JUNE 10th - JULY 10th
மரங்களும், மலைகளும் படர்ந்த இயற்கை சூழ் கிராமம் அது. அங்கு அருவிகளுக்கும், பறவைகளுக்கும் கூட பஞ்சமில்லை என்பதை சப்தங்களை வைத்தே உணர்ந்து விடலாம்.வன விலங்குகளின் வருகையும் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அங்கு வாழும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்தனர். காரணம் போலியான அரசியல் பிரச்சாரங்கள் இல்லை, சினிமா கொட்டகைகள் இல்லை, வணிக வளாகங்கள் இல்லை, மின்சார விளக்குகள் இல்லை, ஏன் பேருந்து வசதிகள் கூட இல்லை. இன்று வரை அம்மக்கள் யாரும் மருத்துவமனைக்கு கூட சென்றதாக தெரியவில்லை. அவர்களின் முன்னோர்கள் விட்டுச் சென்ற இயற்கை மருத்துவத்தை தான் அவர்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆங்கில மருந்துகளின் வாடை கூட அவர்கள் அறிந்ததில்லை.
இதன் காரணமாகவே வெளியாட்கள் யாரும் அங்கு உள்ளே வருவதை அவர்கள் அனுமதிப்பதில்லை.அப்படிப்பட்ட ஊரில் தான் பளிச்சியம்மாளும் பிறந்தாள். பளிச்சியம்மாள் என்பது அம்மக்கள் வணங்கும் பெண் கடவுளின் பெயராகும். கடவுளின் பெயர் கொண்டவள் பிறக்கும் போதே ஒரு கால் ஊனத்துடனே பிறந்தாள். அந்த ஊரில் ஊனமாய் பிறந்தவர்களை ஒதுக்கி வைப்பது வழக்கம். ஊரே வணங்கும் கடவுள் பெயர் கொண்டவளை ஊனம் என்பதால் ஊரே ஒதுக்கி வைத்தது. பளிச்சியம்மாள் மனரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டாள். மண்ணில் முளைத்து விட்ட பிறகு வளர்ந்தது தானே ஆக வேண்டும். அப்படி பளிச்சியம்மாளும் வளர்ந்தாள். ஒரு கால் ஊனம் என்றாலும் பளிச்சியம்மா வேகமாக நடப்பதும், ஓடுவதுமாய் என துறுதுறுவென இருப்பாள். ஆனாலும் அவளை சரிசமமாக ஏற்க மறுத்தனர். இதனால் பளிச்சியம்மா பெரும் மன உளைச்சலுக்கு ஆளானாள். தனிமை அவளை ஆட்கொண்டது. மரம், செடி கொடிகளோடு பேசத் தொடங்கினாள். ஒரு கட்டத்தில் அதுவும் அவளுக்கு அலுத்துப் போனது. தான் ஒரு மாற்றுத் திறனாளி என்பதாலே தன்னை வெறுத்தொதுக்கும் கூட்டத்தை பார்த்து தனக்குள்ளே குமுறி குமுறி அழுதாள்.
ஈவு இரக்கமற்ற மனித மனங்கள் தான் உலகின் ஆபத்தான ஆயுதம் என்பதை உணர்ந்தாள். அந்த ஆயுதம் தொடர்ந்து பளிச்சியம்மாவை துன்புறுத்தியதால் ஊரை விட்டு போகலாமா? இல்லை உலகத்தை விட்டே போகலாமா என்று யோசித்தாள். இறுதியாய் ஊரை விட்டு போவதாய் ஒரு மனதாய் முடிவெடுத்தாள். எதிர்வரும் பளிச்சியம்மாள் கோயில் திருவிழாவுக்காக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தாள். திருவிழா நாளும் வந்தது. ஊரே பளிச்சியம்மாள் கோயிலில் கூழ் ஊற்றி திருவிழா கொண்டாடினர். ஆனால் அவள் பெயர் கொண்ட பளிச்சியம்மாளோ ஒற்றைக் காலுடன் எப்படி எட்டு மைல் கடப்பது என்பதை பற்றி தீவிரமாக யோசித்து கொண்டிருந்தாள். ஊரை இருள் சூழந்தது பளிச்சியம்மா மனதிலும் தான்.
ஊர் மக்கள் அனைவரும் திருவிழா கொண்டாட்டத்தில் திளைத்திருந்தனர். அங்கங்கே மரங்களில் தீப்பந்தம் கொளுத்தப்பட்டு ஊரே பிரகாசமாக இருந்தது. ஊர் எல்லையில் இருக்கும் எல்லைச்சாமி காவலர்களுக்கு பளிச்சியம்மா வீட்டில் கறி சோறு சமைத்து கொண்டிருந்தனர். தினமும் ஒவ்வொரு வீட்டில் இருந்து எல்லைச்சாமிகளுக்கு கறிசோறு என்பது எழுதப்படாத விதி. அந்த கறிசோறுக்காகவே நிறைய பேர் வேண்டி விரும்பி எல்லைச்சாமி வேலைக்கு போவார்கள். நாலா பக்கமும் நாலு எல்லைச்சாமி காவலர்கள் ஆந்தை போல கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் கண்ணில் படாமல் யாரும் உள்ளே வருவதோ, வெளியே போவதோ சாத்தியமே இல்லை.அவர்களை தாண்டி எல்லை மீறியவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை. இவர்களை தாண்டி போவதென்பது தற்கொலைக்கு சமமானது. வாரத்திற்கு ஒரு முறை மட்டும் காடாண்டி ஊர் மக்களுக்கு தேவையான பொருட்களை பெரிய மூட்டைக் கட்டி தூக்கி வருவான்.
பளிச்சியம்மாவின் பார்வை முழுக்க காவலர்களின் சாப்பாட்டு மேலே இருந்தது. யாரும் பார்க்காத நேரம் பார்த்து வீட்டில் இருந்த விளக்கெண்ணெயை எடுத்து எல்லைச்சாமி காவலர்களுக்கு செய்யப்படும் கொதிக்கும் கறி குழம்பில் ஊற்றினாள். எல்லைச்சாமி காவலர்களுக்கு கொடுக்கும் சாப்பாடு சாமிக்கு படையல் வைப்பது போல என்பதால் யாரும் உப்பு, காரம் பதம் பார்க்கப்படாமல் கொடுத்து அனுப்புவார்கள். அந்த கறி சோறை எடுத்து போக தூக்குவாளி வந்தான். அவனை ஊரில் எல்லோரும் அப்படி தான் அழைப்பாரகள். பளிச்சியம்மாவின் வீட்டில் இருந்து தூக்குவாளி கறி சோறை எடுத்து செல்வதை பார்த்ததும் தான் பளிச்சியம்மா மனம் குளிர்ந்தாள். ஊரே கோயிலில் கூடியிருந்தது. உடுக்கை, பம்பை சத்தம் மொத்த காட்டையும் அதிர வைத்தது.
பளிச்சியம்மா கையில் ஒரு சாக்கு மூட்டையுடன் தன் பயணத்தை தொடங்கினாள். அவள் நடுகாட்டுக்கு செல்லும் வரையில் உடுக்கை, பம்பை சத்தம் அவளுக்கு துணையாய் வழிநெடுகிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. பளிச்சியம்மா கிழக்கு எல்லையை நோக்கி நடந்தாள். கிழக்கு எல்லை எல்லைச்சாமி காவலன் இப்போது கறி சோறை சாப்பிட்டு கொண்டிருந்தார். பளிச்சியம்மா மறைந்திருந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நினைத்தது போலவே விளக்கெண்ணெய் கறிக் குழம்பு வேலையை காட்டி விட்டது. காவலன் புதரை தேடி ஓடினான். பளிச்சியம்மா அதை சாதகமாக்கி கிழக்கு எல்லையை தாண்டினாள். பளிச்சியம்மாவால் ஒரு கட்டத்திற்கு மேல் நடக்க முடியவில்லை. ஆனாலும் விடாப்பிடியாக காட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற வெறி அவளை நடக்க வைத்தது. ஒரு வழியாக காட்டை விட்டு வெளியேறி ஒரு மண் பாதயை அடைந்தாள்.
அவள் வாழ்நாளில் முதன் முறையாக காட்டை விட்டு வெளியே வந்திருக்கிறாள். இது அவளுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்று சொல்ல முடியவில்லை. ஆனால் ஊரை விட்டு வந்து விட்டோம் என்ற திருப்தி இருந்தது. அன்று பௌர்ணமி என்பதால் நிலா வெளிச்சம் ரொம்ப பிரகாசமாக இருந்தது. அந்த வெளிச்சம் அவளுக்கு பெரும் ஆசுவாசத்தை தந்தது. ஆனால் உடம்பு தான் ஒத்துழைக்கவில்லை உடலெங்கும் வியர்த்து போய் களைத்து இருந்தாள். இதற்கு மேல் அவளால் நடக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். அவள் கால்கள் இரண்டும் தேய்ந்து போய் இரத்தம் கசிந்து, வீங்கியிருந்தது. அவள் வந்தடைந்த மண் பாதையும் மனிதர்களற்றதாகவே இருந்தது. பளிச்சியம்மாளின் மனமும் அதைத்தான் எதிர்பார்த்தது. காட்டில் அவள் மிருகங்களை விட மனிதர்களை பார்த்தே அதிகம் பயந்தாள். அவள் வேண்டுதல் எல்லாம் ஒன்று தான் அவளை தீண்டும் கண்கள் அவளை கருணையோடும், அருவருப்போடும் பார்க்க கூடாதென்பது மட்டுமே. ஆனால் இந்த பிரபஞ்சத்தில் அவையெல்லாம் சாத்தியமே இல்லை. அவள் இளைப்பாறுவதற்காக மண்பாதை பக்கத்தில் இருந்த மரத்தடியில் அமர்ந்தாள். உடல் அலுப்பு அதிகமாக இருந்ததால் மரத்தடியில் இளைப்பாறியவள் தூங்கி போனாள்.
தூரத்தில் ஏதோ ஒரு சத்தம் அவள் காதில் ஒலிக்க, லைட் வெளிச்சம் அவள் கண்களை கூச செய்தது. கண்களை மெல்ல விழித்தாள். சற்று தூரத்தில் ஏதோவொன்று வருவதை பார்த்தாள். அதற்கு முன்பு வரை அது மாதிரியான ஒன்றை அவள் வாழ்வில் பார்த்ததாக நினைவில் இல்லை. அவள் மனம் முழுக்க பயம் தொற்றிக் கொண்டது. அந்த உருவம் கார் என்பது அவளுக்கு தெரியவில்லை. நாடு நகரமயமாக்கலில் இருந்து நவீனமயமாக்கல் ஆனது வரை போன்ற எந்த வெளிவுலக வாசமும் இல்லாத வனத்திலே பிறந்து, வளர்ந்தவளுக்கு கார் போன்ற இயந்திர வாகனம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். கார் அவளை பார்த்த மாதிரி கோணத்தில் நிறுத்தப்பட்டது.கார் லைட் வெளிச்சம் இப்போது இன்னும் அதிகமாக அவள் கண்களை கூச செய்தது.உடனே கார் லைட் நிறுத்தப்பட்டு கார் கதவு திறக்கப்படுகிறது. காரில் இருந்து அடர்ந்த தாடியும், நீண்ட கூந்தலும் கொண்ட ஒருவர் இறங்கினார். கூடவே ஒரு நவீன உடையணிந்த பெண்மணியும் இறங்கினார். அவர்களை பார்த்ததும் பளிச்சியம்மா சற்று பயந்தாள். "யார் மா நீ ? இங்க என்ன பண்ற? என்று அந்த தாடிக்காரர் கேட்க, அவள் பதில் எதுவும் பேசாமல் பேய் முழி முழித்தாள். உன் வீடு எங்க இருக்கு? என்று அந்த பெண்மணியும் தன் பங்குக்கு கேட்டாள். இந்த கேள்விக்கும் அவள் பதில் சொல்லாமல் பயந்தபடியே இருந்தாள். ஒரு வேள அவளால பேச முடியாதோ? என்று அந்த பெண்மணி தாடிக்காரரிடம் கேட்க, பளிச்சியம்மா அழ ஆரம்பித்து விட்டாள். "சரி சரி அழாத நீ எங்க போகணும்னு சொல்லு கூப்ட்டு போய் விட்டறோம்" என்று அந்த பெண் சொல்ல, பளிச்சியம்மா அழுவதை நிறுத்துவதாக இல்லை. அந்த பெண் பளிச்சியம்மா பக்கத்தில் சென்று நடுங்கி கொண்டிருந்த அவள் கைகளை பிடித்த பிறகு தான் அழுகை மெல்ல குறைந்தது. அந்த பெண்மணி தாடிக்காரரை பார்க்க, தாடிக்காரர் காரில் இருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து பளிச்சியம்மாளிடம் கொடுத்தார். பளிச்சியம்மாவிற்கும் நா வறண்டு இருந்ததால் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கி குடித்து தாகத்தை தணித்தாள். இப்ப சொல்லு யார் நீ? எங்க போகணும்? என்று மீண்டும் தாடிக்காரர் கேட்க, "இங்க இருந்து என்ன கூட்டு போய்டுங்க வேற எதுவும் கேக்காதீங்க" என்று கை எடுத்து கும்பிட்டாள். தாடிக்காரரும், அந்த பெண்மணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். sகார் பளிச்சியம்மாளை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டது.
கார் மண் சாலையில் இருந்து கரடுமுரடான சாலையில் போய் கொண்டிருந்தனர். காரில் யுவன் பாடல் ஒன்று ஒலித்து கொண்டிருந்தது. இளையராஜா இசையே பெரிதும் பரிட்சயமில்லாத ஊரில் இருந்து வந்தவளுக்கு யுவன்ஷங்கர் ராஜா பாடல் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. பாடலின் இடையே தாடிக்காரர் பளிச்சியம்மாளை பார்த்து பேச்சை தொடங்கினார். என் பேரு பிரபாகரன் உங்க பேர் என்ன? என்று கேட்க, "பளிச்சியம்மாள்" என்றாள் மெல்லிய குரலில், "வாவ் நைஸ் நேம்" என்றாள் அந்த நவீன யுவதி. என் பேரு "கேப்ரியல்லா பிரபாகரன்" என்றாள் அந்த நவீன யுவதி. பளிச்சியம்மா என்ன கடவுள் பெயரா? என்று பிரபாகரன் கேட்க, "ஆமா அது எங்க குலதெய்வம்" என்றாள் பளிச்சியம்மாள்.
"நாங்க ரெண்டு பேரும் டாக்குமெண்ட்ரி டைரக்டர்ஸ் அப்றம் ஹஸ்பண்ட் அண்ட் வொய்ப்" என்றான் பிரபாகரன்.
அப்டினா? என்று திருப்பி கேள்விக் கேட்டாள் பளிச்சியம்மாள்.
"ஊர்ல நடக்கற முக்கியமான விஷயங்களை, பிரச்சினைகளை படம் புடிச்சி காட்டுவோம்" என்றான் பிரபாகரன்.
படம்னா ? என்று மீண்டும் கேள்வியை கேட்டாள் பளிச்சியம்மாள்.
படம் தெரியாதா ? என்று கேப்ரியல்லா ஆச்சர்யமாக கேட்க, தெரிஞ்சா ஏன் அப்படி கேக்க போறா? என்று பிரபாகரன் பதில் சொல்கிறான்.
"அப்ப கேமராவும் அவளுக்கு தெரிஞ்சிருக்காதுல்ல? என்று மீண்டும் கேள்வியை எழுப்பினாள் கேப்ரியல்லா. பிரபாகரன் ஆமாம் என்பது போல தலையசைத்தான். ட்ரைபலா இருப்பாளோ? என்று மீண்டும் கேப்ரியல்லா கேட்க, ஆமாம் என்பது போல பிரபாகரன் மீண்டும் தலையசைக்கிறான். உன் ஊர் எது? என்று கேப்ரியல்லா திரும்பி பளிச்சியம்மாளிடம் கேட்க, "இருளூர்" என்றாள். அந்த ஊர் பெயரை கேட்டதும் பிரபாகரன் காரை நிறுத்தி விடுகிறான். இருளூரா? என்று பயத்துடன் கேட்க, பளிச்சியம்மா ஆமா என்பது போல தலையசைக்கிறாள்.
"அந்த ஊருக்குள்ள யாரும் உள்ளயும் போவ முடியாது, வெளியவும் விடமாட்டாங்களே நாங்களே ரெண்டு, மூணு தடவ போக முயற்சி பண்ணோம் முடியல" என்றான்.
"அந்த ஊர்ல மனுஷ கறி எல்லாம் சாப்டுவாங்களாமே உண்மையா" என்று கேப்ரியல்லா ஆர்வமாய் கேட்க, பட்டென நெருப்பு பார்வையை உமிழ்ந்தான் பிரபாகரன்.
அந்த நெருப்பு பார்வையில் கேப்ரியல்லா சற்று பயந்து தான் போனாள். பிரபாகரன் கோபப்படுவது அரிதினும் அரிதான விஷியம்.ஆனால் அது நிகழ்ந்தால் அதன் தாக்கம் ரொம்ப உக்கிரமாக இருக்கும். இந்த முறையும் அந்த உக்கிரம் கேப்ரியல்லாவை ஒரு வழி செய்து விட்டது. நிலைமை புரிந்து கேப்ரியல்லா மௌன விரதத்தை மேற்கொண்டாள். பிரபாகரன் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தான்.மண் சாலையில் இருந்து தார் சாலைக்கு மாறுவதற்கான இடைவெளி நான்கு மைல் தூரம் இருந்தது. இந்த காட்டு பகுதிக்குள் பெரும்பாலும் வெளியாட்கள் யாரும் வருவதில்லை.அப்படி வருபவர்கள் வெளிப்புற பகுதியை மட்டும் சுற்றி பார்த்து விட்டு கிளம்பி விடுவார்கள். பிரபாகரனும்,கேப்ரியல்லாவும் இருளூர் பற்றி விஷியம் தெரிந்து டாக்குமெண்டரி எடுப்பதற்காக தான் வந்தனர். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று வந்த அன்றே தெரிந்து கொண்டனர். யார் யாரையோ வைத்து முட்டி மோதி பேசி பார்த்தனர். ஆனால் இருளூரில் அவர்களை அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி காட்டை விட்டு வெளியேற நினைத்த போது தான் பளிச்சியம்மாள் அவர்கள் கண்களில் ஆட்கொண்டாள். இருளூரை தான் படம்பிடிக்க முடியவில்லை அந்த ஊரை சேர்ந்த பெண்ணிடமாவது விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்பதே அவர்களின் உள் நோக்கமாக இருந்தது.
பிரபாகரனால் கார் ஓட்ட முடியவில்லை. கண்கள் அசதியில் சொருகின. கேப்ரியல்லாவும் பாதி தூக்கத்தில் இருந்தாள். பளிச்சியம்மாளுக்கு இந்த காட்டை விட்டு போனால் போதும் என்ற மனநிலையில் இருந்ததால் ஆந்தை போல கொட்ட கொட்ட முழித்திருந்தாள்.
காரில் பழைய பாடல் ஒன்று எப்.எம்மில் ஒலித்து கொண்டிருந்தது. பிரபாகரன் இப்போது முக்கால்வாசி தூக்கத்தில் இருந்தான். கார் பாதை போகும் போக்கில் தன்னிச்சையாக போய் கொண்டிருந்தது. திடீரென ஒரு உருவம் கார் முன்னே தோன்ற, பளிச்சியம்மாள் கத்தி அலறினாள். முக்கால்வாசி தூக்கத்தில் இருந்த பிரபாகரன் முழுதாய் முழித்து சடாரென்று காரை நிறுத்தினான். காரின் மீது அந்த உருவம் மோதி அந்தரங்கத்தில் பறக்க, அவனோடு சேர்ந்து அவன் கொண்டு வந்த பெரிய மூட்டை ஒன்றும் சிதறி விழுந்தது. அதுவரை தூக்கத்தில் இருந்த கேப்ரியல்லா அவசரமாய் விழித்துக் கொண்டாள். பிரபாகரனின் மனம் பெரும் பதட்டத்தில் இருந்தது. பரபரப்பாய் காரில் இருந்து இறங்கி அடிப்பட்ட வரை நோக்கி ஓடினான். கூடவே கேப்ரியல்லாவும் இறங்கி ஓடினாள்.
சாலையின் ஒரு ஓரத்தில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார் காடாண்டி. அவரை அப்படி பார்த்ததும் பிரபாகரனும், கேப்ரியல்லாவும் பயத்தின் உச்சிக்கு சென்றனர். செய்வதறியாது பெரும் பதட்டத்திலே இருந்தனர். பிரபாகரன் அவர் பக்கத்தில் உக்காந்து மூச்சு இருக்கிறதா என்று பார்த்தான். இறுதி மூச்சு மிச்சம் இருந்தது.
"உயிர் இருக்கா" என்று பயத்துடனே கேப்ரியல்லா கேட்க, இருக்கு என்று பிரபாகரன் தலையாட்டினான்.
பளிச்சியம்மாள் மந்திரித்து விட்டது போல காரிலே இருந்தாள்.
"இப்ப இன்னா பண்றது பிரபா" என்று கேப்ரியல்லா கேட்க, "இன்னும் 70 கிலோமீட்டர் தாண்டி போனா தான் ஆஸ்பிட்டல் வரும். ஆனா அது வரைக்கும் உயிர் இருக்குமானு தெரியல" என்றான்.
"ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணா போலீஸ் கேஸ் ஆகுமா" என்று கேப்ரியல்லா கேட்க, ஆமாம் என்று பிரபாகரன் தலையாட்டினான்.
"அப்ப நம்ம லண்டன் போக முடியாதா போச்சு எல்லாம் போச்சு" என்று புலம்ப, "கொஞ்ச நேரம் சும்மா இருக்குறியா" என்று பிரபாகரன் கோபப்பட்டான். காடாண்டி தன் இறுதி மூச்சியை இறுக்க பிடித்திருந்தான். காலை திருவிழாவுக்கு தேவையான பொருட்களை வாங்கி வரவே டவுனுக்கு சென்று வந்தான்.ஊரே காடாண்டிக்காக காத்து கொண்டிருக்கும். ஆனால் காடாண்டியால் அதிகபட்சம் இன்னும் ஒரு மணி நேரம் தாக்குப்பிடிப்பதே அதிகம். இந்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதித்து விட்டால் ஒரு வேளை பிழைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. பிரபாகரன் ஒரு முடிவுக்கு வந்தான்.
"இவர ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணா கூட பொழைக்கறது கஷ்டம் நம்ம கெளம்பலாம்" என்றான்.
"நானும் அதான் சொல்லளாம்னு நெனச்சன்" என்று கேப்ரியல்லாவும் ஆமோதித்தாள்.
இருவரும் மனதை திடப்படுத்தி கொண்டு காரில் வந்து ஏறினர். அவர்கள் காரில் ஏறியதும் பளிச்சியம்மா "அவரு பொழைச்சுக்கிட்டாரா" என்று கேட்டாள். "உயிர் போயிடுச்சி மா" என்று பிரபாகரன் சொன்னான். பளிச்சியம்மா சில நொடிகள் சிலையாகி போனாள். கார் அங்கிருந்து புறப்பட்டது. கார் கண்ணாடி திறந்தே இருந்தது. கார் காடாண்டியை கடந்து செல்ல, பளிச்சியாம்மாள் காடாண்டியை பார்த்து விடுகிறாள். காடாண்டி துடித்துடித்து கொண்டிருந்தார். அதுவரை யார் கார் மீது மோதியது என்று தெரியாமல் இருந்தாள்.
"காடாண்டி அண்ண காடாண்டி அண்ண" என்று கத்தி கூச்சலிட்டாள். பிரபாகரன் "உனக்கு தெரிஞ்சவரா" என்று பிரபாகரன் கேட்க, "ஆமா எங்க ஊரு காடாண்டி அண்ண" என்று அழுதப்படியே சொல்கிறாள்.
"உயிரு போயிடுச்சினு சொன்னீங்க அவரு துடிச்சினு இருக்குறாரு" என்று கேட்க,
"இல்லமா இதுக்கு மேல அவர காப்பாத்த முடியாது அதான்" என்று அவளை சமாதானப்படுத்தினான்.
"நிறுத்துங்க நா எறங்கணும்" என்று மீண்டும் கத்தினாள்.
"சொன்னா கேளு அவர யாராலயும் காப்பாத்த முடியாது" என்று கேப்ரியல்லா சொல்ல, "எங்க குலசாமி பளிச்சியம்மா காப்பாத்துவா" என்று பதில் சொன்னாள். பிரபாகரன் காரை நிறுத்தி விடுகிறான். "இந்த கதவ திறந்து விடுங்க நா எறங்கிக்கறன்" என்று சொல்ல, "இறங்கி இன்னா பண்ண போற நீ இன்னா டாக்டரா" என்று பிரபாகரன் கோபப்பட்டான்.
"நா உங்க கூட வர்ல கதவ தொறந்து வுடுங்க" என்று அடம்பிடித்தாள்.
"லூசு மாதிரி பேசாத இப்ப புலி சிங்கம்லாம் வர நேரம் நீயும் அந்தாளு மாதிரியே சாகப்போறியா இல்ல எங்க கூட பாதுகாப்பா வர போறியா" என்றான்.
"நா செத்தா கூட பரவால்ல உங்க கூட வர மாட்டன். என்ன எறக்கி வுடுங்க" என்று அடம்பிடித்தாள்.
"பிரபா அவ போவட்டும் விடு" என்று கேப்ரியல்லா சொல்ல, "நீயும் புரியாம பேசற இப்ப எறங்கணா அவளுக்கு ஆபத்து" என்றான்.
"காடாண்டியை காப்பாத்தாத உங்கள விட புலி சிங்கம்லாம் ஆபத்து இல்ல " என்று சொன்னதும் இருவரும் அமைதியாகி விடுவது.பிரபாகரன் கார் கதவை திறந்து விடுகிறான்.
பளிச்சியம்மா ஒரு காலை ஊன்றி காரை விட்டு இறங்குகிறாள்.
"எங்கள மன்னிச்சிடு பளிச்சியம்மா" என்று பிரபாகரன் சொல்ல, பளிச்சியம்மா அதை காதில் வாங்கி கொள்ளாமல் காடாண்டியை நோக்கி வேக வேகமாக நடந்து சென்றாள். நிச்சயம் காடாண்டி உயிர் பிழைத்து விடுவார் என்று நம்புவோம்.
தா.கலை ராகவ்
#290
59,673
1,340
: 58,333
27
5 (27 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Paventhan
kajamohideen.jyoti786
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50