JUNE 10th - JULY 10th
“தாத்தா!! பாட்டி!!”, என அழைத்தபடியே ஓடி வந்தாள் ஐந்து வயது நவ்யா.
“என்னடா செல்லம்”, என கூறியபடியே பேத்தியை அள்ளி அணைத்து கொண்டார் பாட்டி.
“என்னுடைய வகுப்பில் நான் தான் தரவரைசையில் முதல் மதிப்பெண் பெற்று உள்ளேன்”.
“அப்படியா! என் கண்ணே”, என குதூகலித்து போனார்கள் இருவரும்.
“இதனை கொண்டாட நாம் ஒரு மரக்கன்று நடலாமா?”, என்றார் தாத்தா.
“இன்று என் பிறந்த நாள் இல்லையே, ஏன் செடி நட வேண்டும்?”
“மரங்கள், செடி கொடிகள் இல்லை என்றால், நாம் இந்த உலகில் உயிர் வாழவே முடியாது. இன்று நடும் கன்று உன் குழந்தை, நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். இது தான் உனக்கு எங்களுடைய பரிசு”, என்றார் தாத்தா.
“சரி. இதோ, இது அப்பாவின் பரிசு, ஒளித்தோற்ற விளையாட்டு (வீடியோ கேம்ஸ்), இனி நான் விளையாட்டாகவே எல்லா பாடங்களையும் படித்து விடுவேன்” என குதித்தாள்.
“அப்படி என்றால் இனி எங்களுடன் பல்லாங்குழி, தாயம் எல்லாம் விளையாட மாட்டாயா”, எனக் கேட்டார் பாட்டி.
“முன்னேற்றம் என்ற பெயரில் உலகமே அழிந்து கொண்டு இருக்கிறது”, என்றார் தாத்தா. “நம் காலத்தில் எல்லாம் பெரியவர்கள் தான் கண்ணாடி அணிவார்கள், இப்பொழுதோ, சின்ன சின்ன பிஞ்சுகள் எல்லாம் மூக்கு கண்ணாடி போடும் அவலம்”, என வேதனைப்பட்டார். “இதற்க்கு காரணம் கணிணி, கைப்பேசியில் இருந்து வரும் கதிர்வீச்சுகள்.”
“அப்படி என்றால் எனக்கும் கண் கெட்டு விடுமா தாத்தா”, என கேட்டாள் நவ்யா.
தாத்தா சொல்வதறியாது மௌனமாக இருந்தார்.
“ஏன்ப்பா, இதெல்லாம் வாங்கி கொடுக்கிறாய்”, என மகனிடம் கேட்டார்.
“அப்பா! நீங்கள் இன்னும் அந்த காலத்திலேயே இருக்கிறீர்கள். இது புதுயுகம், தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம் திளைத்துக் கொண்டு இருக்கிறோம். இந்த பல்லாங்குழி, கோலி எல்லாம் யார் விளையாடுவார்கள்”, என கேட்டபடியே சிரித்தார் மகன் தருண்.
அப்பொழுது நவ்யா நிறைய காகிதங்களை கிழித்து போட்டுக் கொண்டு இருந்தாள்.
மருமகள் சுதாவுக்கு வந்தது கோபம். “ஏன் இப்படி கிழிக்கிறாய்”, என அதட்டினார்.
குழந்தையோ, “அம்மா, இந்த காகிதங்கள் அழுக்காக இருக்கிறது, அதனால் தான் இவற்றை கிழித்தேன்”, என்றாள்.
“காகிதம் லட்சுமி, அதனை கிழிக்க கூடாது, சரியா”, என்றார் பாட்டி.
“இது அழுக்கு பாட்டி. கடவுள் அழுக்காக இருப்பாரா”, என கேட்டபடியே அங்கிருந்து ஓடினாள் நவ்யா.
அடுத்த நாள் பள்ளியில்...
“மாணவ செல்வங்களே! இன்று உங்களுக்கு ஒரு இன்ப அனுபவம் காத்துக் கொண்டு இருக்கிறது”, என்றார் ஆசிரியர் பாமா.
அது என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் பிள்ளைகள் ஆவலானார்கள்.
அந்த அறை முழுவதும் இருட்டாக்கப்பட்டது. பிரம்மாண்டமான ஒரு தொலைக்காட்சி பெட்டி ஒளி பெற்றது. குழந்தைகள் ஆனந்தப்பட்டனர். சில பிள்ளைகளோ குதித்தனர்.
அங்கே நிறைய மரங்கள் இருந்தன, ஒவ்வொன்றாக அவை வெட்டப்பட்டன. சிறு சிறு துண்டுகளாக்கப்பட்டன.
அந்த மர பதிவுகள் ஒரு தொழிற்சாலைக்குள் எடுத்து செல்லப்பட்டன. அங்கு நிறைய இயந்திரங்கள் இருந்தன. ஒவ்வொரு இயந்திரமாக அவை இடம் பெயர்ந்தன.
மெது மெதுவே நிறமும் வடிவமும் மாறியது. நேரம் செல்ல செல்ல வெளிர் நிறமாக மாறியது. இறுதியில் ஒரு இயந்திரம் அந்த பெரிய வெள்ளை காகிதங்களை வெட்டி சிறு சிறு குறிப்பேடுகளாக மாற்றியது.
நவ்யா அழத் தொடங்கினாள். ஆசிரியருக்கோ ஒன்றும் புரியவில்லை. எல்லோரும் என்ன ஆயிற்று என அவளை கேட்டனர்.
அவளோ எதுவும் கூறாமல் அழுது கொண்டே இருந்தாள். அனைவரும் எதுவும் புரியாமல் விழித்தனர்.
“உடல் நலம் சரியில்லையா நவ்யா! வயிறு வலிக்கிறதா”, என வினவினார் பாமா.
நவ்யா அழுதபடியே இருந்தாள்.
உடனடியாக முதல்வருக்கு நவ்யா குறித்து செய்தி அனுப்பப்பட்டது. அவரும் உடனடியாக அங்கு வந்து சேர்ந்தார்.
அவரும் என்னென்னவோ செய்து பார்த்தார். நவ்யாவோ அழுகையை நிறுத்தவே இல்லை.
முதல்வர் உடனடியாக நவ்யாவின் தந்தையின் கைப்பேசி எண்ணை கேட்டறிந்து அவரை பள்ளி தொலைபேசி மூலம் அழைத்தார்.
செய்தி கேட்டு ஒன்றும் புரியாமல் தருண் கலங்கினார்.
“உடனடியாக வருகிறேன்”, என கூறிவிட்டு, அலுவலகத்தின் மேலதிகாரியிடம் செய்தியினை தெரிவித்து விட்டு, அங்கு இருந்து அவசர அவசரமாக நவ்யாவின் பள்ளி நோக்கி கிளம்பினார்.
வழியில் மனைவி சுதாவிடம் தருண் செய்தி கூறினார். அவரும் ஒன்றும் புரியாமல் அழத் தொடங்கினார்.
“ஏய்! சுதா, நீ ஏன் அழுகிறாய்”, என தருண் கூறினாலும், அவரும் மனதளவில் ஒன்றும் புரியாமல் அழுது கொண்டே தான் இருந்தார்.
“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கூறுங்கள், நானும் உங்களுடன் வருகிறேன்”, என்றார் சுதா.
“இதோ! நான் இருக்கும் இடத்தின் கூகுள் வரைபடத்தை அனுப்புகிறேன்”, என்றார் தருண்.
“சரி! இதோ, இப்பொழுதே கிளம்பி அங்கே வருகிறேன்”, என கூறிவிட்டு, அத்தை, மாமாவிடம் நவ்யா குறித்து கூறவா என தருணிடம் கேட்டார்.
அவரோ, “அவர்களும் கவலைப்படுவார்களே”, என கூற, இருவரும் செய்வதறியாது தவித்தனர்.
சற்றே சுதாரித்துக் கொண்ட தருண், “சரி, சுதா!, அவர்களிடம் கூற வேண்டாம். முதலில் அவள் அழுவதற்கான காரணத்தினை கண்டுபிடிப்போம். அவர்கள் குழந்தை அழுவதை கண்டு கலங்கி போவார்கள்”, என்று கூறினார்.
“சரி, நான் கிளம்புகிறேன்”, என்று சுதா கூறிவிட்டு கைபேசியின் அழைப்பை துண்டிக்கும் சமயத்தில், சரியாக மாமியார் அங்கு வந்து நின்றார், சுதா அழுவதை கண்டு அதிர்ந்தார்.
“என்னம்மா! ஏன் அழுகிறாய்”, என்று கேட்க சுதா அவர் தோள்களில் சாய்ந்து அழத் தொடங்கினார்.
“சுதா! என்ன நடந்தது?”
“அத்தை! நவ்யா பள்ளியில் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தது”.
“குழந்தைக்கு என்ன ஆயிற்று சுதா”, என அவர் பதறினார்.
சுதா அனைத்தையும் விவரித்தார்.
“இவ்வளவு தானே, இதற்கு போய் நீ அழுகி்றாயா”, என்றார் அத்தை.
“அவள் என்ன காரணம் என்றே தெரியாமல் அழுது கொண்டு இருக்கிறாள்”.
“குழந்தை என்றால் அப்படித்தான். திடீரென்று அழும், சிறிது நேரம் கழித்து சிரிக்கும். அவளுக்கு சுடுநீரில் ஓமம் மற்றும் சீரகம் போட்டு கொடுத்தால் போதும், அழுகை நின்று விடும். சரியா.”
“வயிற்று வலியால் அழுகிறாளா அத்தை?”
“இருக்கலாம். பெரிதாக, வேறு என்ன காரணம் இருக்க போகிறது? நீ சென்று அவளை அழைத்து வா. நான் சரி செய்து விடுகிறேன்”.
சுதாவிற்கு சற்று தெம்பு வந்தது. முகம் பொலிவு பெற்றது.
“இப்பொழுது தான் என் மருமகள் மகாலட்சுமி”.
சுதா உடனே கைப்பேசியில் தருணிடம் பேசினார். மாமியார் கூறியதை விவரித்தார்.
தருணுக்கு அப்பொழுது தான் நிம்மதி வந்தது.
“சரி, நீ வீட்டிலேயே இரு. நான் அங்கு வருகிறேன், நாம் இருவரும் நவ்யா பள்ளிக்கு சேர்ந்தே செல்லலாம்”.
இருப்பினும், வழி நெடுக இருவரின் மனதிலும் ஏதேதோ எண்ணங்கள், ஆயிரம் கவலைகள்,
“என்ன காரணம்? எதற்காக அழுகிறாள்? வயிற்று வலி தானா”, என ஒன்றும் புரியாமல் இருவரும் தவித்தனர்.
இருவரும் பள்ளி வந்து சேர்ந்தனர். தொலைக்காட்சி அறை நோக்கி பதட்டத்துடன் ஓடினர்.
அங்கு நவ்யா அழும் ஒலி அவர்களுக்கு கேட்டது.
அவசர அவசரமாக தம் குழந்தை அருகில் இருவரும் வந்து நின்றனர்.
“என்ன ஆயிற்று நவ்யா”, என கேட்டார் சுதா.
“அம்மா, அம்மா!! என அழுதபடியே அவள் தன் தாயை அணைத்துக் கொண்டாள்.
“தாத்தா, பாட்டி வேண்டும் அம்மா!”, என்றாள்.
“ஏன்!”, என இருவரும் குழம்பினர்.
“நீ ஏன் அவர்களை நினைத்து அழுகிறாய்”, என கேட்டார் தருண்.
அவர்களை பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என திரும்ப திரும்ப அழுது கொண்டே கூறினாள் நவ்யா.
"சரி, வா, வீட்டுக்கு செல்லலாம்", என்றார் தருண்.
வீடு செல்லும் வழி முழுக்க அழுது கொண்டே இருந்தாள்.
“தாத்தா!!”, என அழைத்தபடியே வீட்டுக்குள் ஓடினாள். “இனி நான் காகிதங்களை கிழிக்க மாட்டேன்”, என்றாள் அழுதபடியே.
அனைவரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.
“காகிதம் மரத்திலிருந்து வருகிறது, மரம் வெட்ட கூடாது தானே தாத்தா, அதனால், இனி நான் காகிதங்களை கடவுள் போல் பார்ப்பேன். பாட்டி!, என்றும் வீணாக்க மாட்டேன்", என்று கூறி தான் கண்டதை அப்படியே தத்ரூபமாக விவரித்தாள்.
“காகிதம் தயாரிக்கும் ஆலைக்கு சென்றாயா கண்ணே”, எனக் கேட்டார் தாத்தா.
“இல்லை, தாத்தா. ஆலை பள்ளிக்கு வந்தது”, என்றாள் நவ்யா.
“எப்படி”, எனக் கேட்டார் தாத்தா.
“இது தான் அப்பா தொழில்நுட்பம், பாருங்கள் இந்த மாற்றத்தை”, என்றார் தருண்.
“காலத்தின் மாற்றத்துடன் நாம் இணையலாம், தவறில்லை, ஆனால் அளவு என்னும் கோட்பாட்டை என்றும் நாம் மீற கூடாது. அமிர்தம் கூட அளவுக்கு அதிகமானால் நஞ்சுதான்”, என்றார் பாட்டி.
“தங்கம் அழக் கூடாது, சரியா”, என்றார் தாத்தா பேத்தியிடம். மரத்தின் பயன்கள் என்பது ஏராளம். அதில் ஒன்றை தான் நீ பார்த்திருக்கிறாய். அதனால் தான் நாம் நிறைய மரக் கன்றுகளை நட வேண்டும், சரியா”, என்றார் தாத்தா.
சரி என தலை அசைத்தாள் நவ்யா சிரித்தபடியே.
#542
मौजूदा रैंक
37,067
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 400
एडिटर्स पॉइंट्स : 36,667
8 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (8 रेटिंग्स)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
saipriya70
மிக்க நன்று
jain111
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स