பார்வை

andalarugan
பெண்மையக் கதைகள்
5 out of 5 (61 रेटिंग्स)
कहानी को शेयर करें

‘குக்கு குக்கு தாத்தா தாத்தா களவேட்டி! குக்கூ குக்கூ.’ என்ற பாடலுக்கு பதினாங்கு வயது பரணி ஆடிக்கொண்டு இருக்க,

“எஞ்சாயி, எஞ்சாமி! வாங்கோ வாங்கோ ஒன்னாகி!” என்ற வரி வரும் பொழுது தொலைக்காட்சியின் அலறலோடு தன்னுடைய தொண்டையின் வீரியத்தையும் சேர்த்து தனது வீட்டின் சிறிய கூடத்தை மேடையாக்கி கத்திகொண்டிருந்தான் பொடியன்.

பாட்டுக்கு தக்கபடி ஆடிக்கொண்டிருந்தவனின் மண்டையில் ‘நொட்’டென்று கொட்டு வைத்தாள் காத்யாயினி கதிரவன்.

“ஹராத்து! மணிய பாரு டா. காலங்காத்தால ஒப்பாரி பாட்ட ஃபுல் வால்யூம் வச்சுகிட்டு மண்டைய மண்டைய ஆட்டுறத பாரு. போடா போய் ஸ்கூலுக்கு கிளம்பு” என்று மகனை திட்டியபடியே நின்றவளை

‘கூஊஊஊ’ என்ற குக்கர் விசில் அழைத்ததும்

“ஐயையோ! எத்தன விசில் வந்ததுனு தெரியலையே. சாதம் கொழஞ்சு போயிருக்கும். சீக்கிரம் கிளம்பு எரும மாடே!” என்று புதல்வனை வர்ணித்தபடியே அந்த இரட்டைப் படுக்கையறை குடியிருப்பின் சின்ன சமையல்கட்டிற்கு விரைந்தாள் காத்யாயினி.

மனைவியின் குரல் மூன்றாவது மாடியிலிருந்து கீழ்தளம் வரைக்கும் கேட்க முகத்தில் ஒரு புன்னகையுடன் கையில் அறிவியல் பாடத்திற்கான மாதிரியை ஏந்தியபடி மெதுவாய் ஏறி வந்தான் கதிரவன்.

'லிஃப்ட எப்ப தான் சரி பண்ணப்போறாங்களோ! மேயின்டனன்சும் ரெண்டாயிரம் அதிகமா கொடுத்தாச்சு!' என்று நினைத்தபடியே தனது மூன்றாவது மாடி வீட்டிற்கு படி ஏறினான்.

“மம்மி! போங்க மா! இது தான் இப்ப ட்ரெண்டிங்க் சாங்க மா. இயற்கை எல்லாருக்கும் சொந்தம். இப்ப இருக்க டெத் ஆஃப் ஈகுவாலிடிக்கு தான் இந்த ஒப்பாரி! அப்பா சொன்னாரே கேக்கல” என்று தாய்க்கு விளக்கமளித்த மகனை பெருமையுடன் பார்த்தபடி உள்ளே வந்த கதிரவன்,

“அப்படி சொல்லு என் சிங்கக்குட்டி! காமான் டா”

“எஞ்சாயீ எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி!” என்று தந்தை மகன் இருவரும் மீண்டும் ஆட்டம் ஆட, மடிப்பு கலையாமல் கட்டியிருந்த கஞ்சியிட்ட பருத்திப் புடவையை இழுத்துச் சொருகியபடி அங்கே வந்த காத்தாயினி

“ஐயோ! என்ன தான் இருந்தாலும் அது ஒப்பாரி தான். காலங்காத்தால.. இது வேற!” என்று தொலைக்காட்சியை அணைத்தவள் “என்ன கதிர் நீங்களும் அவன் கூட சேர்ந்துக்கிட்டு மணிய பாருங்க ஏழறை!” என்றவளிடம்

“நமக்கு தான் எப்பவும் ஏழறையாச்சே அம்மா!” என்று ‘கவுன்ட்டர்’ கொடுத்த மகன் புறம் திரும்பி முறைக்க முயன்று தோற்றாள் காத்யாயினி. அவள் சிரித்தவுடன்

“ஹே அப்பா அம்மா சிரிச்சுட்டாங்க! ஹே!” என்று துள்ளிய மகனின் தோளில் கைப்போட்டு

“சரி சரி அம்மா சிரிச்சது இருக்கட்டும் உண்மையிலேயே நேரமாச்சு, உன்ன ஸ்கூல்ல விட்டுட்டு அம்மா காலேஜ்க்கு போகனும். நான் இன்னைக்கு விட முடியாது, இந்த மாடல டேலிவர் பண்ணனும். ம்ம் சீக்கிரம் ரெடியாகு” என்று மகனை கிளம்பச் சொன்ன கதிர்வன் அவன் சென்ற பின்

“ஒப்பாரியா இருந்தா என்ன கனி? எல்லாமே நம்ம பார்க்குற பார்வையில தானே இருக்குனு நீ தானே சொல்லுவ? எஞ்சாயி எஞ்சாமி” என்று மனைவியின் புறம் திரும்பி பேச்சில் தொடங்கி பாடலில் முடித்தவன் லேசாக அவள் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட அதில் ‘க்ளுக்’ என்று சிரித்தவளை ரசித்தபடியே

“உனக்கு முப்பத்தி ஒன்பது வயசுனா யாரும் நம்ப மாட்டாங்க! என்றான்.

“உங்களுக்கு மட்டும் நாற்பது வயசு மாதிரியா தெரியிது? சரி சரி இப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிட்டு இருந்தா நான் இன்னைக்கி காலேஜ்க்கு போனா மாதிரி தான். ம்ம்.. கிளம்புங்க” என்று இப்பொழுது கணவனை விரட்டிவிட்டு காலை சிற்றுண்டி வேலையைப் பார்க்கச் சென்றாள் காத்யாயினி.

அதன் பின் மின்னல் வேகத்தில் கணவன் மனைவி பிள்ளை மூவரும் தயாராகி காலை உணவை அவசர அவசரமாக உண்டபடியே சில பல பேச்சுக்களும் தொடர

“விடியல் போன் பண்ணாளா நேத்து நைட்டு?” என்று லண்டனில் பாரம்பரிய மிக்க பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும் தனது மூத்த மகளைப்பற்றி கேட்டான். ‘ஆர்ட் அண்ட் தி ஆர்டிஸ்ட்’ என்ற சிறிய கடையில் ஸ்கூல் பிள்ளைகளுக்கான கலை மட்டும் அறிவியல் மாடல் செய்து தருவதை தொழிலாக வைத்திருந்தான் கதிரவன். அன்று சர்வதேச பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பள்ளியில் சமர்ப்பிக்க ஒரு முக்கியமான அறிவியல் மாதிரியை செய்வதில் இரவு முழுவதும் விழித்திருந்ததால் அன்று காலை தான் வீட்டிற்கு வந்தான். விடியல் தினமும் இரவு காணொலி அழைப்பு செய்வாள். நேற்று மகளிடம் பேசியதை சொல்லிவிட்டு அவசர அவசரமாக மகனையும் அழைத்துக்கொண்டு தனது வெஸ்பாவில் பறந்தாள் காத்யாயினி.

கல்லூரிக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தாள் காத்யாயினி. உபயம்: சென்னை போக்குவரத்து நெரிசல்! அதுவும் மகனை அடையாரில் அவன் படிக்கும் பள்ளியில் விட்டுவிட்டுச் சென்றலுக்கு தன்னுடைய கல்லூரிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்ததே பெரிது.

‘ஸ்டுடென்ட்ஸ் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்களே’ என்று நினைத்துக் கொண்டே உள்ளே போனவளை கல்லூரி முதல்வரின் குரல் தடுத்தது.

“கேத்தி! பரவாயில்ல மெதுவா போ. கதிர் மெசேஜ் எனக்கு கிடச்சுது” என்றவரிடம் நிம்மதியாய் ஒரு புன்னகை சிந்திவிட்டு அவரின் புரிதலை மத்தித்து இன்னும் வேகமாக நடந்தாள்.

அரசு கலைக் கல்லூரியின் அந்த மிகப்பெரிய ஓவியக் கலைக்கூடத்தில் நுழைந்ததும் அங்கே இருந்த மாணவ மாணவிகள் அவளைக் கண்டதும் மரியாதையாய் ஒரு புன்னகை சிந்த, அங்கே மேடையில் இருந்த ஒரு நடுத்தர வயது ஆண்.

“ஹேல்லோ மேம்!” என்றார்.

“சாரி சர்! நீங்க போங்க நான் ஸ்டார்ட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு

“சாரி கைஸ்” என்று மாணவர்களிடம் திரும்பியவளை சில பல மாணவர்களின் குரல்,

“நோ இஸ்யுஷ் மேம்!” என்றது.

அவசர அவசரமாய் கலைக்கூடத்தைத் தாண்டி உள்ளே இருக்கும் சிறிய அறைக்குச் சென்றவள், கசங்காமல் தனது கஞ்சியிட்ட பருத்திப் புடவையை கலையலானாள்! சேலை ஊக்குகளை பத்திரமாய் வைத்தவள் சேலையையும் மற்றவைகளையும் மடித்து வைத்துவிட்டு, தன்னுடைய லாக்கரிலிருந்து மேல் அங்கியை எடுத்து அணிந்து கொண்டு சென்றவள், கூடத்தின் மத்தியில் தனக்கு போடப்பட்டிருந்த சிறு மேடையில் இருக்கும் இடத்தில் நேற்று எப்படிப் படுத்திருந்தாளோ அதே நிலையில் சயனித்தாள். மேல் அங்கியை கழட்டியவுடன்

அவள் சிலையானதும், அங்கே மயான அமைதி சூழ மாணவ மாணவிகளின் பார்வை அவள் மேல் படர அங்கே கலையன்னை மட்டுமே ஆதிக்கம் செலுத்தினாள். ஒவ்வொரு மாணவர் முன்னாலும் நின்ற ‘ஈசிலில்’ இருந்த வெள்ளைத்தாள்களில் காத்யாயினியின் வடிவங்கள் கருப்புக் கரியிலும், வர்ண ஜாலங்களிலும் என அவரவர்களுக்கு ஏற்றது போல் உருவானது!

இரண்டு மணி நேரம் கழித்து அந்த நடுத்தர வயது ஆண் உள்ளே வந்து,

“கைஸ், லெட்ஸ் டேக் அ ப்ரேக்” என்றார்.

எழுந்து மேல் அங்கியை மட்டும் அணிந்து கொண்டு அங்கேயே அமர்ந்த காத்யாயினியிடம் அந்த ஆண் வந்து ஒரு தேநீர் குவளையை நீட்டி

“என்ன கேத்தி பரணிய ஸ்கூல்ல விட்டுட்டு வந்தியா?” என்றான்.

“ஆமாம் ராகவா! செம்ம ட்ராஃபிக்” என்றாள்.

“கதிர்கிட்ட சொல்லு நான் நாளைக்கி வரேன்னு. ஒரு நாலஞ்சு ஸ்கூல் ப்ராஜெக்ட்ஸ் வந்திருக்கு. ஆனா நீ கொடுத்த ஐடியா சூப்பர்! ஸ்கூல் ப்ராஜெக்ட் எல்லாம் பசங்க கத்துக்கறதுக்கு கொடுக்குறாங்க, இங்கே ஒன்னு பேரன்ட்ஸ் செய்யிறாங்க இல்ல எவ்வளவு செலவு ஆனாலும் பெஸ்டா இருக்கணும்னு எங்கள மாதிரி வெளி ஆளுங்ககிட்ட கொடுத்து செய்யறாங்க. எது எப்படியோ நமக்கு நல்ல வருமானம். கதிர் நெனச்ச மாதிரி சீக்கிரம் ஒரு ஆர்ட் கேலரியும் ஓபன் பண்ணிடலாம்” என்ற நண்பனைப் பார்த்து சிரித்தவளிடம்,

“நீ இங்க மாடலா கன்டினியூ பண்ணனுமா கேத்தி? பிள்ளைங்க வளருராங்க!” என்று சொன்னவனை அமைதியான ஒரு புன்னகையுடன் பார்த்தவள்

“கண்டிப்பா ராகவா! இதுல என்ன இருக்கு? என் பசங்களுக்கும் கணவருக்கும் என்னுடைய வேலை என்னனு தெரியும்! அவங்களுக்கு அதுல எந்தப் பிரச்சனையுமில்ல. ஏன் நான் பதினேழு வயசுல மாடலா இங்க வந்த போது தான் கதிரையே மீட் பண்ணேன். மத்த இடத்துல நான் படிச்ச ப்ளஸ் டூக்கு கிடச்ச வேலையில் சம்பளத்த விட, அங்க இருந்த சபல பார்வை தான் ஜாஸ்தி. இங்க நான் வந்து சேர்ந்தப்புறம் தான் பார்வைகள் மாறிச்சு. அம்மாவையும் சின்ன தம்பியையும் இந்த வேலையால தான் என்னால நல்லபடியா வச்சுக்க முடிஞ்சது. கதிர் வீட்ல வந்த ப்ரச்சனைனால கதிரும் நானும் அந்த சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் அம்மா சொல்லி இந்த வேலைய கொஞ்ச நாள் விட்டிருந்தேன். எவ்வளவு கஷ்ட்டப்பாட்டாரு! ஒரே வருஷத்துல விடியல் வேற பொறந்துட்டா! எங்கள பாத்துக்க கிடைக்கிற செட் டிடசையின் வேலை எல்லாம் செஞ்சார், அப்படியே அவருடைய படிப்பும் பார்த்தார். தம்பிய கதிர் தான் படிக்க வச்சாரு, இப்ப அவன் யுஎஸ்ல நல்லபடியா இருக்கான். தம்பி படிப்புக்கு வாங்குன லோன்ன தான் தான் கட்டுவேன்னு பிடிவாதமா இப்ப வரைக்கும் கதிர் தான் கட்டுறாரு. இப்ப அவுங்க அம்மா அப்பா எங்கள ஏத்துக்கிட்டதுக்கு அப்புறம் ஊர்ல இருக்குற அவுங்களையும் கவணிக்கனும். விடியல், பரணி பிறந்த பின்ன பாவம் அவரும் எவ்வளவு தான் சினிமால வர செட் டிசைன் ஆர்டிஸ்ட் காசுல சமாளிப்பார்? என்ன தான் திறமையும் ஆற்றலும் இருந்தாலும் சினிமால பெரிய ஆளா வர வருஷங்கள் எடுக்கும்! குடும்பம் பிள்ளைங்கன்னு அவர் சமாளிக்க கஷட்டப்படும் பொழுது நான் எப்படி சும்மா இருக்க? தவிற சினிமால கிடைக்கிற மரியாத. சர்ச்சை..! அதுக்கு நானே ராஜா நானே மந்திரினு அவர் இப்ப சொந்தமா கடை வச்சு சந்தோஷமா இருக்காரு. இருந்தாலும் இப்ப விடியலுக்கு செலவு, பரணி படிப்பு, வீடு ஈ எம் ஐ எல்லாம் இருக்குல? தவிர இது தான் எனக்கு தெரிஞ்ச மரியாதையான இடம்! எனக்கும் ஒரு ஃபைனான்ஷியல் இண்டிபெண்டன்ஸ் தரதுக்கு ஒரு நல்ல வேலை. கதிர் உன் இஷ்டம்னு சொன்னதுக்கு அப்புறம் வேற என்ன?” என்று பேசிக் கொண்டிருந்த தோழியின் கண்களை மட்டுமே பார்த்து சிரித்தவன்.

“சரி உன் இஷ்டம் தான்! ஆமாம் விடியல் எப்படி இருக்கா?” என்றான்.

“ம்ம் நல்லா இருக்கா. கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிச்சு ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தா. நீட் கோச்சிங்கும் நம்ம ஸ்கூல்ல கொடுத்தாங்க அதுலையும் நல்ல மார்க், ஆனா ஒரு வருஷம் வெயிட் பண்ணி பீமட் யூகாட் எல்லாம் ட்ரை பண்ணி லண்டன்ல சேர்ந்துட்டா. கவர்ன்மென்டும் நம்ம ஸ்கூல்ஸ ப்ரோமொட் பண்ணலாம்னு கொஞ்சம் ஸ்காலர்ஷிப் கொடுக்குது. கதிர் லோங்கட்ட தான் காசு வாங்க மாட்டரு, என் அக்க பொண்ணுக்கு நான் செய்றேன்னு தம்பியும் முடிஞ்சபோது எல்லாம் செய்றான். நம்ம ப்ரோடியூசர் ரவி கொஞ்சம் படிப்பு செலவு ஸ்பான்சர் பண்றாரு ஆனா லண்டன் விலைவாசிக்கு பாவம் புள்ள அங்க செர்வரா பார்ட் டைம் பாக்குற. நாங்க அனுப்புற காசும் கொஞ்சம் தானே! இங்க பரணி ப்ரைவேட் ஸ்கூல்ல படிக்கிறான் அவன் செலவும் இருக்கு. ஆனா பய ப்ளஸ் ஒன், ப்ளச் டூ கவர்மென்ட் ஸ்கூல் தான் சேரப் போறானாம்!” என்று அவர்கள் பேச்சு தொடர சிறிய இடைவேளைக்குப் பின் ஒரு சில மாணவர்கள் வந்தனர், காத்யாயினியும் தனது இடத்திற்குச் சென்றாள். அந்த நாள் இனிதாய் கழிய, வீட்டிற்குச் செல்ல அவள் வண்டியை எடுக்கையில் தான் கவனித்தாள் டையர் பஞ்சர் என்று.

ராகவிற்கு அங்கே சிற்ப கூடத்தில் வேலையிருக்க ‘சரி, பஸ்ல போக வேண்டியது தான்' என்று நினைத்துக்கொண்டு நின்றவளை அங்கே இருந்த மாணவக்கூட்டம் ஒன்று,

“மேம்! என்ன பஞ்சரா?”

“மேம் நாங்க ரிபேர்க் கொடுக்கறோம். வீட்ல பரணி வந்துருப்பான் நீங்க போங்க”

“மேம் வாங்க நான் ப்ரீத்தி கிட்ட இருந்து வண்டி வாங்கி உங்கள ட்ராப் பண்றேன்”

“மேம் சார்க்கு மெச்சேஜ் பண்ணிடுங்க” என்று அவரவர் அவளை ஆராதிக்க, மாணவன் ஒருவன் வண்டியில் அவளை விட வந்தான்.

வீட்டிற்கு இரண்டு நிறுத்தங்களுக்கு முன்னரே இறங்கிக் கொண்டவள், அங்கே புதிதாய் திறந்திருந்த ‘ஹைப்பர்’ மார்க்கெட்டிற்குள் பரணிக்கும் கதிரின் கடைக்கும் தேவையான சிலவற்றை வாங்கச் சென்றாள்.

“என்ன பரணி மம்மி! ட்ராப் யாரோ பண்றாங்க பிக் அப் பரணி அப்பா பண்ணுவாரா?” என்ற குரலில் திரும்பியவளை இரு கண்கள் ஏளனமாய் பார்த்தபடியே பேசின.

பரணி வகுப்பு தோழனின் தாய், உடன் அவளது கணவன். அவன் கண்கள் காத்யாயினியின் கண்களைத் தவிர மற்ற இடங்களில் உலாவிக் கொண்டிருந்தன. சேலையின் முந்தியை அனிச்சையாய் இழுத்தபடியே, அந்தப் பெண்மணியை மீண்டும் பார்த்த காத்யாயினிக்கு நன்கு புரிந்தது அந்த குரலின் ஏளனம்! அவள் என்றும் தன்னுடைய தொழிலை மறைத்ததில்லை.

“ம்ம்ம் ஆமாம்! இவன் என் ஸ்டுடென்ட், பரணி அப்பா பிக்க அப் பண்ணுவாரு. நீங்க எப்படி இருக்கீங்க ரோஹித் அம்மா?”

“ம்ம்ம் நல்லா இருக்கேன்” என்று இழுத்த அந்தப் பெண் அடுத்து பேசும் முன்

“அப்போ ரோஹித் அப்பாக்கு தான் கண் பார்வை சரியில்லையோ?” என்று பட்டென்று சொல்ல,

“இல்லையே! நல்லா..” என்று திரும்பி அவள் கணவனை சட்டென்று பார்த்தவள், அவனின் பார்வை காத்யாயினின் இடுப்பில் படர்ந்திருப்பதை கண்டுகொண்டாள். அவள் கணவன் மாட்டிக்கொண்டான் என்று தெரிந்ததும், நக்காளாய் சிரித்தபடி காத்யாயினி,

“இல்ல பாவம் கண்ணு அவருக்கு எங்கையோ நட்டுக்கிட்டு நிக்கிது. அதான் கேட்டேன். அவர் பார்வை சரியில்லனா வேற யாரையாவது உங்கள ட்ராப் பண்ண சொல்றேன். பை!” என்று சொன்னவள் அங்கே நிற்காமல் வாங்கிய பொருட்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு கிடைத்த பேருந்தில் ஏறினாள். கதிரவனுக்கு அழைக்க வேண்டும் என்று தோன்றாமல், பொங்கிய சினத்தில் அங்கே இருந்து போக வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் பேருந்து ஏறியிருந்தாள்.

பேருந்து ஓட்டிய கனவானுக்கு என்ன பிரச்சினையோ அந்த குறுகிய சாலையில் வளைத்து நெளித்து ஓட்டியவரின் வேகத்திற்கு புயலில் சிக்கிய கப்பலில் பயணிப்பது போல் இருந்தது காத்யாயினிக்கு! கையில் இருந்த பைகளுடன் சரியாக நிற்க முடியாமல் தடுமாற, மேல உள்ள கம்பியை பிடிப்பதற்கு வலக்கையை தூக்கியவுடன், அவளின் சேலை முந்தானை லேசாக கீழே இறங்கியது.

ஒரு சில மணித்துளிகளில், காத்யாயினி ஏதோ அசௌகரியமாக உணர்ந்தாள்! பெண்களுக்கே உரிய உள்ளுணர்வு ஊந்த திரும்பிப் பார்த்தவள், எதிரே நின்ற ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆணின் பார்வை அவள் மார்பில் நிலைத்திருக்க, டக்கென்று பிடித்திருந்த கம்பியை விட்டவள் அருவருப்புடன் சேலையை சரி செய்தாள்.

“ச்சை! பார்குற பார்வையப் பாரு? பர்வெர்ட்!” என்று திட்டியவளை அங்கே அமர்ந்திருந்த ஒரு கிழவி

“ஆம்பளைங்களே இப்படித் தான் மா. நாம தான் சரியா உடுத்திக்கனும்! இல்லன்னா இப்படித்தான் வயசு வித்தியாசமில்லாம பார்ப்பானுங்க!” என்ற கிழவியின் மீது தான் காத்யாயினிக்கு அதீத கோபம் வந்தது.

“ஒன்னுமே போடலனா கூட ஒரு பொம்பள கண்ணப்பார்த்து தான் பேசணும்னு உங்க ஆம்பிளைங்களுக்கு சொல்லுங்க. அதவிட்டுட்டு சும்மா!” என்றவள் அவள் நிறுத்தம் வருவதை கவனித்து அவசர அவசரமாய் இறங்கி, கோபமாய் நடந்தாள்.

ஆடையில்லாமல் அவள் இருந்த பொழுது உணராத அருவருப்பை, புடைவை கட்டி முழுதாய் தன் மேனியை மறைத்து நின்ற பொழுது உணர்ந்தது தான் விந்தையாய் இருந்தது அவளுக்கு.

தன் போக்கில் அவளது குடியிருப்பை அடைந்தவள், இன்னும் சரி செய்யப்படாத மின் தூக்கியை

“ம்ம்ச்ச்” என்று பார்த்து சளித்தபடியே படிகளில் ஏறினாள்.

“இங்க ஃப்லாட் அஸோசியேஷன் பண்ண வேண்டிய வேலைய நாம தான் பண்ணனும் போல. பத்து நாள வேலை செய்யல்ல” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு ஏறியவள், முதலாவது தளத்தைக் கடக்கும் பொழுது

“கதிர் வைஃப் பண்ற வேளை தெரியும் தானே? உங்களுக்கு எங்க தெரிய போகுது, போன வாரம் தானே வந்தீங்க? நேக்கட் மாடல்! கேட்டா ஆர்ட்டாம்! ஹ்ம்ம்ம் சரி சரி அதெல்லம் இப்ப எதுக்கு? நம்ம அஸோசியேஷன் பிரச்சினைக்கு வருவோம். மூனாவது மாடில கதிர் அண்ட் காத்யாயினி ஃபேமிலி தான் இருக்காங்க. அவங்களுக்குத் தான் லிஃப்ட் முக்கியம். ரெண்டாவது ஒன்னாவது ஃப்ளார் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். அதனால ரிப்பேர் சார்ஜஸ்ல அட்லீஸ்ட் நாற்பது பர்சென்ட் அவங்க கொடுக்கட்டும். அதான் பொண்ணு லண்டன்ல படிச்சுக்கிட்டே சம்பாதிக்கிது, அம்மா இங்க நல்லா சம்பாதிக்கிறாங்களே” என்று ஏளமாய் பேசியது ஒரு பெண்ணின் குரல்!

தெள்ளத் தெளிவாய் கேட்ட வார்த்தைகள் பார்வையால் அடிபட்ட மனதை சோர்வையால் தாக்க அவளின் நடை இன்னும் மெதுவாய் ஆனது.

அலுப்பாய் உணர்ந்தபடி வீட்டுக் கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள் முன் கமகமக்கும் காப்பிக் குவளையை நீட்டினான் அவளது கணவன் கதிரவன்.

எப்பொழுது தன் வேலையை பெருமையாகவே நினைக்கும் தனது மனைவி அவ்வப்பொழுது சமூகத்தின் கண்ணடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் தன் மனதை இரையாக்கிவிட்டு இப்படி சோர்வில் தத்தளிப்பாள் என்று அறிந்தவனாயிற்றே!

'எனக்கு வேலைக்குப் போகணும். நம்ம செலவும் கொஞ்சம் பார்க்கலாம், தவிர எனக்குனு ஒரு இண்டிபெண்டன்ஸ் இருக்கும்' என்று ஒரு நாள் கூறியவளிடம்

'உன் இஷடம்! எனக்கு எந்த பிரச்சனையுமில்ல ஆனா தைரியமா இருக்கணும், கூட நான் இருக்கேன்' என்று சொன்னவன், அதே போல் உடன் இருந்தான், இருக்கின்றான்!

இப்படி அவள் சில தருணங்கள் சமூகத்தின் மூர்க்கமாக பார்வைகளை நினைத்து வருந்துகையில் அவள் முகம் பார்த்து சரியாகக் கணித்து அவளை தேற்றுவது அவன் இயல்பாய் செய்வது!

கணவனின் அன்பிலும், காப்பியின் புத்துணர்ச்சியிலும் புத்துயிர் பெற்றவள்

“இந்த சொஸைட்டியோட பார்வைய மாத்தவே முடியாது இல்ல கதிர்! ச்சை..!” என்று சொல்லியவள் கீழே அந்த பெண்மணி பேசியதைச் சொன்னாள். அதைக் கேட்ட கதிர்

“பாவம் அந்தம்மா புருஷன் பக்கத்து தெருல இன்னொரு வீடு வச்சுருக்கறது அவுங்க பார்வைக்கு தெரியல போல! வசதியா அப்ப மட்டும் கண்ணமூடிப்பாங்க போல! நீ என்ன வேலை செய்யிறன்னு மட்டும் தான் தெரியிது ! நாளைக்கு நானே அவுங்க கண்ண திறந்து விடுறேன்! அதுக்கு அப்புறம் லிஃப்ட்க்கு முழு காசையும் அவுங்களே கொடுப்பாங்க! அவுங்க வாயையும் பூட்டிக்குவாங்க!” என்றவனை கண்கள் விரியப்பார்த்தவள்.

“ஹ ஹ ஹ கதிர் நீங்க இருக்கீங்களே” என்று அலுப்பு மறந்து சிரித்தவள் முன் வந்து நின்றான் பரணி.

“அம்மா ஆஆஆ! இன்னைக்கி என் ஸ்கூல் கேர்ள்ஸ், என் ஸ்கூல்ல இருக்க விமென் டீச்சர்ஸ் எல்லாம் எனக்கு ஃபேன்ஸ் ஆகிட்டாங்க” என்று குதித்த மகனின் உற்சாகத்தில் அவள் சளிப்பு தூரப் போக,

“ஹே அப்படி என்ன செஞ்ச?” என்று பரணியையும், கதிரையும் மாறி மாறிப் பார்க்க, கதிரின் முகத்திலும் பெருமை.

“அதுவா! எங்க ஸ்கூல்ல அடுத்தவாரம் கார்னிவல் வைக்கிறாங்க! ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் கலர் ட்ரெஸ்ல வரலாம்னு பிரின்சிபால் சொன்னார். பாய்ஸுக்கு எல்லாம் ட்ரெஸ் கோட் பத்திப் பேசாம கேர்ள்ஸுக்கு மட்டும் ஒன்லி சல்வார், இல்ல புடவ. நோ ஜீன்ஸ், நோ லெக்கின்ஸ்னு சொன்னாரு. நான் அவரு பேசி முடிச்சத்துக்கு அப்புறம், ‘சர் வித் ஆல் யு ரெஸ்பெக்ட்! ட்ரெஸ் கோட் கொடுத்தா கேர்ள்ஸ் பாயிஸ் ரெண்டு ஜெண்டருக்கும் கொடுங்க! இப்படி கேர்ள்ஸ மட்டும் சொல்லக் கூடாது. பெண்களுடைய ஆடைய குறை சொல்றத விட்டுட்டு ஆண்களுடைய பார்வைய சரி பண்ணுங்க. ஆண் சொல்லிக் கொடுத்த பார்வையில் பார்க்குற பெண்களின் பார்வைய திருத்துங்க, பெண் என்ன அணிந்திருக்கானு நீ பார்க்காத! அவ கண்ண பார்த்து மட்டும் பேசுனு எங்க அம்மா எனக்கு சொல்வாங்க! இந்த கட்டுப்பாடுகள் ஜெண்டர் பயாச இன்னும் தான் ஜாஸ்தியாக்குது சார்!’ அப்படினு நான் சொன்னவுடனே எங்க ஸ்கூள் கேர்ள்ஸ் எல்லாம் செம்ம கைதட்டு மா! ப்ரின்சிபால் என்னை தனியா கூப்பிட்டு பேசினாரு. என்ன பாராட்டினார்! ஆனா அதே சமயம் ஃபார்மல் வியர், அத கேர்ள்ஸ் பாயிஸ் ரெண்டு பேரும் பின்பற்றணும்னு சொன்னார்!” என்று சொன்ன மகனின் வார்த்தைகளின் காத்யாயினி தெம்புற்றாள்.

அறையின் உள்ளே இருந்த மேசை கணினியின் ஓசை கேட்க

“ஹே அக்கா கால் நான் எடுக்குறேன்” என்று ஓடினான் சின்னவன்.

மகன் சென்ற திசையை பார்த்தபடி கதிரவன் மனைவியின் தோளைத் தொட்டான்,

“இப்ப இருக்க சமூகத்தோட பார்வை மாத்துறது முக்கியமில்ல அடுத்து வர சமூகத்தோட பார்வைய செதுக்குறது தான் முக்கியம்! நாம் அத அழகா செதுக்கிட்டு இருக்கோம்!” என்ற கணவனை மெல்லத் திரும்பிப் பார்த்தவளின் பார்வை அலுத்து கலைந்து தெளிச்சி தெளித்திருந்தது!

தோளில் இருந்தவன் கை மேல் அவள் கைவைத்து நிம்மதியாய் புன்னகைத்தபடியே, பின்னால் சுவரில் மாட்டியிருந்த அவளது சித்திரத்தின் மேல் படிந்தது. முதல் முதலில் அவன் அவளை வரைந்த ஓவியம்! அமைதியாய் அந்த தருணத்தை ரசித்து அமர்ந்திருந்தவளின் செவிகளில்

‘குக்கூ குக்கூ..’ என்ற பாடல் மீண்டும் கேட்க

கணவனை முறேத்தாள் காத்யாயினி

“ஹா ஹா ஹா! நான் தான் சொன்னேனே! எல்லாம் நம்ம பார்க்குற பார்வையில தான் இருக்கு! எஞ்சாய் கனி! உள்ள வா! அந்த பக்கம் வீடியோல விடியலும் டான்ஸ் தான் ஆடிகிட்டு இருப்பா!” என்று மனைவியின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான் கதிரவன்.

அங்கே கணினித்திரையில் மகள் ஆட, இங்கே தமக்கையின் ஆட்டத்திற்கு ஏற்றது போல் தம்பியும் ஆட, தாம் பெற்ற மக்களுடன் கணவன் மனைவி இருவரும் இணைந்தனர்.

“எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி” என்று அவளும் பாடியபடியே

அவள் இருக்கும் பார்வை மறித்த சமூகத்திற்கு இரங்கல் தெரிவித்துவிட்டு, புதிய சமூகத்தின் விடியலுக்கு பரணி பாடினாள் காத்யாயினி!

முற்றும்

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...