வீரா

Swarna
உண்மைக் கதைகள்
5 out of 5 (12 )

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை, எழுந்து கொள்ள மனமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறேன். கல்லூரி ஹாஸ்டலில் இருந்து வந்ததால் இப்போதெல்லாம் அதிகாலையில் எழுப்புவதில்லை அப்பா. பள்ளி செல்லும் காலம் வரை அதிகாலையிலேயே எழுப்பி விடுவதும் , எழுந்து கொள்வதும் வழக்கமாயிருந்தது.

தூரமாக பேச்சரவம் கேட்டு கொண்டேயிருந்தது. சற்று நேரத்தில் மிக அருகில் கேட்டு, எழுந்து தயாராகி படுக்கை அறையை விட்டு வெளியே வந்து, காலியாக இருந்த ஹாலைக் கடந்து வாசலுக்குச் செல்கிறேன். வாசலின் படிக்கட்டில் அம்மா உட்கார்ந்திருக்கிறாள். சற்று தொலைவில் அப்பாவும் அப்பாவின் நண்பரும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

சில காலை வேளைகள் இவ்வாறாக விடிவதுண்டு. வாக்கிங் சென்று விட்டு திரும்பும் அப்பாவின் நண்பர்கள் காலை வேளைகளில், இவ்வாறாக வந்து பேசுவது அவ்வப்போது நடக்கும் ஒன்று.

நான் சென்று அம்மாவின் அருகில் உட்கார்ந்து அவளின் தோளில் தலை சாய்ந்து ,

“என்னம்மா ஆச்சு ? ஏன் காலையிலேயே இவ்ளோ சத்தமா பேசிக்கிறாங்க?”

“ வீராவ காணோம்டி . அதான் அப்பா அந்த அங்கிள் கிட்ட கேட்டுட்டு இருக்கார்”

சட்டென திரும்பி அவனை கட்டி போடும் இடத்தைப் பார்க்கிறேன். வெறும் சங்கிலி ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்தது.

“ பக்கத்துல எங்கயாச்சும் போயிருப்பான்மா. வந்துடுவான். அதுக்கா சோகமா இருக்கீங்க ? எப்பவுமே போயிட்டு வந்துடுவான் தானே”

“ஆனா இன்னிக்கு ரொம்ப நேரம் ஆச்சு. இவ்ளோ நேரமெல்லாம் வெளிய அவன் போனதே இல்லடி”

தேவையில்லாமல் அவள் வீராவிற்காக பயப்படுகிறாள் என்றே எனக்கு தோன்றியது. கேட்டை திறந்தால் போதுமென புயல் போல் பாய்ந்து வெளியில் பறந்து விடுவான். சிறிது நேரத்திற்கெல்லாம் அவனே வந்து கேட்டருகில் சோகமாக உட்கார்ந்தும் கொள்வான் , நல்ல பிள்ளை போல்.

வீரா முதலில் எங்கள் வீட்டிற்கு வந்ததையும் அதன் பின் எங்கள் வீட்டில் ஒருவனாய் ஆனதும் மனதில் ஓடத் தொடங்கியது.

அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். ஒரு நாள் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய எனக்கு அதிர்ச்சி. எங்கள் வீட்டு வராண்டாவில் ஒரு குட்டி நாய். எனக்கோ பயம் குழப்பம் என பல வித உணர்ச்சிகள். உள்ளே போக பயந்து கொண்டே

“ அம்மா .. அம்மா.. அம்மாஆஆ”

“ ஏன்டி இப்படி கத்துற?”

“ அம்மா அங்க பாருங்க. வீட்டுக்குள்ள குட்டி நாய் வந்துடுச்சு. ப்ளீஸ்மா விரட்டி விடுங்க.”

“ நீ முதல்ல உள்ள வா”

“ நீங்க முதல்ல அத விரட்டி விடுங்க.”

“இனி இந்த குட்டி இங்க தான் இருக்கும் . நாம தான் வளர்க்க போறோம். நீ உள்ள வா.”

எனக்கு இடியே விழுந்தது போலிருந்தது. எனக்கு நாய் என்றால் பயமென தெரிந்தே வாங்கியிருக்கிறார்கள். வாசலிலேயே அமர்ந்து விட்டேன். அம்மா அப்பா மீது கோபம் கோபமாக வந்தது. அம்மா வந்து என்னை உள்ளே அழைத்து செல்வாள் என நினைத்து ஏமாந்து வேறு வழியில்லாமல் பின் கதவு வழியாக வீட்டிற்குள் சென்றேன்.

மறுநாள் இன்னும் மோசம். வராண்டாவிலிருந்த குட்டி, கேட் அருகே விளையாடிக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து அழைத்தால் அம்மாவிற்கு கேட்க வாய்ப்பே இல்லை. பக்கத்து வீட்டிற்கு சென்று அங்கிருந்து சுவர் ஏறி குதித்துதான் வீட்டிற்குள் செல்ல வேண்டியதாகிவிட்டது.

இதே போல்தான் அடுத்த சில தினங்களும் இருந்தன. அந்த குட்டிக்கு வீரா என பெயரிட்டிருந்தார் அப்பா.

கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குட்டியின் இருப்பு பழகத் தொடங்கியிருந்தது. சுற்றிக் கொண்டு வராமல் வராண்டாவில் அவனை கடந்து வரக்கூடிய அளவு மாறியிருந்தேன்.

நான் அவனுக்கு பயந்து ஓடுவதை , நான் அவனுடன் விளையாடுவதாக எண்ணி என்னிடமே வர ஆரம்பித்தான். என் பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவதும் , நான் அவனை துரத்துவதும் தினசரி வாடிக்கையாகியிருந்தது. நானும் வீராவும் நண்பர்கள் ஆகியிருந்தோம்.

வீட்டில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை ஆகியிருந்தான். தெருவிலும் எல்லோருக்கும் பிடித்தவனாக மாறியிருந்தான். எங்கள் தெருவில் இருக்கும் சிறுவர்களுக்கும் சரி, எங்கள் தெரு வழியே போகும் சிறுவர்களுக்கும் சரி , வீரா நண்பனாகியிருந்தான்.

“ டேய், அந்த பக்கம் போங்கடா , இவன் கடிச்சுடுவான்.”

“ ஏன்க்கா சும்மா சொல்றீங்க? நம்ம வீரா எப்படி கடிக்கும்?”

“ அக்கா வீரா எங்க ஃப்ரெண்ட்க்கா. எங்கள ஒன்னுமே செய்ய மாட்டான்”

எல்லா சிறுவர்களுக்கும் ஹாண்ட் ஷேக் குடுத்து நண்பனாகிவிட்டான். எங்கள் வீடும் என்ஜினியர் வீடு என்பது மாறி வீரா வீடாகவே மாறிவிட்டது. நானும் தங்கையும் வீராவின் அக்காக்கள் ஆனோம். அப்பா பைக்கின் ஹாரன் ஒலி திருப்பத்தில் கேட்டாலே அவனது காதுகள் விரைப்பாகி, வாலை ஆட்ட தொடங்கி விடுவான். வீரா திடீரென வாலாட்டுகிறான் என்றால் அப்பா வருகிறார் என ஓடி சும்மாவேனும் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொள்வோம் நாங்கள்.

ஒரு விடுமுறை தினத்தில், முற்பகல் நேரத்தில் வெளியில் சென்றிருந்த அப்பா வீடு திரும்பி கேட்டைத் திறந்தது தான் தாமதம். பாய்ந்து ஓடி விட்டான். அவனாக வந்து விடுவானென அப்பாவும் உள்ளே வந்து விட்டார்.

திடீரென வீட்டின் பின்புறம் இருந்து ஒரே கூச்சல். என்னவென்று பார்க்க விரைந்தோம். அங்கே கிரிக்கெட் விளையாடும் பசங்க நடுவில் ஓடிக் கொண்டிருந்தான் இவன். பார்த்த உடனே புரிந்து விட்டது . ரன் எடுக்க ஓடும் பசங்க பின் ஓடியிருக்கிறான். அவர்கள் பயத்தில் வேகமாக ஓட இவனும் குதூகலமாக விளையாடியிருக்கிறான். எனக்கோ சிரிப்பு தாங்கவில்லை .

“ பாப்பா . போயி அவன் பிடிச்சுட்டு வா.”

“ சரிங்கப்பா. செயின் எடுத்துட்டு போறேன்.”

வாடா வாடா என கெஞ்சி கொஞ்சி அழைத்து வர வேண்டியதாகி விட்டது. அவனை சங்கிலியில் போட்டுத் திரும்புகையில் ஒருவன் கிரிக்கெட். பேட்டால் வீராவை அடித்து விட்டான். எனக்கு வந்ததே கோபம்,

“ வீரா . அட்டாக் . விடாத அட்டாக்.”

அவ்வளவுதான் . என் வார்த்தைக்கேட்ட அடுத்த நொடி பாய்ந்து அவன் கையை கவ்வினான்.

நான் வீராவை இழுத்து கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன்.

“ அங்கிள் உங்க பொண்ணு நாய விட்டு கடிக்க வைக்குது அங்கிள்.”

“ நீ முதல்ல நாய்னு சொல்லாத அவனுக்கு பேரு இருக்கு. வீரா. அதுமில்லாம நீ தான பேட்ட வச்சு அவன ஃபர்ஸ்ட் அடிச்ச. செயின் போட்டப்றம் அடிக்கற ? அதுக்கு முன்ன எல்லாரும் பயந்து ஓடிட்டு தானே இருந்தீங்க?”

“ நான் அங்கிள் கிட்ட தான் பேசுறேன் நீ எதுக்கு குறுக்க பேசுற ?.”

அவன் கைகளில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

“ பாப்பா. நீ உள்ள போ”

என்னை உள்ளே அனுப்பிவிட்டு அந்த பையனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் அப்பா.

“ ஏங்க நீங்க பைக்க எடுத்துட்டு போய் பாத்துட்டுதான் வாங்களேன்.”

அம்மாவின் குரல் கேட்டு நினைவுகளிலிருந்து மீள்கிறேன்

“ ஏன் மா . இன்னுமா வரல?”

“ ஆமாடி . ரெண்டு மணி நேரம் மேல ஆச்சு. கால் மணி நேரம். மிஞ்சி போனா அர மணி நேரம் தான் வெளிய இருப்பான்.”

அம்மாவின் குரலில் பதற்றம் அதிகமாகியிருந்தது. எங்களுக்கும் அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.

அம்மா வீராவுடன் விளையாடியோ , கொஞ்சியோ , வாஞ்சையாக இருந்தோ பார்த்ததில்லை. ஆனால் அனைவரை விடவும் அவளே அதிகம் பதறுகிறாள். வீட்டிற்கும் வாசலுக்கும் நடந்துகொண்டேயிருக்கிறாள்.

“ நாங்களும் ஸ்கூட்டி எடுத்துட்டு போய் பார்த்துட்டு வரோம்மா.”

பெரும்பாலும் வெளியே செல்லவே அனுமதிக்காத அம்மா , அன்று உடனே சம்மதித்து விட்டாள். நாங்கள் இருவரும் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

“ இந்த பக்கம் போடி. அந்த ஸ்கூல் பின்னாடி இருக்க க்ரௌண்ட்ல இருக்கானானு பாக்கலாம். அப்படியே சித்தப்பா வீட்டு பக்கம் எங்கையாச்சும் இருக்கானானும் பாத்துட்டு போயிடுவோம்.”

“ எனக்கு என்னவோ பயமா இருக்குடி. அம்மா வேற ரொம்ப டென்சனா இருக்காங்க.”

“ பயப்படாம வண்டிய எடு. கண்டிப்பா கிடச்சுடுவான். இங்க தான் எங்கையாச்சும் போயிருப்பான்.”

தங்கையை வண்டி எடுக்க சொல்லி நான் பின் இருக்கையில் ஏறி அமர்கிறேன்

போகிற வழியெல்லாம் வீரா வீரா என கத்திக் கொண்டே போனோம். எங்கள் பகுதி முழுவதும் சுற்றி அலைந்து தேடி விட்டோம். எங்குமே அவனை காணவில்லை. எங்களுக்கும் பதற்றம் அதிகமானது.

“ நீ வண்டிய வீட்டுக்கு ஓட்டு.”

“ இன்னும் ஒரு ரவுண்ட் அடிச்சு பாத்துடலாமா?”

“ இல்ல. இங்க இருந்திருந்தா நம்ம குரல் கேட்ட உடனே வந்திருப்பான். வரல. அப்போ அவன் இங்கே இல்ல.”

“ பயமா இருக்குடி எனக்கு”

“ எனக்கும் தான். அப்பா வந்துட்டாரானு பாக்கலாம் நீ வீட்டுக்கு போ”

வீட்டிற்கு வந்தால் அப்பாவின் பைக் நின்று கொண்டிருந்தது. வேகமாக உள் நுழைகையில் ஜன்னலில் இருக்கும் சங்கிலியை பார்க்கிறேன். வெறும் சங்கிலி.

அம்மா பெருங்குரலெடுத்து அழ தொடங்கியிருந்தாள். விசும்பலின் இடையில்,

“ பஸ்ல, லாரினு எங்கையாச்சும் அடி பட்டற போதுங்க.”

“ ரோட் எல்லாம் பாத்துட்டேன். இல்ல.”

இதுவரை வெளிப்பட்டிராத அம்மாவின் பாசம் கண்ணீராய் வழிந்து கொண்டிருந்தது.

“ சார் .. சார்”

வாசலில் சத்தம் கேட்டு வெளியே சென்றேன்.

“ அப்பா இல்லையாமா ?”

“ வர சொல்றேண்ணா . என்ன விஷயம்?”

“ காசு வாங்க வந்தேன்மா. காலையில மறந்துட்டேன்.”

“ அப்பா , பால்காரர் வந்திருக்கார். காசு வாங்க வந்தாராம்.”

“ வா பூபதி. கார்ட் எடுத்துட்டு வந்தியா?”

“ இந்தா , எடுத்துட்டு வந்திருக்கேன் சார் . ஆமா சார் வீரா எங்க ? விடியக்கால வரப்பவும் காணோம் . இப்பவும் இல்ல. வெளையாட போயிருக்கா சார்?”

“ வீராவ காணோம் பூபதி..”

“ எங்கையாச்சும் வெளையாட போயிருக்கும் சார்.”

“ இல்லப்பா, எல்லா இடமும் தேடியாச்சு. வீரா இல்ல.”

“ ஐயோ சார் அப்ப அது வீராதானா ? சார் விடியக்கால இந்த ஏரியால பாலூத்திட்டு, வடக்க ஊத்த போறப்ப கும்பக்கர டர்னிங் கிட்ட ரெண்டு இளவட்ட பசங்க ஒரு நாய பிடிச்சுட்டு போனாங்க. பாக்க வீரா மாதிரியே இருக்கேனு யோசிச்சுட்டே போயிட்டேன். நம்ம வீரானு தெரியாம போச்சே.. தெரிஞ்சுருந்தா நானே வீராவ கொண்டாந்துருப்பேனே.”

எல்லோருமே வாசலுக்கு வந்து விட்டிருந்தோம். அம்மாவின் விசும்பல் அதிகமானது.

“ எந்த படுபாவி பசங்கனு தெரியலையே. இப்படி புடிச்சுட்டு போயிருக்கானுங்களே. ஏங்க அந்த பக்கம் போய் நாம பாத்துட்டு வருவோமா?”

“ இல்லம்மா. அவனுங்கள நான் பாத்தே ரெண்டு மனி நேரமிருக்கும். இந்நேரம் மல மேல இல்ல தோப்புக்குள்ள ஏத்திருப்பானுங்க . கண்டுபிடிக்கறது கஷ்டம்.”

அப்பகுதியில் கும்பக்கரை, முருக மலை என சின்ன சின்ன குன்றுகள் இருந்தன. குன்றுகளைச் சுற்றி எங்கும் மாந்தோப்புகள் நிறைந்திருந்தன.. அப்பகுதிக்கு சென்று தேடுவது என்பது இயலாத ஒன்று.

மெது மெதுவாக நிதர்சனம் என்னை சுடத் தொடங்கியது.

வீராவை காணவில்லை.

நெஞ்சு கனக்க தொடங்கியது. அவன் இல்லாமை புரிய தொடங்கியது. தேடித் திரிந்த போது புரியாதது, இப்போது புரிய தொடங்கியது. அவன் இல்லை. நம்மை விட்டு போய்விட்டான். யாரோ பிடித்து சென்று விட்டார்கள். முதல் நாள் மாலை வரை உடன் விளையாடிக் கொண்டிருந்தவன் இப்போது இல்லை. நான் அழத் தொடங்க அம்மா என்னை தேற்ற ஆரம்பித்தாள்.

அதன்பின் வீடே சோகமயமாக இருந்தது. அக்கம்பக்கித்தினருக்கும் விஷயம் தெரிந்து ஒவ்வொருவராய் வந்து விசாரித்து விட்டு சென்றார்கள். மறு நாள் ஹாஸ்டலுக்கும் சென்று விட்டேன். தோழிகள் அனைவருக்கும் வருத்தம். அவர்களும் என்னை தேற்றினார்கள்.

அதன்பின் வார இறுதியில் வீட்டிற்கு வரவே பிடிக்காமல் போனது. ஏதோ வீட்டில் ஒரு வெறுமையை உணரத் தொடங்கியிருந்தேன். பல மாதங்கள் கடந்து போனது. அவன் இல்லாத வெறுமை மட்டும் குறையவேயில்லை. அவன் இருந்த வரையில் தொலைக்காட்சி கூட பார்க்க முடியாது . எந்நேரமும் கத்தி கொண்டேயிருப்பான், பெரும்பாலும் ஆட்களை பார்த்து இருக்காது, ஆடு, மாடு , குதிரை என ஏதாவது ஒன்றாயிருக்கும். இப்போதெல்லாம் வீடு அமைதியாக இருக்கிறது. அந்த அமைதியே விசித்திரமாக இருந்தது.

தெருக்கார சிறுவர்கள் அவ்வப்போது வீராவை பற்றி ஏதாவது பேசிக் கொண்டும் கேட்டு கொண்டும் இருந்தார்கள்.

“ அக்கா , வேற நாய் வாங்கலையாக்கா ? வீரா போய் ரொம்ப நாள் ஆச்சுல”

“ ஏன்க்கா வீரா எங்கையாச்சும் பத்ரமா இருப்பான்ல?”

“ வீராவும் உங்கள மிஸ் பண்ணுவான் தானக்கா ?”

எந்த கேள்விக்கும் பெரும்பாலும் விடையிருந்தது இல்லை. எங்காவது கண்ணுக்கெட்டா தூரத்தில் இருந்தாலும் உயிருடன் இருப்பான் , நன்றாக இருப்பான் என நம்பி கொண்டேன். அந்த நம்பிக்கை சிறிது நிம்மதியாக இருந்தது.

ஒரு ஞாயிறு காலை அம்மா வந்து எழுப்புகிறாள்.

“ பாப்பா எழுந்துக்கோடி”

“ மா.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன் ப்ளீஸ்”

“ உனக்காக ஒருத்தர் வந்திருக்காங்க. வரதுனா வா. இல்ல தூங்கறதுனா தூங்கு.”

படாரென எழுந்து உட்கார்ந்து யாராயிருக்குமென யோசித்தவாறே ஹாலிற்கு வருகிறேன். அப்பாவின் கைகளில் ஒரு குட்டி. அப்படியே எஙகள் வீரா, அச்சடித்தது போல்.

.

“ வீரா !”

அப்பா என்னிடம் நீட்டுகிறார்.

அன்றிலிருந்து அவன் எங்கள் வீராவாகி போனான்.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...