புன்னகை

காதல்
5 out of 5 (41 )

அன்று இரவு ஒரு 7.30 மணி இருக்கும், கிட்சனில், 'கொடியிலே மல்லிகைப்பூ' என்ற இளையராஜா பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த பாடலில் உள்ள பெண் குரலுக்கு சொந்தக்காரி போல ஜூலியும் தனது இனிமையான குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பாடிக்கொண்டே தனது காதல் கணவன் அஹமத்திற்கு பிடித்த டிஃபனை தயாரித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளது மொபைலுக்கு ஏதோ மெசேஜ் வரவும், அது என்ன மெசேஜ் என்று பார்க்க செல்போனை எடுத்தவள் முகப்புப் படமாக அஹமத் படத்தை பார்த்தவுடன் கிட்சனில் அவன் ஜூலியிடம் செய்யும் சேட்டைகள் அவளுக்கு நினைவில் வந்தது. அவன் அவளிடம் அப்படி சேட்டை செய்து கொஞ்சிக் குழாவி பல மாதங்கள் ஆகியிருந்தன. சமையலை முடித்து விட்டு, அஹமத் வந்த பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டு அவளது டையரியில் ஏதோ எழுதிவிட்டு டிவியில் படம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு 9 மணிக்கு அஹமத் வீட்டிற்கு வந்தான். வீட்டிற்குள் வரும் போதே முகத்தை உர்ர் என்று தான் வைத்திருத்தான். அறையினுள் சென்று ஃபிரஷ் அப் ஆக சென்றவன் யாரிடமோ கோபமாக ஆஃபீஸ் விஷயமாக கத்தி பேசிக் கொண்டிருந்தான். ஜூலி அதைக் கண்டுக் கொள்ளாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து அவன் ஹாலுக்கு வந்து அமர்ந்தவுடன், "டேய், டிஃபன் எடுக்கவா?" என்று ஜூலி கேட்க அஹமத் பதிலேதும் சொல்லாமல் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான். "டேய், உன்னத்தான் கூப்பிட்டுறேன்" என்று அவனது தோளைக் குலுக்க அவன் வாய்க்கு வந்த படி ஜூலியை திட்டிக் கொண்டிருந்தான்.

சமீபக்காலமாக அஹமத் சம்பந்தமே இல்லாமல் ஜூலியை திட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தான். தானும் கோவப்பட்டு அஹமத்தை மேலும் டென்ஷன் ஆக்கி விடக்கூடாது என்று எண்ணி அவன் திட்டுவதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள் இன்று பொறுமையை இழந்தாள்.

அஹமத் கோபத்தில் கத்திக் கொண்டிருக்க ஜூலியும் கோபத்தில் கத்தத் தொடங்கினாள், "அஹமத் உன் வாய கொஞ்சம் மூடுறியா! நானும் பாத்துட்டே இருக்கேன், இப்போ கொஞ்ச நாளா வீட்டுக்கு வர ஃபோன பாக்குற, சம்மந்தம் சம்மந்தம் இல்லாம கத்துற. நானும் சரி ஏதோ டென்ஷன் போலன்னு பொறுமையா இருந்தா சும்மா டெய்லி கத்துற! ".

ஜூலி திடீரென்று கோபப்பட்டு பேசுவதை சற்றும் எதிர்ப்பார்க்காத அஹமத் ஆச்சரியத்தில் சிலை போல் நின்றுக் கொண்டிருக்க, அவனுக்கு நெருக்கமாக நின்று கொண்டு, "என்னோட கண்ண பாரு அஹமத். நான் ஒன்றும் உன் ஆஃபிஸ்ல வேல பாக்குற வேலக்காரன் இல்ல, புரியுதா? நான் உன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்டாட்டி. சும்மா கத்துறதெல்லாம் என்கிட்ட வச்சிக்காத, புரியுதா! " என்று அஹமத்தின் கண்ணை பார்த்து பேசிவிட்டு படுக்கையறையினுள் சென்று விட்டாள் ஜூலி.

இன்னும் ஆச்சரியத்தில் இருந்து மீளாத அஹமத் ஜூலி சென்ற அவர்களது படுக்கையறைக்குள் சென்றான். உள்ளே சென்று பார்த்த பின்பு தான் ஜூலி குளியலறையில் இருப்பது அஹமத்திற்கு தெரிந்தது. ஜூலி ஏன் அப்படி பேசினாள், தன்னிடம் என்ன மாற்றம் ஏற்ப்பட்டிருக்கிறது என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தவனின் மனதில் அவர்களது காதல் மற்றும் திருமண நினைவுகள் வந்துச் சென்றன. அவளிடம் தன் காதலை சொன்னது, அவர்களது திருமணத்தில் ஏற்பட்ட தடைகள், அவளுடன் செலவழித்த பொன்னான நேரம் என அனைத்தையும் அஹமத்தின் மனம் அசைப்போட்டுக் கொண்டிருந்தது.

அதற்குள் குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் ஜூலி. ஜூலியிடம் எப்படியாவது பேசி அவளை சமாதானப்படுத்தி விட வேண்டும் என்ற முடிவில் அவளிடம் பேச அஹமத் முயல்வதற்குள் ஜூலி கண்ணை மூடி தூங்கி விட்டாள். இனி அவளை எழுப்பி சமாதானப்படுத்த முயல்வது என்பது தேவையில்லாத வேலை என்பதை உணர்ந்த அஹமத் படுக்கையில் ஜூலிக்கு அருகில் படுத்தான். ஜூலியின் முதுகைப் பார்த்து அஹமத்தின் மனம் பேச ஆரம்பித்தது. அஹமத்தின் மனம் கேட்டது, "ஏன் ஜூலி, உனக்கு என்னாச்சு? ஏன் இனைக்கு என்ன அப்படி திட்டின? நான் உண்மையிலேயே மாறிட்டேனா? " என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டிருக்கும் போது தான் அஹமதிற்கு தோன்றியது, "கல்யாணம் ஆனதில் இருந்து ஜூலி இவனை கட்டியணைத்து தான் இரவு முழுவதும் தூங்குவாள். முத்தங்களும் ஊடல்களும் இல்லாமல் இவர்களது நாள் நகராது. ஆனால், கடந்த சில நாட்களாக இது எதுவுமே இல்லாமல் அவர்களது வாழ்க்கை சென்றது என்பதை புரிந்துக் கொண்டான் அஹமத்". ஒன்றாக சினிமா பார்ப்பது, நேரம் செலவிடுவது என்பது அறவே காணாமல் போய் விட்டதை உணர்ந்தான்.

அதன் பின்னர் யோசித்து பார்க்கும் போது தான் இத்தனை நாட்களாக அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்துக் கொண்டான் அஹமத். இனி இப்படி இருக்கக் கூடாது, உடனிருப்பவர்களை மறந்து 24 மணி நேரம் வேலை செய்தால், வயதான காலத்தில் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது நினைவுகள் என்று ஒன்றுமே இருக்காது. இனி வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ வேண்டும், சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். காயப்படுத்தியவர்களிடமும் சிரிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். அடுத்த நாள் முழுவதும் சிரித்த முகமாகவே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான் அஹமத்.

அடுத்த நாள் காலையில் எழுந்து எப்பொழுதும் போல வேலைக்கு கிளம்பினான். ஜூலியிடம் பேச முயன்றான். ஆனால் அவள் இன்னும் கோபத்தில் இருப்பதை புரிந்துக் கொண்ட அஹமத் வீட்டை விட்டு கிளம்பும் போது அவளை பார்த்து புன்னகைத்தான். ஜூலியும் பதிலுக்கு புன்னகைத்தாள். ஆனால் அவள் மனதார புன்னகைக்கவில்லை என்பதை அஹமத் புரிந்துக் கொண்டான். ஆஃபீஸிற்கு செல்லும் வழியில் தனக்கு தெரிந்த மனிதர்களையும், ஆஃபீஸில் வேலை செய்பவர்களையும் பார்த்தும் புன்னகைத்தான் அஹமத். ஆனால், அவர்களும் பேருக்கு தான் புன்னகைத்தார்கள். ஏனென்றால், சில நாட்களாக அஹமத் அவர்களிடம் நடந்துக் கொண்டது அப்படி.

என்னடா வாழ்க்கை இது! என்று நினைத்துக் கொண்டு வீடு திரும்ப, மெட்ரோ ட்ரெயின் ஏறுவதற்கு ஸ்டேஷனுக்கு வரும் வழியில் ஒரு இளம் காதல் ஜோடியை பார்த்தான். அந்த காதல் ஜோடியை பார்த்தவுடன் இவனும் ஜூலியும் காதலித்த அந்த நாட்கள் ஞாபகம் வந்தது அவனுக்கு. அந்த காதல் ஜோடி எதிரெதிரே அமர்ந்து இருவரும் மற்றொருவரின் கண்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

ஜூலி இவர்களது முதலிரவின் போது என்றும் சொல்லாத ஒரு ரகசியத்தை அஹமத்திடம் சொல்ல போவதாக சொல்லி, 'உன்னோட கண்கள் ரொம்ப அழகானது. அந்த கண்கள பார்த்தா பார்த்துக்கிட்டே இருக்கலாம். உன்னோட வாய்ப்பேசும் வார்த்தையை விட உன் கண்கள் பேசுறது எனக்கு ரொம்ப தெளிவா புரியும்' என்று சொல்லிவிட்டு அவனது இதழில் மிக அழுத்தமாக முத்தம் கொடுத்தாள். அன்றிலிருந்து அழுத்தமான முத்தங்களும், அணைப்புகளும் , செல்லமான கடிகளும் ஜூலியிடம் இருந்து அஹமத்திற்கு கிடைத்தது. எல்லா காதலர்களையும் போலவே இவர்கள் இருவரும் தான் சிறந்த காதலர்கள் என நினைத்துக் கொண்டனர். இதுவரை அவர்கள் பெரிதாக சண்டை போட்டுக் கொண்டதும் கிடையாது, செல்லச் சண்டைகள் மட்டும் தான்.

அந்த காதல் ஜோடியை பார்த்து பழைய நினைவுளுக்கு சென்றவன் நிகழ்காலத்திற்கு வந்து டிக்கெட் எடுத்து விட்டு மெட்ரோ ட்ரெயினுக்காக காத்திருந்தான்.

மெட்ரோ ட்ரெயினில் ஏறியவன், வாழ்க்கையில் பார்க்காத முகங்களையாவது பார்த்து புன்னகைப்போம் என்று புன்னகைக்க முயலும் போது தான் அனைவரும் செல்போனில் மூழ்கியிருப்பதை உணர்ந்துக் கொண்டான். ஒரு இரண்டு ஸ்டாப் தாண்டும் வரை வெறும் ட்ரெயினையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மூன்றாவது ஸ்டாப்பில் ஒரு கணவனும் மனைவியும் ஒரு குழந்தையுடன் ட்ரெயினில் ஏறினர். அந்த பெண்மணியின் மடியில் இருந்த குழந்தை விளையாடிக் கொண்டே அஹமத்தை பார்த்து புன்னகைத்தது. அந்த புன்னகை, அந்த சிரிப்பிற்காக தான் இவன் அந்த நாள் முழுவதும் ஏங்கினான். இந்த புன்னகை தான் கல்லம் கபடமில்லாத புன்னகை என்றும் இதைத் தான் ஜூலி இவனுக்கு தினமும் தருவாள் என்றும் புரிந்துக் கொண்டான்.

குழந்தைகளின் சிரிப்பை, புன்னகையை போல இன்பத்தை தரக்கூடியது இவ்வுலகில் வேறெதுவும் இல்லை!

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...