JUNE 10th - JULY 10th
அடர்ந்து படர்ந்த மரங்கள். மேகத்தை காடுகளினூடே தொலைத்து மனிதர்கள் வேற்று கிரகத்தில் வாழ்வதைப் போல் ஜீவித்திருக்கிறார்கள். ஒற்றை இறகு விழும் சப்தம் கூட மென்மையான காதுகளுக்கு கேட்கும் என்ற கவிதைக்கு இணங்க அந்த அதிகாலை அவ்வளவு நிசப்தமாக இருந்தது. மதன் என்ற 12 வயதே நிரம்பிய சிறுவன் பசுமை அப்பிய ஏலக்காய் தோட்டத்தின் ஊடாக தன் பாதங்களை பரப்பி நடந்தான். சருகுகளின் முதுகெலும்புகள் முறியும் ஓசையில் வெயிலுக்கு ஏலச் செடிகளினூடே படுத்திருக்கும் மலைப்பாம்பு ஒன்று அசைந்து கொண்டது. அதை அவன் பெரிதும் பொருட்படுத்துவதாயில்லை. எத்தனை காலமாக அவனும் அதற்கு அஞ்சி வாழ்ந்திருப்பான். அதனை அதன் போக்கில் விட்டால் நம்மை ஒன்றும் செய்யாது என்ற சூட்சமத்தை கற்றுக்கொள்ள பல நாட்கள் அதற்கு அஞ்சி ஓட வேண்டியிருந்தது.
வீட்டில் அவனது அம்மா சமையலில் தீவிரமாக இருக்க காலைக்கடனை கழிக்க அவன் அடர்ந்த செடிப் புதர்களுக்குள் சென்றான். அகலமாக தோண்டப்பட்டு இருந்த ஒரு மொட்டை குழியில் நிறைய மரக்கட்டைகளை போட்டிருந்தார்கள். அதனூடே சில இடைவெளிகள் இருந்தன. கழிப்பறை என்ற ஒன்று பிறப்பதற்கு முன்பு அவற்றிற்கு முன்னோடியாய் மனிதர்களின் மலத்தை சுமந்தவை இந்த மொட்டை கிணறுகள் தான். மரக்கட்டைகளினூடே கால்களை மெதுவாக வைத்து நடந்தான். அவனது உடல் அளவிற்கு ஏற்ப உள்ள இடைவெளியுள்ள மரக்கட்டைகளின் இடையே அமர்ந்து காலைக் கடனை முடித்தான்.
மதன் இதுபோல பல கிணறுகளை பார்த்திருக்கிறான். இந்த மலக்குழிகள் ஓரளவு கொள்ளளவு பெற்றவுடன் மூடப்பட்டு விடும். மீண்டும் ஏதாவது ஒரு இடத்தில் தோண்டப்படும். மலம் கழித்துவிட்டு தன் பிட்டத்தை லேசாக இடது கையால் தட்டிக் கொடுத்தான். பின் மெல்ல எழுந்த அவன் கால்கள் ஆற்றை நோக்கி நடக்க துவங்கின. மெல்ல உருண்டோடும் தெளிந்த நீரில் தன் கழிவை சுத்தப்படுத்திக் கொண்டவன் கரும்பாறை நிரம்பிய பகுதியை நோக்கி நீரில் நடந்தான்.
அவனுக்கு கூழாங்கற்கள் என்றால் பெரும் பிரியம். தினமும் ஏதேனும் புது வடிவத்திலும் நிறத்திலும் கூழாங்கற்களை கண்டு விட்டால் அவற்றைத் தேடி எடுத்து அதில் அன்று அவனுக்கு அழகாய் தோன்றும் ஒன்றை எடுத்து அதன் மேனியை தடவிப் பார்ப்பான். பல்லாண்டு காலமாய் நீரின் உந்துதலுக்கு ஏற்ப உராய்வு விசையில் ஒன்றின் மீது ஒன்று மோதி தங்களின் சொரசொரப்பான பக்கங்களை இழந்த கூழாங்கற்களின் மேனி அவனை பிரமிக்க வைக்கும். தினமும் அவனுக்கு அழகாக தோன்று ஒரு கல்லை எடுத்து தனது டவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு ஓடுவான். அவனது சொந்த வீடாக அது இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக அவர்கள் அங்கு தேங்கி இருப்பது அவனுக்கு சொந்த வீடு போலவே தோன்றச் செய்தது.
தான் தினசரி சேகரிக்கும் கூழாங்கற்களை வீட்டின் பின்பு ஒரு மறைவான இடத்தில் குவித்து வைத்திருக்கிறான். அவர்கள் வீட்டில் இருந்த ஒரு லிங்க சிலையை அந்த கூலாங்கற்களின் ராசாவை போல் ஒரு பலகையின் மீது வைத்து விட்டு மற்ற கற்களை சிப்பாய்களை போல் குவித்து வைத்திருப்பான். ஒவ்வொரு நாளும் அக்கற்களை கொண்டு போர் புரிந்து உலகில் மாற்றத்தை வெளிப்படுத்த போவதைப் போல் பாவனை செய்து கொள்வான். அன்று அவனுக்கு ஒரு கல் கிட்டியது. சாம்பல் நிறத்தில் உள்ளங்கைக்குள் அடக்கி கொள்ளுமளவு இருந்தது. அதனை எடுத்து கொஞ்ச நேரம் தன் கையில் வைத்துப் பார்த்தான். ராட்சச மரங்களினூடாக இருந்து வந்த ஒரு ஒளி அந்த கல்லின் மீது பட்டு கல் மினுக்கியது. திடீரென ஏதோ நீரில் சலம்பல் சத்தம் கேட்க அவன் உடனே அக்கல்லை தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நிமிர்ந்தான்.
சிறிய கைகள் குட்டி குடமொன்றில் ஆற்று நீரை பிடித்துக்கொண்டிருந்தது. மதனுக்கு அந்த கைகளை விட ரோஸ் நிறத்தில் சாயம் போய் இருந்த பிளாஸ்டிக் குடம் மிகவும் பிடித்திருந்தது. அவன் நெருங்கி அந்த திசையை நோக்கி நடந்தான். அச்சிறுமி இவனது காலடி சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். அவனும் அவள் முகத்தைப் பார்த்தும் பார்க்காதது போல் திரும்பிக் கொண்டான். தூரத்தில் யாரோ அவனை அழைப்பது போல் இருந்தது. அந்த குரலில் கோபம் கலந்திருப்பதைப் போல் அவனுக்கு தோன்றியது.
மதன் அவள் முகத்தை பார்த்தான். ஒளியூட்டும் கண்களை கொண்ட சிறிய முகம் உதட்டருகே தேமலை போல் சிறிய தேளின் வடிவில் ஒரு மச்சம் அவன் அவளை பார்க்க எத்தினிக்க்கும் முன் அவள் சிதறி ஓடினாள்.
பாவாடையும் டி-சர்ட்டும் அணிந்திருந்த அவளது கால்கள் சங்கு சக்கரத்தை போல் வேகமாக சுழன்று ஓடி மறைந்தது. மதன் அங்கேயே நின்றான் உடனே தனது டவுசரில் கைவிட்டு கூழாங்கல்லை வெளியே எடுத்தான். அது ஒரு அதிசய கல்லைப் போல் அவனுக்கு தோன்றியது இவ்வளவு பிரகாசமான ஓர் முகத்தை அந்த நாளில் அவனுக்கு காட்டித்தந்த அக்கல்லை முத்தமிட்டுக் கொண்டான். அன்று இரவு முழுவதும் அந்த கல்லை கையில் வைத்துக் கொண்டு முகர்ந்து பார்த்தவனுக்கு மீன் சாப்பிட்ட வாசம் தான் மிஞ்சியது, மறு நாளுக்காக அவன் எண்ணங்கள் வெறி கொண்டு காத்திருந்தன.
மறுநாள் காலையில் எழுந்து அவன் முகத்தை கழுவி விட்டு வேகமாக ஆற்றை நோக்கி ஓடினான். யாருமில்லா இடத்தில் தன் தலைமுடியை அழித்து வருடிக்கொடிக்கும் பெண்ணின் கூந்தலைப் போல் அருவி ஓடியது. அதன் சிலிர்க்கும் மொழியில் காலைப்பொழுது இன்னும் மென்மையாகியிருந்தது. மதன் எப்போதும் போல் கூழாங்கல்லை தேடினாலும் அவன் மனம் முழுதும் அவளது முகமே விரவிக் கிடந்தது. தெளிந்த நீரில் தன் கால்களைக் கிடத்தி கரும் பாறை ஒன்றின் மீது அமர்ந்தான். அவன் பாதங்களில் ஒட்டியிருந்த பாசிகள் நல்ல நீரில் கலந்து புழுவைப் போல் ஊர்ந்தது. வால் தவளைகளை தங்களுக்குள் மல்லுகட்டிக்கொண்டு அப்பாசிகளை தின்றன.
கொஞ்ச நேரத்தில் இசை அவனது அம்மாவுடன் வந்தாள். இருவரும் குளத்தில் நீரை நிரப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர் . இசை அவனை கண்டு கொள்வதாயில்லை. மறுநாளும் அதற்கு மறுநாளும் அதுவே நிகழ்ந்தது இரண்டு நாட்களும் அவன் கூழாங்கற்களை சேகரிக்க அமர்ந்திருந்தான் அவன் கால்கள் பெரும் விரக்தியோடு ஒவ்வொரு நாளும் வீடு திரும்பினார் இந்த நாட்களில் அவன் அவளைப் பற்றின தகவல்களை சேகரிக்கத் தொடங்கினான். அவள் எஸ்டேட்டுக்கு புதிதாக வந்துள்ள கணக்குப்பிள்ளையின் மகள் என்றும் அவள் இனி இங்கேதான் வாழ போகிறாள் என்ற நற்செய்தியும் அவனை கிளர்ச்சியூட்டியது.
தினமும் கூழாங்கற்களின் மீது வீற்றிருக்கும் லிங்கத்திடம் அவன் வேண்டுவதெல்லாம் எப்படியேனும் அவளை என்னிடம் பேச வைத்து விடு என்பது தான். ஒரு நாள் அதிகாலையில் லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது மதன் முன்பு எப்போதும் தான் பார்த்திடாத நாளைப் போல் அந்நாளைப் பார்த்தான். அன்று கற்பனையில் காண முடியாத நாளாக அவனது உள்மனதில் தோன்றியது. வேகமாக கிளம்பி அவன் ஆற்றங் கரைக்கு ஓடினான் அங்கே இசை தன் உடல் முழுவதும் பிளாஸ்டிக் துணியால் சுற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளோடு ஒரு குட்டி நாயையும் சாரலில் நனைந்தவாறு நின்றிருந்தது. ஆனால் அவள் இவனை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்பது மட்டும் அவனுக்கு விளங்கியது. நீரில் தன் முகத்தை பார்த்தான் கரிய முகம் தான் அழகாகயில்லை என்பதனால் தான் அவள் தன்னோடு பேச மறுக்கிறாள் என அவனுக்கு தோன்றியது. உடனே கண்ணாடிபோல் சமமாக இருந்த நீரை தன் கைகளால் கலைத்தான்.
“ உன் வீடு எஸ்டேட்டில் தான் இருக்கா?”
என்ற சப்தம் கேட்டதும் திடுக்கிட்டு அவளை நோக்கி திரும்பினான். அவளும் அவனை பார்த்து புன்முறுவல் செய்தாள். அவளது முகம் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்ட பூனைக்குட்டியின் முகத்தை ஒத்திருந்தது.
“ஆமா நீ அந்த மலைக்கு போயிருக்கியா?”
மதன் அவள் சுட்டிக்காட்டிய திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தான். அவன் பலமுறை அம்மலைக்குச் சென்றிருக்கிறான். மேகங்கள் மலைமுகடுகளை உரசிக்கொண்டு போவதைப் போல் காட்சியளிக்கும் அம்மலையை யாருக்குத்தான் பிடிக்காது. புன்னகையுடன்
“போயிருக்கே” என்றான்.
“ என்ன அங்க கூட்டிட்டு போறியா?”
“ இப்ப வா?”
“ஆமா. எங்க அம்மாவும் அப்பாவும் சிட்டிக்கு போயிருக்காங்க எப்படியும் சாயங்காலம் தான் வருவாங்க அதுக்குள்ள இந்த மலைக்கு போயிட்டு வந்துடலாம்”
மதன் சற்று யோசித்தவாரே
போலா. ஆனா மழையா இருக்கு பரவால்லயா?”
“ நான் தான் ரெயின் டிரஸ் போட்ருக்கேனே” என புன்னகைத்தாள்.
“ சரி போலாம்”
என்றவன் அவன் நின்று இருக்கும் திசைக்கு அவளை அழைத்தான். பாறைகளின் மீது வலிக்கி விடாது கால்விரல்களை அகல பரப்பி ஊன்றி நடந்து அவனருகில் வந்தாள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் ஏலச் செடிகளினூடே நடந்தார்கள். அத்தோட்டத்தை கடப்பது வரை கிட்டத்தட்ட இருட்டு அவர்களை சூழ்ந்திருந்தது இப்போது ஓரளவுக்கு பரவாயில்லை என அவர்களுக்குத் தோன்றியது. செம்பருத்தி வேலிகளின் வழியே புகுந்து அவர்கள் அற்புதம் நிறைந்த அம்மலைப்பாதையின் வழியே நடந்தனர். வழியில் மிளகு தக்காளி செடியின் மீது பூத்திருந்த பூ இசைக்கு மிகவும் பிடித்து இருக்கிறது எனவும் அதன் ஒவ்வொரு வண்ணமும் எளிதில் உதிர்ந்து போய் விடுவதாகவும் ரசிக்கும் படியான அழகை கடவுள் அப்பூவிற்கு கொடுத்தாலும் எளிதில் தொட்டால் உதிர்ந்து விடுவது போல் படைத்திருப்பது சாபம் என அவனிடம் கூறினாள்.
மதன் அப்பூவை பறித்து அவள் முகத்துக்கு நேராக வைத்து ஊதினான் அது தூள்தூளாக பிரிந்து அவளது முகம் முன்னை பறந்தது. இசையின் சிரிப்பு கிட்டத்தட்ட மலைகள் எங்கும் எதிரொலித்தது. வழியில் மலைக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டியதாயிருந்தது. அவன் இசையை தன் தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டு ஆற்றை கடந்து கூட்டி போனான். போகும் வழியில் அவளது நீல நிற பாவாடையை முள் கிழித்து விட்டது. ஆள்காட்டி விரல் அளவிற்கு அதன் நீளமிருப்பதால் அம்மா எப்படியும் கண்டுபிடித்து விடுவாள். எப்படியும் அதற்காக தன்னை அடிப்பாள் என ஆற்றை கடக்கும் வரையிலும் அவள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக இருவரும் சிறிய மலையின் உச்சிக்கு வந்து சேர்ந்தனர். அடர்ந்து விரிந்த மரமும், செடி கொடிகளுமாக சுற்றி எங்கு பார்த்தாலும் மண்ணின் நிறம் தெரியாத அளவிற்கு பசுமை போர்வை விரித்திருந்தது. அவர்களின் தலைக்கு மேலே மேகங்கள் வருடி சென்றன. இசை தன் இரு கைகளையும் விரித்து அம்மேகங்களை அள்ளி அணைத்துக்கொண்டாள். அப்போது அவளது பிரகாசமான முகத்தை பார்த்த மதன் பேரானந்தத்தோடு ரசித்துக் கொண்டிருந்தான்.
பின் இருவரும் மெல்ல மலையின் அடிவாரத்தை நோக்கி நடந்தார்கள். ஆற்றங்கரை வந்ததும் இசை அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றாள். அன்றைய தினம் அவளுக்கு ஏதாவது பரிசீலித்து இருக்கலாமே என அவனுக்கு தோன்றியது. தன் குவியலுக்கு சென்றவன் அதில் வெளிர் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்த கூழாங்கல்லை எடுத்தான். அதன் உடல் அமைப்பு கிட்டத்தட்ட நத்தையை ஒத்திருந்தது. மறுநாள் அவன் இசைக்காக ஆற்றங்கரையில் காத்திருந்தான். வெயில் இறங்கும் வரை அவன் கண்கள் அவள் வரும் திசையை நோக்கிக் காத்திருந்தது. இதற்கு மேல் அவள் வரப்போவதில்லை என உணர்ந்தவன் வீடடைந்தான். இப்படியாக கிட்டத்தட்ட ஒரு வார காலமாக மதன் இசையை பார்க்கவில்லை. ஒவ்வொருநாளும் இசைக்காக காத்திருக்க அவன் தயங்கவில்லை.
இசை வந்தபாடில்லை. குழம்பிப் போன அவன் அவள் வீடு இருக்கும் திசையை நோக்கி நடந்தான். எப்படியோ விசாரித்து அவளது வீட்டை கண்டுபிடித்தவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவள் வீடு அடைத்திருந்தது அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரிக்கையில் இசைக்கு உடம்பு சரியில்லை என்பதற்காக அவளை இரண்டு நாட்களுக்கு முன்பே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறினார்கள். அவன் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினான்.
அன்றைய நாள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூழாங்கல் மீது வீற்றிருக்கும் லிங்கத்திடம் அவளுக்கு உடல் நிலை சரியாக வேண்டும் என பிரார்த்தனை செய்தான். அடுத்த நாள் அவனது உள்மனதில் முன்பு கேட்ட அதே கொண்டாட்ட தாளம் இசைக்கத் துவங்கியது. அவள் எப்படியும் இன்று ஆற்றங்கரைக்கு வந்து விடுவாள் என வேகமாக ஓடினான். அவன் கால்கள் பெரிய மரமொன்றின் வேரில் பட்டு இடறி விழுந்து இறக்கத்தில் உருண்டான், மீண்டும் எழுந்து ஆற்றங்கரையை நோக்கி நடந்தான்.
ரொம்ப நேரம் ஆற்றங்கரையில் காத்திருந்தும் அவள் வருவதாக தெரியவில்லை. ஏமாற்றத்துடன் அவன் தன் வீட்டுக்கு கிளம்பினான் அப்போது ஒரு ஆம்புலன்சின் சத்தம் கேட்டது. அது இசையின் என் வீட்டு பக்கம் இருந்து வருவதாக அவனுக்கு தோன்றியது. வேகமாக அத்திசையை நோக்கி ஓடினான். அவளது வீட்டில் கூட்டமாக இருந்தது ஆனால் இசை இல்லை. ஆம்புலன்ஸில் சத்தம் வேறு திசையில் கேட்டதும் மிகவும் பதட்டத்துடன் அத்திசையை நோக்கி ஓடினான். இங்கே இசையின் உடல் அடக்கம் செய்யப்பட்டு இருந்தது அவளது சிறிய உடலுக்கு ஏற்ப ஒரு சிறிய குழி பறிக்கப்பட்டிருந்தது. அதில் அவளது உடல் கச்சிதமாக பொருந்தியிருந்தது. இசையின் முகம் மட்டுமே தெரியும் படி உடல் முழுவதும் துணியால் சுற்றியிருந்தார்கள். அம்முகத்தை சுற்றிலும் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஆட்கள் வேக,வேகமாக குழியைமூட துவங்கினர். மதன் குழி அருகே சென்று தன் பாக்கெட்டில் அவளுக்கு பரிசளிப்பதற்காக வைத்திருந்த வெண்நிற கூழாங்கல்லை குழியில் வீசினான். அது மண்ணோடு கலந்து ஓசை எழுப்பாமல் குழியில் விழுந்தது.
மதன் திரும்பிப் பார்க்காமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் அவன் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை மெல்ல நடக்கத் தொடங்கி அவன் பின் வேகமெடுத்து ஆற்றை நோக்கி ஓடினான். அவன் முகம் முன்பு எப்போதும் போல் இல்லாது இறுகிப் போயிருந்தது. இறக்கங்களில் பாதை வழுக்குவது கூடத் தெரியாமல் ஓடினான். நேராக ஓடிச் சென்று ஆற்றங்கரையில் நின்றுகொண்டான். பின் என்ன நினைத்தானோ என்னவோ சட்டென ஆற்றில் குதித்து தன் இரு கால்களையும் கைகளால பிடித்தவாரே முகத்தை தன்னுள் புதைத்துக்கொண்டு நீரின் ஆழத்தில் சென்று கத்தி அழுதான். அவனது அழுகையின் சத்தம் நீர் குமிழிகளாக மேற்பரப்பில் வெடித்தது. பின் மெல்ல நீரிலிருந்து ,மெல்லகரைக்கு வந்தவன் தன் உடையை கழற்றி பிழிந்தான். ஈரமான தன் சட்டையை தன் தோளில் போட்டுக்கொண்டு அவன் நடக்க துவங்குகையில் மஞ்சள் நிறத்தில் வந்த வெயிலின் கதிர்கள் திடீரென அவன் முகத்தில் அறைந்தது . செருப்பில்லாத அவன் பாதங்களில் வெட்டி எறியப்பட்ட ஏலச்செடிகளின் மோட்டுகள் குத்துவது கூட தெரியாமல் நடந்த அவனது வலது கையில் புதிதாய் ஒருத் கூழாங்கல் சிறைபட்டிருந்தது.
#651
29,397
230
: 29,167
5
4.6 (5 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
samumathew1131
Nostalgic feel,,,, thank u for that ,,, great work
dreamweddingstudioo
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50