சொப்பு

karthikradhakrishnan4494
பெண்மையக் கதைகள்
5 out of 5 (196 रेटिंग्स)
कहानी को शेयर करें

நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன்.5 மணியளவில் அலாரம் அலற ஆரம்பித்தது. அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் அவரின் தூக்கம் கலைந்துவிடாமல் சட்டென்று எழுந்து அலாரத்தை நிறுத்தினேன். மிகவும் அசதியாக இருந்தது.இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.ஆனால் தூங்க முடியாது.இப்போதே எழுந்து அனைத்து வேலைகளையும் செய்தால் மட்டுமே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி, அவரை வேலைக்கு சரியான நேரத்தில் அனுப்பமுடியும்.சிறிது தாமதம் ஆனாலும் பள்ளி வேன் போய்விடும்.அவர் தான் குழந்தைகளை பள்ளிக்கு கூட்டிச் செல்ல வேண்டும்.கண்டபடி கத்த ஆரம்பித்துவிடுவார்.அவர் சமாதானம் ஆக இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகும்.ஏனோ தெரியவில்லை?கணவன் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்களிடம் சொல்லப்படுவது போல் மனைவி மனம் கோணாமல் நடந்து கொள் என்று ஆண்களிடம் எவரும் சொல்வதில்லை.

ஞாயிறு பொதுவாக அனைவருக்கும் விடுமுறை நாள்.ஆனால் எனக்கு அன்றைக்குத்தான் வெகு வேலை இருக்கும்.எனக்கு மட்டும் அல்ல.எல்லாப் பெண்களுக்கும் அப்படித்தான் இருக்கும்.விதவிதமாக சமைக்க வேண்டும்.அவருக்குப் பிடித்தது, குழந்தைகளுக்குப் பிடித்தது என்று அனைருக்கும் பிடித்ததை சமைத்து சமைத்து எனக்கு என்ன பிடிக்கும் என்பதே மறந்துவிட்டது.பசியில் இருந்தாலும் ஒரு நாளும் முதலில் சாப்பிட்டது இல்லை.அனைவரும் சாப்பிட்ட பின்னரே சாப்பிடமுடியும்.பின் வீடு முழுதும் தூய்மை செய்ய வேண்டும். மாவு அரைத்து வைக்கவேண்டும்.துணிமணிகளை துவைத்து எடுத்து அயர்ன் செய்து வைக்கவேண்டும்.வாரத்திற்கு தேவையான காய்கறிகள் வாங்கி வர வேண்டும்.பாத்திரங்கள் கழுவி அடுக்கும் போது முதுகு வலி தாங்கமுடியாது.டாய்லெட்டை ஆசிட் ஊற்றி நன்கு கழுவி விட வேண்டும்.இது அனைத்தும் பெண்கள் தான் செய்ய வேண்டும் என எந்த சாசனத்தில் எழுதி உள்ளது எனத் தெரியவில்லை. அசதியில் சற்று படுத்தால் உடனே அவர்,”பேசாம பெண்ணா பொறந்துருக்கலாம்”என்று நக்கல் பேசுவார்.”பொண்ணா பொறந்து பாருங்க,அப்ப தெரியும் கஷ்டம்” என்று சொல்ல வாய் துடிக்கும்.ஆனாலும் எதையும் எதிர்த்து பேசிட முடியாது..

வேலைக்குப் போவதென்றாலும் இல்லையென்றாலும் சமையல் மற்றும் வீட்டு வேலைகளை நான் மட்டுமே செய்ய வேண்டும்.கல்யாணம் ஆன புதுதில் வேலைக்குப் போலாம் என்று முடிவெடுத்து அவரிடமும் அவர் பெற்றோரிடமும் சம்மதம் வாங்குவதற்குள் போதும் என்று ஆகிவிட்டது.எனக்காக என் பெற்றோர் பட்ட கடனை அடைப்பதற்காக வேலைக்குச் சென்றேன்.மாதச் சம்பளம் வாங்கும் நாளன்று ஏதோ என்னிடம் கொடுத்து வைத்தது போல் முழு சம்பளத்தையும் வாங்கிக் கொள்வார்.சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து சேர்த்து என் அப்பாவிற்கு கொடுத்தால் என் அப்பா பணத்தை வாங்கமாட்டார்.ஏனென்று கேட்டால் “பொண்ணு கையால வாங்கித் தின்றான் பாரு” என்று அனைவரும் கேவலமாக பேசுவார்கள் என்று சொல்வார்.அப்படி பேசுபவர்கள் கண்டிப்பாக மாப்பிள்ளை வீட்டாராகத்தான் இருக்க வேண்டும். பெண் பிள்ளையைப் பெற்றால் அவர்களை வளர்த்து, படிக்க வைத்து கல்யாணம் செய்து வைப்பது இது மட்டுமே பெற்றோரின் கடமை.ஆனால் பெண் பிள்ளைகள் சம்பாதிக்கும் பணத்தை தொட மாப்பிள்ளை வீட்டாருக்கு மட்டுமே உரிமை உண்டு.தன் அப்பா அம்மாக்களை கடைசி காலத்தில் தங்கள் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ளும் உரிமை கூட பெண்களுக்கு இல்லை.

வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது வேலை முடிய தாமதமானால் மேனேஜரிடம் “சார் டைம் ஆச்சு, நாளைக்கு காலைல வந்து மிச்ச வேலைய முடிக்கறேன்” என்று சொன்னால் உடனே மேனேஜர் “வேலைன்னா முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும்.இதென்ன கவர்ன்மெண்ட் வேலயா?கரெக்ட் டைமுக்கு கெளப்பறதுக்கு.தெரிஞ்சுதான வேலைக்கு வரீங்க.வேலைய முடிச்சுட்டு போங்கனு கடிப்பார்”.சரி என்று சொல்லி வேலய முடிச்சுட்டு கொஞ்சம் லேட்டா போனா “நேரத்துக்கு வரத் தெரியாதா?” என அவர் கண்டபடி திட்டுவார்.அதற்கு பதில் சொன்னால் “எல்லாம் சம்பாதிக்கறேங்கற திமிரு…இதுக்கு தான் வேலைக்கு போக வேண்டாமுனு சொல்றது” என்பார். முதல் குழந்தை பிறந்ததும் அதைக் காரணம் காட்டி வேலைக்கு போவதை நிறுத்திவிட்டார்.இப்போது எனக்கென்று தேவைப்படுவதைக் கூட அவரிடம் அவர் மன நிலையை காத்திருந்து பார்த்து தயங்கித் தயங்கி கடன் வாங்குவோர் போல அவர் முன் நின்று அவர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி பணம் வாங்குவதற்குள் போதும் என்றாகிவிடும்.

ஜிரம் அடிப்பதுபோல் உணர்ந்தேன்.இருப்பினும் எழுந்து போய் வீடு வாசலைப் பெருக்கி கோலம் போட்டு போய் குளித்தேன்.”குளித்துவிட்டு தான் சமையலறையினுள் நுழைய வேண்டுமாம்,அப்போதுதான் மகாலட்சுமி வீட்டினுள் வாசம் செய்வாளாம்”.என் மாமியார் சொன்னது.அவளுக்கு அவள் மாமியார் சொல்லியிருக்கலாம்.

ஜிரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பது தெரிந்தது.சமையல் அறையினுள் நுழைந்தேன்.சமையல் செய்ய ஆரம்பித்தேன்.குழந்தைகளுக்குத் தனியாக அவருக்கு தனியாக சமைக்க வேண்டும்.இரவே அவர்கள் மெனுவை சொல்லிவிடுவார்கள்.உடம்புக்கு முடியவில்லை என்று ஏனோதானோவென்று சமைக்க முடியாது.சுவை சிறிது குறைந்தாலும் டிபன் பாக்ஸில் உணவு அப்படியே திரும்ப வரும்.என் வீட்டில் பசிக்கு சாப்பிடுவதை விட ருசிக்கு தான் சாப்பிடுவார்கள். காலை உணவு மதிய உணவு என வேக வேகமாக செய்ய வேண்டும்.அவருக்கு இருவகை சட்னி இருந்தால் மட்டுமே காலை உணவு வயிற்றுக்குள் இறங்கும்.மதியத்திற்கும் இருவகைப் பொறியல் வேண்டும்.குழந்தைகளுக்கு காரம் இல்லாமல் எடுத்து வைத்து பின் இவருக்கு காரம் சேர்த்து சமைக்க வேண்டும்.காலை உணவுக்கு இட்லி சுட்டால் ஒரே நேரத்தில் சட்டென்று முடிந்துவிடும்.ஆனால் இட்லி யாருக்கும் பிடிக்காது.தோசை ஊற்றிக் கொடுக்க வேண்டும்.அதுவும் சாப்பிட சாப்பிட சுட சுட தோசை ஊற்றிக்கொடுக்க வேண்டும்.வேர்த்து விறுவிறுக்க பொறியலைத் தாளித்துக் கொண்டிருந்தேன்.சட்டென்று நெடி மூக்கில் ஏற தும்மியவாறே கடிகாரத்தைப் பார்த்தேன்.மணி ஏழு ஆகிவிட்டிருந்தது.ஹாலில் அவர் யாருடனோ போனில் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.நான் வெளியே சென்று பால் பாத்திரத்தை எடுத்து வந்து பாலைக் காய்ச்சினேன்.அவருக்கு காப்பி போட்டு கொடுத்துவிட்டு குழந்தைகளை எழுப்பினேன்.இனி ஒரே அவதி தான்.சமையலறைக்கும் குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்யவும் சமையலறைக்கும் பெட்ரூமுக்கும் மாறி மாறி அலைய வேண்டும்.அலைந்தவாறே வேலை செய்துகொண்டிருந்தேன்.அவரின் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

ஒருவழியாக சமையல் முடித்துவிட்டேன்.குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிட்டு அவர்களுக்கு டிபன் பாக்ஸ் போட்டுக் கொடுத்து சூ மாட்டிவிட, வெளியே பள்ளி வேனின் ஹார்ன் சத்தம் கேட்டது.அவர்களை அவசர அவசரமாக வெளியே கூட்டிச் சென்று வேனில் ஏற்றிவிட்டு வீட்டுக்குள் வரும்போது வியர்வையில் முழுதும் நனைந்திருந்தேன்.ஃபேனுக்கு கீழே சற்று அமரலாம் என்று நினைத்து அமர அவர் ரெடியாகி வந்துவிட்டார்.அவருக்கு தோசை சுட சமையலறைக்குள் நுழைந்தேன்.அவருக்கு போன் வந்தது.போனில் அவர் புது ப்ராஜெக்ட் வந்துள்ளதைப் பற்றி நண்பனிடம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார்.புதுப்புது எண்ணங்கள் புதுப்புது முயற்சிகள்,புதுப்புது வேலைகள்,புதுப்புது இடங்கள்,புதுப்புது மனிதர்கள் என அடிக்கடி தங்கள் வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொண்டே காலத்தை கடந்து செல்லும் ஆண்கள், திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான அடுப்படி வேலைகளை தன் வாழ்நாள் முழுதும் செய்துகொண்டே இருக்கும் என் போன்ற பெண்களின் கஷ்டம் புரியாமல்,உனக்கென்ன சமைக்கறது வீட்டு வேலை செய்யறது அவ்வளவுதான என்று எளிதில் சொல்லிவிடுவார்கள்.

அவரையும் வழியனுப்பி விட்டு சமையலறைக்குள் நுழைந்தேன்.வாஷ்பேசனில் பாத்திரங்கள் மலையளவு குவிந்திருந்தது.காப்பி குடித்துவிட்டு மற்ற வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி காப்பி போட்டு எடுத்துக் கொண்டு ஹாலுக்கு போய் சோபாவில் அமர்ந்தேன்.இந்த வீட்டில் நிம்மதியாக ஒரு காப்பி குடிப்பதற்கு எத்தனை நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று எண்ணினேன். மிகவும் சோர்ந்துவிட்டேன்.உடல் முழுதும் வலித்தது.தலை பாரமாக இருந்தது.ஜிரம் உச்சத்தைத் தொட்டுவிட்டிருந்தது.காப்பி குடித்துவிட்டு கண்களை சற்று மூடினேன்.கண்களின் ஓரம் நீர் கசிந்தது.எனக்கு என் பெற்றோரின் நினைவு வந்தது.நான் அழவில்லை.ஆனால் கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது.என் ஜிரத்தை தொட்டுப்பார்க்கும் என் அம்மாவின் கைகள் நினைவில் வந்தது.உடனே ஹாஸ்பிடல் அழைத்துச் செல்லும் அப்பாவின் முகம் என் மனக் கண்ணில் வந்தது.என்னையறியாமல் அழுகை வந்துவிட்டது..

என் சிறுவயது நினைவுக்கு சென்றேன்.நடுஜாமத்தில் நான் அரைத் தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன்.என் ஜிரத்தின் அனலை அருகில் படுத்திருந்த என் அம்மா உணர்ந்து என் நெற்றியைத் தொட்டுப் பார்த்தார்.உடனே என் அப்பாவை எழுப்பினார்.அப்பா பதறினார்.அம்மா ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் ஒரு டவலும் எடுத்துவந்து டவலைத் தண்ணீரில் நனைத்து என் உடல் முழுதும் ஒற்றி எடுத்தார்.ஈரத்துணி என் உடம்பில் பட நான் நடுங்கினேன். வேண்டாம் என அழுதேன்.அப்பா சமாதானம் செய்தார்.காலையில் ஹாஸ்பிடல் கூட்டிப் போவதாக சொன்னார். நான் பிடிவாதம் செய்தேன். அப்பாவும் அம்மாவும் கெஞ்சினார்கள்.அப்பா எனக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தருவதாக சொன்னார். அதன் பின்னர் தான் அவர்கள் செய்யும் அனைத்து முதலுதவிகளுக்கும் உடன்பட்டேன்.காலையில் நான் செயலற்று காய்ச்சலோடு படுத்திருந்தேன்.அம்மா எனக்கு கஞ்சி கொடுத்தார்.கசப்பாக உணர்ந்தேன்.வேண்டாமென்று மறுத்தேன்.சாமி,கண்ணு,செல்லம் என் தங்கம் என்று சொல்லியே குடிக்க வைத்துவிட்டார்.

அப்பாவும் அம்மாவும் என்னை ஹாஸ்பிடல் கூட்டிச் சென்றார்கள்.வழியில் நான் அப்பாவிடம் விளையாட்டு சாமானை நியாபகப்படுத்தினேன்.வீடு திரும்பும் போது கட்டாயம் வாங்கித் தருவதாக சொன்னார்.ஹாஸ்பிடலுக்குள் நுழைந்ததும் அங்கிருந்த வாசத்தினால் எனக்கு கொமட்டிக் கொண்டு வந்தது. அப்பா என்னைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார்.வாந்தி எடுத்தேன்.குடித்த கஞ்சி முழுதும் வெளியே வந்துவிட்டது.அப்பா என் தலையைப் பிடித்துக் கொண்டார்.மிகவும் கஷ்டப்பட்டு அடிவயிறு வலிக்க வாந்தி எடுத்தேன்.நான் படும் அவஸ்தையைப் பார்த்து அம்மாவும் அப்பாவும் கண் கலங்கினார்கள்.தண்ணீரால் வாய் கொப்பளிக்க வைத்து முகம் கழுவி விட்டு ஹாஸ்பிடலினுள் என்னை அழைத்துப் போனார்கள்.நர்ஸ் எனது வாயில் காய்ச்சல் அளவு சொல்லும் டுயூபை வைத்து சில வினாடி கழித்து எடுத்துப் பார்த்து அப்பாவிடம் 102 டிகிரி காய்ச்சல் இருப்பதாக சொல்லிவிட்டு ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டார்.எங்கள் முறை வரும் வரை காத்திருந்தோம்.ஆங்காங்கே குழந்தைகள் அழும் சத்தம் கேட்டவண்ணம் இருந்தது.

எங்கள் முறை வந்தது.டாக்டரிடம் சென்றோம்.அப்பாவும் அம்மாவும் எதை எதையோ சொன்னார்கள்.எதை எதையோ கேட்டார்கள்.டாக்டர் அவர் பாட்டுக்கு என்னைப் பரிசோதித்துவிட்டு இறுதியில் பேப்பரில் எதையோ கிறுக்கி அப்பாவிடம் கொடுத்துவிட்டு சரியாப் போகும் என்று மட்டும் சொன்னார்.அந்த ஒத்த வார்த்தைக்காக காத்திருந்து அப்பாவும் அம்மாவும் நம்பிக்கையுடன் மருந்துகளை வாங்கிக் கொண்டு என்னை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலை விட்டு வெளியேறினார்கள்.

நான் அப்பாவிடம் விளையாட்டுப்பொருளை நியாபகப் படுத்தினேன்.அம்மாதான் “வீட்டில் ஏற்கனவே நெறய பொருள் குப்பை மாதிரி இருக்கு,வேண்டாம்” என்று அதட்டினாள்.சட்டென்று என் கண்ணில் நீர் ததும்பிவிட்டது.உதட்டைப் பிதுக்க ஆரம்பித்தேன்.உடனே அப்பா அம்மாவிடம் “ஏன் அவள் அழ வைக்கிற?”என்று சொல்லி என்னிடம் “இல்லடா,அப்பா உனக்கு வாங்கித் தாரேன்” என்று சொன்னார்.நேராக ஒரு கடைக்கு சென்றோம்.”உனக்கு என்ன வேண்டும் என்பதைப் பார்த்து சொல்”என அப்பா என்னிடம் கூறினார். நான் கடையில் இருக்கும் அனைத்து பொருட்களையும் நோட்டம் விட்டேன்.கடையினுள் மூன்று நான்கு பேர் இருந்தார்கள்.நான் ஒவ்வொரு பொருளாகப் பார்த்தேன்.எதுவும் என்னைக் கவரவில்லை.கடைக்காரர் என் முகக் குறிப்பை உணர்ந்து அலமாரியில் இருந்து சொப்புசாமானை எடுத்துக் காட்டினார்.பெண் பிள்ளைகள் என்றாலே சொப்பு சாமான் தான் கொடுக்க வேண்டும் என்ற ஆண்களின் தூதுவராக எனக்குத் தெரிந்தார்.எனக்கும் சொப்பு சாமான் பிடித்திருந்தது.காரணம் என் அம்மாவைப் பார்த்துப் பார்த்து சொப்பு சாமான் எனக்குரியது தான் என்று நம்பி அதன் மேல் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம்.நான் கடைக்காரரிடம் அந்த சொப்பு சாமானை வாங்கிக் கொண்டேன்.அப்பா கடைக்காரரிடம் விலையைக் கேட்டார்.விலை சற்று அதிகம் இருந்தது போல.அப்பா யோசித்தார்.அம்மா உடனே “இது வேண்டாம்,வேற எதாச்சும் வாங்கிக்கோ”என்று என்னிடம் சொல்லிவிட்டு கடைக்காரரிடம்“இத விட விலை கம்மியா வேற எதாச்சும் கொடுங்க” என்று சொன்னார்.கடைக்காரர் எதைக் கொடுப்பது என்று அறியாமல் எதையோ தேடினார்.ஆனால் நான் "எனக்கு சொப்பு சாமான் தான் வேணும்" என்று அடம்பிடித்தேன்.அம்மா என்னைத் திட்டினார்.நான் அசர வில்லை.பிடிவாதமாக இருந்தேன்.அப்பா சமாதானம் செய்தார்.நான் ஓயாமல் அடம்பிடித்தேன்.இங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பாட்டி மெதுவாக என்னிடம் வந்தார்.என் தோள் மீது கை வைக்க நான் பாட்டியைப் பார்த்தேன்.தெளிவான பழுத்த முகம்.நெற்றியில் திருநீர் அணிந்திருந்தார்.தலை சற்று ஆடியபடி இருந்தது.பாட்டியின் சாந்தமான முகத்தைப் பார்த்ததும் என்னையுமறியாமல் அடம் பிடிப்பதை சற்று நிறுத்தி அவரைப் பார்த்தேன்.அவர் மெதுவாக என்னிடம் “சொப்பு சாமான் வேண்டாம் பாப்பா…வேற எதாச்சும் எடுத்துக்கோ.கல்யாணத்துக்கப்புறம் நம்மள சாவற முட்டும் சமையக்கட்டுல உட்ருவானுக.நாம அங்கதான் கெடப்போம்.அதனால இப்ப நீ வேற எதாச்சும் வாங்கி வெளயாடு” என்று சொன்னார்.

அச்சிறுவயதில் அந்த பாட்டி சொன்னது எனக்குப் புரியவில்லை.இப்போது புரிகிறது.கண்களை மெதுவாகத் திறந்தேன்.எழுந்து போய் டிராவைத் திறந்து ஒரு காய்ச்சல் மாத்திரையைப் போட்டுக்கொண்டு சமையலறை வாஷ்பேசனுக்கு சென்றேன்.கழுவாத பாத்திரங்கள் என்னைப் பார்த்து பல் இளித்தது.

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...