இவள் இப்படி தான்

tamilguru192012
பெண்மையக் கதைகள்
5 out of 5 (8 Ratings)
Share this story

இவள் இப்படி தான்!

"என்ன செண்பகம்? வேலை பரபரன்னு நடக்குதே! உன் முகம் கூட ஜொலிக்குதே! என்ன விசேஷம்? எனக் கேட்டாள் பண்ணையாரம்மா வள்ளியம்மை, தன் வீட்டில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த வேலைக்காரி செண்பகத்தை பார்த்து..


பெரிய விசேஷம் இல்லமா! என் மகன், அவன் பொண்டாட்டியோட வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கான், அதான் வெரசா வீட்டுக்கு போக, வேகமா செஞ்சிட்டு இருக்கேன்!


உம்மவ பாண்டி வர்றானா, ம் ம்.. அவனை வேலைக்கு சேர்க்க பணம் டெபாசிட் பண்ணனும்னு கடன் கேட்டே, லட்ச ரூபாய் கொடுத்தேன்! சரி அவன் வேலைக்கு சேர்ந்து உன்னை நல்லா பார்த்துப்பான்னு நினைச்சா, பொசுக்குன்னு கல்யாணம் பண்ணி வைக்க சொல்றான்னு வந்து நின்ன.மறுபடியும் காசு கொடுத்தேன்! அவன் என்னடான்னா கல்யாணம் பண்ணுனதுமே டவுனுக்கு குடி போயிட்டான், உனக்கு பணம் எதாச்சும் தர்றானா செண்பகம்.. மனத்தாங்கலோடு கேட்டார் வள்ளியம்மை.


"இல்லம்மா, இதுவரை தந்ததில்லை, ரொக்கமா சேர்த்து வச்சு அவன் தங்கச்சி கல்யாணத்துக்கு தரலாம்னு நினச்சு இருப்பான், நா அவங்கள ஆளாக்க எத்தனை கஷ்டபட்டேன்னு அவனுக்கு தெரியாதா?. கண்டிப்பா அவன் தம்பியையும் படிக்க வைப்பான் மா! அவன் தங்கச்சி சிந்துவோட அமைதிக்கும், அழகுக்கும், நல்ல பெரிய இடமா அமையும்னு நினைத்தேன், அதே மாதிரி இப்ப ஒரு பெரிய இடத்திலிருந்து பொண்ணு கேக்குறாங்க, அது விஷயமா பேசத் தான் அவனை வரச் சொல்லி இருக்கேன்!நீங்க கவலைப் படாதீங்கம்மா.. உங்க கடனை நான் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிடுவேன்!"என்றாள் நம்பிக்கையாய்..


நீ கண்டிப்பா அடைச்சிடுவ செண்பகம்! எனக்கு அது நல்லா தெரியும், இன்னைக்கு நேத்தா உன்னை நான் பார்க்கறேன், இருபது வருஷமா பார்க்கிறேன்! நம்ம ஊரு பொண்ணுங்க எவளுக்கும் இல்லாத தைரியம் உனக்கு! புருஷன் இன்னொரு பொம்பளைய தேடிப்போனா கண்ண கசக்கிட்டு, மூலையில் முடங்கி கிடப்பாங்க நம்ம ஊரு பொம்பளைங்க! ஆனா நீ, நண்டு சிண்டா இருந்த மூணு புள்ளைகளோட ஊரை விட்டு வந்து, கெடச்ச வேலை எல்லாம் செஞ்சு, அவங்கள ஆளாக்கி இருக்கியே!. இந்த தைரியம் தான் உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது! என்றாள் வள்ளியம்மை நெகிழ்ச்சியாய்..


பின்ன என்னம்மா?..புருஷன் குடிச்சிட்டு அடிச்சான் தாங்கிட்டேன், செலவுக்கு பணம் தராமல் காசை அழிச்சான், பொறுத்துக்கிட்டேன்! எப்படியும் திருத்திடலாம்னு முயற்சி பண்ணிட்டு இருந்தேன்! ஆனா அவன் எப்ப இன்னொருத்தியை தேடிப் போனானோ.. அப்பவே மனசு வெறுத்துடுச்சு! அந்த ஆள நம்பி மூணு புள்ள பெத்த எனக்கு என்ன மருவாதி!அடுத்தவ பின்னால அலைஞ்சவனை, அனுச்சரிச்சிட்டு வாழனும்னா, அந்த வாழ்க்கை நரகத்தை விட மோசம், எனக்கு அப்படி வாழ புடிக்கலமா.. என் தன்மானமும் அதுக்கு இடம் கொடுக்கல.. மூணு குழந்தைகளோட இந்த ஊருக்கு வந்தேன், என்னென்னவோ வேலை பார்த்தேன், இதோ பெரியவன் வேலைக்கு போறான், கல்யாணம் ஆயிடுச்சு! அடுத்தவளுக்கு அருமையான இடமா அமைஞ்சிருக்கு, பெரியவனோடு உதவியோடு ஜாம் ஜாம்னு அவளுக்கும் கல்யாணத்தை நடத்திடுவேன், கடைக்குட்டி குமாரு நிறைய மார்க் வாங்குறதா சொன்னான்.. அவனை எப்படியாச்சும் டாக்டருக்கு படிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை, அதையும் சாதிச்சிட்டனா எனக்கு போதும்மா, நான் நிம்மதியா இருப்பேன்! என்றாள் கண்களை மின்னும் கனவுகளோடு..


நீ எல்லாத்தையும் சாதிப்ப தாயி! யார் நீ பூத்தாலும், வாடிப் போனாலும், வாசம் வீசுற செண்பகமாச்சே !நீ எதுனாலும் சாதிப்ப தாயி என மனதார சொன்னார் வள்ளியம்மை.. கணவனின் எல்லா தவறுகளையும்,அவன்

இன்னொருத்தியை நாடுவது தெரிந்தாலும் அனுசரித்துக் கொண்டு, ஊருக்கு முன்னே நடிக்கும் தன்னைப் போன்ற பணக்கார அலங்கார பொம்மைகளுக்கு மத்தியில் செண்பகம் அவருக்கு எப்பவுமே ஒரு பிரமிப்பு தான்…


"சமைத்த எல்லாத்தையும் மேஜைல எடுத்து வச்சிட்டேன் மா! சமையல் அறையும் ஒழுங்குபடுத்திட்டேன், நான் வீட்டுக்கு கிளம்புறேன்!" என வள்ளியம்மையிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியேறினாள் செண்பகம்..

அவள் வாசலுக்கு சென்ற நேரம் உள்ளே வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி, செண்பகத்தை நிறுத்தி, "நான் இந்த ஊர் பள்ளிக்கூடத்தோடு தலைமை ஆசிரியை, பண்ணையாரைப் பார்க்க வந்திருக்கேன், அவர் இருக்காரா?" எனக் கேட்டாள்.


"நம்மூர் பள்ளிக்கூடத்து டீச்சருங்களா,வாங்கம்மா! ஐயா வர கொஞ்சம் நேரம் ஆகுங்க , அம்மா உள்ள தான் இருக்காங்க போய் பாருங்க! என்றவள், பின் ஆவலாக, என் மகன் குமார் கூட நம்ம பள்ளிக்கூடத்துல தான் பத்தாம் வகுப்பு படிக்கிறான் , வகுப்பிலேயே அவன் தான் முதல் மார்க்காம்,ஏன் டீச்சரம்மா, அவன் இப்படியே படிச்சானா டாக்டர் ஆயிடுவான் தானுங்க! என வெள்ளந்தியாக கேட்டாள்..


"குமாரா! என நெத்தி சுருக்கி யோசித்தவர், பின் சற்று தயக்கத்துடன், அம்மா நீங்க சொல்ற மாதிரி பத்தாம் வகுப்புல ஒரே ஒரு குமாரு தான் இருக்கான்,ஆனா அவன் நீங்க நினைக்கிற மாதிரி இல்லமா, சுத்த மோசமான பையன் எல்லா பாடத்திலும் ஃபெயில் மார்க் தான் வாங்கறான், அவன் இப்படியே இருந்தானா பத்தாம் வகுப்பு பாஸாக கூட மாட்டான்,நெறைய நாள் பள்ளிக்கூடத்திற்கு வருவதே இல்லை..அவன் உங்கள நல்லா ஏமாத்திட்டு இருக்கான்னு நினைக்கிறேன், கொஞ்சம் பார்த்து சூதானமா இருங்க! என்று சொல்லியவள், கலங்கி நின்ற செண்பகத்தை பார்த்து பெருமூச்சு விட்டவாறு உள்ளே சென்றார்.


கடைக்குட்டி மகன்தான் பரம்பரையிலேயே பெரிய படிப்பு படிக்கப் போறான் என கனவை வளர்த்திருந்தவரின் கண்கள் கலங்கியது, தன் மகன் எப்படி தன்னை ஏமாத்தி இருக்கிறான் என எண்ணியவரின் நெஞ்சம் விம்மியது,சாலையில் எதிர்ப்படும் யாரையும் பார்க்க பிடிக்காமல், கரும்புக்காட்டின் ஊடே செல்லும் ஒற்றையடி பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.


கொஞ்ச தூரம் கடந்த போது , கிணத்து மேட்டில் இருந்து கேட்ட சிரிப்பு சித்தம், அவள் நடையை மட்டுப்படுத்தியது , கொஞ்சம் பயத்தோடு பார்த்தவளின் பார்வை நிலை குத்தி நின்றது, அங்கே அவளது மகள் சிந்து, அந்த ஊரில் பெரிய ரவுடியோடு நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்! அவர்களின் அதீத நெருக்கமே பறைசாற்றியது அவர்களின் காதலை .. தன் மகள்,குணமும், வளமும் நிறைந்த ஒரு வீட்டில் மருமகளாக போகப் போகிறாள், தனக்குக் கிடைக்காத ஒரு நிறைவான வாழ்க்கை அவளுக்கு கிடைக்கப் போகிறது! என அவள் ஆசையா இருக்க, அவளது மகளோ அயோக்கியன் என முத்திரை குத்தப்பட்டவன் மீது ஆசையை வைத்திருந்தாள்.. இன்னொரு செண்பகமாக தன் மகள் ஆகி விடுவாளோ என்ற பயப்பந்து உள்ளே உருள, கால்கள் நடக்க முடியாமல் நிலை தடுமாறியது..


அந்த இடத்தில் அவளிடம் போய் எதையும் கேட்கவோ,சண்டையிடவோ பிடிக்கவில்லை சென்பகத்திற்கு, அதிர்ச்சியில் உறைந்து நின்றாள், வாழ்க்கை அடுக்கடுக்காய் அதிர்ச்சிகளை ஏன் கொடுக்கிறது, இன்னும் எத்தனை சோதனைகளை தான் தாங்கப் போகிறோம் என ஆயாசமாக இருந்தது அவளுக்கு..கண்களில் இருந்து உருண்டு திரண்டு விழத் தொடங்கிய கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டு தள்ளாடியபடி நடந்தாள்.


எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கே தெரியாது, திண்ணையோரம் ஓய்ந்து போய் அமர்ந்தவளின் காதுக்குள் வந்து விழுந்தது , அவள் வீட்டுக்குள் இருந்து வந்த மருமகளின் குரல்..


" இங்க பாருங்க, உங்க அம்மாவுக்கு பணம் கினம் கொடுக்கிற வேலை வெச்சுக்காதீங்க! அப்புறம் தங்கச்சி கல்யாணம், தம்பி படிப்புன்னு உங்கள அரிச்சு எடுத்துடுவாங்க! நாளைக்கு நமக்கு புள்ள குட்டி வந்தா நாம சமாளிக்க முடியாம போயிரும், அதனால அவங்க கிட்ட தெளிவாக சொல்லிடுங்க நம்ம கிட்ட எதையும் எதிர்பார்க்க கூடாதுன்னு"..என்ற அந்த குரலுக்கு..


"எதுக்கு இப்ப நீ முறுக்கிக்கிற.. நான் எப்ப அம்மாக்கு காசு கொடுக்கறேன்னு சொன்னேன், எனக்கெல்லாம் அந்த நினைப்பே இல்லை, கல்யாணத்துக்கு முன்னமே கொடுத்ததில்லை இப்பவா கொடுக்க போறேன், எந்த தொல்லையுமே கூடாதுன்னு தான், நான் டவுன்ல வீடு பார்த்தது! நீ சும்மா கோவிச்சுக்காம பக்கத்துல வந்து உட்காரு!" என பதில் அளித்தது மகனின் குரல்..

சொல்லில் வடிக்க இயலாத வேதனையை பிரதிபலித்தது செண்பகத்தின் முகம், ஒரு இரண்டு மைல் தொலைவு கடந்து வருவதற்குள், அவளின் இருபது வருட கனவு கலைந்திருந்தது, ஒரு அரை மணி நேரம் பயணத்திற்குள் அவளின் அத்தனை நாள் தவ வாழ்க்கை, சாபத்திற்கு உள்ளாகி இருந்தது.. ஒற்றை பொம்பளையாய், நேர்மையாய் நேரம் காலம் தெரியாமல் உழைத்து, இவர்களை வளர்த்தேனே, ஏன் இவர்கள் இப்படி மாறிப் போனார்கள் என்பது அவளுக்கு புரியவே இல்லை, தான் பணத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அதை குழந்தைகளிடம் அவள் காட்டிக் கொண்டதே இல்லை, எப்பாடுபட்டாவது அவர்களின் தேவைகளை நிறைவேற்ற போராடுவாள்.. ஆனால் அவர்களோ முற்றிலும் நிறம் மாறிப் போனார்கள்.. அவளின் போராட்டமெல்லாம் வீணாகிப் போனது..


சோகத்தில் திண்ணையிலேயே சுருண்டு படுத்தவளின் கன்னத்தை நெருங்கி வந்து பாசத்தோடு நக்கியது அவள் ஆசையாய் வளர்க்கும் கிடாய் ராமு, அவர்களெல்லாம் பொய்த்துப் போனால் என்ன? உனக்காக நான் இருக்கிறேன்! என்று சொல்லாமல் சொன்னது அந்த ஐந்தறிவு ஜீவனின் பாசம்..


கிடாயின் பரிசத்தில் கண்விழித்தவள், எழுந்தமார்ந்து, கண்களை துடைத்துக் கொண்டு அதனை வாஞ்சையாய் தடவிக் கொடுத்தாள்.. அந்தத் தடவலில் அத்தனையும் மீட்டு விடும் ஒரு சொட்டு நம்பிக்கை மீதம் இருந்தது.

Stories you will love

X
Please Wait ...