கொஞ்சம் கரிசனம் காட்டுங்க சாமி

bharathcivillian
உண்மைக் கதைகள்
4.9 out of 5 (93 रेटिंग्स)
कहानी को शेयर करें


அதிகாலை ஏழு மணியை கடந்திருந்தது. சுருட்டை முடி, சிறிது பருத்த வலுவான தொப்பை, சட்டை இல்லாத உடல், முட்டிவரை கட்டப்பட்டிருந்த சாரம் என ஊர் வெட்டியான் எடிசன் டீக்கடை வாசலின் ஓரமாக தன் கனத்த மனதுடன், கண்ணீர் நிறைந்த சிறு விட்டில் பூச்சி கண்ணுடன் நின்று கொண்டிருந்தான். "பார்த்தாலே தீட்டு என்பது போல்" , அவனை பார்த்தும் பாராதது போல அங்கிருந்தவர்கள் இருந்தனர்.
டீக்கடைகாரன் " ஏல காலையிலவே வராத, அப்புறம் வா-னு தான சொல்றேன்" என எடிசனை நோக்கி சிடு, சிடு என கூறிவிட்டு டீ ஆத்தி கொடுத்து கொண்டிருந்தான்.
"இல்லயா, எனக்குனா வந்திருக்கமாட்டேன், என் ஒத்த புள்ளயா ரெண்டு நாளா சாப்டல, யாருமே வேலைக்கு சேத்துக்க மாட்றாக, கிராக்கியும் எதுவும் வர மாட்டுது" என எடிசன் கண்ணீர் மல்க, நடுக்கமான தன் குரலில் கூறி கொண்டே டீக்கடையின் வாசலில் ஏறியபடி அடுத்த வார்த்தை பேச வாயெடுத்தான்,
அதற்குள் டீக்கடைக்குள் இருந்த வெள்ளைசட்டைகாரன் ஒருவன் கூறினான் "ஏல கிராக்கி வரலன்னு காலைலவே டீக்கட ராசா-வ கூப்ட வந்திருக்கியா" என பேசி சிரித்தான். அனைவரும் சிரித்தனர். டீக்கடைகாரனின் மனது அவன் கடை பாய்லராய் கொழுந்து விட்டது. எடிசனின் நிலைமை கொதிக்கும் தண்ணீர் பாலிற்குள் விழுந்த எறும்பாய் ஆனது. மற்றவர்களின் சிரிப்பு எடிசனை டீக்கடை வாசலில் ஏறும் தகுதியற்றவனாய் ஆக்கியது. எடிசன் வாசலில் நிற்பது டீக்கடைகாரனிற்கு தன் கோபத்தை காட்ட காரணமாய் கிட்டியது, கையில் வைத்திருந்த டீயை எடிசனை நோக்கி வீசியபடி "ஏல வாசலுக்கு வர்ர , போய் ஓரமா நில்லுல "****" என கெட்டவார்த்தைகளை உதிர்த்தான். எடிசன் டீயில் இருந்து விலகிவிட்டான். ஆனால், அவமானத்திற்குள் மூழ்கி கொண்டான். கை இடுக்கினுள் வைத்திருந்த துண்டு நழுவ பார்த்தது, தன் தன்மானத்தோடு சேர்ந்து அதுவும் விழாமல் இருக்க இறுக பற்றி கொள்ள முனைந்தான். தன்மானம் அவனை அங்கிருந்து வெளியேறு, இல்லை டீக்கடைகாரனை தாக்கி தேவையானதை எடுத்துகொள் என மனதிற்குள் புரட்சி செய்தது. கால்களும், கைகளும் தன்மானத்திற்கு அசைந்து கொடுக்கவில்லை. மனதிற்குள்,
வலுவிழந்து சுடுகாட்டின் தகரசீட்-ன் கீழ் அமர்ந்திருக்கும் தன் குழந்தை "எங்கெல்ஸ்"-ன் நிலை மட்டுமே நினைவிற்குள் ஓடியது. டீக்கடை வாசலில் கிடந்த வடையை நாய் ஒன்று எளிதாக சென்று எடுத்து வந்தது. நாயினை கண் அசராமல் எடிசன் பார்த்தான், அவனது முதல் துளி கண்ணீர் அவனது வெடித்த கருப்பு கண்ணத்தில் உப்பை சிந்தியது. எடிசன் கூனிகுறுகி நின்றான். தனக்குள் தன்மானத்தை தற்கொலை செய்தான். திடிரென டீ-கடைகுள் பீரங்கி வெடிப்பது போல கருப்புசட்டை இளைஞன் ஒருவன் தெளிவான குரலில் வெடித்தான்
" நீங்களா எதுக்குயா வாழுறீங்க, நீங்களும் உங்க சாதியும். கோவிட்-ல கொத்து கொத்தா செத்தீங்க, என்ன,ஏதுன்னு கேக்காம அவன்தானயா அடக்கம் பன்னான், எரிச்சான். ஒரு சவத்தையாச்சும் அவன் பயந்து போய் தொடாம இருந்தானா? உங்க முறைப்படி நல்ல படியாதான அனுப்பி வச்சான், உங்க சொந்தகாரனுவள பாத்துக்க போய் தான அவன் பொன்டாட்டி கோவிட்-ல செத்தா. அவன் பொன்டாட்டி-கு காரியம் கூட சரியா பன்னாம, உன் சொந்தகாரனுவள வரிசையா அடக்கம் பன்னதான செஞ்சான். உன் சாதிகாரன் எவனாச்சும் கோவிட்-ல செத்தவன தூக்கி போட வந்தானா?. நீங்க ஜாதிய தூக்கிகிட்டு இப்டி சுத்துறீங்க, அவன் அன்னிக்கு அப்டி பார்த்திருந்தால் ஊருக்குள்ள சாவு இன்னும் அதிகமா ஆயிருக்கும். அவன் புள்ளைக்கு பசினு வந்து நிக்கான், படி ஏற விடமாட்றீங்க, ரெண்டு இட்லி கூட கொடுக்க மாட்றீங்க. ச்சை, உங்கள மாதிரி பிறவிங்ககிட்டலா பேசவே எனக்கு அசிங்கமா இருக்கு , ராசா அண்ணே எட்டு இட்லி, ரெண்டு வட கட்டி கொடு"

டீக்கடையில் பாய்லர் அடியில் பிடித்திருந்த கரிக்கு காரணமான நெருப்பின் சத்தம் மட்டுமே கேட்டது. மனதில் அடர் கரி கொண்ட மனிதர்கள் டீ கிளாசிற்குள் ஒளிந்து கொண்டனர். ஒருவன் உலகின் உண்மையை கூறினான் என்றால் மனிதர்கள் ஒளிந்து கொள்ள மட்டுமே முற்படுவார்கள், இல்லை ஒழித்து கட்டுவார்கள்.

டீக்கடைகாரனிடம் எரிச்சலோடு பார்சலை வாங்கி எடிசனிடம் கொடுத்து விட்டு, "புள்ளைய பாத்துக்க அண்ணே, டவுண் போய் வேல தேடு, நல்ல வேல கிடைக்கும். பொண நாத்தம்னா என்னானு இவனுவளுக்கு புரியட்டும், அப்பதான் இவனுகளுக்கு புத்தி வரும்" என கூறி கருப்புச்சட்டை சாலையின் திருப்பத்திற்குள் நடந்து சென்று மறைந்தான்.

எடிசன் வேகவேகமாக, வெள்ளை மணலில் புழுதி பறக்க கிழிந்த தன் செருப்பு காலோடு நடந்தான். அந்த வெக்கை காற்றை அவனது வார்த்தைகளால் மேலும் சூடாக்க தொடங்கினான், " நாலு சவத்த அப்டியே போட்டா தான் இவனுவளுக்கு புத்தி வரும், இவனுக நாத்தம் இவனுவளுக்கு புரியட்டும். எவன் செத்தால் இனி எனக்கு என்ன? என் புள்ள பசிக்கு எதுவும் தரமாட்றானுவ" என கோவத்தில் புலம்பி கொண்டு சென்றவன் அப்படியே திடிரென நின்று போனான். கிழக்கு நோக்கி கரிசனை இல்லாமல் எரித்து கொண்டிருந்த சூரியனை நோக்கி நின்றான் " தலையில் இருந்த துண்டை இடுப்பில் கட்டினான். மன்னிச்சிரு சாமி, தெரியாம சொல்லிட்டேன் உன்கிட்ட வர்ரவங்கள நல்லபடியா, எந்த குறையும் இல்லாம அனுப்பி வக்கிறேன்" என பயபக்தியுடன் வேண்டிவிட்டு, தரையினை தொட்டு வணங்கி வேகவேகமாக நடக்க தொடங்கினான்.
சாம்பல், காற்றில் பறக்க தகர கொட்டகை சுடுகாடு தூரத்தில் கண்ணுக்கு தெரிந்தது. சாம்பல் காற்றை விலக்கியபடி எடிசன் மயானத்திற்குள் நுழைந்தான். எங்கு, எங்கு என எங்கெல்ஸை அழைத்தபடி அங்கும், இங்கும் எடிசன் திரிந்தான்.

எதையோ பார்த்தான்
"ஐயோ, அய்யா , உனக்கு சோறு போடாத பாவி ஆயிட்டேனே என கத்தியபடி எடிசன் ஓடினான், கிழிந்த செருப்பு சாம்பல் காற்றில் எடிசன் காலில் இருந்து விலகி பறந்தது. கால் தடுக்கி கீழே விழுந்தான். சாம்பல் அவன் முகத்தில் பதிந்தது. கண்ணீரும், எச்சிலும் சாம்பலில் ஓர் சோக கோலம் ஈட்டியது. மூச்சு பயங்கரமாய் வீச தரையில் இருந்து எழும்ப முடியாமல் எடிசன் சாம்பல் புழுவாய் துடித்து கொண்டிருந்தான். தரையில் விழுந்த மீனின் தண்ணீருக்கான கடைசி துள்ளலாய் எடிசன் துடித்து கொண்டிருந்தான்.
எங்கெல்ஸ் எழும்பும், தோழுமாய், தலைக்கும் எலும்பு உடலுக்கும் சம்பந்தம் இல்லாத ஓர் குழந்தையாய் இருந்தான். சிக்கு பிடித்திருந்த அவன் தலை முடியினை சுற்றி குட்டி ஈ-கள் வட்டமிட்டன. மஞ்சள் எச்சில் வடியும் அவன் கண்ணத்தை கடித்த படி சில பெரிய ஈ-கள் அமர்ந்திருந்தன. வயிற்று பசியில், தான் கழித்த மலத்தை எடுத்து தின்று கொண்டிருந்தான் எங்கெல்ஸ். எந்த தகப்பனின் கண்களும் காண கூடாத காட்சியினை எடிசன் பார்த்து விழுந்து கிடந்தான். இறப்பையும் தாண்டிய ஒன்று அவனுக்கு நடந்தது. சாம்பல் காற்று வீசுவது அடங்கவில்லை. அந்த மயானத்தில் எரியும் நெருப்பில் எழும் பிணங்களை பார்த்து எடிசன் பயந்ததில்லை, நடுங்கியதில்லை. முதல் முறை அவனுக்கு அது நடந்தது. தன் மகன் தன் கண் முன்னே இறந்து போவானோ? என்ற பயம். ஓர் ஈன பிறவியாக இறந்து போவாமோ ? என்ற நடுக்கம். அந்த நாளை முள்ளின் கூர்முனையில் படுத்திருப்பது போல் கடினமாக கடந்தான்.

எடிசன்,எங்கெல்ஸ் அந்த ஊரில் இருந்து காணாமல் போயினர். எங்கு? ஏன் என அவர்களின் பாத சுவடினை கூட தடமறிய யாரும் முனையவில்லை.
ஜாதியின் பெயரால் இன்னொரு எடிசன் அந்த ஊரில் உருவாக்கபட்டான்.

"பசியோடு இருப்பவனை வஞ்சிக்கும் ஜாதி இருந்து என்ன பயன்"

பிறக்கும்போது தூக்கி பிடிக்கும் ஜாதி, இறக்கும்போது தூக்கி செல்ல வருவதில்லை. ஜாதியால் ஒருவனை மதிப்பிழக்க செய்யாதே. செய்யும் தொழிலே தெய்வம் என்பதால்தான் அவர்களால் உலகம் நறுமண மலர்களை சூடியிருக்கிறது.

கோவிட் நேரங்களில் கவனிக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட, சலுகைகள் கிடைக்கபெறாத ஒவ்வொரு வெட்டியானின் நரம்பின் வலிகளின் வழியே வரிகளாய் நான்.

கொஞ்சம் கரிசனம் காட்டுங்க சாமி...!
-எதார்தத்துடன்
பா.பாரத்

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...