நீ நிலா! நான் சிபி!

sankariganesh81
காதல்
0 out of 5 (0 )

நீ நிலா! நான் சிபி!

“ஹாய்… நிலா… ஐயம் சிபி…”

“ நான் பேசறது உங்களுக்கு கேட்குதா…?”

“ ப்ளீஸ்… ஆன்சர் மீ…”

“நிலா… ஆர் யூ ஓகே…”

"ஓ... மை... காட்! பிக் த கால்."

பதட்டத்துடன் அலைபேசியில் வினவிக் கொண்டிருந்தான் இளம் காட்டிலாகா அதிகாரியான சிபி.

விட்டு விட்டுக் கிடைத்த அலைபேசி இணைப்பில் மிகவும் டென்ஷனாக இருந்தான்.

எதிர்முனையில் பேசுபவரின் தெளிவற்ற சப்தம் இன்னும் பதட்டம் கூட்டியது.

முதுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள காடுகளில் மனிதர்கள் செல்ல தடைசெய்யப்பட்ட பகுதியில் தன் உதவியாளருடன் நின்று கொண்டு நிலாவை அலைபேசியில் பிடிக்க முடிகிறதா என்று முயன்று கொண்டிருந்தான்.

அன்று காலையில்தான் ஒரு நாள் பயணமாக காட்டுக்குள் ட்ரெக்கிங் செல்ல ஐந்து பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

உள்ளூர் மலைவாழ் மக்களில் ஒருவரை உடனழைத்து செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் அதனை மீறி ஐவர் கொண்ட குழு மட்டும் மலையேறியதில்… இயல்பிலேயே துடுக்குத்தனம் கொண்ட நிலா வழிதவறி சென்றுவிட்டாள்.

அவளைத் தொடர்ந்து தேடமுடியாமலும், வழியில் கண்ட யானைக்கூட்டத்தைப் பார்த்து பயந்தும் போன அவளது குழுவினர் காட்டை விட்டு வெளியேறி, அவள் தொலைந்து போனதை புகாரளிக்க… இதோ தேடுதல் வேட்டை தொடங்கிவிட்டது.

மாலை ஐந்து மணி… புள்ளினங்கள் தத்தம் கூட்டைச் சென்றடையும் நேரம்… இன்னும் சற்று நேரத்தில் முன்னே நிற்பது மரமா... மனிதனா... என்று தெரியாத அளவுக்கு இருள் சூழ்ந்துவிடும். காட்டு மிருகங்கள் நடமாட்டமும் அதிகரித்துவிடும்.

அதற்குள் அவளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற கட்டாயம் அவனுக்கு. இருள் சூழ்ந்துவிட்டால் காட்டினுள் தேடுவது கடினம்.

அச்சுறுத்தும் மிருகங்களின் நடமாட்டம் துவங்கிவிடும். உள்ளே மாட்டியிருக்கும் பெண்ணை உயிரோடு மீட்பது கடினமாகிவிடும். மிகுந்த பதட்டத்துடன் அலைபேசியுடன் போராடிக் கொண்டிருந்தான் சிபி.

இதற்குமேல் வாகனத்தில் உள்ளே சென்று தேட முடியாத நிலை… குறைந்தபட்சம் அவள் எந்த திசையில் இருக்கிறாள் என்று தெரிந்தாலும் போதும் மீட்டு விடலாம்…

விட்டு விட்டு தொடர்பு கிடைப்பதால் அருகேதான் எங்கோ இருக்கிறாள். விடாமல் முயன்று கொண்டே இருந்ததில் ஒருவழியாக இணைப்பு கிடைத்தது.

”ஹலோ…நி… நிலா… நான் ஃபாரஸ்ட் ஆபிசர் பேசறேன்மா..” அவனது குரலைக் கேட்டதும், அழுகையுடனும் பதட்டத்துடனும் வெளிவந்தது அவளது குரல்…

“ சா… சார்… நான் இங்க காட்டுக்குள்ள தனியா மாட்டிக்கிட்டேன் சார்…”

“நிலா பதட்டப்படாதீங்க..நான் சொல்றத கொஞ்சம் கவனிங்க… இப்ப நீங்க எந்த மாதிரியான இடத்துல நிக்குறீங்க…? அதாவது, பாறைகள் நிறைந்த பகுதியா… இல்ல அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியா…?”

“சார்… நான் இப்ப பாறைகளா இருக்கற இடத்துல ஒரு உயரமான பாறையில ஏறி நிற்குறேன் சார்… கொஞ்ச தூரத்துல யானைகள் கூட்டமா நிற்குது சார் , எனக்கு ரொம்ப பயமா இருக்கு…” விட்டால் அழுதுவிடும் குரலில் கூறினாள்.

“ பயப்படாதீங்க நிலா… யானைங்க கூட்டமா இருந்தா அதிக ஆபத்து இல்ல, தனியா இருந்தாதான் ஆபத்து. அதுவுமில்லாம பாறைகள்ல யானையால வேகமா நடக்க முடியாது… சோ நீங்க. சேஃப்பான இடத்துலதான் இருக்கீங்க… பதட்டப்படாதீங்க.”

“இப்ப உங்க மொபைல்ல நீங்க இருக்கற லொகேஷன் பார்த்து சொல்ல முடியுமா…?”

பதட்டத்துடன் அலைபேசியில் பார்த்தவள் அவனிடம், “மசினகுடி, கல்லட்டி இரண்டும் மாத்தி மாத்திக் காட்டுது சார்” என்றாள்.

அவள் இருக்குமிடத்தை உத்தேசமாக ஊகித்து அறிந்து கொண்டவனுக்குள் பெரும் நிம்மதி.

“நிலா… நீங்க மசினகுடி பார்டர்லதான் இருக்கீங்க… நாங்க இங்க பக்கத்துலதான் இருக்கோம் பயப்படாதீங்க… வண்டி உள்ள வர்றதுக்கு பாதை இல்ல… அதனால நீங்க உங்களுக்கு வடக்கு பக்கமா தெரியுற ஓடையின் நீரோட்டப் பாதையிலேயே பொறுமையா நடந்து வாங்க…. நாங்களும் அங்க வர்றோம்” என்றான்.

பயத்தில் திசை தெரியாமல் பார்வையை நாலாபுறமும் சுழல விட்டவள் ஓடையைக் கண்டு, சரிவில் இறங்கி அதன் ஓரமாக நடக்கத் தொடங்கினாள்.

பகலில் ஆர்ப்பாட்டமாய் பிரம்மாண்டமாய்த் தெரிந்த காட்டின் அழகு இப்போது பெரிதும் அச்சுறுத்துவதாய்…

தனிமையும், கவிந்து வரும் இருளும் , காட்டின் அமானுஷ்யமும் அவளுள் கிலியைக் கிளப்ப விரைவாக ஓடினாள்.

வழியில் மரத்தைத் தும்பிக்கையால் முறித்தபடி ஆக்ரோஷத்தோடு இருந்த ஒற்றை யானையைக் கண்டதும் உயிரேக் கிடுகிடுத்துப் போனது.

'அலைபேசியில் பேசிய ஆபீசர் ஒற்றை யானை ஆபத்தானது என்று கூறினாரே' நினைக்கவும் மேலும் வெலவெலத்தது நிலாவுக்கு.

அவ்வளவுதான் இனி நம் உயிர் நமக்கில்லை என்ற பயத்தோடு கால்கள் துணியாய் துவள நடுங்கி நின்றவளை நோக்கி அந்த ஒற்றை யானை மெல்ல வரத்துவங்க, வாய்க்கு வந்து துடித்த இதயத்தோடு அதனை பார்த்தபடி நின்றாள் நிலா.

அப்போது சர் சர்ரென வந்து விழுந்தன பாஸ்பரஸ் நெருப்புக் குச்சிகள். அவற்றில் இருந்து வந்த புகையும் நெருப்பும் யானையை விரட்ட, சற்று தொலைவில் அவளைக் கண்டுகொண்ட சிபி, “ நிலா…” என்று குரல் கொடுத்தான்.

கடந்த ஐந்து மணி நேரமாக தனிமையிலும் பயத்திலும் இருந்தவள், யானையிடம் சிக்கி உயிர்விடப் போகிறோம் என்று நடுக்கத்தோடு இருந்தவள் மனிதக் குரல் கேட்டதும், கேட்ட திசையில் பாய்ந்தோடிச் சென்று அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு கதறினாள்.

அந்நிய ஆடவனை அணைத்துக் கொண்டிருக்கிறோமே என்றெல்லாம் உணரும் நிலையில் இல்லை அவள். பயத்தில் அவனுள் புதைந்து விடும் அளவு இறுக அணைத்திருந்தாள்

அவனுக்குத்தான் பெரும் சங்கடம்… இளம்பெண் இப்படி அணைத்து நிற்பது முற்றிலும் புதிது அவனுக்கு… இருந்தாலும் அவளது பதட்டத்தைப் போக்க முதுகை வருடிக் கொடுத்தவன், “ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…நிலா சேஃப்பா இருக்கீங்க. ஒன்னும் ஆகல... யானை போயிடுச்சி. பயப்படாதீங்க." ஆசுவாசப்படுத்தியவன், "இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க நண்பர்கள்கிட்ட போயிடலாம்” என்று அவளை ஆறுதல் படுத்தினான்.

ஜீப்பில் வரும் போது அவளை சகஜமாக்கும் பொருட்டு அவளைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தான். அவளை சகஜமாய் பேச வைத்தான்.

காட்டை விட்டு வெளியேறி நண்பர்களைக் கண்டதும் மீண்டும் அவளது அழுகைப்படலம் துவங்கியது…

சிறுகுழந்தை கதை சொல்வது போல கைகளை ஆட்டி ஆட்டி அவள் தொலைந்த கதையைக் கூறக் கேட்டவன் அவளில் தொலைவதாய்த் தோன்ற… அதனை முயன்று ஒதுக்கியவன் அவர்களை பத்திரமாய் வழியனுப்பி வைத்தான்.

அவளது வாய்மொழி வந்த அத்தனை நன்றிகளும் மனப்பெட்டகத்தில் சேர்வதாய்...

அவனிருப்பிடம் வந்து படுத்தவனின் எண்ணங்கள் முழுவதும் அவள் ஊர்வலம்… இது என்ன சுக இம்சை என நினைத்தவன் அவளது நினைவை முயன்று ஒதுக்கிப் பின் உறக்கத்தில் ஆழ்ந்தான்

நாட்கள் நகர்ந்தன... கண்ணில் பதியாத காட்சி கருத்தில் பதியாது என்றெண்ணியிருக்க, அவனுள் பதிந்த அவள் முகம் அழியாத ஓவியமாய்...

அவளைத் தேடுவதோ கண்டறிவதோ பெரிதில்லைதான், ஆனால் அப்பெண்ணுக்கு தன்னை நினைவிருக்குமோ என்னவோ? யாரென்று தெரியாத பார்வை பார்த்தால் என்ன செய்வது?

அது மட்டுமின்றி உதவி செய்ய வந்தவன் உரிமை எடுக்க நினைப்பது சரியா? பல்வேறு குழப்பங்கள் சிபிக்குள்.

அன்னை வேறு திருமணத்திற்கு அவசரப்படுத்த, அவளை விடுத்து வேறொரு பெண்ணை யோசிக்கக்கூட முடியவில்லை அவனால்.

பார்க்கும் பறவைகளும் பூக்களும் அவளை நினைவு படுத்த நரகமாய் கழிந்த நாட்கள். உறக்கம் வராத இரவுகள் முற்றிலும் புதிது அவனுக்கு.

இரவெல்லாம் மனதிற்கினியவளை நினைத்து மறுகி தூங்காமல் விழித்திருந்து அதிகாலையில் உறங்கியிருந்தவனை, அலைபேசி இசைத்து எழுப்பியது. பாதி கலைந்த துயிலோடு அலைபேசியை காதில் வைத்தான்.

“சிபி…அம்மா பேசறேன்பா… உனக்கு ஒரு பொண்ணு ஜாதகம் பொருந்தி வருது. பொண்ணு போட்டோ , விவரம் எல்லாம் அனுப்பியிருக்கேன் பார்த்துட்டு பிடிச்சிருக்கா சொல்லுப்பா..”

“ம்ப்ச்… அம்மா… என்னம்மா இது காலையிலயே ஆரம்பிச்சிட்டீங்க? எனக்கு பிடிக்கல…”

“டேய்… பார்க்காமலே சொல்லாதடா… முதல்ல பொண்ணு போட்டோவ பாரு, நல்ல லட்சணமா இருக்கா…” அவன் பதிலை எதிர் பாராமல் கட் செய்தார்.

அசுவாரஸ்சியமாக போட்டோவை பார்த்தவனுக்கு கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

பெயர்: நிலா

வயது : 22

படிப்பு : ஆர்க்கிடெக்ட்…… கூடவே அவன் மனம்கவர்ந்தவள் புகைப்படமும்… உலக சந்தோஷம் மொத்தமும் குத்தகைக்கு எடுத்தவனாய், உல்லாச மனநிலையுடன் தனது அம்மாவுக்கு அழைத்தவன்…

“அம்மா… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…” என்றான்.

அவனது அம்மா ஆச்சர்யத்துடன், “பொண்ணு நம்பர் தர்றேன் பேசிபார்த்துட்டு சொல்லுப்பா” என்க…

“ பொண்ணு நம்பர் என்கிட்டயே இருக்கு… நான் பேசிக்கறேன்…. நீங்க கல்யாணத்துக்கு நாள் பாருங்க…” அழைப்பை துண்டித்தவன்,

மனதில் உல்லாசம் பொங்க அவளுக்கு அழைத்தான், “ ஹாய் நிலா… ஐயம் சிபி…”

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...