நோய்

காதல்
5 out of 5 (389 रेटिंग्स)
कहानी को शेयर करें

இன்னும் சற்று நேரம் நின்றால் இந்த வெப்பம் உள் உறுப்புகளை வேக வைத்து விடுமோ என்று என்னும் அளவு கொதித்தது கோடை. அப்படி ஒரு மதியத்தில் பொன்னுரங்கம் அந்தக் கடை தெருவில் ஒவ்வொரு கடையாய் உற்று [பார்த்து அலைந்து கொண்டிருந்தார்.

பொன்னுரங்கம் அடுத்த ஆண்டு ஓய்வு பெறப் போகும் குமாஸ்தா. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. மாதக் கடைசியில் அருகில் இருப்பவரிடம் கை மாத்து வாங்கும் நடுத்தர வர்க்கம். தாமதமான திருமணம், மகனும் மகளும் பள்ளி மாணவர்கள். மகன் பிளஸ் ஒன். மகள் ஒன்பதாம் வகுப்பு. இழுத்து பிடித்து சென்று கொண்டிருந்த வாழ்வில் திடீர் சோதனையாய் அவரது மனைவிக்கு கருப்பை புற்றுநோய். பரிசோதனையின் முடிவு தெரிந்ததும் நிலை குலைந்து போனார். ஒரு வழியாய் உடைந்து அமர்வதல்ல... குணப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கையே தீர்வு எனும் தெளிவுக்கு வந்தார். பிள்ளைகளிடம் முதலில் கூறவில்லை. மனைவிக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும். மனைவி சுமதி இவர் அளவு உடையவில்லை. ஏனெனில் சுமதி தன் காலம் முடியப் போவதாய் நம்பத் தொடங்கி விட்டாள். அதனால் அடுத்து தம் காலத்திற்கு பிறகு பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையில் மூழ்கிப் போனாள். தனக்கான செலவுகளைக் குறைத்து பிள்ளைகளுக்கு சேர்த்து வையுங்கள் என்று கணவரிடம் போராடினார்.

பொன்னுரங்கத்திற்கு சுமதியின் இந்த தைரியமும், அவநம்பிக்கையும் கலந்த முரண்பாடு மேலும் பயம் தந்தது. பெண்கள் எந்த நிலையையும் சமாளிக்க உடனே மன வலு பெற்று விடுகிறார்கள். அல்லது ஏற்றுக்கொள்ள துணிந்து விடுகிறார்கள். ஆண்கள்தான் வெலவெலத்துப் போகிறோம். மருத்துவத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயிற்று. ஆரம்ப பரிசோதனைகளுக்கே சில பல ஆயிரங்களில் செலவு. கொஞ்ச நஞ்ச சேமிப்பும் தீர.. அடுத்த கட்டத்திற்கு அரசாங்க மருத்துவமனையை நாடினர்.

சில மருந்து மாத்திரைகளுக்கு பிறகு சிகிச்சை முற்றிலும் இலவசமாக நடந்தாலும் தொடர் கீமோ சிகிச்சையினால் மிக சோர்வும், அதிக வாந்தியுமாய் துவண்டு போனார் சுமதி.பிள்ளைகள் அம்மாவிற்கு ஏதோ உடல் கோளாறு என்பது புரிந்து விசாரிக்க தொடங்கியதும் வேறு வழி இன்றி உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று. மகளை சாமாதானப்படுத்தத்தான் பெரும்பாடாயிற்று. ஒரு வழியாய் அனைவருக்கும் சிக்கல் புரிந்து அதற்கேற்ப தங்கள் பணிகளை பகிர்ந்து கொண்டனர். ஆனாலும் பிள்ளைகளின் படிப்பு பாழாகாமல் காக்க வேண்டிய கடமையும் பொன்னுரங்கத்திற்கு இருந்தது.

எனவே இரண்டு மாதம் விடுப்பு எடுத்து மனைவியை கவனிக்க முடிவு செய்தார். ஆனால் அந்த இரண்டு மாதமும் சம்பளம் வராது. மருத்துவத்திற்கு செலவில்லாவிடினும் மருத்துவமனைக்கு செல்லும் போக்குவரத்திற்கே தினமும் ஆட்டோ அல்லது டாக்ஸி வைக்க வேண்டும். அதற்கே தினமும் சில நூறுகள் வேண்டும். அது போக வீட்டு வாடகை, செலவு, பிள்ளைகள் படிப்பு என நொறுங்கிப் போனார்.

அப்போதுதான் எதை விடவும் தற்போது சுமதியின் உடல் குணமாவதும், பிள்ளைகள் படிப்பு நல்லபடியாய் முடிவதும் தான் முக்கியம் என்று முடிவுக்கு வந்தார். எப்படியும் அடுத்த ஆண்டு ஓய்வு பெறப் போகிறோம் இந்த ஆண்டே எழுதிக் கொடுத்தால் ஓய்வூதியமாய் கொஞ்சம் பணமும், ப்ரவிடென்ட் பன்ட் பணமும் கைக்கு வரும், அதை கொண்டு முதலில் சுமதியை குணப்படுத்துவோம். பிள்ளைகளுக்கு பள்ளிப் படிப்புக்கு தேவையான பணத்தை ஒதுக்கி வைப்போம். மேற்கொண்டு என்ன வேலை செய்வது என மற்ற விஷயங்களை யோசித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார். அலுவலகத்தில் எழுதியும் கொடுத்து விட்டார். ஆனால் பணம் கைக்கு வர சில மாதங்கள் ஆகும் என்றனர்.

தினப்படி செலவும், அக்கம் பக்கக் கடன்களும் கூடிக் கொண்டே இருந்தன. அப்போதுதான் தன் நண்பன் சுகுமாரனின் நினைவு வந்தது பொன்னுரங்கத்திற்கு. சுகுமாரன் பொன்னுரங்கத்துடன் வேலை பார்த்தவர் பத்தாண்டுகளுக்கு முன்பு. நெருங்கின நட்புதான். அனால் இந்த சொற்ப சம்பளத்திற்கு தொடர்ந்து மாரடிக்க அவர் தயாராயில்லை. அவர் மனைவியும் . எனவே பூர்வீக சொத்துக்களில் சிலதை விற்று தொழில் தொடங்குவதாக மேட்டுப்பாளையம் போய் விட்டார். அதன் பின் சில ஆண்டுகள் தொடர்பில் இருந்தார். பின்னர் அழைக்கும் போதெல்லாம் அவர் தொழில் அமோகமாக போவதும், தொழில் சம்பந்தமாய் பிஸி ஆகவே இருப்பதுமாக சொல்லவும் அழைப்புகளை பொன்னுரங்கம் குறைத்துக் கொண்டார். நாளடைவில் அழைப்பே இல்லாமல் ஆகி விட்டது. தற்போது அவர் நினைவு வரவும் 'சுகுமார் கிட்ட கொஞ்சம் உதவி கேட்கறேன். ஆபீஸ்ல இருந்து பணம் வந்ததும் கொடுத்துடலாம்' என்றார் சுமதியிடம்.

'அடுத்த வாரம் பிள்ளைகளுக்கு பீஸ் கட்டணும். ரெண்டு பேருக்கும் சேர்த்து இருபத்து அஞ்சாயிரம் தேவை. அதை மட்டுமாவது கேட்டு பாருங்க' என்றாள் சுமதி. தனக்கு மருந்து வாங்க வேண்டும், குணமாக வேண்டும் என்பது பற்றி எப்போதாவது அவள் சிந்திப்பாளா! என வியந்தார் பொன்னுரங்கம். குடும்பமும், குழந்தைகளும் தான் தன் மொத்த வாழ்வு என்று வாழ்கிறாள். தன்னைப் பற்றி அவள் கவலைப்படுவதில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. 'தன்னைப் பற்றிக் கவலைப் பட கணவர் இருக்கிறார். அவர் கை விட மாட்டார் என்ற நம்பிக்கை எல்லா பெண்களுக்கும் இருக்கும், அந்த நம்பிக்கையை நான்தான் காப்பாற்ற வேண்டும்'. என்று நினைத்துக் கொண்டார். சுகுமாரனின் எண்ணைத் தேடி அலைபேசியில் அழைத்தார். இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என்றது. வேறு எண்கள் ஏதாவது இருக்கிறதா என்று தேடினார். அப்படி எதுவும் இல்லை என்று அவருக்கும் தெரியும். ஆனாலும் பதட்டமும், சூழலும் மனிதர்களை ஏதாவது தீர்வு இருக்குமா என தேடத் தான் வைக்கின்றன. அது எண்ணோ, மனிதர்களோ, பணமோ கடைசி சரண் அதுவே என முடிவு வரும்போது எந்த தேடுதலுக்கும் போக வேண்டியதுதான்.

'நான் அவங்க ஊர் வரைக்கும் போயிடு வந்துரட்டுமா?'

'அட்ரஸ் தெரியுமா எங்கேன்னு போய் தேடுவீங்க? இதுவரைக்கும் ஒரு முறை கூட நீங்க போனதில்லையே!?'

'ஊரு மேட்டுப்பாளையம்னு தெரியும். துணிக் கடைதானே ! அவர் மகன் உதய் பேர்லதான் ஆரம்பிச்சாப்ல. உதய் டெக்ஸ்டைல்ஸ். மேட்டுப்பாளையம் மகாதேவபுரம், உதய் டெக்ஸ்டைல்ஸ்னு தேடினா கிடைக்காமலா போகும், சின்ன ஊருதானே அது!?'

'நாளைக்கு விடியக்காலைல கிளம்பறேன். மதியத்துக்குள்ள தேடிருவேன். பேசி பார்த்துட்டு நிலைமையை சொல்லி கொஞ்சம் பணம் வாங்கறேன். ரெண்டு மாசத்துல தந்துடலாம். வட்டி கிட்டி கேட்டாக் கூட பரவால்ல . தந்துருவோம். கேட்க மாட்டார்தான். ஆனாலும் நாம அதுக்கும் தயாராவே போவோம். ஆனா கண்டிப்பா மறுக்க மாட்டார். நம்பிக்கை இருக்கு.'

பேசிக்கொண்டே சுமதியை பார்த்தவர் அவள் தூங்கி விட்டதை அறிந்தார். பாவமாய் இருந்தது. வீட்டில் அத்தனை வேலைகளையும் ஒற்றை ஆளாய் செய்தவள். இது நாள் வரை சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்குமே தவிர, சிக்கனமாய் குடும்பம் நடத்தி தன்னை பெரும் கடன்காரனாகாமல் காத்தவள். ஒரு நாள் கூட தனக்கு ஏதாவது வேண்டுமென்று நச்சரிக்காதவள். இவளுக்கு இந்த நோய் வந்துருக்கக் கூடாது. நோயை விட சிகிச்சை அவளை மேலும் சோர்வுற வைத்திருந்தது. ஆனால் மருந்து கசக்கத்தான் செய்யும். அதற்கு முடைபட்டால் நோய் தீராது என்பதை அறிவார் . பெருமூச்சுடன் படுக்கையில் சாய்ந்தார்.

விடியற்காலை கிளம்பி விட்டார். ' பார்த்து போங்க' என்றாள் சுமதி. மகனும், மகளும் அன்றைய வேலைகளை பகிர்ந்து கொண்டனர். பணம் இல்லாவிடினும் புரிதல் உள்ள பிள்ளைகள், மனைவி என.. தான் அதிர்ஷசாலிதான் என அந்த நிலையிலும் லேசாய் கர்வப்பட்டுக் கொண்டார் பொன்னுரங்கம்.

மேட்டுப்பாளையத்தில் மகாதேவபுரத்தில் கடைவீதிகளில்தான் தற்போது ஒவ்வொரு கடை பெயர் பலகையாய் பார்த்து அலைந்து கொண்டிருந்தார். 'உதய கிருஷ்ணா' என்ற கடையை பார்த்ததும் 'ஒருவேளை மகனது முழுப் பெயர் உதய க்ரிஷ்ணாவாக இருக்குமோ' என்ற ஐயம் வந்தது. உள்ளே நுழைந்தார். ஒரு வட இந்தியர் கல்லாவில் அமர்ந்திருந்தார்.

'வாங்கோ வாங்கோ என்ன வேணும்? டேய் சாருக்கு என்ன வேணும் கேளு' என்று கடையில் பணி புரியும் சிறுவனை ஏவினார்.

'இங்க சுகுமாரன்னு ... ' தயக்கத்துடன் இழுத்தார் பொன்னுரங்கம்

'சுகுமார்? அப்டி யாரும் வேலை செய்யல '

'இல்ல இல்ல சுகுமார்னு யாராவது கடை வச்சுருக்காங்களா ? அவர் மகன் கூட உதய் தான் '

'தெரியாது' என்றார் ஒற்றைச் சொல்லாய். நுகர்வோர் அல்லாதவருக்கு வியாபாரிகளிடம் மதிப்பபேதும் இருப்பதில்லை. அவர்கள் வியாபாரிகள். அவர்களது ஒரே நோக்கம் விற்பனைதான்.

'சாரி' என்று தளர்வாய் வெளியேறினார்

வெயில் வேறு கொளுத்தியது. காலையில் இருந்து சாப்பிடாமல் பசி ஒரு பக்கம் வயிற்றை இழுத்தது. ஒரு டீயாவது குடிக்கலாம் என டீக்கடை பேக்கரி ஒன்றில் ஏறி அமர்ந்தார். 'ஒரு டீ '

டீ சொல்லி விட்டு அமர்ந்திருந்த சில நிமிடங்களில் அவர் மனம் கடந்த காலங்களுக்கு சென்று திரும்பியது. நாம யாருக்கு என்ன கஷ்டம் தந்தோம். வேலை உண்டு வீடு உண்டுன்னு இருந்தோம். இன்னும் சில வருஷம்தான். புள்ளைங்க படிச்சு ஒரு வேலைக்கு போயிருவாங்க .இந்த ஓட்டத்தில் இருந்து கொஞ்சம் சாய்ந்துக்கலாம் னு ஒரு கணக்கு போட்டோம். கடவுள் வேறு ஒரு கணக்கு போட்ருக்கார்.இத்தனை சுமையையும், மன அழுத்தத்தையும் தான் எவ்வாறு தாங்குகிறோம் என்று அவருக்கே வியப்பாய் இருந்தது.

டீ வந்தது. குடித்து விட்டு வெளியே வந்தார். திரும்ப கடை கடையாய் படித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். போன் நம்பர் இல்லை, அட்ரஸ் இல்லை. இப்படி பைத்தியக்காரன் போல இந்த வாழ்க்கை தன்னை தெருத்தெருவாக அலைய வைத்து விட்டதே என்று சுய இரக்கமாய் இருந்தது. கண் கலங்கியது. கண்ணாடியை மறைத்தது. எடுத்து துடைத்து போட்டுக் கொண்டு திரும்ப நடக்கத் தொடங்கினார்.

மாலை 4 மணி வரை நடந்து சலித்தார் . கடை வீதி தவிர சின்ன சின்ன சந்து பொந்துகள் கூட அலைந்தார். நடுவே சுமதிக்கு போன் செய்து 'மருந்து சாப்டியா?' என விசாரித்தார்.

'நீங்க கடையை கண்டுபிடிச்சீங்களா'

'தேடிட்டு இருக்கேன் . இங்கதான் இருக்கும். பிடிச்சிரலாம்'

'வெயிலா இருக்கே! எங்காவது கொஞ்ச நேரம் உக்காருங்க. சாப்டீங்களா?'

'டி குடிச்சேன். பசிக்கல ' பசி உள்ளே உறுமல் சப்தம் தந்தது

'மொதல்ல சாப்பிடுங்க. அப்பறம் தேடலாம்'

'சரிம்மா ' நான் அப்பறம் பேசறேன் சார்ஜ் குறைவாதான் இருக்கு. ராத்திரி வீடு வரும் வரை வேணும்ல ' என்று அழைப்பை துண்டித்தார்

ஒரு மர நிழலில் நின்று பெருமூச்சு விட்டார். கால்கள் கெஞ்சின. நாய் பிழைப்பு. இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக் கூடாது என்று நினைத்துக் கொண்டே யதார்த்தமாய் நிமிர்ந்தவர் கண்களில் எதிரில் இருந்த ஒரு உயர்தர உணவகத்திற்குள் சுகுமாரன் நுழைவது பட்டது.

வேக வேகமாய் சாலையைக் கடந்து அந்த உணவகத்திற்குள் நுழைந்தார். அவரது உருவத்திற்கும் அந்த உணவகத்திற்கும் ஏழாம் பொருத்தமாய் இருந்தது. அது அவரை லேசாய் குறுகச் செய்தது. அதை மீறி தன் தேவையும், தேடுதலும் கிடைத்து விட்ட மகிழ்வில் சுகுமாரனைத் தேடினார். அதோ அங்கே இருக்கிறார். கிட்டத்தட்ட ஓடினார்.

சுகுமாரன் அருகில் சென்றதும் ஒரு கணம் என்ன சொல்லி அழைப்பது என்ற தயக்கம் வந்தது. அருகே சென்று நின்று கொண்டு 'என்னைத் தெரியுதா?' என்றார்.

நிமிர்ந்து பார்த்த சுகுமாரன் சற்றே உற்று நோக்கி விட்டு ...' ஹேய்ய்ய் பொன்னுரங்கம் எப்படி இருக்கீங்க ?'

' நல்லா இருக்கேன். நீங்க?' என்று தயங்கினார்

'உக்காருங்க ஏன் நிக்கறீங்க?' என்ற சுகுமாரனின் முன் அமர்ந்தார்

அதற்குள் அங்கு வந்த சிப்பதியிடம் ஒரு நிமிஷம் என்று விட்டு 'என்ன சாப்படறீங்க?’ என்றார் சுகுமாரன் பொன்னுரங்கத்திடம் .

ஹோட்டல் சிப்பந்தி பொன்னுரங்கத்தின் பொருந்தா தோற்றத்தை கண்டு ஏளனமாய் [பார்ப்பது போல் தோன்றியது பொன்னுரங்கத்திற்கு. எல்லாம் தன் பிரமை என்று சமாதானம் செய்து கொண்டார்.

'இல்ல அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க சாப்பிடுங்க '

'அட! சும்மா இருங்க. ரெண்டு மீல்ஸ்' என்றார் சுகுமாரன்

பொன்னுரங்கம் சுகுமாரனை ஏறிட்டார்.

செழுமையாய் இருந்தார் சுகுமாரன். கை விரல்களிலும், கழுத்திலும் தங்கம் மின்னியது. உயர்தர ஆடைகள், கண்ணாடி என பார்த்ததுமே எவரும் மதிக்கும் தோற்ற மிடுக்கு வந்திருந்தது. தன்னை ஒப்பிட்டுக் கொண்டார் மனதில். கசங்கிய சட்டையும், பேண்ட்டும், பழைய பவர் போன கண் கண்ணாடி, கவலைகளாலும், சிக்கல்களாலும் துவண்டு போன மனமும், உடலும் .

சரி இப்போது அது முக்கியமில்லை. எதற்கென்றே தெரியாமல் ஒரு இளிப்பு இளித்தார்.

'அப்பறம் எப்படி இருக்கீங்க. வீட்ல மனைவி குழந்தைங்க எல்லாம் நலமா ? ரொம்ப டல்லா இருக்கீங்களே? என்ன மேட்டுப்பாளையம் வரை. என்னை ஒரு வார்த்தை கூப்பிட்டு இருக்கலாம்ல. மறந்துடீங்களா என்னை எல்லாம்?'

சுகுமாரனின் விசாரிப்பும், உரிமையும் பொன்னுரங்கத்திற்கு நம்பிக்கை அளித்தது

'இல்ல இல்ல உங்கள பாக்கத்தான் வந்ததே! உங்க நம்பர் மாறிடுச்சு போல. கடையைத் தேடி அலைஞ்சுட்டு இருந்தேன் . இப்போ கடை இங்க இல்லையா?'

'ஒ! அப்படியா? கடை கொஞ்சம் பெரிய அளவில் கோவைல மாத்தியாச்சு. இங்க இப்போ வீடு மட்டும்தான். என்ன விஷயம்? ஏதும் விஷேஷம் வச்சுருக்கீங்களா! சொந்த வீடு கட்டி கிரஹப்ரவேச அழைப்பு ஏதாவதா! இவ்ளோ தூரம் என்னைத் தேடி வந்திருக்கீங்கன்னா ஏதும் விஷயம் இருக்கும்ல ?'

'ம். விஷயம் இருக்கு ஆனா அவ்ளோ நல்ல விஷயம் இல்லை. மனைவிக்கு கேன்சர் . ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கோம் '.

' கேன்சரா ! ரொம்ப கஷ்டமாச்சே ! எங்க கேன்சர்?'

'கர்பப்பைல'

'நிறைய செலவாகும்ல ? அந்த ஆபீஸ் சம்பளத்துல எப்படி சமாளிக்கறீங்க?'

'ஆமா செலவு இருக்கு. அரசாங்க மருத்துவமனை தான். ஆனாலும் செலவுகள் இருக்கு. பசங்க படிப்பு வேற. பார்த்துக்க ஆள் இல்லைனு நான் வாலன்டியர் ரிட்டையர்மெண்ட் எடுத்துட்டேன்'

'வாட் !? நீங்க வீட்ல உக்காந்து என்ன பண்ண போறீங்க? முட்டாள்தனம் பொன்னுரங்கம்'

லேசாய் துணுக்குற்றவராய் 'வேற வழி என்ன இருக்கு?' யார் பார்த்துப்பாங்க. சுமதியால கொஞ்ச நேரம் கூட எழுந்து நிக்க முடில'. கொஞ்ச நாள் தான். குணமானதும் சரி ஆயிடுவா . அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிதான் ஆகணும்'

'பொன்னுரங்கம் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. கேன்சர்லாம் முழுக்க குணமாகிறது ரொம்ப அபூர்வம். அப்படியே ஒரு இடத்தில குணமானாலும் இன்னொரு இடத்தில வரும். இது நானா சொல்லல, பலரை பாத்துருக்கேன். பணமும், பொருளும் வீணடிச்சிட்டு, கடைசில உயிரிழப்பும் நடந்து வருந்துவாங்க.'

பொன்னுரங்கம் என்ன சொல்வதென சங்கடமாய் பார்த்தார் 'இல்ல சுமதியோட பரிசோதனை முடிவுகள் முன்னேற்றம் இருக்குனு தான் சொல்லுது'

'அது சரி. ஆனா கடைசி முடிவு எப்படினு தெரியாதுல்ல. இப்போ நீங்க வேலை விட்டுட்டு வருமானம் விட்டுட்டு அவங்களுக்காக இருக்கீங்க சந்தோஷம். ஆனா இதெல்லாம் உங்க தற்போதைய நிலைக்கு ரிஸ்க் இல்லையா?' வேலைய விட்டுட்டு என்ன பண்ண போறீங்க?' 'இன்னும் உங்க பசங்க ஸ்கூல் கூட தாண்டலை . இன்னும் அவங்க கல்லூரி , அப்பறம் மேற்படிப்பு இருக்கு. இப்போ நீங்க விருப்ப ஓய்வு எடுக்காம விட்டா உங்க ஓய்வு காலத்துக்குப் பின்ன கூட தேவைன்னா வேலையை நீடிச்சுக்கலாம். இது ஒன்னும் அரசு வேலை இல்லை. அதனால உங்க அனுபவத்துக்குக்கு உங்களை நீட்டிச்சுக்க வாய்ப்பு இருக்கு. யோசிங்க'

'ம்ம்ம் '

'தேவை இல்லாம உங்க நிலையையும் மோசமாக்கி உங்க பிள்ளைங்க எதிர்காலத்தையும் சிரமமாக்காதீங்க. முடிஞ்சவரை அரசாங்க மருத்துவ மனையில பாக்கறீங்க அது போதும். மேலும் மேலும் அவங்களை கூடவே இருந்து கவனிக்கனும்னு எல்லாம் பழக்கப்படுத்தாதீங்க. நான்லாம் வீட்டுக்கே சரியாய் போறதில்ல. வியாபாரத்தை விட்டுட்டு வீட்ல உக்காந்து இருந்தா பொழப்பு என்ன ஆகிறது?'

'சரி சொல்லுங்க என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க?'

'அது...'

'இவ்ளோ பிரச்சனைகளையும் தலைல எடுத்து போட்டுட்டு இருக்கீங்க! இன்னும் நிலைமையை மோசமாக்கி வைக்கறீங்க பொன்னுரங்கம். உங்கள கொஞ்சம் பாருங்க . எப்படி ஆயிட்டிங்கன்னு . இப்போவே 70 வயசு மாதிரி இருக்கீங்க.எதையுமே சரியா பேலன்ஸ் பண்ண தெரில உங்களுக்கு.'

அதற்குள் சாப்பாடு வந்தது

'சரி சாப்பிடுங்க. என்ன உதவி வேணும் உங்களுக்கு? பணம் ஏதும் வேணுமா?'

'இல்ல வேண்டாம். நான் கிளம்பறேன். நேரமாச்சு'

'சாப்பிடுங்க முதல்ல'

'இல்ல வேண்டாம்'

'என்னாச்சு? ஏன் வேண்டாம்?' உங்க மனைவி ஞாபகம் வந்துருச்சா ஒழுங்கா சாப்பிடறது கூட இல்லையா? ஒன்னு புரிஞ்சுக்கோங்க பொன்னுரங்கம். அந்த நோய் எல்லாம் முழுக்க குணமாகாது. அதனால அதுக்கு உங்க மனசை தயார் பண்ணிக்கோங்க. வேலைல திரும்ப சேர முடியுமான்னு பாருங்க. இப்போதைக்கு பண உதவி வேணும்னா நான் பண்றேன். ஆனா இதுக்காக கடனாளி ஆகிறது அர்த்தம் இல்லாதது'

'சுகுமார், என் மனைவியோட நோய் ஒருவேளை குணமாகலாம். ஆகாம போனாலும் நான் கடைசி வரை அவளுக்காக இருந்தேன்னு திருப்தி எனக்கு இருக்கும். ராத்திரி நான் தூங்கறப்போ என் மனசாட்சி உறுத்தாம என்னால தூங்க முடியும். ஆனா உங்களுக்கு ஒரு நோய் இருக்கு. பணத்தால் வெற்றி பெறாத யாரையும் மதிக்காம , மனிதர்களோட உணர்வுகளுக்கு மதிப்பு தராம இயந்திரமா நினைக்கற நோய். அது குணமாக வாய்ப்பே இல்லை னு நினைக்கறேன். உங்களை பார்த்துக்கோங்க.'

எழுந்து அவசரமாய் ஹோட்டலை விட்டு வெளி வந்தார்.

இருட்ட தொடங்கிய போது வீடடைந்தார். மனம் எண்ணற்ற குழப்பமும் சோர்வும் கொண்டிருந்தது. ‘ஒரு வைராக்யத்தில் பணம் வேண்டாம்னு சொல்லிட்டோம். இப்போ சுமதிக்கு என்ன பதில் சொல்றது, பீஸ் கட்ட குழந்தைகளுக்கு என்ன தீர்வு!'

யோசனையாய் படி ஏறியவரிடம் ஒரு தபாலைக் கொண்டு வந்து தந்தாள் மகள். கேள்வியோடு ஏறிட்டவரிடம் சுமதி உங்க பி.எப் .சாங்க்ஷன் ஆயிடிச்சாம். லெட்டர் வந்துருக்கு. ஆபீஸ்ல இருந்து நம் நிலையைச் சொல்லி சீக்கிரம் முடிக்க அழுத்தம் தந்துருப்பாங்க போல என்றாள் . இந்த செய்தியே அவளை தெம்பாக்கி இருந்தது போல் தோன்றியது.

கடிதத்தை பிரித்து படிக்கப் படிக்க கண்ணீர் மல்கியது பொன்னுரங்கத்திற்கு. மனைவியை பார்த்தார். 'உன்னை மீட்டுருவேன் சுமதி. கை விட்ற மாட்டேன்' என மனதிற்குள் சொல்லிக் கொண்டபடியே அவளை அணைத்து தலை கோதினார் .சுமதி 'பணம் வந்ததும் முதல்ல பீஸ் கட்டிடலாம்ல' என்றாள். பொன்னுரங்கம் சிரித்துக் கொண்டார்.

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...