JUNE 10th - JULY 10th
"மணி ஒன்னாகுது, இன்னும் பையனைக் காணோம், சாப்பிட வரலையா?" மனைவி வள்ளியம்மாளைப் பார்த்துக் கேட்டார் ஞானமணி.
"வருவான்" என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள் வள்ளியம்மாள்.
"போன் பண்ணானா?"
"இல்லை"
"காலையில், மதியம் சாப்பிட வரேன்னு சொல்லிட்டுப் போனானே!"
"வரேன்னு சொன்னா வருவான், உனக்கு பசிச்சா போய் சாப்பிடு, அவனை எதுக்கு எதிர்பார்த்துகிட்டு இருக்க."
பசி, அவன் வந்தால், கூட சாப்பிடலாம் என்றால் ஆளைக்கானோம். என்ன செய்வது என்று யோசித்தபடி சமையல் அறைக்குள் நுழைந்தார். மகன் சமைத்து வைத்திருந்த சாப்பாடும், கத்தரிக்காய் சாம்பாரும், வற்றலும் இருந்தது.
"உனக்கும் சாப்பாடு போடவா," ஞானமணி வள்ளியம்மாளைப் பார்த்துக் கேட்டார்.
"நான் அப்புறம் சாப்பிடரேன், நீ சாப்பிடு." வள்ளியம்மாள் திரும்ப பதிலளித்தாள்.
அவர் எதுவும் பேசாமல், சாப்பாட்டை போட்டு சாப்பிட்டுவிட்டு, தட்டைக் கழுவி வைத்தார், அதே நேரம் வீட்டுக்குள் நுழைந்தான் முருகன்.
அவன் கையில் பை, அதில் மூன்று மாம்பழங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் அரை கிலோ எடை இருக்கும், அதை பையோடு தாயிடம் நீட்டினான் முருகன்.
அவள் பிரித்து பார்த்துவிட்டு, "இது நீ எப்பவும் வாங்கிவரும் மாம்பழம் மாதிரி இல்லையே, இது என்ன மாம்பழம் பா" என்று, மகனை நோக்கினாள் வள்ளியம்மாள்.
"இது சவ்வாது மாம்பழம் மா, நல்லா இருக்கும் என்று கடைக்காரன் சொன்னான்." பையிலிருந்து ஒரு பழத்தை எடுத்து, காம்பு இருந்த இடத்தைச் சுட்டிக் காட்டி, "அம்மா, இதோ இங்கே முகர்ந்து பாரேன்" என்றான். முகர்ந்தவள் "அட! நல்ல வாசம் பா", என்று மீண்டும் மீண்டும் முகர்ந்து பார்த்தாள்.
மூன்றையும் வெளியே எடுத்து, ஒன்றை அவனிடமும், ஒன்றை ம் அங்கே கொடு என்று சைகையில் தகப்பனிடமும் கொடுக்கச் சொல்லிவிட்டு, ஒன்றை தனக்கு வைத்துக்கொண்டாள்.
ஞானமணி, பழத்தை வாங்கி, ஆர்வத்துடன் முதலில் காம்பு இருந்த இடத்தை முகர்ந்தார். அடேங்கப்பா! மாம்பழத்தின் வாசம், நாசி வழியே நுழைந்து, நாவிற்கு அதன் சுவையை எடுத்துச் சொல்லியது.
முருகன், தன் பங்கு பழத்தை வெட்டி, ஒரு துண்டை தாய்க்கும், ஒன்றை தந்தைக்கும் கொடுத்துவிட்டு, மிச்சத்தை சாப்பாட்டோடு சேர்த்து சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினான்.
பச்சை சந்தன நிறத்தில் இருந்த பழத்தின் சதைபகுதி சர்க்கரைக் கட்டி போல் இனித்தது. இப்படி ஒரு சுவை மிகுந்த மாம்பழத்தை தன் வாழ்நாளில் அவர் சாப்பிட்டதில்லை. தனது பழத்தை சுற்றி சுற்றி பார்த்தார் அடிபடவில்லை, கன்னிப்போகவில்லை, சொத்தை இல்லை, மீண்டும் ஒருமுறை முகர்ந்துவிட்டு, பழத்தை தன் துணிப் பையில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.
"அந்த ஒரு பழத்தைப் பைக்குள்ளே வச்சி என்ன பண்ணபோற, சாப்பிட்டு விட்டுப் போயேன், ஊருக்கு எடுத்துகிட்டுப் போய் சாப்பிட்டாதான் சாப்பிட்ட மாதிரி இருக்குமா,"என்று வழக்கமான அர்ச்சனையை ஆரம்பித்தாள் வள்ளியம்மாள்.
முருகன் போனதும், வீட்டில் எப்பொழுதும் இப்படித்தான், இருவருக்கும் ஒத்துவராது, அந்த அம்மாள் வாயை திறந்ததும், வெளியே போய் உட்கார்ந்து கொள்வார் ஞானமணி. அதேபோல் இப்போதும் எழுந்து வெளியே போனார்.
"ஆமா நல்லது சொன்னா ஆகாது, வாயை திறந்தால் எழுந்து வெளியே போய்விட வேண்டியது, ஒரு மனுஷி இங்க நாய் மாதிரி கத்திகிட்டிருக்காளே, ஊஹும், இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு வெளியே எழுந்து போய் உட்காரனும், அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க, அவன் வரட்டும்…" அவள் பேசுவது அவருக்கு தெளிவாகவே கேட்டது, தினம் பழக்கப்பட்டதுதான் அதனால், அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை.
ஞானமணி அவர்களுக்கு வயது 65. மனைவி வள்ளியம்மாளுக்கு அவரை விடப் பன்னிரு வயது குறைவு. இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள், மூத்த மகனுக்கும், மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இளைய மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, அவன் தொழிலுக்காக சென்னை வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. ஞானமணி மாதம் இருமுறை ஊருக்குப் போவார், ஒன்று அரசு மருத்துவமனையில் இருதய நோய்க்கு மத்தரை வாங்க, இரண்டு நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்க,
மீதி நாட்கள் உடல் நலமில்லாத தன் மனைவி வள்ளியுடனும், மகன் முருகனுடனும் சென்னையில் இருப்பார்.
பிள்ளைகள் தலையைடுத்த பின், மனைவியிடம் அவருக்கு மரியாதை இல்லாமல் போனது. மூத்தவனும் பெரிதாக கண்டுகொள்வதில்லை, வள்ளியம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையான பின், அவர் என்ன பேசினாலும் எரிந்து விழுந்தாள்.
இளைய மகன் எவ்வளவு சொல்லியும், அவர் கேட்காமல் ஊர்பக்கம் போகக் காரணம், அவர் மனைவி வள்ளி. இங்கே இவளிடம் தினம் தினம் பாட்டு வாங்குவதை விட, ஏதோ ஓர் காரணம் சொல்லி, ஊர் பக்கம் போனால், நான்கு நாட்கள் நிம்மதியாக இருக்கலாம். நாளைக்கு ஊருக்கு போகப்போகிறேன் என்று, ஏற்கனவே சொல்லிவைத்துவிட்டார். இன்றைக்கு ஒரு இரவு தள்ளிவிட்டால், விடிந்ததும் ஊருக்கு கிளம்பிவிடலாம் மனதுக்குள் திட்டம் வகுத்துக்கொண்டார்.
இரவே தேவையானதை எல்லாம் ஒரு மஞ்சள் பையில் எடுத்து வைத்துக்கொண்டார். ஒரு சட்டை, ஒரு வேட்டி, துண்டு, மூக்கு கண்ணாடி, வீட்டு சாவி, மாத்திரை நோட்டு, போன் நம்பர்கள் அடங்கிய டைரி, எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை ஒருதரம் சரி பார்த்துக்கொண்டு, அவரது ஆடைகள் அடங்கிய துணிப் பையிலிருந்து அந்த மாம்பழத்தை கையில் எடுத்தார். உடனே வள்ளியம்மாள் "கொடுத்ததிலிருந்து பத்து தடவை எடுத்து பார்த்தாச்சு ஹும்" என்று முனகினாள்.
அவர் கையில் அந்த மாம்பழம் பொன் நிறத்தில் பளபளத்தது, அதை பக்குவமாய் அடியிலிருந்த வேட்டிக்கும், சட்டைக்கும் நடுவே வைத்து, பையை ஓரமாக வைத்துவிட்டு தூங்கினார்.
விடிந்ததும் விட்டால் போதும் என்று அங்கிருந்து கிளம்பி, தாம்பரம் வந்து, அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று, மாதம் வாங்கும் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு, வெளியே வந்து தேநீர் அருந்திவிட்டு, அங்கேயே ஊருக்குப் பேருந்தும் ஏறினார்.
பேருந்து நிறைய கூட்டம், இவருக்கு பின் சீட்டில் இருந்த இளைஞன் ஒருவன் எழுந்து அவருக்கு இடம் கொடுக்க, அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டார். பையை முன்னால் இருக்கும் இருக்கையின் கால்களில் சாய்த்து வைத்துவிட்டு, இருக்கையில் சௌகர்யமாக அமர்ந்துகொண்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பச்சையப்பன் அழைத்திருந்தான், "மாமா இரண்டு நாட்களுக்கு வேலை இருக்கிறது வாரீங்களா" என்று கூப்பிட்டான், ஆனால் அதன் பின் அவன் திரும்பவும் அழைத்துப் பேசவில்லை, ஒருவேளை வேலை இருக்குமோ இருக்காதோ தெரியவில்லையே, இங்கே மருத்துவமனையில் வேறு தாமதமாகிவிட்டது, என்ன செய்யலாம் என்று யோசித்தபடி வந்தார் ஞானமணி.
முக்கிய சாலையிலிருந்து, ஊருக்கு செல்லும் சாலைக்கு பேருந்து திரும்ப, அந்த சாலை கண்ணுக்கெட்டிய வரை குண்டும் குழியுமாக இருந்தது, தார் சாலை பெயர்ந்து வெறும் மண்சாலையாக காட்சியளித்தது. பேருந்தின் நான்கு சக்கரங்களும் கீழிறங்கி, மேலேறி நடனமாட, பேருந்து இப்படியும் அப்படியும் சாய்ந்தாடியது. வாடிக்கையாய் போய் வருபவர்களுக்கு அது பழகிய ஒன்று, ஆனால் அந்த பக்கம் புதிதாக வருபவர்களுக்கு அடிவயிற்றை நெஞ்சுக்கு கொண்டுவந்தது.
முன் இருக்கையின் இரும்புக் காலில் நின்றிருந்த அவரது துணிப்பை கீழே சாய்ந்தது. பேருந்து குலுங்கிய குலுங்கலில், எல்லாம் வெளியே வந்து விழ, அந்த மாம்பழம் பையிலிருந்து வழுக்கிச் சென்று, அங்கும் இங்கும் ஓடி, நான்கைந்து இருக்கைகளைத் தாண்டி, அங்கிருந்தப் பை ஒன்றுடன் ஒட்டிக்கொண்டது.
பை கீழே சரிந்திருப்பதைப் பார்த்து பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி, வெளியே விழுந்திருந்த சட்டையையும், மூக்கு கண்ணாடி டப்பாவையும், இதர சாமான்களையும் எடுத்து உள்ளே போட்டு, "ஏம்பா, இந்தா பை கீழே சாஞ்சிடுச்சி கையிலேயே வச்சிக்க." என்று அவரிடம் கொடுத்தாள். பையை பல்லைகாட்டிச் சிரித்தபடி நன்றி செல்லி, வாங்கி மடி மீது வைத்துக்கொணடார் ஞானமணி.
ஊர் வந்ததும், பேருந்திலிருந்து இறங்கி நேராக வீட்டிற்கு நடந்தார். வழியில் நலம் விசாரித்தவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, வீட்டை அடைந்தார். பழைய காலத்து மண்வீடு, பத்தடி அகலம், பதினெட்டடி நீளம் கொண்ட சீமை ஓட்டு வீடு, கதவை திறந்தார், கீழே சிமென்ட் தரை வழ வழவென்று இருந்தது, பக்க சுவர்களின் மண்பூச்சில் குளவிகளும், வண்டுகளும், எறும்புகளும் புற்றுகட்டியிருந்தன, சுவர் முழுக்க ஓட்டைகள், பனை மர கழிகள் கூரையை தாங்கிப் பிடத்திருந்தன. கட்டி நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது, மண்தரை மட்டும் சிமென்ட் தரையாகிருந்தது.
வீட்டை சுத்தம் செய்துவிட்டு, தோட்டத்துக்கு போய் உடைந்த வேப்பமர சுள்ளிகளை பொருக்கி வந்து, அடுப்பை பற்றவைத்து, அரிசியை கழுவி உளைவைத்து, பத்தே நிமிடத்தில் சோறு பொங்கி, மணி என்னவென்று பார்த்தார், பத்தாகியிருந்தது. குழம்பு வைக்க காய்கறி இல்லை, வாங்கலாம் என்று கடைக்குப் போக வெளியே வந்தார், அப்போது பச்சையப்பன் இருசக்கர வாகனத்தில் அங்கே வந்து நின்றான்.
"எப்போ மாமா ஊரிலிருந்து வந்தீங்க" என்றான்.
பதிலுக்கு "இதோ, இப்போ தான் உள்ளே நுழைந்தேன்" என்றார்.
"ஏன் நீங்க நேரே அங்கேயே வந்திருக்கலாமே மாமா, நான் தான் எங்கே வேலை செய்றேன்னு சொன்னேனே!"
"இன்னும் சாப்பிடலை பச்சை, ஆஸ்பத்திரிக்கு போய் அப்படியே வந்துட்டேன், சரி சோறாக்கி சாப்பிட்டுவிட்டு வரலாம்னு பார்த்தேன்."
"சாப்டீங்களா மாமா"
"இன்னும் இல்லை பச்சை, டீ ஒன்னு குடிச்சேன் வயிறு என்னவோ திம்முனு இருக்கு."
"அப்படியா, வேலை செய்யும் இடத்திற்குதான் போறேன், மணி பத்துதான் ஆகுது வரீங்களா, இல்லை மதியம் சாப்பிட்டு வரீங்களா" என்றதும்,
இரு இரு இப்போதே வருகிறேன் என்று, சாமான்களை எடுத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினார் ஞானமணி.
தயிர் வாங்கி வந்து, மாம்பழத்தைத் தொட்டு சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று, போகும்போதே மதியம் என்ன சாப்பிடலாம் என முடிவெடுத்துவிட்டார்.
காலையில் சாப்பிடாததால், பன்னிரண்டு மணிக்கெல்லாம் பசி வயிற்றைக் கிள்ளியது, பச்சையப்பனிடம் சொல்லிவிட்டுக் வீட்டுக்குக் கிளம்பினார் ஞானமணி.
வெயில் அனலடித்தது, பசி துரத்த வேக வேகமாக நடந்தார், அவர் வீட்டிற்கும் வேலை செய்யும் இடத்திற்கும் நடுவே இரண்டு கி.மீ தூரம் இருக்கும், பசி மயக்கத்தில் இருந்த அவரை அந்த மாம்பழத்தின் மணமும், சுவையும் சிரமம் தெரியாமல் அழைத்து வந்தது.
வரும் வழியில், பொன்னி வீட்டில், தயிர் கேட்டு வாங்கிக்கொண்டு, வீடுவந்து சேர்ந்தார். கதவை திறந்து, நேரே சமையலரைக்குள் நுழைந்து, தட்டு ஒன்றைக் கழுவி, சோற்றைப் போட்டு, கட்டித் தயிரை அதன் தலையில் ஊற்றி, அந்த பசுந்தயிரின் வாசத்தோடு மாம்பழ வாசத்தையும் சேர்த்து கற்பனைச் செய்து பார்த்தார், நாக்கு எடு எடு என்றது, சற்றும் தாமதிக்காமல் அரிவாள்மனையையும், ஒரு பாத்திரத்தில் தன்னீரையும், எடுத்துவந்து, பையைக் குடைந்தார், பையில் மாம்பழம் இல்லை.
அடுத்த நொடி, எங்கே எங்கே என்று அவர் உடலும் மனமும் பரபரத்தது, பசி மயக்கம் முற்றும் தெளிந்துபோக, அய்யய்யோ! எங்கே போச்சு என்றபடி கையை உள்ளே விட்டு துழாவி பார்த்தார் எதுவும் சிக்கவில்லை, அப்போதுதான் பேருந்தில் பை கீழே விழுந்தது நியாபகம் வந்தது, பையை மொத்தமாய் கீழே கவிழ்த்தார், மாம்பழம் இல்லை, கீழே விழுந்த வேட்டியை எடுத்துப் பார்த்தார், வேட்டியோடு நாள் முழுவதும் உறவாடிய அந்தப் பழத்தின் வாசம் மிச்சமாய் மூக்கைத் துளைத்து.
"அய்யய்யோ! அந்த பாவி அப்போதே சொன்னாளே, கேட்காமல் போய்ட்டேனே," என்று சத்தம் போட்டு கத்தினார் ஞானமணி.
#456
35,600
600
: 35,000
12
5 (12 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
ponnivelm
laxmanilakshmi
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50