JUNE 10th - JULY 10th
காலையில் இருந்து இத்துடன் நான்கு புடவைகளை மாற்றி விட்டாள். "இத எதுக்கு உடுத்த? உன் கலருக்கு இதெல்லாம் தேவையா?" என்று ஒவ்வொருவரும் கேட்க, கேட்க, அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை...
ஒரு வழியாக இந்த புடவை அனைவர்க்கும் திருப்தியாக இருந்தது...
"புடவைல என்ன இருக்கு?" என்று கேட்க நினைத்தாள்... முடியவில்லை...
கேட்கும் நிலையிலும் அவள் இருக்கவில்லை...
கையில் கண்ணாடி வளையல்களை அணிந்தாள்...
சில வளையல்கள் உடைந்தன அவள் மனம் போலவே...
உடைந்து உடைந்து நொறுங்கி நொறுங்கி பழகியே விட்டது அவளுக்கு...
இறுதியாக கண்ணாடி முன்னே நின்று இருந்தாள் பாவையவள்... பெயர் வெண்ணிலா... நிஜத்தில் இல்லாத நிறம் பெயரிலாவது இருக்கட்டும் என்று அவள் பெற்றோர் நினைத்தார்களோ என்னவோ...
அவள் தனது விரல்களால் மையெடுத்து கண்ணில் தடவிக் கொள்ள, "உன் கலருக்கு இதெல்லாம் தெரியுவா போகுது?" என்ற நக்கல் பேச்சுடன் அவள் தங்கை உள்ளே நுழைந்தாள்.
கேலி, இதெல்லாம் அவளுக்கு புதிதல்ல... காயப்படுத்தவில்லை என்று பொய் சொல்ல முடியாது... கடந்து போக பழகி விட்டாள்.
தங்கையை திரும்பி பார்த்து மெலிதாக புன்னகைத்தாள்...
அவள் தங்கை யசோதாவோ மேடிட்ட வயிற்றுடன் பூரிப்புடன் அமர்ந்தவள், "இந்த மாப்பிள்ளையாவது சரி வருமா?" என்று கேட்க, தோள்களை உலுக்கிக் கொண்டாள்.
"ஒவ்வொரு முறையும் உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு அவரை அழைச்சிட்டு வந்து, அவர் எனக்கு இப்போல்லாம் திட்டுறார்" என்றாள்.
விலை போகாத மண்ணாக இருப்பவள், இதற்கு என்ன சொல்ல முடியும்? மீண்டும் ஒரு புன்னகை...
இப்போதெல்லாம் பேசுவது இல்லை... புன்னகை மட்டுமே அவளிடம் மீதம் இருந்தது... அதுவும் உயிர்ப்பில்லாத கடமைக்காக இதழ்களில் தோன்றும் புன்னகை...
யசோதா திருமணம் செய்ததே வெண்ணிலாவை பார்க்க வந்த மாப்பிள்ளையை தான்...
"அக்கா நிறம் கம்மி, எனக்கு தங்கச்சியை பிடிச்சு இருக்கு" என்று சொன்ன மாப்பிள்ளை தங்கையை விலை பேசி விட்டான்...
வெண்ணிலாவிற்கு மணமகன் வரும் வரை காத்திருந்து கடுப்பான மாப்பிள்ளை வீட்டினர் போட்ட சண்டையில் தங்கையின் திருமணம் நடந்தேறியது...
அன்று ஊராரின் பார்வையிலும் பேச்சிலும் சபை நடுவே நிர்வாணமாக நின்ற உணர்வு தான் வெண்ணிலாவுக்கு...
அப்போதும் சிரித்துக் கொண்டு கடந்து போனாள்.
முப்பது வயதை தொட்டு விட்டாள் இன்று...
"முற்றிய கத்தரிக்காய்" என்று அக்கம் பக்கத்தினரின் ஜாடை விமர்சனம் வேறு...
தன்னை பெண் பார்க்க வருபவர்களை எண்ணி எண்ணி களைத்து போனவளுக்கு இது எத்தனையாவது மாப்பிள்ளை என்றும் தெரியவில்லை...
"எனக்கு இப்படி தான் மாப்பிள்ளை வேண்டும்" என்று கேட்கும் நிலையில் அவள் இருக்கவில்லை...
"இரண்டாம் தாரம் என்றால் கூட சம்மதம்" என்று சொல்லும் நிலையில் தான் இருக்கின்றாள்.
ஆம் இன்று அவளை பெண் பார்க்க வருபவன் ஒரு தபுதாரன் தான்...
இப்போதெல்லாம் சலித்து போய் வயது வித்தியாசம் கூட பாராமல் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இருந்தார் அவள் தந்தை...
போன முறை ஐம்பது வயதை நெருங்கும் ஒருவன் பெண் பார்த்து விட்டு சென்றான்...
அவனுக்கும் அவளை பிடிக்கவில்லை... கேட்டால் நிறம் குறைவாம்... ஆனால் அவனுக்கோ தலையில் முடியில்லை...
"ஆண்களுக்கு ஒரு சட்டம் பெண்களுக்கு ஒரு சட்டம்" என்று நினைத்துக் கொண்டாள் பெண்ணவள்...
கண்ணாடி முன்னே நின்று புடவையை சரி செய்த வெண்ணிலாவுக்கு, அவள் தாய் சமயலறையில் கரித்துக் கொட்டும் சத்தம் கேட்டது...
"இந்த பலகாரம் செய்து செய்து என் கை தேஞ்சு போனது தான் மிச்சம்" என்று புலம்பினார்...
"உன்னை யாரு குரங்கு போல ஒன்ன பெத்துக்க சொன்னா? ரெண்டாவது போல ஒரு கிளியை பெத்து இருந்தா வர்றவன் அள்ளிட்டு போய் இருப்பான்" என்றார் அங்கே வெற்றிலை சப்பிக் கொண்டு இருந்த வெண்ணிலாவின் பாட்டி...
"பாவக்கோட்டை போட்டா சுரைக்காயா முளைக்கும்? உங்க பையன் கலர்ல பொறந்து தொலைச்சிட்டா படுபாவி, நம்ம உசிரை எடுக்கிறதுக்கு அவ பொறக்காமலே இருந்து இருக்கலாம்" என்றார் அவள் தாய்...
சட்டென நிமிர்ந்து தன்னை மீண்டும் கண்ணாடியில் பார்த்தாள். அதுவரை அலங்காரத்தில் கொஞ்சம் அழகாக இருப்பதாக நினைத்து இருந்தவளுக்கு, இப்போது குரங்கு போல தான் தனது தோற்றமே தெரிந்தது...
குரங்கு என்னும் வார்த்தை கூட வலிக்கவில்லை, ஆனால் பிறக்காமல் இருந்து இருக்கலாம் என்று அவள் தாய் பிறந்ததற்கே திட்டியது வலித்தது...
இந்த அவமானங்கள், கேலிகள் எல்லாம் புதிது அல்ல, பல வருடங்களாக அவள் அனுபவித்து வருவது தான்...
பெயரைக் கேட்பார்கள்... வெண்ணிலா என்றால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்...
"அமாவாசை", "கருவாச்சி" என்று பட்டப் பெயர்கள் ஏராளம்...
"கருப்பும் நிறம் தானே... ஏன் கேலி செய்கிறார்கள்?" என்று அவளுக்கு அந்த வயதில் தோன்றியது...
ஆனால் இந்த கேலிகளை சகித்துக் கொள்ள முடியாமல். "என்னை ஏன்மா அப்பா போல கருப்பா பெத்த?" என்று சின்ன வயதில் அழுது கொண்டே கேட்டு இருக்கின்றாள்...
"கருப்பா இருந்தாலும் நீ தான் அழகுடி" என்று அவள் அன்னை கொஞ்சுவாள்...
ஆனால் அவரே இன்று அவள் பிறந்ததற்கு திட்டுகிறார்...
அவருமே சலித்து போய் அந்த கோபம் எல்லாம் கொட்டுவது வெண்ணிலாவின் மீது தான்...
ஆனால் அவள் யாரிடம் இந்த வலியையும் கோபத்தையும் கொட்ட முடியும்?
வெள்ளை தான் அழகு என்று நிர்ணயித்து இருக்கும் சமூகத்தின் மீதா?
கருப்பு என்றால் அழுக்கு என்று சின்ன வயதிலேயே குழந்தைகள் மனதில் விஷத்தை விதைத்த பெற்றோரின் மீதா?
யார் மேல் இந்த கோபத்தை கொட்ட முடியும்?
வலியை விழுங்கிக் கொள்வாள்...
அவமானங்களை விழுங்கிக் கொள்வாள்...
அவள் திருமணத்துக்கு நிறம் மட்டும் தடை அல்ல...
அவள் நிறத்தை கண்டு கொள்ளாமல் அபூர்வமாக ஒருவன் சம்மதம் சொல்வான்...
ஆனால் அவனுடன் ஜாதகம் பொருந்தாமல் போய்விடும்...
அப்படி பொருந்தினால் கூட, நிறத்தை காரணம் காட்டி ஊரையே சீதனமாக கேட்பான்...
அவள் தந்தை வழி இல்லை என்று கையை விரித்து விடுவார்...
பெண் பார்த்து பார்த்து அவர்கள் வீட்டின் காஃபி டம்ளர் தேய்ந்து போனது தான் மிச்சம்...
கண்ணாடி முன்னே நின்றவள் காதில், மாப்பிள்ளை வீட்டினர் உள்ளே நுழையும் சத்தம் கேட்டது...
"இந்த மாப்பிள்ளைக்காவது உன்னை பிடிக்கணும்னு வேண்டிக்கோ" என்று அவளிடம் பெரிய மனுஷி போல பேசினாள் அவள் தங்கை...
அவளா வேண்டவில்லை?
திருமணம் நடக்க வேண்டும் என்று தாயுடன் ஏறி இறங்கி கோவில் படிகளும் தேய்ந்து இருக்கும்...
கடவுளுக்கும் அவளை பிடிக்கவில்லை போலும்...
"வெள்ளையா இருந்தா தான் கடவுள் கேட்பதை கொடுப்பார் போல" என்று அவள் நினைக்கும் அளவுக்கு அவள் மனதில் ஆறா வடுக்கள்...
மாப்பிள்ளை வீட்டினர் வந்து இருக்கின்றார்கள் என்கின்ற பூரிப்பு யாரின் முகத்திலும் இல்லை...
முதல் தடவை என்றால் பூரிப்பு வரும்... முந்நூறாவது தடவை பூரிப்பு எங்கனம் வரும்?
"வாங்க வாங்க" என்ற தொனியில் உயிர்ப்பு இல்லை... கடமை இருந்தது...
வெண்ணிலாவும் பூவை எடுத்து தலையில் வைத்தாள்...
வெள்ளை பூ சரம் கழுத்தடியில் தவழ்ந்தது...
நிற வேறுபாட்டை பார்த்து சட்டென்று பூவை பின்னால் தள்ளிக் கொண்டாள்.
மனம் முழுதும் தாழ்வு மனப்பான்மை நிரம்பி வழிந்தது...
பேசி பேசியே அவளை உள்ளே அடைத்து வைத்து இருந்தது சமூகம்...
பூட்டை அவ்வளவு சீக்கிரம் உடைத்துக் கொண்டே அவளால் வெளியே வர முடியவில்லை...
அவள் வகுப்பறையில் பேசினால் கூட அதனை கேட்க யாரும் தயாரில்லை...
"பேச்சுக்கும் நிறத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று அவள் யோசிப்பாள்...
ஆனால் சம்பந்தப்படுத்தி இருந்தது இந்த சமூகம்...
வெள்ளை தான் அழகு என்று சொல்லி சொல்லியே அதனை ஆழ் மனதில் பதிய வைத்து விட்டது இந்த சமூகம்...
மதவெறி ஜாதி வெறி போல நிறைவெறியும் பரவலானது...
சின்ன வயதில் இருந்தே "நீ கருப்பாக இருக்கின்றாய்... அசிங்கமாக இருக்கின்றாய்" என்ற வார்த்தைகளில் எரிந்து சாம்பலாகும் வெண்ணிலாக்கள் இங்கு அதிகம்...
"கருப்பாக இருந்தால் என்ன? அது நிறம் இல்லையா?" என்று நிமிர்வாக கேட்க முடியாமல் கூனி குறுகி தனக்குள் புழுங்கி சாகும் வெண்ணிலாக்கள் தான் அதிகம்...
பெண்களிடத்தில் இருக்கும் கொஞ்சமான தன்னம்பிக்கையை கூட, நசுக்கி மிதிக்கும் நிறவெறி சமூகம் நடுவே தொலைந்து போகும் வெண்ணிலாக்கள் தான் அதிகம்...
கல்யாணம் என்று வந்தால், "பொண்ணு சிவப்பா? கருப்பா?" என்ற ஒற்றைக் கேள்வியில் விலை போகாத மண்ணாக மக்கி போய்க் கொண்டு இருக்கும் வெண்ணிலாக்கள் இங்கு ஏராளம்...
நிராகரிப்பு உச்சம் அடைய அடைய, "யாராவது என்னை கட்டிக்கோங்க" என்று கால் பிடித்து கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் விபச்சார வெண்ணிலாக்கள் ஏராளம்...
சின்ன வயதில் இருந்தே கருப்பு என்னும் வார்த்தையால் கலங்கி நின்று உயிர்ப்பை தொலைத்தவள் தோற்றத்தில் அமாவாசையாக இருக்கலாம், ஆனால் மனதளவில் அவள் எப்போதும் வெண்ணிலா தான்...
வெளியே வந்தவள் தாய் கொடுத்த காஃபி கப்பை வாங்கிக் கொண்டே நடந்தாள் இந்த முறையாவது விலை போய் விட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்புடன்...
முற்றும்
#21
64,213
23,380
: 40,833
485
4.8 (485 )
ESWARI
வெண்ணிலா அது பிறைமதியின் முழுமதி!
vyshusri92
gayathrisampsth75
Super
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50