JUNE 10th - JULY 10th
வியாக்கிரம்
========
"அப்ப நாங்க நாளைக்கே பால் காய்ச்சிடறோம் சார்"
வாசுதேவன் அட்வான்ஸ் தொகையை 'வயர் டிரான்ஸ்பர்' செய்தார். அடையார் ஆனந்த பவனில் அமர்ந்து காஃபியை உறிஞ்சியபடி.
"ரொம்ப ஸ்மூத்-தா முடிஞ்சுது சார்" -வாயெல்லாம் பல்லாக கைகுலுக்கி வீட்டின் சாவியை நீட்டினார் எதிரே அமர்ந்திருந்த ஓனர். வாடகையிலோ, அட்வான்ஸ் தொகையிலோ ஒரு ரூபாய் கூட பேரம் பேசாமல் கேட்ட தொகைக்கு வாசுதேவன் ஒப்புக் கொண்டது அவருக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது. எதிரே அமர்ந்திருந்த வாசுதேவனையும் அவர் மனைவியையும் பார்த்து மீண்டும் ஒருமுறை புன்னகைத்தார்.
"அக்ரீமெண்ட் ரெடி பண்ணிடறேன், அப்புறம் நீங்க பெரிய ஆபீசர், உங்ககிட்ட இந்த கண்டிஷன் எல்லாம் சொல்றது எனக்கே சில்லி-யா இருக்கு, ஆனாலும் பாருங்க, அசோசியேஷன் ரூல்ஸ்."
"பரவாயில்லை சார், சொல்லுங்க..."
ஓனர் ஒப்புவிக்க ஆரம்பித்தார்.
"ஒரு பிளாட்டுக்கு ஒரு கார் தான் அலவ்ட், கொடுத்திருக்கிற பார்க்கிங்-ல தான் நிறுத்தணும்..."
"ஓகே சார்"
"ராத்திரி பத்து மணிக்கு மொட்டை மாடியை மூடிடுவோம்"
"நோ ப்ராபளம்"
"மெயின்டெனன்ஸ் நீங்க தான் கொடுக்கணும், ரிப்பேர் செலவுகள்ல பாதி உங்களுது..."
"ஷியூர்"
"நீங்க மூணு பேர் தானே? கெஸ்ட் வரலாம், ஆனால் ரொம்ப நாள் தங்கிறதுன்னா முதல்லயே சொல்லணும்"
"டன்"
தயங்கியபடியே 'பெட்ஸ்?' என்றார் வாசுதேவன்.
ஓனர் கொஞ்சம் யோசித்தார். அக்கவுண்டுக்கு சுளையாக வந்திருந்த ஒரு லட்சம் அட்வான்ஸ் தொகை மனதில் பளிச்சிட 'நோ ப்ராபளம்' என்றார்.
"டாக் ஆர் கேட்?"
"புலி" என்றார் வாசுதேவன்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு வாசுதேவனுக்கு ஒரே போராட்டம் தான்.
விஷயம் இது தான்.
வாசுதேவன் அஸ்ஸாமில் வனத்துறை ACF உயர் அதிகாரியாக இன்னும் பணியில் இருப்பவர். பூர்விகம் கேரளா. பையன் பட்டப்படிப்பை முடித்து விட்டு ஒரு வருடம் 'ஃபீல்டு வொர்க்' செய்ய சென்னைக்கு வர வேண்டி இருந்தது. வாசுதேவன் பையன் மஹிதர் கொஞ்சம் வித்தியாசமானவன். வீட்டை விட்டு ஒரு மணி நேரம் தனியாக ஷாப்பிங் சென்று வந்தாலே அவனுக்கு 'ஹோம் சிக்' வந்து விடும். எங்கே சுற்றினாலும் இரவு வீட்டுக்கு வந்து விட வேண்டும். வீட்டை விட்டு, அம்மா அப்பாவை விட்டு ஓர் இரவு கூட தனியாக இருந்ததில்லை.
பள்ளிப்படிப்பை முடித்ததும் எப்படி சமாளிக்கப் போகிறான் என்ற கவலை வாசுதேவனுக்கு. பள்ளியை முடித்து காலேஜ் ஹாஸ்டல் என்று பேச்சை எடுத்ததுமே மயங்கி விழுந்து விட்டான் மஹிதர். நான்கு வருடம் டே-ஸ்காலர் தான். மூன்றாம் வருடம் டெல்லி காலேஜ் டூருக்குக் கூட அப்பாவும், அம்மாவும் மூட்டை கட்டிக் கொண்டு ஒரு வாரம் கூடவே கிளம்பினார்கள்.
"நாளைக்கு உன் ஹனிமூனுக்கும் நாங்க ரெண்டு பேரும் வரணுமாடா?" என்று கேலி செய்வார் வாசுதேவன்.
இப்போது மஹிதருக்கு ஃபீல்டு ப்ராஜெக்ட், சென்னையில். நிச்சயம் இதைச் செய்தாக வேண்டும். அப்போது தான் வேலை நிரந்தரமாகும். 'அம்மாவை மட்டும் கூட்டிப் போடா' என்றார் வாசுதேவன். பையன் விடவில்லை. 'நீயும் வந்தாகணும்' என்று ரகளை. வேறு வழி? ஒரே பையன் என்று ஏகப்பட்ட செல்லம் கொடுத்து வளர்த்தாகி விட்டது. இப்போது பையனுக்காக கிளம்பித் தானே ஆக வேண்டும்? நீண்ட மருத்துவ விடுப்பு என்று காரணம் சொல்லி எட்டு மாதங்கள் லீவும் கிடைத்து விட்டது.
இதெல்லாம் கூட பிரச்சினை இல்லை. 'பதஞ்சலி' தான் நிஜமான சவால். பதஞ்சலி இவர்கள் வீட்டில் வளரும் புலி. ஆம், காட்டுப் புலி. 400 கிலோ பிரம்மாண்டம்! இரண்டு வருடங்களுக்கு முன்னர் காட்டுப் பகுதியில் ரோந்து சென்றபோது பிறந்து சில வாரங்களே ஆன புலிக்குட்டி ஒன்றைக் கண்டெடுத்தார் வாசுதேவன். காலில் அடிபட்டிருந்தது. கிட்டத்தட்ட இறந்து போகும் நிலையில் முனகியபடி கிடந்தது. தாய்ப்புலி அருகில் இல்லை, ஒருவேளை காயப்பட்ட குட்டி என்று கைவிட்டுச் சென்று விட்டதோ!
வீட்டுக்குத் தூக்கி வந்து சிகிச்சை அளித்தார் வாசுதேவன். குட்டி பிழைத்தது. வளர்ந்து பெரிய ஆண் புலியாக நின்றது. கால் மட்டும் சரியாகவே இல்லை. கொஞ்சம் தாங்கித் தாங்கி நடந்தது. காட்டை ஒட்டிய தனி வீடு என்பதால் புலி வளர்ப்பதில் பெரிதாகப் பிரச்சினை இருக்கவில்லை வாசுதேவனுக்கு.
வேலை விஷயமாக பீகாருக்கும், ஒரிசாவுக்கும் போகும்போது புலியும் கூடவே சென்றது. ஆயிரத்தெட்டு லைசன்ஸ், பெர்மிஷன், சர்டிபிகேட்-களை வாங்கி வைத்துக் கொண்டார் வாசுதேவன். ACF என்பதால் சுலபமாகக் கிடைத்து விட்டன அவை. புலியை யாரிடமாவது விட்டுச் செல்லலாமே என்றால் நம்பகமான ஆள் யாரும் கிடைக்கவில்லை. ஒருமுறை இரண்டு நாள் ரேஞ்சர் ஒருவரின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார் வாசுதேவன். திரும்பி வந்து பார்த்ததில் புலிக்கு காய்ச்சல் வந்திருந்தது. ஒருவாரம் எதுவும் சாப்பிடவில்லை. அப்பா அம்மாவை விட்டு இருக்க முடியாத பாசப் பிறவியாக இவன் மஹிதரையே மிஞ்சிவிட்டிருந்தான். அப்போது முடிவு செய்தார், எங்கே போனாலும் இவனையும் கூட்டிக்கொண்டே போவது என்று.
பதஞ்சலிக்கு 'வேட்டையாடும் உள்ளுணர்வு' அறவே இருக்கவில்லை. வேளாவேளைக்கு சிக்கனும், மட்டனும் சமர்த்தாக சாப்பிடும். ஓர் ஆட்டுக்குட்டியை அருகில் விளையாட விட்டால் சமர்த்தாக நக்கி விளையாடும். அது தான் தான் தினமும் சாப்பிடும் மட்டன் என்று தெரியாது.
எப்படியோ போராடி பிளாட்டுக்கு வந்தாகி விட்டது. தனி விமானத்தில் கூண்டுடன் கொண்டு வந்து இறக்கியாகி விட்டது. 'லேக் வியூ' அபார்ட்மெண்ட் மூன்றாவது ப்ளோர். புலியின் வருகையை அறிந்து சக பிளாட் வாசிகள் அதிர்ந்தார்கள். கம்ப்ளயன்ட்-கள் பறந்தன. இவர் தான் எல்லா லைசன்ஸ்-களையும் வாங்கி வைத்திருக்கிறாரே? போலீஸ் வந்து பார்த்து விட்டு மேலதிகாரிகளின் அழைப்புகளில் அடங்கிப் போய் கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பிச் சென்றது. வாடகை இரு மடங்கானது. சேஃப்டி டெபாசிட் இன்னுமொரு லட்சம் கேட்கப்பட்டது. பிளாட் ஓனர் மீட்டிங் போட்டு சக பிளாட் வாசிகளுக்கு தெளிவுபடுத்தி விட்டார்.
"எல்லாரும் ஒரு வருஷம் மட்டும் பொறுத்துக்கங்க, ஒரே வருஷம், அப்புறம் சார் காலி பண்ணிடுவார், பையனுக்கு ஏதோ ப்ராஜக்ட் வேலைன்னு வந்திருக்கார். எட்டு மாசத்துல முடிஞ்சாலும் முடியும். புலி எதுவும் செய்யாது, வெளியே வராது, பூட்டிய அறைக்குள் தான் இருக்கும், வந்தாலும் மவுத் கார்ட் போட்டிருக்கும், நகம் எல்லாம் ட்ரிம் பண்ணியாச்சு, நீங்க வழக்கம் போல நடமாடிக்கொண்டு இருக்கலாம்"
'டைகர் பிளாட்' என்று இரண்டே நாட்களில் பெயர் வந்து விட்டது அந்த வீட்டுக்கு. குழந்தைகள் அவ்வப்போது பயத்துடன் உள்ளே எட்டிப் பார்க்கும். விசாலமான ஹாலில் சில நேரங்களில் பதஞ்சலி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் தூங்கிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் விளையாடிக்கொண்டு இருக்கும். உறுமல் சத்தம் லேசாக அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்கும்.
'சேதுராமனை' அந்த பிளாட்டின் தீராத தலைவலி எனலாம். 'சி' பிளாக், நான்காம் ப்ளோர், பிளாட் நம்பர் ஆறு.
'ஒத்துழையாமை' என்பதற்கு மறுபெயராக சேதுராமனை சொல்லலாம். 60 வயதாகும் ரிட்டயர்டு பேங்க் ஆபீசர். மனைவியும் அவரும் தான் பிளாட்டில் வசிக்கிறார்கள். விடிந்தால் ஏதோ ஒரு பிரச்சினையை வாட்ஸ்-அப் க்ரூப்பில் கிளப்பி விட்டு விடுவார்.
'ஐந்தாம் மாடியில் இருந்து ஏ. சி தண்ணீர் கீழே அப்படியே ஒழுகுது, ஹோஸ் போடுங்க', 'செருப்பு ஸ்டான்ட் நடக்கறதுக்கு இடைஞ்சலா இருக்கு, கொஞ்சம் தள்ளி வைங்க', 'சார், நீங்க காரை ரெண்டடி பின்னால் தள்ளி நிறுத்தணும், டூ-வீலர் எடுக்க கஷ்டமா இருக்கு', 'நேற்று தெருநாய் ஒன்று மொட்டை மாடிக்கு ஏறி வந்து அசிங்கம் செய்து விட்டது', 'பி பிளாக் வண்டி ஏன் சி பிளாக் பார்க்கிங்-ல நிற்குது?', 'நேத்து வாட்டர் டேங்க் ஓவர்-ப்ளோ ஆயிருச்சு, மோட்டர் போடறவங்க தான் நிறுத்தணும்', 'ஏன் காமன் கேட் பூட்டி இருக்கு? யார் பூட்டினது?', 'சார், நீங்க இன்னும் லீக்கேஜை சரி செய்யலையே', 'பசங்களை கொஞ்சம் சத்தம் போடாம விளையாடச் சொல்லுங்க, தலை வலிக்குது', 'என்ன சார், ஒரு மாசமாவா ரிப்பேர் ஒர்க் நடக்கும், டங், டங் -குன்னு தலைல அடிக்கிறமாதிரி குட்டறாங்க' - அவரின் எண்ணிறைந்த குறைகளில் இவையெல்லாம் சில.
மற்ற பிளாட் வாசிகள் கீழ்க்கண்ட எல்லாவிதமான டெக்னிக்-கையும் பயன்படுத்திப் பார்த்து விட்டார்கள்.
முதலில் ஆமாம் சாமி போடுவது: 'கண்டிப்பா சார், இதோ பண்ணிடலாம் சார், லீக்கேஜ் தானே, இன்னிக்கு பிளம்பர் வந்திடுவார் சார்' (இரண்டு வருடங்களாக இதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்)
அடுத்து முற்றிலுமாக அலட்சியம் செய்வது. (வாட்ஸ்அப்-பில் பதிலே சொல்லாமல் இருப்பது. நேரில் பார்த்து விட்டால் வராத போன் காலைப் பேசுவுவது போல போனை காதில் வைத்துக் கொண்டு நழுவுவது)
மூன்றாவது சண்டை போடுவது. 'என்ன சார், நீங்க மட்டும் தான் அபார்ட்மெண்ட்-ல இருக்கீங்களா? எல்லோரும் தானே இருக்கோம், அப்படி அவ்ளோ அர்ஜன்ட்-ன்னா நீங்களே அசோஷியேஷன் ஃபண்ட்-ல இருந்து எடுத்து பண்ணச் சொல்லுங்க, பிளாட் -க்கு வெளியில தான லீக்கேஜ் இருக்கு, சும்மா குறை சொல்லணுமேன்னு சொல்லாதீங்க.'
சண்டை போடுவது பெரும்பாலும் உசிதம் அல்ல, அபார்ட்மெண்ட்-களில். ஆமாம் சாமி போடுவது, முகத்துக்கு நேராக புகழ்ந்து பேசுவது, 'பண்ணிக்கலாம் சார்' என்று ஒத்திப் போடுவது, யாரை எங்கே ஆப் செய்வது என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வது, மறைமுக அழுத்தம் கொடுப்பது, எப்படி soft revenge எடுப்பது போன்ற ஆய கலைகள் தெரிந்திருக்க வேண்டும்.
ஓகே.
சேதுராமனுக்கு வளர்ப்பு பிராணிகள் என்றால் அலர்ஜி. இப்படித்தான் சென்ற வருடம் ஒருவர் தன் வளர்ப்பு நாயுடன் வாடகைக்கு வந்து குடியேறினார். ஆஜானுபாகுவாக இருந்த அந்த நாய் கொஞ்சம் முரடு. கொஞ்சம் முறைக்கும், கொஞ்சம் உறுமும், கொஞ்சம் குரைக்கும். எஜமானரைத் தவிர எல்லோரும் எதிரி தான் அதற்கு. சேதுராமன் விடுவாரா? மறைமுக அழுத்தம் கொடுத்து ஆறு மாதத்தில் வீட்டை காலி செய்ய வைத்து விட்டார் மனிதர்.
நாய்க்கே நர்த்தனமாடியவர் புலி என்றால் கேட்கவா வேண்டும்?
நிஜமாகவே தன் அபார்ட்மெண்ட்டுக்கு வளர்ப்புப் பிராணியாக ஒரு புலி வந்திருக்கிறது என்பதை அவரால் நம்ப முடியவில்லை. பிறகு நம்பி, வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். யார் யாருக்கோ போன் செய்தார். போலீசை அழைத்து வந்தார். வாசுதேவனிடம் நேரடியாக சண்டை போட்டார். ஆதரவாளர்களைத் திரட்டி ரெசிடன்ஸ் வெல்பேர் அசோசியேஷனில் மனு கொடுத்தார்.
அவரது அதிகாரம் தெருமுனை வரை தான். வாசுதேவனுக்கு மத்திய மந்திரி வரை செல்வாக்கு இருந்தது. பிரதமருடன் அவர் எடுத்துக் கொண்ட மெகா சைஸ் புகைப்படம் வீட்டின் ஹாலில் மிரட்டியது. ஆனாலும் அசரவில்லை சேதுராமன். காலையில் மாலையில் கருத்துடன் நாளும், ஆசாரத்துடன் அங்கம் துலக்கி இந்த கம்பிளையண்ட்-டை யாருக்காவது அனுப்பிக் கொண்டிருந்தார்.
'எங்களால எதுவும் செய்ய முடியாது சார், மினிஸ்டர் வரை தெரிஞ்சிருக்கு அவருக்கு, அதுவும் இல்லாம இந்த புலிக்கு ஹன்டிங் இன்ஸ்டின்ட் இல்லை என்று சர்டிபிகேட் வைத்திருக்கிறார். உள்ளுக்குள் அது ஒரு பூனை சார், ஒரு நாய் பூனை வளர்ப்பது மாதிரி தான் இதுவும், விடுங்க சார்'
'அது எப்படி சார் விட முடியும்? இது என்ன சிட்டியா? காடா? நாயும் பூனையும் புலியும் ஒண்ணா? என்ன பேசறீங்க? புலிக்கு வேட்டையாட சொல்லித் தரணுமா? அது ஒட்டிப் பிறந்த குணம் சார், ரத்தத்தை பார்க்க ஆரம்பிச்சா கடிச்சு குதறிடும், நான் போறேன், நான் இருக்க மாட்டேன், வீட்டை வித்துட்டுப் போறேன், பொண்ணுங்க வீட்டுக்கு வரவே பயப்படறாங்க'
"லைசன்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு சார்..."
"என்ன சார் பொல்லாத லைசன்ஸ், நாளைக்கே நான் ஒரு யானையைக் கூட்டி வந்து பார்க்கிங்-ல கட்டிப் போடறேன், லைசன்ஸ் இருக்குனு சொல்றேன், ஒத்துப்பிங்களா? நான் இருக்க மாட்டேன், போறேன் சார்"
"ஓகே சார், உங்க இஷ்டம், நீங்க சேஃப்-ஆ ஃபீல் பண்ணலைன்னா நீங்க வேற எங்காவது தங்கிக்கலாம்"
"சொந்த வீட்டை விட்டுட்டு நான் ஏன் சார் போகணும்? யாரோ புலியைக் கொண்டு வருவானாம், நான் காலி பண்ணிட்டு போகணுமாம்"
"அப்ப போகாதீங்க"
கோபம் அடங்கவேயில்லை அவருக்கு. 'விட மாட்டேன், நான் பிரஸ்-சை கூப்பிடறேன், ஊருக்கெல்லாம் சொல்றேன்'.
சில வாரங்களில் நிலைமை 'நார்மல்' ஆகி விட்டது. பிளாட் வாசிகள் வழக்கம் போல உலாவத் துவங்கினார்கள். பதஞ்சலி வெளியே வருவதே இல்லை. வேடிக்கை பார்க்க கூட்டம் கூடி விடுமே? அதிகாலை சேஃப்டி காலர் போட்டு புலியை மூன்று மணிக்கு வாக்கிங் கூட்டிப் போவார் வாசுதேவன். அவ்வப்போது அபூர்வமாக பால்கனியில் தென்படும். இரண்டு வேளை சமைத்த சிக்கன் மட்டுமே சாப்பிடும்.
சிறுவர்கள் வெளியே நின்று வேடிக்கை பார்த்தார்கள். சில நாட்களில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள். மஹிதரை 'ஃபிரண்டு' பிடித்தார்கள். 'அண்ணா, பதஞ்சலியை தொட்டு பார்க்கணும்' என்றார்கள். ஷ்யூர் என்று உள்ளே அழைத்துச் சென்றான் மஹிதர். பதஞ்சலி ஒரு பூனை போல படுத்திருந்தது. தொடும் போது சிணுங்கியது. தொடுவதற்கு ஒரு பஞ்சு மூட்டை போல இருந்தது. கண்களில் சிநேகம் காட்டியது. இடது முன்னங்காலில் ஒருவித சப்போர்ட் ஃபிரேம் மாட்டியிருந்தது. அதன் உதவியுடன் கியூட் ஆக நடந்தது.
சேதுராமன் மட்டும் மாறவில்லை. 'பார்த்துட்டே இருங்க, ஒருநாள் எல்லாரையும் மேல விழுந்து குதற போகுது' என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
'இதால தான் நான் சாகப் போறேன்' என்று அடுத்த மீட்டிங் -கில் பகிரங்கமாக அறிவித்தார். 'இந்தப் புலி என்னை கொன்னு ரத்தம் குடிக்கப் போறது, என் சாவுக்கு அந்த வாசுதேவன் தான் முழு பொறுப்பு' என்று பிரகடனம் செய்தார்.
மஹிதர் தினமும் ப்ராஜெக்ட்-டுக்கு சென்று வந்தான். வீட்டுக்கு அருகிலேயே வேலை. அவன் அம்மாவுக்கு மட்டும் சென்னை வெயில் ஒத்துக் கொள்ளவில்லை. குளிரிலேயே இருந்து பழகியவர் ஆயிற்றே!
இப்படியே ஒரு ஆறு மாதங்கள் ஓடிவிட்டன
அந்த சபிக்கப்பட்ட நாள் வந்து சேர்ந்தது, சேதுராமனுக்கு. அவர் பயந்ததிலும் ஓர் அர்த்தம் இருக்கத் தான் செய்தது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?
அன்று 'பூஜா ஹாலிடேஸ்' என்பதால் பிளாட்டே காலியாக இருந்தது. குழந்தைகளை அழைத்துக் கொண்டு எல்லோரும் ஒரு பக்கம் ஊருக்குச் சென்று விட்டிருந்தார்கள். பிளாட்டில் சேதுராமன் மற்றும் வாசுதேவன் குடும்பங்கள் மட்டுமே இருந்தன. காலை பத்து பதினொரு மணி இருக்கும். சேதுராமன் மனைவி மொட்டை மாடியில் துணி காயப் போட்டுக் கொண்டிருந்தார்.
மாலையில் மகளும் மாப்பிள்ளையும் வருகிறார்கள். பக்கத்து கடைக்குச் சென்று பால் வாங்கி வருவதற்காக லிப்ட் அருகே வந்தார் சேதுராமன். லிப்ட் வேலை செய்யவில்லை. 'இதே வேலையாப் போச்சு, மாசம் இருபது நாள் லிப்ட் வேலை செய்யலை, மெயின்டனன்ஸ் மட்டும் சுளையா வாங்கிக்கிறாங்க, எதுவுமே சரியில்லை' என்று முணுமுணுத்தார். உடனே வாட்ஸ்-அப் திறந்து 'லிப்ட் வேலை செய்யவில்லை' என்று மெசேஜ் தட்டினார்.
படிகளில் கீழே இறங்க வேண்டும். இறங்கியதும் வாசுதேவன் வீடு வந்தது. வீடு திறந்திருந்தது. வீட்டை உள்ளே பூட்டி வைங்கன்னு எத்தனை முறை சொல்றது? அந்தப் பக்கமே திரும்பாமல் அவசர அவசரமாக கீழே இறங்கினார். இரண்டு மாடிகள் இறங்கி முடித்து விட்டார்.
வாட்ஸ்-அப் மெசேஜிற்கு ஏதோ பதில் வந்திருந்தது. உடனே ஆர்வமாகி அதை படிக்க ஆரம்பித்தார்.
இரண்டாம் புளோரில் பூந்தொட்டி-களுக்கு இடையே இருந்த இடைவெளியில் இருந்து சீறிக் கிளம்பி வந்தது அது. 'கீச் கீச்' என்ற சத்தத்துடன் வெளியேற இடம் தேடி இங்குமங்கும் அலைந்தது அந்த பெரிய எலி. முதலில் சேதுராமன் அதைக் கவனிக்கவில்லை. போனை நோண்டியபடி இறங்கிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆள் குறுக்கிட்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் காலை உரசியபடி எதிர் திசையில் ஓடியது எலி.
மிரண்டு போன சேதுராமன் உடனே சுவர் பக்கம் ஒதுங்கினார். பேலன்ஸ் தவறி விட்டது. பிடிமானம் கைகளுக்கு சரியாகக் கிடைக்கவில்லை. ஒரு மூட்டை போல படிகளில் அப்படியே உருண்டு கீழே போனார்.
'ஹாஸ்பிடல் கொண்டு போகும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது' என்ற செய்தி மாலையில் வந்து சேர்ந்தது.
xx முற்றும் xx
#268
मौजूदा रैंक
71,470
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 1,470
एडिटर्स पॉइंट्स : 70,000
31 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 4.7 (31 रेटिंग्स)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
a.arun283
rathishind90
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स