நினைவு

பெண்மையக் கதைகள்
5 out of 5 (8 रेटिंग्स)
कहानी को शेयर करें

அம்மாவின் நினைவு நாள் இன்று.அம்மாவை இழந்து இன்றோடு பத்து வருடங்கள் கடந்து விட்டன.உயிரைக் கொடுத்து உருவாக்கினாள் என்னை; என்னை மட்டுமல்ல, என்னோடு பிறந்த அறுவரையும். சிந்தனை எங்கெங்கோ தறிகெட்டு ஓடியது.

“அம்மா என்னுடைய டிரஸ்ஸை எங்கே வைத்தீர்கள்? நான் குளிக்கப் போகிறேன்” என்ற பேத்தியின் குரலும் “அங்கே உன்னுடைய பீரோவின் மேல் தட்டில் தான் வைத்திருக்கறேன்; எடுத்துக் கொண்டு போ” என்ற மருமகளின் குரலும் நனவுலகிற்கு கொண்டு வந்தன.

மீண்டும் அம்மாவைப் பற்றிய நினைவுகள் மேலெழுந்து வந்தன. 13 வயதில் 30 வயதான கம்பீரமான கோர்ட் உத்தியோகம் பார்க்கும் கணவரைக் கைப்பிடித்து ஏழு குழந்தைகளைப் பெற்ற என் அம்மா. குழந்தை பெறுவதும், வளர்ப்பதும், படிக்க வைப்பதும், திருமணம் செய்விப்பதும் என இடையராமல் இயங்கிய அம்மா.

என்றும், எப்பொழுதும் எதற்காகவும் தன் குழந்தைகள் கண் கலங்கக் கூடாது என்ற கடுமையான விரதம் பூண்ட அம்மா. அதற்கு உறுதுணையாக நின்ற அப்பா. தான் பெற்ற செல்வங்கள் அனைவரையும் ஆசிரியராகவும் மருத்துவராகவும் வங்கிப் பணியாளராகவும் உயர்த்தியது மட்டுமின்றி அனைவருக்கும் உரிய காலத்தில் திருமணம் செய்வித்து ஓய்ந்த போது அப்பாவிற்கு வயது 80.

கடைசி மகனின் திருமண வரவேற்புடன் சேர்த்து சஹஸ்ர சந்திர தரிசனம் விழாவும் முடிந்தபோது அப்பாவின் முகத்தில் கோடி சூரிய பிரகாசம். அனைவரும் திருமணம் முடிந்து வெவ்வேறு ஊரில் செட்டிலாகி விட்டனர். நான் மட்டும் உள்ளூர் தனியார் பள்ளி ஆசிரியை ஆனதால் பெற்றோருடன் இருந்தேன்.

2 வருடங்களுக்கு பிறகு மூப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தார் அப்பா. அம்மாவின் துயரத்திற்கு அளவே இல்லை. அவர் மாற்றலாகி சென்ற ஊருக்கெல்லாம் சென்று, அவருடைய சொல் தவறாமல் நடந்துகொண்ட என்னை விட்டுச் சென்று விட்டார். சுமங்கலியாக இறைவனடி சேரும் பாக்கியத்தை இழந்து நிற்கிறேனே! என்று கதறித் தீர்த்து விட்டாள்.

எனக்குக்கூட கடவுள் அம்மாவிடம் இந்த ஆசையில் கருணையுடன் இருந்திருக்கலாம் என்றே தோன்றியது. அனைத்து மகன்களும் மகள்களும் சம்பந்திகளும் துக்கம் விசாரிக்க வந்திருந்தனர். உடன் பணி புரிந்தவர்களும் வந்தனர். காரியங்கள் அனைத்தும் கிரமமாக எப்படி அப்பா நியம நிஷ்டைகளிலும், நித்திய பூஜை, சந்தியாவந்தனம் முதலியவற்றிலும் மனப்பூர்வமாக ஈடுபட்டுச் செய்வாரோ அதேபோன்று எந்தக் குறையும் இல்லாமல் நடந்தேறின. அனைவரும் புறப்பட்டுச் சென்று விட்டனர்.

அடுத்த திருப்பமாக என் கணவருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி விட்டது.பதவி உயர்வுடன் கூடியது என்பதால் மறுக்கவும் மனமில்லை. கடவுள் அருளால் வார இறுதியில் வந்து செல்லக்கூடிய 50 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஊருக்கு என்பதில் ஒரு ஆறுதல்.

அம்மா மறு அவதாரம் எடுத்தாள் என்றே கூற வேண்டும்.பேரன், பேத்தியின் முக மலர்ச்சியில் எல்லையற்ற இன்பம் கண்டாள். தன் மகன், மகளைப் போலவே வளர்த்தாள். பெற்ற பிள்ளையை காட்டிலும், பேரப்பிள்ளை உசத்தி அல்லவா? காலம் வெகுவேகமாக உருண்டு ஓடியது. பேரன் பேத்திக்கு திருமணம் நடந்தேறியது. உடலளவில் தளர்ந்து விட்டாலும் மனதில் மிகுந்த உற்சாகத்துடன் அனைத்து நிகழ்வுகளிலும் மலர்ச்சியுடன் கலந்துகொண்டு மனமார வாழ்த்தினாள்.

பேரன்களுக்கு குழந்தை பிறந்து கனகாபிஷேகம் செய்து கொண்டாள். 90 வயதில் மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் என பாத்தியதை உள்ளவர்கள் அனைவரும் நெய் பந்தம் பிடிக்க, இறை ஜோதியில் இணைந்தாள். கடவுள் என்னைப்பார்த்து, என்ன? என் பக்தையிடம் கருணையுடன் நடந்து கொண்டிருக்கிறேனா? இல்லையா?உனக்கு என்ன தோன்றுகிறது? என்று கேட்பது போலவே இருந்தது!

பழமையான நினைவுகளை பசுமையாக மனதில் அசை போட்டுக்கொண்டு, பூஜை மாடத்தில் பூக்களால் அலங்கரித்து கொண்டிருந்தேன். அதற்குள் என் பேத்தி, படுக்கையறையில் இருந்த என்னுடைய போனை கொண்டு வந்து கொடுத்து ,”யாரோ கால் செய்கிறார்கள். புதிய நம்பராக இருக்கிறது; பாருங்கள்” என்றாள்.

பெங்களூரில் இருக்கும் என்னுடைய மாமா பெண்; அத்தி பூத்தாற் போல் எப்பொழுதாவது பேசுபவள்; அவளைச் சொல்லியும் குற்றமில்லை. இரண்டு பெண்களும், மகனும் தம்பதி சமேதராய் ஐடி துறையில் பணிபுரிபவர்கள். அவர்களுடைய திருமணம், சீமந்தம், குழந்தைப்பேறு என்று ஓடிக்கொண்டே இருந்தவள். இப்பொழுது ஃபாரின் டெபுடேஷன் என்று இந்த ஆறு பேரில் யார் சென்றாலும் அவர்கள் வீட்டிற்குச் சென்று ஆல் இன் ஆல் இன்சார்ஜாக செயல்பட்டு குடும்ப வண்டியை உராய்வு இல்லாமல் ஓட்டிச்செல்லும் ஆற்றல் படைத்தவள்.

பரஸ்பரம் குசல விசாரிப்புகளுக்குப் பிறகு, சென்ற வாரத்தில் அம்மாவை பார்க்கச் சென்றிருந்தேன். அவர் குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதால், ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி, ஆபரேஷன் செய்து ஐந்து தையல் போட்டிருக்கிறார்கள். நான் அம்மாவுடன் உதவியாக ஒரு வாரம் இருந்தேன். அதற்குள் பெரிய மகள் U.S. போக வேண்டி இருப்பதால், இங்கு வந்து விட்டேன் என்றாள்

இதை கேட்டதும் எனக்கு என் மாமியைப் பற்றிய நினைவுகள் மனதில் அலையடித்தன. 40 வயதில் கணவனை இழந்தவர். பெரிய மகன் பாலிடெக்னிக்கிலும், பெரிய மகள் பத்தாவதிலும், இளைய மகன் ஒன்றாம் வகுப்பிலும், படித்துக் கொண்டிருக்க மூன்று வயது இளைய மகனுடன் கைம்பெண் ஆனவர்.

கடவுளின் கருணையால், இணையற்ற வைராக்கியத்துடன் புத்திசாலி குழந்தைகளின் திறமையை ஊக்குவித்து படிக்கவைத்து பதவிகளில் அமரச்செய்து, உரிய வயதில் திருமணம் செய்து வைத்தவர். இன்று பேரன்களும் பேத்திகளும் டாக்டர் ஆகவும் இன்ஜினியர் ஆகவும் வளர்ந்து ஒளி வீசுகிறார்கள்.

இப்போதைக்கு மாமியின் நான்கு குழந்தைகளும், ரிட்டையர்ட் சீனியர் சிட்டிசன் லிஸ்டில் இருப்பவர்கள். கொள்ளுப் பேரன் டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது பிரச்சினை என்னவென்றால், அவர் தன்னுடைய வாழ்க்கையைப்பற்றி பேசுவதில் மிகவும் ஆவல் உடையவராக இருக்கிறார். தன்னுடைய சாதனைகளை பிறர் போற்றி பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால் யாருக்கும் அதற்குத் தேவையான பொறுமை இல்லை.

நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் தம்பதி சமேதராகச் சென்று, அவரிடம் ஆசி பெற்ற பொழுது இதை உணர்ந்தேன். இன்று காலையில், போனில் அவருடைய மகளும் இதையே கூறினார். அதன் பின் மாமியின் மூத்த மகள் (75 வயது) போனில் பேசி அதையே உறுதிப்படுத்தினார். தான் அம்மாவைப் பார்க்கச் சென்றதாகவும், ஆனால் அவரை தாங்கிப்பிடித்து அழைத்துச் செல்வது போன்றவற்றில் தன்னால் உதவ இயலவில்லை என்றும் ஆற்றாமையை பகிர்ந்துகொண்டார்.

தங்கை நன்கு அம்மாவிற்கு உதவி செய்ததாகவும், ஆனால் அவளுடைய குடும்பச் சூழல் காரணமாக, ஊருக்குத் திரும்பி விட்டதாகவும் கூறி வருந்தினர். என்னுடைய அம்மாவும் மாமியும், நாத்தனாரும் அண்ணியாகவும் உறவு ஏற்படுவதற்கு முன்பே பள்ளித் தோழிகள். முழு ஆண்டு விடுமுறையில் இருவரின் குழந்தைகளும் (10 பேர்) ஓரிடத்தில் ஒன்று கூடி களிப்பார்கள். ஓயாத வேலையை இருவரும் பகிர்ந்து ஓடியாடிச்செய்வார்கள். இவை எல்லாம் மனதில் அலையடித்தன.

இப்பொழுது கடவுளை நான் மானசீகமாக கேட்டேன், “இந்த பக்தைக்கு என்ன வழி காட்டுவது என்று முடிவு செய்தீர்கள் இறைவனே?” கேள்வி கேட்கத்தான் உரிமை! பதிலை எதிர் நோக்குவது கடமையல்லவா! கடவுளே மாமிக்கு மனநிம்மதியையும் அவருடைய வாரிசுகளுக்கு பொறுமையையும் அருள்வீராக என மனமார வேண்டினேன். என்னால் இயன்றது அது ஒன்றுதானே!

மொத்தத்தில் நினைத்துப் பார்க்கும் பொழுது அம்மாவும் மாமியும் அவரவர்க்கு கிடைத்த பாத்திரத்தை திறம்பட செய்து முடித்தார்கள். நான் சரியாக செய்து கொண்டிருக்கிறேனா என்று சிந்தனைவயப்பட்டேன்.

மகன் வீட்டிற்கு வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. முதல் எட்டு ஆண்டுகள் காசி யாத்திரை பஞ்ச துவாரகா, 108 திவ்யதேசங்கள், முக்திநாத், நவ ஜோதிர்லிங்கங்கள் என கணவர் அனைத்து புனித ஸ்தலங்களுக்கும் அழைத்துச் சென்றார். அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தையும் போக வைத்தார். புண்ணிய கணக்கை கூட்ட வைத்தார்.

அவரின் மறைவுக்குப் பிறகு அம்மாவின் உடைந்துபோன உள்ளத்தை உறுதி பெறச்செய்ய தோழியின் மகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி உதவ முடியுமா? எனக் கேட்டாள் மகள். முழு மனதுடன் இல்லாவிட்டாலும் ஒப்புக்கொண்டேன். தோழி மிக மகிழ்ந்து உடன் தனக்குத் தெரிந்தவர்களிடம் அறிமுகப்படுத்தி, இப்பொழுது ஒரு நாளில் நான்கு மணி நேரம் அதில் நிம்மதியாகக் கழிகிறது.

மகன் அம்மாவின் படிக்கும் ஆர்வத்தை நன்கு அறிந்தவன். அவனும் படிக்கும் ஆர்வம் உடையவன், உணர்ந்தவன். சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆசிரியர்களின் தொகுதிகளை வாங்கிக் குவிக்கிறான். சில மணி நேரம் அதில் சிறப்பாகக் கழிகிறது. ஆக எனது புரிதலுக்கு ஏற்ப நான் தேங்கிப் போய் விடாமல் இருக்க, இரண்டு குழந்தைகளும் நடந்துகொள்வதை, கடவுளின் கருணை என்றே கருதுகிறேன். கடவுளுடைய கணக்கில் நான் எப்படியோ? யாரே அறிவார்? இறைவனே இறுதி செய்வார்!

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...