மற்றொரு இரவு

Bhuvan AShok
த்ரில்லர்
4.9 out of 5 (14 )

இன்னும் சற்று முன்பாகவே கடையை சாத்திவிட்டு வீட்டிற்கு திரும்பி இருக்க வேண்டும், என்று குமரிமுத்து நினைத்துக் கொண்டான். இப்போதெல்லாம் அந்த மாந்தோப்பை கடந்து செல்வதற்கு அவனுக்கு பயமாகவும் உறுத்தலாகவும் இருந்தது. விடியற்காலையில் வரும்போது பச்சைப்பசேல் என்று இயற்கை ததும்பி எழில் பொங்க இருக்கும் அந்த மாந்தோப்புகள், இரவுகளில் அப்படி இருப்பது இல்லை. அங்கு நடந்த அந்த நிகழ்விற்கு பின் வாழ்க்கையின் இயல்பு நிலையே பாதித்தது போல் உணர்வு அவனுக்கு.

போன மாதம் ஒரு நாள் அவன் கடையை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது அவனை சில உருவங்கள் வழிமறித்து, அடித்து, பணத்தை பிடுங்கி கொண்டு ஓடின. அன்றில் இருந்து எப்போதும் ஒரு பதட்டமும் பயமும் அவனிடம் தொற்றிக் கொண்டது. இப்போதெல்லாம் அவன் பணத்தை இரவுகளில் எடுத்துச் செல்வதே இல்லை. இருந்தும் அந்த மாந்தோப்பை கடக்கும் போதெல்லாம் அவன் கைகள் உதறிக்கொண்டே இருக்கின்றன.

மெல்ல தன் சைக்கிளை மிதித்து மாந்தோப்பை நெருங்கிக் கொண்டிருந்தான். இரவு முழுதாக இறங்கி விட்டு இருந்தது. அந்த தனிமையைம் மார்கழி காற்றையும் பொறுத்துக் கொள்ளமுடியாமல் கத்தி பாடல் ஒன்று பாடினால், வழி துணையாக இருக்கும் என்று நினைத்தான். ஆனால் அந்த சூழ்நிலையில் அவன் மனம் எந்த பாட்டையும் கண்டடைய முடியவில்லை.

மாந்தோப்பின் மண் ரோட்டில் நுழைந்த அவனது சைக்கிள் எந்த சலனமில்லாமல் போய்க் கொண்டு இருந்தது. இரண்டு பக்கத்திலும் மாமரங்கள். நிலவுக்கு கூட வழி விடாத அடர்த்தி, குளிர்ந்த காற்று. ஏனோ அந்த இரவின் பேரமைதியை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை எப்படியாவது கடந்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மேலெழ அவன் கால்கள் வேகமாக பெடல் செய்தன.

அப்போது திடீரென்று ஒரு பெண் குரல், ஒரு ஓலமாக, கதறலாக, அழுகையாக கேட்கிறது. சட்ரென்று அவன் கைகள் சைக்கிளை நிறுத்தின, ஆனால் அவன் கால்கள் அதற்கு தயாராக இல்லை. ஒரு பதட்டத்துடன் சைக்கிள் நிற்க, குரல் வந்த பக்கம் பார்த்தான். இப்போது எந்த சத்தமும் இல்லை காற்று மட்டும் லேசாக குரல் கொடுத்தது. சுற்றி பார்த்தான், யாருமில்லை. மீண்டும் பெடல் செய்ய ஆரம்பித்தான்.

அப்போது மீண்டும் அதே அழுகுரல். இந்த முறை பாதியில் நின்றுவிட்டது. மிதித்து சென்று விடலாம் என்று தோன்றியது. ஆனால் ஏனோ இப்போது அவன் கைகள் அதற்கு தயாராக இல்லை மெதுவாக சைக்கிளிலிருந்து இறங்கினான். குமரிமுத்துவிற்கு அந்த குளிர் காற்றிலும் வியர்ப்பது போல் தோன்றியது.

"எப்போய் யாரது.."

என்று முகம் தெரியாத இருட்டுக்குள் இருக்கும் இலைகளிடம் கேள்வி கேட்டான். அவை காற்றின் மொழியில் பதில் சொல்வது போல் சலசலத்தது. சத்தம் வந்த பக்கம் சென்று பார்க்கலாமா என்று தோன்றியது.

"வழியில எங்கையும் நிறுத்தாதிங்க மாமா.."

என்று வள்ளி சொன்னது நியாபகம் வந்தது. தூரத்தில் ஏதோ பேச்சு சத்தம் கேட்பது போலவும், அழு குரல் கேட்பது போலவும் இருந்தது. மெதுவாக அந்த சத்தத்தை நோக்கி மாமர தோட்டத்தில் இறங்கி நடந்தான். அந்த மண்ரோட்டில் குமரிமுத்துவின் சைக்கிள் மட்டும் நிலவிற்கு துணையாக நின்று இருந்தது.

மெதுவாக தோட்டத்தினுள் சென்றான், அழுகுரல் அங்கு இருந்த கிணற்றின் பக்கத்தில் இருந்து வந்தது. மெதுவாக கிணற்றின் பக்கம் சத்தம் இல்லாமல் நடந்தான்.

"ஏன்டி ஊரு பஞ்சாயத்துல வச்சி ஆம்புடையான்னு கேட்குதான், உங்க அப்பன்... நாள காலைல நீ வீடு போய்ச் சேரும் பொது தெரியும்முடீ உங்க அப்பனுக்கு..."

என்று சொல்லி யாரையோ அடிக்கும் சத்தம் கேட்டது.

ஒரு பெண் வலியில் கதறினாள். குமரிமுத்து அந்த பெரும் கிணற்றினுள் எட்டி பார்த்தான். ஒரு இளம்பெண்ணை ஒருவன் வன்புணர்த்திக் கொண்டு இருக்க, இருவர் அந்த பெண்ணின் வாயையும் கையையும் இறுக்கி பிடித்து இருந்தனர். அந்த பெண் வலியில் மிரண்டு போய் திமிறினாள்.

மீண்டும் பளார் என்று ஒரு அறை விழுந்தது.

அந்த இருட்டிலும் அந்த பெண்ணின் வலி மிகுந்த கண்கள், கலங்கி, அழுது வீங்கி இருப்பது மட்டும் தெளிவாக தெரிந்தன. எதாவது செய்து விட வேண்டும் என்று குமரிமுத்து சுற்றி முற்றி பார்த்தான்.

அந்த பெண் வாயை மூடி இருப்பவன் கையை முழு பலத்தோடு கடித்து, அலறினாள். அந்த பெண்ணிற்கு மீண்டும் ஒரு அடி முகத்தில் விழுந்தது,

"வாய மூடுடி..

எடேய் மூதே ஒழுங்கா புடிடா அவள..."

கிணற்றுக்குள் ஒரு பெரும் கல் விழும் சத்தம் கேட்டது. ஒரு நொடியில் அவர்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது. சுற்றி கிணற்றுக்குள் பார்த்தனர். ஒன்றும் புடிபடவில்லை. அந்த பெண்ணின் வாயை இன்னும் அழுத்தமாக மூடினான் அவன். மற்ற இருவரும் வேகமாக படி ஏறி கிணற்றுக்கு வெளியே வந்தனர். சுற்றி பார்த்தனர். யாரும் இல்லை. ஒருவன் மற்றொருவனுக்கு தலையசைத்து சைகை செய்தான். இருவரும் வேறுவேறு திசையில் நடந்தனர். இருவரில் ஒருவன் கைக்கத்தியை வெளியே எடுத்தான். அதில் நிலவு பளபளத்தது.

இருவரும் இரு திசையில் குனிந்தவாறு சுற்றி தேட ஆரம்பித்தனர். இதை செடியோடு செடியாக படுத்து இருந்த குமரிமுத்து கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தான். எந்த ஒரு சிறு அசைவும் அவனை காட்டிக் கொடுத்து விடும். அவர்கள் இலைகள் மீது வைக்கும் காலடி சத்தம் அருகில் வந்தது. மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டான். நிசப்தம். அவர்கள் இருவரும் எங்கு இருகிறார்கள் என்று குமரிமுத்துவால் பார்க்கமுடியவில்லை. ஒருவருடைய காலடி சத்தம் பக்கத்தில் வந்தது. திரும்பி பார்த்தால் உடல் அசைவு காட்டி கொடுத்துவிடும். உயிரற்று கிடப்பது போல் செடிகளோடு செடியாக கிடந்தான். கிணற்றுக்குள் மீண்டும் ஒரு பெரிய கல் விழுந்தது போல் சத்தம் கேட்டது. கிணற்றுக்கு வெளியே இருந்தவர்கள் என்ன நடந்தது என்று யூகிப்பதற்குள், உள் இருந்து அந்த பெண் வெளியேறி தூரத்தில் தெரியும் ஊரை நோக்கி ஓடினாள். அந்த ஊரின் கோடியில் எரியும் விளக்கு மட்டும் அந்த பெண்ணிற்கு கரம் நீட்டி அவளை கூப்பிட்டு கொண்டு இருந்தது. உடனே இருவரும் அவளை துரத்த, குமரிமுத்து என்ன செய்வது என்று யோசிக்காமல், எழுந்து அவர்கள் பின்னே ஓடினான். அவர்களை பார்த்து,

"ஏலே... பொட்டைகளா..."

"பொண்ணுகிட்ட ஏன்டே உன் ஆம்ப..."

என்று கோவத்துடன் கத்தி முடிப்பதற்குள், அந்த பெண்ணை துரத்தி சென்ற இருவரும் நின்று குமரிமுத்துவை திரும்பி பார்த்தனர். கிணற்றுக்குள் இருந்து தண்ணீர் சொட்ட சொட்ட மற்றொருவன் மேலேறி வந்து நின்றான். அவர்கள் மூவருக்கும் சமமான தூரத்தில் நடுவில் குமரிமுத்து நின்று இருந்தான். தூரத்தில் அந்த பெண் விளக்கின் ஒளியை நெருங்கி கொண்டு இருப்பது போல் தெரிந்தது அவனுக்கு.

குமரிமுத்து தன் விட்டத்தை பார்த்துக் கொண்டு படுத்து இருந்தான். உடம்பெல்லாம் வலித்தது. எல்லாம் உள் காயங்கள். வலியை விட விரக்தியும், கோபமும் தான் அதிகம் இருந்தது.

"ஏன் டா பொட்ட, அவ்வளோ ஆம்பள வீரனா.. நீ..

த்த.. இந்த தாயோளி இங்கயே பொத்தச்சிடலாம்.."

என்று மாறி மாறி குரல்கள் கேட்டதும், அடி விழுந்ததும் கண் முன் வந்து கொண்டே இருந்தது. அந்த மூன்று பேரில் ஒருவனையாவது அடித்து இருக்க வேண்டும். முடியவில்லை. இதை நினைக்க நினைக்க உடம்பு முழுவதும் கோபம் கொப்பளிதுக்கொண்டே இருந்தது. தன் பக்கத்தில் படுத்து இருந்த, வள்ளியை பார்த்தான். அந்த பக்கம் திரும்பி படுத்து இருந்தாள். அவள் தூங்குவது போல் தான் இருந்தது. இருத்தும் அவளை தன் பக்கமாக திருப்பினான். அவள் மேல் ஏறினான்.

"இன்னிக்கி முடியாது மாமா..."

என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே, அவன், அவள் மேல் இயங்க ஆரம்பித்தான். அவள் வலியில் திமிறினாள். இவனுடைய உடம்பின் கனத்தை மீறி அவளால் எதுவும் செய்யமுடியவில்லை. குமரிமுத்து அவள் முகத்தில் வலி மிகுந்த கண்கள், கலங்கி, அவள் அழுது கொண்டு இருப்பதை பார்த்தான்.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...