கல்லு

கற்பனை
5 out of 5 (3 )

எங்களை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற டிரக் லாரி அடித்த ப்ரேக்கில் நான் மட்டும் தூக்கிவீசப்பட்டு ரோட்டோரத்தில் விழுந்தேன். விழுந்த வேகத்தில் பாதியாக மண்ணுக்குள் புதைந்து கிடந்தேன்.

ஒரு நாள் பொழுது அப்படியே கழிந்தது.

அடுத்த நாள் காலையில் சாலை மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மனித கூட்டங்கள் அப்படி எங்கே செல்கின்றது என தெரியவில்லை. சில மனிதங்கள் ரோட்டோரத்தில் ஓடிக்கொண்டும், நடந்துகொண்டும் இருந்தது. அதில் ஒரு மனிதன் காலில் மாட்டுசாணத்தை மிதித்துவிட்டு காலை உதறிக்கொண்டு சுற்றிலும் தேடியது. அது என்னை பார்த்ததும் தன் காலை நொண்டி, நொண்டி என் அருகில் வந்து என்மேல் கால் வைக்க வந்தது.

நான் வேண்டாம், வேண்டாம் என்று கத்தினேன் எதுவும் மாறிய பாடில்லை. அது என்மேல் முழுவதும் சாணத்தை தேய்த்து சுத்தம் செய்து கொண்டது.

நாற்றம் தாங்கவில்லை. சகித்துக்கொண்டு இருந்தேன். உச்சி வெயில் சுல்லென்று வீசியதில் அந்த சாணம் காய்ந்து கொஞ்சம் நாற்றம் குறைந்தது. மூச்சு விட முடிந்தது.

அப்பொழுது அது மழைக்காலம். அன்று சாயங்காலம் மழை பெய்தது. சுத்தமானேன்.

அடுத்த நாள் கூட்டமாக நாய் கூட்டங்கள் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் ஓரமாக மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு நாய் மட்டும் என் அருகில் வந்து என்னை மோப்பம் பிடித்தது. என்னை சுற்றிலும் இரண்டு,மூன்று முறை சுற்றி வந்தது.

என்ன செய்யப்போகிறது என்று முழித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று அது தன் பின்னங்காலை தூக்கி என்மேல் சிறுநீர் கழித்தது.

ஹெய்ய்.. ஹெய்ய்.. வேண்டாம், வேண்டாம் என்று சொல்லி முடிப்பதற்குள் பாதி முடிந்துவிட்டது.

முடித்துவிட்டு என்னை பார்த்து பின்னங்கால்களால் மண்ணை வாரி இரைத்துவிட்டு ஓடியது.

மறுபடியும் நாற்றம். சகித்துக்கொண்டேன். வெயில் வந்து ஈரம் காய்ந்தது, கொஞ்சம் மூச்சிவிட முடிந்தது. அன்று இரவு மறுபடியும் மழை பெய்தது.

மீண்டும் சுத்தமானேன்.

சில நாட்கள் எதுவும் என்னை கண்டுகொள்ளவில்லை. நிம்மதியாக இருந்தேன்.

அன்று ஒரு நாள் நான்கு, ஐந்து இளம் மனிதகுட்டிகள் கையில் ஒரு தேங்காயை வைத்து விளையாடிக்கொண்டு வந்தன..

அவைகள் கால்களில் உதை வாங்கிக்கொண்டே வந்த தேங்காய் அய்யோ.. யம்மா.. ஆத்தாடி என்று ஒவ்வொரு அடியையும் தாங்கிக்கொண்டு உருண்டு பரிதவித்தது.

கூட்டத்தில் ஒரு மனித குட்டி மட்டும் என்னை பார்த்து கை காட்டி ஏதோ சொன்னது. உடனே இன்னொன்று என்னிடம் வந்து மண்ணில் புதைந்த என்னை வலப்பக்கம் இடப்பக்கம் ஆட்டி பிடிங்கி எடுத்துக்கொண்டது. அவைகள் ரோட்டை ஒட்டி இருந்த ஆற்றின் பக்கமாக ஓடின.

ஒரு மனிதக்குட்டி தேங்காயை வானம் பார்த்து நட்டு வைத்தது. என்னை சுமந்து கொண்டிருந்த இன்னொன்று தன் இரு கைகளால் என்னை தலைக்கு மேல் தூக்கி ஓங்கி அடித்தது.

வலி தாங்க முடியாமல் ”ஐய்யோ” என்று கத்தினேன். அவைகளுக்கு கேட்கவில்லை போலும், திரும்பி தேங்காயை பார்த்தேன் அதன் தோல் உறிந்து துடித்துக்கொண்டு இருந்தது. கிறக்கத்தில் அதன் குரல் எனக்கு கேட்கவில்லை.

மறுபடியும் அந்த குட்டி என்னை தூக்கி வேகமாக அடித்தது. இந்த முறை எனக்கு அடி கொஞ்சம் பலமாக தான் விழுந்தது. பாதி மயங்கினேன். நெஞ்சடைத்தது போல இருந்தது.

தேங்காய் உடைந்து இரத்தம் சிந்தியது. ஆனாலும் உயிர் போகவில்லை. தோல் முழுவதுமாக உறியவில்லை. நார்கள் வெளியே தெரிந்தது. துடிதுடித்து ஆடியது வலியிலா இல்லை காற்றில் ஆடுகிறதா தெரியவில்லை.

இந்த முறை சற்று பெருத்து குண்டாக இருந்த ஒரு மனிதகுட்டி என்னை இறுக்கமாக பிடித்து தூக்கி வீசி அடித்தது. அதன் பிடியிலேயே என் உயிர் போய்விட்டது போல் இருந்தது. தேங்காயின் உடல் துண்டுகளாக சிதறி விழுந்தது.

அந்த மனிதக்குட்டிகள் ஓடிச்சென்று பொருக்கியெடுத்து வாய் ருசிக்க தின்று மகிழ்ந்தது.

அது தூக்கி வீசியதில் என் உடலில் ஒரு பாகமும் தனியாக உடைந்து சிதறியது. அதை நான் தேடி எடுக்கப்போவது இல்லை மாறாக என்னால் அது முடியாததும் கூட. தேங்காயின் தோல் உறிந்து அதன் ரத்தம் என்மேல் ஒட்டி இருந்தது. இன்னும் எத்தனை மழை வந்தால் அது சுத்தம் ஆகுமோ தெரியவில்லை.

அப்படியே கிறக்கத்தில் விழுந்து கிடந்தேன்.

விழித்து பார்க்கும் போது என்னை சுற்றி ஏதோ இறுக்கி இருந்தது. நான் நன்றாக பார்த்தேன் அது கயிறு தான். அதன் இன்னொரு முனை ஒரு ஆட்டின் கழுத்தின் கட்டப்பட்டு இருந்தது.

எனக்கு அப்போதே புரிந்துவிட்டது. இதுவும் ஏதோ மனிதங்களின் வேலை தான் என்று அதே போல் ஒரு மனிதன் என்னை தூக்கிக்கொண்டு பச்சை அதிகம் இடம் நோக்கி சென்றது. கயிறு கட்டி இருந்ததனால் அது இழுத்த இழுப்புக்கு ஆடும் அதன் பின்னாலே வந்தது. ஒரு நல்ல பச்சை புற்கள், செடிகள் இருந்த இடத்தில் அது என்னை தூக்கி போட்டது. அந்த நாள் முழுவது ஆடும், நானும் தான்.

அந்த மனிதன் என்னை கண்டுகொண்டது போலும், அடுத்த நாளும் அது என்னிடம் வந்து அதே ஆடு கட்டியிருந்த கயிறை என்மேல் கட்டிவிட்டு சென்றது.

அன்றிலிருந்து அந்த ஆட்டுக்கு நான் தான் பாதுகாப்பு. என் பலத்தையும் மீறி அது என்னை காடு, கரை, செடி, புதர்கள் என அனைத்து பக்கமும் இழுத்துச்சென்று மேய்ந்தது. அப்படியே சில நாட்கள் கடந்தது. அதன் நட்பும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஒரு நாள் அந்த கயிற்றின் பிடியும் என்னை விட்டது. அந்த மனிதன் இன்னொரு மனிதனுக்கு அந்த ஆட்டை விற்றுவிட்டது என அவைகள் பேசிக்கொண்டதில் அறிந்துகொண்டேன்.

அந்த கயிற்றுப்பிடி என்னை விட்டாலும் என்னை கட்டிய அந்த தழும்பு என்னை விடாமல் பிடித்து இருந்தது. அந்த ஆடு இழுத்துத் திரிந்ததில் மறுபடியும் நான் அழுக்குப்பட்டேன். இலை, கொடிகளின் ரத்தங்கள். நசுக்கிய புழுக்கள், சில இடங்களில் ஆடு, மாட்டு சாணங்கள், சில இடங்களில் மனித சாணங்கள்.

அத்தனையும் என்மேல் அப்பி நாற்றம் எழும்பிக்கிடந்தேன். மூச்சு அடக்கிக்கிடந்தேன். மழை வராதா என ஏங்கிக்கிடந்தேன்.

அன்று சாயங்காலம் ஒரு மனிதக்கூட்டம் என்னை நோக்கி வந்தது. அவைகள் ஒரு மனிதனை படுக்க வைத்து தூக்கிக்கொண்டு வந்தது. காற்றெல்லாம் ஏதோ மனம் கமிழ்ந்தது. பூக்கள், தென்னை ஓலைகள், மனிதங்கள் சாப்பிடும் உணவுகள் அனைத்தையும் சிதறடித்துக்கொண்டு வந்து கொண்டிருந்தது. ஒரு சில மனிதங்கள் கையில் ஏதோ வைத்து அடித்துக்கொண்டு வந்தன அதில் இருந்து வானை முட்டும் அளவிற்கு ஒலி எழும்பியது. என்னை ஒட்டியே சிறுது தூரத்தில் இரண்டு மனிதங்கள் ஆழமாக குழி தோண்டிக்கொண்டிருந்தது. படுத்து இருந்த மனிதனை பார்த்து மற்ற மனிதங்கள் அழுது ஒப்பாரி வைத்தது.

எனக்கு புரிந்துவிட்டது. ஏதோ ஒரு மனிதன் இறந்துவிட்டதென்று. அவைகளை நினைத்து நான் பெருமைப்பட்டேன். என்னதான் அவைகளுக்கு சூழ்ச்சி, பொறாமை, வஞ்சக புத்தி இருந்தாலும் இது போன்ற நிகழ்வுகளில் அவைகளின் ஒற்றுமை வெளிப்படுகின்றது. என்றைக்கும் ஒற்றுமை ஒரு பெரிய பலம்.

இந்த மனித விலங்குகளின் கண்களில் படும் வரை நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருந்தோம். எங்களுக்குள் பயம், பொறாமை, சூழ்ச்சி எதுவும் இல்லை. ஏனென்றால் நாங்கள் யாருக்கும் தீங்கு விளைக்கவில்லை. நாங்கள் கொஞ்சம் திடம் தான் ஆனாலும் எங்களுக்குள் ஈரம் இருந்தது. எங்கள் மேல் செடி, மரங்கள் வளர அனுமதித்தோம். பறவைகள், விலங்குகள், மனிதங்கள் போடும் எச்சத்தை தாங்கிக்கொண்டு மழை வரும் போது சுத்தம் செய்துக்கொண்டும் இருந்தோம்.

அவைகள் எங்களை வெடி வைத்து சிதைத்தன. எங்களை துண்டுகளாக்கி மனிதங்களுக்குள்ளேயே விலை பேசி விற்றன. அவைகளின் சுய ஆசை, விருப்பங்களுக்கு ஏற்றவாறு எங்களை வடிவமைத்துகொண்டன.

நானும் அதில் சிதறி எடுக்கப்பட்டவன் தான். என்னுடன் நிறைய பேர்கள் அப்படித்தான் எடுக்கப்பட்டார்கள். அவர்கள் இப்போது எங்கே இருப்பார்கள், எப்படி இருப்பார்கள் என்று தெரியவில்லை. சிலர் சிலையாக இருக்கலாம். சிலர் வழிகாட்டியாக இருக்கலாம். சிலர் வெளுக்கப்படும் துணிகளிடம் அடி வாங்கிக்கொண்டிருக்கலாம். சிலர் சுக்குநூறாக பொடிக்கப்பட்டு அமுக்கப்பட்டிருக்கலாம். சிலர் தெய்வமாக வணங்கப்பட்டு கொண்டிருக்கலாம். சிலர் எதுக்கும் உதவாமல் பலமிழந்து மண்ணாகிக்கொண்டிருக்கலாம். சிலர் காணாமல் போயிருக்கலாம். அதில் நான் எப்படி என்று தெரியவில்லை.

அந்த இறந்த மனிதனை மண்ணுக்குள் வைத்து புதைத்துவிட்டு சில சடங்கு, சாங்கியங்களை செய்து கொண்டிருந்தன. அதில் ஒரு மனிதக்குட்டி தோளில் ஒரு மண்பானையை வைத்து அந்த புதைக்கப்பட்ட மனிதனை சுற்றி வந்தது. இறந்தது அந்த குட்டியின் தந்தை போலும். ஒவ்வொரு சுற்றுக்கும் அந்த பானையில் ஒரு ஓட்டை போட்டன. மூன்று முறை சுற்றி முடிந்ததும் ஒரு மனிதன் அந்த பானை ஓட்டையை அடைத்துக்கொண்டு சுற்றிலும் தேடியது.

அது என்னை பார்த்து அருகில் இருந்த மனிதனிடம் ”அந்த கல்லை இங்க எடுத்துட்டு வந்து குழிக்கு தலைமாட்டுல வை” என்றது.

அப்போது தான் தெரிந்தது அவைகள் என்னை ”கல்லு” என்று அழைக்கின்றனர்.

என்னை தூக்கி வந்து குழியின் மேற்புறத்தில் வைத்தன. அந்த மனிதக்குட்டி கையில் இருந்த பானையை விட்டதும் அது மெதுவாக வந்து என்மேல் விழுந்து உடைந்தது. அந்த பானைத்தண்ணீர் என்னை முழுவதுமாக நனைத்தது. என்மேல் இருந்த அழுக்குகளை எல்லாம் அகற்றி எடுத்தது.

நான் மறுபடியும் சுத்தமானேன்.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...