உன் கண்ணில் நீர் வழிந்தால்

பெண்மையக் கதைகள்
5 out of 5 (5 Ratings)
Share this story

இனிய விடியலின் துவக்கத்தை பறவைகளின் கீச்சுக்குரல்கள் ஒலிபரப்ப...திறந்திருந்த சன்னலின் வழியே உட்புகுந்த மெல்லிய தென்றலின் குளிர்ச்சியை அகமும் புறமும் அனுபவிக்க கண்கள் மட்டும் இறையாற்றலின் ஆகச்சிறந்த கொடையாம் பிரபஞ்சத்தின் அழகை ரசித்தன.

.

"அத்தே! என்றபடி உள்ளே நுழைந்த இனியாவிடம் அவளது வேலைகளைக் குறித்துக் கூறிவிட்டு ...மனோகரி சத்துமாவுக் கஞ்சியுடன் வெளியே வந்தாள். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிதவியல் படிக்கும் மகள் கனிகாவிடம் கஞ்சியைக் கொடுத்தாள். அதை வாங்காமல் கோபத்துடன் தாயைப் பார்த்தாள்.


" அம்மா! எத்தனை தடவை நான் உன்கிட்ட சொல்லியிருக்கேன். அந்த கிழவிய என் அறையில நுழைய விடாதே என்று. பாரு! என் புக், நோட் முழுக்க தண்ணியக் கொட்டி பாழ்பண்ணி வச்சிருக்கு. என்னிக்கு என்கிட்ட வாங்கிக் கட்டிக்கப் போதோ தெரியல எனக்கு" எனப் பொரிந்துத் தள்ளினாள் கனிகா.


இவள் குரல் கேட்டு எழுந்து வந்த விஜயனும்...

" ஆமாம்மா! அதுக்குக் கொஞ்சம்கூட நாகரீகமும் தெரியல . அறிவும் இல்ல. நாங்க ரெண்டு பேரும் உள்ளப் பேசிக்கிட்டு இருக்கும்போதே அதுப் பாட்டுக்கு பெருக்க வருது. அதோட

எதையாவது கீழே தள்ளி உடைக்குது. கண்ணுத் தெரியலனா வேலைய விட்டு நிக்க வேண்டியது தானே" என்றான்.

அவள் கணவன் பார்த்திபனும் அவர் பங்கிற்கு முறையிட ஆரம்பித்தார்.

" மனோ! பசங்க சொல்றது சரிதானே. அவங்களுக்குப் பார்வைத்திறன் கொறைஞ்சதாலே எதிர்ல இருக்கிறப் பொருள் தெரியல. இதுவரைக்கும் கண்ணாடிப் பொருட்கள் எத்தனை உடைஞ்சிருக்கு.

அங்க பாரு! ஷோகேஸ்ல சில மெடல்கள் எல்லாம் காணாமப் போயிருக்கு. எல்லாமே அவங்களாலத்தானே. வேலையும் முன்னப் போல செய்யறது இல்ல. ரொம்ப நிதானமா செய்யறாங்க.

அரைமணி நேர வேலைய ரெண்டுமணி நேரம் செஞ்சா எப்படி?....நீ தயவு தாட்சண்யம் பார்த்துட்டு இருந்தா...நாங்க பொறுமைக் காக்க முடியுமா?... உன்னால சொல்ல முடியவில்லை என்றால்.....நானே அதுக்கிட்ட சொல்லிடறேன் " என முடித்தார்.


அதிர்ந்துப் போனாள் மனோகரி. இப்படி ஒரு மும்முனைத் தாக்குதலை சில நாட்களாக சந்தித்து வந்தாலும் இன்று இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை.

இதோ பிரச்சினைக்குரியவளே வந்து விட்டாள்.


" அம்மாடி! இந்தாம்மா மனோகரி. நம்ம வேணிவீட்ல காய்ச்சுது. உன் புருஷனுக்குக் கொடு. அவனுக்குத் தான் சப்போட்டா பழம்னாலே உயிராச்சே. காய் பழுக்கட்டும் என்றுதான் காத்திருந்தேன். இன்னிக்குத்தான் பறிச்சாங்க. வேணிதான் ஒண்ணும் சொல்ல மாட்டாளே. இந்தா! இத இனியாவுக்கு வச்சிவிடு" என்றபடி அரைமுழ கனகாம்பர சரத்தையும் பழமூட்டையையும் தந்துவிட்டு மெதுவாக நடையிட்டாள் முத்தம்மா . நிதானமாகக் குனிந்தபடி பெருக்கத் தொடங்கினாள்.


முத்தம்மா....மனோகரி வீட்டில் வேலை செய்பவள் ஐந்தாறு வருடங்களல்ல. நாற்பது வருடங்களாக. மனோகரியின்

மாமியார் காலத்திலிருந்து இந்த அறுபத்து ஐந்து வயதிலும் வேலை செய்துக் கொண்டிருக்கிறாள்.


பதினைந்து வயதில் மாமியார் இடத்தில் வேலைக்கு வந்திருக்கிறாள். பார்த்திபனின் தாய், தந்தை இருவரும் வேலைக்குச் சென்று விடுவதால் இவரையும் இவரது தம்பி தங்கையைக்

கவனித்துக் கொள்ள வேண்டி கிராமத்து உறவினர் மூலம் வேலையில் சேர்ந்து

இருக்கிறாள் முத்தம்மா.

வீட்டோடு இருந்து சமையல் முதல் வீட்டுப்

பராமரிப்பு வரை எல்லாமே முத்தம்மாதான்.. இருபது வயதில் முத்தம்மாவிற்கு திருமணம் நடந்த போது, மாமியாருக்கு மிகுந்த வருத்தமே மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும். முத்தம்மாவைப் போல வேலை செய்ய, நேர்மையாய், விசுவாசமாய் இருக்க இன்னொருவரைப்

பார்க்கவே முடியாது. அவள் இடத்தில்

புதியவளை வேலைக்கு அமர்த்த மனம்

இல்லாமல் வேலையை விட்டுவிட்டு வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக்

கொள்ள மாமியார் தீர்மானித்த போது...

கொண்டுபோன கைப்பெட்டியோடு

இவர்களிடமே வந்து சேர்ந்தாள் அவள் கணவன் ஓராண்டிலேயே இவளைக் கைவிட்டு மற்றொருத்தியை மணம் செய்தபோது. மாமனார் அவன் மீது வழக்குத் தொடர்ந்து இவளுடனே அவனை மீண்டும் சேர்த்து வைப்பதாகக்

கூறியபோது வலுவாக மறுத்துவிட்டாள்

முத்தம்மா இருமனம் பொருந்தா மணவாழ்வை.


அப்போதிலிருந்து இன்றுவரை இவர்களுடன் தான் இருக்கிறாள். முப்பது வருடங்களுக்கு முன்பு, மனோகரி திருமணம் முடிந்து புக்ககம் புகுந்த போது...அவள் பார்த்த முதல் முகம் முகத்தில் மஞ்சள்பூசி முழுநிலவுப் போன்ற வட்டப்பொட்டிட்டு வாஞ்சையுடன்

மங்கல ஆரத்தியெடுத்து மகிழ்வுடன் தன்னை வரவேற்ற முத்தம்மாவைத்தான்.

முத்தம்மாவைக் குறித்து மாமியார் இவளிடம் அனைத்தையும் கூறினார் அவளது குணம், மணம் உள்பட.

இப்போது ஏகபோகக் குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசும் இவள் கணவன்தான் அன்று முத்தம்மாவைக்

குறித்துக் கண்கலங்க உயர் சான்றிதழ் அளித்தான்.

முத்தம்மாவின் நேர்த்தியான தோற்றமும்

நகைச்சுவையான பேச்சும் மனோகரிக்கு

மிகவும் பிடித்துப் போனது.


காலை ஆறுமணிக்கே வருபவள் பரபரவென வேலைப் பார்க்கத் தொடங்கி விடுவாள். அனைவரைக்குமான காலை, மதிய உணவுகள் தயாரித்து டப்பாக்களில் அடைத்தும் கொடுத்து விடுவாள்.

அனைவரும் சென்றபிறகு இருவரும் அரட்டை அடித்தபடியே மற்ற வேலைகளைப் பார்க்கத் தொடங்குவர். முத்தம்மாவிற்கு தொலைக்காட்சித் தொடர்கள் என்றால் கொள்ளை விருப்பம். அவை ஆரம்பித்த உடனேயே

அதனுள்ளேயே மூழ்கிவிடுவாள். அந்த கதாபாத்திரங்கள் எல்லாம் உண்மை என நம்பும் அளவிற்கு அவள் ஒரு வெகுளி.


மனோகரி தாய்மை அடைந்த முதல் மாதத்திலிருந்து குழந்தைப்பேறு வரை

தாயைப் போல கவனித்துக் கொண்டாள் முத்தம்மா. சிறுவயதிலேயே தாயை இழந்த மனோகரிக்கு அக்குறையே தெரியாவண்ணம் மாமியாரும் முத்தம்மாவும் கவனித்துக் கொண்டனர்.

பிரசவம் எளிதாகி விஜயன் பிறந்தான்.


இருவருடங்களில் பார்த்திபனின் தம்பி

மோகனுக்கும் திருமணமாகி வனஜா

வந்தாள். அவளுக்கு முத்தம்மாவையும்

வீட்டில் அவளுக்கான முக்கியத்துவமும் பிடிக்கவில்லை. இருந்தாலும் மாமியாரின் கண்டிப்பான மனப்போக்கினால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

மாமனார் மறைவிற்குப் பிறகு இவள்

மாமியாரின் துணையாகவே முத்தம்மா

இருந்தாள். அவரது அனைத்துத் தேவைகளுக்கும் முத்தம்மாவையே நாடுவார்.

அவரது காலத்திற்குப் பிறகு அந்த பெரிய வீட்டை விற்று பிள்ளைகளுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். சென்னையில்

ஒரே பகுதியில் வெவ்வேறு இடங்களில்

அண்ணன் தம்பி வீடு வாங்கிக் குடியேறினர்.


மாமியார் மறைந்த அன்றே இவர்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டாள் முத்தம்மா. புது வீட்டிற்குக் குடிப்போன உடனேயே.... முத்தம்மாவை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தாள் மனோகரி.

அவளை வேலைக்காரியாக இல்லாமல்

உடன்பிறவாத சகோதரியாகவே இன்றுவரை நடத்தி வருகிறாள்.


அறுபது வயது வரையிலும் பம்பரமாக சுழன்று வேலை செய்து வந்தவள் கடந்த சில வருடங்களாக மூப்பின் காரணமாக நிதானமாகத் தான் செயல்படுகிறாள். கைகளின் நடுக்கமும் பார்வைத் திறன் குறைபாடும் மறதியும் சிலநாட்களாக அதிகரித்து வருகிறது.

ஆனாலும் வீட்டில்ஓய்வெடுக்காமல் இறுதிவரை வேலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தினாலேயே தன் உடல் உபாதைகளைப் பொருட்படுத்தாமல் இவள் வீட்டிலும் பக்கத்துத் தெரு வேணி வீட்டிலும் வேலைக்கு வருகிறாள்.

தன் வாழ்நாள் முழுதும் ஏமாற்றத்தையும் விரக்தியையும் சந்தித்த முத்தம்மாவின் ஒரே ஆறுதல் மனோகரி தான்.


இப்போதும் வீட்டு வேலைக்காக, முத்தம்மாவை மனோகரி வைத்துக் கொண்டிருக்கவில்லை. மூன்று பெண்கள் இருக்கும் வீட்டில் வேலைக்காரி தேவையில்லைதான். முத்தம்மாவின் குணத்திற்கும் அவளது நிலைக்காகவும் மட்டுமே அவளை அமர்த்தியிருக்கிறாள்.

ஆரம்பத்தில் முத்தம்மாவை சகோதரியாக நினைத்த பார்த்திபன் தான் இப்போது மரியாதையில்லாமல் "அது" என்கிறான்.


மெதுவாக பெருக்கி முடித்த முத்தம்மா பின்வாசலில் போட்டிருந்த சாமான்களை விளக்க ஆரம்பித்தாள். அவர்கள் கூறியபடி வேலை முடிய இரண்டு மணி நேரம் ஆனது.

மிகவும் சிரமப்பட்டு எழுந்து வந்தவள் வாசல் படிக்கட்டில் அமர்ந்தாள். சூடான தேநீரை அவள் பருக தந்தாள் மனோகரி.

எப்படி அவளிடம் கூறுவது என யோசித்தாள். தளர்ந்த அவளது நடையையும் வாட்டமான முகத்தையும் பார்த்தபோது கண்கள் கண்ணீர் சொரிந்தன. தயக்கம் மேலிட.....வார்த்தைகள் தொண்டையிலேயே அமிழ்ந்தன.

மனோகரி முதுகின் பின்புறத்தில் எதிர்ப்பலைகளின் சுவாலையை உணர்ந்தாள். அவை அவளைத் தாக்காமல் இருக்குமாறு... தட்டுத்தடுமாறி எழுந்தவளை அணைத்தபடி நிற்க வைத்தாள்.

" என்ன கண்ணு! கண்கலங்குற. விழுந்துடுவேன்னுப் பாக்கிறியா. நீ இருக்கும்போது நான் விழுவேனா?...

வயசாவுது இல்ல. அதான் தடுமாற்றம். சரி கண்ணு ! வரட்டுமா?...என்றபடி மெல்ல வெளியேறினாள் முத்தம்மா.


தடுக்கும் அணை ஏதுமின்றி கண்கள் வெள்ளத்தைப் பெருக்கின அவளது நிலைக் கண்டு. அன்று இரவு முழுதும் முத்தம்மாவை வேலையியிலிருந்து வெளியேற்றுவதற்கான வழிகளில் இறங்கினர் விஜயன், இனியா, கனிகா கூட்டணியினர்.

அம்மா! இங்கப் பாரு!! என் காஸ்ட்லி ஷர்ட். எனக்குப் பிடிச்ச நிறத்துல பார்த்து பார்த்து வாங்கினது. ஒரு தடவைதான் போட்டேன். ஹேங்கர்லதான் மாட்டி வச்சேன். அந்த கிழவிக் கண்ணுல எப்படித்தான் மாட்டுச்சோ?... அழுக்கான கொடிக்கயிறுலப் போட்டு அந்த கறை அப்படியேப் சட்டைலப் படிஞ்சிடுச்சு. இனியா எவ்வளவோ தேய்ச்சுப் பார்த்தும்
கறைப் போகல" எனக் குமுறினான்.

இவர்கள் சதி வழியாகத்தான் முதல் குற்றச்சாட்டு விஜயனிடம் இருந்து தொடங்கியதை அறிந்தவள்...அடுத்த அம்பை எதிர்பார்த்துக. வந்தது கனிகாவிடமிருந்து.

" போச்சு ! அம்மா!! சுதந்திர திருவிழாக்

கொண்டாட்டத்திற்காக ஒரு டான்ஸ்

ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நானும் அதுல இருக்கேன். வெள்ளை பைஜாமாவை அதுக்காக எடுத்து வெளியே வச்சிருந்தேன். இதத்தான் அன்னிக்குப் போடனும். ஒத்திகைக்காக நாளைக்குக் கொண்டு வரச் சொன்னாங்க. அந்த பைத்தியம் இங்க் எல்லாம் அங்கங்க கொட்டி வச்சிருக்கு" என் ஆத்திரமுடன் கத்தினாள்.


ஒழுங்கும் நேர்த்தியுமே முத்தம்மாவின் வேலை அலங்காரங்கள். அவள் செய்யும் எந்த வேலையிலும் ஒழுங்கு இருக்கும்.

துணிகள் அங்கும் இங்கும் சிதறி தொங்கிக் கொண்டிருந்தால் அவற்றை உடனே சரி செய்வாள். ஆரம்பத்தில்

மனோகரிக்கு இது புதுமையாகவும் சலிப்பாகவும் இருந்தாலும் இந்த நேர்த்தியை அவளிடமிருந்துக் கற்றுப்

பின்பற்றுவதால் தான் ....வீடு எப்போதும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.


இப்போதும்.... படுக்கையில் ஹேங்கரோடு சுருட்டிப் போடப்பட்ட சட்டையை சரிசெய்யவே

கயிற்றில் உதறிப் போட்டிருப்பாள். அதே

போன்று, எழுதிய பேனாக்களை மூடாமல் திறந்தபடியே மேசையில் வைப்பது கனிகாவின் வழக்கம். அதன்

பக்கத்திலேயே பைஜாமாவைத் தூக்கிப்

போட்டிருப்பாள். அதனால்தான் துணியில் ஆங்காங்கே மைப் படிந்து

உள்ளது. இவர்கள் செய்த தவற்றை அப்பாவி மேல் போடுகிறார்கள். சரி...

இன்னும் இனியாவின் அம்புத் தாக்குதல் மீதி இருக்கிறது...என மனதில் எண்ணியபடி பார்த்தாள். கணிப்புத் தப்பவில்லை.


" அத்தே! அந்த பொம்பளய நீங்க ரொம்ப நம்பி இடம் கொடுத்துட்டீங்க. அதனாலத்

தான் அது வீடு முழுக்க இஷ்டத்துக்கு சுத்துது. அடிக்கடி சமையல் பாத்திரங்கள் சிலதுக் காணாமப் போகுது. உங்களோடது இல்ல. நான் கொண்டு வந்தது. என் வெள்ளி டம்ளரை மறந்து ஒருநாள் வெளியே வச்சிட்டேன். ஞாபகம் வந்து தேடினப்ப கிடைக்கல. இன்னிக்கு

எங்க அறையில அவள் பெருக்கும் போது...மேசையில நான் கழட்டி வச்சிருந்த மூக்குத்திய காணோம் . அவள்தான் திருடி இருப்பா.

இப்படியேப் போனா வீட்டில இருக்கிற

பொருள் மேல எல்லாம் கைவச்சிடுவா"

என பெரிய பொய்மூட்டையை அபாண்டமாக அவள் மேல் சுமத்தினாள்.


கணவனை அர்த்தத்தோடுப் பார்த்தாள் மனோகரி. "முத்தம்மாவை நம்பி வீட்டை என்ன...பீரோ முதல் பேங்க் வாக்கர் வரை

எல்லாவற்றையும் நம்பி ஒப்படைக்கலாம்.

அவ்வளவு கைசுத்தம், மனசுத்தம் உள்ளவள்" என நற்சான்றிதழ், கேடயம் அனைத்தும் கொடுத்தவன் ஆயிற்றே. ஆனால் மறுபேச்சு ஏதுமின்றி அவன் ஒதுங்கி அறைக்குச் சென்றதும் மிகவும்

அதிர்ந்தாள்.


அன்றிரவு முழுதும் பலத்த யோசனையில் ஆழ்ந்தாள். தொண்டையில் உணவு இறங்கவில்லை அவர்களின் பொய்க் குற்றச்சாட்டுக்களை ஜீரணிக்கும் ஆற்றல் மனதிற்கும் உடலுக்கும் இல்லாததால்.

தன் நிலைமையே இப்படி என்னும் போது,

அவர்கள் நாளை முத்தம்மாவைக் கேள்விக் கணைகளால் தாக்கும்போது.

எவ்வாறு அவள் தாங்குவாள்?...துவண்டு விழுந்து விடுவாளே.... இத்தனை நாளும் இவர்களின் நடத்தையையும் மனமாற்றத்தையும் அறியாமலா இருந்திருப்பாள். தன்மானம் மட்டும் அவள் பண்பல்ல. மிகவும் சூட்டிகையானவள். சுடுசொல், சுடுபார்வை தாங்க மாட்டாளே!! நாளைய

விடியலை நினைத்து மிகவும் வேதனைக்

கொண்டவள் தூக்கம் பிடிக்காமல் மாத இதழ் பத்திரிக்கையில் பார்வையை ஓட விட்டாள். எழுத்துக்களை எல்லாம் விழிநீர்

மறைத்தது.


கண்ணீரை மீறி செய்தி ஒன்று அவள் மனத்திரையில் விழுந்து நிமிர்ந்தெழச்

செய்தது. "நிரஞ்சனாலயம் " என்ற தலைப்பில் செய்தித்தொகுப்பொன்று இடம்பெற்று இருந்தது.


அதிகாலை நான்கு மணிக்கே வேலையில் இறங்கத் தொடங்கினாள்.

ஐம்பது பேருக்குத் தேவையான அளவில் குறைந்த இனிப்பு, நெய்யுடன் கேசரியும், வடையும் செய்து....அவற்றை டப்பாக்களில் எடுத்துக் கொண்டு, குடும்பத்தாருக்கான காலை உணவைத்

தயாரித்து மேசையில் வைத்துவிட்டு

எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல்

மனோகரி வீட்டை விட்டுப் புறப்படும் போது நேரம் ஏழு.


நேராக முத்தம்மாவின் வீட்டிற்குப் போனாள். அவள் தங்கையிருந்த அதே குடிசை வீடுதான். அப்போது தான்

எழுந்திருந்த முத்தம்மா...வாசலில் நீர்த்

தெளித்துக் கொண்டிருந்தாள். இவளைக்

கண்டதும் அவற்றை போட்டுவிட்டு...

"வா கண்ணு!! வா வா!! என்னம்மா

காலையில என்னைத் தேடிட்டு வந்துட்ட.

எதாச்சும் வேலையா?...எனக் கேட்டபடி

உள்ளே வரவேற்றாள்.


"அக்கா! உடனே குளிச்சுட்டு என்னோட

கிளம்பு. நாம ஒரு இடத்துக்குப் போறோம். ரொம்ப நாளா கொஞ்ச பேருக்கு என் கையால பலகாரம் கொடுக்கனும் என்று ஆசை. அதான் என்னால முடிஞ்சத செய்துக் கொண்டு

வந்திருக்கேன். சாப்பிட நீ எதுவும் செய்யாதே"

என்றபடி தட்டில் கேசரியும் இரண்டு வடையும் வைத்து முத்தம்மாவிடம் கொடுத்தாள் இவளும் சிறிது உண்டபடி.

முத்தம்மா கொடுத்த தேரீரை அவளுடன் அருந்திவிட்டு... ஆட்டோவில், ,, குறிப்பிட்ட

அந்த "நிரஞ்சனாலயம் " பகுதிக்கு வந்தனர் இருவரும்.


உண்மையில் மிகவும் அருமையாகவும் அழகாகவும் இருந்தது அந்த இடம் . சரணாலயம் என்ற சொல்லுக்குப் பொருத்தமாய் பசுமை சூழ்ந்து இருந்தது.

பூங்கா போன்ற அமைப்பைச் சுற்றி தனித்தனி வீடுகளாக பன்னிரெண்டு கட்டிடங்கள் இருந்தன. அவற்றைச் சுற்றி செவ்வக வடிவ நடைமேடை பசும்புல் தோற்றத்துடன் ரம்யமாக இருந்தது.

சில முதியவர்கள் நடைப்பயிற்சியைத்

தொடர்ந்துக் கொண்டு இருந்தனர். இவ்வளாகத்திற்குப் பின்புறம் அலுவலகமும் இக்காப்பகத்தின் பணியாளர்களுக்கான இருப்பிடமும்

அமைந்திருந்தது.


பூங்காவிலிருந்து பலகைமேடையில் முத்தம்மாவை அமரச் சொல்லிவிட்டு நேராக அலுவலகத்திற்குச் சென்ற

மனோகரி மேலாளரிடம் பேசினாள்.அவரே அக்காப்பகத்தை சேவை மனப்பான்மையுடன் நடத்தி வருபவர். ரேவதி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அப்பெண்மணி.


" சொல்லுங்க மனோகரி! யாரை இங்க சேர்க்க வந்திருக்கீங்க?...என கேட்டார்.


" எங்க வீட்ல வேலை செய்யற முத்தம்மாவைத்தான். அவங்கள இங்க வேலைக்கு சேர்க்கத் தான் வந்து இருக்கேன். இவங்களக் கவனித்துக் கொள்ள ஆட்கள் தேவை என்ற உங்க விளம்பரத்தைப் பார்த்தேன். முத்தம்மாவுக்கு சொந்தம் என்று யாரும் இல்லை என்னைத் தவிர".... என்று முத்தம்மாவைப் பற்றிய விவரங்களையும்

இப்போதைய அவளது நிலையையும் எடுத்துக் கூறினாள்.


" இப்ப என் அக்காவிற்கு ஒரு பாதுகாப்பான இடமும் கௌரவமான

நிலையும் தான் தேவை. அவங்களால நிறைய வேலைகளைச் செய்ய முடியாது

என்றாலும் தன் இறுதிக் காலம் வரை உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்.

அவர் தங்குவதற்கு இடம் அளித்து ஏதாவது ஒரு வேலை தர வேண்டும். நான் மாதாமாதம் இரண்டாயிரம் ரூபாயை அவர் தேவைக்கு என்று உங்களிடம் கொடுத்து விடுகிறேன். தன்னைக் காப்பகத்தில் சேர்த்துள்ளதாக அவர் நினைக்காதபடி அவரை ஒரு ஊழியராக நீங்கள் நடத்தினால் போதும். இந்த உதவியை நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன்" என கண்ணீர் மல்க மனோகரி கூறியதும்... ரேவதியும் நெகிழ்ந்தார்.


" மேடம்! இந்த காப்பகத்தை வியாபார நோக்கத்தோட நான் ஆரம்பிக்கவில்லை.

என்னோட பெற்றோர் ரொம்ப வசதியானவர்கள். நானும் என் சகோதரனும் பொறியியல் படிப்பு முடிச்சதும் வெளிநாட்டில் பணிபுரிந்து

அங்கேயே செட்டில் ஆகிட்டோம்.

எங்களோட பெற்றோர்களை நாங்கள்

கவனிக்கத் தவறிட்டோம். எல்லா வசதிகளோடும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்தோம். ஆனால்

எங்களின் அருகாமை இல்லாத ஏக்கத்தில் அவர்கள் தனிமையிலேயே வாடினார்கள். என் தந்தையை இழந்த நிலையில் பல உடல் உபாதைகளுடன் சிரமப்பட்டிருந்த என் தாயுடன் மூன்று

மாதங்கள் உடனிருந்து கவனித்துக் கொண்டேன். அப்போதுதான் அவர்களின் உண்மையான தேவை புரிந்தது. வசதி வாய்ப்புகளையும் பணக்குவியலையும் விட... வயதான காலத்தில் அவர்களின் தேவை அன்பு ஒன்றுதான் என்பதும் புரிந்தது. அவரது இறுதிக்காலத்தின் சிலநாட்களாவது என்னால் அவர் விரும்பிய மகிழ்ச்சியைக் கொடுக்க முடிந்தது என்ற திருப்தியுடன்.. அந்த தாக்கத்தில் என் மனதில் எழுந்த யோசனை தான் இந்த காப்பகம் அமைய உதவியது.


இங்கு வசிக்கும் அனைவரும் மிக வசதியானவர்கள். ஆனால் இவர்களைக் கவனிக்கத்தான் ஆளில்லை. பிள்ளைகள் வெளிநாட்டில் தங்கள் வேர்களை மறந்துவிட்டு வசதிவாய்ப்பைத் தந்த கிளைகளின் நிழல்சுகத்தில் திளைத்து வாழ்ந்துக் கொண்டிருக்க.... அவர்களைப் பெற்றவர்கள் தனிமையின் கொடுமையில் வேதனை வெப்பத்தில் தகித்துக் கொண்டு இங்கு வாழ்கின்றனர். இந்த தனிமைச்சூட்டைத்

தணிக்கும் நீரூற்றுகளாக அவர்களை மகழ்வித்து, தேவைகளைக் கவனித்து அவர்களது இறுதிக்காலத்தில் அவர்கள் மனம்தேடும் வசந்தத்தைக் தரும் முயற்சியில் நானும் எனது பணியாளர்களும் சேவை ஆற்றுகிறோம்.


ஆனால், இது சுலபமான பணியன்று.

சேவை மனப்பான்மையோடு வருபவர்களைவிட...ஊதியத்தை எதிர்பார்த்து பணிபுரிபவர்களாக வருபவர்களால்... முதியவர்களைப்

பொறுமையுடன் கவனித்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் மூன்றுமாதம்

அவர்கள் பணியில் நீடித்தாலே அதிகம்

என்றாகிறது. அதனால் சேவை மனப்பான்மையோடு வருபவர்களைத்

தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.


நீங்கள் அழைத்து வந்திருக்கும் பெண்மணி இந்த வயதானவர்களைப்

பொறுமையுடன் கவனித்துக் கொள்வாரா என்பதை மட்டும் நீங்கள் தெளிவுப் படுத்தினால் போதும்" எனக் காப்பக உரிமையாளர் ரேவதி கூறியதும்...


" தனது பதினைந்து வயதிலிருந்து இன்றுவரை பிறர்க்காகவே வாழ்ந்துக் கொண்டிருப்பவர்தான் என் அக்கா என்றபடி முத்தம்மா பற்றிய விவரம் அனைத்தும் கூறினாள் மனோகரி. ரேவதியின் அனுமதி கிடைத்ததும்

முத்தம்மாவை விட்டு வந்திருந்த இடத்திற்குச் சென்றதும் அவள் அங்கு இல்லாமல் திகைத்தாள்.


சுற்றிப்பார்த்த போது எதிரேயிருந்த ஒரு அறையிலிருந்து வெளியே வந்தாள் முத்தம்மா. இவளைக் கண்டதும்...

" என்ன கண்ணு! என்னைத் தேடினியா?...

நீ அந்த ஆபிஸ் ரூமுக்குப் போனதும் நான் சுத்தி வேடிக்கைப் பார்த்திட்டு இருந்தப்ப,

அதோ அந்த அறையிலிருந்து யாரோ கூப்பிடற குரல் கேட்டுப் பார்த்தா...வயசான அம்மா ஒருத்தங்க தரையில விழுந்திருந்தாங்க. குளிச்சிட்டு வந்தவங்க தண்ணி வழுக்கி விழுந்துட்டாங்க போல. அவங்கள எழுப்பி விட்டேன். அவங்களால புடவை தானாகவே உடுத்திக்க முடியல. நான் புடவைக் கட்டி விட்டதும் ரொம்ப நெகிழ்ந்து கண்ணீர் விட்டாங்க. எனக்கு என்னமோ போல ஆயிடுச்சு கண்ணு" என்றாள் முத்தம்மா.


" நீ எப்பவுமே மற்றவர்களுக்கு உதவுகிற மனம் கொண்டவங்களாச்சே. சரி வாங்கக்கா! நாம கொண்டு வந்த பலகாரங்களை இவங்களுக்குக் கொடுத்திடலாம்" என்றபடி ரேவதியின் அனுமதியுடன் அனைவருக்கும் அன்புடன் வழங்கினர். அனைவரும் உண்டு மகிழ்வதைக் கண்டதில் மிகுந்த மனநிறைவும் ஆனந்தமும் கொண்டனர் இருவரும்.


திரும்ப அந்த மர பலகையில் அமர்ந்த இருவரிடையிலும் மௌனம் நிலவியது சில நிமிடங்களுக்கு.


" அக்கா! எனக்கு ரொம்ப நாளா ஒரு விருப்பம். இந்த மாதிரி உதவி நாடி இருக்கிற முதியவங்க, குழந்தைங்க, ஆதரவற்றவங்களுக்கு என்னால முடிஞ்ச ஏதாவது உதவி செய்யனும் என்று. ஆனா

குடும்பம் என்று ஒன்று இருக்கிறதால...

அந்த கடமைகளை விட்டுவிட்டு இந்த விஷயங்களில் கவனம் செலுத்த முடியறது இல்லை. உங்க தம்பி மாதாமாதம் இப்படிப்பட்ட காப்பகங்களுக்கு பண உதவி செய்யறாரு. ஆனாலும் சரீர உதவி மாதிரி வருமா. பணம் கொடுக்க ஆயிரம் பேர் வருவாங்க. ஆனா, முகம் சுளிக்காமல் இவர்கள் மனம் கோணாமல் தேவைகளைக் கவனிக்க ஆட்கள் மிகக் குறைவானவர்களே இருக்காங்க.


இந்த இல்லத்தையே எடுத்துக் கொண்டால்.... இங்கே இருக்கிற எல்லா வயதானவர்களும் பண வசதிக்குக் குறைவில்லாதவங்க. ஆனா அவங்க தேவை எல்லாம் அன்பும் கவனிப்பும் தான். காப்பக உரிமையாளர்க்கிட்ட நான் பேசியபோது இதே விஷயத்தைத் தான் சொன்னாங்க. அவங்களுக்கு நன்கொடையை விட....பணியாளர்கள் தாம் அதிகம் தேவைப்படறதா சொன்னாங்க" என்று மனோகரி கூறியதுமே.....


" ஏன் கண்ணு! நான் இங்கே வேலைக்கு சேர்ந்திடட்டுமா?....எனக்கும் இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த மாதிரி தேவை இருக்கிறவங்களுக்கு சேவை செய்து என் கடைசி காலத்துல புண்ணியம் தேடிக்கிறேனே. என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் என்னால முடிந்த அளவுக்கு இவங்களுக்கு உதவியா இருக்கிறேன். நீ ஒண்ணும் தப்பா நினைக்காதே கண்ணு. நீ என்னை இங்க விட்டுட்டு அந்தம்மாவைப் பார்க்க போனியே, அப்போ சுத்தி நான் பார்த்தப்ப வயதானவங்க உடல் பாரத்தோடும் நோய் வேதனையோடும் அங்கங்க நடமாடிட்டு இருக்கிறதையும் மன வேதனையோட பேசிக்கொண்டு

இருக்கிறதுயும் பார்த்தேன். அப்போதே என் மனதில் இந்த எண்ணம் வந்தது.

பயனுள்ள வாழ்க்கைதான் மனிதபிறப்புக்கான அர்த்தம் என்று ஐந்து வயதிலேயே என் ஆத்தா எனக்கு சொல்லிக் கொடுத்தது என் உடம்போடும் இரத்தத்தோடும் கலந்ததாலத்தான்

இந்த நிமிஷம் வரைக்கும் நான் உழைச்சிட்டு இருக்கேன் என் உடம்பு முடியாவிட்டாலும். ஆனா, இனிமேல் முழு தெம்போடவும் உற்சாகத்தோடவும் நான் இவங்களுக்காக வேலை செய்துட்டே இருக்க போறேன். சரி தானே கண்ணு" என முத்தம்மா கூறியதும் கண்களில் நீர்ப் பெருக அவளைக் கட்டிக்கொண்டாள் மனோகரி.


ஏற்கனவே இதுகுறித்துப் பேசியிருந்ததால், முத்தம்மாவை ரேவதியிடம் அழைத்துச் சென்ற மனோகரி....இங்குப் பணிபுரிய அவள் விருப்பம் தெரிவித்ததைக் கூறியதும் பணியாளர்க்கான விதிமுறைகளை முத்தம்மாவிடம் விவரித்து விட்டு அவள் தங்குவதற்கான பணியாளர் அறையைக் காண்பித்து ஏற்கனவே பணியில் இருந்தவர்களை அவளுக்கு அறிமுகம்

செய்தார் ரேவதி.


மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த முத்தம்மாவிடம் கனத்த மனத்தோடு விடைப்பெற்றாள் மனோகரி.

" அக்கா! இங்க வேலை செய்ய உனக்கு விருப்பம் தானே. நீ எப்ப வேணுமென்றாலும் உன் வீட்டுக்கு வரலாம். நானும் வாரந்தோறும் உன்னைப் பார்க்க இங்கே வருவேன்" என்று கண்கலங்கினாள் உண்மையான நேயத்தோடு.


" அழாதே கண்ணு! உன்னைத் தவிர எனக்கு உறவென்று யாரு இருக்கா?...

கவலைப்படாமே வீட்டுக்குப் போம்மா"...

என்றவளிடம் அவள் தேவைக்கென இரண்டாயிரம் ரூபாயை அவள் மறுப்பையும் மீறி கைகளில் திணித்து விட்டுப் பெருகிய கண்ணீருடன் அங்கிருந்து விடைபெற்றாள் மனோகரி.


அவள் செல்வதைக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த முத்தம்மா மனதோடு பேசிக் கொண்டாள்.

"எனக்கு என்னிக்குமே நல்லது நினைக்கிற உன்னை விட்டா எனக்கு உறவு என்று யாரு இருக்கா கண்ணு!! உன் நிலைமை எனக்குத் தெரியும். உன் வீட்டு ஆளுங்களுக்கு நான் வேண்டாதவளா

ஆகிட்டேன். அவங்க சுடுசொல் என்னைத் தாக்கிறதுக்குள்ள பத்திரமா இங்க கொண்டு வந்து சேர்த்திட்ட. நான் மனசார இங்க நிம்மதியாவும் நிறைவாகவும் இருப்பேன் கண்ணு. நீ கவலைப்படாதே. உனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் நான் எப்பவும் என் மகமாயியைக் கும்பிட்டுக் கொண்டே இருப்பேன் கண்ணு" என கண் கலங்கி விடைகொடுத்தாள் முத்தம்மா.... மனோகரி புள்ளியாய் மறையும் வரை.

நெகிழ்வுடன்....

Stories you will love

X
Please Wait ...