எக்ஸ்

திகில்
4.9 out of 5 (10 )

பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகரம். இராணுவ குடியிருப்பு வளாகத்தின் 13-A நம்பர் பிளாட். வீட்டின் வாசல் வரை சென்று, கணவனை டூட்டிக்கு வழியனுப்பி வைத்துவிட்டு நேராக வந்து சோபாவில் சரிந்தாள் ராஜேஸ்வரி. உடல் முழுக்க அசதி. குழந்தைக்கும், கணவருக்கும் தேவையானதை செய்து கொடுத்து அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்குள் சர்வமும் ஒடுங்கிவிடுகிறது அவளுக்கு.

வீட்டிற்கு வெளியே யாரோ காலிங் பேல்லை அழுத்தும் சத்தம் கேட்க, கோபத்துடன் முணுமுணுத்துக்கொண்டே சென்று கதவை திறந்தாள். எதிரே நின்று கொண்டிருந்தது விக்னேஷ். ராஜியின் முன்னாள் காதலன்.

பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவேளிக்கு பிறகு எதிர்பாராமல் நிகழ்ந்த சந்திப்பு. நான்கு கண்களும் சந்தித்து கொண்ட நொடியில் இருவரும் சிலை போல் அசையாமல் உறைந்து நிற்க, ராஜியின் கண்களில் காட்டாறாய் பெருக்கெடுத்த கண்ணீர் விக்கியின் கண்களில் குளமாக தேங்கி கிடந்தது. நொடிகள் கனத்த மௌனத்தை சுமந்தபடி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அசைவற்ற உடல்களில் கண்கள் மட்டும் தீராத கதைகளை பேசிக்கொண்டிருந்ததன.

யதார்த்தத்தை உணர்ந்த ஒரு சில நொடிகளில் தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு "உள்ள வா விக்கி" என்று சொல்லி, "உட்காரு" என சோபா இருந்த திசையை நோக்கி கையயை நீட்டினாள். வீட்டின் வெளிக்கதவை முழுவதுமாக திறந்து வைத்துவிட்டு, அவனுக்கு எதிராக இருந்த சோபாவில் வந்து அமர்ந்தாள்.

இருவரின் உள்ளங்களும் பழைய நினைவுகளை கிளரிக்கொண்டிருந்தன.
சோபாவில் சாய்ந்து விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான் விக்கி. வலது காலின் பெருவிரலை தரையில் தேய்த்துக்கொண்டு, கீழே பார்த்தவாரு அமர்ந்திருந்தாள் ராஜி.

சூழ்நிலையின் அழுத்தத்தை இயல்பாக மாற்ற முயன்று மெதுவாக பேச ஆரம்பித்தாள், "எப்படி இருக்க விக்கி?".

"ம்ம்ம்...இருக்கேன்" மேலே பார்த்தவாரே பதில் சொன்னான்.

"நீ?"

"லைப் ஓடிட்டு இருக்கு" என்று சொன்னவள், சட்டென்று "என்ன சாப்பிடுற?...கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு வரேன்" என அவன் பதிலுக்காக காத்திருக்காமல் எழுந்து உள்ளே சென்றாள்.

அவன் எதிர்பார்த்தது போலவே ஆரஞ்சு ஜூஸ் தான். அவனுக்கு என்ன பிடிக்கும் என்பது அவளுக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது.

ஆரஞ்சு ஜூஸ் நிரம்பிய கண்ணாடி டம்ளரை அவனுக்கு எதிரே வைத்துவிட்டு அமர்ந்தவள், "அப்பா,அம்மா எப்படி இருக்காங்க? வைப் என்ன பண்றாங்க? எத்தனை குழந்தைங்க?" என கேள்விகளை அடுக்கினாள்.

"நான் கல்யாணம் பண்ணிக்கல" என்பது மட்டுமே அவனிடம் இருந்து வந்த ஒற்றை பதில்.

அவள் சற்றும் எதிர்பார்க்காத பதில். அவன் சொன்ன பதிலின் தாக்கத்தில் இருந்து வெளியே வர அவளுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. தரையை பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தவள் தழுதழுத்த குரலில் மெதுவாக பேச ஆரம்பித்தாள் "அந்த வருசம் செமஸ்டர் லீவுக்கு ஊருக்கு போனப்போ எல்லாமே கனவு மாதிரி நடந்து முடிஞ்சிருச்சு. நான் ஊருக்கு போன மூணாவது நாள் அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட். பைக்குல போகும்போது லாரி பின்னாடி வந்து இடிச்சிருச்சு. தலையில பலமான அடி. ரொம்ப சீரியஸ்னு ஐ.சி.யு-ல வச்சிருந்தாங்க. பத்து நாள் மூச்சு பேச்சு இல்லாம இருந்தாரு. டாக்டர்ஸ் எதுவும் உறுதியா சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அத்தையும், மாமாவும் தான் கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்க. இருபது நாளைக்கு பிறகு முதல் தடவையா அப்பா கண்ணு முழிச்சு பார்த்தப்ப எங்க எல்லாருக்கும் ஒரே சந்தோசம். ஆனால், அந்த சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்கல. என்னை பார்த்து அழுதுக்கிட்டே இருந்தவரு கொஞ்ச நேரத்துல திரும்பவும் மயக்கம் ஆயிட்டாரு. அடுத்த ஒருவாரத்துக்கு உடம்புல எந்த அசைவும் இல்ல.

ஒரு நாள் இரவு மயக்கத்துல ஏதோ முணு முணுத்துக்கிட்டே இருந்தாரு. பக்கத்துல போய் பார்த்தோம்... 'ஒரே பொண்ணு கல்யாணத்த பார்க்காமயே போக போறேன்'னு சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி புலம்பிக்கிட்டு இருந்தாரு. அந்த சூழ்நிலையிலும் அவருக்கு என்னை பற்றி மட்டும் தான் கவலை. அப்பாவோட புலம்பல, அவங்க அண்ணனோட கடைசி ஆசையா எடுத்துக்கிட்டு அத்தை கடகடன்னு வேலையில இறங்கிட்டாங்க. மிலிட்டரில இருக்குற அவங்க பையனுக்கும் எனக்கும் கல்யாண ஏற்பாடு. அந்த நேரத்துல உண்ண பத்தி பேசுனா எல்லா வகையிலும் சப்போர்ட்டா இருக்க அத்தை கைவிட்டுருவாங்களோங்குற பயம் ஒரு பக்கம். ஒரு வேளை உண்ண பத்தி சொன்னாலும், உங்க வீட்ல சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ற வரைக்கும் அப்பா உயிரோட இருப்பாராங்குற சந்தேகம் ஒரு பக்கம். அப்பா இப்படி இருக்கும் பொழுது சுயநலமா என்னை பத்தி மட்டுமே யோசிக்கிரேனோங்குற குற்ற உணர்ச்சி ஒரு பக்கம். எல்லாத்தையும் சேர்த்து யோசிச்சு முடிச்சப்ப எனக்கு முன்னாடி இருந்தது ஒரே சாய்ஸ் தான். அடுத்த ஒரு வாரத்துல அவசர அவசரமா எங்களுக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சு."

கடைசி வாக்கியத்தை சொல்லி முடிக்கும் பொழுது அவளை அறியாமல் வெடித்து சத்தமாக அழ ஆரம்பித்திருந்தாள். எதையோ நினைத்து நீண்ட நேரம் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள். அவளின் அழுகை இப்போதைக்கு நிற்பதாக தெரியவில்லை. அதுவரை இறுக்கமான மனநிலையில் இருந்த விக்னேஷை ராஜியின் கண்ணீர் முழுதாக கரைத்திருந்தது. அவளை சமாதானம் செய்வதற்காக ஏதோ பேச முயன்றவனை இடைமறித்து உடைந்த குரலில் பேச்சை தொடர்ந்தாள்.

"அப்பா சீரியசான கட்டத்தை தாண்ட இரண்டு மாசம் ஆயிடுச்சு. இந்த கல்யாணத்த அப்பாவுக்காக செஞ்ச தியாகம்னு நினைச்சு தான் மனசை தேத்தி வச்சுருந்தேன். ஆனா அவருக்கு உடம்பு சரியானத்துக்கு அப்புறம்....நான் உனக்கு இவ்வளவு பெரிய துரோத்த செஞ்சுருக்க கூடாதுன்னு தோனுச்சு. அவசரப்பட்டு முடிவெடுத்துட்டோமோன்னு நினைச்சு அழுகாத நாள் இல்லை. எப்படியாவது நடந்த எல்லாத்தையும் எடுத்து சொல்லி உண் கால்ல விழுந்து கதறி அழுகணும் போல இருந்துச்சு. உண்ண காண்டாக்ட் பண்றதுக்கு என்னால முடிஞ்ச எல்லா முயற்சியும் பண்ணி பார்த்தேன். மூணு மாசமா உனக்கு விடாம கால் பண்ணிட்டே இருந்தேன். உன் போன் சுவிட்ச் ஆப்லேயே இருந்துச்சு. உன் ரூம் மேட் ரவி, சங்கர் கிட்டையும் பேசுனேன். நீ வேலைய விட்டுட்டு சொந்த ஊருக்கு போயிட்டதா சொன்னாங்க. அதுக்கு அப்புறம் அவரு கூட காஷ்மீர்ல போய் செட்டில் ஆக வேண்டியதாயிடுச்சு."

நீண்ட பெருமூச்சு ஒன்றை உள்வாங்கி வெளியேற்றிவிட்டு பேச்சை தொடர்ந்தாள்.

"அப்பா உயிரோடு இருந்த வரை வருசத்துக்கு ஒரு தடவையாவது தமிழ்நாட்டுக்கு வந்துருவேன். ஒவ்வொரு தடவை அங்க வரும் பொதும் உன்னை எங்கயாவது எப்படியாவது பாத்துருவோம்ங்குற நம்பிக்கையில தான் வருவேன். ஆனால் ஒரு தடவை கூட அது நடக்கல. உன்னை மாதிரி யாராவது ரோட்டுல நடந்து போனால் கூட, நீயா இருப்பியோனு பக்கத்துல ஓடிப்போய் பார்த்து பலதடவை ஏமாந்துருக்கேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்பா இறந்ததுக்கு அப்புறமா தமிழ்நாட்டு பக்கம் வர வாய்ப்பே இல்லாம போச்சு"

"எனக்கு புரியுது....இதுக்குமேல எந்த விளக்கமும் சொல்லி உன்னை ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத....கொஞ்சம் ரிலாக்சா இரு. பழைய விசயங்கள் எதையும் இனி பேச வேண்டாம்." அழுத்தமாக சொன்னான்.

"பன்னிரெண்டு வருசமா உன்னை பார்த்து பேசனும்னு மனசுக்குள்ள பூட்டி வச்சிருந்த விசயம். உன்ட்ட சொன்னதுக்கு அப்புறம் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு. நீயும் சீக்கிரமா ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க".

"இதுக்குமேல கல்யாணம் பண்ணிக்கிறதா?...என்னால யோசிச்சு கூட பார்க்க முடியாது. இந்த டாப்பிக் வேணாம், வேற ஏதாவது பேசு"

"நீ விரக்தில பேசுற. பிலீஸ், நான் சொல்றத கொஞ்சம் கேளு. இந்த உலகத்துல, எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் யாருக்குமே அவங்க ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கிறது இல்ல. நாம ஆசைப்படுற வாழ்க்கைங்குறது வேற, யதார்த்தமான வாழ்க்கைங்குறது வேற".

"உன் விஷயத்துல என்னால இரண்டையும் வேறவேறயா பார்க்க முடியல".

"உன்னால பார்க்க முடியுது ஆனால் ஏத்துக்க முடியல. உனக்கு புரியிர மாதிரி சொல்றேன்... நாம லவ் பண்ணும் போது, நான் விளையாட்டா அடிக்கடி ஒரு கேள்வி கேட்ப்பேன். நியாபகம் இருக்கா?"

"எந்த கேள்வி?"

" 'ஒரு வேளை நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன பண்ணுவ?'னு கேட்பேன். அதுக்கு நீ என்ன பதில் சொல்லுவங்கிறதாவது நியாபகம் இருக்கா?"

"ம்ம்ம்...நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் உயிரோடவே இருக்கமாட்டேன்னு சொல்லுவேன்".

"ம்ம்ம்...இப்போ புரியுதா... நான் வேறொரு ஆளை கல்யாணம் பண்ணி பன்னிரெண்டு வருஷம் ஆகுது. அதுக்காக நீ சொன்ன மாதிரி செத்தா போய்ட்ட? கஷ்டமா இருந்தாலும் எப்படியோ வாழ்க்கைய ஓட்டிக்கிட்டு தான இருக்க. இது தான் யதார்த்தம்........."

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே காற்றில் மெதுவாக கரைந்து மறைந்து கொண்டிருந்தது அவன் உடல்.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...