JUNE 10th - JULY 10th
நான்கே தெருக்கள் கொண்ட சிறிய கிராமம் அது. கிராமத்திற்கே உரித்தான பச்சை வயல்களுக்கும் குளம் குட்டைகளுக்கும் மாட்டு வண்டிகளுக்கும் ஆலமரத்திற்கும் அங்கு பஞ்சமில்லை. அங்கு இருந்த, வாழ்ந்த எல்லோரையும் எல்லோருக்கும் தெரியும்.
கிராமத்தின் எல்லையில் இருந்த பேச்சியம்மன் கோயில் திருவிழா அந்தப் பகுதியில் பிரபலமானது. சுற்றி இருந்த ஏழு கிராமங்கள் சேர்ந்து அதை விமர்சையாகக் கொண்டாடுவது வழக்கம். ஊர் மக்கள், தொழில் தேடி வெளியே சென்ற பிள்ளைகள், உறவினர்கள் என அனைவரையும் ஒன்றிணைக்கும் அந்த ஐந்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். வானவெளியில் இருந்து பார்த்தால் எங்கனம் சீனப் பெருஞ்சுவர் தெரியும் என்று கூறுகிறார்களோ அதே போல இங்கு அலங்கரிக்கப்பட்ட விளக்குகளின் ஒளி வானவெளியையும் தாண்டித் தெரியும் என்று தோன்றும் அளவிற்கு அவைகள் பளிச்சிட்டன.
இத்தகைய இனிய கொண்டாட்டத்தை என் கண்களால் கண்டது அதுவே முதன்முறை. எனது அம்மா பிறந்து வளர்ந்த கிராமம். ஆனாலும் சிறு வயதில் ஓரிரு முறைகள் வந்ததைத் தவிர பெரிதாக அவ்வூருக்கு வந்ததில்லை. தாத்தாவும் பாட்டியும் இருந்தபோது விடுமுறைகளை அங்கே கழித்த ஞாபகங்கள் சில உண்டு. இருவரும் காலஞ்சென்ற பின் அம்மாவும் கூட அவர் ஊரைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.
சின்னப் பாட்டியின் வற்புறுத்தலின் பேரில் அம்மா இசைய, ஐந்து நாட்களில் அளவில்லா மகிழ்ச்சியை அடைந்தேன். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமாம். இந்த கிராமத்தில் இருக்கும் பஞ்சு கூட பாசம் பேசுமாம். இந்த கிராமத்திற்கு வந்த பின்பே உண்மையான பாசம் என்னவென்று அருமையாக அறிந்து கொள்ள முடிந்தது. தன் பிள்ளை தன் மனைவி தன் குடும்பம் என்று எவரிடத்தும் தன்னலத்தைக் காண இயலவில்லை. பசித்தால் அருகில் உள்ள எவர் வீட்டிலும் நுழைந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் நம் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இராது. எல்லாம் எம் மக்கள் என்ற கோட்பாட்டை பின்பற்றினர் இவ்வூர் மக்கள்.
ஐந்து நாட்கள் திருவிழா முடிய, பாட்டும் கூத்தும் கொண்டாட்டமுமாக இருந்த ஊர் அமைதியைத் தழுவியது. ஊரில் ஒரு வழக்கம் இருந்தது. ஐந்து நாட்களில் திருவிழா முடிந்தாலும் வீட்டிற்கு வந்த உறவினர்கள் ஆறாம் நாளும் தங்கி விட்டுத் தான் செல்ல வேண்டும் - தங்கி விட்டு தான் செல்வார்கள். கொண்டாட்டங்களில் இருந்துவிட்டு ஆறாம் நாள் வெறித்து கிடக்கும் வீட்டைப் பார்த்து மனம் உடையக் கூடாது என்பதால் இந்த வழக்கத்தைக் கொண்டு வந்ததாகவும் அதை மக்களும் மனமார ஏற்றதாகவும் கேள்வியுற்றேன். நில ஒளியில் கூட்டாஞ்சோறு உண்பதும் அதில் சேரும்.
ஆறாம் நாள் மாலை கோவிலுடன் இணைந்த நிலத்தில் உயரமாக நின்று இருந்த ஆலமரத்திற்கு அடியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து அரட்டையில் ஈடுபட்டிருந்தனர். கூட்டாஞ்சோறு ஒருபுறம் தயாராகிக் கொண்டிருந்தது. அவர்களுடன் நானும் என் மாமன் மகளும் சென்று அமர்ந்து கொண்டோம். பெப்சியை உரிந்தபடி அங்கு நடப்பதைக் கவனித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
"திருவிழா முடிஞ்சிச்சு எல்லாரும் வீட்ட பாத்து போவுறதுதே பாக்கி," பெருமூச்சு விட்டுக் கொண்டே கூறினார் ஒரு வயதான பாட்டி. அக்கூட்டத்தில் இருந்த எழுபது சதவீதம் வயதானவர்களே.
"பொண்டுபொடுசுங்க இருந்தா நல்லாதேன் இருக்கு. ஆனா அதுகதுக வேலைய பாக்கணும்ல. அடுத்த வருஷம் வருவாக. விடு முத்து," சமாதானம் கூறினார் வேறொருவர்.
அங்கு இருப்பவர்கள், விட்டுச் செல்லப் போகும் பிள்ளைகளை எண்ணி வருந்தினர் என்றால், நானோ கிடைத்த புதிய உறவுகளை விட்டுச் செல்ல மனம் கசிந்தேன். சிறிது தொலைவில் இருந்த ஆலமரத்திற்கு அடியில் நின்றிருந்த பைக்கின் மீது காலை ஊன்றிக் கொண்டு நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த என் மாமன் மகன் விவேக்கைத் திரும்பிப் பார்த்தேன். நான் வந்து இறங்கிய நாள் அவனை முதன்முறையாகப் பார்த்த போதே எனக்குப் பிடித்து விட்டது. முறை பையன் என்றால் இதுதான் போலும். நான் மீண்டும் அவனை திரும்பிப் பார்க்க அவனும் என்னை பார்த்து புன்னகைக்க வெட்கம் என்னை ஆட்கொண்டு விட்டது. கீழே குனிந்து கொண்டேன்.
"ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்!" எனக்கு எதிரில் இருந்து கேலியுடன் எழுந்த அக்குரல் என் தலையை நிமிரச் செய்தது என்றால் என் நாணத்தை அது அடியோடு அலசியும் சென்றது. பயம் என்னும் போர்வை மேலே படர்ந்தது. முடிந்தவரை பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் குரல் எழுந்த திசையை நோக்கினேன்.
அங்கு குலுமியிருந்தவர்கள் அனைவரும் ஏககாலத்தில், "ஓ! ஓ அப்படியா சங்கதி! ஆ! சரி... சரி...!" என்றெல்லாம் கூச்சலிட்டனர்.
"ஏவ்ளே, பேச்சியம்மனுக்கு அய்யனாரு துணையா நிக்காரு!" என்று ஊருக்கே கேட்கும்படி கூறினார் ஒரு பாட்டி.
"கூட கையில பிடிச்சிட்டு போவச் சொல்லுடி," என்றார் மற்றவர்.
"இதுக்காகவே ஒரு வருச காலம் காத்து கெடாக்காப்புல இருக்கே."
அனைவரும் பரிகாசம் செய்து சிரிக்கின்றனர் என்பது புரிந்த போதிலும் எதைப் பற்றி என்பது விளங்கவில்லை. ஆனால் என்னைப் பற்றி அல்ல என்பது மட்டும் நிச்சயமானதால் ஆசுவாசமடைந்தேன். தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த என் இதயத்தை சரி செய்து கொள்ள மேலும் பெப்சியை உரிந்தேன்.
"சும்மா கெடங்கடி பொசகெட்டவழுங்களா... வருஷா வருஷம் இதுவே வேலையா போடுச்சு இவளுகளுக்கு." என் பின்னால் இருந்து இம்முறை வார்த்தைகள் ஒழிக்க நானும் திரும்பிப் பார்த்தேன். முகத்தில் ஒரு இடம் விடாமல் சுருக்கங்கள் இருந்தன. அதன் ஒவ்வொரு மடிப்பிலும் வெட்கம் மறைந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தது. பேச்சிப்பாட்டியின் வயதான கண்கள் பளிச்சிட்டன. அவரை அறியாமலே அவருடைய தலை திரும்பியது. அதன் வழியை அனைவர் கண்களும் பின்பற்றின. விவேக் நின்றிருந்த இடத்திற்கு அருகில் வெள்ளை சட்டையும் வேட்டியையும் கட்டியிருந்த கூட்டம் ஒன்று நின்றது. அவர்களுள் இருந்து தலை ஒன்று மட்டும் பெண்களின் புறம் திரும்ப, மீண்டும் கொக்கரிப்புகள் தொடர்ந்தன.
"யாரு பாட்டி அது?" என்றேன் ஆர்வம் கரைபுரண்டோட.
"அது அவ ஆளு!" என்றார் பாட்டிகளுள் ஒருவர். "இல்ல... இல்ல... மாமா!" என்றார் மற்றொருவர். சிரிப்பும் கேலியும் பெரிதாகத் தொடர்ந்தது.
"ஏய் சும்மா கெடங்கடி!" பேச்சிப்பாட்டி வாழ்க்கையின் பக்கங்கள் சுருக்கங்களாக மாறிய கைகளை வாயின் மீது வைத்து நாணத்தை மறைத்தபடி சிரித்துக்கொண்டே கடிந்தார்.
"ஆமாங்கடி. அவள பாக்க விடுங்க. பாக்க மட்டும் தான முடியும். அதுவும் இன்னைக்கு மட்டும் தான்." மீண்டும் நகைப்பொலி பெரிதானது. எனக்கோ என் வயது பெண்கள் சுற்றி அமர்ந்து கிண்டலடித்துப் பேசுவது போலத் தோன்றியது.
"சொல்லுங்க பாட்டி!" என்றேன். என்னுடன் சேர்ந்து மாமன் மகளும் ஆர்வத்தைக் காட்டினாள்.
"அம்பது அம்பதஞ்சு வருஷத்துக்கு முன்னால நடந்த கத இது," ஒருவர் கூறினார்.
"அப்ப நம்ப பேச்சிக்கு பண்ணண்டு பதிமூனு வயசு," மற்றவர் கூற, கூட்டாக சேர்ந்து கதையைப் பரிமாற ஆரம்பித்தனர்.
என் கண்முன்னே இருந்த எழுபதுகள் பன்னிரெண்டு பதின்மூன்று வயது சிறுபிள்ளைகளாகவே மாறினர். அவர்கள் விவரித்த காட்சி என் கண் முன்னே நடப்பதைப் போலத் தோன்றியது. பேச்சிப்பாட்டி இளமங்கையாகவும் அய்யனார் தாத்தா இளங்காளையாகவும் காட்சியளித்தனர். உண்மையில் பேச்சிப்பாட்டியை நானாகவும் அய்யனார் தாத்தாவை விவேக்காகவுமே எண்ணிக்கொண்டேன் அவர்களுடைய சிறுவயது முகம் நான் அறியாததால்.
ஐம்பத்தி ஆறு வருடங்களுக்கு முன்...
எட்டு வயதிற்குப் பின் வீட்டை விட்டு வெளியே விடப்படாத பெண் பிள்ளைகள் வருடத்திற்கு ஒரு முறை தான் ஐந்து நாட்களுக்கு வெளியே அனுமதிக்கப்படுவர். பேச்சியம்மன் கோவில் திருவிழா மட்டுமே வீட்டினுள் கட்டுண்டு கிடக்கும் பெண்களுக்கு விடிவெள்ளி.
அவளும் சீவி சிங்காரித்து, தலை நிறைய பூச்சூடி, புதிய சீலையை அணிந்து நெற்றியில் பொட்டிட்டு ஆர்வமாகக் கிளம்பினாள் முதல் நாள் திருவிழாவிற்கு. முந்தைய வருடங்களின் திருவிழாவில் அவள் கண்களில் பட்ட அந்த ஆண்மகன் யாரென அறியாத போதிலும் அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது என்பது மட்டும் நிச்சயம். 'கூட விளையாட வந்தா நல்லா இருக்குமே!' என்றுதான் முதலில் பார்த்தபோது எண்ணியிருந்தாள். அவன் யாரென எவரிடமும் விசாரிக்க இயலவில்லை. விசாரித்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்றும் தெரியவில்லை. ஒவ்வொரு திருவிழாவிற்கும் அவனைப் பார்ப்பதுண்டு. அவனும் அவளை பார்ப்பதற்காகவே அவளுடைய குடும்பத்தினருக்கு பின்னாலே வருவதுண்டு. சிறுவயதில் உடன் விளையாடி இருக்கக்கூடும் ஆனால் அதுவும் சரியாகத் தெரியவில்லை. எது எப்படியோ அவனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
'இந்தத் திருவிழாவிற்கு வருவானா? அவனைப் பார்ப்போமா?' என்று மனதில் தோன்றிய உவகையில் கிளம்பினாள்.
வீட்டின் கதவைத் தாண்டிச் செல்கையிலேயே அவளுடைய கண்கள் தெருவைத் தேடித் தவித்தன. எதிர் வீட்டுத் திண்ணையில் நண்பர்களுடன் இணைந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் தன்னை அறியாமலேயே நாணம் மேலோங்கியது அவளுக்கு. இருவர் கண்களும் அந்த வினாடி கலந்தது. அதற்கு மேல் அவனை நிமிர்ந்து பார்க்க அவளால் இயலவில்லை. தலையைக் குனிந்து கொண்டே முன்னால் நடந்தாள். ஒரு வருடத்தில் அவனுடைய உயரம் கூடியிருந்தது. அரும்பு மீசை முளைத்திருந்தது. அரைக்கால் சொக்காய் போட்டுக் கொண்டிருப்பவன் முழுக்கால் சொக்காய் அணிந்திருந்ததையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.
வீட்டின் பெரியவர்கள் பாதுகாப்பு வளையம் அமைக்க, பெண் பிள்ளைகள் நடுவே நிறுத்தப்பட்டு பத்திரமாக அழைத்துச் செல்லப்படுவர். அன்றும் அதே வழக்கம் பின்பற்றப்பட்டது. அவனும் எப்போதும் போல் அவர்களைத் தொடர்ந்தான். அந்த ஆண்டு அவனுக்கோ சிறிது தைரியம் ஏற்பட்டிருந்தது போலும். யாரும் அறியாமல் குருவி ரொட்டி, கமர்கட்டு, திருவிழா முட்டாய் என்று பண்டங்களை எல்லாம் அவளுடைய கையில் திணித்து விட்டு நடந்தான். கொடுப்பவை எல்லாம் பாதியாகவே இருந்தது. மீதி பாதி அவனுடைய பங்கு. அவளும் புன்னகைத்தபடி எவரும் அறியாமல் அவற்றை வாயில் போட்டு ருசித்துக் கொண்டாள்.
இரண்டாம் நாள் அவனுடைய தைரியம் அவளுக்கும் பற்றிக் கொண்டுவிட்டது. பிறந்த தைரியத்தில் கடைக்கண்ணால் பார்த்து சில சைகைகளைச் செய்தாள். பயாஸ்கோப் பெட்டியை ஒருவன் தூக்கிக் கொண்டு வர, அவனை ஓரிடத்தில் நிறுத்தி அவன் முதலில் ஒன்றரை பைசா கொடுத்து அதன் நிகழ்ச்சிகளைப் பார்த்தான். சில திரைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு அதை ஓட்டும் போது அவர்கள் நடனமாடுவதைப் போல பிம்பம் தோன்றியது. கருப்புத் துணியின் அடியில் இருந்து எழுந்தவன், மேலும் ஒன்றரை பைசாவை பயாஸ்கோப்காரனுக்குக் கொடுத்துவிட்டு அவளிடம் சைகையில் வந்து பார்க்குமாறு கூறினான். அவளும் பதுங்கி ஓடி வந்து பயாஸ்கோப்பின் கருப்புத் துணிக்குள் ஒழிந்து கொண்டாள். கூட்டம் அலைமோதியதால் அவளை யாரும் கவனிக்கவில்லை.
ஒருவழியாக இருவரும் பேசும் சந்தர்ப்பம் அன்று கிடைத்தது. இருவரும் அருகருகே நடந்தனர் ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. அவளோ யாரையோ தேடுவது போல பாசாங்கு செய்து கொண்டே நடந்தாள். எவரேனும் பார்த்து விட்டால், தான் தொலைந்து விட்டதாக நடித்து விடலாம் அல்லவா?
"எம் பேரு அய்யனாரு. உம் பேரு என்ன?" என்றான் அவன்.
"பேச்சியம்மா." மெதுவாக நாணத்தில் நனைந்து வெளிவந்தது அவள் பெயர்.
"நல்ல பேருதேன். என்ன உனக்கு புடிச்சிருக்கா?" என்றான். எதிர்பாராமல் வந்துவிட்ட அவன் கேள்வியை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. நாணம் அவளைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தது. அவள் கண்கள் மட்டும் அவனை ஏரெடுத்து நோக்கின. அதுவும் ஒரு வினாடியே. அதற்கு மேல் அவளால் அவனை நோக்க முடியவில்லை. அவனிடம் இருந்து ஓடி விட வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவானேன்? ஆகவே அந்த நினைப்பை விட்டு விட்டு விடை கூற முற்பட்டாள்.
அவளுடைய தயக்கத்தை அறிந்து கொண்டவன், "இனிமே எப்ப இந்த சந்தர்ப்பம் கிடைக்குமுன்னு தெரியாது. இப்பவே சொல்லு புள்ள!" என்றான் உணர்ச்சி பொங்க. "எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு. சின்ன புள்ளையிலிருந்தே எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். உனக்கு?".
அவளுக்கும் தான். ஆனால் அந்த பதிலை அவள் அவனிடம் கூறும் முன்னரே அவளுடைய குடும்பத்தினர் அவளைத் தேடிப் பிடித்து விட்டனர். தூரத்திலேயே அவர்களைப் பார்த்தவள் பேசாமல் மௌனம் சாதித்து விட்டு அவர்களுடன் சென்றுவிட்டாள்.
மூன்றாம் நாள் கோவிலில் பூசைக்குச் செல்ல பழங்கள் பூக்கள் மாலைகள் என தட்டுக்கள் வரிசையாக வைத்து எடுத்துச் சென்றனர். கோவிலின் வாயிலில் அவனுடைய தரிசனத்தை பெற்று, அம்மனின் தரிசனம் பெற உள்ளே நுழைந்தாள். அவனும் அவளை பின்தொடர்ந்ததைக் கடைக்கண்ணால் பார்த்து தெரிந்து கொண்டாள். வெட்கம் கலந்த புன்னகை ஒன்றை அவன் மீது வீசிவிட்டு சன்னதியை அடைந்தவள் அம்மனின் முன்னால் வணங்கி நின்றபோது, அவள் மனம் முழுவதிலும் அவனே நிறைந்து கிடந்தான். அவனுக்கும் சேர்த்து அம்மனிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தாள் அந்தப் பைங்கிளி.
"பேச்சி, அந்த பூக்கூடைய எடு தாயி..." என்று யாரோ கேட்க, பூக்கூடையை எடுத்துக் கொடுக்க கீழே குனிந்த போது மஞ்சள் தாலி ஒன்று அவளுடைய கழுத்திற்கு கீழே தொங்குவது தெரிந்தது...
கதை கூறிய பேச்சிப்பாட்டி இந்த இடத்தில் சிறிது தாமதிக்க, கனவுலகத்தில் அக்கதையை காட்சியாகக் கண்டு கொண்டு இருந்த நான் நினைவுலகிற்குத் தள்ளப்பட்டேன்.
"தாலி கட்டிட்டாரா...?" என்றாள் என் மாமன் மகள். நாடியை கையில் முட்டுக்கொடுத்து சுவாரசியமாகக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவள்.
"சும்மா இருடி." மெல்ல அவளைத் தட்டினேன். தாலி கட்டி இருந்தால் கணவன் மனைவியாக அல்லவா வாழ்ந்து இருப்பர். ஐம்பது வருடங்கள் கழித்தும் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்க மாட்டார்களே என்ற எண்ணத்தில்.
"அதுக்குள்ள எம் மாமா அவுக கைய புடிச்சு ஒரு தள்ளு. ஆளு கூட்டத்துல எங்கேயோ போயி விழுந்துட்டாக!" பெருமூச்சு ஒன்று வெளிவந்தது பேச்சிப்பாட்டியிடம் இருந்து.
"அப்புறம் என்ன ஆச்சு?"
"அன்னைக்கு ராத்திரி என் மாமா கூட எனக்கு கலியாணம் ஆச்சு!" மேலும் ஒரு பெருமூச்சு வெளியே வந்தது.
"இப்ப உன்ன தடுக்க எவுகளும் இல்லடி, பேச்சி. அய்யனார்ட கேப்பமா?"
"அட சும்மா கிடங்கடி இவளுகளா!" கூறிய போதே அவருடைய கண்கள் அய்யனார் தாத்தாவை பாசமாக வருடியது. வெட்கம் கலந்த புன்முறுவல் ஒன்று அரும்பியது.
கண்களால் மட்டும் காதல் செய்வதும் சாத்தியமே!
#577
42,017
350
: 41,667
7
5 (7 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Niveditha
Super. Sweet love story.
salinideviar87
Nice
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50