவளை வாசிப்பான். நுதலோடு நுதலொட்டி மவுத் ஆர்கன் வாசிப்பான். காலிடுக்கில் புல்லாங்குழல் ஊதுவான். மயிலிறகு எடுத்து வீணை போல் அவளை மீட்டுவான். கட்டிலில் பரத்தி போர்வைக்குள் செலுத்தி பியானோ போல் அவளை தீண்டுவான். அத்தனை கருவிகளையும் ஒரே நேரத்தில் மீட்டுவதில் அவன் கை தேர்ந்த வித்வான். அத்தனை கருவிகளையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வந்து ஒரே நேரத்தில் மீட்டும்போது உச்சம் சென்று ஒரு ஓசையெழும் அதுதான் அவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய உன்னத இசை. அந்த இசைக்கு இணை எதுவுமில்லை. இன்றிரவு இசைக்கச்சேரியை விமர்சையாக நடத்தி சில மாதங்களாக காணாமல் போன அந்த இசைக்கு உயிர் கொடுப்பது என்று நினைத்துக் கொள்ளும் போது கற்பிட்டி வந்துவிட்டது. அல்லது அவன் கற்பிட்டிக்கு வந்துவிட்டான். பன்னிரண்டு மணிக்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் இருந்தது. சிறிது நேரம் அங்குமிங்கும் உலாத்திவிட்டு பதினொன்று ஐம்பதுக்கு வீட்டை அடைந்தான். வீடு உற்பக்கமாக பூட்டியிருந்தது. உள்ளே செல்லும் முன் நிகழ்ச்சி நிரலை ஒரு தடவை மீட்டிக் கொண்டான். முதலில் இன்ப அதிர்ச்சி கொடுத்தல். பிறகு மோதிரம் அணிவித்தல். பிறகு இசைக் கச்சேரி என்று சீராக வகுத்துக் கொண்டான். சத்தமின்றி சுவரேறி குதித்தான் தன்னிடமிருந்த உதிரி சாவியை வைத்து மண்டப கதவைத் திறந்து உள்ளே சென்றான். மண்டப விளக்கு அணைந்திருந்தது குசினி விளக்கு அணைந்திருக்கவில்லை. படுக்கையறை விளக்கும் அணிந்திருக்கவில்லை அவள் தூங்கவில்லை என்று தெளிவாக தெரிந்தது ஒவ்வொரு அடியையும் பூப்போல் வைத்து திருடன் போல் அறையை நோக்கி நகர்ந்து "சப்ரைஸ்" என்று கத்திக் கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளே சென்றவனுக்கு அதைவிட பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு இசைக்கச்சேரி ஏற்கனவே முடிந்திருந்தது. ரிப்கா உள்ளுக்குள்ளே குளித்துக் கொண்டிருந்தாள் அவன் கட்டிலில் சட்டையின்றி அமர்ந்து தொலைபேசியில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு இருபத்திரண்டு வயது இருக்கும் கொஞ்சம் மாநிறமாக சுருட்டை முடியோடிருந்தான். உயரம் ஒரு ஐந்தடி இருந்தான். பார்ப்பதற்கு அவ்வளவு வசீகரமாக ஒன்றும் இல்லை. அஸ்லான் இருக்க வேண்டிய இடத்தில் அவன் இருந்தான். அந்த காட்சியை கண்ட அவனுக்கு கோபம் வரவில்லை. துக்கம் தான் வந்தது. கண்கள் சிவக்கவில்லை கலங்கின. இதயத்துடிப்பு எங்கோ சென்றது. தொடைகள் நடுங்க ஆரம்பித்தன. தலை லேசாக சுற்றுவது போன்று உணர்ந்தான். உடனே நிலை கட்டை பிடித்துக்கொண்டான். அவனை அடிக்க அஸ்லான் எத்தனிக்கவில்லை. நிச்சயமாக அவளை அவன் வன்புணர்வு செய்திருக்க வாய்ப்பில்லை. அவள் சம்மதத்தோடுதான் அவன் வந்திருந்தான் என்பது அவன் ஆசுவாசமாக அமர்ந்து கொண்டிருந்ததிலேயே தெரிந்தது. அவனை துன்புறுத்தி அந்த சங்கடத்தை உலகறிய செய்வதில் அவனுக்கு விருப்பமில்லை. அந்த பொடியன் அவன் முன்னே நடுநடுங்கிக் கொண்டிருந்தான் இவன் அவன் கண்களைக் கூட பாராமல் ஒதுங்கி வழிவிட்டான் அவன் ஓடிவிட்டான்.

"என்ன சத்தத்தையே காணும்."

என்ற சத்தத்துடன் ரிப்கா குளியலறையிலிருந்து வெளியே வந்தாள். அஸ்லான் விரும்பியது போலவே சரியாக பன்னிரண்டு மணிக்கு அவள் அதிர்ச்சி அடைந்தாள். அவள் துவாலையை தொடை வரை ஏற்றி கட்டியிருந்தாள். புதுத் தம்பதிகளாக இருக்கும் போது இவனது சல்லாபங்களை தூண்டுவதற்காக இவ்வாறு துவாலையை கட்டிக்கொண்டு அவன் முன் வந்து போவாள். ஆனால் கடந்த சில மாதங்களாக இது வழக்கொழிந்து போயிருந்தது. நிச்சயமாக இது அந்தப் பொடியனை உல்லாசப் படுத்தவே என்பது நன்றாக தெரிந்தது. உண்மையில் அவள் நின்றிருந்த வனப்பு அபாரமானது. மழையில் நனைந்த முயல் போல் நின்றிருந்தாள். பார்க்கும் ஆண்களை அடித்துச் செல்லும் பேரலை போன்று காட்சியளித்தாள். ஆனால் அவளின் தோற்றம் அவனுக்கு எந்த ஆசையையும் தூண்டவில்லை. மாறாக அருவருப்பையே தூண்டியது. அவனுக்கும் அலுவலகத்தில் நண்பிகள் இருந்தார்கள். குழைந்து பேசும் நண்பிகள் சிலரும் இருந்தார்கள். அவர்களின் அசைவுகளையும், வளைவுகளையும் சில சமயம் ரசித்திருந்தாலும் அவர்களிடம் அதை வெளிப்படுத்தியது கிடையாது. அவர்களோடு தேவையின்றி அரட்டையடிப்பது கிடையாது. அவசியமின்றி தொலைபேசி இலக்கங்கள் பகிர்வது கிடையாது. அவையாவும் தன் காதலுக்கு அவன் செய்யும் மரியாதை என எண்ணிக் கொண்டிருந்தான். உடைந்த மனதோடு ஒரு வார்த்தைகூட உதிர்க்காமல் தாமதமின்றி வீட்டை விட்டு வெளியேறினான். அவள் கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.

கடற்கரைக் காற்று மனதுக்கு சற்று இதமாக இருந்தது. வழமையாக நமை ரசிக்கும் ரசிகன் ஏன் இன்று மட்டும் திரும்பி கூட பார்க்கவில்லை என்ற குழப்பத்தோடு நிலவு பொழிந்து கொண்டிருந்தது. அழுது தீர்த்திருந்தான். மீண்டும் சிந்தனை கடலில் மூழ்கிப் போனான். இந்த முறை கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. காதலுக்கென்று ஒதுக்கியிருந்த விசாலமான அறையில் தற்பொழுது வெறுப்பு ஊற ஆரம்பித்தது. இப்படியான ஒரு துரோகத்தைச் செரித்துக் கொண்டு மீண்டும் சேர்ந்து வாழ்வதென்பது அவனால் முடியாத காரியம். உடைந்த இதயத்தை ஒட்ட வைக்கும் முயற்சியை அவன் எடுக்க விரும்பவில்லை. முடிவெடுத்துவிட்டான் விவாகரத்து தான் ஒரே தீர்வு. இதயம் மேலும் கனத்தது. மாணவர் விடுதியில் திடீர் என்று எழுந்து அழுத பல இரவுகள் அவன் ஞாபகத்துக்கு வந்தன. இமாரா "வாப்பா" என்று அழைப்பது போன்று ஒரு பிரம்மை ஏற்பட்டது. மறைந்து போன வெறுமை மீண்டும் உயிர் பெற்று ஒரு கறுப்பு நிழல் போல எழுந்து அவனை சூழ்வதாக உணர்ந்தான். அது இமாராவை நோக்கி நகர முற்பட்டதைக் கண்டான். தான் சுவைத்த தனிமையான இரவுகளையும் ஏக்கம் மிகுந்த நாட்களையும் இமாரா அனுபவிப்பது போன்ற காட்சிப் படிமங்கள் அவன் முன்னே தோன்றி மறைந்தன. துக்கம் தொண்டையை அடைத்தது. குழப்பத்தின் குட்டைக்குள் கழுத்துவரை புதைந்து போனான். காலை எட்டு முப்பதுக்கு மீண்டும் வீட்டுக்கு சென்றான். கேக்கின் ஒரு பகுதி இமாராவின் கோப்பையில் வெட்டி வைக்கப்பட்டிருந்தது. கேக்கின் மேல் இருந்த பாலேட்டை இமாரா ஆட்காட்டி விரலால் தொட்டு நக்கிக்கொண்டிருந்தாள். ஆணுறையும் மோதிரமும் வைத்திருந்த இடத்தில் இருக்கவில்லை ரிக்காவின் கண்கள் சிவந்திருந்தன. கன்னங்கள் வீங்கியிருந்தன. பெரும்பாலும் விடிய விடிய அழுதிருக்க வேண்டும். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற கலவரம் அவள் கண்களில் தெரிந்தது. அறைக்கு வரும்படியாக அவளுக்கு சைகை செய்தான். அவளும் அறைக்குள் வந்தாள்.

"குந்து"

கட்டிலில் அமர்ந்தாள். அந்த கட்டில் அவளுக்கு குற்றவாளிக்கூண்டைப் போலவும், எதிரில் கதிரையில் அமர்ந்திருந்த கணவன் நீதிபதி போலவும் காட்சி அளித்தான்.

"இங்க பாரு நா ஒரு முடிவெடுத்தீக்கன்"

"ங்கே அல்லாவுக்காக என்னய"

"உஸ், சத்தங்காட்டாத நீ செஞ்ச வேலைக்கி ஒன்ன சாவடிச்சீக்கனும். குந்த வச்சி கதிக்கிரன்டு சந்தோசப்படு"

"நா சொல்ல வாராத கொஞ்சம் கேளுங்களன்" அழுது கொண்டு சொன்னாள்.

"நீ ஒரு மயிரும் சொல்லத்தேவயில்ல. இனி நீ யாரோ நா யாரோ. நா ஓன் மேல வச்சீந்த நம்பிக்கைய நீ ஒடச்சிட்டா. ஓன் மேல இப்ப எனக்கு ஒரு துளி நம்பிக்க கூட இல்ல."

தொடர்ந்தான். "இனி நம்ம ஒண்ணா ஈக்க போறது இமாராக்காக தான். அந்த குட்டிக்கு முன்னுக்க இது ஒன்னத்தையும் காட்டிக்க தேவயில்ல. வெளங்கிச்சா..... வெளங்கிச்சாடி"

"ம்" விம்மிக்கொண்டே சொன்னாள்.

"ஒனக்கு கடுப்பு தாங்க ஏலாட்டி எவனோடயும் போய்ப் படு இனி எனக்கு அது கேஸ் இல்ல. ஆனா இந்த ஊட்டுக்க எவனையும் கூட்டி வராத. நீ எங்கயும் போய் படுத்துட்டு வா. நீ எனக்கு இனி பொஞ்சாரியா ஈக்க தேவயில்ல. ஒனக்கு இப்ப என்ன புடிக்கல தான."

"புடிக்கலன்டு யார் சொன்னை"

"பொத்துடி வாய" தொடர்ந்தான்.

"நீ கள்ள மாப்புளயா எவன வேண்டா வச்சுக்கோ ஆனா அல்லாவுக்காக இமாராக்கு நல்ல உம்மாவா இரி அது போதும். அந்த குட்டிய உட்டுட்டு மட்டும் பொய்ராத"

ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு எழுந்தான். அவன் கையைப் பிடித்துக் கொண்டு என்னவெல்லாம் சமாதானம் சொல்லிப் பார்த்தாள். அவன் மனம் சமாதானம் அடையவில்லை. ரிப்கா தன்னை ஒரு வேசி போன்று உணர்ந்தாள். ஒரு சிறிய சுவாரஸ்யத்துக்கு ஆசைப்பட்டு தன் காதலை தான் சாம்பலாக்கி விட்டதை எண்ணி உடைந்து அழ ஆரம்பித்தாள்.

சங்கடம் நடந்து இரண்டு மாதங்கள் இருக்கும். இதற்கிடையில் அவள் பலமுறை மன்னிப்புக்கேட்டாள். அஸ்லான் மனம் மாறவேயில்லை. அத்தனை பெரிய காதலையும் வெறுப்பாக உருமாற்றி வைத்துக் கொண்டிருந்தான். ரிப்காவும் இமாராவும் மதுரங்குளியிலிருக்கும் இமாராவின் மூமா வீட்டிற்க்கு சென்று இரண்டு நாட்களாகியிருந்தன. அது கொரோனா தீவிரமாக பரவ ஆரம்பித்த கால கட்டம். இலங்கை அரசு திடீரென்று ஏழு நாட்கள் நாடளாவிய ஊரடங்கை உத்தரவிட்டது. வேலைப்பளு அதிகமாக இருந்ததால் அது அவனுக்கு சற்று ஆறுதலாகவே இருந்தது. முதல் நாள் ஆசுவாசமாக எழுந்து காலை உணவை உண்டுவிட்டு அன்று முழுவதும் திரைப்படங்கள் பார்த்தான். மூன்றே நாட்களில் திரைப்படங்கள், தொலைபேசி விளையாட்டுக்கள், புலன அரட்டைகள், சமையல் முயற்சிகள் என அனைத்தும் சலித்துப் போய்விட்டன. நான்காம் நாள் வீட்டின் எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும் வெறுமை எல்லா மூலையிலும் வெறுமை சகிக்க முடியாத அமைதி ஒவ்வொரு நிமிடமும் ஆசுவாசமாக நிதானமாக நகர்ந்தது. கடிகாரத்தின் டிக் டிக் ஓசை கூட தலையில் ஓங்கி அடிப்பது போன்று கேட்டது. அன்று அவன் எத்தனையோ புதிய ஒலிகளை செவிமடுத்தான். இத்தனை ஒலிகள் இத்தனை நாளாக தன் வீட்டிலா குடியிருந்தன என்று வியந்தான். ஆறுமாதம் முன்பு அவர்கள் போட்ட சண்டை ஞாபகம் வந்தது.

"நீயும் வேலைக்கு போனா புள்ளய யார் பாத்துக் கொள்றது"

"அதெல்லாம் நா சமாளிச்சிக் கொள்றன்"

"வேலைக்கு போறய் கஷ்டன்டி சொன்னா கேளு"

"ஊட்ல ஈந்து வெறும் செவுத்த பாத்துக்கிட்டு ஈக்கிரத விட அது லேசி தான்."

"ஊட்ல சும்மா ஈக்க ஒனக்கு நோவுதா"

"நீங்க வேலைக்கி பெய்ருவீங்க இமாரா ஸ்கூலுக்கு பெய்ரும் நா பேய் மாரி குத்திகிட்டு ஈக்கனும் பைத்தியம் புடிக்கிது"

"எரிச்சலா ஈந்தா டீவிய பாரு. இல்லாட்டி போன பாரு. வேலைக்கி போற கதய வுடு"

அன்று அவன் கூறிய நியாயங்கள் சற்று வலுவற்றவை என்ற உணர்வு அவனுக்கு தோன்றியது.அவள் கூறியது போலவே வீட்டுக்குள் அமர்ந்து சதா டீவியையே பார்த்துக்கொண்டிருப்பது மிகப்பெரிய கொடுமை. ஐந்து நாட்களுக்கே இவ்வளவு சலிப்பென்றால் ஆறு வருடங்களாக அதைத்தான் அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள். ஆறாவது நாள் அவனது முன்னாள் அலுவலக நண்பி முகப்புத்தகம் வழி குறுந்தகவல் அனுப்பி இருந்தாள். அவனுக்கு ரொம்ப பிடித்தவர்களுள் அவளும் ஒருத்தி.நண்பி என்று சொல்வதற்கென்ன அதிகமாக பேசியது கிடையாது. தூரத்திலிருந்து ரசித்ததுண்டு.அவளின் ஆடம்பரமான அழகை எண்ணி வியந்ததுண்டு. குறுந்தகவலை கண்டதும் நித்திரை கலைந்து விட்டது. சோர்வு முறிந்துவிட்டது.ஏதோ ஒரு உற்சாக உணர்ச்சி முள்ளந்தண்டு வழியாக ஏறியது.பதில் அனுப்ப ஆரம்பத்தில் விரும்பவில்லையென்றாலும் சுவாரசியத்தின் தேவை அவனை பதில் அனுப்பத் தூண்டியது. தொடர்ந்து பேசலானான். மறுநாள் காலை இலங்கை அரசு மீண்டும் ஒரு வார காலம் ஊரடங்கு அறிவித்தது.அந்த ஒரு வாரமும் அவளின் துணையோடு தான் நகர்ந்தது. ஒரு வார காலத்தில் நட்பு வலுத்திருந்தது.கலந்துரையாடல் நட்பு எனும் கோட்டை இலேசாக கடந்திருந்தது. கலந்துரையாடல் அந்தரங்க விஷயங்களை தொடாவிட்டாலும் அந்தரங்கத்தின் அருகில்தான் ஊர்ந்து கொண்டிருந்தது. நேரம் பத்து மணியையும் தாண்டியது. அவள் தன் கணவன் வெளிநாட்டில் இருப்பதால் அவளுக்கு ஏற்பட்ட விரகம் குறித்து சொல்லாமல் சொல்ல ஆரம்பித்தாள்.கலந்துரையாடல் வெளிப்படையாக அந்தரங்க பிரதேசத்துக்குள் நகர ஆரம்பித்தது.அந்த இருபத்திரண்டு வயது பொடியன் செய்ததைத்தான் தற்போது தானும் செய்கிறேன் என்ற நினைப்பு வந்தவுடன் திடீரென்று அழைப்பை துண்டித்தான். அவளின் முகநூல் கணக்கை தடுத்தான்.சுவாரசியத்தின் தட்டுப்பாடு ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யத்தூண்டுகிறது.தனிமை ஒரு மனிதனை எந்த எல்லை வரை கூட்டிச் செல்கிறது என்று வியந்தான்.இந்த தனிமை தான் சிலரைப்போதைக்கும்,போன் விளையாட்டுக்கும்,சமூக வலைத்தளத்துக்கும் அடிமையாக்கி விடுகிறதோ என சிந்தித்தான்.ரிப்கா மீண்டும் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் அனுமதித்துவிடலாம் என நினைத்துக் கொண்டான். மறுநாள் காலை மனைவி,மகளோடு மாமனார்,மாமியாரும் வந்திருந்தனர். இரவு உணவை ரிப்காவே தயார் செய்தாள். பரிமாறும்போது ரிப்கா சில வார்த்தைகளைப் பேசினாள். அஸ்லான் மாமா,மாமியின் முஹப்பத்துக்காக சிரித்தபடி பதில் கூறினான். ஆனால் அவள் பேசிய போது அவனின் கண்களை கூட பார்க்கவில்லை.கண்களை பார்த்து பேசும் பேசும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை. குற்ற உணர்வு அவளை குடைந்து கொண்டிருந்தது மாமாவும் மாமியும் மண்டபத்திலேயே தங்கள் உறக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டனர்.மூமா இமாரவை தன்னோடு படுக்க வைத்துக்கொண்டார்.தென்னாசிய குடும்ப அமைப்பில் மூமாக்களின் இவ்வாறான பங்களிப்பு அளப்பரியது.அறைக்கு வந்தவள் எதுவுமே பேசாமல் சுவற்றை பார்த்துப் படுத்துக் கொண்டாள்.ஒருவேளை அவள் மீண்டும் மன்னிப்புக் கேட்டிருந்தால் அவன் மன்னித்திருப்பான். என்னதான் இருந்தாலும் அவள் தான் அவனின் முதற்காதல். ஆனால் அவள் மன்னிப்பு கேட்க முயற்சிக்கவேயில்லை.இனி தனக்கு மன்னிப்பு கிடைக்காது என நினைத்திருப்பாள் போலும். ஏனோ தெரியவில்லை அன்று அவளின் வனப்பு நிறைந்து தளும்பிக்கொண்டிருந்தது அதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இருந்தாலும் முயற்சிப்பதில் தவறில்லை. முன்னழகில் கொஞ்சம் கஞ்சம் செய்திருந்தாலும் பின்னழகை அவளுக்கு வாரியிறைத்திருந்தான் இறைவன். பின்னழகு அலையென்றால் அவள் கடல். பின்னழகு நெல்லென்றால் அவள் வயல். தொடையில் தொடங்கி விலாவில் ஏறி இடையில் மெல்ல இறங்கி தோளில் ஏறி வதனத்தில் இறங்கின அவன் கண்கள். கன்னத்தில் பூத்திருந்த சிறு ரோமங்கள் அந்த வதனத்தின் வனப்பை கம்பன் போல் பாடின. கவிஞன் போல் சாடின. காதுமடல் ஏதோ பிரபஞ்சத்தில் இல்லாக்கனி போன்று காட்சியளித்தது.அவள் தலையணையிலிருந்து ஒரு கருப்பு நதி ஊற்றெடுத்தோடிக்கொண்டிருந்தது. இருந்தாலும் ரசித்ததோடு நிறுத்திக்கொண்டான். மேலும் எதையும் செய்ய எத்தனிக்கவில்லை.அது தன் தன்மானத்துக்கு இழுக்கு என்றெண்ணி கண்ணயர்ந்தான்.

........................அவன் கண்ணயரும்போது போது அவள் தன் புட்டத்தை அவன் தொடைகளில் ஊராய ஆரம்பித்தாள்.

Stories you will love

X
Please Wait ...