JUNE 10th - JULY 10th
அம்மா… அவரு சரியில்லை, என்ற மகளின் கண்களை நேராக பார்த்துக்கொண்டே தைத்துக்கொண்டிருந்த ரவிக்கை துணியை கீழே வைத்தாள் அம்பிகா.
அம்மு… இரண்டு நாட்களாகவே உன் பேச்சு சுத்தமா எனக்கு கோபம் வரவழைக்கிறது. சின்ன வயசிலிருந்தே தன் பொண்ணை போல தான் பார்த்து வாறார்.
ஆமா, பார்க்க தான் பார்க்கிறார்..!
சீ… வாய மூடுடி.மூன்றாம் தரம் பொண்ணுங்க மாதிரி சொந்த அப்பாவை பார்த்து பேசுற.
எனக்கு என்ன ஆனாலும் அந்தாளு தான் பொறுப்பு என்று அம்மு சொன்னவுடனே , தன்னை அறியாமலே கண்ணீர் நிரம்பியது அம்பிகாவுக்கு.
இருவரும் பேசவில்லை. சிறிது நேரத்தில் அம்மு எழுந்து செல்வதை பார்த்துக்கொண்டே கண்ணீரை துடைத்தாள்.
உண்மையில் ஜெயராஜ் இதுவரை அவளிடம் கடிந்துக்கொண்டது கூட கிடையாது. தன் இரத்தம் இல்லை என்பதை உணர்ந்தே இருந்தாலும், அதை ஒருமுறை கூட வார்த்தையில் வெளிப்படுத்தியது கிடையாது என்பதை விட, தனது ஒரே மகள் என்றே தான் சொல்வது அனைவரிடமும்.
அவர் அம்பிகாவை விரும்புவதாக சொன்னபோது, உண்மையில் கையறு நிலையில் கைக்குழந்தையுடன் நின்ற அந்த நொடி சற்று முந்தைய கணத்தில் நிகழ்ந்தது போல இருக்கிறது.
ஆனால் அவர் எப்போதும், " நான் என்ன தான் சொன்னாலும் தந்தை அல்ல, அந்த இடத்தை அபகரிக்கும் எண்ணமும் இல்லை, குறைந்தபட்ச இடைவெளி இருப்பது நமக்குள்ளும், ஊருக்குள்ளும் நல்லது தானே" என்பார்.
அம்மு கேட்டு அம்மாவே தள்ளி போடும் விஷயங்கள் அல்லது கண்டிப்பு கூட அம்பிகா மூலமாக செய்ய வைப்பவர் தன்னை முன் நிறுத்தாமல். அவரை போய் இப்படி... அம்பிகாவுக்கு தூக்கம் வரவேயில்லை.
நர்ஸ் வேலை கிடைத்து இரவு நேர பணிக்கு செல்லும் நாட்களில் கூட வராத பயம், மகள் இப்போது சொன்ன ஒரே வார்த்தையில் நெஞ்சை மொத்தமாக நடுங்க வைத்துவிட்டது.
ஜெயராஜின் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் முகத்தை காண ஏனோ மனம் கசந்தது. உடம்பு அவளையறியாமல் வியர்த்துக் கொள்ள தொடங்கியது.
அம்முவுக்கு கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்றும், அதற்கான திட்டங்கள் பற்றியும் பலமுறை, பேசியும் இருக்கின்றனர். ஆனால் கொஞ்ச நாட்களுக்கு முன்பு இரவு பணி முடிந்து திரும்பிய காலையில், வெளியூர் போவதாக சொல்லி முன்தினம் மாலை கிளம்பிய ஜெயராஜ் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
உண்மையில் அன்று கொஞ்சம் கோபமாக மகளை உடனே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றவர்… நாட்கள் செல்ல செல்ல… அதன் மேல் பெரிய அக்கறை காட்டவில்லை அல்லது அம்பிகா பேச தொடங்கினால் பேச்சை மாற்றுவதில் மிக தெளிவாக இருந்ததை இவளும் கவனித்திருந்தாள்.
அந்த நாளின் காலை வேளை நன்றாக நினைவில் உள்ளது. இருவரையும் சாப்பிட அழைத்தபோது இருவரும் ஒருசேர வேண்டாம் என்றனர். அவர் பொதுவாக எதை சமைத்து வைத்தாலும் குற்றம் சொல்லாதவர் அன்று நேர்மாறாக தட்டை தள்ளி வைத்துவிட்டு பேசாமல் எழுந்து சென்றார். அம்மு அவரை முதன்முதலாக " அந்தாள்" என்று மரியாதை குறைவாக பேசி அதன்பின் ஒரு வாரத்துக்குள் அவரை "அவன்" என்றே சொல்ல தொடங்கியபோது ஒருமுறை முகத்தில் கொடுத்த அறையுடன் நின்றது.
அதன் பின்னர் ஒன்றிரண்டு வாரம் அவர் புதுசாக பயணம் செல்கிறேன் என்று சொல்லி, வீட்டை விட்டு சென்றவர் வந்ததே இன்று தான்.
மனம் எதையெதையோ யோசிக்க தொடங்கியது. ஒருவேளை தவறாக அன்று இரவில்…
ச்சே… அப்படி ஒரு ஆசை வரும் வாய்ப்பு இல்லை… ஆனால் அம்மு இப்போது உண்மையில் பேரழகி தான், யோசித்தால். கூடவே வேலை பார்க்கும் சக நர்ஸ் ஒருத்தி கூட தன் பையனுக்கு இவளை கேட்டாள் அழகை கண்டு.
என்ன தான் பரிவு, அன்பு, நேசம் என வார்த்தைகள் சொன்னாலும் அனைத்திற்கும் அடியில் புதைத்து வைத்திருக்கும் காமம் என்ற கைதி விடுதலைக்கான தக்கம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என எங்கோ படித்தது வேற இந்நேரத்தில் நினைவில் வந்து தொலைத்தது.
மனம் ஏனோ சமநிலை இழக்க தொடங்கியதை அம்பிகாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பி அன்று என்ன நடந்தது என்று கேட்டுவிட மனம் அலைபாய்ந்தது. ஆனால் ஒருவேளை அப்படி ஒரு இரவு கடந்து போயிருந்தால் ஜெயராஜ் ஒத்துக்கொள்வாரா?
அம்முவை தட்டி எழுப்பி கேட்டால் என்ன, என்றும் யோசித்தாள்.உண்மையில் அவளிடம் என்னவென்று கேட்பது. அப்பா, அன்று என்ன செய்தார் என்றா? இதை எப்படி ஒரு அம்மாவாக பெற்ற பெண்ணிடம்… மனம் திக் பிரமை பிடித்தது போல இருந்தது.
இருவரிடமும் கேட்பது எப்படி. என்னவென்று பதில் சொல்வது, ஆறுதல் சொல்வது அல்லது இதை போலீஸ் வரைக்கும் கொண்டு செல்லும் நிலையில் தான் இருக்கிறதா…?
இருவரில் யார் தவறு செய்ய வாய்ப்பு என்று கூட கணிக்க முடியவில்லை. சொந்த மகள் என்பதால் அவள் தவறு செய்திருக்க மாட்டாள் என நம்ப தொடங்கினால் அது இயல்பாகவே அவர் தான் குற்றம் புரிந்தவர் என்ற முடிவுக்கு கொண்டு வரும்.
அவர் தான் அம்முவை கட்டாயப் படுத்தி தவறு செய்ய முயற்சித்திருக்கிறார் என்றாலும், அவரை தான் இந்த வயதில் பிரிய வேண்டியதாகும்.
இதை இப்படியே கடந்து செல்லலாம் தான். அது தனது சுயநலமாக தோன்ற செய்து கொண்டே இருக்கும் வாழ்நாள் முழுமைக்கும். தூக்கம் வராமல் இரத்தம் சூடாகி கொண்டே சென்றது அம்பிகாவுக்கு.
மெதுவாக ஜெயராஜின் நெஞ்சில் கைவைத்து உலுக்கினாள். மிக நிதானமாக கண் திறந்து பார்த்துவிட்டு என்ன...? என்றான்.
நெஞ்சுக்குள்ள ஒரே படபடப்பு போல தோணுது, என்றாள்.
வென்னி போட்டு கொண்டு வரவா என்று வேகமாக எழுந்து உட்கார்ந்தான்.
இல்லை… ஒண்ணுமில்ல. நான் ஒண்ணு கேட்டா வருத்தப்பட மாட்டீங்க தானே.
என்ன… சொல்லு, என்றவாறே அருகில் இருந்த ஜாடியில் இருந்து கோப்பைக்கு தண்ணீரை ஊற்றியபடி கோப்பையை அவளிடம் நீட்டினான்.
இல்ல… அவளுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணி வச்சிடலாமா…?
அவ அதுக்கு சம்மதிப்பாளா?
ஏன்…?
அவகிட்ட கேட்டு, சரி என்றால், அதை தான் செய்து கொடுக்க வேண்டும்.
பிடி கொடுக்காமல், பட்டும் படாமலும் பேசுவதை கேட்ட போது மனம் கோபம் கொண்டாலும் அதை காட்டிக்கொள்ளாமல்… ம்ம் ... சீக்கிரம் அதை செய்தே ஆகவேண்டும் என்றபடி ஜெயராஜின் முகத்தை கூர்ந்து பார்த்தாள். அதில் எந்த வித வேறுபட்ட சலனமும் இல்லை.
மீண்டும் ஜெயராஜ் படுக்க ஆயத்தமாக, இவளும் படுத்தாள். ஆனால் அன்று இரவு என்ன நடந்திருக்கும். ஒருவேளை இருவரும் பரஸ்பர புரிதலுடன்… சீ…சீ…. அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகமாட்டார்கள்.
ஆனால் எதோ ஒரு சபலத்தில்… ஒருமுறை தவறு நடந்து அதை காரணம் காட்டி இருவரும் பரஸ்பர கோபம் கொண்டு அல்லது ஒருவர் நிர்பந்தம் காட்டி அதன் மூலம் சண்டை உருவாகி ...தலை வெடித்து விடுவது போல இருந்தது அம்பிகாவுக்கு.
இனிமேல் அம்முவிடம் வீட்டில் பனியன் போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தீர்க்கமான வார்த்தைகளில் நாளை சொல்லவேண்டும். அதேபோல் இவரிடமும் இனிமேல் மேல் சட்டை இல்லாமல், வீட்டில் வைத்து முகச்சவரம் செய்வதை, சினிமா பார்க்க செல்லும்போது பக்கத்தில் உட்காருவதை எல்லாம் நிறுத்தவேண்டும்.
இவை அனைத்திற்கும் மேலாக இனிமேல் அம்முவின் அறையில் தான் நாளை முதல் தூங்க வேண்டும் என்றும் முடிவு செய்தாள், அம்பிகா.
ஜெயராஜ் அருகில் படுத்திருப்பதையே இப்போது வெறுத்தாள். தூக்கம் வராமல் எழுந்து அம்முவின் அறை நோக்கி நடந்தாள். கதவு எப்போதும் போல பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
உண்மையில் ஜெயராஜ் இப்போது தன்னை பற்றியோ, மகளை பற்றியோ கூட பாராட்டி பேசுவதும் இல்லை. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் மகள் தரக்குறைவாக பேசிய நாள் முதல் இருவரின் செயல்பாடுகளிலும் பல விதமான மாற்றங்கள் இருந்ததை இப்போது நுண்மையாக யோசிக்க முடிந்தது.
அதற்கு பின்னர் அநேகமாக இரவுகளில் அவர் வீட்டில் தங்குவதும் இல்லை அம்பிகா வேலைக்கு இரவில் சென்றால்.
ஒருவேளை அதுவும் ஒரு திட்டம் தானா?
அம்பிகா காலையில் வந்த பிறகு தான் எப்போதும் வந்தார். இரவு நேரத்தில் அம்மு தனியாக இருப்பதை பற்றி கொஞ்சம் பயம் இருந்தாலும் பின்னர் அதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தான் இருந்திருக்கிறாள்.
அடுத்த மாதம் முதல் மீண்டும் இரவு நேரத்தில் தான் பணி. நாளை காலையில் இருவருக்குள் இருக்கும் உண்மையான பிரச்சனையை கண்டடைந்து தான் ஆக வேண்டும்.
காலையில் நேரம் விடிந்தபோதும் மனம் விடியாமல் இருளுக்குள் தடுமாறிய படி தவித்தது.
இருவரையும் ஒருசேர காலை உணவை உண்ண அழைத்தாள் அம்பிகா. இருவரும் நேர் எதிரில் இருந்தபோதும் முகம் பார்க்காமல் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே கேட்டாள்… நீங்க இரண்டு பேரும் இப்போ பேசிக்கிறது இல்லையா?
இருவரும் ஒருசேர அம்பிகாவின் முகத்தை பார்த்தனர்.
முந்திக்கொண்டு ஜெயராஜே சொன்னார்… ஏன்.? இப்படி ஒரு கேள்வி… அப்படி ஒன்னும் இல்லையே…!
நைட் ஷிஃப்ட் எனக்கு அடுத்த வாரம் மீண்டும் தொடங்க போகுது. நீங்க நைட் எங்கயோ போறீங்க. இவ மூஞ்சியை தூக்கி வச்சுகிறா… எதை கேட்டாலும் என்றாள். சாப்பிட்டுக்கொண்டே மெதுவாக தலையை தூக்கி பார்க்கும் வேளையில் அம்முவின் கண்களும், ஜெயராஜின் கண்களும் சந்திப்பதை கண்டு திகைத்தாள்.
மனம் முழுதாக கலங்கியது.வேகமாக எழுந்து அடுக்களை சென்றாள். இந்த வீடு… என் பொண்ணு… அவரு இப்படி… நெஞ்சடைப்பு வருவது போல இருந்தது.
அடுக்களை சென்றவள்… திரும்பி ஒதுங்கி நின்று வேவு பார்ப்பதை போல மெதுவாக இருவரையும் பார்த்தாள். இருவரும் தலை கவிழ்த்து சாப்பிட்டுக்கொண்டே தான் இருந்தனர். ஆனால் அம்முவின் கை நடுங்குவதை காண முடிந்தது. மனம் நம்பாமல் குனிந்து இருவரது கால்களையும் பார்த்தாள். தள்ளியே இருந்தது.
வேகமாக வெளியே வந்த அம்பிகா… கல்யாண புரோக்கர் ஒருவரை உடனே பார்க்கவேண்டும் என்றவாறே மகளின் முகத்தை பார்த்தாள். அவள் அதிர்ச்சியுறுவதை கண்டு திகைத்தாள்.
வெடுக்கென எழுந்த ஜெயராஜ் கைகழுவி அறையை தாண்டி சென்றார். தலை முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பாரம் ஏறியது போல உணர்ந்தாள், அம்பிகா.
நேரம் செல்ல செல்ல… தவிப்பும், மனதின் சமநிலை குலைய தொடங்குவதையும் உணரத்தொடங்கினாள். அம்முவின் அறையை நெருங்கி கண்காணிக்கவும் தொடங்கினாள். விதியின் நல்ல சந்தர்ப்பம் தோதாக வந்தமர்ந்தது. அம்மு குளிப்பதற்கு சென்ற நேரத்தில் வந்த அலைபேசி அழைப்பு…
அந்த குரல் ஜெயராஜ் குரல் போல முதலில் தோன்றினாலும் அது வேறு குரல் என அடையாளம் காண முடிந்தது… "அந்த நைட் உன் அப்பா நம்மை பார்த்த பின்னர் இதுவரை நீ என் அழைப்பை ஏற்கவும் இல்லை… பதில் இல்லை… சாரி அம்மு... சாரி… சாரி" என சொல்லும்போதே அந்த அழைப்பை அணைத்து வைத்தவள், அறையிலிருந்து வெளியேறும் நிமிடம் அம்மு அறைக்குள் வருவதும்… ஜெயராஜ் அறையின் வாசல் கதவை நேர் எதிர் அறையிலிருந்து பார்த்துக்கொண்டே இருப்பதையும் ஒருசேர கண்டாள்...
#754
40,100
100
: 40,000
2
5 (2 )
John Robert
அருமை, நல்ல முயற்சி - தொடருங்கள்
devibharanidevi
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50