கருவேலக் கனவுகள்

கற்பனை
4.6 out of 5 (8 )

அந்தக் காடு மிக அழகாக இருந்தது.நிறைய மரங்களும் செடிகளும் குழுமி அடர்ந்தக் காட்டினைப் போல் பசுமையாக கருவேலச் செடிகளும் வேப்பிலை மரங்கள்,தென்னை மரங்கள்,பேரீத்தம் பழ மரங்கள் என அடடா பார்க்கவே கொள்ளை அழகு.

எவ்வளவு வெள்ளப்பெருக்கிலும் சற்று தளர்ந்தாலும் அழிந்தாலும் வழிவழியாய் தன்தன் இனங்களாய் மீண்டும் வளர்ந்து அந்த மண்ணில் நிலைத்து நிற்கிறது-ஆகவே அழகிய வனமென்றும் கூறலாம்.

கருவேலச் செடிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன. அருகில் இருந்த கருவேப்பிலைச் செடியும் இதனை செவி கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தது.

“அந்த பேரரீச்சம் மரங்களெல்லாம் பாருங்கள்.எவ்வளவு பராமரிப்பு தேவைப்படுது.வாழைத்தோட்டம் அதுக்கெல்லாம் எவ்வள தண்ணி தேவைப்படுது.நமக்கெல்லாம் அப்படியா காய்ஞ்ச நிலத்திலும் காலூன்றி நிற்கிற சக்தி நமக்கு இருக்கு"

இன்னொரு கருவேல மரம் குறுக்கிட்டு,

“அண்ணே அதனோட பழங்கள் எல்லாம் ரொம்ப சுவையா இருக்குமாம்.அதோட மருத்துவக் குணம் வேறு இருக்காம்.சக்கரை நோய் வந்தவங்க கூட அந்த பேரீத்தம் பழத்தை சாப்பிடலாமாம்.ஒரு வித விசேட சக்தி அந்த பழத்துக்கு இருக்காம்.நம்மள வெட்டினா வேலிக்கு பாவிப்பாங்க அவ்வளவுதான்.ஆனா அந்த மரம் இருந்தாலும் பொன்.இறந்தாலும் பொன்.யானை மாதிரி"

தலைமைபோல் தெரிந்த கருவேல மரம் அந்த கருத்தை சொன்ன சின்ன கருவேலத்தை முறைத்தது.

‘விட்டா இவனே நம்ம பேரக் கெடுத்திடுவான் போல'

“யானைக்கு அதனோட பலம் தெரியாதுன்னு சொல்வானுங்க.அது மாதிரிதான் நாமளும்.இப்ப பாரு நம்ம சிறப்பு நமக்கே தெரியாம அடுத்தவனை புகழ்ந்துகிட்டு இருக்க.கொடிய மிருகங்கள் கூட நம்மள கடந்து போக பயப்படும்.நாம வேலியா போறதுலஎல்லாத்துக்கும் எவ்வளவு லாபம் தெரியுமா?”

என்றது ஒருவித அதிகாரத் தோரணையுடன்.

“உண்மைதாண்ணே… ஆனா அவங்களுக்கு பாய்ச்சுற தண்ணியக் கூட பக்கத்துல நம்மாளுங்க இருந்தா விடறதில்லை...உறிஞ்சிடறானுங்க.வேரூன்றி உறிஞ்சிக் குடிக்கக்கூடிய சக்தி நம்மகிட்ட இருக்கு.”

தலைமை கருவேலத்திற்கு சட்டென பொறிதட்டியது.’நம்ம பைய வாயால ஒரு நல்ல ஐடியா கிடைச்சுடுச்சு.இது எப்படி எனக்கு தோணாம போச்சு'

என்று வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

“அது இறைவன் நமக்கு கொடுத்த விசேட சக்தி.அதுனாலதான் நாம முதலிடத்தில் இருக்கோம்"என்றது பெருமையாய் சிரித்தபடி.

பக்கத்தில் இருந்த கருவேப்பிலை மரம் இதைக்கேட்டு குழம்பியது,

‘எதனில் முதலிடம்?’என்று.குறுக்கிட்டது, “அட நிலத்தடி நீரையெல்லாம் நீங்கள்ளாம் உறியரதால உங்கள சுத்தி ஒரு புல் பூண்டு கூட முளைக்கிறதில்ல.ஒரே வறட்சியாகிப் போகுது.எங்களுக்கே நீர் பற்றாக்குறையில தான் ஓடிகிட்டு இருக்கு இந்த நிலமைத் தெரியுமா? இதுலவேற நீங்க முதலிடம்னு சொல்றீங்க...என்னன்னு எனக்கு சுத்தமா புரியலை"

என்று சலிப்பாய் கூற தலைமை கருவேல மரம் அந்த கருவேப்பிலைச் செடியை ஒரு செருக்கோடு பார்த்தது.

“எங்க மகிமை உனக்கு என்னத்த தெரியும் ..?நீ இன்னும் மரமாகலை.நீ மரமானால் எல்லாம் புரியும்..இத்தனை நாள் எங்க பக்கத்துலதானே வளர்ந்து வர்ற?அதுக்கு காரணம் நீ நான் எல்லாம் ஓரே இனம்.அதோ இருக்கானே பேரீச்சைமரம், பாலைவன தேசத்துல இருந்து வந்நவனுங்க.வாழைமரம்,தென்னைமரங்கூட எல்லாம் வெளி தேசம்ந்தான் ”

என்றதும் கருவேப்பிலைச் செடி முழித்தது.

“கருவேல அண்ணே,காலங்காலமா அவங்களும் சரி நாங்களும் சரி இந்த மண்ணுல விளைஞ்சிகிட்டு வர்றோம்.நம்ம மண்ணோட மகிமைத்தெரியாதா உங்களுக்கு?எல்லா மரங்களும் செடிகளும் விளையக்கூடிய தேசம்.அதோட ஏதோ உயர்தர விதைகள் சிலவற்றை கொண்டுவந்திருப்பாங்க.அதுக்காக ஒட்டு மொத்தமா அவங்கள அந்நியமா பாக்கிறது நியாயமில்லை.இந்த மண்ணுக்கே சம்பந்தமில்லாத உங்களதான் மெனக்கெட்டு கொண்டுவந்து இங்க விளைச்சதா கேள்விப் பட்டிருக்கேன்.”

என்றது அழுத்தமாய்.

“தம்பி நீ இன்னும் மரமாகலை.உனக்கு அவ்வளவு விவரங்கள் பத்தாது.உன் தாய் மரம் என் பக்கத்துலதான் அது கடைசி காலம் வரை வாழ்ந்தது.அது இருந்தா இப்ப நீ இப்படி பேசமாட்ட.”

என்ற போது கருவேப்பிலைச் செடி சற்று தனது தாய் மரத்தினை நினைவுக்கு கொண்டுவந்தது.நீர் பற்றாக்குறை காரணமாக முழுவதும் காய்ந்து பட்டுபோன பின்,ஒருநாள் ஏற்பட்ட வெள்ளத்தில் வேரோடு சாய்ந்துவிட்டாள்,நல்ல உணவுடன் ஆரோக்கியத்தோட இருந்திருந்தால் சாய்ந்திருக்க மாட்டாள்,இந்த கருவேலங்கள் தனது தாய்க்கு சேரவேண்டிய நீரை முற்றிலும் உறிஞ்சியதை வெகுநாள் கழித்துதான் கருவேப்பிலைச் செடி உணர்ந்தது.

“தம்பி மெனக்கெட்டு கொண்டுவந்தாங்கன்னு சொன்னியே.அதுல வித்தியாசம் இருக்கு.என்னன்னா நாங்க விஷேசமா வந்தவங்க.அவங்க அவங்களா வந்தாங்க.”

கருவேப்பிலைச் செடி சற்றும் தளராமல் "நம்ம மண்ணோட அவங்கள ஒன்றிணைத்து இன்னிக்கு தளைச்சு விளைஞ்சு நிற்கிறது.அதுல என்ன இருக்கு?

உங்களுக்கு தெரியுமா தென்னை,வாழை போலவே அதனுடைய எல்லா பொருள்களும் பயன்படக்கூடியவை.வாழ்ந்தாலும் பலன்,இறந்தாலும் பலன் என்னை போலவே…” என்று கூறி சிரித்தது.

தலைமை கருவேல மரம் உள்ளுக்குள் புழுங்கியது.’விட்டா நம்மளை மதிக்கமாட்டானுங்க போல'

“தம்பி எல்லாம் அப்படித்தான்.காலங்காலமா வேலிக்கு அதிகம் எங்களதான் பயன் படுத்துறாங்க.வெட்ட வெட்ட வளர்ற சக்தி இறைவன் எங்களுக்கு மட்டுமே கொடுத்திருக்கான்னு நினைக்கிறேன்.”

***

அன்று இரவு ,

பெரிய கருவேலமரம் கார்பன் - டை ஆக்ஸைடை அதிக அளவில் வெளியிட்டு தனது காற்று மாசுபடுதலை ஆரம்பித்திருக்க - எங்கும் நிசப்தம்.

அவனுங்களை இந்த இடத்தை விட்டு எப்படியாவது துரத்தனும்,மற்ற தன் இன மரங்களை அழைத்தது.திட்டத்தை இரகசியமாக கூறியது.

“காகத்தை அழைத்துப் பேசுங்கள் நம்முடைய விதைகளை அதனருகில் போடச் சொல்லுங்கள்.நம்ம இனம் உறிஞ்சுற உறிஞ்சுல சுத்தமா அவனுங்களுக்கு தண்ணியில்லாம தென்னை வாழை பேரீச்சம்னு வாடிப் போய்டுவானுங்க.அப்புறம் தோட்டக்காரன் தன்னால எல்லாத்தையும் விறகாக்க வெட்டிட்டு போய்டுவான்.”

ஒரு மரம் குறுக்கிட்டது, “அண்ணே அந்த மரத்து மேல இப்ப என்னக் கோபம்?”

என்று எதார்த்தமாய் கேட்டது.

தலைமை கருவேலமரம் அதனை முறைத்துவிட்டு, “நீ நம்ம இனமா அவனுங்க இனமா? ஊரெல்லாம் அவனுங்கள புகழ்ந்துகிட்டு இருக்கானுங்க.இப்படியே போனா நாளைக்கு அவனுங்க வம்சம் மட்டும் தளைச்சு பெருத்துப்போகும்.அப்புறம் நாமெல்லாம் காணாம போய்டுவோம்.நம்ம இனம் அழிஞ்சிப் போறத யாரும் நம்மில் விரும்புறீங்களா?”

என்று ஆவேசமாய் கேட்க மற்ற கருவேல மரங்கள் மெளனம் சாதித்தன.

என்ன செய்வெதென்று தெரியாமல் முழித்தன.

“அவனுங்கள கூண்டோட உடனே விரட்ட முடியாது அதுக்கு இப்பவே நம்ம திட்டத்த விதைக்கனும்.முளைப்பிக்கனும்.இப்பவே விதை விதைச்சாத்தான் காலாகாலத்துல முழுசா துரத்தமுடியும்.”

சற்று நிறுத்தி , “இங்க உள்ளவனுங்களிலேயே நம்மிடந்தான் ஆயுதம் இயல்பாகவே இருக்கு.அதோட மத்த மரங்களை விட நாம தான் உசத்தி.”

என்றது பெருமிதமாய்.மற்ற மரங்கள் விளக்கம் கேட்க்கவில்லை.மெளனமாக இருந்தன. ‘மத்தவனுங்கள விட நாமதான் உசத்தினு' தலைமை மரம் கூறியதில் உண்மை உள்ளதா இல்லையா என்றெல்லாம் யோசிக்காமல்

அந்த வார்த்தையால் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தன போலும்.

“தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் நமக்குத்தான் ஆபத்து.நாளையே நம் திட்டத்தை செயலுக்கு கொண்டுவரனும்.”

தலைமை கருவேலத்தின் உத்தரவுக்கு அனைத்து கருவேலங்களும் தலையசைத்தன.

***

மறுநாள் காலை -

மூத்த காகம் ஒன்று அதன் மீது அமர்ந்தது,அதில் சில பூச்சிகளை பிடிக்கலாமா வேண்டாமா என்று கூர்ந்து பார்த்தபடியே கொத்தியது.

பெரிய கருவேலமரம் காக்கையிடம் பேசத்தொடங்கியது.

“அழகான கருநிற காக்கையாரே,எங்களின் பார்வையில் உங்களைப் போன்ற ஒரு சுறுசுறுப்பான பறவைகளைப் பார்த்தது இல்லை.அதுவுன் உங்களின் கருமை நிறமே தனி அழகு"

காக்கை முதலில் தன் இரையில் கவனம் செலுத்தி அதனை முடித்துவிட்டு,சற்றே தலைதூக்கி பார்த்தது.

“அடடே கருவேல மரமே.உங்கள மரத்தில் இரையே கிடைக்காது-இன்றுதான் ஏதோ அதிசயமாய் கிடைத்தது.”

என்றது சிரித்தபடி,

“உங்களுக்காகவே நான்தான் தயார்படுத்தி அது என்மேல் ஊறும்படி செய்தேன்.விஷேசமாக எங்கள் உடம்பில் ஒருவித இனிப்பு பசையை கசிய விடுவதால் அதை விரும்பும் பூச்சிகள் இனி வரத் தொடங்கிவிடும்.எங்கள் இனத்தில் உங்கள் இனத்தோடு வந்தே விருந்து உண்ணவும் வாய்ப்புக்கள் உள்ளது"

“அடடே அப்படியா?”காகம் ஆச்சரியாமாய் கருவேல மரத்தை பார்த்தது.

தலைமை கருவேலமரம் தொடர்ந்தது, “ஆமாம்,அதோடு நீங்கள் இரைக்காக அங்கும் இங்கும் அலைய வேண்டியதில்லை.”

மேலும் தொடர்ந்தது, “சிறு குருவிப் போன்ற பறவைகள்,சிறு விலங்குகள் கூட எங்களிடம் அவ்வப்போது சிக்கிக்கொள்ளும்.நாங்கள் அவைகளை இன்னும் வலுவாகப் பிடித்து வைத்து உங்களுக்கு சுவைமிகுந்த விருந்து தரத் திட்டமிட்டுள்ளோம்.” என்றபோது 'இன்னும் வலுவாகப் பிடித்து' என்ற வார்த்தையால் பயந்துபோய் சற்று பறந்து தள்ளி அமர்ந்தது.

“அடடே என்ன அன்பு உங்களுடையது.உங்களை வீண் என்றுதான் இத்தனை நாள் நினைத்திருந்தேன் "என்று காக்கை பாராட்டியது(!)

ஆனாலும் உள்ளுக்குள் சற்று அச்சம் அதனுள் ஓடியது.நன்றாக காற்று வீசும்பொழுது சிக்கிக்கொண்ட தன் இனத்தில் சில பறவைகளைக் கூட அவ்வப்போது பிடித்து வைத்துக்கொண்டதை எண்ணியபோது அச்சமாகத்தானே இருக்கும்.

ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத காகம் , “என்ன உதவி எதிர் பார்க்கின்றீர்கள் கருவேல மரமே?”என்றது நேரடியாய்.காகம் அறிவாளி.

“அடடே இதுக்கு கைமாறு எல்லாம் வேண்டாம்.ஆனால் சின்ன உதவி.எங்கள் விதைகளை அதோ தென்னை,வாழை,பேரீச்சம் கூட்டத்திற்கிடையே வீச வேண்டும்.அவ்வளவுதான்.” என்றது.

“அட இதுதானா?இத செய்ய மாட்டேனா?சரி உங்கள் வம்சம் அவர்களோடு சேர்ந்து விடப்போகிறார்களா? " என்று காக்கை கேட்க,

“இல்லை.இங்கு உள்ள எல்லோரிடமும் உறவாட விரும்புகிறோம் நட்போடு.ஆங்காங்கே பிரிந்து கிடப்பதால் என்ன பலன்.அதோடு அவர்களுக்கு நாங்கள்தான் அரணாயிருப்போம்.”

என்றது கருவேல மரம். “எங்கள் இனக் கவிஞர் உங்களை பற்றி ஒரு கவிதை எழுதி உங்க பேரையே தலைப்பாக வைத்து பெருமை சேர்த்திருக்கிறார்.அது என்ன தலைப்புப்பா ?” பக்கத்தில் இருந்த ஒரு சிறிய மரத்திடம் கேள்வியை வீச.அந்த மரம், “கருவேலக் காகம்"என்றது மனப்பாடம் பண்ணியதை போல்.

“அடடே என்ன ஒரு அன்பு.எங்கள் இனத்தை பற்றி புகழ்ந்து பாடப்போகின்றீர்களா?”

“ஆமாம் உங்கள் சுறுசுறுப்பு மற்றும் ஒற்றுமை நாடறிந்ததாயிற்றே.அதைப் பற்றி பாடாமல் எங்களால் இருக்க முடியவில்லை.” தலைமை கருவேல மரம் உள்ளுக்குள் நமட்டுச் சிரிப்பை சிரித்து பார்த்துக்கொண்டது.

“சரிதான். எங்கள் இனத்தாரிடம் இதுபற்றி சொல்லி நாளைக்கே வேலையைத் தொடங்குகிறேன்.” சொல்லிவிட்டு காகம் பறந்தது.

“கருவேலமரம் மற்ற மரங்களிடம் கூவின. "அந்த காக்கா பைய என் பேச்சுல மயங்கிட்டான்.இவன பத்தி புகழ நம்ம பேரையே வைக்கனுமா?ஹ்ஹ்ஹாஹா"

“நம்ம திட்டம் நிறைவேறப் போகுது"

கருவேப்பிலை மரம் காதில் கேட்டு,. “என்ன திட்டம் கருவேல மரத் தலைவரே?”என்று வினவ

"நம்ம இனத்தை தோட்டம் முழுக்க பரவவிட்டு

செழிக்கப்போறோம்"என்றது மகிச்சி பொங்க!

கருவேப்பிலை திகைத்தது.மீண்டும் மீண்டும் நம் இனம் என்கிறானே.நம் மணம் என்ன?சுவை என்ன ?அது எதுவும் ஒரு துளிகூட இவனுங்களிடம் கிடையாது.எண்ணத்திலேயும் சரியில்லாதவன்.இவன் பக்கத்துல இருந்துகிட்டு தண்ணிக்கே பற்றாக்குறையால் அடிக்கடி வாடிப்போகிறேன் வேறு.இவனை விட்டு தள்ளிப்போக வாய்ப்பு கிட்டாதான்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கிற நேரத்துல இவன் இப்படி நம் இனம் என்று வேறு புளுகுகிறானே ' என மனதில் எண்ணிக்கொண்டே,

“கருவேலமே எனக்கு முட்கள் இல்லை உங்களைப்போல.நீங்கள் சுவையும் மணமும் இல்லாதவர்கள் என்னைப் போல.அப்படியிருக்க எங்களை எப்படி உங்கள் இனத்தோடு சேர்த்துக்கொள்வீர்கள்?”என்று கருவேப்பிலைச் செடி வினவியது.

“ஹ்ஹ்ஹாஹா..ஹ்ஹ்ஹ்ஹஹஹா.நல்ல கேள்வி தம்பி.நம்ம இனத்திலேயே நீங்கள்ளாம் ஒரு பிரிவினர்.நீங்கள் இரண்டாவது இடத்தில் இருக்கின்றீர்கள்.எல்லவற்றையும் சுற்றி அரணாய் நிற்பதால் நாங்கள் முதலிடத்தில் இருக்கிறோம்.அதோ வேப்பிலை மரமும் நம்ம இனந்தான்.கசப்பதால் அவர்கள் மூன்றாம் இடத்தில்….”

தலைமை கருவேலமரம் லாவகமாக ஆடிக்கொண்டே செருக்காய் சொல்ல,

“அப்போ நான்காம் இடத்தில்?” என்று கருவேப்பிலைச் செடிக் கேட்க,

மற்ற மரங்களை சேர்க்கலாம்.என்ன யாரும் எங்கள் அருகில் வரமுடியாது.இறைவன் இயற்கையாகவே விஷேச சக்தி அதாவது இந்த கூர்மையான 'முள்ள'-தந்து மற்ற மரங்களுக்கு தலைமையாக இருக்க வரம் தந்திருக்கிறான்.”

என்று பெருமிதம் கொண்டது.

கருவேப்பிலை சற்று யோசனையில் ஆழ்ந்து விட்டது.பின்னர் ஆற அமர அருகில் உள்ள வேப்பிலை மரத்தாரிடம் எல்லா விடயமும் கூறி கேள்வி எழுப்பியது.

வேப்பிலை மரமோ பயங்கரமாக சிரித்தது.சற்று நீண்டு நெடிந்து வளர்ந்த பழைய மரம்.உறுதியாக நின்றது பசுமையுடன்.

“கருவேலக்காரனுக்கு புத்தி மட்டு.அவன் அறிவு அவ்வளவுதான்.இவனுங்கள வெட்டி வேலியா போட்டாக்கூட எங்க முளைச்சிடுவானோன்னு பயந்துதான் மக்கள் கூட இப்ப வேலிக்கு பதிலா கம்பிய உபயோகப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க.அவனை உயர்த்தியும் நம்மள தாழ்த்தியும் பார்க்கிறவனால நமக்கு ஒரு போதும் பலன் கிடையாது.நீயோ மணக்கிறாய்.உன் சுவை இந்த மண்ணிற்கே பிடிக்கும்.நானோ கசந்தாலும் மருந்தாக மக்களுக்கு பயன்படும்படி இறைவன் என்னை படைத்துள்ளான்.எனது பழங்களை காகங்கள் விரும்பி உண்ணும்.அது போட்ட எச்சத்தில் என் விதைகள் எல்லா இடத்திலும் பரவிக்கிடக்கும்.

கருவேல இனத்தால் கருவேல இனத்துக்கே பாதுகாப்பில்லை.அப்படியிருக்க அவன் இனத்தோடு நம்மை சேர்க்காதே.” என்றது வேப்பிலை மரம்.

நீயும் நானும் ஓரினம் என்றானே அது வேண்டுமானால் பொருந்தலாம்.தவிர அவன் நம்மை அண்டவிடாதவன்.அடுத்தவன் உணவை உறிஞ்சி வாழ்பவன்.நிலத்தடி நீரையும் உறிஞ்சி ஒரு புல் பூண்டு கூட அவனை சுத்தி முளைக்காது.உனக்கு நீர் பற்றாக்குறை நான் அருகில் இருக்கிறதால ஏதோ உனக்கு ஏற்படலை.நீ மட்டும் தனியா அந்த கூட்டத்தோட இருந்திருந்தா இந்நேரம் வாடி போயிருப்ப.காணாமல் போயிருப்ப.உருப்படாத அவனோடு நம்மை ஒப்பிடுவதா ?”என்று கூறி விலகியது.

கருவேப்பிலைக்கு உரைத்தது. 'சற்று நேரத்தில் கருவேலத்திடம் அதனுடைய சொல்லில் ஏமாறப் பார்த்தேனே '.

***

காகங்கள் தன் ஒப்பந்தத்தை தினமும் நிறைவேற்றத் துவங்கின.

நாளடைவில் கருவேலத்தின் திட்டம் மெல்ல அரங்கேறியது.வாழைமரத் தோட்டம் சுற்றி கருவேலம் வேகமாய் வளர்ந்து வந்தன.வாழைக்கும் தென்னைக்கும், பேரீத்த மரத்திற்கும் அளவுக்கு அதிகமான நீர் கிடைத்ததால்

கருவேலமரமும் மகிழ்வாய் வளமாய் வளர்ந்தன.

தலைமை கருவேலமரம் அந்த மரங்களுக்கு உத்தரவிட்டது. “நீங்கள் எல்லாம் என்ன செய்கின்றீர்கள்?நீரை ஆழமாக உறிஞ்சி எல்லா மரத்துக்கும் பற்றாக்குறை ஏற்படுத்துங்கள்"

“தலைவரே சரிதான்.அந்த மரங்கள் உள்ளதை கொண்டு போதும் என்று இருப்பதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறார்கள்.அளவுக்கு மேலே எங்களாலேயும் அருந்த முடியும்னு தோணலை.என்ன செய்வது?”

என்றது புதியதாய் வளர்ந்த கருவேலம்.

தலைமை கருவேலம் சினங்கொண்டு ஆடியது "முட்டாள்களே நம் பலம் தெரியாமல் எப்படி வளர்ந்தீர்கள்?நிலத்தடி ஆழம் வரை நம்மோட வேர் ஊடுருவி எல்லா நீரையும் குடிக்கமுடியும்.காய்ந்த இடத்திலும் காலூன்ற முடியும்ங்கிறத மறந்துட்டீங்களா?நாமெல்லாம் உயர்ந்த இனம்.நம்மோட வேலையை செய்யாமல் இருந்தால் அது மகா குற்றமாக மாறிவிடும்.”

என்று கர்ஜிக்க புதிய கருவேலங்கள், “சரி தலைவரே இனி அப்படியே நடக்கிறோம்.நம் இனத்தின் மானத்தை காக்கிறோம்"என்று ஒப்புக்கொண்டன.

தலைமை மரம் எகத்தாளமாய் சிரித்தது. ‘திட்டம் தீட்டினா மட்டும் போதாது.நடாத்திக் காட்டுதலே அழகு'

‘எப்படியோ மற்ற மரங்களின் இனங்கள் வளரக்கூடாது.’மனதுக்குள் எண்ணி பெருமூச்சை விட்டது.

அந்த நேரத்தில் அங்கு தோட்டக்காரன் வந்தான். ‘என்ன இது விளைக்காம இங்கு கருவேலங்கள் முளைச்சிருக்கு'என்று சிந்தித்தபடியே நகன்றான்.

***

நாட்கள் நகர்ந்தன.தலைமை உத்தரவிட்ட படி தன் பணியை ஓரளவு இம்மரங்கள் ஆரம்ம்பித்து இருந்தன.

அந்த தாக்கம் தற்பொழுது தென்படத் தொடங்கியிருந்தது.தோட்டக்காரன் வாழைத்தோப்பை பார்வையிடும்போது வருத்தமாக எண்ணினான்,

‘இவ்வளவு தூரம் தண்ணி பாய்ச்சுறோம் அப்படி இருந்தும் குறிப்பிட்ட தூரம் வரை வாழை மரங்கள் கருகி வாடிக் கிடக்கிறதே? மத்த மரங்களும் அப்படியே வாடி கிடக்கிறதென்ன?’

தன் நண்பனை அழைத்து வந்து காட்டினான்,

அவன் சுற்றியும் முற்றியும் பார்த்துவிட்டு, “அட படுபாவி வாழைத்தோப்புக்குள்ள கருவேலத்த நடலாமா?நீ அங்கங்கே நட்டு வெச்சிருக்கிற தென்னமரம் பேரீச்சம் மரம்லாம் கூட இன்னும் கொஞ்ச நாள்ல காணாம போகும் போல.”

என்றான் ஆவேசமாய்.

தோட்டக்காரன் உடனே "தோப்புக்கு வெளியதானே கருவேலம் வளர்ந்திருக்கு.தோப்புக்குள்ள எங்க வளர்த்தேன்.காட்டுபன்னி,எலி கிலி வராம இருக்கும்னு நான்ந்தான் வளரட்டும்னு விட்டேன்.தண்ணியா ஊத்தி வளர்க்கிறேன்?” என்றான்.

“அட கூறு கெட்டவனே,இவ்ளோ நாளு விவசாயம் பண்ற உனக்கு இந்த சேதி கூடயா தெரியலையா? .நிலத்தடி நீரைக் கூட விட்டு வைக்காது கருவேலம்,”

என்றான் நண்பன் “ஆமா கேள்வி பட்டிருக்கேன்.ஆனா இவ்ளோ பாதிப்புன்னு தெரியாம போச்சே...முதல்ல ஆள வச்சி எல்லாத்தையும் வெட்டி போட உடனே ஏற்பாடு பண்றேன்”

பேசிக்கொண்டே வெளிப்பக்கம் வந்தார்கள்.அந்த கருவேலத் தொகுப்பு புதர் அருகே வந்தனர்.தலைமை கருவேலம் சோகமாய் அவர்களை பார்க்க

அந்த நண்பன் தோட்டக்காரனைப் பார்த்து "அடடே பெரிய காடே வளர்த்து வச்சிருக்க போல.இங்க வளர்ந்தாலே போதுமே. சுற்றிலும் உள்ள தோட்டமெல்லாம் தரிசாத்தான் போகும்" என்றான்.

“நான் எங்கப்பா வளர்த்தேன்..ஏதோ அடுப்பெரிக்க வேலிக்குன்னு உபயோகப்படட்டும்னு விட்டது.” என்றான் தோட்டக்காரன்.

“முதல்ல ஆள கூப்பிட்டு இங்கிருந்து ஆரம்பி...ஒரு விசயம் உனக்குத் தெரியுமா நிறைய வளர்ந்த இடத்துல வசிக்கிற மக்களுக்கு இது வெளியிடுற ஒரு வித வாயுவினால மனசுல ஒரு வன்மம்.இறுக்கம் இதெல்லாம் ஏற்படுகிறதுக்கு ஒர் காரணமா இருக்கு.அதன் மூலம் குற்றங்கள் பெருகவும் வாய்ப்பு இருக்கு.அதுவும் மேலோட்டமா வெட்டக்கூடாது.திரும்பி வளர்ந்துரும்.வேரோடு புடுங்க ஏற்பாடு செய்.ஒர் புல்டோசர் கூட தேவைப்படும்.சரி அப்புறம் பாக்கலாம் நான் வாறேன்"

என்று விடை பெற்றனர்.

தலைமை கருவேலமரம் தன்னை நொந்துக் கொண்டது.

***

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...