JUNE 10th - JULY 10th
உமாபதிக்கு கொஞ்சம் அதிகமாகவே வேர்த்தது. விருட்டென்று எழுந்து வீட்டுக்கு போய்விடலாமா என்று கூட எண்ணினார். இவ்வளவு நேரம் அவர் கையில் வைத்திருந்த அந்த ஒற்றை காகிதத்தை மடியில் வைத்திருந்த ஜோல்னா பைக்குள் திணித்துக்கொண்டு வெளியே போகும் வழியை பார்த்தார்.
“ அடுத்ததாக முன்னிலை உரை ...” என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவித்ததும், “ ஐயா... இதுக்கு அடுத்தது கவியரங்கம்தான்னு நெனைக்கிறேன் “ பக்கத்திலிருந்தவர் உமாபதியின் காதருகே வந்து சொன்னார். திணித்த தாளை கையில் எடுத்து, கசங்கியிருந்த அதன் முனைகளை சரி செய்தார்.
ஏறத்தாழ இரண்டு மணி நேர காத்திருப்பு, உமாபதிக்குள் வடிக்கமுடியாத எரிச்சலையும் ‘இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ ? ‘ என்கிற கேள்வி ஒருவித பதட்டத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
“என்னங்க... இந்த விழாவுக்கு நீங்க போய்த்தான் ஆகணுமா..? போன மாசம் ‘ தோ... ஒரு மணி நேரத்துல வந்துடறேன்னு சொல்லிட்டு போயே நாலு மணி நேரம் கழிச்சி வந்தீங்க... இன்னிக்கு ரெண்டு மணி நேரமாகும்னு சொல்றீங்க. எனக்கொன்னும் பிரச்சன இல்லீங்க.. பாவம் அந்த சுதா பொண்ணுக்குதான் நாம தேவையில்லாத தொந்தரவ கொடுக்கிறோமோன்னு யோசிக்கிறேன். என்னதான் அவ நாம வீட்டுல வாடகைக்கு இருக்கிறவளா இருந்தாலும், அவளையும் ஒரு அளவுக்குத்தான் ஒதவி கேட்க முடியும் . அதுவும் சின்னப்பொண்ணு ... அதுமட்டுமில்லாம, எதிர்ல வர்ற வண்டியிலேர்ந்து அடிக்கிற லைட்டு கண்ணக்கூசுது.. ராத்திரியில சைக்கிள் ஓட்ட ரொம்போ கஷ்டமா இருக்குனு வேற அடிக்கடி சொல்றீங்க.. இதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டுதான் கேக்கறேன்... இந்த விழாவுக்கு நீங்க அவசியம் போய்த்தான் ஆகணுமா..?” கிளம்பி வருவதற்கு முன், தன் மனைவி பேசிய வார்த்தைகள், இப்போது எத்தனையாவது முறையாக உமாபதியின் நினைவுப் பரப்பில் வந்து நின்றுவிட்டு மறைந்தது என்று தெரியவில்லை.
உமாபதி. ஒய்வுபெற்ற தமிழாசிரியர். தமிழார்வம் கொண்டவர். சிறுவயது முதலே மரபுக்கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்தார். பணி ஓய்வு பெற்ற பிறகு , சிறுசிறு பத்திரிக்கைகளுக்கு கவிதை எழுதி அனுப்புவதோடு உள்ளூரிலே நடைபெறும் கவிதைப்போட்டி மற்றும் கவியரங்கங்களிலே கலந்துகொண்டு காலத்தை ஒட்டிகொண்டிருந்தார். பணி ஓய்வு பெற்ற பலர் தன் பொழுதுகளை வெட்டியாய் கழிப்பதாகவும் இவர் மட்டும் பயனுள்ளதாக செலவு செய்வதாகவும், இவரே அடிக்கடி பெருமையாய் சொல்லிக்கொள்வார். ஆனால்... இந்த தமிழார்வத்தால் தான், அவர் அளவுக்கு அதிகமான சோதனைகளையும் அவமானங்களையும் எதிர்கொள்வதாய் அடிக்கடி நினைத்துக் கொள்வார். முக்கியமாய் இதுபோன்ற கவியரங்க நிகழ்வுகள் அவரை எப்போது காயப்படுத்தியே வீட்டுக்கு அனுப்பும். காரணம்...
“அடுத்ததாக எல்லோரும் ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருக்கும் கவியரங்கம்.... தலைமை.. தமிழ்மாமணி திரு... .”
உமாபதி கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டார். கவிதை வாசிக்கவேண்டிய ஆறு பேரின் பெயர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் சொல்லிமுடிப்பதற்குள் உமாபதி , மேடையேறினார். அவர் உட்காரப்போன நாற்காலியில் முண்டியடித்துக்கொண்டுபோய் இன்னொரு கவிஞர் உட்கார்ந்தார். கவியரங்க தலைமைக்கு அடுத்தபடியாக போடப்பட்டிருந்த நாற்காலி அது. அப்படி இப்படி அலைந்து, கடைசியாக, கடைசி நாற்காலியில் அமரவேண்டியதாயிற்று.
‘நடுவுல உட்கார இப்படி அடிச்சிகிரானுங்க’ என்று முகம் சுளித்து, உமாபதி நிமிர்ந்ததும், கண்ணில்பட்ட கடிகாரம் மணி ஏழு இருபத்தைந்தை காட்டியது.
உமாபதி இந்த அரங்கத்துள் நுழையும்போது மணி ஐந்து நாற்பது. ஐந்து முப்பதுக்கு தொடங்குவதாக விழா அழைப்பிதழில் போடப்பட்டிருந்தாலும்கூட உமாபதி நுழையும்போதுதான் மேடையில் பேனர் கட்டிக்கொண்டிருந்தார்கள். அரங்கத்துள் அப்போது, விழா நடத்தும் அமைப்பு உறுப்பினர்களையும் சேர்த்து, ஏழு பேர் இருந்தனர். அப்போதே உமாபதிக்குள் லேசான பயம் முளைக்கத் தொடங்கியது. ‘ விழா முடிய ஒன்பது மேல ஆகிடும் போல. சரி... நாம கவித படிச்சதும் பரிசு கொடுப்பாங்க. அத வாங்கிட்டு புறப்பட வேண்டியதுதான். நிகழ்ச்சி நிரலின் படி முதலிலேயே கவியரங்கம். தொடர்ந்து பரிசளிப்புன்னு போட்டிருக்காங்க. எப்டியும் ... ஏழு ஏழரைக்கு நம்ம இங்க இருந்து புறப்பட்டிடலாம்’ என்று நினைத்தார்.
“ அடுத்ததாக... கவிஞர் உமாபதி .. “ என்று கவியரங்க தலைவர் சொல்லிவிட்டு அவரை பற்றிய அறிமுக கவிதை வாசிக்கும்போது சட்டமன்ற உறுப்பினர் அரங்கத்துள் ஆறேழு கதர் சட்டை ஆசாமிகளுடன் நுழைந்தார். கும்பிட்டபடியே இரண்டு பக்கமும் பார்த்து தலையாட்டிக்கொண்டே மேடையில் ஏற... தலைமை கவிஞர் தன் இருக்கையை அவருக்கு கொடுத்துவிட்டு நிற்க, இன்னொரு நாற்காலி மேடைக்கு அவசரமாக ஏற்றப்பட்டது. நிகழ்ச்சி நடத்துபவரின் காதில் சட்டமன்ற உறுப்பினர் ஏதோ சொல்ல.. அவர் நிகழ்ச்சி தொகுப்பு செய்பவரை அழைத்து கிசுகிசுக்க,
“ நமது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்... நமது மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்.. வேறு ஒரு நிகழ்ச்சிக்கு அவசராம செல்லவேண்டி இருப்பதால், அடுத்ததாக அவரது சிறப்புரை. அதைத் தொடர்ந்து கவியரங்கம் தொடரும். இப்போது...”
உமாபதிக்கு இன்னும் அதிகமாய் வியர்த்தது. “ அடப்பாவிங்களா... நான்தாண்டா இந்த விழாவுக்கே மொதல்ல வந்தேன். இப்போ வந்த அவன பேசச்சொல்லி கூப்டறீங்க. என்ன கவித வாசிக்க விட மாட்றீங்களே. இது தமிழுக்கான விழா.... அவுனுக்கும் தமிழுக்கும் என்னடா சம்பந்தம்... அவன சிறப்பு விருந்தினரா கூப்ட்டதே தப்பு. இதுல... கவியரங்கத்த பாதியில நிறுத்திட்டு அவன பேசச்சொல்லி...ஐயோ “
“ அண்ணே ... கோச்சிக்காதீங்கண்ணே..” நிகழ்ச்சி தொகுப்பாளன் உமாபதியிடம் வந்து சொன்னதும், “ இங்க பாரு தம்பி... எம்பொண்டாட்டி ஒடம்பு முடியாதவ. மூட்டு பிரச்சன. பாத்ரூம் போறதுக்கு கூட நான் கை பிடிச்சிதான் கூப்ட்டு போகணும். கொஞ்ச நேரம் பார்த்துக்கச் சொல்லி வாடக இருக்க பாப்பாகிட்ட சொல்லி விட்டுட்டு வந்திருக்கேன். அதுமட்டுமில்லாத எனக்கும் சுகர்... எட்டு மணிக்கெல்லாம் மாத்திர போட்டுட்டு சாப்ட்ரனும். இப்டி பண்றீங்களே தம்பி...” என்றார் கடுகடுப்பாக.
“ அண்ணே... என்ன என்னண்ணே பண்ண சொல்றீங்க. ஐயா என்ன சொல்றாரோ அதன்படிதான் நான் அறிவிக்க முடியும். “ சொல்லிவிட்டு உமாபதியின் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தான்.
செல்போன் அதிர்ந்தது. நெற்றியில் கைவைத்து ஒரு தடவு தடவி விட்டு, உமாபதி எடுத்துப் பார்த்தார். எதிர்பார்த்தபடியே மனைவியிடமிருந்துதான். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், துண்டித்தார். அவர் மீதே அவருக்கு கோவம் வந்தது. இந்த கவியரங்கத்துல கலந்துகிட்டு இப்போ என்னத்த சாதிக்கப்போறோம்.? தமிழ் வாழ்ந்தா என்ன? செத்தா என்ன.? இப்போ நாம தமிழ் மொழி வாழ்கன்னு கவித எழுதிவந்து இந்த மானங்கெட்ட மேடையில படிச்சாதான் அது வாழுமா? சும்மா சுய விளம்பரத்துக்காக நடத்தப்படும் இதுபோல விழாக்கள்ல கலந்துக்காம இருக்கிறதே நல்லது. அஞ்சற மணிக்கு விழான்னு போட்டு... ஏழுமணிக்கு தொடங்கறதும், விழாக்கு சம்பந்தமில்லாதவன வி,ஐ.பின்னு கூப்பிட்டு பேசவைக்கறதும்.. கவிதை எழுதிட்டு வந்து மேடையில படிக்க ஆரம்பிக்கும்போது... பாதியிலே நிறுத்தி கீழ எறக்கி விடறதும்... அப்பப்பா... ‘ உமாபதி புறப்பட்டு போய்விடலாம் என்று எழுந்தபோது... “ கடைசியாக ஒன்றை கூறி முடிக்கிறேன் “ என்று சட்டமன்ற உறுப்பினர் உச்சரிக்க, மறுபடியும் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
அதற்குப்பிறகு அரைமணிநேரம் பேசிவிட்டு, மறுபடி இரண்டு கைகளை கூப்பி கும்பிட்டபடியே அரங்கத்தைவிட்டு வெளியேறினார், சமஉ. அவரை வழி அனுப்ப கும்பலாக வாசல் வரை போனார்கள் பலர்... நிகழ்ச்சி தொகுப்பாளர் உட்பட.
ஐந்து நிமிடம் அரங்கம் சலசலப்புகளால் நிறைந்தது. அதன்பின் அவசரமாக ஓடிவந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், “ கவியரங்கம் தொடர்கிறது ... கவிஞர் உமாபதி தொடந்து கவிதையை வாசிப்பார்”
ஒரு வழியாக அவரும் சக கவிஞர்களும் கவிதையை வாசித்துவிட்டு, முப்பது ரூபாய் பொருமானமுள்ள ஒரு துண்டையும் ஒன்றுக்கும் பொறாத ஒரு சான்றிதழையும் கையில் ஏந்திக்கொண்டு மேடையைவிட்டு இறங்கியபோது, மணி ஒன்பது இருபது.
தன் மனைவி கண்டிப்பாக வசை பாடுவாள்... அழுவாள் ..ஆர்பாட்டம் செய்வாள்... அடுத்து இது மாதிரியான நிகழ்ச்சிக்கு போகமாட்டேன் என்று கேட்டு சத்தியம் வாங்குவாள்... அவளை சமாளிக்க உதவப்போகும் அந்த சான்றிதழையும் துண்டையும் மிக கவனமாக தன் ஜோல்னா பையில் வைத்துக்கொண்டு அரங்கத்தை விட்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறி சைக்கிளை நகர்த்தினார். லேசாக தலை சுற்றியது. அளவுக்கு அதிகமாய் வியர்த்தது. சைலென்ட் மோடில் இருந்து இன்னும் மாற்றாததால், சட்டைப்பையில் இருந்த செல்போன் அதிர்ந்தது. வேகவேகமாக மிதித்தார். எதிரே ஒளிபீச்சிக்கொண்டு வருகிற வாகனங்களால் தடுமாறி தடுமாறி தன் முழு கவனத்தோடு ஓட்டினார். கண்கள் மறைப்பது போல் இருந்தது. வியர்வையை துடைத்துக்கொண்டு வேகமாக மிதித்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம், அவர் போன திசையில், அரசு மருத்துவமனை ஆம்புலென்ஸ் ஒன்று ஒலியெழுப்பியபடியே வேகமாக போனது.
#499
मौजूदा रैंक
45,490
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 490
एडिटर्स पॉइंट्स : 45,000
10 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 4.9 (10 रेटिंग्स)
Hithayadhulla
நல்ல கதை.பெரும்பாலும் கவி அரங்கு வார புத்தகத்தில் வருவது எல்லாம் யார் 'பதவி அந்தஸ்துன்னு இருக்காங்களோ அவங்கதான் இடம் பிடிக்கிறாங்க.ஆனா முடிவு ஏன் சோகமாய் வைத்தீர்கள்//?.'எனது ' கருவேலக் கனவுகள்" கதை படிங்க.வாட்ஸ்அப் .+916380846523
saras
அருமை ஐயா எழுத்தாளர்களின் நிலைமையை அழகாக படம் பிடித்து காடட்டியுள்ளீர்கள்
pragashu
Nice story...
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स