இறுதியாத்திரை

உண்மைக் கதைகள்
5 out of 5 (23 रेटिंग्स)
कहानी को शेयर करें


இறுதி யாத்திரை


நடுத்தர மக்கள் வசிக்கும் அந்த ரெசிடென்சி ஏரியாவில், மயான அமைதி நிலவும் அந்த நள்ளிரவு வேளையில் அந்த வீட்டின் வாசலின் முன் நின்றான் மாதவன். முழு போதையில் இருந்ததால் நேராக நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டே இருந்தான்.
தன் சட்டை மற்றும் பேன்ட் பாக்கெட்களில் கைகளை விட்டு துழாவி போனைத் தேடினான். கதவைத் தட்டி அப்பா எழுந்தால், அடித்த சரக்கின் போதை மொத்தமும் தெளிந்து விடும் அளவுக்கு திட்டித் தீர்ப்பார் என்று அன்னையை அழைக்க போனைத் தேடினான்.
குனிந்து போனை எடுக்கிறேன் என்று கதவுக்கு இடப்புறம் இவன் கீழே விழுந்த சிறிது நேரத்திலே கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. இவன் நிமிர்ந்து பார்க்க, அவன் அன்னை மரகதம் இவனைப் பார்க்காமல் எதிர்புறம் திரும்பி மகன் வருகிறானா என்று தேடினார்.
மெதுவாக எழுந்தவன், “நான் விழுந்து கிடக்குறேன், இந்த தாய்கிழவி என்னைப் பாக்காம நடுரோட்ல போய் யாரைத் தேடுது?” என்று புலம்பிக்கொண்டே திறந்திருந்த வீட்டிற்குள் சென்றான். நேராக திறந்திருக்கும் தனது அறைக்குள் சென்று கட்டிலில் குப்புற வீழ்ந்து உறங்க ஆரம்பித்தான்.
வெளியே நின்ற மரகதம், “என்ன இந்தப் பயலை இன்னும் காணோம்? அந்த மனுஷன் காலைல எழுந்து நம்மளை தான கடிச்சுக் குதருவாறு. இவங்க ரெண்டு பேர்டயும் நான் படுற பாடு... அந்த முருகன் தான் என்னைக் காப்பாத்தணும்.” என்று புலம்பிக் கொண்டே கதவடைத்து மீண்டும் உறங்க சென்று விட்டார்.
நண்பகல் வரை நன்றாக உறங்கியவன் சிறு சோம்பலுடன் எழுந்து அமர்ந்தான். விழித்தவன் காதில் சத்தமாக யாரோ அழும் சத்தம் கேட்டது. கண்களை கசக்கிக் கொண்டே அறையை நன்றாக சுற்றிப் பார்த்தவன் அதிர்ந்தான்.
ஏனெனில் அவன் ஆசையாக வளர்க்கும் மீன்தொட்டி, அங்கிருக்கும் இரண்டு சேர்கள், ஒரு சோஃபா அனைத்தும் அவனது அறையில் இருந்தது. ஜன்னல் வழியாக வாசலைப் பார்த்தான். வீட்டின் முன் பந்தல் போட்டு சேர்கள் மற்றும் பெஞ்ச் போடப்பட்டிருந்தது.
‘எதற்கு இந்த பந்தல்? வீட்ல எதும் விசேசமோ? நைட்டு அம்மாவும் நம்மளை ஒன்னும் சொல்லல. இல்லைனா ஏன் லேட்னு கேக்கவாது செய்வாங்க, ஆனா அதும் கேக்கல. நம்ம மேல எதும் கோவமோ?’ என்று சிந்தனையில் இருந்தவன் காதில் அவன் அன்னை அழும் சத்தம் கேட்டது.
என்னவோ ஏதோ என்று அறையில் இருந்து வெளியில் வந்தான். அங்கு அவனது உறவினர்கள் மத்தியில் மயங்கி கிடந்தார் மரகதம். இவர்கள் எல்லாரும் எதுக்கு வந்திருக்காங்க? என்று சுற்றும் முற்றும் பார்த்தான். சுற்றிலும் பெண்கள் இருந்ததால் இவனால் அருகில் செல்ல முடியவில்லை.
அனைவரும் அவன் அன்னையை சுற்றி ஒரு வித சோகத்தில், துக்கம் தொண்டையை அடைக்க, கண்கள் கலங்கி வரும் நீரை அடக்க சிரமப்பட்டு இமைகளை சிமிட்டி தடை செய்தபடி அமர்ந்திருந்தனர்.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன், அவனைக் கண்டால் நாணத்தில் முகம் சிவக்க அவன் முகத்தைப் பார்க்க மறுத்து, நிலம் நோக்கும் மாமன் மகள் முகம் வீங்கி, கண்கள் சிவந்து, தலை கலைந்து, எதிரில் இருக்கும் சுவரை வெறித்தபடி சோகச்சித்திரம் போல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
அவளை அந்த நிலையில் பார்த்ததும் அவன் நெஞ்சில் உதிரம் வடிய, அவள் அருகில் சென்றான். ஒரு காலை முட்டியிட்டு ஒரு காலை மடக்கி அவளின் அருகே அமர்ந்து, “ஏய் வெண்ணிலா! ஏன் இப்படி இருக்கிற? என்னாச்சு? நேத்து பார்க்கும் போது நீ நல்லா தானே இருந்த. இப்ப ஏன் உலகமே அழிஞ்சு போன மாதிரி இவ்ளோ சோகத்தை முகத்துல அப்பிக்கிட்டு இருக்கிற?” என்று உறவினர் அனைவரும் இருக்கவும் அவளைத் தீண்டாமல் கேட்டான்.
அவனது நீண்ட கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் அதே நிலையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு எப்படி ஆறுதல் கூற, எதற்கு ஆறுதல் கூற என்றே தெரியாமல் தலையை சொரிந்து கொண்டான்.
அந்நேரம் வாசலில் ஒரு அவசர மருத்துவ ஊர்தி வந்து நின்றது. அதைப் பார்த்ததும் தான் அவ்ளோ நேரம் வீடு இருந்த சூழ்நிலையும், அவன் தந்தை அங்கு இல்லாததையும் கண்டான். நெஞ்சுக்குள் சுரீர் என்றது.
என்னதான் திட்டிக் கொண்டே இருப்பார் என்றாலும் அவரது உயிர்நீரில் வந்தவனாயிற்றே! ஆதலால் பாசமும் இருந்தது. மனதை ஒருவித பயம் கவ்விப் பிடிக்க, உடல் நடுங்க, நகர மறுக்கும் கால்களை கடினப்பட்டு தூக்கி வைக்க, பத்தடியை அவன் பத்து மைல் தூரம் கடந்தது போல் களைப்புடன் வாசலுக்கு வந்தான்.
உள்ளிருந்து இறக்கப்பட்ட உடலைக் கண்டு ஷாக் அடித்தது போல் அதிர்ந்து, இரண்டடி தள்ளி சென்றான். அவனது உலகம் தட்டாமாலை சுழன்றது. அவனுக்கு நேற்று நடந்தது நினைவில் வந்தது.
“அப்பா, எனக்கு ஒரு இரண்டாயிரம் வேணும்பா. நண்பர்களுக்குலாம் ட்ரீட் வைக்கணும். பசங்க இன்னைக்கு நைட் பார்ட்டி வச்சிருக்கானுங்க. நானும் போகணும்பா.”
“அடேய்! உருப்படியா ஒரு வேலைல இருக்கியா? குரங்கு மாதிரி ஒவ்வொரு வேலைக்கா தாவிட்டே இருக்கிற. இருவத்தொன்பது வயசு ஆகுது. இன்னும் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம இருக்கிற? வெளில போய் பாரு, உன் வயசுப் பசங்க எல்லாம் எவ்ளோ பொறுப்பா குடும்பம் நடத்துறாங்கன்னு.”
“அப்பா எனக்கும் கல்யாணம் செஞ்சு வைங்க, நான் எவ்ளோ பொறுப்பா குடும்பம் நடத்துறேன்னு நீங்களே பாருங்களேன்.” என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டான்.
அதை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவர், “இந்தா நீ கேட்ட இரண்டாயிரம். நீ என்ன தான் பொறுப்பில்லாம இருந்தாலும், எங்க வேலைக்கு போனாலும் சம்பளத்தை என் கையில கொடுக்கிறதால தான் நீ கேக்கும்போது உனக்கு பணம் தரேன்.” என்று பணத்தை அவனது கையில் திணித்துவிட்டு பணிக்கு சென்றுவிட்டார்.
அவர் சொல்வது உண்மைதான், எங்கு வேலைக்கு சென்றாலும் தனது முழு சம்பளத்தையும் அவனது அப்பா கையில் கொடுத்துவிடுவான். அதிகமாக செலவு செய்யமாட்டான். அவனுக்கு செலவளிக்கனும்னு தோனுற நேரம் அவன் அப்பாக்கிட்ட உண்மையை சொல்லியே வாங்கிவிடுவான்.
மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவன், இரவு ஏழு மணி வரை அம்மாவுடன் அரட்டை அடித்து, கிண்டல் செய்தவன், கலகலப்பாக பேசிவிட்டு குளித்துவிட்டு தந்தை குடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு, அன்னையிடம், “அம்மா நைட் நான் வர லேட் ஆகும். எனக்கு சாப்பாடு வேண்டாம். ரொம்ப லேட் ஆனா போன் போடுறேன், கதவைத் திறந்துவிடு. இப்ப நான் போறேன், பாய்.” என்று கன்னத்தைக் கிள்ளி கொஞ்சி முத்தம் இட்டு சென்றுவிட்டான்.
தனது நண்பர்கள் இருவருடன் பக்கத்து ஊரில் இருக்கும் பப் ஒன்றிற்கு சென்றான். ஒரு வண்டியில் மூவர் செல்வது சட்டப்படி குற்றம் என்றாலும் சந்தோசத்திற்காக சிலர் அந்த விபரீதத்தை செய்யத் துணிகின்றனர்.
இவர்களும் இளமையின் துள்ளலில் சூடான ரத்தத்தின் திமிரில் சென்றனர். இரவு பதினொரு மணிவரை அங்கு தீர்த்தவாரி இறைத்து, சிறிது நேரம் அங்கு ஆடி கும்மாளமிட்டு, பப் அடைக்கும் நேரம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களால் வெளியில் அனுப்பப்பட்டனர். அதுவரை மட்டுமே அவனுக்கு நினைவிருந்தது.
“இப்ப இருக்க இளந்தாரி பயலுகளுக்கு கொஞ்சம் கூட பயம்ன்றதே கிடையாது. அடுத்தவங்களைப் பத்தி நினைக்கிறதும் கிடையாது. தன்னை நம்பி இருக்கிறவங்களையும் யோசிக்கிறது கிடையாது...” என்ற யாரோ பேசுவதில் சுயநினைவுக்கு வந்தான்.
திரும்பி அமைதியாக உள்ளே சென்று, அங்கு நடுக் கூடத்தில் கிடத்தப் பட்டிருக்கும் அந்த உடலை நோக்கி சென்றான். அதன் அருகில் இருவரும் அவன் பெயரை சொல்லி ஏதோ பேசுவது போல் கேட்கவும் அவர்கள் அருகில் சென்றான்.
“நேத்து நைட் மூணு மணி போல மரகதம் அம்மாக்கு போன் வந்திருக்கு, உடனடியா ஜிஹச் வரசொல்லி. என்னனு பதட்டத்தோட போயிருக்காங்க. அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது நைட் ஆக்சிடென்ட் நடந்தது. இவங்க வீட்ல இருந்து மெயின் ரோடுக்கு போக ரெண்டு பாதை இருக்கு. இவங்க ஒரு பாதைல போயிருக்காங்க. இன்னொரு பாதை போற வழில தெருமுனைல இந்த விபத்து நடந்துருக்கு.
இரண்டு பேர் பின்னாடி இவன் உக்காந்திருப்பான் போல, முன்னாடி வந்த வண்டி இடிச்சதுல இவன் பின்னாடி விழுந்திருக்கான். இவனுக்கு பின்னாடி வந்த வண்டியோட சக்கரம் இவனோட முகத்துல ஒரு பக்கம் ஏறி இறங்கிருக்கு. நாளைக்கு இவனோட பிறந்தநாள்னு அன்னைக்கு இவனோட மாமன் பொண்ணு வெண்ணிலா கூட நிச்சயம் பண்ணலாம்னு அவன் அப்பா முடிவெடுத்திருந்தான்.
இப்ப எல்லாம் போச்சு. இவன் ஒத்தப் பிள்ளை, இவனால அவனோட அம்மா, அப்பா ரெண்டு பேரும் தனியா நிக்குறாங்க. சின்னப் பிள்ளைல இருந்தே இவன் மேல ஆசை வச்ச ஒரே காரனத்தால இப்ப அந்த வெண்ணிலா பிள்ளை அவளோட வாழ்க்கைல என்ன முடிவு எடுக்கப்போறானு தெரியல. இப்ப இவனோட சாவுல எல்லாருக்கும் வருத்தம் தான்.” என்று கூறி முடித்தார்.
“டேய்! நீ தண்ணி அடிக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கலடா. அப்பாக்கும் உன்னோட இந்த குணம்தான் பிடிக்க மாட்டுது. எங்க ரெண்டு பேருக்கும் நீ மட்டும் தான இருக்கிற. இந்த குடியால உனக்கு ஏதாது ஆச்சுனா நாங்க என்ன பண்ணுவோம்னு கொஞ்சம் யோசிடா. இதால உனக்கும் கெடுதல், அடுத்தவங்களுக்கும் கெடுதல். நீ குடிபோதைல நிதானம் இல்லாம ஏதாது தப்பு பண்ணிட்டா அது தெரிஞ்சதும் நீ நிம்மதியா இருப்பியா? இந்தப் பழக்கத்தை நிறுத்திடுடா.” என்றோ கூறிய அன்னையின் அந்த வார்த்தை இன்று அசரீரியாக காதில் கேட்டது.
“அடிபட்ட உடம்பு ரொம்ப நேரம் வச்சிருக்க முடியாது, வாங்க ஆக வேண்டியதைப் பாப்போம்.” என்று யாரோ கூறிய சில நிமிடத்தில் மாதவனின் இறுதி யாத்திரை தொடங்கியது.
மது உடலுக்கு நாட்டுக்கும் கேடு என்று அவர்கள் குடிக்கும் சாராய பாட்டில்களில் இருந்தாலும் அதை சட்டை செய்யாமல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி செல்வோர் எல்லோருக்கும் மாதவனின் இறுதி யாத்திரை ஒரு பாடமாக அமையட்டும்.

*******

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...