JUNE 10th - JULY 10th
மதிய வெயில் நேரம், வெளியே கேட்ட சலசலப்பில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த வருண் எழுந்து விட்டான். "ப்ச்! நைட் ஷிப்ட் முடிச்சிட்டு வந்து நிம்மதியா தூக்கக் கூட முடியலை" என புலம்பியவாறு சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான்.
அவன் அறையை விட்டு வெளியே வந்து பார்த்தால் அவர்கள் இல்லம் எப்போதும் போல் அமைதியாக தான் இருந்தது. அதே நேரம் சத்தம் அவர்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து தான் கேட்டது. எனவே வருண் வெளியே சென்று பார்த்தான்.
"பார்த்து இறக்குங்கப்பா!
கண்ணாடி பொருள் அது உடைஞ்சிட போகுது
எல்லாத்தையும் நான் சொன்ன இடத்தில வச்சிருக்க!" என்று ஒரு மனிதர் வண்டியில் இருந்து பொருட்கள் இறக்கியவர்களிடம் கத்திக் கொண்டிருந்தார்.
அங்கே நடப்பதை கண்ட வருண் தன் அருகில் நின்ற அன்னையிடம் "என்னம்மா நடக்குது?" என்றான் புரியாதவனாய். தன் மகன் இந்த சத்தத்தில் எழுந்து விட்டான் என்று புரிந்த வருணின் தாய் லீலா "எதிர் வீட்டை இவங்க தான் வாங்கிருக்காங்க தம்பி. நாளைக்கு பால் காய்ச்ச போறாங்களாம். அதுக்கு தான் பொருள் எல்லாம் இறக்கிட்டு இருக்காங்க" என்று பதிலளித்தார்.
அதை கேட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளாத வருண் "அதுக்கு ஏன்மா இவ்ளோ சத்தம். என் தூக்கமே போச்சு" என்று அழுத்துக் கொண்டவன் "சரி வந்து எனக்கு ஒரு காபி வச்சு தாங்க" என உள்ளே சென்றுவிட்டான்.
வருண் ஒரு தனியார் பொறியியல் நிறுவனத்தில் பணிப்புரிகிறான். மகேஸ்வரன் லீலா தம்பதியின் ஒரே புதல்வன். அந்த நாள் அப்படியே செல்ல இரவு ஏழு மணி ஆனதும் வேலைக்கு கிளம்பினான்.
இரண்டு நாட்கள் கடந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலோ இல்லை முதல் நாள் இரவு நேர வேலை இல்லை என்பதாலோ காலை நேரமே எழுந்து விட்டான். வாயில் புறம் வந்து சிறிது நேரம் நடக்கும் போது எதிர் வீட்டில் இருந்து ஒரு இனிய குரல் கேட்டது.
"யார்டா அது?" என திரும்பிய வருண் அங்கே ஒரு பெண் நிற்பதை கண்டான். ஆனால் அவள் எதிர்ப்புறம் திரும்பி அமர்ந்து எதே செய்துக் கொண்டிருந்தாள். எனவே வருண் கண்களுக்கு அவளின் அந்த நீள முடி தான் முதலில் தெரிந்தது.
"இந்த காலத்தில இவ்ளோ முடி கூட வளக்குறாங்களா? பார்ரா. ஆனா செமையா இருக்கு" என தன் போக்கில் நினைத்தவன் அந்த பெண்ணின் முகத்தை பார்க்க ஆர்வமானான். அவன் பொறுமைக்கு பரிசாக சிறிது நேரத்திலே அந்த பெண்ணும் எழுந்து விட்டாள்.
அந்த பெண்ணின் முகத்தை பார்த்தவுடன் உள்ளே ஒரு குறுகுறுப்பு எழுந்து அடங்கியது வருணுக்கு. "ம்ம்! பார்க்க அழகா தான் இருக்கா!" என்று தனக்குள் முனகியவன் அவள் நகரவும் அதை கவனித்தான். அது ஒரு முல்லை செடி. அந்த செடியை தான் அவள் நட்டிருந்தாள்.
அதன்பின் வந்த நாட்கள் எல்லாம் வருணின் காலை வேளைகள், முல்லை செடியின் அருகே அவளின் தரிசனம் தான். இதற்காகவே சரியாக ஏழு மணிக்கு வாசலுக்கு வந்துவிடுவான். அவள் அந்த செடிக்கு நீரி ஊற்றி, கழை எடுத்து என தினமும் ஏதாவது அந்த செடியிடம் செய்துக் கொண்டே இருப்பாள்.
லீலாவிடம் ஒரு முறை எதார்த்தமாக கேட்பது போல "அம்மா! எதிர் வீட்ல யாரு எல்லாம் இருக்காங்க. அவங்க இங்க வந்து ஒரு மாசம் ஆகுது. ஆனா நான் இன்னும் யாரையும் பார்த்ததே இல்லையே?" என்று கேட்டான்.
லீலாவும் வருணின் எண்ணம் புரியாது "அங்கேயும் அப்பா அம்மா கேசவன் ஜானகி, அப்புறம் அவங்க பொண்ணு வானதி மூனு பேரு தான்டா. ஆனா அந்த அண்ணா ரொம்ப ஸ்ரிக்ட் போல அம்மாவையும் பொண்ணையும் வெளியவே விடமாட்டேங்குறாரு. நான் கூட நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு பார்த்தேன் வரமாட்டேன்னுட்டாங்க" என்று சொல்லவும் அதோடு விட்டுவிட்டான்.
ஆனால் தினமும் காலை வானதி அந்த முல்லை செடியின் அருகில் வரும் காட்சியை மறக்காது கண்டு விடுவான் வருண். ஒரு நாள் அவளை பார்க்காமல் விட்டாலும் மனது ஏதோ செய்தது. இது காதல் என அவனுக்கும் ஒரு கட்டத்தில் புரியவே "எப்படி வானதியிடம் என் காதலை சொல்றது? இவ காலேஜ் விட்டா வீடு வீடு விட்டா காலேஜ்னு இருக்கா. மத்த நேரம் இவ வீட்ட விட்டே வெளியே மாட்டேங்குறா. என்ன பண்றது" என யோசித்து தன் நாட்களை கடத்தினான்.
இப்படியே ஒரு வருடமும் செல்ல வருணின் காதல் அவன் காதலியின் முல்லை கொடியை போல் நன்றாக வளர்ந்து விட்டது. வானதியும் தன் கடைசி வருட படிப்பை முடித்திருந்தாள்.
அன்று காலை எழுந்தது முதலே வருணுக்கு மனதிற்குள் என்னென்று சொல்லமுடியாத மகிழ்ச்சி இருந்தது. எழுந்தவன் வெளியே வந்த நேரம் அவன் காதல் கன்னிகை அவளின் முல்லை கொடியின் அருகே புன்னகையுடன் நின்றிருந்தாள்.
ஏனென்றால் அவளின் முல்லை கொடியானது தனது முதல் பூவை பூத்திருந்தது. அதை கண்ட வருணுக்கும் மகிழ்ச்சியாக இருக்க, அதே மகிழ்வோடு அலுவலகம் கிளம்பி சென்றான்.
"ஹலோ கைஸ்! இன்னைக்கு நம்ம கம்பெனிக்கு புது ஸ்டாப்ஸ் வாராங்க. அவங்கல வெல்கம் பண்ணி நம்ம கம்பெனி பத்தி எல்லாத்தையும் சொல்லுங்க. தென் நான் யார் யார் உங்க டீம்னு அலாட் பண்ணிடுறேன்" என்று அந்த மேலாளர் டீம் ஹெட் அனைவரையும் அழைத்து கூறிக்கொண்டிருந்தார். அதில் வருணும் ஒருவன்.
அதே போல் புதிய ஆட்கள் வந்தபின் அவர்களுக்கு ஒரு மீட்டிங் வைத்து முடித்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு டீம் ஹெட்டின் கீழ் போட்டார் மேலாளர். தன் டீம் இருக்கும் இடம் வந்த வருண் இன்பமாய் அதிர்ந்தான். ஏனெனில் அவன் டீமில் வானதியும் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தாள்.
வருணுக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. பின் தன்னை தானே சுதாரித்தவன் தான் யாரென அறிமுகம் செய்து கொண்டான். அவர்களுக்கான வேலைகளையும் பிரித்து தந்துவிட்டு "ஏதாவது சந்தேகம் என்றாள் என்னை கேளுங்க" என்றவன் தன் இடத்தில் அமர்ந்தான்.
வானதி வேலையை துவங்க வருண் "டேய் வருண்! அவ உனக்கு தான்னு கடவுள் முடிவு பண்ணிட்டார் போலடா. அதான் என் வானு குட்டி என்கிட்டையே வந்துட்டா" என மனதில் நினைத்துக் கொண்டு அவளை பார்வையால் பின்தொடர்ந்தான்.
அதன்பின் அவளுடன் பேசும் நாட்கள் எல்லாம் வருணுக்கு பொக்கிஷமாக கழிந்தது. அவளிடம் இதுவரை அலுவல் ரீதியாக தான் பேசி வந்தான். ஏனோ சட்டென்று காதலை சொல்ல தோன்றவில்லை அவனுக்கு. ஆனால் வானதி வருண் பேசும் போது அவனிடம் ஏதோ ஒரு நெருக்கத்தை உணர்ந்தாள். அதனால் அவள் வருணிடமிருந்து கொஞ்சம் விலகியே சென்றாள்.
இதை புரிந்த வருண் சீக்கிரம் தன் காதலை கூற வேண்டும் என எண்ணி கொண்டான். அதற்கான சந்தர்ப்பம் அடுத்த நாளே கிடைத்தது. அன்று வானதி நேரமே அலுவலகம் வர அங்கே வருண் அவளுக்கு முன் வந்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.
அவள் வந்தவுடன் வணக்கம் சொல்ல அப்போது தான் அவளை பார்த்த வருண் பதிலுக்கு புன்னகையுடன் வணக்கம் சொன்னான். சில நிமிடங்கள் வேலை பார்த்தவன் மனதில் சட்டென அந்த எண்ணம் உதித்தது. "அலுவகத்திற்கு இன்னும் அவ்வளவாக யாரும் வரவில்லை. எனவே இப்போதே காதலை கூறினால் என்ன" என்று நினைத்தான்.
அதை நிறைவேற்றும் பொருட்டு வானதியை நெருங்கிய வருண் "வானதி வரியா ஒரு காபி சாப்பிட்டு வரலாம்" என்று எதார்த்தமான அழைக்க அவளும் அவனுடன் சென்றாள். ஆளுக்கொரு காபியை வாங்கி வந்த அமர்ந்தவுடன் வருண் தன் பேச்சை ஆரம்பித்தான்.
"வானதி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்" என்றதுமே வானதிக்கு மனது பக்கென்று. "என்ன வருண்?" என்றாள் பதிலுக்கு. "அது உன்னை நீ ஆபிஸ் வரதுக்கு முன்னாடில இருந்தே எனக்கு தெரியும்" என்றான்.
"அதெப்படி என்னை உங்களுக்கு தெரியும்?" என்று வானதி கேட்க "ஏனா நீங்க ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு வீட்டுக்கு குடி போனீங்களே , அதுக்கு எதிர்த்த வீடு தான் எங்க வீடு. ஒருவஷமாவே எனக்கு உன்னை தெரியும். நான் டெய்லி நீ உன் முல்லை கொடிக்கு தண்ணீர் ஊத்திரப்ப பார்ப்பேன்" என்றான்.
வானதி சத்தியமாக இப்படி ஒரு பதிலை எதிர்ப்பார்க்கவில்லை. எனவே அதே அதிர்வுடன் "அப்போ நீங்க லீலாமா பையனா? சாரி நான் இதுவரைக்கும் உங்களை பார்த்தது இல்லை. அதான் தெரியலை" என்றாள் தயக்கமாக.
அதில் புன்னகைத்த வருண் "எஸ் சாட்சாத் அந்த லீலாமா பையனே தான்" என்றவன் "ஐ நோ! நீ தான் குனிஞ்ச தலை நிமிராம நடப்பியே அப்புறம் எப்படிமா தெரியும்" என கிண்டல் அடித்தான். அதில் தானும் புன்னகைத்த வானதி "அப்பொ ஏன் நீங்க இவ்ளோ நாள் சொல்லலை?" என்றாள்.
அதற்கு "அது.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் வானதி. உன்னை பார்த்த கொஞ்ச நாள்ளையே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அதான் என் லவ்வ புரபோஸ் பண்றப்ப உன்கிட்ட சொல்ல நினைச்சேன்" என்று பட்டென தன் காதலை கூறிவிட்டான் வருண். அதில் வானதி அவனை அதிர்ந்து நோக்க "எஸ் வானுமா! ஐ லவ் யூடா! அதுக்காக நீயும் என்னை இப்பவே லவ் பண்ணனும்னு உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். உனக்கா எப்போ என்னை பிடிக்கிதோ அப்போ என்கிட்ட சொல்லு. அதுக்குன்னு ரொம்ப நாளும் எடுத்துக்காத என்ன!" என்று கண்ணடித்து கூறியவன் எழுந்து சென்றான்.
வருண் காதலை சொன்ன பின்னர் வானதி மந்திரித்து விட்டது போல் தான் அவள் இருக்கைக்கு சென்றாள். அதன் பின்னே வந்த நாட்களில் வருண் அவளை பெரிதாக தொந்தரவு எதுவும் செய்யவில்லை. அதே சமயம் தன் கண்களில் காதலை நிரப்பி வைத்து பார்ப்பான். அது 'எப்போ எனக்கு பதில் சொல்ல போற?' என்று அவன் கேட்பது போலே வானதிக்கு தோன்றும்.
இப்படியே நாட்கள் கடக்க ஒரு மாதம் முடிந்தது. அப்போதும் வருண் பொறுமையாகவே இருந்தான். வானதி பதில் சொல்லவில்லை என்றாலும் ஒரு முன்னேற்றமாக அவள் காலை முல்லை கொடியை பார்க்க வரும் நேரம் வருணை பார்த்து வைப்பாள். அதுவே வருணுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது.
அன்று காலை வானதி முல்லை செடிக்கு தண்ணீர் ஊற்ற வரும் போது வருண் வரவில்லை. "என்ன இவரை காணோம்?" என சிறிது நேரம் நின்றுவிட்டு பின் அலுவலகத்தில் பார்க்கலாம் என வேகமாக கிளம்பி சென்றாள். ஆனால் வருண் அன்றைக்கென பார்த்து அலுவலகமும் வரவில்லை. அவனை காணாத அந்த நாள் முழுவதும் வானதிக்கு ஏதோ போல் இருக்க சோகமாகவே அலுவலகத்தை வலம் வந்தாள்.
அடுத்த நாளும் வருண் காலையில் அவளுக்கு தரிசனம் தராததால் மனதிற்குள் என்னமோ செய்தது. சில நிமிடங்கள் அப்படியே உக்கார்ந்து விட்டாள். "என்ன இங்கையே உக்கார்ந்துட்ட. ஆபிஸ் கிளம்பலையா?" என்ற அன்னையின் கேள்வியில் தான் சுயம் திரும்பியவள் அலுவலகத்திற்கு கிளம்பினாள்.
அவள் சென்றும் மதியம் வரை வருண் வரவில்லை. "பேசாம போன் போட்டு கேட்கலாமா?" என்று அவள் நினைக்கும் நேரம் வருண் அலுவலகம் வந்தான். வந்தவன் சோர்வாக இருக்கவே நேரே தன் இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டான். அவனை பார்த்த பின்னரே வானதிக்கு மனது நிம்மதி ஆனது. இந்த ஒன்றரை நாள் பிரிவு வருண் தனக்குள் எவ்வளவு தாக்கத்தை ஏற்ப்படுத்தி உள்ளான் எனப் புரிந்துக் கொண்டாள் வானதி.
எனவே அலுவலகம் முடிந்து அனைவரும் செல்லும் நேரம் யாரும் அறியாமல் வருணை அழைத்து சென்ற வானதி "என்னாச்சு ஏன் நேத்து புல்லா உங்களை பார்க்க முடியலை. எங்க போனீங்க?" என்று கேள்விகளை தொடுத்தாள்.
வானதியின் கேள்விகள், அவளின் பதட்டம் என அனைத்தையும் வியந்து பார்த்த வருண் "ஏன்மா என்னாச்சு?" என்றான். "இல்லை நேத்து நீங்க வரலையா, அதான் உங்களுக்கு உடம்புக்கு எதுவும் முடியலையோன்னு தோனுச்சு" என்றாள் தயக்கமாக.
அதற்கு "ம்ம் உடம்பு தான் சரியில்லை. கொஞ்சம் ஃபீவர். சரி என் உடம்புக்கு என்ன வந்தா உனக்கு என்ன?" என்றான் நக்கலாக. அதில் அவனை பாவமாக பார்த்த வானதி "அது... அது.." என்று இழுத்தாள். "என்ன அது?" என்று வருண் கிண்டல் அடிக்க "அது உங்களை எனக்கும் பிடிச்சிருக்கு" என்றாள் தயங்கி தயங்கி.
அவள் பதிலை கேட்ட வருண் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றான். "ஹே வானுமா! என்னடா சொல்ற நீயும் என்ன லவ் பண்றியா?" என்று வருண் ஆர்வமாக கேட்க 'ஆமாம்' என வெட்கத்துடன் தலையசைத்தாள் வானதி.
பின்னர் வந்த நாட்கள் எல்லாம் வருணும் வானதியும் காதல் சிறகடித்து பறந்தனர் எனலாம். அவர்கள் நாட்கள் வண்ணமயமாக மாறியது. வருணை நினைத்து பார்க்கும் போதே புன்னகை வந்தது வானதிக்கு. ஆனால் இதில் அவள் தந்தையை பற்றி நினைக்க மறந்து விட்டாள் வானதி.
ஒரு நாள் வழமை போல் அவள் முல்லை கொடியிடம் நின்றிருக்க எதிர் வீட்டில் இருந்த வருண் கண்களாலே காதல் பேசிக் கொண்டிருந்தான். பின் நேரமாவதை உணர்ந்து 'பாய்' என கையசைத்து உதடு குவித்து முத்தம் ஒன்றையும் பறக்கவிட்டு சென்றான் வருண். அதில் வெட்கி சிவந்த வானதி, அதே சிரிப்புடன் திரும்ப அங்கே அவள் தந்தை அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.
அவள் தந்தையை பார்த்த வானதிக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. கண்களில் கண்ணீர் தானாக வர "உள்ள வா!" என்று அவள் தந்தை உறுமி விட்டு சென்றார். வானதியும் பயந்துக் கொண்டே உள்ளே செல்ல, அவள் உள்ளே வந்த நொடி சப்பென அவள் கண்ணத்தில் அடித்து விட்டார் கேசவன்.
"என்னங்க ஆச்சு!" என்று வந்த அவர் மனைவி ஜானிகியை முறைத்த வானதியின் தந்தை கேசவன் "என்ன புள்ள வளர்த்து வச்சிருக்க நீ!" என்று கண்டபடி திட்ட ஆரம்பித்தார்.
கோபமாக திட்டும் கணவனையும் அழுதுக் கொண்டிருக்கும் மகளையும் பார்த்து பயத்துடன் நின்றார் ஜானகி. "உன் பொண்ணு எதிர்த்த வீட்டு பையன பாத்து சிரிக்கிறாடி. அவன் இவளை பார்த்து கண்ணடிச்சிட்டு முத்தம் தந்துட்டு போறான். என்ன நினைச்சிட்டு இருக்கா?" என்று கத்த
"அப்பா நானும் அவரும் லவ் பண்றோம்" என்று தைரியத்தை திரட்டி சொல்லிவிட்டாள் வானதி. அதை கேட்ட நொடி பளாரென்று மற்றொரு கண்ணத்திலும் அறை விழுந்தது. "என்ன சொன்ன?" என ஆக்ரோசமாக கத்திய கேசவன் "அவன் என்ன ஜாதியோ என்ன குலமோ? அவனை போய் லவ் பண்றேன்னு சொல்ற" என்றார்.
தான் உள்ளே செல்லும் நேரம் வானதியை அவள் தந்தை கண்களாலையே மிரட்டி அழைத்து செல்வதை கண்ட வருண் தானும் பின்னையே வந்தவன் கேசவன் பேசுவதை மற்றும் வானதியை அடிப்பதை பார்த்துவிட்டான்.
வானதி அடிவாங்கியதை பார்த்த வருணின் கண்கள் தானாகவே கலங்கி விட்டது. நொடி நேரம் தாமதிக்காமல் தன் வீட்டை அடைந்தவன் அவன் பெற்றோரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்.
அவர்களை பாடாய்படுத்தி வானதியை பெண் கேட்க அழைத்து வந்து சேர்ந்தான். ஆனால் கேசவனோ வேறு ஜாதி பையனுக்கு பெண்ணை தரமாட்டேன் என ஒரேயடியாக மறுத்துவிட்டார். வருண் எவ்வளவு கெஞ்சியும் அவன் பெற்றோர்களும் கேட்டு முடியாது என்று முடித்து விட்டார் கேசவன்.
அதன் பின்னர் வந்த நாட்கள் வருணிற்கும் வானதிக்கும் நகரமாக நகர்ந்தது. எதிர் எதிர் வீட்டில் இருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை. காலை வானதியின் வரவு இன்றி அவள் முல்லை கொடியும் சற்று வாடிதான் போனது.
வானதி வேலைக்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதில் நினைக்கும் நேரம் வானதிக்கு அடி இலவசமாக கிடைத்து வந்தது. அதனால் வானதி முழு நேரம் மௌனத்தை கடைப்பிடித்தாள். இப்படி நாட்கள் செல்லும் போது, கேசவன் புதிதாக ஒருவனை மாப்பிள்ளையென கொண்டு வந்து நிறுத்தினார்.
அதில் ஆடிப்போன வானதி தன் மௌனத்தை கலைத்தாள். "அம்மா எனக்கு இந்த கல்யாணம் வேணாம்மா" என்று ஜானகியை கெஞ்சினாள். ஆனால் திருமண வேலைகள் ஜரூராக ஆரம்பித்தது. இதை கேட்ட வருண் மனதிற்குள் நொறுங்கினான்.
திருமண நாள் நெருங்க நெருங்க வானதி எதையோ இழந்த நிலையில் வலம்வர ஜானகியின் மனது அடித்துக் கொண்டது. கடைசியாக தன் பெண் வாழ்க்கை நன்றாக இருந்தால் போதுமென்று முடிவெடுத்தார்.
அதன்பின் லீலாவை அழைத்தவர் "லீலா என் பொண்ணு சந்தோஷமா இருந்தா எனக்கு போதும். அவளை என்னால இப்படி பார்க்க முடியலை. இவ அப்பா அடிக்கிற அடில செத்துருவாளோன்னு பயமா இருக்கு. அவ கல்யாணம் உங்க பையனோட நடந்தா அவள நல்லா பார்த்துக்கோ லீலா" என்று கண்ணீர் விட அவ்வளவு மகிழ்ந்தார் லீலா.
அதை கேட்ட வருணும் பல நாள் கழித்து உளமார மகிழ்ந்தான். திருமணத்திற்கு முதல் நாள் வானதியை கேசவன் அறியாது லீலாவை வர செய்து அனுப்பி வைத்தார் ஜானகி. இனி என்ன பிரச்சினை வந்தாலும் தான் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் தன் பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
அதே போல் அடுத்த நாள் கேசவன் பெரிய பிரச்சினை பண்ண "என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்க இது நான் எடுத்த முடிவு. ஜாதி ஜாதின்னு என் பொண்ண நீங்க கொல்றத என்னால பார்த்துட்டு சும்மா இருக்கமுடியாது" என ஜானகி போட்டுடைக்க அதிர்ந்தார் கேசவன். வருணும் வானதியும் திருமணம் செய்து வந்து நிற்க கேசவனாலும் எதுவும் செய்யமுடியாது போனது.
ஜானகி பேசியதை கேட்டு "அம்மா" என ஓடி வந்து கட்டிக் கொண்டு "ரொம்ப தேங்க்ஸ் மா" என்றாள் வானதி. தன் மகளை மகிழ்ச்சியுடன் ஆசிர்வதித்தார் அந்த நல்ல மனம் கொண்ட தாயும். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முல்லை கொடியும் காற்றில் ஆடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
-சாந்தி கவிதா
#793
30,100
100
: 30,000
2
5 (2 )
Vidya Venkatesh
சாட்சாத் 90'ஸ் காதல் கதை தோழி! காதலும் முல்லை கொடியும் ஒப்பிட்டு கதை நகர்த்திய விதம் அருமை தோழி!
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50