JUNE 10th - JULY 10th
பச்சை பசேலென்ற அழகான கிராமம் அது. நூறடி தூரத்திற்கு ஒரு வீடு, கால்நடை கொட்டகையோடு சேர்ந்த சில வீடுகள் என, ரம்மியமாய் அமைந்த அவளது கிராமம். தன் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து வந்துதான் பஸ் பிடிக்க வேண்டும். ஏழரை மணி பஸ்ஸை தவறவிட்டால் எட்டு மணிக்கு டியூசனுக்கு செல்லமுடியாது. கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே வேகவேகமாய் நடந்தாள் அன்னம். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அவளது பள்ளி நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஆலங்குடி என்ற பெயர் பலகையை சுமந்தபடி பதினேழாம் நம்பர் பஸ் வந்ததும், தன் தோழிகளுடன் சேர்ந்து அவளும் கைகளைக் காட்டி நிறுத்த, பேருந்து உழைத்து களைத்த அலுப்பில் தன் முதிர்ச்சியை வெளிக்காட்டியபடி ஒருவித சப்தத்துடன் நின்றது .தன் தோழிகளோடு, மூவரும் முன் படிக்கட்டின் வழியாக ஏறினர். இருக்கைகள் முழுவதும் நிரம்பிய நிலையில், இருக்கையை ஒட்டிய கம்பியை பிடித்தவாறு மூவரும் நிற்க, தினந்தோறும் பயணம் செய்யும் பேருந்து என்பதால் சீருடை பார்த்து ஊர்ப்பெயர் கேட்காமலே கீரமங்கலத்திற்கு டிக்கெட்டை கிழித்து கொடுத்துவிட்டு நடத்துனர் நகர, இடதுபக்க நடத்துனரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் அன்னத்தின் கண்ணில் பட்டான்.
ஆண் வர்க்கத்தையே விரும்பாத அவள் ஏனோ அவனை உற்று நோக்கினாள் ஏனோ இனம்புரியாத ஈர்ப்பு அவனிடத்தில். 15 நிமிட பயணத்திற்கு பிறகு அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கும் முன் மறுமுறை அவனைப் பார்க்கத் தூண்டியது அவளுக்கு.
அடுத்த நாள் பேருந்தில் ஏறியவுடன் அவளின் கண்கள் நடத்துனர் இருக்கையை நோக்கி அந்த இளைஞனை தேடியது. அதே இருக்கையில் அவனும், இப்படியே பல நாட்கள் நகர ஒன்றரை மாதத்திற்கு பிறகு அவன் அந்த இருக்கையில் இல்லை, இப்படியே தேடலும் ஏமாற்றமுமாக சில நாட்கள் நகர ஒருநாள் பேருந்தை விட்டு அவள் இறங்கிய போது எதிரே ஐம்பதடி தூரத்தில் பூமியின் மேற்பரப்பில் படர்ந்திருந்த புல்லை மயிலிறகால் வருடுவது போன்ற, ஒரு மெல்லிய நடையோடு அவன் வருவதை பார்த்தாள். பின்புறமும் வலதுபுறமும் மட்டுமே அவனைப் பார்த்த அவள், அவனது முழு உருவத்தை அன்றுதான் காண்கிறாள். ஐந்தடிக்கும் சற்றே அதிகமான உயரம். அழகான கருப்பு நிறம், ஆண் இனத்தின் இங்கித மகனுக்கு சான்றாய் அவனது நடை. அவளது இதயம் பயத்தையும் படபடப்பையும் ஒன்று சேர்க்க, டியூசனை நோக்கி விரைந்தாள் அன்னம்.
அவனது பிம்பம் திரும்ப திரும்ப அவளுக்குள், எப்போதுமே பேண்ட்டுக்குள் இன் பண்ணிய சர்ட், ஷு என மிக நேர்த்தியாக இருந்தான். அதன் பிறகு பல நாட்கள் அவனைப் பார்க்கவே இல்லை. பஸ் ஸ்டாப்பில் இருந்து பள்ளிக்கு அரை கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். அந்த இடைவெளியில் ஒரு சில நாட்கள் அந்த இளைஞன் சிறு புன்னகையுடன் கடந்து சென்றான்.
அன்று சனிக்கிழமை பத்து மணி முதல் மதியம் ஒரு மணிவரை டியூசன் இருந்தது. அதன் பின் தன் தோழிகளுடன் தனித்தனி சைக்கிளில் வீடு நோக்கி சென்ற பொழுதுதான் தன் புதிய பைக்கில் எதிரில் வந்தவன் அவளைப் பார்த்ததும் வண்டியை சாலையோரம் நிறுத்தினான். அவனது நேர்த்தியான தோற்றம் பற்றி தோழிகளுக்கு சொல்லியிருந்ததால் இருவரின் நோக்கம் அறிந்து தோழிகள் முன்செல்ல, அன்னம் மட்டுமே சைக்கிளை நிறுத்தினாள். அவன் அருகே வரச்சொன்னான் மெதுவாய் சைக்கிளை நகர்த்தி சற்றே இடைவெளியுடன் நின்றாள். அவனது முகத்தில் பயமும் பாசமும் தெரிந்தது. ஏன் நீ மூணு நாளா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டான். சற்றே தயக்கத்துடன் உங்களுக்கு எப்படி என் திணறினாள் அன்னம். அவனே தொடர்ந்தான்.உன்ன பாக்காம என்னால் இருக்க முடியல, தெரிஞ்ச சார்கிட்ட சொல்லி ஓங்கிளாஸ் அட்டனன்ஸ்ஸை பாத்தேன். மூணு நாளா நீ லீவுன்னு சொன்னாரு, ஏன் என்னாச்சு உடம்பு கிடம்பு சரியில்லையா என பதறினான். அப்படி ஒன்னும் இல்லை என்பது போல் தலையாட்டினாள். இருவரின் ஒரு சில நிமிட மௌனத்திற்கு பிறகு நான் கிளம்பட்டுமான்னு அவள் கேட்க ,அரைமனதாக தலையாட்டியதை தொடர்ந்து தன் தோழிகளோடு இணைந்தாள். உலகின் ஒரே ஒரு அதிசயம், அது தனக்கே கிடைத்தது போல் துள்ளியது அவள் மனது. ஆனால் ஆர்ப்பாட்டமில்லாமல் தன் தோழிகளிடம் நடந்ததை கூறினாள்.
அவரு எங்க ஊரு தான் பேரு இனியவன், இருவத்தேழு வயசு அரசாங்க ஆஸ்பத்திரில வேலை பாக்குறாரு. தனியா ஒரு மெடிக்கலும் வச்சிருக்காங்க. நல்ல வசதியான குடும்பனு அவள் தோழி சொன்னதை கேட்டு ஏமாற்றமடைந்தாள். பதினேழுவயதுதான் என்றாலும் நன்கு பக்குவப்பட்டிருந்தாள்.
அதன் பிறகு அவன் அவளை பார்க்கும் போதெல்லாம் அவள் விருப்பத்தை வினவினான். அவள் மறுத்தாள், இப்படியே பல நாட்கள் நகர ஒருநாள் நீண்ட நேரம் பேசினான். இனியவன், பெயருக்கு ஏற்றார் போல் இனி யவன்தான். இவளை ஒரு குழந்தையை போல் தான் பாவித்தான் வன்முறையற்ற காதல், காமம் இல்லாத பார்வை, மலரும் தோற்றுப்போகும் இவனிடத்து மென்மையில், தென்றலுக்கே சவால்விடும் இவனது பேச்சு, எப்போதும் நேர்த்தியாய் இருந்தது அவன் உடல் மட்டுமல்ல, அவனின் அளவான பேச்சும் செயல்களும் தான். அன்னத்திற்கு அவன் இன்னும் அழகாய் தோன்றினான்.
பஸ்ல கண்டக்டர் சீட்ல உக்காந்து உன்ன பஸ் கண்ணாடில பாத்துட்டே வருவேன். அப்புறம் உன்னை நேரா பாக்கணும்னு பின்னாடி சீட்ல போய் உட்கார்ந்து பார்த்தேன். உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் அலட்டிக் குவாங்க ஆனா நீ மட்டும் தான் ரொம்ப இயல்பா இருப்ப, அமைதியா ....அழகா.... அவனோட அந்த பேச்சு அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவன் மார்பில் முகம் புதைத்து நீ வேண்டும் என அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. ஆனாலும் அவன் காதலுக்கு மறுப்பு தெரிவித்தாள். அவள் வறுமையான குடும்பம் இல்லை என்றாலும் அவன் வீடு போல் வசதி இல்லை தேவையற்ற பிரச்சனை எதுக்குனு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள். இப்படியே நாட்கள் நகர ஒருநாள் அவளை சந்தித்த அவன், அடுத்த வாரம் சித்திர ஒன்று அன்னைக்கு உன்னோட முடிவை சொல்லுன்னு சற்றே வேகமாய் பைக்கில் கிளம்பினான். ஒரு வாரம் முட்டி மோதிய எண்ணங்களுக்கு மத்தியில் தெளிவா முடிவுக்கு வந்தவளாய் அவன் சொன்ன இடத்துக்கு தன் சைக்கிளை ஒட்டியபடி, தன் சம்மதத்தை சொல்லிவிடும் ஆர்வத்தோடு அங்கு சென்றாள். அவன் இல்லை காத்திருந்தாள்.....நொடி நிமிடமாய் கரைந்தது நிமிடம் கரைந்து ஒரு மணித்துளியை தாண்டிய பிறகு அவன் வந்தான். அவளிடம் அவன் வாங்கியிருந்த அன்னத்தின் போட்டோவை நீட்டினான். எங்கப்பா இதப் பார்த்துட்டு ஒரே பிரச்சினை, கண்கள் கலங்கியது அவனுக்கு. வார்த்தை வரல, உங்கவீட்ல உங்க அண்ணங்கிட்ட சொல்லுன்னு சொன்னவன் மீண்டும் வந்த அழுகையை அடக்கியவாறு புறப்பட்டான். சொல்லவந்த காதலை சொல்லாமலே திரும்பினாள் அன்னம்.அவனது இயலாமை அவளுக்கு புரிந்தது.
அதுக்கப்புறம் அவங்க வீட்ல அவன் யாருகிட்டயும் பேசுறது இல்லையாம், சிகரெட் குடிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டான் என் தோழிகள் மூலம் அறிந்து கொண்டாள். நதியின் இரு கரை போல் இவர்களின் காதலும் ஆனது. அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து அன்னத்திற்கு நகரத்தில் ஒருவருடன் திருமணம் முடிந்தது. (அவள் வாழ்க்கையும் தான்) அவளது கணவன் இனியவனுக்கு நேர்எதிர். பெரும்பாலும் கரடுமுரடான வார்த்தைகள், கொடூரமான அணுகுமுறை ,சந்தேக குணம், தகாத உறவு என அவள் வாழ்க்கையே வெற்றிடமானது. துயரங்கள் தோள்மீது துன்பங்கள் அதன் மீது. பதிமூன்று வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இரண்டு குழந்தைகளோடு கணவனை விட்டு சட்டரீதியாக பிரிந்தாள்.அவனோ மறுமணம் புரிந்து கொண்டான்.
இவளோ குழந்தைகளுக்கான பொருளாதாரத்தேடலோடும், இனியவனின் நினைவுகளோடும் அரை நூற்றாண்டை கடந்து விட்டாள். இவள் திருமணம் முடிந்த மறு வருடமே அன்னத்தின் பெற்றோர் நகரத்திற்கு குடிபெயர்ந்து இருந்ததால் இனியவன் பற்றியோ தன் தோழிகள் பற்றியோ எதுவும் அவளுக்கு தெரியவில்லை. தொலைபேசி இல்லாத காலம் அது.
"கார்முகில் போன்ற
கருங்கூந்தலை கொண்ட அன்னமே,
உன் ஓரப்பார்வைக்காக
ஓராயிரம் முறை
காத்திருக்கிறேன்.
முதல் காதல் முற்றிலும்
மறக்க முடியாதது.
நினைத்தபோது
நிறத்தை மாற்றிக்கொள்ள
நெஞ்சத்தால் ஆகாது.
மரணம் வரை மறக்கமுடியாதது"
அன்னத்திற்காக இனியவன் எழுதிய கவிதை. அவ்வப்போது அவள் எண்ணிக்கொள்வதுண்டு. இனியவன் மீதான அன்னத்தின் காதல் தொடர்பற்றது ஆனால் துண்டிக்கப்படாதது சில காதல் ஜாதியால் பிளவுபட்டு, பல காதல் ஏற்றத்தாழ்வால் முறிக்கப்பட்டு, பலர் சேர்ந்த குடும்பத்தில் சிலர் மட்டும் தனிமரமாய் சில நினைவுகளோடு,.... விரக்தியின் விளிம்பில், நம்பிக்கை சிதைந்து, கிடைத்த ஒரு வாழ்வும் வளமற்று, காரணம் சமூகத்தின் சீர்திருத்தமற்ற தேங்கிய எண்ணங்கள்...
அணு கோவை,
#18
Current Rank
60,440
Points
Reader Points 25,440
Editor Points : 35,000
518 readers have supported this story
Ratings & Reviews 4.9 (518 Ratings)
Iniyan828
Top 5 best this story Add it
Janani822
Lovely story
Aarav739
Love story super
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points