மடிப் பூக்கள்

காதல்
4.9 out of 5 (15 )

ஒன்றரை மாசத்துக்கு முன்னதான சாமி ஒரு ஊசி போட்டோம்?
இப்ப மறுபடியும் எதுக்குடா இன்னொரு ஊசி? மொத தடவ போட்டதுக்கே ஒரு வாரம் காய்ச்சல் வந்து கிடந்தேன், இந்த ஊசி போட்டே ஆகனுமா?
அம்மா அடுக்கடுக்காய் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தாள்.


கொரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி போட அம்மாவை வீட்டுக்கு பக்கத்திலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூட்டி போயிருந்தேன். கூட்டம் அவ்வளவு இல்லை ஆனாலும் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டி டோக்கன் கொடுத்து மரத்தடியில் உட்கார சொன்னார்கள்.


செம்மயிற்கொன்றை மரம் அது. (Royal Poinciana) மரத்தை சுற்றி நான்கு பக்கமும் அமர்வதற்கு ஏற்ப கருங்கல்லை போட்டிருந்தார்கள் . அம்மா வோடு நானும் சென்று காத்திருக்க துவங்கினோம். செம்மயிற்கொன்றை மரம் முழுக்க பச்சை படர்ந்து சிவப்பு ரத்தினத்தில் மகுடம் சூட்டியது போல பூக்கள் பூத்து குலுங்கியது.
அது ஒரு இளவேனிற் காலம். வருகிற வழி முழுக்க பூக்களால் நிறைந்திருந்தது. ஏதாவதொரு பெயர் தெரியாத பூவை பார்க்கிற போது பரவசமடைகிற மனமொன்றுதான் பூமியை இன்னுமொரு நாள் கூடுதலாக சுழல வைக்குமென நம்புகிறவன் நான். அதே பரவசத்தோடுதான் அந்த மரத்தினடியில் உட்கார்ந்திருந்தேன்.


எதிரே ஒரு வேப்பமரம் இருந்தது, இதே போன்று கல்திட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மரத்தில் தலை சாய்த்து உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ஒரு பெண்மணி அவள் தலையை வருடிக்கொண்டு இருந்தாள், அவளின் அம்மாவாக இருக்கக்கூடும். சட்டென ஏதோ ஞாபகம் வந்தவனாய் அவள் முகத்தை உற்று பார்த்தேன்.


அவளேதானா அது? நினைவுகள் இருபது ஆண்டுகள் சரசரவென பின்னே ஓடி மனதிற்குள் பூவாய் பதிந்து கிடந்த ஒருத்தியின் முகத்தையும் அவளுடனான நினைவுகளையும் மூளை தூக்கி வெளியில் போட்டது. நாங்கள் ஒரு ஹோட்டல் கடை வைத்திருந்தோம்.

அப்போது நான் ஏழாவதோ எட்டாவதோ படித்து கொண்டிருந்தேன். எங்கள் கடைக்கு பின்னால் தான் அவளது வீடு.
ஹோட்டலின் எதிர்புறத்தில் வேளாண் விற்பனை நிலையம் ஒன்று இருந்தது. பெயருக்கு நியாயம் செய்வதற்கென்றே அந்த வளாகம் முழுக்க நிறைய பூ மரங்களை காம்பவுண்ட் சுவரை ஒட்டி நட்டு வளர்த்திருந்தார்கள். மரங்கள் பூக்க தொடங்கிவிட்டால் அந்த வளாகம் பூந்தோட்டமாக மாறி நிற்கும்.


இவள் தினமும் சாலையை கடந்து போய் தன்னுடைய பாவாடையை சுருட்டிப்பிடித்து எல்லா பூக்களிலும் கொஞ்ச கொஞ்சமாய் பறித்து தன் மடியை நிரப்பிக் கொண்டு போவாள். அவள் கடந்து போகிறவரை நான் அவளையே வேடிக்கை பார்த்தபடி இருப்பேன். என்னை கடந்து அவள் போனபிறகு அந்த நாளே வாசமிக்கதாக மாறிவிடும்.


அப்படி ஒருநாள் அவள் பூக்களை பறித்து கொண்டு வரும்போது அம்மா என்னை எதற்கோ அடிக்க துரத்த தெரியாமல் அவள் மீது மோதிவிட்டேன் , மோதிய அதிர்வில் தாங்கி பிடித்திருந்ந பாவாடையை கீழே விட்டு விட்டாள். மொத்த பூக்களும் கீழே கொட்டிவிட்டது . உதட்டை பிதுக்கிகொண்டு அழ தயாராகி நின்றாள். அம்மா என்னை அடிப்பதை நிறுத்திவிட்டு அவளை சமாதான படுத்த தயாரானாள்


சரி! சரி! அழாத. பூ தான? இவன பறிச்சு தர சொல்றேன், என அம்மா அவளை சமாதானபடுத்தி என்னை அவளோடு அனுப்பி வைத்தார். அவள் உயரத்துக்கு எட்டிய பூக்களை ஏற்கனவே பறித்துவிட்டதால் என் உயரத்துக்கு எட்டிய பூக்களை நான் பறித்து கொடுத்தேன். இந்த பூ, அப்புறம் இது, என கை நீட்டியபடி என் பின்னாலேயே பாவாடையை ஏந்தி பிடித்தபடி வந்து கொண்டிருந்தாள்.
ஏற்கனவே பறித்த பூவை தட்டிவிட்டு விட்டேனாம் , மூக்கை விடைத்தபடி பொய் கோபம் காட்டி கொண்டிருந்தாள். அந்த கோவத்துக்கே அவள் முகம் சிவந்திருந்தது. அவள் சொன்ன எல்லா பூவையும் பறித்து கொடுத்த பிறகு சரி இப்படி சிவந்து பூத்திருக்கே இந்த பூவ பறிக்க வேணாமா? அவள் முகத்திற்கு நேரே கைகாட்டி கேட்டேன். அப்போதும் அவள் முகம் சிவந்திருந்தது. ஆனால் நிச்சயம் அது கோவத்தில் அல்ல!


பின்பு அவள் பூ பறிக்க வரும்போதெல்லாம் அவளுக்கு எட்டாத பூவை நான் பறித்து கொடுப்பதும், பறித்த பூக்களில் கொஞ்சத்தை ஹோட்டலில் கல்லாபெட்டியின் பக்கத்தில் இருக்கும் சாமி படத்திற்கு அவள் அம்மாவிடம் கொடுத்துவிட்டு போவதும் வழக்கமாயிருந்தது. இத்தனை பூக்களை பறித்து கொண்டுபோய் இவள் என்ன செய்வாள்? கேள்வி உறுத்திக் கொண்டே இருந்தது அவளிடமே கேட்டேன். பின்ன செடியிலேயே விட்டா வாடி போயிரும்ல என தீவிரமான முகபாவனையோடு சொன்னாள்.

நானும் ஆமா ஆமா வாடிப்போயிரும் என தலையசைத்து விட்டு அடுத்த பூவை பறிக்க நிமிரும் போது அவள் அர்த்தம் விளங்கி அவளை திரும்பி பார்த்தேன். வாய் நிறைய சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள். அப்போதுதான் புரிந்தது கேலி செய்திருக்கிறாள்.

பின்பொரு நாள் அவள் பூவை பறித்து கொண்டு பாவாடையை தூக்கி பிடித்துக்கொண்டு வரும்போது செம்மயிற்கொன்றை பூக்கள் உருகி வழிந்தது போல அவள் பெட்டிகோட் முழுக்க சிவப்பு நிறமாய் இருந்ததை அம்மா கவனித்துவிட்டு அவசர அவசரமாய் அவள் பாவாடையை கீழே உதறிவிட்டு தலைக்கு முக்காடிட்டு அவளை அவள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தாள். அதன் பிறகு அவள் பூப் பறிக்க வருவதேயில்லை.
பூப்பு நன்னீராட்டு விழா என்று அவள் பெயரிட்டு அவள் வீட்டிலிருந்து பத்திரிகை ஒன்று வந்தது. அவளே ஒரு பூவாகியிருந்ததால் அவளுக்கினி வேறு பூக்களின் தேவையிருக்காது என நினைத்து கொண்டேன். ஆனாலும் கூட ஒரு பூவுக்கு பூக்களால் அலங்காரம் செய்தால் எப்படியிருக்கும் என எண்ணிக் கொண்டேன். அங்கு பூத்திருந்த மொத்த பூவையும் பறித்து போய் அவள் தலையில் கொட்ட வேண்டும் போலிருந்தது. அம்மாவிடம் எத்தனை கெஞ்சியும் அதெல்லாம் பொம்பள புள்ளைக சமாச்சாரம் அங்கெல்லாம் நீ வரக் கூடாது என தடுத்துவிட்டாள்.

கடைசியில் அவள் வீட்டு வாசலில் இருந்த தென்னை தடுப்பின் வழியாக தூரத்தில் இருந்து பார்த்தேன். சங்கு பூவின் ஊதா நிறத்தில் புடவை கட்டியிருந்தாள். பூவை விடவும் இவளுக்கு தான் இந்த நிறம் பொருத்தமாய் இருக்கிறதென நினைத்து கொண்டேன். அதன் பிறகு அவள் வெளியில் வருவதேயில்லை.

அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். தினமும் பள்ளிக்கு கிளம்புவதற்கு முன்பு புத்தக பையோடு தயாராகி வந்து பையை ஹோட்டலுக்கு வெளியில் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் வேலை செய்துவிட்டு எனக்கான சாப்பாட்டை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு போவேன். அப்படி ஒருநாள் உள்ளே சென்று வெளியில் வருவதற்குள் ஒவ்வொரு செடியிலிருந்தும் ஒரு பூவை பறித்து வாழை பட்டையில் கட்டி செண்டொன்று என் பைக்கு அருகில் இருந்தது. யாராக இருக்ககூடும் என்ற கேள்வியே எழவில்லை. நிச்சயம் அது அவள்தான். அன்றைக்கு இந்த உலகம் முழுக்க வாசமாயிருந்தது.

அன்பின் பொருட்டு என் வாழ்க்கையில் நான் பெற்ற முதல் பரிசுப் பொருள் அது. அதன் பிறகு யார்யாருடனோ அன்பிற்குள் கொடுக்கவும் வாங்கவும் என எத்தனை பூக்கள் கை மாறிவிட்டது ஆனால் ஒன்று கூட அவள் தந்து சென்ற செண்டை போல மணக்கவில்லை.

வருடங்கள் கழித்து அவள் திருமணத்திற்கு பந்தலில் பூக்கோலம் போடுவதற்கு என்று அவள் வீட்டிலிருந்து பூப் பறிக்க வந்திருந்தார்கள். அப்போதும் கூட கூடை நிறைய பூவை நான்தான் பறித்துக் கொடுத்து வந்தேன். அதற்கு பிறகு அவளை நான் பார்க்கவேயில்லை. இதோ இப்போதுதான் பார்க்கிறேன்.


கர்ப்பிணிப் பெண் என்பதால் முதலில் அவளை கூப்பிட்டு ஊசி போட்டு விட்டு அனுப்பி வைத்தார்கள். எதிர்ப்படும் போது என்னை அடையாளம் கண்டுகொண்டு மெலிதாய் புன்னகைத்தாள்.
"பூப்போல் பூப்போல் என் நெஞ்சை கொய்தவள்
மின்னலாய் மின்னலாய் என் பார்வை பறித்தவள்"
ஹாரிஸின் பாடலொன்று என் சட்டைப்பையின் செல்போனிலிருந்து ரிங்டோனாக ஒலிக்கிறது. இப்போது அவள் கொஞ்சம் அதிகமாய் புன்னகைக்கிறாள்.
பார்வையில் விடை பெற்றுக் கொண்டு அவள் செம்மயிற்கொன்றை மரத்தை கடந்து போகிறபோது எங்கிருந்தோ

காற்று சட்டென வந்து மரத்தை அசைக்கிறது. பூக்கள் சரம் சரமாய் அவள் தலையில் சொரிய அவள் மேடிட்ட வயிற்றை தாங்கி பிடித்துக்கொண்டு நடக்கிறாள்!


என் கண்களுக்கு அவள் மடி நிறைய பூக்களை ஏந்திக் கொண்டு போவது போல் இருக்கிறது.............

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...