JUNE 10th - JULY 10th
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இலக்க வேகத்தில் காற்றைக் கிழித்தபடி விரைந்து கொண்டிருந்தது அந்த ஸ்கார்பியோ.
“கார ஒரு ஓரமா நிப்பாட்டுங்க மச்சான், மிச்சமிருக்குற சரக்க காலி பண்ணிட்டு போவோம்” என்று முருகன் சொல்லவும் அதற்காகவே காத்திருந்தவர் போல சாலையோர மர நிழலில் வாகனத்தை நிறுத்தினார் பாண்டித்துரை.
“டேய் நாம என்ன டூராடா போய்க்கிட்டு இருக்கோம்? அங்கங்க நிப்பாட்டி தண்ணிய போட்டுக்கிட்டு இருக்கீங்க?” என்றார் முத்தையா.
“என்னண்ணே இப்படி சொல்லிட்ட? நம்ம புள்ளய ஒருத்தன் தூக்கிட்டு போயிருக்கான், அவன வெட்டிசாய்க்குற வெறி கொஞ்சம் கூட கொறஞ்சுற கூடாதுன்னுதான் சரக்க போட்டுக்கிட்டு இருக்கோம்” என்றார் பாண்டித்துரை.
மதுரை மாவட்டம் மேலக்குறிச்சிதான் முத்தையாவின் ஊர். சாதிவெறி அடங்காத தமிழகத்தின் சிலபல ஊர்களுள் மேலக்குறிச்சியும் ஒன்று. இன்னும் இரண்டு நாட்களில் மகள் செண்பகத்திற்கு நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த சூழலில், இன்று காலை முத்தையாவின் மனைவி செல்லம்மாள், “ஏங்க சீக்கிரமா வாங்க., இந்த சிறுக்கி என்ன பண்ணி வச்சுருக்கான்னு பாருங்க” என்று கத்தியபடி, தன்னுடன் பணிபுரியும் ஒருவனை காதலிப்பதாகவும் அவனையே திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செண்பகம் எழுதிய கடிதத்தை காட்டினாள்.
“செண்பகம் வேல பாக்குற கம்பெனில விசாரிச்சாச்சு மச்சான், அந்தப் பொறுக்கியும் அவளும் காலேஜ்ல இருந்து ஃப்ரண்டாம், நம்மதான் சின்னப்பொண்ணுன்னு நெனச்சுட்டோம்” என்றான் செல்லம்மாளின் தம்பி முருகன்.
“வீட்டுலதானடி இருக்குற, புள்ள என்ன பண்ணுது, யாரு கூட பேசுதுன்னு கூட கவனிக்கமாட்டியா?” என்றபடி செல்லம்மாளின் கன்னத்தில் அறைந்தார் முத்தையா.
“எனக்கு என்ன தெரியும்? எப்பப்பாத்தாலும் போன நோண்டிக்கிட்டு சிரிச்சுக்கிட்டு கெடப்பா, என்னன்னு கேட்டா ஆபிஸ் வேலன்னு சொல்லி மளுப்பிருவா” அழுதுகொண்டே சுவற்றில் சாய்ந்தாள் செல்லம்மாள்.
“மதினிய ஏம்ணே அடிக்குற? மொதல்ல அவிங்க ரெண்டு பேரும் எங்க இருக்காய்ங்கன்னு கண்டுபிடிச்சு அந்த பொறுக்கிப்பய கைய கால முறிச்சு வுடணும்னே” என்றார் முத்தையாவின் தம்பி பாண்டித்துரை.
“அந்தப்பய பேரு செல்வமாம், ஊரு திருவாரூர் மொனஞ்சிப்பட்டியாம். அந்த ஊருல எந்த சாதி மெஜாரிட்டின்னு தெரியுமா மச்சான்?” என்றபடி சாதிப்பெயரை சொன்னான் முருகன்.
“அய்யோ இந்த கூறுகெட்ட சிறுக்கிக்கு போயும் போயும் அந்த சாதிப்பயலயா புடிச்சது, எல்லாம் உங்களால… சாதி இல்ல அது இல்லன்னு பேசிபேசி புள்ளைய கெடுத்து வச்சுட்டீங்க” என்று முத்தையாவிடம் புலம்பிய செல்லம்மாள் பாண்டித்துரையிடம் திரும்பி “கொழுந்தன், நீங்க உடனே முருகன கூட்டிட்டு கெளம்புங்க அவங்க ரெண்டு பேரும் எங்க இருந்தாலும் தேடிப்புடிச்சு வெட்டுங்க, கை, காலெல்லாம் வேண்டாம் தலய கொண்டுவாங்க” என்று வெறிபிடித்தவளாய் கத்தினாள்.
“அதுக ரெண்டயும் கல்யாணம் பண்றதுக்குள்ள மடக்கிறனும்ணே, எப்படியும் ரெண்டும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குத்தான் போகும். அங்க நம்ம பயலுவ ரெண்டு பேர நிப்பாட்டி வச்சுருக்கேன், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், ரெயில்வே ஸ்டேஷன்னு எல்லாப் பக்கமும் நம்ம சாதிப்பயலுவகிட்ட பாப்பா போட்டோவ அனுப்பி பாத்தா தகவல் சொல்லச் சொல்லிருக்கேன். கண்டிப்பா இன்னும் கொஞ்சநேரத்துல தகவல் வந்துரும், நாம பொருள எடுத்துக்கிட்டு கிளம்புவோம்ணே” என்றபடி வேட்டியை மடித்துக்கட்டினார் பாண்டித்துரை.
“மச்சான் நீங்க என்னமோ பெரியார் மாதிரி பேசுவீங்களே, கடைசில நம்ம வீட்டுலய கை வச்சுட்டானுங்க பாத்தியளா.. நம்ம புள்ளய தூக்கிட்டு போனவன வகுந்து போட்டுட்டு வந்தாத்தான் அந்தப் பயலுகளுக்கு கொஞ்சமாச்சும் பயம் வரும். இத இப்படியே வுட்டோம்னு வைங்க, நம்ம தெருவுக்குள்ள அவனுங்க காலர தூக்கி வுட்டுட்டு திரிவானுங்க. இப்போ நீங்க வாரீங்களா இல்ல நான் சின்ன மச்சான கூட்டிட்டு கெளம்பட்டுமா?” என்றபடி கத்தியை எடுத்து லுங்கியில் சொருகினான் முருகன்.
ஏதோ யோசனையில் இருந்த முத்தையா , “சரி மாப்ள, நீ சொல்ற படியே செஞ்சுருவோம்” என்று முடிவுக்கு வந்தவராய் வாகனத்தில் ஏறினார்.
“ நம்ம எதுக்க வர்றத பாத்தாலே நடுங்கி ஓரமா போற பயலுவளுக்கு நம்ம வூட்டு புள்ளய தூக்கிட்டு போற அளவுக்கு தைரியம் வந்துருச்சு பாத்தியாடே… முருகா இன்னைக்கு நாம பண்ணப்போற சம்பவம் தரமா இருக்கணும்டே” என்றபடி வாகனத்தை விரட்டத் தொடங்கினார் பாண்டித்துரை.
“இந்தா இருக்குற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய் தாலி கட்டுறத விட்டுட்டு, திருச்செந்தூர் போய்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஏன்டி அடம்புடிக்குற?” சலித்துக்கொண்டான் செல்வம்.
“ம்… மீனாட்சி அம்மன் கோவிலுக்கே போலாமே.. ஆனா அங்க போனா, தாலி கட்டுறதுக்கு உனக்கு கை இருக்காதே, எப்படி கட்டுவ?”
“இருந்தாலும் ரொம்பத்தான்டி பில்டப் குடுக்குற?”
“பில்டப் குடுக்குறேனா? போன வருஷம்தான் எங்க ஊருல ஒரு அக்கா ஓடிப்போச்சுன்னு சொல்லி, அந்த அக்காவ மட்டும் விட்டுட்டு அந்தப் பையன கொன்னு ரெயில்வே டிராக்ல போட்டு விட்டுட்டாங்க. என் மாமனும், சித்தப்பனும் அந்த கொலகாரக்கோஷ்டில முக்கியமானவங்க. இப்போ அவங்க வீட்டுப் பொண்ணே ஓடிப்போயிடுச்சுன்னு தெரிஞ்சா சும்மா இருப்பாங்களா?”
“இதயெல்லாம் ஏன்டி நேத்தே சொல்லல?”
“எதுக்கு நீ எஸ்கேப் ஆகுறதுக்கா? இங்க பாரு என்னைக்கா இருந்தாலும் நாம இந்தப் பிரச்சனைய ஃபேஸ் பண்ணிதான் ஆகணும். எவ்ளோ நாள்தான் இப்படியே இருக்க முடியும் இன்னும் கொஞ்ச நாள் வெய்ட் பண்ணா எனக்கு வேற ஒருத்தனோட கல்யாணமே பண்ணி வச்சுருவாங்க”
“சரி சரி அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, திருச்செந்தூர் போற பஸ் ஃப்ரியாதான் இருக்கு வா உள்ள போய் உக்காருவோம் உங்க ஊருக்காரன் எவனாது பாத்துரப்போறான்” என்றபடி செண்பகத்தின் கையை பிடித்துக்கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்த செல்வம், அருகிலிருந்த தேநீர் கடையில் இருந்த ஒருவன் அவர்களிருவரையும் நோட்டமிடுவதை கவனிக்கவில்லை.
“அண்ணே… ரெண்டு பேரும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுல திருச்செந்தூர் போற பஸ்ல உக்காந்துருக்காங்களாம், பஸ் ஸ்டாண்டுல வச்சே அந்த பயல சம்பவம் பண்ணிட்டு நம்ம புள்ளய கூட்டிட்டு வந்துருவோம்ணே!”
“வேணாம்டா விடு, அவங்க திருச்செந்தூர் போகட்டும், அங்க வச்சு ரெண்டு பேரு கதயவும் முடிச்சுருவோம்” என்றார் முத்தையா.
“அது நம்ம புள்ள மச்சான், அந்த பய கழுத்த மட்டும் அறுத்து போட்டுட்டு செண்பகத்த கூட்டி வந்து நம்ம பயலா பாத்து கட்டி வச்சுருவோம்”
“அவதான் நாமெல்லாம் வேணாம்னு ஓடிப்போயிட்டாளே, இனிமே என்னடா நம்ம புள்ள?ரெண்டு பேரயும் சேத்து முடிச்சுருவோம்” என்றார் முத்தையா சீற்றத்துடன் .
“மச்சான் வண்டிய நேரா திருச்செந்தூர் விடுங்க… அவிங்க ரெண்டு பேரும் போறதுக்கு முன்னாடி நாம அங்க போய் ரெடியா இருக்கணும். இதுவரைக்கும் அந்த முருகனோட சூரசம்ஹாரம் நடந்த கடற்கரையில இன்னைக்கு இந்த முருகனோட சம்ஹாரம் நடக்கப்போவுது” பாண்டித்துரையிடம் கத்தினான் முருகன்.
"மாப்ள… ரொம்ப ஆவேசப்படாதடே.. பொறுமையா இரு, சரியான இடத்த ப்ளான் பண்ணி அவிங்கள வெட்டி சரிக்கணும், அவசரப்பட்டோம்னு வையி, காரியம் கெட்டுப்போயிடும்டே” என்றபடி திருச்செந்தூரை நோக்கி வாகனத்தை விரட்டினார் பாண்டித்துரை.
“ஏன்டி பதட்டமாவே இருக்க… அதான் பத்திரமா திருச்செந்தூர் வந்துட்டோம்ல, இன்னும் டூ அவர்ஸ்ல நமக்கு மேரேஜ் ஆகப்போகுது, ஹேப்பியா இருடி” என்று உற்சாகப்படுத்தினான் செல்வம்.
“சந்தோஷமாத்தான்டா இருக்கு, ஆனா இதுக்கப்புறம் என்னல்லாம் ஆகுமோன்னு நெனைக்கும் போது பயமா இருக்குடா”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, ஆல்ரெடி எல்லா ஏற்பாடும் என் ஃப்ரண்ட்ஸ் பாத்துட்டாங்க, நாம ஸ்டெரெய்ட்டா போய் தாலி கட்டவேண்டியதுதான்” என்றபடி கோவில் நுழைவு வாசலை நோக்கி நடக்கத்தொடங்கினர் இருவரும்.
“டேய் முருகா… அவிங்க நேரா கோவிலுக்குள்ள போறாய்ங்க… வுட்டுற கூடாது மாப்ள… நீ அந்தப் பக்கம் வா, நான் இப்படி வர்றேன், அண்ணே நீ அவிய்ங்க பின்னாலயே மறஞ்சு போ… கோவிலுக்குள்ள போறதுக்குள்ள போட்டாத்தான் உண்டு”
“என்ன மச்சான் பேசுற நீயி.. அவிங்க கல்யாணத்த பாக்குறதுக்கா இம்புட்டு வெறியோட வந்துருக்கோம், அவன் நம்ம புள்ளயோட புருஷனா சாவக்கூடாது மச்சான், நீ அந்தாக்குல வா” என்றபடி இடுப்பில் ‘பொருள்’ உள்ளதா என்பதை கைகளால் உறுதிப்படுத்திக்கொண்டே அவர்களை நெருங்கத்தொடங்கினான் முருகன்.
செல்வத்துடன் நடந்து சென்ற செண்பகம், தனக்கு நூறு மீட்டர் தொலைவில் பாண்டித்துரை நெருங்கி வருவதை கவனித்து விட்டாள். விபரீதம் நெருங்கி விட்டதை உணர்ந்த செண்பகம், படபடக்கும் நெஞ்சுடன், தலையை குனிந்தவாறே “சட்டைய கழட்டு செல்வம்” என்றாள்.
“இப்பவே ஏன்டி? கோவிலுக்குள்ள போனதும் கழட்டிக்கலாம்” என்ற செல்வம் “சீக்கிரம் கழட்டுடா” என்று செண்பகம் உறுமவும், ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்தவனாய் அவனது மேலாடையை கழட்டினான்.
அவர்களிருவரையும் பின்புறமாய் நெருங்கிவிட்ட முருகன், லுங்கியிலிருந்து கத்தியை எடுத்துக் குத்துவதற்காக ஓங்கியபோது கையை, யாரோ தடுத்து நிறுத்தவும், சினத்துடன் திரும்பியவன் முத்தையாவை பார்த்ததும், “என்ன மச்சான்… புள்ள பாசம் தடுக்குதோ?” என்று கையை உதறியவனிடம், “அவன் உடம்ப பாருடா" என்று முத்தையா சொல்லவும்தான் கவனித்தான், செல்வத்தின் உடலில் குறுக்காக ஒரு கயிறு செல்வதை.
சட்டென இருவரும் பாண்டித்துரையை தேடவும், ஏற்கனவே அந்தக் கயிற்றை கவனித்திருந்த பாண்டித்துரை ஒரு மறைவிலிருந்து கடற்கரைக்கு வருமாறு கையை அசைத்துக் காட்டினார்.
“இப்ப என்னண்ணே பண்றது… அந்தப் பய நாம நெனச்ச சாதி இல்ல போலயே!”
“இந்தப்பய பேச்சக்கேட்டு சரியா விசாரிக்காம வந்தோம் பாரு” என்றவாறு முருகனைப் பார்த்து முறைத்தார் முத்தையா.
“எனக்கென்ன மச்சான் தெரியும், நான் அந்தப்பய ஊரப்பத்தி கேள்விப்பட்டதத்தான் சொன்னேன்”
“சரியா விசாரிக்காம நீ ஏம்டா வாய விட்ட… நல்ல வேள நீ சொருகுறதுக்குள்ள அண்ணன் வந்து தடுத்துட்டாரு”
“எப்படின்னாலும் அந்தப்பய நம்ம சாதி இல்லல்ல.. பின்ன என்ன, குத்த வேண்டியதுதான?”
“ஊருக்குள்ள உனக்கு லூசுப்பய- ன்னு கரெக்டாத்தாம்டா பேரு வச்சுருக்காய்ங்க, நம்ம ஊருல பாதிப்பேரு அவிங்க ஆளுங்களோட கம்பெனிலதான்டா வேல பாத்துக்கிட்டு இருக்கோம், இப்போ இந்தப்பய மேல கைய வச்சோம்னு வையி, மொத்த பேரையுப் தொரத்தி விட்டுறுவானுங்க அப்புறம் சோத்துக்கு சிங்கிதான் அடிக்கணும்” என்றார் பாண்டித்துரை.
“டேய் பாண்டித்துர… இதுங்கள கொல்லவும் வேண்டாம், சேத்துக்கவும் வேண்டாம் ரெண்டுமே நமக்கு பிரச்சனதான், அப்படியே விட்டுட்டு போயிடுவோம்” என்று முத்தையா கூறவும் சரிதான் என்பது போல் மூவரும் தங்கள் வாகனத்தை நோக்கி நடந்தனர்.
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு…
திருச்செந்தூர் பேருந்து நிலையத்தின் மறைவான பகுதியில் அழைத்து வந்து சட்டையை கழட்டச் சொன்ன செண்பகத்திடம், “இங்க எதுக்குடி சட்டைய கழட்டச்சொல்ற?” என்றான் செல்வம்.
“சொன்னா கேளுடா… சட்டைய கழட்டிட்டு இத போட்டுக்கோ என்ற படி அந்தக் கயிறை நீட்டினாள் செண்பகம்.
“அய்யோ… இதையெல்லாம் நாங்க போடக்கூடாதுடி, அதெல்லாம் பாவம்” என்ற செல்வத்திடம், “சாதி வெறி புடிச்ச எங்க ஊருக்காரனுங்க கண்டிப்பா நம்மள வாழ விட மாட்டாங்க. எது சொன்னாலும் அவனுங்க மண்டைல ஏறாது. அவனுங்கள ஜெயிக்கணும்னா நாமளும் அந்த பாழாப்போன சாதிய கையில எடுக்கத்தான் வேணும். நமக்கு வேற வழி இல்லடா” என்று கெஞ்சிய செண்பகத்தின் கைகளிலிருந்து அந்தக் கயிற்றை வாங்கி அணிந்தான் செல்வம்.
திருமணம் முடிந்து மகிழ்வோடு ‘திருச்செந்தூர்’ சுப்பிரமணியரை தரிசிக்க சன்னதிக்குள் செல்லும் போது, “ஒரு நூல வச்சு உங்க அப்பாவோட சேத்து மொத்த ஊருக்கும் அல்வா குடுத்துட்டியே, நீ உண்மையிலேயே புத்திசாலிதான்டி” என்று கிசுகிசுத்த செல்வத்திடம், “ரொம்ப புகழாத, மொத்த பிளானும் உன் மாமனாரோடது” என்று தான் செல்வத்தைக் காதலிப்பதாய் முத்தையாவிடம் தெரிவித்தபோது அவர்களை காப்பாற்ற முத்தையா போட்ட திட்டம் இதுவென்பதை விளக்கி முடிக்கவும் அவர்கள் சுப்பிரமணியருக்கு நேரெதிரே வரவும் நேரம் சரியாக இருந்தது.
தன் முன்னே இரு கைகளையும் கூப்பியவாறு நின்றிருந்த அவர்களிருவரும் தன்னை வணங்காமல் மனதிற்குள் முத்தையாவை வணங்குவதை அறிந்த காதல் கடவுளான சுப்பிரமணியர் கோபம் கொள்ளாமல் மகிழ்வுடன் வாழ்த்தினார்.
#621
मौजूदा रैंक
30,250
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 250
एडिटर्स पॉइंट्स : 30,000
5 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (5 रेटिंग्स)
anandhiv93
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
esakkimuthurk
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स