வீழ்வேன் என நினைத்தாயோ.?

aumaasj
பெண்மையக் கதைகள்
4.8 out of 5 (59 रेटिंग्स)
कहानी को शेयर करें

மாலை நேரம் மனதுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. மார்கழி குளிர் உடம்பில் ஊசியாய் இறங்கிற்று. அதுவும் டில்லி குளிர் பற்றி கேட்கவே வேண்டாம்!

தூரத்தில் தெரிந்த மலை முகடுகள் மஞ்சள் முலாம் பூசியது போல் பளபளத்தது.

எத்தனை விஞ்ஞானத்தில் மனிதன் முன்னேறினாலும் இயற்கையின் முன்னே அவன் மண்டியிட்டு தான் ஆகவேண்டும்.

கவிப்பிரியாவுக்கு. கடந்த காலங்கள் நினைவில் வந்து போயின.

தாய் தந்தை ஒரு தங்கை,அப்பாவின், ஆசிரியர் ஊதியம் குடும்பத்தை நடத்த போதவில்லை.

கவிப்பிரியா, கல்லூரி படிப்பு முடித்து வெளிவர அவளின் அழகான குரலுக்காகவே, அந்த வானொலி அவளை கரம் நீட்டி அழைத்தது.

தங்கை பிளஸ் டூ முடித்து, கல்லூரி செல்ல, ஒரு மகனாய் எல்லா கடமைகளையும் செய்தாள் பிரியா.

ஆகஸ்ட் 15, அன்றைய சுதந்திர தினத்தில் விடுமுறையை கழிக்க ஊருக்கு வந்திருந்த சில இராணுவ வீரர்களிடம் அவள் பேட்டி காணலானாள்.

“அண்ணலைப்போல, பல ஆத்மாக்கள் அஹிம்சை போராட்டத்தில் பெற்றுத்தந்த நாடல்லவா இது. புண்ணிய ஆத்மாக்கள் பல. எல்லையோர பனி மழையிலும், எதிரிகளின் தோட்டா நாக்குகளிலும் தப்பி நாட்டைக் காத்து கொண்டிருக்கிறார்கள்.

கார்கிலின் புதல்வர்கள் என்று இவள் எழுதிய காவியம். அன்று உலா வர, அதில் காவிய நாயகர்களாய் சில வீரர்கள் இடம் பெற்றிருந்தார்கள்.

அதில் ஒருவனாய் அர்ஜுன்.! ஆயிரம் கரங்கள் இடைமறித்தாலும். அசராத அசாத்திய வீரன், அவன்! கம்பீரமான தோற்றம், கட்டான உடல், விறைப்பான யாவரையும், ஊடுருவும் பார்வை!

கூர்மையான நாசி, வலிமையான உயர்ந்த தோள்கள், அலட்சியமான, ஆனால் அறிவு பூர்வமான முகம்!

பாரதத்துக்குச் செய்யும் தொண்டு, எதிரிகளை விரட்டும் தீரம், மனதில் பொங்கி எழும் துணிவு என்று அவன் பேச, பேச…. பிரியா கேள்வி கேட்க முடியாமல் திணறிப் போனாள்.

“சராசரி மனிதனல்ல இவன்! நேற்று, இன்று, நாளை என்ற மூன்றையும் உணர்ந்து வைத்திருப்பவன்”.

“அர்ஜுன் யூ ஆர் கிரேட்” பிரியா தனக்குள்ளே சொல்லி கொண்டாள்.

முகத்தை கழுவி, டவலால் ஒற்றியபடி வந்தவள் சிவகாமி நீட்டிய பக்கோடாவையும், டீயையும் எடுத்துக் கொண்டே கேட்டாள்.

“தரகர் எதுக்கும்மா வந்திட்டு போறாரு. காவ்யாவுக்கு இன்னும் படிப்பு கூட முடியலியே..?”

“என்னடி….. விளையாடுறியா.?"

அம்மா நீட்டியக் கவரை வாங்காமலே…”அது என்னம்மா.. இன்னொரு கையிலே…?”

“இதெல்லாம் நான் கழிச்சி விட்ட வரன்."

"அதை கொடும்மா! எல்லாத்தையும் பார்த்தா தானே எனக்கு ஒரு ஐடியா கிடைக்கும்:," அம்மா கையிலிருந்ததை இழுத்து கொண்டாள்.

நிதானமாக வாங்கி பார்த்தவள், அம்மா கழித்து விட்ட வரன்களைப் புரட்ட, அதிலிருந்து விழுந்த போட்டோவைப் பார்த்ததும் திகைத்தாள்.

அர்ஜுன் தான் அழகாய் சிரித்தபடித் தெரிந்தான். தேசப்பற்றும், அவன் பேச்சின் வலிமையும், அந்த துணிச்சல் நிறைந்த முகமும் மனதில் வந்து மோதியது!.

"ஏம்மா..நாட்டை காக்கிற பணியில் இருக்கிற ஒரு வீரனுக்கு மனைவி ஆகிறதும்; பெருமைதானே…? நீ நினைக்காட்டியும் நான் அப்படி தான் நினைக்கிறேன்.”

“அதனாலே… தரகர் தங்கசுவாமிகிட்டே சொல்லி, இந்த வரனை முடிச்சிடுங்கம்மா!"

“பிரியா, என்னம்மா சொல்றே"…?

“உம் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசைப்பட்டா, இந்த சம்பந்தத்தை முடிச்சி வைம்மா,"'

பிரியா பிடிவாதமாய் சொல்ல, தேவகி மகளை வெறித்தாள்.

அடுத்த சில வாரங்களில், புனிதாவும், அர்ஜுனும் பிரியாவை பெண் பார்க்க வந்தார்கள். கூடவே தரகர் தங்கசுவாமி

“சிவகாமியம்மா, உங்க பொண்ணை அழைச்சிட்டு வாங்க”.

அளவான ஒப்பனையில் அடக்கமாய் தெரிந்தாள். அவள் கட்டியிருந்த மைசூர் பிரிண்டட் சேலை பாந்தமாய் தெரிந்தது

சின்ன புன்னகையுடன் பிரியா கைகளைக் கூப்பினாள்.

"நம்மையும் இந்த இந்திய திருநாட்டையும் படைச்ச கடவுளுக்கு மட்டும் சொல்லுங்க, வணக்கம்,

"இந்தியா என்கிற தேசத்தில் நம்மை உலவ விட்டவர் அவர்தானே! பட்…பிரியா நமக்கு மேரேஜ் முடிஞ்சதும் நீ இரண்டு மாசம் இங்கே இருக்க வேண்டி வரும். எனக்குக் குவார்ட்டஸ் ரெடியானதும் வந்து அழைச்சிட்டு போவேன்."

அவள் எண்ணங்களை இடைமறித்தது அத்தையின் குரல்.

************

“பிரியா… இந்த பாலைக் குடிச்சிடும்மா.

குங்குமப்பூ கலந்த பாலை அருந்திவிட்டு நிமிர்ந்தபோது சலீமா கேட்டருகே வந்து கொண்டிருந்தாள். பார்த்ததும் சிரித்தாள்.

“வா சலீமா உட்காரு. வீட்டில உம்மா. வாப்பா, நல்லா இருக்காங்களா ? சலீமா.

“ஆமா பிரியா! உன்னோட குட்டிபையன் என்ன சொல்றான் தாதிம்மாவை பார்க்க சீக்கிரமே வர்றேன் என்கிறானா…?

அவளுக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் வார்த்தைகள் கடிபட்டது.

“உனக்குத் தெரியாததா சலீமா…? என்னோட கனவே எங்க சின்ன அர்ஜுன்தான். அவனை பிரியா என்கிட்டே தர்றது வரை முள்மேலே இருக்கிற மாதிரி இருக்கும்!”

மகனை தொலைத்துவிட்ட விரக்தியில் அந்த தாய்மனம் புலம்பிற்று.

“சலீமா..ஏன் ஒருமாதிரியா இருக்கே. உடம்பு சரியில்லையா…”? பேச்சை மாற்றினாள் பிரியா.

“உடம்புக்கு ஒண்ணும் இல்லை. மனசுதான் சரியில்லே. வாப்பா குடிச்சிட்டு வந்து, உம்மாவோட சண்டை போடுறாரு. அவங்களோட வாழ்க்கையே போராட்டமா இருக்கு பிரியா”.

சொல்லும் போதே சலீமாவின் குரல் கம்மியது. "ஏன் சலீமா, வீட்டுக்கு அன்வர் வந்திருந்தாரா""…?

“அதனால்தான் இந்த குழப்பமே! பிரியா என்னைக்கு எங்க உம்மாவுக்கும், எனக்கும் அல்லா கருணை காட்ட போறாரோ”

சரி பிரியா, வாப்பா தேடும் நான் வர்றேன். விடை பெற்றாள் சலீமா.

சலீமா போனதும், தன் நினைவுகளில் மூழ்கினாள் பிரியா.

திருமணம் முடித்த பிரியா அர்ஜுனோடு டெல்லி கிளம்ப வழியனுப்பி வைத்தார்கள் பெற்றோர்.

கலங்கல் இல்லாத அந்த வாழ்க்கை பிரியாவுக்குப் பிடித்துப்போனது. அர்ஜுனுடன் வாழ்ந்த மனம் நிறைந்த ஒரு வருட வாழ்க்கையில், மூன்று மாத சிசுவோடு இருந்த போதுதான், அந்த பேரிடி அவளைத் தாக்கியது.

ஆர்ஜுன் சென்ற ராணுவ ஜீப் தீவிரவாதிகளின் கண்ணி வெடியில் சிக்கி சிதறி போனது. இறந்துவிட்ட ஏழுபேரில் அர்ஜுனும் ஒன்றானபோது பிரியா உடைந்து போனாள்.

“புனித ஆத்மாக்கள்… பூமியிலிருந்து சீக்கிரம் விடைபெற்று சென்றுவிடுவது இறைவனால் எழுதி வைக்கப்பட்ட தீர்ப்பு போலும்”

பிரியா தன்னை தேற்றி கொண்டாள். சிவகாமி வந்து அழைத்தபோது அர்ஜுனின் வாரிசையும், வயதான தாயையும் விட்டு வர இஷ்டமில்லை என்ற போது சிவகாமி காவ்யாவுடன் திரும்பி போனாள்.

“ஞாபகங்களின் கடந்த காலத்தைப் பெரிதாய் நினைக்கும் மனம், அதிலிருந்து விலகி, அடுத்த விஷயங்களைத் தொடரும் பக்குவத்திற்குத் தன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும்”.

“பிரியாவும் அந்த பக்குவத்திற்கு வந்திருந்தாள். தங்கத்தை, தீயிலிட, தீயிலிடதான் அது மெருகேறும். அதுபோல, சோதனைகள் அவளை புடம் போட பிரியா இரும்பாய் இறுகியிருந்தாள்”.

குளிர், பிரியா அணிந்திருந்த ஸ்வெட்டரையும் மீறி தாக்க, நனவுக்கு வந்தவள், அர்ஜுனின் நினைவுகளோடு தூங்க போனாள்!.

************

மறுநாள், காலிங்பெல்

கொட்டுகிற மழையில் குடையோடு அன்வர் நின்றிருந்தான்.

“வாங்க அன்வர்”, வாங்க, உட்காருங்க! ஏலக்காய் மணக்கும் டீயை நீட்டியபோது தேங்க்ஸ் என்றான்.

“சொல்லுங்க அன்வர் என்ன விஷயமா வந்தீங்க!” கொஞ்சமாய் தயங்கியவன், “சலீமாகிட்டே கேட்டிங்களா சிஸ்டர். இந்த அன்வர் அவளுக்காக இப்பவும் காத்திட்டு இருக்கிறதை….”

“அவளோட, உம்மாவும் வாப்பாவும் என்கிட்டே பேசவே விடமாட்டேங்கிறாங்க சிஸ்டர். சலீமா அவங்களுக்கும், இந்த சமுதாயத்ததுக்கும் பயப்படுறா! ஆனா… எம்மேல அவளுக்கு விருப்பம் இருக்குது சிஸ்டர்”.

“சரி அன்வர் நான் சலீமாகிட்டே கேட்டுத் தெளிவான பதில் சொல்ல சொல்றேன்.”. நீங்க கிளம்புங்க”

தளர்ந்து செல்லும் அவனையே பார்த்தாள் பிரியா!

அன்வர் சலீமாவின் முறைப்பையன். டில்லியின் ஒரு குறுகிய சந்தில், சலீமாவின் குடும்பம் வாழ்ந்தபோது, பேகம் மாமியின் மகனான அன்வரும் சலீமாவும் பள்ளி தோழர்களாயினர்.

அன்வரும், சலீமாவும் ஒருவரை ஒருவர் விரும்பலாயினர். சலீமா மீது அளவு கடந்த பாசம் அன்வருக்கு.

சலீமாவின் தம்பி அன்பரின் தங்கையோடு ஓடிப்போய் திருமணம்செய்து கொள்ள, இரு குடும்பங்களுக்கும் இருந்த பிடிப்பு போய் பிழவை உண்டாக்கிற்று.

சலீமாவின் படிப்பை முடித்து, அவள் விருப்பத்தை கேட்காமலே, ராணுவத்தில் பணியாற்றி வந்த தூரத்து சொந்தமான ஷமீருக்கு மனைவியாக்கி விட்டார்கள்.

ஷமீரை இழந்து, சலீமா தனிமரமானபோது, அன்வர் சலீமாவை நிக்காஹ் பண்ண விரும்புவதாக செய்யது பாபுவுக்கு ஆள் அனுப்பி இருந்தான்.

“எங்க பொண்ணு விதவையா இருந்துட்டாலும் பரவாயில்லை. இந்த குடிகெட்ட குடும்பத்துக்கு ஒரு நாளும் கட்டி கொடுக்க மாட்டோம்” செய்யது பாபு ஆவேசமாக சொல்லி அனுப்பி விட்டார்.

அன்வர் வந்து பிரியாவிடமோ, சலீமாவிடமோ தன் கோரிக்கையை அடிக்கடி வைத்து செல்வான்.

“அடடே, பிரியா பேட்டியா… வா, வா உட்காரு ஈசிசேரில் சாய்ந்திருந்த செய்யதுபாபு பிரியாவைக் கண்டதும் எழ முயற்சி செய்தார்.

“வேண்டாம். நீங்க உட்காருங்க நான் சலீமாவைப் பார்க்க வந்தேன்”

அதற்குள் சலீமாவே வந்துவிட்டாள்.

“வா, பிரியா! உம்மா, பானுபேகம் வீட்டுக்குப் போயிருக்கு "

"வேண்டாம் சலீமா. நான் அன்வர் விஷயமா கேட்க வந்தேன். அன்வர் வீட்டுக்கு வந்திருந்தாரு” உன்கிட்டே பேச சொன்னாரு சலீமா!

“இனி பேச எதுவுமே இல்லை பிரியா. வாப்பா இதுக்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டாரு. அன்வருக்கு ஒரு நல்ல வாழக்கை அமையணும். அவரை வேற நிக்காஹ் பண்ண சொல்லு பிரியா. "

"நான்.., இருந்தாலும் இறந்தாலும், ஷமீரோட மனைவியாகவே இருக்க விரும்பறேன். எனக்கும் இதில் உடன்பாடு இல்லே பிரியா. பிளீஸ்… அன்வர்கிட்டே முடிவா சொல்லிடு "

கண்களில் நீர் திரையிட, பிரியாவின் கைகளைப் பிடித்து கொண்டாள்.

வாடிய மாலைக்குள், ஷமீர் சிரித்துக் கொண்டிருந்தான்.

************

ஊரிலிருந்து வந்ததும் அத்தை சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றாள் பிரியா.

“சலீமா, இப்போ முன்னே மாதிரி இல்லே பிரியா. அவளைப்பற்றி பலவிதமாக பேசுறாங்க. அவ உம்மா ஃபேகம் கூட இதை மறுக்கல!”

“சலீமா ஹரிகுப்தா கூட பழக்கமா இருக்காளாம். அவ வீட்டில, இவளால அடிக்கடி சண்டையாம்!”

“அத்தை .... நீங்க சொல்றது…?”

“என்னால நம்பமுடியல பிரியா. ஆனா, நம்பாமலும் இருக்க முடியல, ஹரி குப்தா வீட்டிலேயே சலீமா இருக்கா வாரத்துக்கு ஒருதடவை, அவ உம்மா, வாப்பாவை பார்க்க வருவாளாம்! அவங்களுக்குள்ளே என்ன உறவோ…..? ஊரே சிரிக்கும்படி சலீமாவோட நடவடிக்கை இருக்கு பிரியா.”

பிரியா பேசத்தோன்றாமல் நின்றாள்.

ஹரிகுப்தா, ராணுவத்தில் கமாண்டன்ட் ஆக பணி புரிபவர். அர்ஜுன் இருந்தபோது பல தடவை வீட்டிற்கு வந்து பிரியாவின் சமையலை புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்.

செட்டிநாட்டு அவியலும், இவள் வைக்கும் கத்தரிக்காய் காரக்குழம்பும் ஒரு பிடி பிடிப்பார்.

“அர்ஜுன், நீ ரொம்ப கொடுத்து வச்சவன். உன் மிசஸ் சமையலை ருசிக்கவே லீவு கேட்டு என்கிட்ட வரலாம்” என்பார் சிரித்தபடி…

அந்த ஹரிகுப்தாவா இப்படி…..?

“சலீமா .….ஷமீருக்கு துரோகம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது….?

“ஆட்கொல்லி, சுறாமீன்களை உள்ளே வைத்துகொண்டு வெளியே அழகு காட்டும் கடலை போல, நீயும் இந்த ஹரிகுப்தாவிடம் ஏமாந்து விட்டாயா? இல்லை, ஷமீருக்கு நீ தீங்கு இழைத்தாயா"'

பிரியாவிற்குத் தலையே வலித்தது. எங்காவது வெளியே சென்று வரலாம் போலிருந்தது.

“அத்தை…. நான் கோயில் வரை போயிட்டு வர்றேன்” வெளியேறி நடந்தாள்.

எட்டுமாத வயிற்றை விட, மனது தான் கனத்து கிடந்தது.

ஆஞ்சநேயர் ஆலயம், அந்த நேரத்தில் பரபரப்பாய் இருந்தது, அடர்த்தியாய் பூசியிருந்த வெண்ணை குவியலுக்கு நடுவே, ஆஞ்சநேயர் ராமதூதன் முகம் அலங்காராமாய் சிரித்தபடி தெரிந்தது.

அனுமனை தரிசித்து வெளியேறி வந்த போது மனது லேசாகி இருந்தது.

************

சீருடை தரித்த பள்ளி குழந்தைகளும், வேலையிலிருந்து விடுபட்ட பெண்களும், ஆண்களுமாய் அந்த மெயின்ரோடு பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தது.

“க்யா மேடம் ஆட்டோ சாஹியே?”

நோ.. தேங்ஸ்

அந்தி மயங்கும் நேரம் நடப்பதே ஒரு அலாதி சுகமாக இருந்தது. சில நாட்களில், ஆஞ்சநேயரை தரிசித்து அர்ஜுனோடு இதே தெருக்களில் உலா வந்திருக்கிறாள்.

ஆண்மையான அவன் பேச்சும், அவனோடு நடக்கும் அந்தி பொழுதையே அற்புதமாக்கும்!

ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதி, நேரு சமாதியில் தியாகிகளின் நினைவிடங்களில் அர்ஜுன் விறைப்பாய் சல்யூட் வைத்து வருவான்.

அஹிம்சை என்ற நாலெழுத்து மந்திரத்தில் சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா இதோ தூங்கி கொண்டிருக்கிறார் பிரியா.” என்பான்.

எந் தந்தையுந்தாயுமகிழ்ந்து குலாவியிருந்ததும் இந்நாடே-அதன் முந்தையுமாயிரம்மாண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் மிந்நாடே”

மீசைக்கவிஞன் பாரதியின் வரிகள் அர்ஜுனின் உதடுகளில் உச்சரிக்கும் போது அதற்கு உயிரோட்டம் கிடைத்தது போல் தோன்றும் பிரியாவுக்கு.

அர்ஜுனுக்கு அவனைப்போல வீரமான ஆஞ்சநேயரை பிடிக்கும். குவார்ட்டஸ் திரும்பும்போது பிரியாவை அழைத்து கொண்டு கோவிலுக்கு வந்துவிடுவான்.

வீரமான ஆஞ்சநேயர்தான். அவன் இறந்தபிறகு இவளுக்கு வீரத்தையும் தந்திருப்பார் போலும்!

பிரியா” குரல் கேட்டு திரும்பிபார்த்தாள்”. ஆட்டோவில் இருந்து இறங்கி கொண்டிருந்தாள். சலீமா.

"ஊரிலிருந்து எப்போ வந்தே….? அம்மா தங்கை எல்லாரும் நல்லா இருக்காங்களா பிரியா.” உங்கிட்டே நிறைய பேசணும்."

பிரியா , சலீமாவையே பார்த்தாள். அவளிடம் தெரிந்த வித்தியாசம் முகத்தில் அறைந்தது.

மசூதிக்குள் மட்டுமே நுழைந்த சலீமா இன்று கோவிலுக்கு சென்று வந்திருக்கிறாள். சின்ன துணுக்காய் ஆஞ்சநேயர் பிரசாதம் அவள் நெற்றியில் அழகாய் சிரித்தது.

“அவசியம் பேசணுமா..? சலீமா?"

“ஏன் பிரியா பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு. நீ கூட என்னை, சரியா புரிஞ்சுக்கல இல்ல""

“நோ, நேரம் எல்லாமே நல்ல நேரந்தான். உலகில் நாமதான் நல்லவங்களா இருக்கணும் சலீமா”.

“உன்னோட பேச்சே இன்றைக்குப் புதிரா இருக்கு, உன் வார்த்தைகள் வலிமையாகி கிட்டே வருது. எல்லோரையும் போல, நீயும் என் ஒழுக்கத்தை சந்தேகப்பட்டுடியா பிரியா?”

“ஒன்று மட்டும் புரிஞ்சுக்க. மனக்கட்டுப்பாடு மட்டும் நமக்கு வசப்பட்டா, சிவப்பு விளக்குப் பகுதியில் கூட பெண் ஒழுக்கமாக வாழ முடியும்” காந்தி சொல்லி இருக்கார்.”

“வார்த்தைகள் வலிமையானவை! அதற்கு இதமாக்கவும் சில நேரம் ரணமாக்கவும் சக்தி உண்டு” பிளீஸ் என்னை போகவிடு பிரியா "'

சலீமா செல்ல அவளை வெறித்தாள்.

************

விடிகாலை குளிர் இதமாய் இருந்தது. அகன்ற வானத்தில் விடிவெள்ளி மினுக்கென வெட்டி கொண்டிருந்தது.

ஒன்பது மாதம் முடிந்திருந்தது. பிரசவத்திற்குக் கூட டாக்டர்சொன்னபடி இரண்டு வாரம் இருந்தது.


"பிரியா, உனக்கு ஃபோன்"

“ஹலோ” பிரியா குரல் கொடுத்தாள்.

“நான் அன்வரோட அம்மா, ஆயிஷா பேசறேன். அன்வர் உன்னை சந்திக்க வந்தானா பிரியா.”

""ஏம்மா, என்ன விஷயம்! புரியாமல் கேட்டாள்.

“அன்வர் சலீமாவை நிக்காஹ் பண்ணுற விஷயமா எங்களுக்குள்ளே சண்டை. இப்போ அன்வர் ஒரு வாரமா வீட்டுக்கு வரல்லே.

“பிரியா பேட்டி, நீயே சொல்லு. அன்வர் இன்னும் சலீமாவை நினைச்சிட்டு இருக்கான். நாங்களும், அவளை மருமகளாக்கிக்க ரெடியா தான் இருக்கோம். ஆனா….சலீமா இவனைத் திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறா.!

" அவ உம்மா வாப்பாவை மீறி நாமாவது நிக்காஹ் பண்ணி வைக்கலான்னா…. இந்த பொண்ணு சம்மதிக்க மாட்டேங்குதே.

பிரியாவுக்குப் புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது.

“அன்வர் சலீமாவையே நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் சலீமா…..?

பெருமூச்செறிந்தாள் பிரியா.

*************

இரவு ..,

அடுத்த அறையிலிருந்து வந்த முனகல் சத்தம் அவள் கவனத்தை கலைத்தது.

உள்ளே நுழைந்து, அத்தையின் நெற்றியில் கை வைத்த போது, அனலாய் சுட்டது.

நகரமே இன்னும் சோம்பலில் இருந்தது. இன்னும் விலகாத பனித்திவலைகள் வான மைதானத்தைப் பஞ்சு பொதியால் மறைத்து கொண்டிருந்தது.

ஆட்டோரிக்க்ஷா ராணுவ மருத்துவமனை வளாகத்தில், பிரியாவை இறக்கி விட்டது. அத்தையை ஆதரவாய் பிடித்தபடி உள்ளே சென்றாள் பிரியா.

சிறிது நேர காத்திருப்புக்குப் பின் டாக்டர் ஜவகர் உற்சாகமாக உள்ளே வந்தார்.

“வெல்கம் டாக்டர்”,

"எப்படி இருக்கிங்க மிஸஸ் பிரியா..?"

ஃபைன் டாக்டர், அத்தைக்குத் தான் உடம்பு சரியில்லை. பீவர் அதிகமா இருக்கு”.

“சாரி பிரியா, இன்னைக்கு ராக்கி டே! வீட்டிலேயிருந்து வர்றதுக்குள்ளே ஒவ்வொருத்தரா வந்து, ராக்கி கயிறு கட்டி, அவங்க அன்பு மழைல நனைந்து வெளியே வர்றதுக்கு லேட்டாயிடுச்சி” ஜவஹர் ஆரோக்கியமான பல்வரிசையில் அழகாய் சிரித்தார்.

இது பனியினால ஏற்பட்ட பீவர் தான். இரண்டு நாள் இந்த மருந்துகளை அத்தைக்கு கொடுங்க சரியாயிடும்”.

“மிசஸ் பிரியா ஹரிகுப்தா இங்கேதான் அட்மிட் ஆகியிருக்கார். அவருக்கு இரண்டு கிட்னியும் பெயிலியர். யாராவது கிட்னி டோனேட் பண்ணினா பிழைக்க சான்சஸ் இருக்கு”.

"ஹரி நேர்மையான ஒரு திறமையான பிரில்லியண்ட் மேன்! எத்தனையோ பேருக்கு அவர் ஒரு சவாலா இருந்திருக்கார்”.

டாக்டர் ஜவகர் சொல்ல, சொல்ல ஆயிரம் மின்னல் தாக்கியதைப் போல் இருந்ததுப் பிரியாவுக்கு!

“மிஸ்டர் ஹரிகுப்தா எந்த செக்க்ஷன்ல அட்மிட் ஆகி இருக்கிறார் டாக்டர்?

“டீ செக்க்ஷன்ல 207 வது ரூம் பிரியா."

தேங்க்யூ டாக்டர். நான் அவரைப் பார்த்திட்டு வர்றேன் ".

லிப்டில் பயணித்து அறைக்குள் நுழைந்தாள்.

“சலீமா, ஹரிகுப்தாவின் கைகளில் அந்த ராக்கி கயிற்றை கட்டி கொண்டிருந்தாள். சத்தம் கேட்டு நிமிர்ந்தவள், “வா பிரியா” என்றபோது, அவளைப் பார்ககவே கஷ்டமாக இருந்தது பிரியாவுக்கு.

ஹரிகுப்தா அசைவில்லாமல் படுத்திருந்தார்.

“கேப்டன் எப்படி இருக்கார் சலீமா..? "

"ஹரி பிழைச்சிடுவார். கமாண்டன்ட் விஷயத்தில் கடவுள் என்பக்கம் தான் இருப்பார்னு நம்பறேன் பிரியா!”

“எல்லோரையும் போல, நானும் சலீமாவை தவறாக நினைத்து விட்டேனா..? எல்லா விஷயங்களையும், ஆரோக்கியமாக நினைக்கும் நான் சலீமா விஷயத்தில் தவறு இழைத்து விட்டேனே...

இறுகி போய் நின்றாள், பிரியா.

************

காலம் எதுக்காகவும், யாருக்காகவும் காத்திருப்பதில்லை. கடந்து விட்ட காலங்கள் திரும்ப கிடைப்பதுமில்லை. கிடைத்து விட்ட காலத்தை எல்லோரும் சரியாய் பயன்படுத்துவதுமில்லை!

பிரியா, குட்டி ஆதித்யாவை புல்வெளியில நடத்தி கொண்டிருந்தாள். பிஞ்சு பாதங்கள், புல்லின் தலையில் பட்டபோதெல்லாம், புற்கள் மடங்கி எழுவது, அந்த குட்டி அர்ஜுனுக்கு வணக்கம் சொல்வது போலிருந்தது.

பால் பற்களில், பளீர் சிரிப்பைக் காட்டி சந்தோசமாய் துள்ளி விளையாடும் ஆதித்யாவை இமைக்காமல் பார்த்தபடி நின்றாள் பிரியா.

யாரோ தோள் தொடும் உணர்வில் திரும்பியவள் சலீமாவைக் கண்டதும் , பரவசத்துடன் பார்த்தாள்.

“எப்படி இருக்கே சலீமா…?” உன்னை நான் எதிர்பார்க்கவே இல்லை.

"நல்லா இருக்கேன் பிரியா. நான் கேள்விபட்டதெல்லாம் உண்மையா…? இது அத்தைக்குத் தெரியுமா…? படபடப்பாய் கேட்டவளை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள் பிரியா!

“என்ன கேள்விப்பட்டே சலீமா~” விஷமமாய் சிரித்தபடி கேட்டாள் பிரியா.

" நம்ம ராணுவத்தில் சேர, இளம்விதவைகள் சிலபேர் முழுமனசோட “திகாரி அமைப்புல” சேர்ந்திருக்காங்களே அதுல, முதல் பெயரா மிசஸ் பிரியா அர்ஜுன் இருக்கிறதா அறிஞ்சேன்."

அதிரடி படையிலிருந்து, தீயணைப்பு படைவரை, பெண்கள் பிரகாசமா முன்னுக்கு வந்திட்டாங்க. தீபம் ஏத்தற கைகள் தான் தீவினைகளைப் பெருக்கும் தீவிரவாதத்தையே அழிக்க போறாங்க. இதுல, நான் ஒண்ணும் பெரிசா சாதிக்கலை சலீமா!”

"அர்ஜுனையும் இழந்திட்டே, இப்போ நீ இந்த தியாகத்தை……” வார்த்தை வராமல் கண்களில் நீர் மின்ன நின்றாள் சலீமா!

“ஏய்….என்ன இது..? தியாகத்தின் திருவுருவத்தில், நீங்கதான் முதலிடமோ…? மிசஸ் சலீமா ஷமீர்.

திடுக்கிட்டு நிமிர்ந்தாள் சலீமா.

அத்தைக்கு உடம்பு சரியில்லேன்னு, என்னைக்கு ஆஸ்பிட்டல் வந்தேனோ..? அன்னைக்கே டாக்டர் ஜவஹர் சொல்லிட்டார். மிஸ்டர் ஹரிகுப்தாவுக்கு கிட்னி டொனேட் பண்ண போறதே நீதான்னு!”

“சலீமா ஈஸ் கிரேட்! உன்னால ஆனதை திருநாட்டுக்குச் செஞ்சிருக்கே. உன்னால தான் ஹரிகுப்தா இன்னைக்கும் பாரதத்துக்குத் தொண்டு செய்ற பணியிலே இருக்கார்.”

“ஏன் சலீமா, உன்னோட இந்த தியாகத்தை என்கிட்ட பகிர்ந்துக்க கூட உனக்கு இஷ்டமில்லையா….?

“நோ…..இல்லை பிரியா. உன்கிட்ட சொன்னா, இது அன்வர் காதுக்கு நிச்சயம் போகும். அன்வரோ..,, ரொம்ப படிப்பு அறிவு இல்லாத என் உம்மா, வாப்பாவோ இதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டாங்க பிரியா.

""ஷமீர் போனபிறகு தனிமரமா இருந்த எனக்கு, ஹரிகுப்தா என்கிற ஒரு சகோதரன் கிடைச்சிட்டார். அது போதும் எனக்கு!”

சின்ன அழுகையோடு சொன்ன அவளை அணைத்து கொண்டாள் பிரியா!

ஆதித்யா புரியாது சிரித்தான்.

வாழ்க்கை என்கிற சதுரங்கத்தின் இறுதிபுள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மனித மந்தைகள் தானே நாம்!” என்ன சலீமா?

“அர்ஜுன் கொடுத்த சுகமான சுமையை இறக்கி வச்சிட்டேன். இனி அவன், இன்னொரு அர்ஜுனா வரப்போறவரைக்கும் நான் காத்திருக்க விரும்பல”.

“அதனால, நானே ஆயுதக்களம் இறங்கிட்டேன். சொல்லி, திரும்பியவள் அத்தை புனிதாவை பார்த்ததும் அவள் கால் தொட்டு வணங்கினாள்.

“என்னை ஆசீர்வதித்து அனுப்புங்க அத்தை”.

சொன்ன பிரியாவை முடிக்க விடாமல் அணைத்து கொண்டாள் புனிதா.

“பல்லாண்டு காலமாக முதுமை வளர, எட்டாத தூரத்தில் விண்மீனாய் மினுமினுத்து வாழ்வதை காட்டிலும் ஒருகணம் ஊரெங்கும் உன்னத ஒளிபாய்ச்சி மறுகணம் மறைந்துவிடும் மின்னலாய் வாழ ஆசைப்படுவேன்”

அர்ஜுனின் டைரியில் என்றோ படித்தது ஞாபகம் வந்தது பிரியாவுக்கு!

***************

குமரி உத்ரா

கன்னியாகுமரி

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...