உலகின் மிகச் சிறிய காதல் கதை

காதல்
4.9 out of 5 (78 रेटिंग्स)
कहानी को शेयर करें

எங்கள் ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. என்னுடைய தந்தை தான் ஊர்ப் பெரியவர். எங்கள் வீட்டின் மூத்த பெண்ணான என் அக்காவை மணமுடித்துக் கொடுப்பதற்காகத் தான் இந்த ஏற்பாடுகள்.

வழக்கப்படி அக்காவை மணக்க நினைக்கும் மாப்பிள்ளைகள் அனைவரும் எங்கள் இல்லத்திற்கு வந்தாயிற்று. இன்னும் யாரோ ஒருவர் மட்டும் வர வேண்டுமாம். அவரும் பெரிய குடும்பத்துப் பையன் தான் என்று அனைவரும் பேசிக் கொண்டார்கள்.

அக்கா இதுவரை வந்த மாப்பிள்ளைகளை எல்லாம் மேலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு ஒருவரையும் பிடித்ததாகத் தெரியவில்லை. இப்பொழுது என்ன செய்யப் போகிறாளோ?

நானும் அக்காவும் மச்சுப் படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்தோம். தூரத்தில் வரவேற்பொலி கேட்டது. ஒருவேளை வரப்போகும் இந்த மாப்பிள்ளையும் பிடிக்கவில்லை என்றால் இந்த ஏற்பாடு வீண் தான்.

அக்கா தான் அப்பாவுக்கு மிகவும் செல்லம். அவள் சொல்வதை அவர் என்றும் தட்டுவதே இல்லை. நான் மூன்றாவது பெண். எங்களுக்கு இன்னும் இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள்.

அக்காவுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்கிறது போல… வரப்போகும் இந்த வரன் அவளுக்குப் பிடித்தவாறு இருக்கும் என்று. அந்த இடத்தை விட்டு நகரவே இல்லாமல் வரப்போகும் ஆண்மகனுக்காக் காத்திருந்தாள்.

எனக்கு திருமணத்திலேயே விருப்பம் இருக்கவில்லை. ‘இவள் என்ன இப்படி நின்று கொண்டிருக்கிறாள்?’ என்று கூட எனக்குத் தோன்றியது. இவ்வளவு நாள் ஒன்றாகப் பழகிய எம்மையும், பெற்று வளர்த்த அன்னை தந்தையையும் விட்டுச் செல்வதற்கு எப்படி மனம் வரப்போகிறதோ இவளுக்கு?

அவளைச் சொல்லியும் குற்றமில்லை. இது நம் உலகின் நிதர்சனமல்லவா? பெண்ணாகப் பிறந்தவள் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அனுப்புவதற்காகவே பிறப்பெடுத்தவள். உண்மை நெஞ்சைச் சுட்டது. என்னைப் போலத்தான் அவளும் நினைத்துக் கொண்டிருப்பாள்.

இன்னும் சொல்லப்போனால் நிதர்சனத்தை என்னை காட்டிலும் அதிகம் உணர்ந்திருந்தாள் அவள்.

வரவேற்பொலி சற்று அருகில் கேட்டது. முழக்கங்கள் எங்களை நோக்கி வருவதுபோல் தோன்றியது. ஆக… அந்த இறுதி மாப்பிள்ளையும் வந்து விட்டார். எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை எங்கள் பணிப்பெண்கள், என் இரு சகோதரிகள் என அனைவரும் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். கூட்டத்தில் அந்த மாப்பிள்ளை தெரியவில்லை.

ஆனால் என் அக்கா மட்டும் தெரிந்தாள். அவள் கண்களில் நான் பார்த்த உணர்வு, இதுவரை அவளிடம் கண்டிராதது. ஆசுவாசமும் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் என எல்லாம் கலந்தது. அவருக்காகவே பிறந்தது போல அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எல்லோருமே என்னை ஓரிடத்தில் அமராதவள், துறுதுறுத்தவள் என்று சொல்வார்கள். எனக்கு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருப்பது என்பது தான் உலகின் மிகப்பெரிய தண்டனை. அம்மா விருந்தினர்களை கவனிப்பதில் இருந்தார்.அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இன்று நடக்கின்ற வேலைகள் அனைத்தையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தேன். மாப்பிள்ளை வந்ததால் பார்க்கலாம் என்று வந்தேன். ஆனால் எல்லோரும் மறைத்துக் கொண்டார்கள்.

நாங்கள் மூவரும்… அதாவது அக்காவைத் தவிர மீதம் உள்ள மூன்று பெண்களும் மற்ற ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருந்தோம். சமையலறையில் ஏதோ ‘தடால்’ என்று சத்தம் கேட்டது. மற்றவர்களின் சிந்தனை அங்கே இல்லாது போக நான் மட்டும் சமையலறை சென்று பார்த்தேன். அங்கே ஒரு பெரிய தட்டில் உருட்டி வைக்கப்பட்டிருந்த பூவந்தி உருண்டைகள், தட்டு விழுந்ததால் சிதறி இருந்தன. பணியாளர்களிடம் அவற்றை ஒழுங்குபடுத்தச் சொல்லிவிட்டு மறுபடியும் மேல்மாடிக்குச் சென்றேன்.

அதற்குள் மாப்பிள்ளை சென்று விட்டதாகச் சொன்னார்கள். அரச குமாரர்கள் போல் அல்லாமல் துறவிகளைப் போல் உடையணிந்த இரண்டு வீரர்கள். அவர்களோடு ஆசிரியர் போல் தோன்றிய இன்னொருவர். இவர் உலகறிந்த முனிவராம். இவ்விருவரின் பராக்ரமங்கள் தான் நாடு முழுவதும் பேசு பொருளாக இருக்கிறது என்றும் சொன்னார்கள்.

என்னைப் பொறுத்தவரை ஒரு மாவீரனை மணந்துகொள்வதைக் காட்டிலும், ஒரு கோழையை மணந்து கொள்ளலாம். எப்பொழுதும் போர்… போர் என்று உலகம் சுற்றுபவன், மனைவி மக்களை எப்படி நினைவில் கொள்வான்? அவர்களை எங்கனம் கவனிப்பான்? அக்காவை மணந்து கொள்பவர் போல் ஒரு அரசனை திருமணம் செய்து கொள்ள நான் நினைக்கவே மாட்டேன்.

என் எண்ணங்களைக் கலைப்பது போல் அம்மா வந்து, அக்காவை விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து வருமாறு கூறிவிட்டுச் சென்றார். சகோதரிகள் மூவரும், சர்வ அலங்காரம் செய்து தாமரை மலர் போல முகமலர்ந்திருக்கும் எங்கள் வீட்டு தேவதையை அழைத்துச் சென்று மேடையில் அமர வைத்தோம்.

பெண் கேட்டு வந்த மாப்பிள்ளைகள் ஒவ்வொருவராக வந்து போட்டியில் பங்குபெற்றனர். ஆனால் எவராலும் என் தந்தை சொன்ன கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. இறுதியாக ஒருவர் வந்தார். அவர் எழுந்து வரும்பொழுது அவரின் இருக்கைக்குப் பின் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது என் விழிகள் தற்செயலாக விழுந்தன. அழகன் என்ற ஒற்றைச் சொல்லில் அவனை அடக்கி விட முடியுமா? இல்லவே இல்லை. அவன் விழிகளின் கூர்மை எவரையும் பதம் பார்த்து விடும்.

என்னால் என் கண்களை அவன் மீதிருந்து எடுக்கவே முடியவில்லை. அதெப்படி ஒருவனைப் பார்த்தவுடன் காந்தம் போல் மனம் அவனிடம் சென்று ஒட்டிக் கொள்ளும்?

அக்காவைப் பார்க்க வந்த மாப்பிள்ளை என் கண்களுக்குத் தெரியவேயில்லை. என் கண்கள், அறிவு, மனம் மூன்றையும் இவனே ஆக்கிரமித்து விட்டிருந்தான். கீழிருந்து மேலாக நாங்கள் இருக்கும் மேடையைப் பார்த்தான். அவன் என்னைப் பார்க்கவில்லை, ஆனால் நான் அவன் கண்களைப் பார்த்தேன்.

முதல் முறை என்னைப் பார்க்காதவன், மறுமுறை நிமிர்ந்த பொழுது எங்கள் கண்கள் சந்தித்துக் கொண்டன. ஆனால் அவன் கண்களில் காதலுக்கு இடமிருப்பதாய் எனக்கு தோன்றவே இல்லை.

‘காதல்…’ அட நான் இந்த வார்த்தையை உபயோகிப்பேன் என்று இதுவரை நினைத்திருந்ததில்லை. விதி என்னென்ன கணக்கு போட்டு வைத்திருக்கிறது பாருங்கள்!! அவன் எண்ணம் அவன் அண்ணனை சுற்றியிருந்தது. என் மனதைக் கையில் எடுத்து பார்வையினாலே நான் நீட்ட, அவன் பொம்மையை வீசியறியும் குழந்தை போல் அதை வைத்து விளையாடினான்.

ஒரு நொடியேனும் என்னைத் திரும்பிப் பார்க்க மாட்டானா அவன்? என்னைப்போலவே துறுதுறு கண்கள் அவனுடையதும். இந்த அரங்கத்திலிருந்த அனைவரையும் உற்று நோக்கின. ஆனால் என்னிடம் மட்டும் மீண்டும் வரவே இல்லை.

அக்கா, தன்னை மணமுடிப்பதற்கான போட்டியில் இந்த மாப்பிள்ளை கண்டிப்பாக வென்றுவிட வேண்டும் என்று வழிபட்டுக் கொண்டிருந்தாள். எப்படி இவனை மறுபடியும் சந்திக்க முடியும் என்று சிந்தித்த என் மூளைக்குள், இந்த மாப்பிள்ளை வெற்றி பெற்றாரெனில் இவனை மறுபடி சந்திக்கலாம் என்று தோன்றியது.

நானும் எனக்குத் தெரிந்த தெய்வங்களையும் எங்கள் முன்னோர்களையும் துணைக்கு அழைத்து இவரே வெல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

யாருடைய வேண்டுதல் வென்றதோ தெரியவில்லை. அக்காவின் மனம் கவர்ந்த அந்த மணவாளனே போட்டியில் வென்றார். வென்றது என்னுடைய வேண்டுதலாய் இருப்பின் அவன் என்னை நிமி்ந்து பார்க்கவும் வேண்டும்.

என்னைப் பார்… என்னைப் பார்… என்று உள்ளம் உருப்பொட்டுகொண்டிருந்தது.

என் மனதின் குரல் அவனுக்குக் கேட்கும்படி இருந்ததோ? இப்போது அவன் என்னையே பார்க்கிறான். அதிலேதும் அர்த்தம் பொதிந்துள்ளதோ?

ஒரு பார்வை என்ன செய்துவிடும்? அம்மாவின் பார்வை அனைத்து கொள்ளச் செல்லும். அப்பாவின் பார்வை ஆசி தந்து செல்லும். ஆசானின் பார்வை அடங்கி அமரச் சொல்லும்.

ஆனால் இவன் பார்வை எனக்குள் பல மாற்றங்கள் நிகழ்த்துகிறது…

என் உடலின் ஒவ்வொரு அணுவிலும் பூக்கள் பூத்திருப்பது போல… அதிகாலை குளிரில் ஆற்றில் முங்கி எழும்போது வருமே ஒரு சில்லிட்ட உணர்வு அது போல… அனைவரும் உறங்கிய பின் நாம் மட்டும் விழித்திருந்து ரசிக்கும் நிலவு தரும் சுகம் போல…

அவன் ஒற்றைப் பார்வை என்னவெல்லாமோ நினைவுகளைத் தட்டி எழுப்பி, உணர்வுகளை ஆர்ப்பரிக்கச் செய்கிறது… முழு நிலவைத் தீண்டிவிடத் துடிக்கும் கடலலையின் கரங்கள் போல, என் மேல் பட்ட காற்று அவனைத் தீண்டி விட கொஞ்சம் கொஞ்சமாய் நீண்டு கொண்டிருந்தது.

என் எண்ணங்களிலிருந்து “ஜெய் ஶ்ரீ ராம்” எனும் முழக்கம் என்னை நிகழ்வுலகிற்கு கொண்டு வந்தது. அத்தோடு எங்கள் சகோதரிகள் அனைவரையும் அந்த மாப்பிள்ளையின் சகோதரர்களுக்கு மணம் செய்து கொடுப்பதாய் தந்தை முடிவு செய்திருக்கும் செய்தியும் வந்தது.

அக்காவின் மணவாளன் பெயர் ஶ்ரீ ராமன்.

நான்…
ஊர்மிளா…
அவர் இளவலை மணந்துகொண்டு காலமெல்லாம் இன்புற்றிருக்கப் போகிறவள்.

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...