விடுதியில் தற்கொலை

த்ரில்லர்
4.8 out of 5 (82 )

விடுதியின் வெளியே மாணவர்கள் நின்று கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தலைவன் சாவகாசமாக  தூங்கிக்கொண்டிருந்தான்.  சிறிது நேரத்திலே, விழித்துக்கொண்டு  விடுதியில் உள்ள தன் அறையில் இருந்து வெளியே வந்தான்.

இரண்டாம் அடிக்கு மேலே வந்து நின்று கீழே பார்த்தான்.
இந்த கூட்டத்தை  பார்த்தவுடன்  பயமும் பீதியும் சிறிது நேரத்திற்கு  பின், ஒருவகையான  அசட்டுத்தனம் வந்துவிட்டது. அது பின்வருமாறு
  "என்ன எவனாவது மேலேந்து கீழே விழுந்து செத்துட்டானா?" என் தலைவனின் வயிறு சத்தம் போட ஆரம்பித்தது. தேநீர் அருந்துவதற்காக இவன் சாவியையும் பையையும் எடுத்துக்கொண்டு கதவை பூட்டினான். இரண்டு மாடிப்படிகளையும் இறங்கி கீழே வந்து பார்த்தபோது மாணவர் திரள் திரளாக இருந்தனர். அவர்களது பேச்சு சத்தம்  மெதுவாகவும் இலகுவாகவும் பரந்து விரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒருவனிடம் நம் தலைவன் "என்ன நடந்தது?" எனக் கேட்டபோது, அவன் கூறியது தலைவனுக்கு அதிர்ச்சியை அளித்தது. "காதல் தோல்வியினால் ஜந்தாம் பிளாக் விடுதியில் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான்" என்பதே அவன் கூறியது. இதை கேட்ட தலைவன்  பேச்சு மூச்சில்லாமல் சென்றுகொண்டிருந்தான். தலைவன் மேலும் நடந்து விடுதியின் வாசலை அடைந்தபோது இருவர் வழிமறித்து உள்ளே செல் என்றார்கள்.  அப்போதெல்லாம், உள்ளிருந்து யாரும்  வெளியே செல்லவில்லை வெளியிருந்து யாரும் உள்ளே வரவில்லை.விடுதியின் இயக்குனர் அங்கு பணிபுரிவோர்க்கு எல்லாம் பதட்டமும் பீதியும் அவர்களின் முகங்களில் தென்பட்டன.  தூக்கிலிட்டவனின் பெயர் சியாம்.

அந்நாளின் ஆரம்பம் முதல் சொல்லவேண்டுமென்றால் பின்வருமாறு கூறலாம். காலை ஆறுமணிக்கே ஏழரை தலைவனை பிடித்துக் கொண்டது.
படிகளில் ஏறும் போது அவனது செருப்பு படியில் சரியாக படாத படியால் அவன் கிழே விழுந்தான். முட்டியில் பலமாக அடி விழுந்தது. கையில் சிராய்ப்பு ஏற்பட்டு தோல் கிழிந்தது. இந்த கோரம் ஒருபுறமிருக்க காலையில் சியாம் தனது காதலியை நினைத்தான். நெஞ்சமானது பாரமாக மாறியது. அய்யோ என்ன செய்வது என்பன போல்  பல எண்ணங்கள் தோன்றி மறைந்தது. நம் தலைவன் கல்லூரிக்கு சென்றான். சியாமும் கல்லூரிக்கு சென்றான். இருவரும் சேர்நது செல்லவில்லை. ஏன் இருவரும் நண்பர்கள் கூட இல்லை.

இருவரும் ஒரே கல்லூரியே, ஆனால், இருவரும் ஒரே துறையினோர் அல்லர். சியாமிற்கு மீண்டும் மீண்டும் ஒரு வகையான வருத்த உணர்வு வந்து தொண்டையை கவ்வி கொண்டிருந்தது. கல்லூரி இடைவேளையில் கூட அவன் வருத்தபட்டு கொண்டுதான் இருந்தான். அவனது நண்பர்கள் அதை கவனிக்க வில்லை சியாமும் அதை முகத்தில் காட்டவில்லை. முன்பெல்லாம், தன் காதலியுடன் சண்டை என்றாலே ஒரு வகையான வருத்தம் என்றாலே சியாம் கண்ணாடி துண்டை கையில் லேசாக செலுத்தி எடுப்பான் அல்லது கையிலே கீரல் போடுவானாம் அதுவும் இல்லைஎனில் மது அருந்துவானாம். இப்படியெல்லாம் அவன் இறந்த பிறகு பலர் பேசினர்.

கல்லூரி இடைவேளைக்கு பிறகு, நடந்த இரண்டு வகுப்புகளில், சியாம் நண்பர்களால் சிறிது வருத்தபட்டான். பல சந்தர்ப்பங்களில் ஒரு சில ஆசிரியர்கள் இவனையே குறிவைத்து வகுப்பு மாணவர்களை சிரிக்க வைப்பர். துரதிர்ஷ்டவசமாக ஐந்தாவது வகுப்பு அப்படி சியாமுக்கு அமைந்து விட்டது. துயரகடலிற்கு அணை போட்டு கஷ்டபட்டான். ஆனால் இப்போது அது எளிதில் உடைந்து விட்டது. இது போதாது என்று விடுதியில் அவன் அறையில் உள்ள மாணவனோடு மனஸ்தாபம் வேறு. விடுதியில் உணவு அவ்வளவாக தரமாக இல்லாதது மற்றும் கல்லூரி முன்பே ஒருசிலருக்கு முடிந்தால் அனைவரும் வரும் வரை காத்திருக்க வைத்தது என்று பல விஷயங்களில் விடுதியும் தன் ஆளுமையை நிலைநிறுத்தியது. இப்படி ஒவ்வொருவர் ஒரு ஒரு விஷயங்களில் தங்களை நிலைநிறுத்திகொண்டதால் சியாம் தன்னையும் தன் வருத்தத்தையும் நிலைநிறுத்த முடியாமல் போயிற்று.


அதனால் அவன் பல மனக்குழப்பங்களில் இருந்தான். மனம் ஒன்றை தீர்மானித்து விட்டால் அதை செய்யாமல் விடாது. சியாமிற்கு தற்கொலை எண்ணம் வந்தது. அதனால் அவன் விடுதியின் மதிய உணவை கொஞ்சம் தள்ளி போட்டான். வெளியே சென்றான். சியாம் கயிற்றை வாங்கினான். பின் அதை பையில் மறைத்து வைத்து விடுதியின் அறைக்குள் சென்றான். பின் தனது மதிய உணவை முடித்தான். மேலே வந்தான். தன் அறைக்கு நுழைந்தான். ஏழு பேர் இருக்கும் அறையில் இருவர் மட்டுமே இருந்தனர். இவனுடன் சேர்ததால் மூன்று பேர். மற்ற நால்வர் கடைக்கு சென்றிருக்கலாம். அது இப்போது முக்கியமில்லை. அடுத்த கட்டமாக சியாம் இவ்விருவரும் எப்போது அறையை விட்டு வெளியேறுவார்கள் என்பதை உற்று நோக்கி கொண்டிருந்தான். முன்பே அவனின் காதலியிடமிருந்து புலனத்திலிருந்து(whatsapp) ஒரு அஞ்சல்  வந்திருந்தது. அதை மறுபடியும் பார்த்தான். இப்போது இறக்க துணிவு வந்து விட்டது. அவன் நினைத்தபடியே அவ்விருவரும் துணி வாங்க நண்பர்களுடன் சென்றனர். இப்போது சியாம் மட்டுமே அறையிலிருந்தான். அறையை தாழிட்டான். பின் ஒரு கடிதத்தை சரசர என எழுதி தன் மேசையில் வைத்தான். பின் புலனத்தில் நான் சாக போகிறேன் என ஸ்டேட்டஷ் வைத்தான். பின் படபடப்பு அதிகமாகியது வருத்தமும் நெஞ்சை அடைத்தது கயிறும் அவனது கழுத்தை இறுக்கி அவனைக் கொன்றது. எளிமையாக கூற வேண்டுமெனில்  தற்கொலை செய்து கொண்டான். சியாமின் உயிர் பிரிந்தது. ரொம்ப நேரமாக கதவை தட்டி பார்ததார்கள் பின் கதவை உடைக்க தொடங்கினார்கள். பின் ஒருவன் ஜன்னல் வழியாக பார்ப்பதற்கு ஏறினான். ஒரே கூச்சலிட்டான். பின் கீழே விழுந்தான். இவன் சியாம் தூக்கில் தொங்குவதை பிறரிடம் சொல்லவே அவர்கள் விடுதியின் அலுவலகத்திற்கு விரைந்து சென்று தெரிவித்தனர். விடுதியில் பணிபுரிவோர் விவரமாக காவல்துறையிடம் நடந்ததைக் கூறினர். தலைவன் மதியத்தில் தூங்கி எழுந்த பின்னரே இதை பார்த்தான் அதையே கதையின் தொடக்கத்திலே பார்த்தோம்.


இப்போது கும்பல்  பேசிக்கொண்டிருந்தது பின்வருமாறு
  "உனக்கு தெரியுமா ?? அவனது அறையிலிருப்போரே கூட அவனை தூண்டி இருக்கலாம் சேர்த்துக் கூட அவனை தூக்கு போட வைத்திருக்கலாம்." என்பன போல் பல புரளிகள் கிளம்பின. சியாம் ஆவியாக இவர்கள் பேசியதை கேட்ட போது "டேய் எங்கடா இருந்திங்க நாசா விஞ்ஞானிகளா" என்பன போல் எண்ணினான். "உயிரோடு இருந்தால் தான் துன்படுத்துகிறீர்கள் என்றால் இறந்தபின்னரும் இப்படி படுத்துகிறீர்களேடா பாவிகளா". "நான் மறுபடியும் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எண்ணிய போது தான் தன் தவற்றை அவன் உணர்ந்தான். ஆவியான பின்னர் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும். இவ்வுலகில் இருக்கும் சிலர் நாம் இருந்தாலும் சரி இறந்தாலும் சரி நம்மை வருத்தபடவைப்பதற்காக பேசுவார்கள். அதற்காக தற்கொலை செய்ய கூடாது என்பதை இறந்த பின்னரே புரிந்து கொண்டான் சியாம். இருப்பது ஒரு உயிர் எத்தனைமுறை தற்கொலை செய்வாயப்பா?? உன் உயிரை நீ இழந்து பல நிமிடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது என்றது அவனது மனம்.இறந்த பின்னரே சியாம் தனது தவற்றை உணர்ந்தான் என்றாலும் அவன் மெய்யையும்(உடலையும்) மெய்யையும்  உணர்ந்தான் என்பதே மெய்யாகும்.

உடலானது உயிருக்கு கவசம். திருமூலர் வாக்குப்படி உடலையும் வளர்ப்போம் உயிரையும் காப்போம்.
விடுதி இயக்குனர் சியாமின் பெற்றோரிடத்து செய்தியை தெரிவித்தனர். அவனது பெற்றோரின் மனநிலையானது புயல் அச்சுறுத்தும் செடியை போல இருந்தது. அச்செய்தி புயலாகவும் மனமானது தைரியமற்ற செடியை போலிருந்தது. காவல்துறை அதிகாரிகள் வந்து அவன் எழுதிய கடித்தை கைபற்றினர். பின் சியாமின் உடல் எடுத்து செல்ல பட்டது. அப்போது நமது தலைவனால் புரிந்து கொள்ள முடியவில்லை எது உண்மை என்று. விடுதியின் இயக்குனர் கூறிய செய்தி அதாவது இச்செய்தியை பரப்ப வேண்டாம் அதை மாணவனோடு மாணவனாக துயரத்தை கடப்போம் என்றார்கள்.

ஒரு முழு பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போல் என்பது தலைவனின் நினைவுக்கு வந்தது. மேலும் அஞ்சலி கூட்டத்தில் பல அலைபேசிகள் ஒலி எழுப்பி கொண்டிருந்தது தலைவனுக்கு எரிச்சலை ஊட்டியது. இழப்பு இழப்பு தான் என்று அவர்கள் கூறும் போது அது அப்பெற்றோக்கு தான் பெரிய இழப்பு உங்களுக்கு எங்கே என்பன போல் தோன்றியது. அதன் பின் இரவில் ஒரு சிலர் நன்றாக உறங்கினர். ஒரு சிலரோ பயத்தில் தூக்கமே வரவில்லை. அதன் பின் கல்லூரியில் மூன்று நாட்களும் விடுதியில் மூன்று நாட்களும் சியாமின் பெயரைக் கூறி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவனது பெயர் ஒலிக்கபடவே இல்லை. தலைவனின் சிந்தனையோடு இக்கதையை முடித்துவிடுவோம் . அவனுடைய தாய் மட்டும் அவளது இறுதிமூச்சு வரை அவனையே நினைத்துக் கொண்டிருப்பார்.

 மனிதன் இருக்கும் போது பேசப்படுகிறோம் இறந்தபிறகு, எல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்கு மட்டுமே அதன் பின் யாரும் நினைவு கூற கூட வாய்ப்பில்லை என்பதே மெய். குடும்பம் திவசத்திற்கு மட்டும் மறுபடி நினைவு கூர்வர் படையல் வைக்கபட்டாலும் அதை உண்ண நாம் இருக்க மாட்டோம். அதுவும் நிலையானதில்லை என்பதே உண்மை தோழர்களே... இதை நாம் உணர்வோமாக உடலை காப்போமாக உயிரை வளர்ப்போமாக....

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...